மாமனோட மனசு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,114 
 
 

எது நடக்கக் கூடாது என்று ஆனந்த் நினைத்திருந்தானோ… அது நடந்தே விட்டது. ‘போச்சு… என் வாழ்க்கையே போச்சு… இப்படியெல்லாம் ஏடாகூடமா ஏதாச்சும் நடந்துடும்னுதான்… மூணு வருஷமா இந்தக் கிராமத்துப் பக்கமே வராம இருந்தேன்… இந்த அம்மாதான்…’பாட்டி ரொம்ப சீரியஸா இருக்குடா…உன் பேரைத்தான் ஈனஸ்வரத்துல கூட முனகிக்கிட்டிருக்கு… அநேகமா அந்த உசுரு உன்னைப் பார்க்கறதுக்காகத்தான் காத்திட்டிருக்குன்னு நினைக்கறேன்… அதனால உடனே புறப்பட்டு வந்து… உன் பாட்டியோட முகத்தைக் கடைசியா பார்த்துக்கடா…” என்று போனில் அழாக்குறையாகக் கெஞ்சி, என்னைய வரவழைச்சு… இப்படியொரு இக்கட்டுல மாட்டி விட்டுடுச்சு”

விஷயம் வேறொன்றுமில்லை,

அம்மாவின் கெஞ்சலுக்கு மதிப்புக் குடுத்து சென்னையில் ரயிலேறிய ஆனந்த் மறுநாள் காலை தன் கிராமத்தை அடைந்த போது, பாட்டி கடைசி மூச்சில் காத்துக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் கை நீட்டி அழைத்தாள். அருகில் வந்தவனின் கையைப் பற்றி, தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த தன் மகன் வயிற்றுப் பேத்தியான அருக்காணியின் கையுடன் இணைத்து விட்டுத் தலை தொங்கிப் போனாள்.

அந்த நொடியில் மொத்தக் கூட்டமும் ‘ஹோ” வென்று கத்தி அழுதது.

ஆனந்தின் மனம் அதைக் காட்டிலும் பெரிய குரலில் ஓங்கியழுதது. ‘அய்யய்யோ…இந்தப் பட்டிக்காட்டுச் சனியன் பெரிய மாமன் வீரய்யாவின் மூத்த பொண்ணாச்சே… அவனொரு மொரட்டு முட்டாளாச்சே…’ என்னைப் பெத்தவளோட கடைசி ஆசையை நிறைவேத்தாமல் விட மாட்டேன்னு மார்தட்டி ஆடுவானே… அவனுக்கு சப்போர்ட்டா ஏகப்பட்ட சொந்தக்காரங்க நிற்பாங்களே… இந்தப் பிரச்சினை பெரிசாகும் போது வெட்டுக் குத்து கூட நடக்க வாய்ப்பிருக்கே…”

சவமாய்க் கிடக்கும் பாட்டியின் முகத்தைக் கடுங் கோபத்தோடு பார்த்தான் ஆனந்த், அந்த முகத்தில் ஒரு சிரிப்பு பாதியில் உறைந்து போய்க் கிடந்தது. ‘செய்யறதையும் செஞ்சிட்டு…சிரிச்சுக்கிட்டே செத்துக் கிடக்கறதைப் பாரு”

பார்வையை மெல்ல அந்த அருக்காணியின் பக்கம் திருப்பினான். அது அசிங்கமாய் வெட்கப்பட்டு…அலங்கோலமாய் நெளிந்து… அவலட்சணமாய்ச் சிரித்தது.

‘அய்யோ… காப்பாத்துங்க” என்று உள்ளுக்குள் கூக்குரலிட்டபடி, வெளியே ஓடி வந்தான்.

”என்ன செய்யறது….எப்படி இந்தக் கிராமத்தானுக கிட்டயிருந்து தப்பிக்கறது?” தீவிர யோசனையுடன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

ஒரு புறம் சவத்தை எடுப்பதற்கும், சடங்குகள் செய்வதற்குமான ஏற்பாடுகள் நடநடது கொண்டேயிருக்க, மறுபுறம் உள்ளூர்க் கிழவிகளும்… உறவுக்காரப் பெண்மணிகளுமாய்ச் சேர்ந்து ஒப்பாரியில் உச்சம் தொட்டுக் கொண்டிருந்தனர்.

‘அள்ளிக் கொடுத்திடவா … ஆத்தா ஆலாய்ப் பறந்து வந்தேன்…
வாரிக் கொடுத்திடவா… ஆத்தா வண்டாய்ப் பறந்து வந்தேன்…
கத்தரிக்காய் விற்ற இடத்தில்… ஆத்தா கடலூரான் சொன்னானே…
வெண்டைக்காய் விற்ற இடத்தில்… ஆத்தா வேலூரான் சொன்னானே…
பூசணிக்காய் விற்ற இடத்தில்… ஆத்தா புத்தூரான் சொன்னானே…
அருவிப்புலத்தில்… ஆத்தா ஆளோசை கேட்டு வந்தேன்…
குருவிப்புலத்தில்… ஆத்தா குரலோசை கேட்டு வந்தேன்…”

அந்த ஒப்பாரி கோரஸில் அம்மாவின் குரலும் கேட்க. பற்களை ‘நற…நற‘ வென்று கடித்தான் ஆனந்த். ‘ஹும்…எல்லாம் இந்த அம்மாவால் வந்தது”

சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர். ‘யாரும் கவனிக்காத நேரம் பார்த்து நைஸா ஓடிடுவோமா?” யோசித்தான்.

அப்போது,

சற்றுத் தொலைவில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்த பெரிய மாமன் வீரய்யா ஆனந்தைப் பாரத்துப் புன்னகைக்க,

‘அடக் கடவுளே… இந்த ஆளு இங்க நின்னுட்டிருக்கானே… எப்படி ஓடுறது?”

அந்த வீரய்யா தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவனிடம் ஆனந்தைக் காட்டி எதுவோ சொல்ல, அந்த மனிதனும் இவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

‘என்ன சொல்லியிருப்பான்?… ‘அதுதான் என் மாப்பிள்ளை… என்னைப் பெத்தவ போற போக்குல சொல்லிட்டுப் போயிருக்கா!”ன்னு பெருமையாச் சொல்லியிருப்பான்… எல்லாம் விதி… சென்னைல ஒரு பெரிய ஐ.டி. கம்பெனில சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயரா வொர்க் பண்ற எனக்கு அந்தப் பட்டிக்காட்டு அருக்காணி மனைவியா?… ஓ… காட்… ப்ளீஸ்… ஸேவ் மீ”

அந்த வீரய்யாவின் மனைவி… ராமாயணத் தாடகையின் ஜெராக்ஸ் காபி போலிருந்தவள் ஆனந்தின் அருகில் வந்து, ‘ தம்பீ…காப்பித் தண்ணி கீது குடிக்கறியா சாமீ?” என்று தணிவான குரலில் கேட்க,

இட, வலமாய்த் தலையாட்டினான்.

‘அப்ப…சருவத்து?’

‘என்ன?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் ஆனந்த்.

‘சர்பத்து…சர்பத்;’

‘ப்ச்…எதுவம் வேணாம்” என்றான் இறுகிய முகத்துடன்.

‘சரி… சாமி” அவள் நகர, மௌனமாய்த் தலையிலடித்துக் கொண்டான் ஆனந்த். ‘இவள் என் மாமியாரா?…கொடுமை…கொடுமை”

மாலை ஆறு மணி வாக்கில் பாட்டியின் சவ அடக்கம் முடிந்த பின் ஓரளவிற்கு கூட்டம் குறைந்திருந்தது. ‘அம்மாவைப் பார்த்து ஒரு டாட்டா சொல்லிவிட்டு அப்படியே எஸ்கேப் ஆகி விட வேண்டியதுதான்” என்று காத்திருந்த ஆனந்தின் எண்ணத்தைக் குலைப்பது போல் அவனருகில் வந்து நின்ற அந்த வீரய்யா, ‘தம்பி…கொஞ்சம் அப்படி வர்றியா… உன் கூடப் பேசணும்” என்றார்.

வெளிறிப் போன முகத்துடன் அவரைத் தொடர்ந்த ஆனந்தின் நினைவில் அவனது சாப்ட்வேர் கம்பெனியும் … அதில் பணிபுரியும் சுரிதார் சுந்தரிகளும் வந்து போக… அழுகை பொங்கியது.

‘அவ்வளவுதான் இனி எந்தக் கடவுளாலும் என்னைக் காப்பாத்த முடியாது…” மொத்தமாய் நம்பிக்கை இழந்து போயிருந்தான்.

ஒரு ஓட்டு வீட்டின் முன்னால் நின்று, அங்கிருந்த திண்ணையைத் தன் தோள் துண்டினால் தட்டி விட்டு, ‘உட்காருங்க தம்பி” என்றார் அந்த வீரய்யா.

உட்கார்ந்தான்.

நிதானமாய் அவனருகில் அமர்ந்தவர், ‘தம்பீ…என்னைப் பெத்தவ தன்னோட ஜீவன் பிரியற அந்த கடைசி நேரத்துல செஞ்சிட்டுப் போன அந்தக் காரியத்தை நினைச்சா… எனக்கு மனசுக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு தம்பீ”

‘இருக்காதா பின்னே?… அருக்காணிக்கு அடிச்ச யோகம் ஐ.டி. ஃபீல்டாச்சே?” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

‘ஆனா… எங்காத்தா… அந்தக் காலத்து மனுசி தம்பி… அவளுக்கு நடப்புக்கால நடைமுறைகள் அவ்வளவாத் தெரியாது… பழைய பஞ்சாங்கம்!.. அதனாலதான் பழைய கால நினைப்புலேயே… மகள் வயித்துப் பேரனோட கையையும்… மகன் வயித்துப் பேத்தியோட கையையும்… சேர்த்து வெச்சிட்டுச் செத்துப் போயிட்டா….! ஆனா… நாம அதுக்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் குடுக்க வேண்டிய அவசியமில்லை தம்பி… ஏன்னா…நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு டவுன்ல… அதென்ன?… கம்பியோட்டறதா?…”

‘கம்ப்யூட்டர்…ங்க!”

”ஆமா… ஆமா… அதேதான்!… அதுல வேலை பார்க்கறீங்க… ஆனா எம்பொண்ணு அருக்காணி இங்க… அழுக்குத் தாவணியோடவும்… ஆட்டாம் புழுக்கையோடவும்… கிடக்குற மவராசி… உங்க ரெண்டு பேரையும்… நெனப்புல கூடச் சேர்த்துப் பார்க்க முடியாது…சேர்த்துப் பார்க்கவும் கூடாது…”

ஆனந்தைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் மெலடி பாடி வட்டமிட்டன.

‘அதனால… அந்த நிகழ்ச்சியை நீங்க மறந்திடுங்க தம்பி… நாங்களும் மறந்திடறோம்… மத்த உறவுக்காரங்களுக்கும் நானே நைச்சியமாச் சொல்லிடறேன்… என்ன நான் சொல்றது சரிதானே தம்பி?”

தன் அரிவாளோடுதான் இப்பிரச்சினையை கையாளுவார் பெரிய மாமா என்று எதிர்பார்த்திருந்த ஆனந்த். தன் அறிவாற்றலோடு அவர் கையாண்ட விதத்தில் மயங்கி அவர்காலைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தான்.

இதுவரை ஒரு கிராமத்தானாகவும்… காட்டானாகவும்… மொரட்டு முட்டாளாகவும் தெரிந்த அந்தப் பெரிய மாமன் வீரய்யா ஆனந்தின் கண்களுக்கு இப்போது ஒரு ஞானியாக… மகானாக…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *