மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 4,955 
 
 

காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி. விழித்தபோது கார் கொழும்பு வீதிகளை கடந்து போய்க்கொண்டிருந்தது. கொழும்பின் புறநகர் பகுதிகளையும் கடக்கும் போது, பெட்டா பகுதியில் இருக்கும், ஹாஜியாரின் அலுவலகம் போகாமல் கார் வேறுதிசையில் செல்வதை கண்ட பாரி, பெரேராவை பார்த்தான். பின் சீட்டிலிருந்த ஹாஜியார் குறட்டை சத்தத்தோடு நல்ல உறக்கம்.

பெரேரா அவனை அமைதியாக இருக்கும் படி வாயில் கைவைத்து சமிஞ்சை செய்தார். கொழும்பிலிருந்து ஒருமணி நேரம் கடந்த பின்னே ஒரு அழகிய கிராமத்துக்குள் கார் நுழைந்தது. அப்போது ஹாஜியாரும் விழித்துக்கொண்டார். சிகரெட்டு வாங்க வேண்டும் என்றார். பெரேரா மெயின் ரோட்டில் ஒரு கடைமுன் நிறுத்தினார். அவரிடம் மூன்று பாக்கட் 555 சிகரெட் வாங்கிவரும்படி சொல்லிவிட்டு, பெரேரா போனதும் பாரியை அழைத்தார்.

பாரி திரும்பி பார்த்ததும், ”புஹாரி இங்கு நடப்பது எதையும் யார்டயும் சொல்லப்படாது. ஓனக்கும் நவுபருக்கும் இரிக்கற சிநேகிதம் தெரியும். அவன்டகூட சொல்லப்படாது “. என்றார்.

பாரி சரி என்று தலையாட்டினான். இதுவரை ஹாஜியார் சிகரெட் குடித்ததை பார்த்திராத பாரி, சிகரெட் வாங்கசொன்னபோதே ஹாஜியாரின் மறுபக்கம் ஒன்று இருப்பதை உணர ஆரம்பித்தான்.

மளுவானை வித்தியாசமான ஊராக இருந்தது. ஊர்முழுதும் கொத்துக்கொத்தாக சிகப்பு நிற பழங்களுடன் மரங்களாக இருந்தது. இதுவரை அவன் பார்த்திராத பழம்.சிகப்பு நிறத்தில் மேல்புறத்தில் முடிகளுடன் கொத்துக்கொத்தாக தொங்கியது. அந்த வீதியில் சிறிய கடைகளிலும், வண்டிகளிலும் அந்த பழக்கொத்துக்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்.காரில் கடந்துபோகிரவர்கள், கரைநிருத்தி வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அதைவேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபாரியிடம்.”புஹாரி,இந்த பழம் சாப்புட்டீக்ரியா?” என்றார் ஹாஜியார்.

“இல்லை பாத்ததில்லை. இந்த பழம் இந்தியாவுல இல்லே” என்றான்.

“இது பேரு ரம்புட்டான். இது ஒரு மலேயா பழம். ஜாவாக்கரங்க இங்க கொண்டுவந்து வளத்தாங்க. இப்போ இந்த ஊர் முழுக்க இந்த மரம்தான்.”என்றார் ஹாஜியார்.

சிகரெட் வாங்கப்போன பெரேரா, சிகரெட்டை ஹாஜியாரிடம் கொடுத்துவிட்டு, கூடவே கொண்டுவந்திருந்த சில ரம்புட்டான் பழங்களை பாரியிடம் கொடுத்தான்.

“மாத்தியா சாப்புடிரியலா” என்று ஹாஜியாரிடம் கேட்டான்.

“நீங்க சாப்புடுங்க. வீட்டுல தோப்பே இரிக்கிதே. ஏன் காசுகொடுத்து வாங்கினே” என்றார்.

பாரி பழத்தை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல், அதன்மேல் இருக்கும் முட்கள் போன்ற முடிகளை எப்படி அகற்றுவது என்று தெரியாமல் பார்த்துகொண்டிருந்தான்.

அப்போது பெரேரா வாயில் வைத்து பல்லால் கடித்து தோளை நீக்கி காண்பித்தார். தோளை நீக்கியதும் வெள்ளை நிறத்தில் சிறிய பந்துபோன்ற பழம் வெளிப்பட்டது. மிகவும் இனிப்பாக, மனத்துடன் இருந்தது. பாரிக்கு புதிய பழம் மிகவும் பிடித்திருந்ததது.

கார் ஒரு தெருவுக்குள் போனது. அந்த தெருவில் கடைசியாக இருந்த விட்டுக்கு முன் நின்றது.

பெரிய காம்பவுண்டுடன் இருந்த அந்த வீட்டின் கேட்டை ஒரு பெரியவர் வந்து திறந்துவிட்டார். அவருக்கு ஹாஜியார் வயதிருக்கும். மலாய்கார்களின் முகச்சாயல் இருந்தது.

காம்பவுண்ட் முழுதும் ரம்புட்டான் மரங்களாக பழுத்து அலங்கார விளக்குகள்போல் காட்சிதந்தது. தோப்பின் நடுவில் ஓடுவேய்ந்த மாடியுடன் கூடிய அழகிய சிறிய வீடு இருந்தது.

அந்த பெரியவர் ஹாஜியாருக்கு கார் கதவை திறந்துவிட்டார். ”நீங்க எதுக்கு மாமா கஷ்டப்படுறீங்க” என்றார் ஹாஜியார்.

“இதெல்லாம் ஒரு கஷ்டமா?” என்றார் பெரியவர்.

உள்ளே இருந்து ஹாஜியாரின் மகள் வயதுபெண் ஒருவரும், பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனும் வந்தார்கள். அவர்களுக்கும் மலாய் முகங்கள்தான்.

இது என் மனைவி, இது என் மகன் என்று இருவரையும் பாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஹாஜியார்.

நடப்பது எதையும் யாரிடமும் சொல்லக்கூடதென்று அவர் சொன்னதன் பின்னணி பாரிக்கு புரிந்தது.

வீட்டின் உள்ளே போனதும் பெரிய ஹாலும், அதை ஒட்டி சில அறைகளும் இருந்தது. அதில் ஒரு அறையை காண்பித்து இதில் “நீனும் பெரேராவும் தங்கிக்கங்க.குளியலறை உள்ளுக்கையே இரிக்கிது“ என்றார் ஹாஜியார்.

அந்தப்பெண்ணும் பெரியவரிடம் “வாப்பா அவுங்களுக்கு தேவையானத செஞ்சி குடுங்க “ என்று சொன்னாள்.

பிறகு ஹாஜியார் அந்த மனைவியுடன் ஹாலில் இருந்த மரப்படிக்கட்டு மூலம் மாடிக்கு போனார். பின்னாலேயே மகனும் பின்தொடர்ந்து மாடிப்படிக்கட்டுகளில் ஏறினான்.

பெரியவர் பாரியை அந்த அறைக்குள் அழைத்துசென்றார். அந்த அறை தேக்கு மரத்தாலான அலமாரி கட்டில் மேஜை நாற்காலி என்று அழகாக அமைக்கப்பட்டிருந்தது. விருந்தாளிகளுக்கான அறையாக தோன்றியது. சிறிது நேரத்தில் பெரேராவும் காரை நிறுத்திவிட்டு, அறைக்குள் வந்தான்.

பாரி செய்வதறியாது நிற்பதை பார்த்து பெரேரா “ பாத்ரூமில் குளிப்பதானால் குளித்துவிட்டு வா என்றான்.

பாரி “கலையிலேயே குளிசுட்டேன்,மேல் கழுவிக்கிட்டு வரேன்’ என்று கொண்டுவந்திருந்த பையிலிருந்து டவல், சோப் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு போனான். பழங்கால பாணியில் ஒரு எனாமல் குளியல் தொட்டி இருந்தது. சவரில் தலையில் தண்ணீர் படாமல் குளித்துவிட்டு வந்தான்.

அவன் வெளியில் வந்ததும் பெரேரா சுருட்டு ஒன்றை பற்றவைத்துக்கொண்டு டவலுடன் குளியலறைக்குள் போனான்.

அப்போது அந்த பெரியவர் உள்ளே வந்தார். “பெயர் என்ன ? தம்பிக்கு எந்த ஊர் ? என்றார்.

“புஹாரி. இந்தியாவுல கீழக்கரை “ என்றான் புஹாரி.

“எனக்கு இந்தியாபத்தி தெரியாது. நாங்க ஜாவாக்காரங்க. ஒருதடவ சொந்தக்காரங்க நாகூர் கந்தூரிக்கு போக கூப்பிட்டாங்க. அப்போ எனக்கு சவுரியப்படல “ என்றார் பெரியவர். .

“நாங்க மூணு தலைமொறைக்கு முன்னாடி ஜாவா விலுருந்து எங்க பாட்டன் பூட்டன் காலத்துல வந்தோம். இப்போ இந்தியாக்காரன்களோட கலந்துட்டோம். எங்க ஆக்களுக்கு ஜாவா மொழி பேசுவது கோரஞ்சிபோய் நாங்க தமிழ்தான் பேசுறோம்” என்றார்.

பெராரா குளியலறையிலிருந்து வெளியே வந்ததும். பெரியவர் அவரிடம் சிங்களத்தில் பேசிகொண்டிருந்தார். பாரிக்கு அவர்களின் பேச்சிலிருந்து அவர்களின் பழக்கம் நீண்ட நாட்களாய் இருக்கும் என்பதை உணர்த்தியது.

பெரியவர் இருவரையும் பார்த்து சாயா கொண்டுக்குட்டு வாறன் என்று போனார்.

சிறிது நேரத்தில் ஒரு ட்ரேயில் பீங்கான் டீ குவளை யுடன் டீ கப்புகளுடன் வந்தார். வயதான மனிதர் இப்படி சுமந்து வருவதைப்பார்த்த பாரி. ”ஏன் நீங்க கஷ்டப்படுறிய? “ என்றான்.

“என்ன கஷ்டம். நானும் உங்களமாதிரி தொழிலாளிதான்”. ஹாஜியார் மவள கல்யானமுடிச்சதும். என்ன வேல பாக்கவேணாமுன்னுட்டாக”என்றார் பெரியவர்.

இருவருக்கும் சாயா கோப்பையில், சாயா ஊற்றிக்கொடுத்தார்.. பாரி ஏலக்காய் மனத்துடன் சிலோன் டீயை ரசித்து குடித்தான்.

டீயை குடித்துவிட்டு பெரேரா “நா கொஞ்சம் வெளியபோய்த்துட்டு வாறன். மாத்தியா இஷா தொழுவ பள்ளிக்கு போயிட்டு சாப்புட எட்டு மணிக்கு வருவாங்க.. அதுக்குள்ள வந்துருவன்”.என்று வெளியே கிளம்பினான்.

பெரிவர் பாரியிடம் அவன் குடும்பம் பற்றி விசாரித்தார். பாரி தன் சோக கதையை சொன்னான். வந்ததுக்கு இன்னும் ஊருக்கு பணம் அனுப்ப முடியல. எங்க ஊர்காரங்க யார்மூலமாவது உண்டியளில்தான் அனுப்ப முடியும். ஹாஜியார் கொழும்பில் விசாரிச்சி சொல்றதா சொல்லி இருக்கிறார். செலவுக்கு என்ன பண்ணுறாங்கன்னு தெரியல. பணம் அனுப்பாம கடிதம் போடவும் விருப்பமில்ல. என்றான்.

அவரை பற்றி தெரிந்துகொள்ள விரும்பி “ஹாஜியாரை எப்படி தெரியும் ?” என்றான் பாரி.

“எம் பேரு முஹம்மது. நானும் ஹாஜியார்ட கொழும்பு ஒபீஸ்ல தான் இருவது வருஷம் வேலை பாத்தன். முஹம்மது நானான்னா பெட்டாவுளே எல்லாருக்கும் தெரியும். ஹாஜியார்ட வாப்பா, சாகுல் ஹமீது நாநா இந்தியாக்காரர்தான். இப்போதும் இந்தியாவுல சொந்தங்கள் இருக்குராங்க. இப்பவும் பிள்ளை, பேரன் பேத்திகள் இருக்குராங்கலாம். ஹாஜியாரும் எப்பவாவது இரண்டுமூன்று ஆண்டுகளுக்கொருமுறை பாக்க இந்தியாக்கு போவாரு.ஆனா சீனன்கோட்டை குடும்பத்துக்கும் அவங்களுக்கும் தொடர்பு இல்லை. எம் மவளப்பத்திக்கூட அவங்களுக்கு எதுவும் தெரியாது. ஒருநா மளுவானக்கி வந்தவரு, எம் மவள கல்யாணம் பண்ணிக்கிறேண்டார். மவளுக்கு ஒரு கல்யாணம் காட்சி செய்ய வக்கில்லாதவனா இருந்தேன். மகள்ட கேட்டேன் என் நிலைமை அறிஞ்சி. உங்க இஷ்டம் வாப்பானுட்டா. எனக்கு பொறவு அவளுக்கு யாருமில்லே. அதனாலே ஒத்துக்குட்டேன்” என்றார். சொல்லும்போது அவரையும் அறியாமல் கண்களிளிருந்து கண்ணீர் ஓடியது.

இருவரின் நிலைக்கும் வறுமைதான் காரணம் என்பதை புரிந்துகொண்டான்.

ஏதோ அவளாவது வசதியாக இருக்கிறாளே என்று சந்தோசப்பட்டு அந்த படச்சவனுக்கு நன்றி சொல்றேன் என்றார்.

“எல்லாம் காலத்துல செய்யோணும். நான் வாலிபத்துல போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்ல. குடும்பத்த கவனிக்கல. நல்லா சம்பாதிக்கதான் செஞ்சேன். எல்லாத்தையும் குடியிலயும்,சூதுளையும் விட்டேன். எம் மனுஷி மவுத்துக்கு பொறவுதான் திருந்தினேன். அவள ஒருநாளும் சந்தோசமா வைக்கல. பொறவு நிலைமை கைய மீறி போச்சு “ என்றார் முகமது நானா.

“நீயாவது காலத்துல தங்கச்சிக்கி கல்யாணம் பண்ணிகுடு. என்னமாதிரி காலம்கெட்டு இரண்டாதாரம், கிழட்டு மாப்புள என்று அவங்க வாழ்க்கைய பாழாக்கிடாதே. நீயும் காலாகாலத்துல நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் முடிச்சிக்க” என்று அறிவுரை கூறினார்.

அவரின் மனதின் வலி புரிந்தது. தங்கையை நினைத்துப்பார்த்தான். உடன் மைமூனாவின் நினைவுகளும் வந்துபோனது. இந்த மாதமாவது எப்படியும் பணம் அனுப்பி ஊருக்கு கடிதம் போடவேண்டும். என்று முடிவு செய்துகொண்டான்.

“என்ன தம்பி யோசனை?” என்றார் பெரியவர் முஹம்மது நானா. .

“நீங்க சொல்றது சரிதே, இன்சா அல்லா சீக்கிரம் எல்லாம் செய்யணும். எல்லாத்துக்கும் நம்ம ஏழ்மைதான் காரணம். அந்த நாயன்தான் பரக்கத்தை தரனும்” என்றான் பாரி.

“ஒன் வயசுல எனக்கு கல்யாணமாகி மகள்பொறந்துட்டாள். நீயும் சீக்கிரம் கல்யாணம் முடிச்சிக்க. இங்க சிலோன்ல உனக்கு பொண்ணு பாப்பமா?” என்றார் முஹம்மதுநானா. கேலியாக.

“இல்லே எனக்காக ஒரு பெண் ஊரில் காத்துக்கிட்டிருக்குது” என்றான் வெட்கப்பட்டுக்கொண்டே.

பெரியவர் “என்ன காதலா?” என்றார்.

“இல்ல தெரிஞ்சவுக. அடுத்த தோப்பு. எங்க குடும்பம் தாயா, பிள்ளையா. பழகிட்டோம்” என்றான் பாரி.

– கணையாழி, பிப்ரவரி 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *