நன்றாய் இருக்கும்போது உறவுகள் தெரிவதில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 5,048 
 

அப்பா இந்த படத்தை பாரேன்? அகிலா கொஞ்சம் பேசாம போறியா, எனக்கு இங்க தலைக்கு மேல வேலையிருக்கு. மகள் முகம் சுருங்கி போப்பா நீ எப்பவுமே இப்படித்தான் ! சொல்லிக்கொண்டே நின்று கொண்டிருந்தாள்

ஏங்க கொஞ்சம் அந்த குழந்தைகிட்ட பேசுனாத்தான் என்ன? பாருங்க அவ முகம் எப்படி மாறிப்போச்சுன்னு,சொல்லிக்கொண்டே வந்த என் மனைவியிடம், நீ பேசாம இரு எனக்கு இப்ப இந்த கணக்கை முடிச்சாகணும், நாளைக்கு காலையில மேனேஜர் டேபிளில இருக்கணும்னு சொல்லியிருக்காரு.அதனால வீட்டுக்கு எடுத்துட்டு வந்து செய்யலாம்னு வந்தா அம்மா, புள்ளை ரெண்டு பேரும் உயிரை எடுக்கறீங்க, வள்ளென்று விழுந்தேன்.

எப்படியோ போங்க நீங்களும் உங்க அக்கவுண்ட்ஸும் விருட்டென்று மகளை வாரி அணைத்துக்கொண்டு வெளியேறினாள்.
இவர்கள் இருவரும் எப்பொழுது என்னை புரிந்து கொள்ள்ப்போகிறார்கள், என்னுடைய வேலைக்கஷ்டம் தெரியாமல் இருக்கிறார்கள். கம்பெனி வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லி என்னைப்போன்றவர்களை வெளியே அனுப்பலாம் என்று துடித்து கொண்டிருக்கிறது.அவர்கள் கொடுக்கும் சம்பளத்தால் கொஞ்சம் கெளரவமாக வாழ முடிகிறது.அதுவும் இல்லாமல் போனால் அப்புறம் தெரியும் நம்முடைய பிழைப்பு, மனதுக்குள் புலம்பிக் கொண்டேன்.

என்னுடைய அவசரம் போலவே நான்கைந்து வருடங்கள் ஓடியிருந்தன. இந்த காலங்களில் என் மனைவி என்னிடம் எந்த குடும்ப விசயங்களை சொல்ல வந்தாலும் காது கொடுத்து கேட்கும் நிலையில் நான் இல்லை. இங்க பாரு மாசமானா எவ்வளவு வேணும்?வாங்கிக்க,மத்தபடி சொந்தகாரங்க விசயம், நம்ம அகிலா விசயம் அகிலாவோட படிப்பு அவள் என்ன செய்யறா? எல்லாத்தையும் நீ பாத்துக்க, என்னைய தொந்தரவு பண்ணாத? புரிஞ்சுதா

என்னை வெறித்து பார்த்த என் மனைவி எதுக்காக இப்படி வேலை வேலைன்னு அலையறீங்க,உங்களுக்கு குடும்பம்,சொந்தம்னு இருக்கு, அதையும் பாக்கணும்னு நினையுங்க. சொன்னவளின் தாடையை பிடித்து ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க, இந்த முறை என்னோட வேலைய பாராட்டி எங்க எம்.டி மீட்டிங்குல பேசியிருக்காரு. அதனால இந்த வருசம் கண்டிப்பா புரோமோசன் வரும்னு எதிர்பார்க்கிறேன்.சொன்னவனை வெறித்து பார்த்து நின்றாள் என் மனைவி.

கல்யாணப்பத்திரிக்கை கொண்டு வந்து நீட்டினாள்,பத்திரிக்கையை வாங்கி பார்த்தவன்,மணமகன் பேரை பார்த்தவன் அடே பிரபு பேர் போட்டிருக்கு, உன் தம்பிதானே, அவனுக்கு எப்ப நிச்சயமாச்சு? என்னைய கூப்பிடவேயில்லை, சொன்னவனை முறைத்துப்பார்த்து கொஞ்சாமாவது மனசாட்சியோட பேசுங்க போன மாசம் எங்க அப்பா, அம்மா வந்து காலையில என்னையும், உங்களையும் நிக்க வச்சு நிச்சயத்துக்கு வந்துடுன்ன்னு சொல்லிட்டு போனாங்களே, நீங்க அப்ப ரொம்ப பெரிய மனுசனாட்டம் அதுக்கென்ன மாமா அப்படீன்னுட்டு, நிச்சயத்தன்னிக்கு எங்க எம்.டி அவசரமா சென்னை போக சொல்றாருன்னு போயிட்டீங்க, அப்புறம் நானும் அகிலாவும் மட்டும் போயிட்டு அவங்க உங்களை கேட்டதுக்கு

ஏதோ பதில் சொல்லி சமாளிச்சுட்டு வந்தோம். அப்படியா! யோசித்தவன், சாரி டியர் வர வர எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு. கண்டிப்பா கல்யாணத்துக்கு போறோம் என்றேன்.

கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது அருகில் வந்த என் மனைவி ஏங்க நாளைக்கு கிளம்பறோம். நீங்க இரண்டு நாள் லீவ் சொல்லிட்டு வந்துடுங்க. காலையில கிளம்பிடலாம். சரி என்று தலையை ஆட்டிவிட்டு கிளம்பினேன்.

இரவு வேலை முடிந்து வந்தவுடன் முகத்தை பார்த்த என் மனைவியிடம் சாரிம்மா, நாளைக்கு மதியத்துக்குள்ள இந்த வேலைய முடிச்சுட்டு லீவ் போட்டுக்க அப்படீன்னு சொல்லிட்டாங்க, ப்ளீஸ்.காலையில நீயும் அகிலாவும் கிளம்புங்க, நான் வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன். சொன்னவனை முறைத்துப்பார்த்த என் மனைவி நாளைக்கு காலையில நாங்க இரண்டு பேரும் கிளம்பறோம். நீங்க மதியத்துக்கு மேல கிளம்பி அங்க வந்துடுங்க.

சொன்னது போல் என்னால் செல்ல முடியவில்லை, எப்படியோ முகூர்த்த நேரத்தில் அங்கு போய் முறைத்துப்பார்த்த என் மனைவியின் பார்வையை சமாளித்து மாமனாரிடம் மாப்பிள்ளையிடமும் குலைந்து பேசி சமாளித்தேன்.

குளித்துவிட்டு வெளியே வந்தவன் முன்னறையில் சத்தம் கேட்டு எட்டிப்பார்க்க ஊரிலிருந்து அப்பா, அம்மா வந்திருப்பது தெரிந்தது.உடைகளை மாற்றிவிட்டு வேகமாக வெளியே வந்தவன் வாங்கப்பா, வாங்கம்மா வரவேற்ற என்னை பார்த்த
அம்மா ஏண்டா வீட்டுக்கு வந்தா மட்டும் வான்னு சொல்லு, ஆனா, நீ மட்டும் எங்களை பாக்கணும்னு வந்துடாத? அலுத்துக்கொண்ட அம்மாவுக்கு ஒரு அசட்டு சிரிப்பொன்றை மட்டும் உதிர்த்துவிட்டு, அம்மா நீயும் அப்பாவும் குளிச்சு ரெடியாகி டிபன் சாப்பிட்டுட்டு வீட்டுல இருங்க, நான் ஆபிஸ் போயிட்டு சாயங்காலம் வந்திடுறேன், சொல்லிவிட்டு, அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் கமலா டிபன் எடுத்து வை என்று குரல் கொடுத்துக்கொண்டே கிளம்புவதற்கு ஆயத்தமானேன்.

கிளம்பி சென்றவனையே பார்த்துக்கொண்டிருந்த அம்மாவின் பார்வை என் மனைவி கமலாவின் கனைப்பில் சற்று திரும்பி என்னம்மா இவன்? சுடுதண்ணிய காலுல ஊத்திட்ட மாதிரி ஓடறான், என்று கேட்க ஒரு பெருமூச்சுடன் அதை ஏன் கேக்கறீங்க என்று என்
ஓட்டத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

இரவு வீடு வந்தவன், வீடு பூட்டியிருப்பதை பார்த்து அதிசயப்பட்டு கமலாவுக்கு போன் செய்தேன், சிறிது நேரம் ரிங்க்.. போன பின் போனை எடுத்து ஹ்லோ என்றது என் மனைவியின் குரல். என்ன வீட்டுல ஒருத்தரும் இல்ல, அம்மா அப்பா, அகிலா நீ எல்லாரும் எங்கே போனீங்க,வீடு வேற பூட்டியிருக்கு? எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா?

ஐயோ சாரிங்க.. அவசரமா உங்க அம்மா அப்பா கூட ஊருக்கு வந்துட்டோம், நீங்க என்ன பண்றீங்க எதிர் வீட்டு அம்மா கிட்ட சாவி இருக்கு, பாலும் வாங்கி வச்சிருப்பாங்க, அத வாங்கி காய்ச்சி குடிச்சுடுங்க, இராத்திரி டிபன் ஏதாவது கடையில வாங்கி சாப்பிட்டிடுங்க..
சொல்லிக்கொண்டே போனவளை கோபத்துடன் அப்ப நீ வரமாட்டியா? நானும், அகிலாவும் உங்க தம்பிக்கு பொண்ணு பாக்கற விசயமா போயிட்டிருக்கோம், ப்ளீஸ்…புரிஞ்சுக்குங்க,என்றவளுக்கு என்ன பதில் சொலவது என்று தெரியாமல் விழித்து, எதிர் வீட்டை நோக்கி நடந்தேன்.

காலையில் விழித்தவுடன் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது, வாய் கசந்தது, யாராவது ஒரு வாய் சுடுதண்ணீர் வைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். மெல்ல கஷ்டப்பட்டு எழுந்து பச்சை தண்ணீரிலே முகம் கை கால் கழுவி வெளியே சிறிது தூரம் நடந்து ஒரு பேக்கா¢யில் சூடாக ஒரு டீ குடித்தவுடன் உடல் கொஞ்சம் வேர்த்து மனம் தெளிவாக ஆரம்பித்த்து. இந்த தெளிவுடனே வீட்டுக்கு வந்து கேஸ் ஸ்டவ்வில் த்ண்ணீர் காய்ச்சி எடுத்து குளித்து ஆபிஸ் கிளம்பினேன்.

வழியில் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். இரண்டு நாட்கள் ஓடியிருந்தன, மனது கோபப்பட்டாலும் வீட்டாரை பார்க்க முடியாமல் சோர்ந்து போனது. வீடு வெறிச்சென இருப்பதாக பட்டது. டாக்டர் கொடுத்த மாத்திரை பரவாயில்லை, என்றாலும் கடை சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை.மனசு இரண்டு நாட்களில் வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கியது. பதினைந்து கிலோ மீட்டர் தள்ளி உள்ள மாமனார் வீட்டிலாவது போய் இருக்கலாம் என்று நினைத்தவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.மனைவியும் இல்லாமல், அவர்கள் மகனின் கல்யாணத்துக்குக்கூட வெளியாள் போல முகூர்த்த நேரத்துக்கு போனது,மற்றபடி உள்ளூரிலேயே மாமா வீடு, சித்தப்பாவின் வீடு இவைகள் இருக்கின்றன.ஆனால் போனதே இல்லை, இப்பொழுது எப்படி போவது, வீட்டு சாப்பாட்டுக்காக வந்திருக்கிறான் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது.

மூன்றாம் நாள் தாங்க முடியாமல் மனைவிக்கு போன் செய்தேன். சீக்கிரம் வா, இங்க என்னால இருக்க முடியல, என்றவனிடம் ஏங்க நீங்களும் உங்க தம்பி விசயமா எதுவும் செய்ய மாட்டீங்க, அதனால நாந்தான கல்யாண வேலையெல்லாம் பாக்க வேண்டியிருக்கு என்றவளிடம் நான் அதயெல்லாம் பாத்துக்கறேன், நீங்க இரண்டு பேரும் வீட்டுல வந்து இருங்க அது போதும்.

அம்மாவிடம் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள், அம்மா உடனே வர சொல்றாரு, கல்யாண விசய்த்தை எல்லாம் அவர் பாத்துக்கறாராமா, என்று சொன்னவளுக்கு என் அம்மா ஒரு சிரிப்பு சிரித்து விட்டு ஆமா கிழிச்சான், மச்சினன கல்யாணத்துக்கே முகூர்த்ததுல மட்டும் எட்டி பார்த்து ஓடிப்போனவன், இப்ப தம்பி கல்யாணத்தை நடத்த போறானாக்கும்.

அதயெல்லாம் அவங்கப்பா பாத்துக்குவாரு, இவனை முதல்ல குடும்பத்த பாக்க வைக்கணும்னுதான எல்லாரும் இங்க வந்திருக்கோம். இனிமேலாவது உன்னையும் குழந்தையையும் கொஞ்சம் நினைச்சு பார்ப்பான்.

இடையில் மனைவியிடம் இருந்து போன் வீட்டுக்கு வந்துவிட்டோம் என்று.உடனே மானேஜரிடம் சென்று எனக்கு லீவ் வேணும் சார், என்று கேட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *