கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 7,373 
 
 

கருவேலாங்காட்டு ஒத்தயடிப் பாதையில் பசுவும் கன்றுக்குட்டியும் போவது போல தன் ஐந்துவயது குழந்தை மீனாவைக் கூட்டிக்கொண்டு முனுமுனுத்துக் கொண்டே பேருந்து நிறுத்தத்துக்கு வந்தாள் செல்லம்மாள்.

“எவ்வளவு தான் இருந்தாலும் பொறந்த மண்ணுக்கு வந்த மகள் எல்லாம் சந்தோசமா திரும்புவாங்கனு பேரு, என்னப் பெத்தவ என்னடானா எதுக்கெடுத்தாலும் மயன் புள்ளைங்கள ஒசத்தி எம்மவளயே குத்தஞ் சொல்லுது. கூடப் பொறந்தவன் தான் கேக்குறானா. அதச் சொல்லி என்ன பன்றது. அதுக்கு வாச்சவ மயக்கிப்புட்டா. ஏம்புள்ளதான் என்ன தப்பு செஞ்சுச்சு. கை தவறி அந்த பொம்மைய ஒடச்சுப்புடுச்சு. அதுக்கு … மருமக கொண்டு வந்ததுனு என்னப்பெத்தவ இப்புடி திட்டுறா. எவ்வளவு நேரந்தான் பொறுமையா இருக்குறது. நாம வந்தது தான் சரி.”

“கோபிச்சுக்கிட்டுதான் வர்றேனே, போகாதேனு சொல்றாளா, அவ குணமே அப்படித்தான்னு பெத்தவ சொல்றா”

“ம்… நம்ம வரும்போது தான் எலவு பஸ்யஸல்லாம் வராது”

கொஞ்ச நேரத்தில் “பாம்பாம்” ஒலியுடன் “டட்டட்” என்ற ஓசையோடு கல்லுப்பட்டி பேருந்து வந்து நின்றது. மீனாவைத் தூக்கிக்கொண்டு பேருந்தில் உட்கார்ந்தாள்.

அவள் முகம் கடுகடுத்துக் கொண்டே இருந்தது.

“இனிமே இந்தப்பக்கமே வரக்கூடாது” தன் தலைமுடியை வாரி சுருட்டி கொண்டை போட்டாள். பின்னால் யாரோ அவள் முடியை இழுக்கவும், கோபமாக திரும்பினாள். ரெண்டு வயசுக் குழந்தை தன் சின்னப் பற்கள் மின்ன சிரிக்கவும், அந்தக் குழந்தையை வாங்கி கொஞ்சினாள். சின்னக் குழந்தையால் கொஞ்ச நேரத்தில் கோபமும் வேதனையும் காணாமல் போனது செல்லமாளுக்கு.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *