முதற்கோணல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 15,197 
 
 

தீபாவுக்குக்கல்யாணமாகிஇன்னும்ஒருவருடம்கூடஆகவில்லை கழுத்தில் தாலி ஏறிய கையோடு கட்டிய கணவனே எல்லாம் என்று பிறந்த மண்ணையும் பெற்றெடுத்த தாய் தகப்பனையும் மறந்து சிவராமனோடு போனவள் தான் இப்போது என்ன காரணத்தினாலோ, அவனைப் பிரிந்து ஒன்றுமேயில்லாமல் போன, தனி மரமாய் திரும்பி வந்திருக்கிறாள், அப்பாவின் காலடிச் சுவடு தேடித் தீக்குளித்து அவள் இப்படி வந்து நிற்பது இது தான் முதல் தடவை.

இதற்கு முன் அவருக்கொரு இனிய மகளாய், அவரோடு ஒன்று பட்டு வாழ்ந்த நாட்களில் முரண்பாடுகள் கொண்ட தவறான மனிதர்களின் குணாம்சங்கள் பற்றி அவள் எதுவுமே அறிந்திருக்கவில்லை. அப்பா வழியில் அவள் அறிந்து கொண்டதெல்லாம், நன்மையை மட்டுமே தருகின்ற, சாந்தி யோகமான வாழ்வின் உன்னதப் பெறுபேறுகளை மட்டும் தான். இப்போது அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து துவம்சம் செய்து விட்டுப் போன மாதிரி, எதிர்முரணான ,விபரீத விளைவுகளையே சந்தித்து ஏமாந்து போன மன உளைச்சலோடுதான் அவளது இந்தத் திடீர் வருகை. வாழ்க்கையின் ஒளிச் சுவடுகளே காணாமல் இருளில் புதையுண்டு போன உயிர் மறைந்த ஒற்றை நிழலாக நிலையழிந்து அவள் அப்படி வந்து நிற்பது கண்டு அவர் பெரும் மன உளைச்சலோடு அவர் அவளை எதிர் கொண்டு உள்ளே அழைத்துப் போனார்.

உள்ளே ஒரே நிசப்தமாக இருந்தது நாற் சதுர வராந்தாக்கள் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன தீபாவுக்குக் கீழே இரு தங்கைகள் ஆண் சகோதரங்கள் கிடையாது தங்கைகளிருவரும் மணமுடித்து வெளிநாட்டில் இருக்கிறார்கள் பணக்கடலில் நீந்துகின்ற சுகபோக வாழ்க்கை அவர்களுக்கு உள்ளூரில் வாழ்க்கைப்பட்ட அவளுக்குத் தான் இப்படியொரு வாழ்க்கைச் சரிவு

அவள் இருக்க மனம் வராமல் வராந்தாக் கதவருகே நிலை தளர்ந்து நின்று கொண்டிருந்தாள் எளிதிலே உணர்ச்சிவசப்பட்டு தான்தோன்றித்தனமான அவசர முடிவு எடுக்குமளவுக்கு அவள் அப்படியொன்றும் சலன புத்தி கொண்டவளல்ல அவள் எதைச் செய்தாலும் தீர்க்கமாக நன்கு யோசித்த பிறகே ஒரு முடிவுக்கு வருவாள் இன்று அவளின் இந்த இயல்பான குணத்திற்கு மாறாக அவள் இப்படிச் சிவராமனைப் பிரிந்து தனியாக வர நேர்ந்ததற்கு, புதிதாக அவள் எடுத்திருக்கிற அவசர முடிவுதான் காரணமாக இருக்குமோ என்று அப்பாவுக்கு முதன் முறையாக அவள் மீது சந்தேகம் வந்தது அதை வெளிக்காட்டாமல் அவள் அப்படி வந்து நிற்பதைக் கண்டு, பெரும் அதிர்ச்சிக்குள்ளானவராய் எதுவும் பேசத் தோன்றாமல் அவர் அப்படியே கல்லாய்ச் சமைந்து உறைந்து போய்க் கிடந்தார்.

அவரையே வெறித்து பார்த்தபடி சோகமுற்றுக் கனன்று எரியும் மனதோடு அவள் உணர்விழந்த வெறும் சிலை போலத் தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன நடந்ததென்று புரியாமல் அவளது இந்த மனமொடிந்த பரிதாப நிலைக்குப் பரிகாரமாக எதைப்பேசுவது என்ன செய்வதென்று புரியாமல் அவரும் மனம் கலங்கினார் பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டே, தடுமாற்றமாக அவளை நிமிர்ந்து பார்த்து அவர் கேட்டார்.

“என்ன தீபா கல்யாணமாகி இவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கிறியே . இடையிலை நீ ஏன் வந்து போகேலை? சிவராமன் எங்கே? அவரை விட்டிட்டு இப்படித் தனியாக வந்து நிற்கிறியே? ஏன் உனக்கும் அவனுக்குமிடையிலை ஏதும் பிரச்சனையே?

சிவராமனுக்கும் தனக்கும் நிகழ்ந்த விபரீதக் கல்யாணத்தினால் நேர்ந்த கசப்பான நினைவுகள இரை மீட்டவாறு சோகம் தாளாமல் மனம் குமுறிப் பெருங்குரலெடுத்து அவள் கதறியழுத சப்தம் கேட்டு அடுக்களைக்குள்ளிருந்து பதற்றத்துடன் ஓடி வந்த அம்மாவைக் கண்டதும் அழுகையினிடையே சற்றுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவள் உரத்துச் சொன்னாள்.

“நான் இனி அங்கை போகப் போறதில்லை”

அதற்கு அப்பா கேட்டார் “உண்மையிலேயே நீதானா இப்படியெல்லாம் பேசுகிறது? அப்படி மனம் வெறுக்குமளவுக்கு அங்கை என்ன தான் உனக்கு நடந்தது சொல்லு தீபா “

“நான் அதைப் பற்றிச் சொல்லி உங்களையும் காயப்படுத்த விரும்பேலை என்ரை கனவுகள் ஆசைகள் பற்றி நான் சொல்லுறதுக்கு ஒன்றுமேயில்லை என்ரை கல்யாண வாழ்க்கை குறித்து எனக்கு எந்தக் கனவுகளுமே வந்ததிலை அப்படிக் கனவு ஏதும் கண்டிருந்தால் எப்பவோ நான் உயிருடனேயே எரிஞ்சு போயிருப்பேன் நல்ல வேளை நான் இன்னும் சாகேலை இப்ப எனக்கு ஒரேயொரு மன வருத்தம் தான். எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கேலை ஒரு வேளை அப்படிப் பிறக்க நேர்ந்தால் என்னைச் சூழ்ந்து வருத்துகிற பாவம் அதைச் சும்மா விடுமா?அந்தப் பாவ நெருப்பிலேயிருந்து அதைக் காப்பாற்ற வேணுமேயென்ற ஒரு புனித நினைப்புத் தான் எனக்கு . அதுக்காகவே அவரைப் பிரிஞ்சு தனியாக வந்திட்டேன் நான் செய்தது சரிதானேயப்பா”

“ தீபா நீ சொல்வது எனக்குப் புரியுது உனக்குக் கிடைத்த கல்யாண வாழ்க்கையிலே நீ சுகப்படவில்லையென்றால் இதுக்கு மேலே உன்னோடு தர்க்கிக்கிறதுக்கு என்ன இருக்கு? உன்ரை உணர்ச்சிகளைப் புரிஞ்சு கொள்ளாதவனோடு நீ முட்டி மோதிச் செல்லரித்துப் போகிற போது, அந்தப் பாவம் உனக்குப் பிறக்கப் போற குழந்தைகளையும் சும்மா விடாதென்றுதானே நீ இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறாய். இதிலே இனி நான் சொல்ல என்ன இருக்கு? உனக்கு நேர்ந்த இந்த முதற் கோணல் முற்றும் கோணலாகி விடாமல் அது உன்னுடனேயே போகட்டும்” என்ன நான் சொல்வது சரிதானே?”

அதற்கு தீபா சொன்னாள் “நானும் நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் போதுமா?அம்மா என்ன நினக்கிறாவோ? சொல்லுங்கோ அம்மா”

“உன்னை வாழாவெட்டியென்று சமூகம் சிரிப்பாய்ச் சிரிக்குமே உன்னை இந்த நிலையிலை வைத்துக் கொண்டு வெளியிலை போய் வர ஏலுமே?

“ஐயோ அம்மா இப்படி உலகத்துக்குப் பயந்தால் எல்லாத்துக்கும் முக்காடு போட வேண்டியது தான். அது எனக்குத் தேவையில்லை பாவங்களிலிருந்து விடுதலை அடைய நினைக்கிற நினைப்பே எனக்கு விமோசனம் அளிக்குமென்று நான் நம்புகிறன்”

அதை ஏற்றுக் கொண்டு விட்ட பாவனையில் அம்மா முகம் சிரித்தபடி தலை ஆட்டிய போது , இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து குடும்ப விலங்கிலிருந்து விடுதலையான சந்தோஷத்தில் கடவுளே நேரில் வந்து ஆட் கொண்ட மாதிரி, அவள் தன்னைப் புறப்பிரக்ஞையாய் மணமுடித்து, ஏமாற்றி விட்டுப் போன கணவன் நினைப்பையே

அடியோடு மறந்து போனவளாய் அந்த மனம் சார்பான அகவுலகில் உயிரின் ஒளியையே தரிசனம் கண்ட பெருமிதத்துடன் வெகு நேரமாய் தன்னை மறந்து பூரித்துக் கிடந்தாள்.

– மல்லிகை (யூலை 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *