கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 5,404 
 

பத்பனாபனுக்கு அன்று அலுவகத்தில் வேலையே ஓடவில்லை. அவர் மனம் முழுக்க மகள் பத்மாவை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. இந்நேரம் வீட்டில் என்ன செய்து கொண்டிருப்பாள்? தெரியவில்லை. ஏன் குழந்தைகளை கூட்டி வரவில்லை. முகத்தை பார்த்தால் நம் வீட்டிற்கு மகிழ்ச்சியாக வந்ததாக தெரியவில்லை.வேறு எதுவும் இருக்காது, இருந்திருந்தால் கஸ்தூரி இந்நேரம் போன் பண்ணீயிருப்பாளே, மனம் அலைபாய செயல்களோ அலுவலக கோப்புகளை புரட்டிகொண்டிருந்தது.

பத்பனாபனுக்கு ஒரு பையன், ஒரு பெண், பெண்ணுக்கு பத்மா என்று பெயர் வைத்து படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்து விட்டார். பையனுக்கு படிப்பு முடிந்து, நல்ல வேலையிலும் உட்கார்ந்து விட்டான்.தற்பொது அவனுக்கு கால் கட்டு போட பெண் தேடும் படலத்தில் இருக்கிறார்.

காலை ஒன்பது மணி இருக்கும், பத்பனாபன் வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்.

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், யாரென எட்டி பார்த்தார். உள்ளிருந்து அவர் மனைவி கஸ்தூரியும் வெளியே வர ஆட்டோவுக்கு பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துகொடுத்து மகள் பத்மா உள்ளே வந்தாள். கஸ்தூரி கேள்விக்குறியுடன் கணவனை பார்த்தவள், என்னடி தனியா வந்திருக்க? மாப்பிள்ளை வரல? பொண்ணுங்க கூட வராம இப்படி தனியா வந்திருக்க?

ஏம்மா, வந்தவளை வா அப்படீன்னு கூட சொல்லாம, மாப்பிள்ளை எங்கே? குழந்தைங்க எங்கே? அப்படீன்னு வாசல்லயே நின்னு விசாரிச்சுட்டு இருக்கறே, அவங்க யாரும் கூட வரலியினா என்னை உள்ளே கூப்பிட மாட்டியா? கேட்டவளை கோபிச்சுக்காதடீ, என்று மகள் கையில் இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள் கஸ்தூரி.

வாம்மா ! ஒற்றை வார்த்தையில் மகளை வரவேற்றவர், அலுவலகத்துக்கு நேரமாகி விட்டதால், மாலை வந்து மகளை விசாரித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு சரி கஸ்தூரி நீங்க பேசி கிட்டு இருங்க, நான் சாயங்காலம் வந்திடுறேன், சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினார்.மனம் மட்டும் மகள் எதற்கு வந்திருக்கிறாள், அதுவும் அவள் இருப்பது நாகர்கோவிலில், இரவு முழுக்க பிரயாணம் பண்ணியிருந்தால்தான் காலையில் இங்கு வந்திருக்க முடியும். அப்படி என்ன அவசரம்? போன் கூட பண்ணாமல் வந்திருக்கிறாள்.

ஒருவேளை கணவனிடம் சண்டை போட்டு வந்திருப்பாளா? சே..சே..கதிரவன் அப்படிப்பட்டவன் அல்ல, அவனை சிறு வயது முதலே பார்த்து வந்திருக்கிறார். சகோதரி வகையில் வந்த சம்பந்தம், சகோதரி பல முறை உறுதி கொடுத்த பின்னால்தான் மகளையே கொடுக்க சம்மதித்தித்தார்.அதுவுமில்லாமல் கல்யாணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகி விட்டது, இதற்கு மேல் இவர்களுக்குள் என்ன சண்டை வரப்போகிறது.

சட்டென தன்னை உதறிக்கொண்டவர், என்ன நினைப்பு இது, ஏன் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொள்கிறேன். பேசாமல் அரை நாள் விடுமுறை எடுத்து என்ன ஏது? என்று விசாரித்து வந்திருந்தால் இந்த கவலை இருந்திருக்காது. அவரே மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.

எப்படியோ மாலை ஆனதும், விட்டால் போதும் என்று வீட்டுக்கு விரைந்தார். மகள் வாசப்படியிலே நின்று வரவேற்றதை கண்டவுடன் இவருக்கு மனசு சற்று துணுக்குற்றது. இருந்தாலும், முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, காப்பி சாப்பிட்டியாடா? அன்புடன் விசாரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

அப்பொழுதுதான் உள்ளே வந்த அருண் அக்கா நீ எப்ப வந்தே? கேட்டுக்கொண்டே கையில் பையுடன் உள்ளே வந்தவனை பார்த்து நான் காலையிலேயே வந்துட்டேன், எங்கே போயிருந்தே? ஒரு நிமிசம் வந்திடுறேன், சொல்லிக்கொண்டே குளியலறைக்கு சென்றவன் பதினைந்து நிமிடங்களில் குளித்து தலை துவட்டிக்கொண்டே, அக்கா ஆபிஸ் வேலையா முந்தா நேத்து சென்னை போனவன் இப்பத்தான் வர்றேன், என்ன தான் சொல்லு நம்ம ஊருல இருக்கற தண்ணியில குளிச்சாத்தான் நிம்மதி, என்ன சொல்றே, ஞாபகம் வந்தவனாக ஆமா மாமா வரலியா? குழைந்தங்களையும் காணோம், இவங்க எல்லாம் இல்லாம நீ மட்டுமா தனியா வந்தே? கேட்டவனை ஏண்டா அம்மாவை மாதிரியே நீயும் கேள்வி கேக்கறே, நானும் படிச்சிருக்கேன், கல்யாணத்துக்கு முன்னாடி நாலு ஊருக்கு தனியா போயிட்டு வந்திருக்கேன், சரி சரி கோபிக்காதே, அவங்க எல்லாம் எப்படி இருக்கறாங்க? ம்…நல்லா இருக்கறாங்க, குரலில் மெல்ல சோகம் தென்பட்டதா?

உள்ளிருந்து இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த பத்பனாபனுக்கு இவ்வாறு சந்தேகம் தென்பட்டது.

இவர் எதிர்பார்த்த நேரம் வந்தது. இரவு சாப்பாடு முடிந்து அனைவரும் படுத்தபின் உள்ளே வந்த கஸ்தூரி மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். மாப்பிள்ளைக்கு அடுத்த வருசம் நம்ம ஊருக்கு ட்ரான்ஸ்பர் வருதாம், வந்தா இங்கே இருக்கறதுக்கு வீடு பாக்கணுமாம், அதுக்கு ஒரு வருசம் இருக்கில்லை?இப்பவே எதுக்கு வீடு பாக்கறாலாம்.

இல்லே நீங்க ஒரு இடம் வாங்கி வச்சிருக்கீங்கில்ல, அதை அவள் பேருக்கு மாத்தி கொடுத்தா மாப்பிள்ளைக்கு லோன் கொடுக்க ரெடியா இருக்காங்கலாம்.கட்ட்ட வேலை ஆரம்பிச்சா அடுத்தவருசம் இவங்க குடி வர்றதுக்கு செள்கரியமா இருக்கும்னு நினைக்கிறா.

கஸ்தூரி எனக்கு ரிட்டையர்டு ஆகறதுக்கு இன்னும் இரண்டு வருசம்தான் இருக்கு.

இதுவரைக்கும் சொந்த வீடு இல்லாம இருக்கோம், அந்த இடத்துல ரிட்டையர்டு ஆகி வர்ற பணத்துல வீடு கட்டி நாம குடி போனா அது பின்னாடி அருணுக்கு பிரயோசனமா இருக்குமுன்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.

கஸ்தூரி பெருமூச்சுடன், அவளுக்கு புரியுது, ஆனா மாப்பிள்ளைதான் இப்படி அபிப்ராயப்பட்டு பேசறாராம். இவளை இப்ப அனுப்பி வச்சதே கூட மாப்பிள்ளைதானாம்.

இவருக்கு கதிரவன் மேல் இருந்த மரியாதை சற்று குறைய ஆரம்பித்த்து. சே எப்படி எல்லாம் நினைத்து செயல்படுகிறார்கள் மனிதர்கள், நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டார்.

சரி ஏற்பாடு பண்ணிடலாம், சொல்லி விட்டு ஆயாசமாய் கண்ணை மூடியவர் மனதில் எதிர்கால பயம் வந்து உட்கார்ந்தது. எதற்கும் மகனிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும், முடிவு செய்து கொண்டு உறங்குவதற்கு கட்டிலை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.

அருண் மாப்பிள்ளை இந்த மாதிரி அபிப்ராயப்படுகிறார் என்று சொன்னவுடன் எந்த வித தயக்கமுமின்றி தாராளமா எழுதி கொடுத்துடுங்க அப்பா, அவ பேர்ல மாத்தி கொடுக்கறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை, சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு கிளம்பி விட்டான்.

பத்பனாபனுக்குத்தான் வருத்தமாக இருந்தது, அந்த இடம் வாங்கி வைத்திருப்பதாக அகஸ்மாத்தமாக மாப்பிள்ளையிடம் சொன்னது எவ்வளவு தப்பாகி விட்டது, மனதுக்குள் புலம்பியவர், சற்று வெளியே நிற்போம் என்று வாசல் வெளியே வந்தவர், சற்று தள்ளி தன் மகள் யாருடனோ சத்தமாய் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.

“நீங்க கொஞ்சம் வாயை மூடி கிட்டு இருந்தா போதும், எங்கப்பா கிட்ட நான் அந்த இடத்தை மாத்தி வாங்கிடுவேன். சும்மா உங்க மாமனாருக்கு கடைசி காலத்துக்கு வேணும் அப்படி இப்படின்னு பினாத்திட்டு இருந்தா எனக்கு கெட்ட கோபம் வரும், உங்க வேலை சீக்கிரம் லோனை வாங்கறது மட்டும்தான் என்ன நான் சொல்றது புரியறதா?

மகளின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பத்பனாபனுக்கு யாரிடம் கோளாறு என்பது புரிந்தது. தன் மகளிடமே வைத்துக்கொண்டு மாப்பிள்ளையை தவறாக நினைத்து கொண்டோமே. என்று நினைத்துகொண்டிருந்தபொழுது, அருண் அவர் அருகே வந்து என்னப்பா அக்கா பேசுனத கேட்டு மலைச்சு நின்னுட்டீங்களா? எனக்கு நேத்தே மாமா போன் பண்ணி சொல்லிட்டாரு, அக்கா இந்த திட்டத்தோடதான் வரா, தயவு செய்து எனக்கு இதுல விருப்பமில்லை, மாமா கிட்ட சொல்லிடு அப்படீன்னாரு. சொல்லிவிட்டு பெருஞ்சிரிப்புடன் வெளியே கிளம்பினான்.

என்ன நடக்குது இங்கே? என்று திகைப்புடன் நின்று கொண்டிருந்தார் பத்பனாபன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *