சகிப்பின் சிறப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,113 
 
 

மாலை வெயில் மிதமான சூட்டில் மஞ்சள் வெளிச்சத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.ஒரு மெல்லிய தென்றலின் சுகம் அருகில் இருந்த மல்லிகை கொடியில் ஊடுருவி அங்கிருந்த கொய்யா மரத்தின் இவைகளைத் தழுவி விட்டு பசுமை மணத்துடன் தோட்டத்தில் உள்ள கிணற்றின் பக்கத்தில் இருந்த பலகை பெஞ்சில் உட்கார்ந்திருந்த தாரிணி மீது வீசியது.

அதனருகில் உள்ள மாமரக்கிளையில் இரண்டு கிளிகள் ஆரவாரம் செய்தபடி இருந்தன.அதன் பக்கத்தில் இருந்த சிறிய மாதுளை மரத்தின் மேல் ஒரு காகம் தன் குடும்பத்தின் சிறிய காகத்திற்கு எதையோ ஊட்டிக் கொண்டிருந்தது. கிணற்றடிக்கு மிக அருகில் இருந்த இரண்டு வாழை மரங்களில் ஒன்று குலையுடனும் இன்னொன்று இளங்கன்றாகவும் குருத்து இலைகளுடனும் காட்சியளித்தன. கிணற்றடியிலிருந்து உத்தேசமாக பதினைந்து அடி தூரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரை ஒட்டி கனகாம்பரம்,அந்தி மந்தாரை, டிசம்பர் பூக்கள்,செவ்வரளி செடிகள் நேர்த்தியான வரிசையில் நின்றிருந்தன.அச்செடிகளின் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன சிட்டுக்குருவிகளும், தவிட்டு குருவிகளும். இவைகள் அனைத்தையும் தாரிணியின் மனம் ரசித்துக் கொண்டிருந்த போதும், மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் பலவிதமான நெருடல்களால் முகம் வாடிய தோற்றத்தோடு உட்கார்ந்து இருந்தாள்.

“என்னடி, தாரிணி, பலமான யோசனை? எவ்வளவு பணம் சேர்ந்திருக்குன்னு கணக்கு போட்டிட்டு இருக்கியா? இதுவரை மூணு மிஸ்டுகால் கொடுத்திருக்கேன் உனக்கு, பாக்கலையா நீ? ” என்று பலமான குரலில் மெலிதான சிரிப்புடன் கேட்டுக் கொண்டே அவளருகே வந்தாள் வசுமதி.

தாரிணியும்,வசுமதியும் நெருங்கிய தோழிகள். மயிலாடுதுறைக்கருகே உள்ள கிராமம் அவர்களின் சொந்த ஊர். அக்காலத்திலேயே வசதியானவர்கள் தாரிணியின் பெற்றோர்கள் தியாகராஜன்,கமலா. தியாகராஜன் சிறிது சிறிதாக தன்னுடைய விவசாய விளை நிலங்களில் பலதரப்பட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்து சென்னை விற்பனை சந்தையில் சிறுதொழில் பெயர் பதிந்து, ஐந்து பேரை பணியமர்த்தி, பிராண்ட் ஒன்று “தியாகா” எனும் பெயரில் ஏற்படுத்தி இவரின் வேளாண் பொருட்களை நவீனமாக ‘பேக்’ செய்து வியாபாரம் நடத்தி வருகிறார். அது தவிர மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாகவும் தயாரித்து விற்பனை செய்து வசதியான நிலையில் இருக்கிறார். இவரின் தொழிலுக்கு ஆலோசனை வழங்குவதிலும்,

நிர்வாகத்தை சமாளிப்பதிலும், மனைவி கமலா, தாரிணியின் அம்மா, முக்கிய பங்கு வகிக்கிறார். பெரிய வீடு, அதன் பின்னால் பரந்த தோட்டம் அடங்கியது அவர்களின் இருப்பிடம்.

வசுமதியின் அப்பா வெங்கடாசலம்.தாயார் சரஸ்வதி.வெங்கடாசலம் மயிலாடுதுறை தலைமை அஞ்சல் அலுவலக அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தியாகராஜன் அளவிற்கு வசதியானவர் இல்லாவிடினும் அவரில் பாதியளவு வசதி படைத்தவர்.சரஸ்வதி பெயருக்கேற்ப நன்கு படித்தவர்.அக்கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடைநிலை பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர்.இவ்வருடக் கடைசியில் ஓய்வு பெறுவார்.அது தவிர, நிறைய மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்களில் ‘ட்யூஷன்’ எடுக்கிறார். வெங்கடாசலம், மயிலாடுதுறையில் இருக்கும் பூர்வீக வழியில் வந்த இடத்தை மாற்றியமைத்து, காகிதப் பைகள்,சணல் பைகள், அலுமினிய ஷீட் கள், பைகள் இவைகள் விற்கும் கடை ஒன்று நடத்தி வருகிறார்.உதவியாளர்களையும் அமர்த்தி, வெவ்வேறு இடங்களில் அவர்கள் மூலம் சந்தைப்படுத்தி வருகிறார்.

வசுமதியின் வீடு, தாரிணியின் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி உள்ளது.வீட்டின் பின்புறம் அழகிய தோட்டம் எல்லா வசதிகளுடனும் உள்ளது.

தாரிணியும் வசுமதியும் ஒன்றாகவே, ஒரே பள்ளி, ஒரே கல்லூரியில் படித்தனர்.இருவரும் இன்ஜினியரிங் படித்திருந்தாலும், தகவல் தொழில்நுட்ப துறையில் ‘ டேட்டா என்ட்ரி’ பணி இவைகளில் நாட்டம் இல்லாமல், தாரிணி ‘உட்கட்டமைப்பு’ படிப்பையும், வசுமதி ‘ ஆடைகள் வடிவமைத்தல் ‘ படிப்பையும் படித்தனர்.இருவருக்கும் சென்னையில் வேலை கிடைத்ததால் ஒரே ‘ மகளிர் விடுதி’யில் தங்கியிருந்தனர்.இருவருக்கிடையில் ரகசியங்கள் இல்லை.மிகவும் வெளிப்படையான பழக்கம்.

இருவரும் வேலைக்கமர்ந்த மூன்று வருடங்களில் திருமணம் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில், இரண்டு மாத இடைவெளியில் நடந்தேறியது. தாரிணியின் கணவன் ப்ரவீண், சென்னையில் உள்ள பெரிய தனியார் கப்பல்துறை கம்பெனியில் மேலாளராக பணிபுரிகிறான்.தாரிணியின் திறமை பார்த்து, அவனுடைய நண்பர்கள் மூலமாக சிறிய “உட்கட்டமைப்பு” ஒப்பந்த வேலைகளை தாரிணி பெயரில் ஏற்றுக்கொண்டு, தாரிணியை அதில் ஈடுபடுத்துகிறான். அவளுக்கும் மகிழ்ச்சிதான்.

வசுமதியின் கணவன், விஸ்வம், சென்னையில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைமையாக இருக்கிறான்.

அவனுடைய நண்பன் ஆடைத்துறையில் இருப்பதால், வசுமதிக்கு நல்ல வேலை கிடைக்க வசதியாக இருந்தது.

“ஏய், வசு, எப்படி வந்தே? ஒண்ணுமில்லேடி உனக்குத்தான் தெரியுமே என் நிலைமை? ஏதோ கவலைகள், யோசனைகளோடு, செல் போனை சைலண்ட் மோட்ல போட்டுட்டு இங்கே வந்து உட்கார்ந்திருந்தேன்.” என்றாள் தாரிணி.

“இங்கே பாருடி தாரி, நான் சொல்றதை நிதானமா யோசிச்சு பாருடி.அவசரப்படாம,ஆவேசப்படாம, முடிவு எடு.இது இப்படியே போய்டற விஷயம் இல்லை.” வசுமதி கூறினாள்.

“என்னத்தடி யோசனை செய்ய இருக்கு இதுல, மனசு விட்டு போச்சுன்னா அவ்வளவுதான்டி.நீ என்ன சொல்றேடி, தப்பு என் மேலங்கறியா?”என் கோபமாக தாரிணி கேட்டாள்.

“தப்பு உன் பேர்லயோ அவன் பேர்லயோ, ஆனால் ரெண்டு பேரும் சேந்து இந்த

மாதிரி முடிவெடுத்தா அது மகா தப்பு.நீங்கல்லாம் படிச்சதே வேஸ்ட்டுடி.நான் உனக்கு சொல்றேன் சில டெய்லி நடக்கற விஷயங்கள்.அதை அசை போட்டுப்பாரு அப்புறம் தெரியும்டி, நாம என்னத்தை எல்லாம் சகிச்சு தாண்டி வர்றோம் அப்டின்னு.”என்றாள் வசுமதி.

இந்த நேரத்தில் கமலா காபி எடுத்துக் கொண்டு அங்கே வந்து” வசு காபி கலந்துட்டு பாத்தேன்.நீ இல்லை, இங்கேதான் வந்திருப்பேன்னு தெரியும்.அதான் எடுத்துட்டு வந்துட்டேன்.தாரி, நீயும் எடுத்துக்கோடி ” என்று தட்டை நீட்டினாள்.நல்ல ஃபில்டர் காபி பசும்பாலில் கலந்து, ஆவி பறக்க மணம் வீச, ” அம்மா, நீங்க ஏம்மா சிரமப்படறீங்க, சத்தம் கொடுத்தா ரெண்டு பேரும் வந்திருப்பமே” என்றாள் வசுமதி.

“சிரமமெல்லாம் ஒண்ணுமே இல்லை.இவளோட குழப்பம் தீர்ந்ததுன்னா மனசு தெளிவாயிடும் ” என்றாள் கமலா.

“நீங்க கவலைப்படாதீங்க ஆன்டி.எல்லாம் நல்லபடியா முடியும் ” வசுமதி பதிலளித்தாள்.

தாரிணிக்கும் ப்ரவீணுக்கும் திருமணம் ஆகி மூன்றாவது வருடம் முடியப் போகிறது. ‘மூன்று வருடங்களுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வோம்’ என்று இருவரும் சம்மதித்து தற்போது வரை அதை மீறாமல் உள்ளனர். முதலிரண்டு

வருடங்கள் நன்றாகவே சென்றது. ஆனால் இரண்டாம் வருட முடிவில் இருந்து இந்த நாள் வரையில் ஒவ்வொரு வாரத்திலும் ஏதாவது சிறு சிறு சண்டைகள், வாக்குவாதங்கள், குதர்க்கப்பேச்சுகள், கடும் கோபங்களின் வெளிப்பாடுகள், கருத்து வேற்றுமைகள் இவைகள் தலையெடுக்க, தாரிணி விவாகரத்து தான் இதற்கு தீர்வு என்று கூறி மூன்று முறைகள் தன் வீட்டிற்கு திரும்பி வந்து, பெரியவர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்து வாழ ஏற்பாடுகள் செய்தனர்.இப்போது நான்காம் முறை வந்துவிட்டாள். ‘இனி சந்தர்ப்பமே இல்லை ‘ எனக்கூறி தியாகராஜனையும்,கமலாவையும் மன அழுத்தத்தில் தள்ளிவிட்டாள்.

ப்ரவீண் குடும்பமும் நல்ல பொருளாதார வசதியுடன் இருப்பவர்கள். அவன் தந்தை மணியன், தமிழ்நாடு , ஆந்திரா மாநிலங்களில் பிரபல டயர் கம்பெனியின் மொத்த விற்பனையாளர்.ஸ்ரீபெரும்புதூரில் வசிக்கிறார்கள்.

ப்ரவீணுக்கு கப்பல்துறை விருப்பமாக இருந்ததால் அதன் தொடர்பான மேல் கல்வியை லண்டன், டென்மார்க் இந்நாடுகளில் படித்து வந்து இங்குள்ள கம்பெனியில் நல்ல பதவியில் இருக்கிறான். திருமணத்திற்கு பின் அவர்களுக்கு சொந்தமான அபிராமபுரத்தில் உள்ள தனி வீட்டிற்கு மாறிவிட்டான்.தாரிணியை மிகவும் நேசிப்பவன். மனதில் பட்டதை உடனே சொல்லிவிடுவான். பல வேளைகளில் அது தாரிணிக்கு பிடிக்காமல் தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். இருவரும் கோபமாக சத்தத்துடன் பேசிக்கொள்வார்கள். அவளிடம் இதற்கு மேல் சத்தம் போடவேண்டாம் என்று நினைத்து ப்ரவீண் தன் கோபத்தை ஏதேனும் பொருட்கள் உடைப்பதில் காண்பித்து விட்டு வெளியே போய்விட்டு மிக தாமதமாக வருவான். தாரிணி தன் பங்குக்கு கிண்டியில் உள்ள ஃப்ளாட் ஒன்றில் தனியே வசித்து வரும் தன் அலுவலக தோழி வீட்டிற்கோ அல்லது குரோம்பேட்டையில் இருக்கும் வசுமதி வீட்டிற்கோ போய் விடுவாள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து கோபம் குறைந்து இருவரும் பேசிக்கொள்வார்கள்.

இவர்களின் இந்த செயல்கள் வசுமதிக்கு கொஞ்சம் தாமதமாகவே தெரிய வந்தது.தாரிணி விவரமாக ஏதும் சொல்லாமல் இருந்து விட்டாள்.ஒருநாள் வசுமதியும்,விஸ்வமும் திடீரென தாரிணி வீட்டிற்கு சென்றபோது, ப்ரவீண் எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அதற்குப்பின் இவர்கள் இருவரும் அவர்களை போனிலோ, நேரில் பார்த்தோ சாந்தப்படுத்துவார்கள்.

குரோம்பேட்டையில் உள்ள விஸ்வத்தின் வீட்டில் மேல் தளம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததால் சில மாதங்களாக இருவரும் அதில் மும்முரமாகி விட்டனர். அதற்குள் தாரிணி, ப்ரவீண் இடையே விரிசல்கள்

அதிகமாகி விட்டதையும் அவள் நான்காம் முறையாக சொந்த ஊருக்கு சென்று விட்டதை அறிந்து, வசுமதி கிளம்பி கிராமத்திற்கு வந்தாள்.

“சூப்பரான காபிடி தாரிணி.நீ குடி.ஆறிடப்போகுது” என்று கூறிய வசுமதி ” இப்போ நான் கேட்பதற்கு நீ உண்மையான பதில் சொல்லணும்.சரியாடி?” என் சற்று உரக்க கேட்டாள். காபியை அருந்தக் கொண்டே தாரிணி தலையசைத்து சம்மதித்தாள்.

“ப்ரவீண் அடிக்கடி குடித்து விட்டு உன்னிடம் தகராறு செய்கிறானா?” வசுமதி.

“சேச்சே அதெல்லாம் இல்லை ” தாரிணி பதில்.

வசுமதி :” உன்னோடு டிஸ்கஸ் பண்ணாமல் ஏதாவது முடிவெடுக்கறானா?

தாரிணி : ” இல்லை”

வசுமதி: ” ஏதாவது சூதாட்டம் வகையறாக்கள், அல்லது தனியா நண்பர்களோடு சுத்தறது இந்த மாதிரி…?”

தாரிணி : ” நோ,நோ..”

வசுமதி: ” இல்லாட்டினா வேற ஏதோ பொண்ணோட, பொண்ணுங்களோட நட்புகள், நெருக்கமான தொடர்பு இப்படி ஏதாவது..”?

தாரிணி : ” சீச்சீ… அந்த வழக்கம் எல்லாம் கிடையாது.அதுல ரொம்ப க்ளீன் அவன்!”

“பின்னே என்னதாண்டி பிரச்னை? சண்டைகள் ஏன் வருது அடிக்கடி உங்களுக்குள்ள “? வசுமதி கோபமாக கேட்டாள்.

தாரிணி சொன்னாள்.” ஆபீஸ் டென்ஷனை என்னிடம் காண்பிப்பது, சில சமயங்களில் ‘குக்’ பண்ணது பிடிக்கலைன்னா கண்டபடி கிண்டலடிப்பது, எங்கேயாவது ‘அவுட்டிங்’ திட்டம் போட்டிருந்தா, சரியா நேரத்துக்கு வராம அதைக்கெடுப்பது, கேட்டால் கோபப்படுவது, நான் என் வேலை விஷயமாக

போய்விட்டு தாமதமாக வரும்போது வீட்டு சுத்தத்தை கவனிக்காமல் அலட்சியப்படுத்துவது, போன் வருஷம் ‘ப்ளான்’ செஞ்ச இந்தோனேசியா ‘ஹாலிடே ட்ராவலை’ சொதப்பினது, இதைப்போல பல விஷயங்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், கோபத்தினால் எங்கள் விரிசல் பெருசா போயிடுச்சு.”

“தாரி, இதெல்லாம் எனக்கு ஏற்படலேன்னும், எனக்கும் விஸ்வத்துக்கும் இடைல சண்டை,’ஆர்க்யூமெண்ட்’ க்ளே இல்லைன்னும் நினைக்கிறாயா, நீ?” வசுமதி அவளை கேட்டுவிட்டு தொடர்ந்தாள்

.” இதோ பார், நம்மளை பெத்தவங்களை விட்டுட்டு நிரந்தரமா ஒரு வாழ்க்கை நல்லவனோட அமைச்சுக்க வாய்ப்பு வரும்போது அதை கல்யாணம்னு செஞ்சுக்கறோம். இந்த ‘ நல்லவன்’ அப்டின்னு சொன்னேன் இல்லையா, எந்த விதங்கள்ல தெரியுமா, உங்கிட்ட முன்னால் சில கேள்விகள் அவனைப் பத்தி கேட்டு நீயும் இல்லேன்னு சொல்லி மண்டைய ஆட்டினியே, அந்த மாதிரி குணங்கள் எல்லாம் இல்லாம இருந்துட்டாலே நல்லவனுகதான்.மத்தபடி நீ சொல்ற இந்த சண்டைகள், வாக்குவாதங்கள் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைடி.

நாம் நம்மை சுயபரிசோதனை ‘டெய்லி பேஸிஸ்’ல செஞ்சு பாத்தாதான் தெரியும் எவ்வளவு தப்பு தினமும் செய்றோம்னு.அதை விட்டுட்டு இன்னொருத்தனையோ,வேற ஒருத்தி பற்றியோ ‘அனலைஸ்’ செய்யப்போய்டறோம்.அங்கேதான் தவறான முடிவை தேவையில்லாம எடுக்கிறோம்டி. உணர்ச்சிகளுக்கு மட்டும் இடங்கொடுக்கற நாம கொஞ்சம் புத்திக்கும் ‘ஸ்பேஸ்’ தரணுண்டி.

எனக்கு நீ சொல்லுடி, இன்னிக்கு நாம ஒரு நாளைக்கு காலைல இருந்து ராத்திரி வரையில் எத்தனை செயல்களை நமக்கு கோபம் வர்ற அளவுக்கு சந்திக்கிறோம் தெரியுமா? திடீர்னு ‘மிக்ஸி,காபி மேக்கர் ‘ ரிப்பேர் ஆகும். லேப்டாப் ஒத்துழைக்காது.வேலைக்கு வரும் பணிப்பெண் வரமாட்டா, அவசரத்தில் கிளம்பும்போது வண்டி ஒத்துழைக்காது, கண்ட நேர்த்தியும் கரெண்ட் கட் ஆகும், கவர்மெண்ட் ஆஃபீஸ்ல ஏதாவது ஒரு சர்டிபிகேட் அல்லது ஒரு கையெழுத்து வாங்க நாள்கணக்குல அலைச்சல், சாப்டணும்னு நினைச்சு போனா அன்னிக்குன்னு ஹோட்டல்ல கூட்டம், கோவிலுக்கு போனா அங்கேயும் அதே நிலை, இப்படி நம்ம மீறின நிறைய வெறுப்பேத்தற சங்கதிகளோடதான் வாழ்ந்துட்டு இருக்கோம்,இருக்கணும்னு நிலமை.இது மாதிரி இன்னும் எவ்வளவோ உண்டு.அதே நிலை ப்ரவீணுக்கும் உண்டு.ஆனால் இதெல்லாம் மறக்க ஒரே மருந்து ம்யூச்சுவல் டிஸ்கஷன் தாண்டி.ஆர்க்யூமெண்ட் இருக்கலாம்.ஆனா விதண்டாவாதமா இருக்கக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை நூறு சதவீதம் நமக்கு பிடிச்ச மாதிரி எதுவும் நடக்காது.எவனும் இருக்கமாட்டான். அவனுக்கும் அதேதான்.அங்கங்கே சில,சில குறைகள் இருக்கத்தான் செய்யும்.வெளி உலகத்தில் கண்டதையும் சகிச்சுக்கற நாம் வீட்டில் நம்மாளு கிட்ட ஏன் எல்லாத்துக்கும் சண்டை போடணும்? முக்கியமான

விஷயமா, கேக்கணும். சத்தம் போட்டுட்டு வேலையப்பாக்கணும்.அதை மறந்து, அடுத்ததை பாக்கணும்.இப்படி இருந்தாதான் டென்ஷன் ஏறாது.இதெல்லாம் நமக்கு சரியா வராதுன்னு நினைக்கறவ, நினைக்கறவன் கல்யாணம் செஞ்சுக்கவே கூடாது.

இந்தியாவில அறுபது சதவீத விவாகரத்துக்கள் எந்த வயசுக்காரங்க தெரியுமாடி, இருபத்தைந்துலேருந்து முப்பது வயசு கூட்டங்கள்.ஏண்டி, சகிப்புத்தன்மை அறவே இல்லை. என்னதான் நீ உன்னோட காரணத்தை சொன்னாலும், அவனோட கதையை சொன்னாலும், சமூகம் உங்களை பாக்கற விதமே தனிதாண்டி. ” பொறித்து தள்ளி விட்டாள் வசுமதி.

இவள் சொன்னதை கேட்டு”நீ சொல்ற பல விஷயங்கள் உண்மைதாண்டி, ஆனால் ” என்றவளை இடைமறித்து” என்ன ஆனா ஆவன்னா, நீ கிளம்பி என் வீட்டுக்கு வா, உனக்கு ஒரு ‘சர்ப்ரைஸ்’ வச்சிருக்கேன், நீயே பாரு” எனச்சொல்லி,” அம்மா, நான் இவளை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்” என்று கமலாவிடம் சொல்லிவிட்டு, ” வாடி, தாரிணி” என்றாள்.இருவரும் வசுமதி வீட்டுக்கு போனபோது, உள்ளே விஸ்வம் வேறு ஒரு அறையில் யாருடனோ உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தான். அவனுடன் பேசியபடி இருந்தவன் குரல் ப்ரவீண் குரல் போல இருந்தது.” யாரோடடி விஸ்வம் இப்டி ஆனந்தமா பேசிட்டிருக்கான்?” எனக்கேட்டாள் தாரிணி. ” இரு, அவனை டிஸ்டர்ப் பண்றேன்” என்று சொல்லி விஸ்வத்தை செல் போனில் அழைத்து, அவன் ” ஹை, டியர், எங்கே இருக்கே” என்றவுடன், ” தாரிணியோட இங்கே வந்திருக்கேன்.ஃப்ரண்ட் ரூம்ல இருக்கோம்” என்றாள்.” சரி, இப்ப வர்றேன்” என்றான் விஸ்வம்.

விஸ்வம் வந்தவுடன் சொன்னான். ” ஒருவழியா நல்லவிதமா பேசிட்டேன்.புரிய வச்சிட்டேன். நம்ப அஞ்சலை வேறு இடைல வந்தா, அவ என்ன சொன்னா தெரியுமா, அவரு அடாவடி, இவரு சம்பளம் போறல, இப்படி கை பட்டா,கால் பட்டா குத்தமுன்னு சொல்லிட்டு இருந்தா முடிவே இல்லே அய்யா இதுக்கெல்லாம்னு சொன்னவுடனேயே மனசுல உரைச்சிடுச்சு அவனுக்கு. ஹி ஈஸ் டோடல்லி ரீஃபைன்ட் பர்ஸன்” வசுமதி ” ஓகே, தாரிணிக்கு அறிமுகப்படுத்தலாம், கூப்பிட்டு வா விஸ்வம்” என்றாள்.” ஒன் மினிட்” என்று சொல்லி உள்ளே போனான் விஸ்வம்.

“வாப்பா, இவங்க பேர் தாரிணி” என்று அவனுக்கு பின்னால் வந்தவனிடம் சொல்லியபடியே முன்னே வந்தான் விஸ்வம்.பின்னால் வந்தவன் ப்ரவீண்.ஆச்சரியமும், அதிர்ச்சியும் கூடிய பார்வையோடு சட்டென எழுந்து

தாரிணி அவனை பார்த்து விட்டு வசுமதியை கேட்டாள்” ஏய், எப்படி ப்ரவீண் இங்கே? அவன் காரைக்காணோமே வெளில? நீங்க கூட்டிட்டு வந்தீங்களா?”

“நாங்க ப்ரவீணை உங்க வீட்ல போய் பார்த்து ரெண்டு நாள் அவசர லீவு போடச் சொல்லி ‘கம்பெல்’ பண்ணிட்டு எங்க கார்லயே கூட்டிட்டு வந்தோம்.வர்ற வழியிலேயே உனக்கு உபதேசம் செஞ்ச மாதிரி அவன் கிட்டேயும் பேச, அவனும் உணர்ந்துட்டான் எங்க தப்பு, எப்படி நடக்கக்கூடாதுன்னு!இப்ப நீதான் சரின்னு சொல்லணும்.சொல்லணும் என்ன சொல்லுவேடி.இல்லேன்னா யாரு விட்டா உன்னை?” வசுமதி விளக்கினாள்.

“ஸாரி, தாரிணி, நாம் புது ரூட்ல போவோம் இனிமேல்.இதையெல்லாத்தையும் தள்ளிட்டு ” என்றான் ப்ரவீண். தாரிணி அவனருகே சென்று” ஐ யாம் ஆல்ஸோ ஸாரி ப்ரவீண்” என்று அவன் கையைப் பற்றினாள்.

“அப்பாடா, இப்பதாண்டி நீ என்னோட தாரிணி.சரி, இப்போ நாம எல்லாரும் உங்க வீட்டுக்கு போய், உங்க அப்பா, அம்மா கிட்ட இந்த சந்தோஷமான செய்தியை சொல்லிவிட்டு, ரெண்டு நாள் ஜாலியா சுத்திட்டு அப்புறம் சென்னை போகலாம்.என்னப்பா சொல்றே?” என்று விஸ்வத்தை பார்த்து கேட்டாள் வசுமதி.”எனக்கொரு ஆட்சேபணையும் இல்லே” விஸ்வம் சொன்னான்.

உடனே தாரிணி” வசு, அதுக்கு முன்னாடி உங்க அம்மா, அம்மாவைப் பாத்துட்டு போகலாண்டி ” என்றாள். வசுமதி” அவங்க சிதம்பரம் வரையில் போயிருக்காங்க, இன்னும் ஒருமணி நேரத்தில வருவாங்க.அது தவிர உங்க எல்லாருக்கும் டின்னர் இங்கேதானே, என் அம்மா கண்டிப்பாக சொல்லிட்டா.அதனால் அப்போது அவங்களை பாக்கலாம் ” என்றாள்.

“நல்ல சாப்பாடு இன்னிக்கு நைட்டு, சரஸ்வதி அம்மாள் சமையல்னா, பொண்ணுக்கு தான் கொஞ்சம் ‘ட்ரெய்னிங்’ பத்தல ” என்றான் விஸ்வம் நமட்டு சிரிப்புடன். ” ஏய், நீ ஆரம்பிக்காதே, அவங்க நிறுத்திட்டாங்க, நம்ப தொடங்கணுமா?” என்றாள் வசுமதி.எல்லோரும் சிரித்தனர் . பின்னர் தாரிணியின் வீட்டிற்கு சென்று, தியாகராஜன், கமலாவிடம் எல்லாவற்றையும் விஸ்வமும், வசுமதியும் கூறினார்கள்.ப்ரவீணும் அவன் பங்கிற்கு நடந்தவைகளை சொல்லி, இனி இவைகள் நடக்காது என்றும் உறுதியளித்தான்.தாரிணியும் அதை ஆமோதிக்க, ஒரு மன நிறைவான, மகிழ்ச்சி கூடிய சூழல் நிலவியது அங்கே.தாரிணியின் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தாரிணிக்கு அன்றைய இரவு, அவளுடைய முதலிரவை விட ‘மகிழ் இரவாக’ இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *