மழை பெய்யுது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 7,588 
 
 

இரவெல்லாம் கண்விழித்து அட்டூழியம் செய்துவிட்டு, அதிகாலையில் நித்திரைக்குச் சென்ற சிறு குழந்தை போல திருச்சி மாநகரம் அமைதியாய் இருந்தது. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை சிலுப்பி விஸ்தரித்து தூங்கிக் கொண்டிருக்கும் பூக்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். தாய்ப்பறவைகள் பொழுது புலர்ந்ததை பொருட்படுத்தாமல், தத்தம் கூடுகளில் தத்தம் குஞ்சுகளை தத்தம் இறக்கைகளால் போர்த்தி, வரும் குளிர் காற்றிலிருந்து காப்பாற்றி, தூங்க வைத்துக்கொண்டிருந்தன.

“ ரேஷ்மி, எந்திரி மா ”, சமையல் அறையில் இருந்தபடியே, தன் குட்டி தேவதையை எழுப்பிக்கொண்டிருந்தார் அம்மா.

“ ஏய், மணி 7 ஆச்சுடி…”.

அம்மாவின் குரல் காதில் விழவிழத்தான், ரேஷ்மி குட்டிக்கு இன்னும் சில மணிநேரம் தூங்க வேண்டும்போல இருந்தது. கால்களை மட்டுமே மூடியிருந்த போர்வையை இழுத்து, தன் கழுத்தையும் போர்த்தப் பணித்தாள் அந்த வீட்டின் குட்டி இளவரசி.

ரேஷ்மியிடமிருந்து பதில் ஏதும் இல்லாததால், ‘கிசான் ஜாம் ரோல்’ சப்பாத்திகளை ஒரு டப்பாவில் அழகாய்ச் சுருட்டி அடுக்கி வைத்த கையோடு, அடுக்களையை விட்டு வெளியே வந்தார் அம்மா.

“ இப்போதான் தூங்கற மாரி நடிக்கிறா பாரேன் “, என்று சொல்லிக்கொண்டே, இளவரசியின் போர்வையை இழுத்துவிட்டார்.

“ எந்திரி டி, சூரியன் வந்துடுச்சு பாரு “.

கண்ணைக் கசக்கிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் குட்டி ரேஷ்மி. சூரியனை கோபமாகப் பார்த்து முறைத்துவிட்டு,

“ ம்மா, அதுக்குலாம் ஹோம்வொர்க்கே இருக்காதா ?“

“ ஏய், காலைலே ஆரம்பிக்காத. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு “

***

கீழே “நமது பாரதம், தூய்மை பாரதம்” பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது. தான் அணிந்திருந்தநைட்டிமீது ஒரு கலர் துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டார். மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரித்து வைத்த இரண்டு குப்பைத்தொட்டிகளை கையில் எடுத்துக்கொண்டு, மாடியில் இருந்து கீழே இறங்க எத்தனித்தார் அம்மா.

“ ரேஷ்மி, அம்மா கீழ போய்ட்டு வர்றேன், நான் வரும்போது கட்டில விட்டு கீழ எறங்கி இருக்கணும், சரியாடி ? “

“ சரிடி “

“ சரிடியா ? இரு உன்ன வந்து வச்சிக்கிறேன் “.

அம்மா அந்தப்பக்கம் போனவுடன், கட்டிலை விட்டு இறங்கினாள் ரேஷ்மி. கட்டிலுக்கு வலப்பக்கம் உள்ள பிரஞ்சு சன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள். மறந்துபோன ஹோம்வொர்க் நினைவு வந்தது போல, சூரியன் நைசாக நழுவி மலைக்கோட்டையின் பின்புறம் ஒளிந்துகொள்ளப் போனான். வானம் திடீரென இருட்டிக்கொண்டு வந்தது. ஆங்காங்கே கருநிற மேகங்கள் கவியத்தொடங்கின. சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது. அன்றைய தின பள்ளிக்கூடத்தை ‘கட்’ அடிக்க காரணம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்,

“ மழை வருது… !!! “ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

***

“ ரேஷ்மி, வா குளிக்கலாம் “, அம்மா அழைத்துக்கொண்டே மேலே வந்தார்.

“குளிருது மா”

“குளிரும் குளிரும் …, வா“

“அங்கப்பாரு, மழை வர்றமாரி இருக்கு”

“நல்லா வருமே மழை… வாடி டைம் ஆச்சு”

தரதரவென ரேஷ்மியின் கையைப்பிடித்து இழுத்து குளியலறைக்கு அழைத்துச் சென்றார். ரேஷ்மிக்கு என வைத்திருக்கும் பிங்க் கலர் வாளியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீரைத் தொட்டுப் பார்த்தார். சற்று நேரம் முன்பே நிரப்பி வைத்திருந்ததால், சுடுநீர் சற்றே இளகி வெதுவெதுப்பாய் இருந்தது.

“சுடு தண்ணில குளிக்கர்துக்கு என்னா உனக்கு ?”,

என்று கேட்டுக்கொண்டே தன் செல்ல மகளின் குழந்தை மேனிமீது சுடுதண்ணீர் நேராக படாத வண்ணம், தன் கையை அரணாக வைத்து ஊற்றினார். தன்னைவிட அழகான ஒரு பெண்ணை கண்முன்னே பார்த்துவிட்டவியப்பில், ஒரு சிறு பொறாமை வந்து அந்த தாயைச் சீண்டியது. அதே நேரத்தில், ‘தான் வளர்ந்ததும், தன் அம்மா போல அழகாக, தைரியமாக இருக்கவேண்டும்’, என்று ரேஷ்மி நினைத்துக்கொண்டிருந்தாள்.

***

அம்மா ரேஷ்மிக்கு வலிக்காத வண்ணம், ஒரு தேங்காய்ப் பூ துண்டு எடுத்து, அவள் முதுகில் முத்து முத்தாய்ப் பூத்திருந்த நீர்த்துளிகளைத் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார். வெடுக்கென விலகி ஓடி, மீண்டும் அதே சன்னல் வழியே வானத்தைப் பார்த்தாள் ரேஷ்மி. மக்கு சூரியன் இன்னும் ஹோம்வொர்க் செய்துகொண்டிருந்தான் போல, வானமெங்கும் கருமை. தன் சிறு கண்களை அழகாய் விரித்து, ரேஷ்மி சொன்னாள் :

“ இன்னிக்கி நல்லா மழை வரப்போது ”

“ அப்டியா, சரிங்க வெதர்வுமன், ஆனா ஸ்கூல்லாம் லீவ் விட மாட்டாங்க.”

“டி.வி போட்டு பாரு மா…”

அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

“ஏய், மழை ஒண்ணும் கொட்டு கொட்டுனு கொட்டல, சரியா ? சும்மா வானந்தான் கண்ணாமூச்சி காட்டுது… அப்டே மழை பேஞ்சாலும் நீ ஒண்ணும் கரைஞ்சி போய்ட மாட்ட, புரியுதா ?”

“ஒழுங்கா இன்னிக்கு என்ன விட்டன்னா, நான் நாளைக்கு ஸ்கூலுக்குப் போறேன். இல்லனா, இன்னிக்கி நான் மழைல நனையப்போறேன், அப்றம் எனக்கு ஜூரம் வரப்போது.”

“ஜூரம் வந்தா ஊசி போட்டுக்கலாம். இந்த வயசுலே நல்லா பிளாக்மெய்ல் பண்றத பாரு.”

என்று சொல்லியபடியே யூனிபார்மை மாட்டி விட்டார். அடுத்து தலையில் சின்னதாய் ஒரு சிண்டு போட்டு, முகத்திற்கு சற்று பவுடர் பூசி, நெற்றியின் நடுவில் நேர்த்தியாய் சிறு சந்தனம் வைத்து, அதன் நடுவில் குங்குமம் வைக்கும் வரை, ரேஷ்மி எதுவுமே பேசவில்லை. இதைப் பார்த்த அம்மா

“என்னா, உம்முனு இருக்க ?” என்றார்.

கட்டிலின் மீது இருந்த அம்மாவின் கைப்பேசியை எடுத்து,

“ நான் அப்பாக்கு கால் பண்ணப்போறேன். அவர்கிட்ட சொன்னா, ஸ்கூல்கு போவேணாம்னு சொல்லுவாரு “, என்றபடி அழைக்க முயன்றாள்.

“ இல்ல, ஸ்கூல்குதான் போக சொல்லுவாரு ”

“ இல்ல போவேணாம்னு தான் சொல்லுவாரு “

“ யம்மா மாமியாரே, உங்கப்பா போகவேணாம்னு சொன்னாலும் சொல்லுவாரு. வாயப் பாரு, நல்லா என் மாமியார் மாரி. அவருக்கு என்னா தெரியும் ? நான் தான இங்க லோல் படறேன், அவர் பாட்டும் சென்னைல ஹாயா இருக்காரு. இப்ப அவர் டிரைவிங்-ல இருப்பாருடி, டிஸ்டர்ப் பண்ணாத”

என்றபடியே போனை பிடுங்கி வைத்தார். அந்த குட்டி உருவத்தை அப்படியே தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டு டைனிங் டேபிள் அருகே சென்று, அதன் மீது அமர்த்தி சிறு சிறு துண்டங்களாக நறுக்கி வைத்திருந்த சாக்லேட் இட்லியின் ஒரு துண்டத்தை எடுத்து ஊட்டினார். முதலில் முரண்டு பிடித்தாலும், சாக்லேட்டின் சுவை மயக்கியதால், ரேஷ்மி சாப்பிட்டாள். கொடுத்துவைத்த இட்டிலித்துண்டுகள் முரண்டுபிடிக்காமல் கரைந்துகொண்டிருக்க,

“மழை பேஞ்சா, ஸ்கூல்ல ஒண்ணுமே சொல்லித்தர மாட்டாங்க மா”

“ஐ ! அப்போ ரொம்ப நல்லதாப் போச்சி. ஜாலியா பிரண்ட்ஸோட விளையாடலாம்”

“போ ! மழை பேஞ்சா மிஸ்ஸே வரமாட்டாங்க …”

“அப்டியா ? இன்னிக்கு மழைலாம் பேயாது”

“மழை பேயும், நீ வானத்தப் பாரேன்…”

“பாக்கறேன், பாக்கறேன், நீ மொதல்ல, சாப்பிடு”

குழந்தைக்கு ஊட்டிவிடுவதிலேயே மும்முரமாக இருந்தார். ‘ ஸ்கூலுக்கு போகக் கூடாதுனு எப்டி பெரிய மனுஷி மாரி பேசறா பாரேன்’, என்று நினைத்துக்கொண்டார்.

***

‘கீங் கீங்..’, கீழே பள்ளிக்கூட வேன் வந்து நின்று ஒலி எழுப்பியது. கைதிகளை சிறைச்சாலைக்கு கூட்டி செல்லும் வாகனத்துக்கும், இந்த பள்ளிக்கூட வேனுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாய்த் தோன்றவில்லை.

“ஸ்கூல் வேன் வந்தாச்சு பாரு”, சொல்லிக்கொண்டேகாலில் ஷூவை மாட்டி, யூனிபார்மின் அடியில் பிடித்து நீட்டி இழுத்து விட்டார்.

“எனக்கு பாத்ரூம் வருது”

“போய்ட்டு சீக்கிரமா வா”…

பின்பக்கம் லேசாக ஒரு தட்டு தட்டி, அனுப்பி வைத்தார். ரேஷ்மி ஓட்டமாய் ஓடினாள். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து,

“அம்மா, தூறல் போடுது மா”, என்றாள்.

“தெரியும் நீ இப்டி சொல்வேன்னு, இந்தா ரெடியா எடுத்து வைச்சிருக்கேன் பாரு, உனக்காக”,

என்று அவளுக்காக எப்போதோ வாங்கிய நீல நிற குட்டிக் குடையை நீட்டினார். அழுது அடம்பிடித்து அன்று ரேஷ்மி வாங்கிய அந்தக் குடை, அப்போது பெரு மகிழ்ச்சி கொடுத்தது. இப்போதோ, அதே குடை அவள் மகிழ்ச்சியைப் பறிப்பது ஏனோ ?

வெடுக்கென அம்மாவின் கையிலிருந்து குடையைப் பிடுங்கிக்கொண்டு, வாயிற்கதவை நோக்கி நடந்தாள். தன் சிறு தேவதையின் கோபத்தை இரசித்தபடியே,

“படிக்கறதுக்கு ஸ்கூல் பேக் ரொம்ப முக்கியம் மா”,

என்று, அந்தக் குட்டி முதுகில், டோரா படம் போட்ட பையை மாட்டிவிட்டார்.

“நீயும் வா கீழ”, குழந்தைகளுக்கே உரிய சிங்சாங் பாணியில் ரேஷ்மி கத்தினாள்.

“நான் நைட்டில இருக்கேன்டி, நீயே போய்ட்டுவா. “

“குப்பை கொட்டர்துக்கு மட்டும் போன ?”

“என் செல்லம்-ல ? போய்ட்டுவாம்மா…”

“சரி, டாடா”

“டாடா டி தங்கமே””

நெற்றியில் ஒரு முத்தமிட்டு, உச்சிமுகர்ந்து அனுப்பி வைத்தார். ரேஷ்மியின் சின்னபாதங்கள் ஷூவின் கணம் தாங்கமாட்டாமல் சிறு சிறு அடிகளாய் எட்டு வைத்து மாடிப்படி இறங்கும் சத்தம் கேட்டது. அம்மா பிரஞ்சு சன்னலுக்கு அருகே வந்தார், அங்கிருந்தபடியே தன்னுடைய ரேஷ்மி, வீட்டு கேட்டை தன் சிறு கைகளால் திறந்து பிறகு சாத்திவிட்டு வேனை நோக்கி நடந்த அந்த பொறுப்பான நடையில் தன் தாயின் சாயலைக் கண்டார். தன் மகளில் தன் தாயைக் காணும் அழகு, தகப்பன்களுக்கு மட்டுமே உரித்தானதா என்ன ?

கீழிருந்தபடியே அம்மாவிற்கு டாடா சொன்னாள் ரேஷ்மி. அம்மாவும் டாடா காட்ட, பதிலுக்கு அழகு காட்டிவிட்டு, வேனுக்குள் ஏறினாள். வேன் ஆயா கையைப்பிடித்து ஏற்றி உதவி செய்தார். வேன் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது. அம்மா அந்த வேனையே பார்த்துக்கொண்டிருந்தார். வேன் பிரதான சாலையைப் பிடித்து திரும்பிச் சென்றது.

எங்கிருந்தோ வந்த மழை “சோ” வெனக் கொட்டத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *