(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெகு நேரமாகக் கதவைத் தட்டியும் திறக்காததால் எரிச்சல் அடைந்து, பொறுமை இழந்தாள் காமினி. உள்ளே தன் புருஷன் சரவணன், அப்படி என்னதான் செய்கிறானோ என்று கோபமாய் வந்தது அவளுக்கு. புரியாமல் நின்றுகொண்டிருந்தாள். நேரமாக நேரமாக, மனது குழம்பியது.
அவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன், தனக்கும் சரவணனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனக்கசப்பில் முடிந்தது நினைவுக்கு வந்தது. அவன் சொல்லும் எதையுமே அவள் காதில் வாங்கிக்கொண்டு சரியாகச் செயல்படுவதில்லை என்று அவன் திட்டியதும் எதையுமே சற்று சிந்தித்து முன் யோசனையுடன் செயல்படுதல் வேண்டும் என்று அவன் சொன்னதும், இப்போ முன் யோசனை இல்லாமே நான் என்ன செய்யறேன்? எதுக்கு எப்போ பாத்தாலும் அட்வைஸ் குடுத்திண்டே இருக்கீங்க?’ என்று அவள் வாக்குவாதம் செய்ததும் நினைவுக்கு வந்தது.
ஏற்கெனவே சரவணன் செய்துகொண்டிருந்த வியாபாரம் நம்பி இருந்த வங்கி வைப்புகள் எல்லாமே உலகப் பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுடன் இருந்த அவனிடம் தானும் விட்டுக் கொடுக்காமல் வாக்குவாதம் செய்தது நினைவுக்கு வந்தது.
அதுவும் போதாக் குறைக்கு காலையில் அவள் அலுவலகத்துக்குக் கிளம்பும்போது ஏற்பட்ட சிறு வாக்குவாதமும் சில விநாடிகளில் வளர்ந்து அவனிடம் சண்டை போட்டுக்கொண்டு கிளம்பியதும் நினைவுக்கு வந்தது. மனமுடைந்து இருக்குமோ? ஒருவேளை ஏதாவது விபரீத முடிவை எடுத்து விட்டானோ நினைக்கவே அவள் மனம் பதறியது. நிலைகுலைந்து போனாள் காமினி.
மீண்டும் தட்டிப் பார்த்துவிட்டு ஏதோ விபரீதம் ஆகிவிட்டது என்று முடிவுக்கு வந்தவளாய் அக்கம் பக்கம் இருப்பவர்களையெல்லாம் அழைத்து, தன் நிலையைச் சொன்னாள் காமினி.
அனைவரும் பதறிப் போயினர். சிலர் கடப்பாரை கொண்டு வந்து கதவை உடைத்தனர். கதவு கீழே வீழ்ந்தது. காமினி பதறிக்கொண்டே ஓடிப்போய் என்னங்க எங்கே இருக்கீங்க என்று பதறியபடி ஓடினாள். எங்கும் அவனைக் காணாமல் பதறி அழத் தொடங்கினாள். அப்படியே மடங்கி உட்கார்ந்து அழத் தொடங்கினாள். மற்றவர் ஒவ்வோர் இடமாக தேடத் தொடங்கினர். ஒருவர்சரிப்பா எதுக்கும் போலீசுக்குச் சொல்லிடலாம் என்றார்.
மூன்றாவது படுக்கை அறையின் குளியல் அறையிலிருந்து ஷாம்பூ மணக்கத் தலையை துவட்டிக்கொண்டே வெளியே வந்த சரவணன், காமினி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பதறினான். ஏம்மா எதுக்கு அழறே என்ன ஆச்சு என்றான், அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கே சொன்னாதானே தெரியும்’ என்று கேட்டபடியே நிமிர்ந்து பார்த்த சரவணன் அதிர்ந்து போனான்.
என்னா கலாட்டா இது எதுக்கு எல்லாரையும் வரவழைச்சிருக்கே எதுக்கு கதவை உடைச்சீங்க ஆமாம் உன்கிட்ட ஒரு சாவி இருக்குதே, அதை வைத்துக் கதவைத் திறக்க வேண்டியதுதானே ஏன் இப்பிடி கதவையெல்லாம் உடைச்சு என்ன ஆச்சு… என்றான்.
– வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 2012, தமிழ்க் கமலம் பதிப்பகம்.