மாற்றம்……!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 7,260 
 
 

”லட்சுமி !” என்ற குரல் கொடுத்துக் கொண்டே திறந்த வீட்டிற்குள் கையில் பையுடன் நுழைந்த விசாலம் கூடத்து கட்டிலில் அமர்ந்திருக்கும் பத்து வயது பெண் அருணாவைக் கண்டதும் சடக்கென்று வாய் மூடி முகம் இறுகினாள்.

அருணாவிற்கு வந்தவள் யாரென்று புரிந்து விட்டது.

”பெரிம்மா..ஆ” மெல்ல குரல் கொடுத்தாள்.

அவளைத் தாண்டிச் செல்ல முடியாத விசாலம் தன் மாறுதலை மறைத்து, சிரித்து, ”ஆமாம்;டி தங்கம். பேரியம்மாவேதான்.!… உனக்கு பார்வை மட்டும் இருந்தா ராசாத்தி !” என்று இடக்காய் அவள் குறையைச் சுட்டிக்காட்டி அவள் அருகில் வேண்டா வெறுப்பாகச் சென்றாள்.

” தின்ன என்ன வாங்கி வந்திருக்கே பெரியம்மா?!”

”ஒன்னுமில்லையே…. !”

”பொய் ! கொய்யாப்பழ வாசனை மூக்கைத் துளைக்குது.”

‘சனியன்! கண்ணு மட்டும்தான் குருடு. மத்த….காது, மூக்கு, மூஞ்சி, மொகரை… மொத்தமும் மூளை!’ என்று மனசுக்குள் சபித்த விசாலம், ”கண்டு பிடிச்சுட்டா என் செல்லம்!” என்று பொய் செல்லத்தில் அருணா தலையில் நறுக்கென்று அழுத்திக் கொட்டி தன் வெறுப்பு, ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி திருப்திப் பட்டாள்.

கொட்டலின் உக்கிரம் அருணாவிற்குப் பொரி கலங்கி, வலித்தது. அதன் தாக்கம் சின்னதாய்க் கண்கள்கூட கலங்கியது.

”இந்தா….! ” விசாலம் வேண்டா வெறுப்பாய் ஒரு கொய்யாப் பழத்தை எடுத்து அவள் கையில் திணித்தாள்.

அதே நேரம்…சமையலறையிலிருந்து வெளிவந்த லட்சுமி, ”வாக்கா !” அழைத்து வந்தாள்.

”வர்றேன் !” பதிலளித்த விசாலம் குழந்தையை விட்டு விலகி எதிரில் வந்த தங்கையை அப்படியே மடக்கி உள்ளே சென்றாள்.

அருணாவிற்கு… தலையில் கொட்டுப்பட்ட இடம் இன்னும் விண் விண்னென்று வலித்ததோடு மட்டுமில்லாமல் எரியவும் செய்தது. அதே சமயம் பெரியம்மாள்; குரல், கொட்டலில் வெறுப்பு முன்னைவிட அதிகம் என்பதும் புரிந்தது. பழத்தைக் கடிக்க விருப்பமில்லாமல் உருட்டினாள்.

‘வீட்டிற்கு வந்த விருந்தாளியை அடையாளம் கண்டு கொண்டதன் விளைவாய் வரவேற்றது தவறு. அதைவிட தவறு பழ வாசனை தெரிந்து வாய் விட்டது. குரல் கேட்டு சும்மா இருந்திருந்தால் அவள் இவளைக் கவனிக்காதவள் போல் உள்ளே சென்றிருப்பாள். இந்த வெறுப்பு, கசப்பு, கொட்டு , பழத்திற்கு வேலை இல்லை ‘ நினைத்தாள்.

ராமராசனின் முதல்தாரத்துப் பெண்தான் அருணா. பிறவிக் குருடு. பெற்றவள் குழந்தையைப் பார்த்த அடுத்த கணமே உறைந்தாள். அதே அதிர்ச்சியில் அப்படியே உயிரையும் விட்டாள்.

ராமாராசனுக்கு மகள், மனைவியைப் பார்த்து துடிக்கத்தான் முடிந்தது. கொள்ளி போட்டு முடிந்து வந்ததுமே குழந்தையை மார்போடணைத்து….மறுமணம் வேண்டாமென்கிற தீர்மானத்திலேயே வளர்த்தான.; ஆனால்… சுற்றம், நட்பு சும்மா விடவில்லை. ஆளாளாளுக்கு மறுமணத்தை வலியுறுத்தினார்கள்.

”இதோபார்! உன் வயசு, தாம்பத்தியத்துக்காகவெல்லாம் மனைவி வேணாம் இருக்கட்டும். பொறந்தது பொட்டப்புள்ள. அதுவும் பிறவிக் குருடு. பெத்தவனானாலும் பெண் வயசுக்கு வர்ற பக்குவம் வரும் வரைதான் நெருங்கி… அன்பு, பாசமாய் வளர்த்து, நல்லது கெட்டது செய்ய முடியும். அதுக்கு மேல…அவளுக்கும் சங்கடம் உனக்கும் கஷ்டம். புரிஞ்சுக்கோ.”

”சித்தி வருவாள். குத்தி வைப்பாள். குழந்தையைப் படுத்தி எடுப்பாள்ன்னு நீ நினைச்சிப் பயந்து நடுங்கிறதெல்லாம் நியாயம். மறுமணம் ஒதுக்குறது, மறுக்கிறது சரி. அப்படி இல்லாம….பெண்ணை நம் தகுதிக்குக் குறைவாய், குணவதியாய்ப் பிடிப்போம், முடிப்போம்.!” என்று கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்து, பயமுறுத்தி லட்சுமியைக் கட்டிவைத்து விட்டார்கள்.

லட்சுமிக்கு இரண்டாம்தாரமாக வாழ்க்கைப் பட விருப்பமே இல்லை. அக்காவைக் கட்டிக் கொடுக்க பெற்றவர்கள் அகலக் கால் வைத்ததின் விளைவு…….இரண்டாண்டுகள் கடந்தும் குடும்பக் கஷ்டம் நிவர்த்தியாகவில்லை.

”மனசு ஏன் ரெண்டாம் தாரம்ன்னு நெனைக்குது. முதல்ன்னே நினையேன்.! பையன் வயசாளி கிடையாது. அரசு உத்தியோகம். கை நிறைய சம்பளம். குழந்தை ஒரு குறை. அதுவும்… பார்வை குறை என்கிறது ரொம்ப பரிதாபம். அது மேல நீ அன்பு, பாசம் காட்டினா பிரச்சனையே இல்லே. எங்க கஷ்டத்தைப் புரிஞ்சுக்கோ. இந்த அளவுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிக்கனும்ன்னாலே… அது எங்களுக்கு இன்னும் கஷ்டம். எவ்வளவோ நாள் காத்திருக்கனும். போடுறதைப் போட்டு செய்யிறதைச் செய்ஞ்சு அனுப்புங்கன்னு வலிய வருது. மறுக்கிறது நல்லா இல்லே. இதுக்கு மேல சொன்னால் எங்க சுயநலம், வறுமை…. வற்புறுத்துறோம்ன்னு உனக்கு எங்க மேல வெறுப்பு வரும். உனக்கு எது சரியோ அப்படியே முடிவெடு. நாங்க சமாளிச்சுக்கிறோம் ” அப்பாவும் அம்மாவும் சொல்லி அகன்றார்கள்.

லட்சுமியும் யோசித்து இற(ர)ங்கி ”சரி” சொன்னாள். முடிந்தது.

வந்ததும்… கணவன், மகள் மீது அன்பு பாச நேசமாகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தாள். தனக்கென்று கணேஷ், தினேஷ் இரட்டைக் குழந்தைப் பிறந்ததும் மாறிப்போனாள். அந்த மாற்றமும் இவளால் வந்ததில்லை. அக்காள் வடிவில் வந்தது.

விசாலத்திற்குத் தங்கை மேல் பாசம். மேலும்… தான் நல்ல இடத்தில் முதல்தரமாய் வாழ்க்கைப் பட…. லட்சுமி தன்னால் இரண்டாம்தாரத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டாள் என்கிற பரிவு, பரிதாபம், குற்ற உணர்ச்சி தாக்க….தங்கை துவண்டு வாழ்க்கையில் தோற்றுவிடக் கூடாதென்பதால் அடிக்கடி வந்து பாசத்தைக் கொட்டி, அக்கரையைக் காட்டினாள்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக முதல் தாரத்து பெண் பிறவிக்குருடாய்ப் பிறந்து தன் தங்கையின் சந்தோச வாழ்க்கைக்கு இடைஞ்சல், கஷ்டத்தைக் கொடுக்கிறாள் நினைப்பும் சேர……அவளுக்கு இவள் மேல் வெறுப்பு.

பள்ளிக்கூடம் விட்டு உள்ளே வந்த ஒன்று, இரண்டாம் வகுப்பு பிள்ளைகளான கணேஷ் தினேசை, ”வாங்கடி கண்ணுகளா !” என்று ரொம்ப பாசமாய் அழைத்து அணைத்தாள் விசாலம்.

அவர்களுக்கும் இவளைக் கண்டதில் மகிழ்ச்சி. ஒட்டி மடியில் ஏறிக் கொண்டார்கள்.

”பெரியம்மா… உங்களுக்குப் பிடிச்ச சோன் பப்டி, பிஸ்கட், பழங்களெல்லாம் வழக்கமா…. நிறைய வாங்கி வந்திருக்கேன். எப்போதும் போல அக்காவுக்குத் தெரியாம நீங்க ரெண்டு பேரும் கொல்லைக் கிணற்றடிக்குப் போய் வேண்டியது தின்னுட்டு திரும்பனும்!….” என்று தாடைத் தொட்டு கொஞ்சி தான் கொண்டு வந்த தின்பண்ட பையை அப்படியே தூக்கி அவர்களிடம் கொடுத்தாள்.

அவர்களும் உற்சாகமாய் அங்கே சென்று கிணற்றோரம் உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள். பையைப் பிரித்து ஆளுக்கொரு பிஸ்கெட் பாக்கெட்களைப் பிரித்து தின்றார்கள்.

இவர்கள் அரவம் கேட்டு அடுத்த வீட்டு குட்டிப் போட்ட நாய் ஒன்று தன் இரண்டு குட்டிகளுடன் வேலி இடுக்கால் நுழைந்து இவர்கள் முன் நின்று வாலை ஆட்டியது. அடுத்து, இரண்டு பூனைக் குட்டிகளும் அவைகளோடு வந்து இலவச இணைப்பாய் வந்து நின்றன.

கணேஷ் தினேஷ் நாய்க்கு ஆளுக்கொரு பிஸ்கெட்களைத் தூக்கிப் போட்டார்கள்.

கீழே விழுந்த பிஸ்கட்டுகளைக் குட்டிகள் தின்னவில்லை. மாறாக தாய் நாய்தான் இரண்டையும் கவ்வி தின்றது. அடுத்து முகத்தைத் தூக்கி பார்த்து அவர்கள் போடுவார்கள் என்று எதிர்பார்த்தது.

கணேஷ் தினேஷ் போடவில்லை. சுவாரஸ்யமாகத் தின்றார்கள்.

கொஞ்ச நேரம் நின்ற நாய் சிறிது தூரம் தள்ளி போய் படுத்தது. அடுத்த விநாடி……. குட்டிகள் நான்கும் அதன் மடியில் ஆளுக்கொரு காம்புகளைக் கவ்விப் பிடித்து சுவைத்தன.

இந்தக் காட்சியை இருவரும் திடுக்கிட்டு திகைப்பாய்ப் பார்த்து, பின்… அப்படியே திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

அடுத்து….அவர்களுக்குள் ஏதோ ஒன்று தோன்ற…உடன் இறங்கி தின்பண்ட பையைத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் ஓடினார்கள்.

அடுப்படியில் பேசிக்கொண்டிருந்த அக்கா தங்கை இருவரும் அவர்கள் உள்ளே ஓடுவதைப் பார்த்தார்கள்.

”ஏய் எங்கே போறீங்க ? ” விசாலம் கூவினாள்.

”அக்காவுக்கு பிஸ்கட் கொடுக்க.” கணேஷ் ஓடிக்கொண்டே சொன்னான்.

”ஏய்ய் ? ” அடுத்து லட்சுமி அதட்டி எழுந்திருப்பதற்குள் … இருவரும் அருணா கட்டிலில் ஏறி ஆளுக்கொரு பக்கம் அமர்ந்தார்கள்.

”அக்கா இந்தா…” பையை அப்படியே அவள் மடியில் வைத்து தங்கள் தின்ற பிஸ்கட் பாக்கெட்டுகளையும் அவள் கையில் கொடுத்து, ”தின்னேன்…!” என்று இருவரும்; பாசமாய்க் கூறி இருவரும் ஆளுக்கொரு கைகளை அவள் தோள் மீது போட்டு அணைத்தார்கள்.

அருணா இதை எதிர்பார்க்கவில்லை. முகத்தில் திகைப்பு, வியப்பு. மேலும் அவர்கள் தங்கள் கைகளிலிருந்த எச்சல் பிஸ்கட்டுகளையும் அவள் வாயில் வைத்து ஊட்ட….

அந்த காட்சியைக் கண்ட அக்கா தங்கைகளுக்கு அதிர்ச்சி.

”என்னடா…? ” விசாலம் கேட்டு பதற…..

”பெரியம்மா! கொல்லைக்குப் போய்ப் பாரேன் புரியும்.” என்றான் கணேஷ்.

”அங்கே என்ன அதிசயம் ?!” அவள் சீறினாள்.

”நாய், அம்மா செத்துப் போன பூனைக்குட்டிக்குப் பால் கொடுக்குது….” தினேஷ்.

அடுத்த விநாடி…. அக்காள் தங்கைகளான விசாலம், லட்சுமி கொல்லைக்கு ஓடினார்கள்.

அங்கே….கிணற்றடியில் தாய் நாய் தன் மடியைக் காட்டிக்கொண்டு வாகாய்ப் படுத்துக் கிடக்க… அதன் குட்டிகளோடு சேர்ந்து.. தாயை இழந்த ஒரு பூனைக் குட்டியும் பால் குடித்துக் கொண்டிருந்தது.

அதிர்ந்து நின்றார்கள்.

”மாற்றுப் பிராணிகளான இதுகளுக்கு இருக்கும் இந்த வாஞ்சை இரக்கம் நமக்கு இல்லையே என்கிற உண்மையை ஒன்னுந்தெரியாத புள்ளைங்க புரிஞ்சி திருந்திட்டாங்க. நீங்களும் திருந்தனும்…” அவர்களுக்குப் பின்னால் நின்று ராமராசன் குரல் கொடுக்க….

விசாலம், லட்சுமி தலை கவிழ்ந்தார்கள்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *