முடி துறந்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 16,538 
 
 

அவள் அழகாக இருந்தாள், நீண்ட முடிமட்டுமல்ல, அவளது முகத்திலும் ஒருவித வசீகரம் இருந்தது.

தலைமுடிக்குப் பூசும் நிறமைகளைத் தயாரிக்கும் பிரபல கம்பெனி ஒன்று மொடல்கள்; தேவை என்று விளம்பரப்படுத்தி இருந்தனர். அவள் அதற்கு விண்ணப்பித்திருந்தாள்.

நேர்முகப் பரீட்சையில் அவளைத் தங்கள் மொடல்களில் ஒருத்தியாக அவளைத் தெரிந்தெடுத்திருந்தனர்.

போட்டோ சூட்டில் பலவிதமான படங்களை எடுத்து அதில் சிறந்ததொன்றைத் தெரிவு செய்து அவளது படத்தைப் பெரிதாகப் பல இடங்களிலும் விளம்பரப் படுத்தி இருந்தார்கள்.

தலை முடிக்குப் பூசும் கறுப்பு நிறமையுக்கான விளம்பர கட்டவுட்டில் அவளது படத்தைப் போட்டிருந்தார்கள். சேலை உடுத்து, நீண்ட கூந்தலை விரித்து விட்டபடி, சிரித்த முகத்தோடு அழகாகக் காட்சி தந்தாள் அவள்.

வெள்ளை முடி கொண்ட அவளது படத்தையும், கறுப்பு நிறம் பூசியபின் அவள் எவ்வளவு அழகாகத் தெரிகிறாள் என்பதையும் ஒப்பிட்டு, இரண்டு படங்களையும் அருகருகே போட்டிருந்தார்கள்.

சில்லென்ற காற்றில் ‘கருங்கூந்தல் அலைபாய்ந்து மோங்களாக..’ என்ற அந்தப் பாடல் தெரிந்தவர்கள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தார்கள்.

அவளது அழகிய கவர்ச்சியான படத்தைக் கட்டவுட்டில் பார்த்த பல இளைஞர்கள் அவளது அழகை ரசித்தார்கள். அவர்களை அறியாமலே அவள்மேல் ஒருவித கவர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால், அது இயற்கையின் விளையாட்டுத்தானே!

அழகிய மருமகள் வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு குடும்பத்தினர், தரகர் மூலம் ஏற்பாடு செய்து அவளைப் பெண் பார்க்க மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

வழமைபோல சிற்றுண்டி பரிமாறிய போது, பெண்னோடு தனியே பேசவேண்டும் என்று மகன் ஆசைப்படவே அவர்களைத் தனியே பேசுவதற்கு அறைக்குள்ளே அனுப்பினார்கள். விருப்பம் இல்லாமலே பெற்றோரின் கட்டாயத்தில் வந்த அவன், அவளுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வெளியே வந்து தனக்கு அவளைப் பிடிக்கவில்லை என்று மறுத்திருந்தான்.

இந்த வரன் நிச்சயம் பொருந்தும் என்று எதிர்பார்த்திருந்த, பெண்ணைப் பெற்றவர்களுக்கு அவன் அப்படிச் சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது.

‘என்னைப் பிடிக்காதற்கு என்ன காரணம் என்றாவது சொல்லி விட்டுப் போங்களேன்’ பொறுக்க முடியாமல் அவள் அவனிடம் கேட்டாள்.

‘நீ அழகாக இருந்தாலும் இளமையிலேயே நரைத்த முடியுள்ள ஒருத்தியைக் கட்டுவதில் எனக்கு இஷ்டமில்லை’ என்றான் அவன்.

அவளது தாயார் சட்டென்று ஏதோ சொல்லவர, அவள் இடைமறித்தாள்.

‘வேண்டாம் அம்மா, அவர்களுக்குப் பிடிக்காவிட்டால், கட்டாயப் படுத்த வேண்டாம்’ என்றாள் அவள்.

‘விளம்பரத்திற்காகத் தான் அப்படி போஸ் கொடுத்தேன், இயற்கையாகவே என்னுடைய முடி கறுப்புத்தான்’ என்று அவனிடம் சொல்ல அவள் விரும்பினாலும் மனசைப் பார்க்காமல் முடியின் நிறத்தைப் பார்த்து ஒருவரைப் பற்றிக் கணிக்கும் இவனைப் போன்றவர்கள் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

‘நானும் இதைத்தான் சொல்ல வந்தேன், காரணம் என்வென்று அறியத்தான் கேட்டேன், உங்க முடிவை நானும் ஏற்றுக் கொள்கின்றேன், போயிட்டு வாங்க’ என்றாள் அவள்.

‘என்ன?’ என்றான் அவன்.

‘எனக்கும் உங்களைப் பிடிக்கவில்லை, அதைத்தான் சொல்ல வந்தேன்’ என்றாள்.

‘காரணம் அறியலாமோ?’ என்றான் அவன்.

‘இந்த இளமையிலேயே முடி உதிர்ந்து மொட்டையாகிவிட்ட ஒருவரைக் கட்டிக்கிட்டு நான் என்ன செய்ய?’ என்றாள்.

அவனுக்கு மொட்டந்தலை என்பதால் அவள் மறுத்திருந்தாள். இந்த வயதிலேயே மொட்டையாக இருப்பவனை நான் எப்படித் திருமணம் செய்வது?

‘பெண்தானே, வாய் திறக்க மாட்டாள்’ என்று எதிர்பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு இதைக் கேட்டதும் அவமானமாகிப் போனது.

‘அட எனது மொட்டந்தலையை வைத்து என்னைக் கணிப்பவள் எனக்குத்; தேவையில்லை’ என்று அவனும் மறுத்துவிட்டான்.

நிறைய முடியிருந்தாலும், இப்போது மொட்டந்தலைதான் ‘பாஷன்’ என்பதால்தான் அவனும் தனது நண்பர்களைப் போல, மொட்டை அடித்து முற்றாக வழித்திருந்தான். தான் ஏன் மொட்டை அடித்தேன் என்ற கதையை அவனும் அவளுக்குச் சொல்லவில்லை.

மனதைப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள், ஏதேதோ காரணங்களுக்காக ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் நிராகரிக்கிறார்கள், சில சமயம் மௌனங்களும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *