(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மழையின் வருகையை அறிவிக்கவே இல்லை இந்த வெயில். பல ஊர்களைச் சுற்றியவன்; பல வெயில்களைப் பார்த்தவன். ஆனால் தாகம் புரட்டியது. ஒருநாளும் இல்லாத விசேசமாய் அவன் செவ்விளநீர் சீவச்சொல்லி அருந்தினான். தொண்டையின் கீழே உடம்பு முழுவதும் நனைந்து குளிர்ச்சி கொண்டது போல் இருந்தது. பத்து ரூபாய் விலை அதிகமெனத் தோன்றவில்லை அவனுக்கு. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வெயிலில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தான் நஜீம்.
அவனுக்குரிய உரிமை இன்னும் நீடிப்பதான நினைப்பிற்குள் இருந்தபடியே தஸ்லீமாவின் வீட்டிற்குள் தடதடவென நுழைந்து விட்டான். அஸ்ஸலாமு அலைக்கும் என்றான். அந்தக் குரல் அவளை உடனே திண்ணைக்கு விரைந்தோடி வரச் செய்தது. ஆனால் அவன் அதற்குள் வீட்டின் வாசல்படியைத் தாண்டி வந்திருந்தான். தஸ்லீமாவுக்கு அவனைப் பார்த்ததும் உண்டான சந்தோஷத்தில் எல்லாக் கவலைகளையும் மறந்து விட்டாள். சோர்வு பறந்தோடியது. அவள் அவனின் வருகையைச் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் வரவேண்டும், வந்து எதிரே உட்கார்ந்து ஆற அமரப் பேசிச் செல்லவேண்டும் என்று நேற்றும் இன்றுமாக மனசுக்குள் எழுந்திருந்த பேராவலால், அவள் நடமாடும்போதே கனவினுள் மூழ்கிப் போயிருந்தாள். தணிக்க ஒரு பானமில்லாத தாகமாய் அது தன்னை வருத்தி அலைக்கழிக்குமோ என்று தவித்துப் போயிருந்தாள். காற்றோடு ஊடாடி உட்கலந்து அவளின் ஆசையை அவனிடம் சுமந்து சென்று சேர்த்தது எதுவென்று அவளுக்குப் புரிந்து விட்டது. திகைத்துப் போய் நின்றவள், “உட்காருங்க”என்றாள். அவன் எதில் போய் உட்காருவான் என்று அவள் யோசிக்கவில்லை. நான்கு கால்களும் சரிந்து, பலகையும் கிறீச்சிடுகிற ஒரு சிறிய சாய்மானமற்ற நாற்காலி (?) யினை அவன் இழுத்தான். அது உண்மையிலேயே வாயைக் கொண்டிருந்த ஒரு பிராணியைப் போன்று ங்ங்’என்று சவ்வாய் இழுவியபடி இழுபட்டுப் போனது. அவன் அதில் உட்கார்ந்தான். “வேண்டாம். இதுல வந்து உட்காருங்க” என்று பாயை விரித்தாள். அந்தப் பாய்தான் இருந்ததிலேயே நல்ல பாயாக இருந்தது. அவளும் அவள் கணவனும் பள்ளி கொள்ளும் பாயாக இருக்கலாம் என எண்ணி, “வேண்டாம். இதுலயே இருக்க முடியுதுதான!’’என்றான். விரித்துப் போட்ட பாய் சும்மா கிடந்தது.
வெளியே இருள் ஆரம்பித்தது. மழை மேகங்கள் திரண்டன. அவன் தஸ்லீமாவின் முகத்தை நோக்கினான். அவளும் அப்படியே நோக்கினாள். ஒருவரையொருவர் அத்து விடுவதற்கு முன்பு கூட அவர்கள் இப்படிப் பார்த்துக் கொண்டதில்லை. வேகமாய்ப் புரளும் வெள்ளம் ஓரிடத்தில் நின்று திரும்பத் திரும்பச் சுழல்வதைப் போல் இருவரின் மனசும் இடம் விட்டு இடம் நகராது சுழன்றன.
நஜீம் அப்படியேதான் இருக்கிறான். அவன் இன்றுதான் லாரியை விட்டு இறங்கியிருக்க வேண்டும். நீண்ட நேரத்தை யாசிக்கிற ஒரு தூக்கக் கலக்கம் அவன் முகத்தில் உறைந்து போயிருந்தது. அந்தக் கண்கள் தூக்கச் சடவை மீறி விழித்திருந்ததை தஸ்லீமா பார்த்தாள். முன்பு போலப் பாயையும் தலையணையையும் போட்டு, “தூங்குங்க ஒழுங்கா ஒரு கண்ணுக்கு”என்று அதட்டும் உரிமை இல்லாது போயிற்று. ஆனால் சவரம் செய்யாத முகத்தின் மீது ஒரு சாந்தம் தவழ்ந்தது.
தஸ்லீமா நன்றாகத்தான் இருக்கிறாளாம்; சொல்கிறார்கள். முகம் வாடி உலர்ந்து போயிருந்தது. தொட்டிலில் கிடந்த குழந்தை அழுதது. அவள் எடுத்து இடுப்பில் சுமந்தாள். அவன் கைநீட்டினான். சில அடிகள் நகர்ந்து வந்து குழந்தையை இறக்கி விட்டாள். இடுப்பை விட்டுக் கீழே இறங்கியதிலும், எதிரே புதிய முகம் கண்டதிலும் உதட்டைக் கோணிக் கொண்டு குழந்தை படபடத்தது. அவன் தூக்கினான். கைநிறைய சொர்க்கத்து மலர்களை அள்ளிக்கொண்டது போல ஓர் இனிமையான பரவசத்துக்குள் திளைத்தான். குழந்தையை இரு கைகளுக்குள்ளும் புதைத்து முகர்ந்தான். அன்னிய ஸ்பரிசத்தின் தீவிரம் குழந்தையை அழச் செய்தது. குழந்தைகளின் அனுபவம் இல்லாதவன். அதனைச் சாந்தப்படுத்த நாக்கை வளைத்துப் பார். கர்ர் என்ற ஒலி எழுப்பிப் பார்த்தான். அந்தச் சப்தம் கேட்கையில் திருதிருவென்று விழித்த குழந்தை சப்தம் நின்றதும் மீண்டும் அழலானது. அவள், “அழாதேம்மா. அது யாரு? அது யாரும்மா சொல்லு பார்ப்போம்!” என்றபடி வேடிக்கை காட்ட முனைந்தாள். அவன் செவிகளைத் தீட்டினான். தன்னை என்ன உறவுமுறையால் குழந்தைக்கு அறிமுகம் செய்யப்போகிறாள் என்று இதயம் பட படக்கக் காத்திருந்தான். அவளோ முடிச்சை அவிழ்க்காமல் திரும்பவும் அதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தாள். அது அழுகையை நிறுத்தி ம்மாவைத் தீவிரமாகப் பார்க்கவும் அந்தக் கேள்வியும் காற்றோடு காற்றானது. அவனுக்குத் தன் பிறப்பே சுவாரஸ்யமற்றுப் போனது தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகிவிட்டது போல் ஆனது. அவன் குழந்தைக்கென்று திட்டமிட்டே எதையும் வாங்கி வரவில்லை. எதிரே வருகிறவர்களுக்குப் பலவிதமான எண்ணங்களை எழுப்பும்; அல்லது அதைப்பற்றி விசாரிக்கிறவர்களுக்குத் தக்கபடிப் பதிலளிக்கத் திணறும். குழந்தையின் கையில் பணத்தையே சுருட்டிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அவன் யார் என்று குழந்தையின் முன்னால் எழும்பிய கேள்விக்குக் கடைசி வரை பதில் இல்லாமல் போன சோர்வில், ஒரு விரக்தியின் விளிம்பில் அதை மறந்து போய்விட்டான்.
“என்ன பேரு?”
“மும்தாஜ்.”
அவன் தன் பேச்சை நிறுத்திக் கொண்டான். தஸ்லீமாதான் கேட்டாள். ம்மா..ம்.. முன்னால் மாமியாதான இருந்தாங்க… இப்ப அவங்க எப்படி இருக்காங்க?”
“எதோ இருக்கா !””ம்
“அவங்க உடம்புக்குச் சரியில்லேன்னு கேள்விப்பட்டேன்.”
“வயசாயிடுச்சிதான… அதோட மனசுல பல கவலைங்க..”
அந்தக் கவலைகள் என்னென்னவென்று தஸ்லீமாவுக்குத் தெரியும்.
எல்லோருக்கும் உள்ளபடி அவனுக்கு இல்லாமல் போனதால்தான் அவள் தன் மூட்டை முடிச்சுகளைச் சுருட்டிக் கொண்டு வந்தாள். தஸ்லீமா அந்தத் திருமண பந்தத்தை ரத்து செய்வதை நஜீம் தாங்கிக் கொள்ள முடியாதவனாய் இருந்தான். ஆனாலும் அவள் பிரிந்துபோகத் தயாரான நிலையிலும் தன் கோபத்தை தஸ்லீமாவின் மீது காட்ட முடியவில்லை. “எனக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு… என் மனசெல்லாம் நிரம்பியிருக்கே நீ!” என்று சொன்னான்.
“அதுக்கு? என் வயிறு நிரம்ப வழியில்லேயே!”
அவள் சொல்லியிருக்கக் கூடாது. நாக்கைப் பலமுறை கடித்துக் கொண்டாள். இன்று வரையிலும் அவள் சொன்ன வார்த்தையின் ஓசை அவள் செவிகளில் அலைவுறும்போதும் நாக்குக் கடிப்பை அவளால் நிறுத்திவிட முடியவில்லை. அவனுடன் வாழ நேர்ந்த அந்தச் சில வருசங்களிலும் இதுதான் தான் பயன்படுத்திய கடுமையான வார்த்தை என அவளுக்குத் தெரிந்தது. அப்போது அவன் நிலைகுலைந்து பரிதவித்து நின்ற காட்சியை எத்தனை யுகமானாலும் அழிக்க முடியாது. அதற்குமேல் எவ்விதக் காலதாமதமும் இன்றி, அவளுக்கு சிறிதளவு சிரமமும் இன்றி ’தலாக்’வழங்கினான். அவள் புறப்படும்போது சொன்னான். “உன்னை மாதிரி ஒருத்தியோட சேர்ந்து வாழ முடியாத அளவுக்குப் போயிடுச்சேன்னு துக்கமா இருக்கு. அவள் திரும்பிப் பார்க்க விரும்பியும், திரும்பிப் பாராமலே நடந்தாள். அவள் திரும்பிப் பார்ப்பாள் என அவன் எதிர்பார்த்தான்.
தன்னை விட்டுப் போகிறவள் ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்பாள் என்று வாசலிலேயே சிறுபிள்ளை போல் கலங்கி நின்ற நஜீம், இன்றுதான் மீண்டும் அவளைப் பார்க்கிறான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை பிறந்தும் கூட சில மாதங்கள் கடந்த பிறகு இப்போது ஏன் நஜீம் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து அவள் சொன்னாள், “அவங்க ஊரு உலகத்துல இதுவரைக்கும் எந்தக் கெட்ட பேரும் வாங்கல்ல உங்களப் போல. என்னவோ இப்பதான் இப்படி ஆயிப்போச்சு. நல்ல மனுசன்னு நெனச்சுதான் வீட்லயும் கட்டி வச்சாங்க. நானும் அதுக்குத்தான் ஒத்துக்கிட்டேன்”என்றாள். கண்கள் கலங்கி விட்டன. குரல் பிசிறியது.
தஸ்லீமாவின் கணவன் முக்தார், கடையில் பணம் திருடிவிட்டான். பொய் சொன்னான். போலீஸ் கட்டி வைத்து உரித்து விட்டது. “புள்ள பொறந்த நேரம் அப்பன் ஜெயிலுக்கு அனுப்பிட்டு”என்று ஊரில் ஜாதகம் பரப்பினார்கள். கடையில் இருந்து இரவில் வீடு திரும்பும்போது சுத்தபத்தமா வந்தவன், அப்புறம் சாராய மணத்தைத் தெருவில் படரவிட்டு வந்ததற்கான காரணமும் இதுதான் என்று கண்டுபிடித்து விட்டது. செய்தி காதில் விழுந்ததும் இது அபாண்டமான பொய்யான செய்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நஜீம் நினைத்திருந்தான்.
“நான் அறிஞ்ச வரைக்கும் முக்தாரு நல்ல மனுசன்தான்.
உன்னைத் தைரியமாக இருக்கச் சொல்லணும்னுதான் நான் வந்தேன். கூறுகெட்டத்தனமா நீ அவன் தப்பா நெனச்சிக்கிட்டு இனிமேயுள்ள காலத்த சண்டையும் சச்சரவுமா ஆக்கிறாதேன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்”என்றான் நஜீம்.
வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது. அவன் எழுந்தான். “நான் போறேன்”என்றான். “இருங்க. மழை பெஞ்சு முடியட்டும்”என்று கேட்டுக்கொண்டாள். “மழையில் நனைஞ்சுக்கிட்டே போவணும்னு ஆசையாயிருக்கு. நான் போறேன்”என்று டாடா காட்டினான். “போயிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போங்க மச்சான்”என்றாள். திடீரென்று திரும்பினான். இடியின் ஓசை இனிமையாக இருந்தது. திருமண வாழ்வில், ஒருநாளின் சுகபோகத்தில் கண்கள் சொருகிய நிலையில் சொல்லியிருந்தாள், மச்சான் என்று. அவன் தஸ்லீமாவைப் பார்க்க, பரிதவிப்பில் ஆழ்ந்த னர் இருவரும்.
அவன் கை நீட்டிக் குழந்தையை வாங்கினான். சட்டைப்பையில் இருந்த இரண்டு ஐநூறு ரூபாய்த் தாளையும் கையில் திணித்தான். அது சிக்கென்று பற்றிக்கொண்டது. குழந்தையை ஒப்படைத்தான்.
’அடிக்கடி வாங்க பெரியப்பான்னு சொல்லும்மா’ என்று சொன்னாள். பேசப் பழகாத குழந்தை சிரித்தது.
அவன் இறங்கி நடந்தான். தொப்பலாக நனைந்துவிட்டான். மழைத்திரை அவனை முழுமையாக மறைத்தது. அவளின் கண்களுக்கு அவன் தெரிந்து கொண்டே இருந்தான் – தன் வீட்டை அவன் அடைந்த பின்னரும்!
– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002
– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com