மானசீகத் தேடல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 6,194 
 

(இதற்கு முந்தைய ‘பஞ்சாயத்துக் கூட்டம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தது சபரிநாதனுக்கு ரொம்ப வசதியாக இருந்தது. பேசாமல் படுத்தே கிடந்தார். அவருக்கு யாரைப் பார்க்கவும் பயமாக இருந்தது.

மனம் இயங்கிய வேகத்திற்கு தனிமையே ஏற்றதாக இருந்தது. ஆனால் யாராவது ஒருத்தர் அடிக்கடி வந்து உடல் நலம் விசாரித்ததில் அவரது தனிமை தொந்திரவுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது. அவர்தான் தீ வைத்தவர் என்கிற உண்மை தெரியாமல் அவரிடமே அதைப்பற்றி எல்லோரும் அங்கலாய்த்தது கேட்டு கேட்டு அவருக்கு ஆயாசம்தான் எஞ்சியது. இன்னொரு புதிய குற்றத்திற்காக அவரது மனம் அலை பாய்ந்தது. திடீரென அத்தனையையும் விட்டுவிட்டு மரகதத்திடம் போய்ச்சேர்ந்து விடவேண்டும் என்றும் தோன்றியது. அதுதான் முழுமையான நிவாரணமாக இருக்கும்.

அத்தனை அதிக ரத்தக்கொதிப்பிலும் சபரிநாதன் விருட்டென்று ஆவேசம் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். ராஜலக்ஷ்மியை இளம் விதவையாக்க அவரின் விபரீத மனம் நிஜமாகவே ஆசைப்பட்டது. அதுதான் அவளுக்கு ஏற்ற ஒரு பாடமாக இருக்கும். அவருக்கும்கூட அதுதான் சரியான பாடம்.

ராஜலக்ஷ்மியிடம்; சுப்பையாவிடம்; காந்திமதியிடம் என வரிசையாக அவர் தோற்றுப் போயிருந்தார். சுப்பையாவை ஊரைவிட்டு விரட்டப் பார்த்தால் அதிலும் தோல்விதான். அவனுக்கு அனுதாபப்பட்டு பல வீடுகளில் இருந்து சாப்பாடு போவதாகவும் செய்திகள் வந்தபோது சபரிநாதனின் தோல்வி மனப்பான்மையும் அதிகமாகியது. அதுவும் ஒரு அமாவாசை சாப்பாடு காந்திமதியின் வீட்டில் இருந்தே போயிற்றாம்! இதைக்கேட்ட அவரின் உச்சந்தலை அடுப்பாகச் சுட்டது.

ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டம் மீண்டும் கூடி, மோட்டார் பைக்கிற்கு தீ வைத்த குற்றத்தை போலீஸில் போய்ப் புகார் செய்வதைப் பற்றி யோசித்ததாகத் தெரிய வந்தபோது சபரிநாதன் அப்படியே ஆடிப் போய்விட்டார். எந்தத் தூக்க மாத்திரையும் வேலை செய்யவில்லை அவருக்கு. அவரின் மனம் எல்லாவற்றில் இருந்தும் தனிமைப்பட தயாரானது. இந்த மனப் பிளவையின் குழப்பத்தில் அவர் மூழ்கிக் கிடந்தபோது ராஜலக்ஷ்மியும் பெரிய குழப்பத்தில் இருந்தாள்.

தீவைத்த குற்றம் ஊர் ஜனங்களால் போலீஸுக்கு கொண்டு போகப்பட்டால் என்ன நடக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. கணவன் கைது செய்யப்பட்டால் அதைவிட கொடிய காட்சி வேறு எதுவும் இருக்காதென்று ராஜலக்ஷ்மிக்குத் தோன்றியது. சுப்பையாவும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் இருந்ததால் வேலைக்குச் செல்லாமல் ஊர் ஜனங்களுடன் எங்காவது மரத்தடியில் மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனதின் ஒரு மூலையில் சபரிநாதனைப் பற்றித்தான் சந்தேகம் இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை. பைக் எரிந்துபோன சங்கதி எப்படியோ மனைவி சுகுணாவரையும் போய்விட்டது. அவள் போனில் அழுதாள்.

ஊர் பூராவும் பதட்டம் நிலவிக் கொண்டிருந்ததால் ராஜலக்ஷ்மியை உடனே நாவல் மரத்தின் கீழ் சந்திக்கவும் தயக்கமாக இருந்தது. ஊர்ஜனம் போலீஸில் புகார் செய்து விடுவதற்குமுன் ஒருதடவை அவளைத் தனியாகப் பார்த்துப் பேசிவிடுவது அவசியமாகப் பட்டது. அதனால் ஜன்னல் வழியாக தணிந்த குரலில் அவளிடம் பேசி சந்திக்கும் நேரத்தைத் தீர்மானம் செய்துகொண்டான்.

எரிந்து சாம்பலாகிப் போன மோட்டார் பைக் அலங்கோலமாக நிற்பதைப் பார்த்துக்கொண்டே, குறித்த நேரத்திற்கு ஒருமணிநேரம் முன்பாகவே மெதுவாக நாவற்பழ மரத்தை நோக்கி நடந்தான். சபரிநாதன் படுக்கையில் சுருண்டு படுத்திருந்தார். மெலிந்துவிட்டார். ராஜலக்ஷ்மி அவருடைய முகத்தைப் பார்க்காமலேயே “கோயிலுக்குப் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வாசற் படிகளில் இறங்கினாள். சரியான நேரத்தில் கிளம்பினாள். அவள் கிளம்பிப் போனது சபரிநாதனுக்கும் சிறிது சுதந்திரமாக இருந்தது.

நாவற்பழ மரத்தடியை சென்றடைந்த சுப்பையா அங்கு சூழ்ந்திருந்த அழகையும் அருளையும் பார்த்ததில் பதட்டம் வடிந்து மனம் லேசானான். எங்கும் ஏகாந்தத்தின் மென்மையான நிசப்தம். ராஜலக்ஷ்மியை சந்திக்க இதற்குமேல் சிறந்த இடம் எதுவும் இருக்கமுடியாது.

ஒற்றையடிப் பாதையின் தூரத்து இடதுபுறத் திருப்பத்தில் ராஜலக்ஷ்மியின் உருவம் தெரிந்தது. சுப்பையாவைப் பார்த்துவிட்ட உணர்வுப் பெருக்கில் தூரத்திலேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டாள். கொஞ்சமும் எதிர்பாராமல் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் அழகிய பெண்ணை சுப்பையா பார்த்துக்கொண்டே இருந்தான். அவனையும் அறியாமல் அவனின் கைகள் அவளை நோக்கி நீண்டன. அடுத்த நிமிடம் அவள் அவனின் கைகளுக்குள்ளும்; அவன் அவளின் கைகளுக்குள்ளும் பத்திரமாக இருந்தார்கள். வயோதிகக் கணவனின் கெடுபிடிகளால் துவண்டு போயிருந்த ராஜலக்ஷ்மியின் மென்மையான மனதுக்கு, சுப்பையாவின் இளம் அணைப்பு மழைச்சாரலின் இதத்தைத் தந்தது.

“நான் நந்தவனத்துக்கு வந்து சேர்ந்துவிட்டேன்தானே?”

“இன்னுமா சந்தேகம் ராஜலக்ஷ்மிக்கு?” கிசு கிசுத்தார்கள்.

“சந்தேகமில்லை. தாங்கமுடியாத பரவசம்…”

“இந்த அழகான நிமிடங்களுக்கு முன்னால் நமக்கு இந்த மோட்டார் பைக் சம்பவம் தேவையா?” சிறு கலக்கத்துடன் கேட்டான்.

“இது நல்லதுக்காகக் கூட இருக்கலாமே?”

“ஆனா நடந்திருக்கும் விஷயம் நல்லது இல்லையே. என் அருமையான பைக் போச்சே! அதை என்னால தாங்க முடியல டார்லிங்.”

‘டார்லிங்’ என்று சொன்னதில் சொக்கிப்போன ராஜலக்ஷ்மி அவனுடைய மார்பில் சாய்ந்துகொண்டாள்.

“எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு. நமக்குள்ள ஏற்பட்டிருக்கும் உறவை யாரோ சென்ஸ் பண்ணித்தான், ஒரு எச்சரிக்கை மாதிரி என் பைக்கிற்கு தீ வச்சிட்டாங்களோன்னு தோணுது. அதனால கொஞ்சம் பயமாயிருக்கு…”

“அதுக்கு சான்ஸே இல்லை. அந்த மாதிரி சந்தேகம் வந்திருந்தா எனக்குத்தான் முதல்ல தீ வைக்கப்பட்டிருக்கும்.”

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

ராஜலக்ஷ்மி மிகவும் இரக்கப்படத்தக்க விதத்தில் சுப்பையாவைப் பார்த்தாள்.

“சொல்லவும் பயமாயிருக்கு. சொல்லாமலும் இருக்க முடியல..” அவள் கண்கள் கலங்கின.

“ராஜலக்ஷ்மி…”

“இப்பவே எனக்கு உங்ககூட ஓடிப் போயிடணும் போல இருக்கு… ஒவ்வொரு நிமிஷமும் இங்கே எனக்கு நரகமா இருக்கு.”

“ஸாரி ராஜலக்ஷ்மி. நான் இன்னும் அதைப்பத்தி பிளானே பண்ணலை. எப்போ எப்படி உங்களை அழைச்சிட்டு போறதுன்னு முதல்ல எனக்குள்ள நான் ஒரு வரைபடம் வரைஞ்சிக்கணும். நம்ம விஷயம் தீ வைக்கிற மாதிரியான அவசரமா அழிக்கிற விஷயமில்லை. அழகான உறவை கட்டுமானம் செய்கிற ஆக்கபூர்வமான விஷயம் இது. அதனால காலத்ல பெய்யற மழையா நாம் இருக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். அவசரப்பட்டு காலம் தவறிய மழையா ஆயிடக்கூடாது.”

“ரொம்ப அழகான உதாரணம் சொன்னீங்க. ஆனா வீட்ல அவரைப் பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் நான் அவசரத்தில் தவிக்கிறேன்.”

“ஏன், புதுசா ஏதாவது பிரச்சினையை கிளப்பியிருக்கிறாரா? சொல்லுங்க ராஜலக்ஷ்மி.”

“சொல்லாமலேயே தெரிஞ்சுக்க முடியலையா உங்களால?” ஏதோவொரு ரகசியத்தை அவளின் கண்கள் சொல்லின.

சுப்பையாவின் புருவங்கள் நெரிந்தன. அவள் முகத்தை கையில் ஏந்தியவாறு, “என்ன சொல்லறீங்க ராஜலக்ஷ்மி?” என்றான்.

“உங்களோட மோட்டார் பைக்கிற்கு தீ வைத்தது அவர்தான்…”

தன் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிவிட்ட கடுமையில் சுப்பையா கண்களை மூடிக்கொண்டான். அவனுடைய உடல் சற்றே குலுங்கியது. உணர்வுகள் வேகமாகப் பதட்டமடைந்தன. வார்த்தையே வெளிவரவில்லை.

“பயமாயிருக்கா உங்களுக்கு?” அவள் குரல் தேம்பியது.

“பயமாயில்லை… ரொம்பப் பதட்டமாயிடுத்து. மாமனாரா அவர்? விடக்கூடாது அவரை. விடவே கூடாது. எப்படி எப்போ தெரியும் இது உங்களுக்கு; ஏன் உடனே சொல்லலை இதை?”

ராஜலக்ஷ்மி நடந்ததை விலாவாரியாக விவரித்தாள்.

“ஆனா அவர் தீ வைத்த காட்சியை நீங்க பாக்கலை?”

“ஆமா பாக்கலை. ஆனா சந்தேகமே இல்லாம தீ வச்சது அவர்தான். திரும்பிவந்து அவர் படுத்துக்கிட்டபோது, அவர்மேல் பெட்ரோல் வாசனை அடிச்சுது.”

“இதைமட்டும் போலீஸ்ல நீங்க சொன்னா போதும் ராஜலக்ஷ்மி.”

“தயவுசெஞ்சி என்னை மன்னிச்சிடுங்க. உங்களைத் தவிர வேற யார்கிட்டேயும் இதைச் சொல்லப் பிடிக்கலை எனக்கு… அதுவும் போலீஸ்காரங்ககிட்ட என்னால சொல்லவே முடியாது.”

“போலீஸ்ல புகார் பண்ணிடலாம்னு பஞ்சாயத்ல முடிவு பண்ணிட்டா?”

“அதுவே வேண்டாம்னு எனக்குப் படுது. அது அவரை இன்னும் சிக்கலில் மாட்டிவிடும்.”

“நமக்கு சிக்கல் எதுவும் வராது. என் மாமனாரை அரெஸ்ட் பண்ணிட்டா, நிதானமா அழகா நாம் நம்மோட வரைபடத்தை ஒண்ணா உக்காந்தே வரையலாம்…”

“ப்ளீஸ் போலீஸ் வேண்டாம் சுப்பு. வரைபடத்தை ரகசியமா அவசரமா நாம வரைவோம்.”

“உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை.”

“சபரிநாதன் என்கிற மனுஷனைத் தண்டிக்க எனக்குப் பிடிக்கலை. அந்த வயோதிகப் புருஷனைத்தான் எனக்குத் தண்டிக்கணும்.”

“இப்பேற்பட்ட பெண் எனக்குக் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்தான்.”

“நான் மட்டும் அதிஷ்டசாலி இல்லையா, இந்தச் சுப்பு எனக்குக் கிடைக்க?”

“போலீஸ்ல போய் ஜஸ்ட் ஒரேயொரு புகார் மட்டும் குடுத்திடுவோம் ப்ளீஸ்…”

“அதுதான் ஊர் முடிவுன்னா நடக்கட்டும். ஆனா மறந்துகூட அவங்க மேல ஒரு சந்தேகம் இருக்கிறதா போலீஸ்ல மூச்சு விட்டுடாதீங்க. போலீஸ்ல குடுக்கிற புகாரே அவரை மானசீகமாக கைது பண்ணிடும்! அது போதும் நமக்கு. பைக் போனா போகட்டும். ஏதோ திருஷ்டி கழிஞ்சிடுத்துன்னு நெனைச்சிப்போம். என்கிட்ட பணம் இல்லை. இருந்தா புதுசா உங்களுக்கு நான் பைக் வாங்கித் தந்திடுவேன்.”

“ஓ திஸ் இஸ் மை ராஜலக்ஷ்மி. எனக்கு இது தோணலை. மூடிப்போன கதவையே பாத்திண்டு இருந்துட்டேன். நாளைக்கே புது பைக் வாங்கிடறேன்.. புது ஹீரோஹோண்டா.”

“நேரமாகுது. கிளம்பட்டுமா?”

“இன்னொரு சந்தோஷமான மேட்டர் இருக்கு ராஜலக்ஷ்மி. அதையும் பார்த்து ஷேர் பண்ணிக்காமப் போனா எப்படி?”

“என்ன சந்தோஷமான மேட்டர்?”

சட்டைக்குப் பின்புறம் மறைத்து வைத்திருந்த ப்ளோ-அப் செய்து லேமினேட் பண்ணப்பட்ட அவளின் பெரிய போட்டோவை எடுத்துக் காட்டினான். அன்று கோயிலில் எடுத்தது. அதைப் பார்த்ததும் அவளின் கண்கள் மயில் தோகையென விரிந்துவிட்டன. மகிழ்ச்சியில் அவளின் மனம் விம்மியது. போட்டோவில் தெரிந்த அவளுடைய செளந்தர்யம் அவளையே சொக்க வைத்தது.

“ராஜலக்ஷ்மியோட வாழ்க்கை இனிமேல் கலர்புல்லா மாறிடப் போகிறது என்கிறதுக்கு இந்தப் போட்டோதான் முதல் ஆரம்பம்னு சொல்லலாமா?”

“ஓ தாராளமா சொல்லலாம். கைதியா இருக்கும்போதே இவ்வளவு அழகா இருக்கேன்னா… ஆச்சர்யம்தான்.”

“நீங்க பிசிக்கலா நல்ல வடிவமைப்பு; கழுவின பப்பாளி நிறத்தில் சிவப்பழகு. அதுதவிர இது வெறும் அழகான மூக்கால; கண்ணால வந்த அழகு இல்லை ராஜலக்ஷ்மி. உங்களோட அழகான இன்னொசென்ஸ்; அடக்கமா இருக்கிற இன்டெலிஜென்ஸ் – இவைகள் அனைத்தும் அற்புதமா கலந்த மென்மையான கலவைதான் உங்களோட மொத்த அழகு. நான் அட்மைர் பண்றது இந்த அழகான மொத்தக் கலவையைத்தான்… என்னோட மானசீகத் தேடல் முடிஞ்சு போயிடுத்து ராஜலக்ஷ்மி…”

“அப்படியா?”

“ஆமாம். நீங்க இனிமே என்னோட மாமனார்கிட்ட ரொம்பக் கேர்புல்லா இருங்க. யோசிச்சுப் பார்த்தா பைக்குக்கு அவர் தீ வச்சது குற்றம் கிடையாது. அது ஒருவிதமான மென்ட்டல் டிஸ்ஆர்டர். அவரோட மனம் கட்டுடைந்து போன நிலைமைக்கு உள்ளாகியிருக்கு. கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி என்கிற லெவலுக்கு வந்திட்டார்.”

“நீங்க சொல்லும்போதுதான் புரியது சுப்பு. அவர் முன்னே மாதிரி இல்லை. எதுக்கும் பயப்படாதவர், எதுக்கோ பயந்த மாதிரியே எப்போதும் இருக்கார். பார்வையெல்லாம் கூட ரொம்பக் குழம்பித் தெரியுது.”

“என்னோட புது பைக் வரும்போது பாருங்க, இன்னும் மோசமான காம்ப்ளக்ஸ்க்கு உந்தப்படுவார். அதுக்கும் தீ வைக்கணும்னு அவரோட மனசுல வெறி வரும். தீ வைக்க ஒருபக்கம் பயமாவும் இருக்கும். பயம் ஜெயிச்சுட்டா தீ வைக்கமாட்டார். வெறி ஜெயிச்சுட்டா தீ வச்சிடுவார்.”

“எனக்கு பயமாயிருக்கு சுப்பு.”

“பயப்படாதே ராஜாத்தி. ஒரு மிகப்புது சிருஷ்டிக்கு பழைய ஒண்ணு அழிஞ்சே ஆகணும். சிருஷ்டியின் இந்த விதியை மாத்தவே முடியாது. இந்த விதியை நம்பி தைரியமா இருந்தா போதும்.”

“விதிவிலக்கா எதுவும் நடந்திடாதே?”

“நடக்காது.”

“என் செல்லம் சொல்றதுக்காக விதியை நம்புறேன்.”

“செல்லம்னு என்னைச் சொன்ன ஒரே காரணத்துக்காகவே நான் உன் விதியையே மாற்றி எழுதுவேன்.”

“வார்த்தையே போதும்டா செல்லம். என் விதியும் வாழ்க்கையும் உன் கையிலதான்…”

சுப்பையா உறுதியுடன் கைகளை விரித்துக்காட்ட ராஜலக்ஷ்மி அவனுடைய கைகளுக்குள் அவளை இழைத்துக் கொண்டான்….

Print Friendly, PDF & Email

1 thought on “மானசீகத் தேடல்

  1. subaiya rajalakshmi kuda pona subaiya ponnu enna pavam pannathu,athuku appa thevai iliya,ithuve subaiya pondati senja avan summa irupana,kathaiya irunthalum kalla kathala valakathinga.unga pondati ipadi senja yethupingala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *