வள்ளிக்குக் கணவன் முயற்சி பிடிக்கவில்லை. நகைகளை இழக்க மனமில்லை.
”என்னங்க ! கீழ் வீடே வெளிப் பூச்சுப் பூசாமல் அரையும் குறையுமாய் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப போய் இருக்கிற நகைகளை வித்து வங்கியில கடன் வாங்கி மாடி கட்றதுக்கு முயற்சி செய்யிறது நியாயமா ?” கேட்டாள்.
”பேசாம இரு தடுக்காதே !” குணா மறுத்தான்.
”தடுக்கலை. வீண் சிரமம். மேலும் மேலும் கடன். ஆறுமாசத்துக்குள்ளே மாடி கட்றாங்களேன்னு நம் சாதி சனத்துக்கெல்லாம் நம் மேல் பொறாமை, கண்ணு. எல்லாத்தையும் நான் யோசனை செய்துதான் சொல்றேன்.”
”நானும் எல்லாத்தையும் யோசிச்சுதான் செய்யிறேன்.”
”என்ன யோசனை ?. எதுவாய் இருந்தாலும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட ஒரு வார்த்தைக் கலந்து செய்யுங்க. பின்னால பிரச்சனை வராம இருக்க அது நல்லது.”
”சரி சொல்றேன். இன்னைய சூழ்நிலையில புறநகர்ல ஒத்தையாய் வீடிருந்து குடும்பம் தனிச்சிருக்கிறது கஷ்டம். நாம வேலைக்குப் போய் வீட்டுக்குக் காவலாய் என் அம்மா இருக்கிறதும் பாதுகாப்பில்லே. கொள்ளைக்காரன்கள் வயசானவங்களைத்தான் முதல்ல குறி வைச்சுத் தாக்குறான்கள். மேலும் ஒரு அவசர அவசியத்துக்கு எல்லாரும் கிளம்பி வீட்டைப் பூட்டிப் போட்டுப் போறது வீட்டைக் கொள்ளைக்காரன்கள் கையில குடுத்துட்டுப் போறதுக்குச் சமம். நாம மாடி கட்டி ஒரு குடும்பத்தைக் குடி வைத்தால் வீடு, நமக்கு மொத்தத்துக்கும் பாதுகாப்பு. ஒருத்தருக்கொருத்தர் துணை.” முடித்தான்.
கணவன் யோசனைப் பிடித்திருக்க, ”சரிங்க” முழுமனதாய்ச் சம்மதித்தாள் வள்ளி.