மனமுறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 3,785 
 
 

கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் வந்த சங்கீதா தோள்பையை சோபாவில் வைத்துவிட்டு கழிப்பறையை நோக்கிப் போகும்போது, “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றன் சங்கீதா” என்று அசோக் சொன்னதும், கழிப்பறைக்குப் போகாமல் அப்படியே நின்றுகொண்டு, “எப்ப ஆபிசிலிருந்து வந்திங்க?” என்று கேட்டாள்.

“ஜஸ்ட் டென் மினிட்ஸ் பிஃபோர்” என்று அசோக் சொன்னான். அடுத்து, “கொஞ்சம் அவசர வேல” என்று சொல்லிக்கொண்டே ஷூவைப் போட்டுக்கொண்டிருந்தான்.

அசோக்கையே ஏற இறங்க பார்த்த சங்கீதா, “தினமும் சாயங்காலமானா ஒங்களுக்கு அவசர வேல வந்துடுது” என்று சொல்லி முகத்தை ஒருவிதமாக நொடித்துக்காட்டினாள்.

“போயிட்டு வந்திடுறேன், அப்பறமாப் பேசிக்கலாம்” என்று சொன்ன அசோக் மோட்டார் பைக்கின் சாவி எங்கே இருக்கிறது என்று தேடினான்.

‘அசோக் எதற்காகக் கொஞ்சம் அவசர வேலை என்று சொல்கிறான்’ என்பது சங்கீதாவுக்குத் தெரியும். போனால் நிதானம் இல்லாத அளவுக்குக் குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவருவதற்கு இரவு ஒன்பது, பத்து மணியாகும் என்பதால் அசோக்கையே முறைத்துப்பார்த்த சங்கீதா, “வீட்ட விட்டு ஓடிக்கிட்டேயிருந்தா பிரச்சன தீந்திடுமா? இன்னும் எத்தன வருசத்துக்கு இப்படியே ஓடிக்கிட்டே இருப்பிங்க?” என்று கேட்டாள்.

பைக் சாவியைத் தேடிக்கொண்டிருந்த அசோக், சாவி தேடுவதை விட்டுவிட்டு வந்து, “என்ன சொன்ன?” என்று கேட்டான். அவன் கேள்வி கேட்ட விதமும், நின்றுகொண்டிருந்த விதமும் சரியில்லை என்று தோன்றியதால் ஒன்றும் பேசாமல் கழிப்பறைக்குப் போவதற்கு முயன்றாள். அவளைத் தடுத்து நிறுத்திய அசோக் ஆத்திரம் பொங்க, “என்ன சொன்ன?” என்று கேட்டான். என்ன கேட்டுவிட்டோம், எதற்காக இவ்வளவு கோபப்படுகிறான் என்று புரியாமல் திகைத்துப்போய் நின்றுகொண்டிருந்தாள் சங்கீதா.

“என்ன சொன்ன? சொல்லு?” திரும்பத்திரும்ப கேட்டான். மீண்டும்மீண்டும் கேட்டான். கோபத்தில் அசோக்குக்கு வியர்த்து உடல் நடுங்குவதை பார்த்த சங்கீதாவுக்குப் பயம் வந்துவிட்டது.

போன வாரம், “திரும்பி வரும்போது பழம் கொஞ்சம் வாங்கிக்கிட்டு வாங்க” என்று சொன்னாள். “சரி” என்று சொல்லிவிட்டு போன அசோக், பழம் வாங்காமல் வீட்டுக்கு வந்துவிட்டான். “எல்லாம் வாய்ப்பேச்சுதான். காரியத்தில ஒண்ணுமில்ல” என்று சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால், அசோக்குக்குக் கோபம் வந்துவிட்டது. “காரியத்தில ஒண்ணுமில்லன்னா, என்ன அர்த்தம்? எதுக்காக அப்படிச் சொன்ன?” என்று கேட்டு இரண்டு மணி நேரத்துக்கு மேல் நோகடித்தான். அது மாதிரி இன்று செய்துவிடுவானோ? தப்பித்துப்போய்விடுவோம் என்ற எண்ணத்தில் கழிப்பறைக்குப் போவதற்கு இரண்டு அடி எடுத்துவைப்பதற்குள் வழியை மறித்துக்கொண்டு , “சொல்லிட்டு போ? எதுக்காக அப்படிச் சொன்ன?” என்று கேட்டான். பிறகு அவனாகவே, “நான் தப்பிச்சி ஓடிக்கிட்டு இருக்கனா?” என்று கேட்டான்.

“வெளியே எங்கியோ போறன்னிங்க. போயிட்டு வாங்க, அப்பறம் பேசிக்கலாம்” என்று சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் காட்டுக்கத்தலாக, “நான் தப்பிச்சி ஓடிக்கிட்டு இருக்கனா?” என்று கேட்டான். அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “வழிய விடுங்க. பாத் ரூம் போயிட்டுவந்திடுறன்” என்று சொன்னாள்.

“சொல்லிட்டுப் போ.”

“ஒரு நிமிஷம் இருங்க வந்திடுறன்” என்று சொல்லிவிட்டு அசோக்கைத் தாண்டிக்கொண்டு கழிப்பறைக்குப் போவதற்கு முயன்ற சங்கீதாவை ஒரே நெட்டாக நெட்டி, “பதில் சொல்லிட்டுப் போ” என்று கோபமாகச் சொன்னாள்.

அசோக் நின்றுகொண்டிருந்த விதம், அவன் நெட்டித் தள்ளிய வேகம், குரலிலிருந்த கடுமை எல்லாம் வம்பு வளர்க்காமல் விட மாட்டான் என்று சங்கீதாவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. இனி பணிந்துபோனால்தான் அவனிடமிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் உண்டானதும் ரொம்பவும் தன்மையான குரலில், “நான் ஆபிசிலிருந்து வந்து ஒரு நிமிஷம்கூட ஆகல. நான் வரதுக்காகவே காத்திருந்த மாதிரி வெளிய கிளம்புனிங்க. அதான் கோபம் வந்துடுச்சி. அதனால்தான் சொல்லிட்டன். மன்னிச்சிக்குங்க” என்று சங்கீதா சொன்னதைக் காதில் வாங்காத அசோக், “எந்த அர்த்தத்தில சொன்ன?” என்று கேட்டான்.

“நான் எந்த அர்த்ததிலேயும் சொல்லல” என்று சங்கீதா சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவசரப்பட்ட மாதிரி, “எனக்குத் தெரியும் நீ எந்த அர்த்தத்தில் சொன்னன்னு” என்று சொல்லி ஆங்காரத்தோடு சுவரில் ஓங்கி ஒரு குத்து விட்டான். சங்கீதாவுக்கு அருகில் வந்து கெஞ்சுகிற குரலில், “தயவுசெஞ்சி சொல்லிடு” என்று கேட்டான்.

“பாத் ரூம் போயிட்டு வந்திடுறன்.”

“உண்மயச் சொல்லிட்டுப் போ.”

“இனிமே அப்படிச் சொல்ல மாட்டன். ப்ளீஸ் அசோக்.”

“இனிமே நீ சொல்லுவியா, மாட்டியாங்கிறது எனக்கு முக்கியமில்ல. எந்த அர்த்தத்தில சொன்ன? இப்ப அதுதான் எனக்கு வேணும். அதுதான் முக்கியம்” அசோக்கின் குரலில் பிடிவாதம் கூடியிருந்தது. முன்பைவிட இப்போது அவனுடைய முகம் கூடுதலாக இறுகியிருந்தது.

“அப்பறம் பேசிக்கலம். நீங்க வெளியே போயிட்டு வாங்க ப்ளீஸ்” என்று சொன்ன சங்கீதா, என்ன இப்படி மாட்டிக்கொண்டோமே என்று தன்னையே நொந்துகொண்டாள்.

“நோ, நோ” என்று சொல்லிக்கொண்டே மூன்று, நான்கு முறை தரையில் எட்டிஎட்டி உதைத்தான். களைப்படைந்தது போல் சோபாவில் போய் உட்கார்ந்துகொண்டு, “மை மிஸ்டேக்” என்று சொன்னான். சங்கீதாவின் பக்கம் பார்த்து, “நீ உண்மயச் சொல்லிட்டா எனக்குக் கோபம் கொறஞ்சிடும். எந்த அர்த்தத்தில சொன்னன்னு மட்டும் சொல்லிடு ப்ளீஸ்” என்று கெஞ்சிய வேகத்தில், “என்னோட ஒடம்புதான் எனக்கு எதிரி, என்னோட ஒடம்புதான் என்னெ அசிங்கப்படுத்துது” என்று சொன்னான். என்ன தோன்றியதோ, “மை மிஸ்டேக், மை மிஸ்டேக்” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கன்னத்தில் தானே அடித்துக்கொள்ள ஆரம்பித்தான். “வேண்டாங்க, வேண்டாங்க” என்று சொல்லிக்கொண்டே போய், அசோக்கின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொள்ள முயன்றாள்.

வெறிப்பிடித்த காட்டு மிருகம் மாதிரி சங்கீதாவை நெட்டித் தள்ளினான். நெட்டித் தள்ளுவான் என்று எதிர்பார்க்காத சங்கீதா நிலைதடுமாறி நான்கு ஐந்தடி தூரம் தள்ளிப்போய் விழுந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுதுகொண்டே தரையோடு தரையாக நகர்ந்துபோய் அசோக்கின் கால்கள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, “தெரியாம சொல்லிட்டன். நான் செத்தாலும் அந்த வார்த்தய இனிமே சொல்ல மாட்டன். ஒங்கள அடிச்சிக்காதீங்க, வேணும்ன்னா என்னெ அடிங்க” என்று சொன்னாள்.

வெடுக்கென்று கால்களை உதறிக்கொண்டு எழுந்த அசோக், சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். இரண்டு, மூன்று முறை புகையை இழுத்து வெளியே ஊதியவனுக்கு என்னதான் ஆயிற்றோ, பைத்தியம் பிடித்தவன்போல் சிகரெட்டைத் தன்னுடைய இடது கையில் வைத்து அழுத்தினான். நெருப்பால் சுட்டுக்கொண்டதால் அவனுடைய முகம் மாறிப்போயிற்று. வலியை ரசித்து அனுபவிக்க விரும்பியதுபோல் அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்து இரண்டாவது முறையாகச் சூடு போட்டுக்கொண்டதைப் பார்த்த சங்கீதா பதறிப்போய், அசோக்கின் கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கிப் போட்டாள். “தொந்தரவு பண்ணாதே” என்று சொல்லிவிட்டு, விருப்பமான காரியத்தைச் செய்வதுபோல் இரண்டு கைகளிலும் எட்டு இடங்களில் சூடு போட்டுக்கொண்டான். எட்டு இடங்களிலும் கோலிகுண்டு அளவுக்கு உப்பிப்போய்விட்டது. உப்பிப்போன இடங்களையே மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தான். பொதுவாகக் கோபம் வந்தால் பொருட்களைத்தான் போட்டு உடைப்பான். ஆனால், இன்று அவன் தன்னையே அடித்துக்கொண்டது, தன்னுடைய கைகளில் சூடு போட்டுக்கொண்டது சங்கீதாவுக்குப் பயத்தை உண்டாக்கியது.

அசோக்கின் இரண்டு கைகளிலும் சிகரெட்டால் சுட்டுக்கொண்டதால் ஏற்பட்டிருந்த கொப்புளங்களைப் பார்த்து, “நீங்க இப்பிடிச் செஞ்சிக்கிறதுக்கு என்னெக் கொன்னுடலாம். இல்லன்னா என்னெ அடிச்சிருக்கலாம்” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள். வேகமாக சங்கீதாவை விலக்கிவிட்ட அசோக், எழுந்து கால்களில் போட்டுக்கொண்டிருந்த ஷூவைக் கழற்றி, பட்டென்று தன்னுடைய முகத்தில் தானே அடித்துக்கொள்ள ஆரம்பித்தைப் பார்த்ததும் உயிர்போவதுபோல் கத்திக்கொண்டே, அவனுடைய கையிலிருந்த ஷூவைப் பிடுங்குவதற்கு முயன்றாள்.

“என்னெ விடு, என்னெ விடு. எனக்கு அசிங்கமா இருக்கு” என்று சொல்லி வேகமாக நெட்டித் தள்ளினான். நிலைதடுமாறி கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்துபோய் அசோக்கின் கையிலிருந்த ஷூவைப் பிடுங்க முயன்றாள். ஷூ தன்னுடைய கையிலிருந்து கீழே விழுந்துவிட்டதால் ஆத்திரத்தை அடக்க முடியாததால் தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியை எட்டி உதைத்தான். தரையில் விழுந்த மீன் தொட்டி சுக்குநூறாக உடைந்து சிதறியது. தொட்டியிலிருந்த ஆறு மீன்களும் தரையில் விழுந்து துடித்துக்கொண்டிருந்தன. ஆறு மீன்களையும் பைத்தியம் மாதிரி காலாலேயே மிதித்து சாகடித்தான். அடுத்ததாகத் தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கிப் போட்டு உடைத்தான். சுவரில் மாட்டியிருந்த கல்யாண புகைப்படத்தை எடுத்து தரையில் போட்டு உடைத்தான்.

“ஏன் இப்படிச் செய்றீங்க?” என்று சங்கீதா ஒரு வார்த்தைப் பேசவில்லை. பொருட்கள் போனால் போகட்டும். அசோக் தன்னை கையாலோ ஷூவாலோ அடித்துக்கொள்ளாமல், சிகரெட்டால் தன்னைச் சூடு போட்டுக்கொள்ளாமல் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது அசோக்கின் செல்போன் மணி அடித்தது. போனை எடுத்த வேகத்தில், “இம்பொட்டண்ட்டுக்கு எதுக்கு செல்போன்?” என்று சொல்லி, ஓங்கித் தரையில் அடித்து உடைத்தான். அடுத்த நொடி சிகரெட் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பதுபோல் வேகமாக சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தான். சோபாவில் வந்து உட்கார்ந்தான். சிகரெட்டை முழுவதுமாகக் குடித்து முடித்த பிறகு, சங்கீதாவிடம் வந்து, “எழுந்திரு” என்று சொன்னான். அவள் எழுந்திருக்காமல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்த அசோக் அவளுடைய தலை முடியைப் பிடித்து இழுத்தான்.

வலியைப் பொறுக்க முடியாமல் எழுந்து நின்றாள். திருடனிடம் போலீஸ்காரர் விசாரிப்பதுபோல, “நேத்து ஒன்னோட ஃபிரண்ட் ஆஷாகிட்ட பேசும்போது, வீட்டுல பணம் இருக்கு, நக, ஏ.சி. இருக்கு, ஆனா, எதுலயும் உயிர் இல்ல, சாப்பாடு இருக்கு, சாம்பார், ரசம், மோர், மட்டன், சிக்கன், ஃபிஷ் எல்லாம் இருக்கு. ஆனா, எதிலயும் உப்பு இல்ல’ன்னு சொன்ன இல்லியா? அதுக்கு என்ன அர்த்தம்?” என்று அசோக் கேட்டான்.

சங்கீதா நிஜமாகவே இப்போதுதான் நடுநடுங்கிப் போனாள். நேற்றிரவு எட்டு மணிக்குப் ஆஷாவிடம் போனில் பேசியது இவனுக்கு எப்படித் தெரியும். சாதாரணமாகச் சொன்ன வார்த்தைகள் இவனுக்கு மட்டும் எப்படி விஷப் பேச்சாக, அவன் சம்பந்தப்பட்ட பேச்சாக மாறியது? எந்தப் பேச்சைக் கொண்டுவந்து எதனுடன் ஒப்பிடுகிறான். விளையாட்டாகப் பேசிய பேச்சு எப்படி வில்லங்கமான பேச்சாக மாறியது என்று யோசித்தாள். இனிமேல் அசோக் எளிதில் அடங்க மாட்டான், கேள்வி கேட்டு சாகடிப்பதை நிறுத்த மாட்டான் என்பதும் அவனைச் சமாதானப்படுத்த எந்த வழியும் இல்லை, வாயை மூடிக்கொண்டிருப்பது மட்டும்தான் தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்தாள். அதனால் உயிர்போனாலும் வாயைத் திறக்கக் கூடாது. திறந்தால், தான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் புதியபுதிய கேள்விகளை உருவாக்குவானே என்று பயந்துபோய் சங்கீதா எஜமானனைப் பணிவுடன் பார்க்கும் மிருகத்தைப் போல் அசோக்கைப் பார்த்தாள்.

“ஆஷாகிட்ட எந்த அர்த்தத்தில சொன்ன?”

“…”

“என்னெ முட்டாளாக்காத சங்கீதா. உண்மயச் சொல்லிட்டா பிரச்சன இதோட முடிஞ்சிடும்.”

‘பேசாத, பேசாத’ என்று அவளுடைய மனம் சொன்னது. ஆனால், அதை அவளுடைய வாய் கேட்கவில்லை.

“மதியம் லஞ்ச் டைமில போன் போட்டு நாம பிரிஞ்சிடலாம், இல்லன்னா டைவர்ஸ் வாங்கிக்கலாம்னு எதுக்குச் சொன்னிங்க? நான் என்ன தப்பு செஞ்சன்? இல்லீகல் ரிலேசன்ஷிப் வச்சிக்கிட்டு ஊர்ச் சுத்துறனா? சாட் பண்றனா? வீடியோ கால் பேசுறனா? ராத்திரி முழுக்க செல்போனையே நோண்டிக்கிட்டு இருக்கனா? டிக் டாக் வீடியோ போடுறனா? செல்பி எடுத்து போட்டோ போடுறனா? பார்ட்டிக்கிப் போறனா? எனக்கும் மனசு இருக்குல்லியா? மதியம் நீங்க பேசினதிலிருந்து நான் இன்னும் சாப்புடல தெரியுமா?” என்று கேட்டுவிட்டு சங்கீதா அழ ஆரம்பித்தாள்.

“இவ்வளவு பேசற நீ, எதுக்காக ஆஷாகிட்ட சொன்ன? அத மட்டும் சொல்லிடு.”

சங்கீதா ஆச்சரியத்துடன் அசோக்கைப் பார்த்தாள். காதலிக்கும்போது, ‘காதல்ங்கிறது தியானம் செய்வது மாதிரி, தன்னையே மறந்துபோறது. நீ இல்லன்னா, என்னோட உலகம் முடிஞ்சிப்போன மாதிரி, என்னோட வாழ்க்க முடிஞ்சிப்போன மாதிரிதான், என் நெஞ்சுக்குள்ளார நீ இல்ல, என் நெஞ்சாவே நீதான் இருக்க’ என்று சொன்ன அசோக்கா இவன்? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ரொம்பவும் நிதானமான குரலில் சிறு பிள்ளைக்குக் கணக்குப் பாடத்தைச் சொல்லித் தருவது மாதிரி, “இப்பவும் சொல்றன் சங்கீதா நாம பிரிஞ்சிடுறதுதான் நல்லது. உன் நல்லதுக்குத்தான் சொல்றன், நான் முடிவெடுத்துட்டன்” என்று தீர்மான குரலில் அசோக் சொன்னதும், சங்கீதாவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ குரலை உயர்த்தி முகத்திற்கு முகமாகக் கேட்டாள்.

“நீங்க காதலிக்கணும்னு ஆசப்பட்டா, நான் காதலிக்கணும், நீங்க கல்யாணம் கட்டிக்கணும்னு சொன்னா நான் கல்யாணம் கட்டிக்கணும், ஒரு காரணமுமில்லாம நீங்க வந்து டைவர்ஸ் வாங்கிக்கலாம்னு சொன்னா அதுக்கும் நான் உடனே டைவர்ஸ் வாங்கிக்கறன்னு பணிவாச் சொல்லணும், இல்லியா? மீறி கேட்டா காதலிக்கிறதும் கல்யாணம் கட்டிக்கிறதும் தற்கொல செஞ்சிக்கிற மாதிரின்னு சொல்வீங்க?”

“நல்லது சொன்னா ஒனக்குப் புரியல” என்று சொல்லிவிட்டு நெற்றியைத் தேய்த்துக்கொண்டான் அசோக்.

“இன்னிக்கி ஒங்களுக்கு என்னா நடந்துச்சு? எதுக்காக இவ்வளவு டென்ஷன் ஆவுறிங்க? ஏதாச்சும் புது ஹாஸ்பிட்டலுக்குப் போனீங்களா? புதுசா டாக்ட்டரப் பாத்தீங்களா? எதுக்காக நீங்களும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்துறிங்க” என்று சொல்லும்போதே சங்கீதாவுக்கு அழுகை வந்துவிட்டது.

“எல்லா தப்பும் நானே செய்யுறனு வச்சிக்கலாம். எதுக்காக ஆஷாகிட்ட எதுலயும் உயிர் இல்ல; எதுலயும் உப்பில்லன்னு சொன்ன? இப்பிடிச் சொன்ன ஒங்கூட எப்பிடி என்னால இருக்க முடியும், நீயே சொல்லு?”

“நீங்க சொல்ற அர்த்தத்தில நான் சொல்லல.”

“பின்ன எந்த அர்த்தத்தில சொன்ன?”

“…”

“எனக்கு ஸ்பேர்ம் கவுண்டிங் கம்மியா இருக்கிற விஷயத்த எத்தன பேர்கிட்டச் சொல்லியிருக்கிற?”

“இது வெளியில சொல்ற விஷயமா?”

“ஆஷாகிட்ட சொன்னல்ல?”

“சத்தியமாச் சொல்லல.”

“ஆஷாகிட்ட சொன்ன மாதிரி இன்னும் எத்தன பேர்கிட்ட சொன்னியோ. அத நெனச்சா செத்திடணும்போல இருக்கு. நான் ஒரு வெத்துவேட்டுன்னு ஒங்க சனங்ககிட்ட, சொந்தக்காரங்ககிட்ட, ஃபிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லியிருப்ப.”

“நான் யார் கிட்டயும் சொல்லல. நாம ஆஸ்பிட்டலுக்குப் போற விஷயம் இதுவர எங்க வீட்டுக்குக்கூட தெரியாது. தெரியுமா?” என்று கேட்கும்போதே சங்கீதாவின் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது.

“நான் ஆம்பளயா இல்லியாங்கிறது ஒனக்குத் தெரியும், குழந்த பொறந்தாதான் ஆம்பளயா? குழந்த பொறந்தாதான் ஆம்பளன்னு ஒலகம் சொல்லுது. அதத்தான் நீயும் சொல்ற இல்லியா? நான் வெறும் சும்மான்னு சொன்ன ஒங்கூட நான் எப்பிடி இருக்கிறது? நீ என்னெ விட்டுப் போவணும், இல்லன்னா நான் சாவணும்” என்று அசோக் சொன்னான்.

“நீங்க சாக வேணாம். நான் செத்துடுறன்.”

“குட்” என்று அசோக் நிதானமான குரலில் சொல்லிவிட்டு, சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான்.

அசோக்கைக் காதலித்ததும், கல்யாணம் கட்டிக்கொண்டதும் தவறோ என்ற எண்ணம் ஆறு வருசம் கழித்து, முதன்முதலாக சங்கீதாவின் மனதில் உண்டாயிற்று. சங்கீதா பி.ஈ. முடித்ததும் கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்று டி.சி.எஸ். கம்பெனியில் சேர்ந்தாள். மூன்று வருடம் சீனியராகவும், சங்கீதாவுக்கு டீம் லீடராகவும் இருந்தான் அசோக். புராஜெக்ட் பற்றி மட்டும்தான் பேசுவான். யாராக இருந்தாலும் ‘ஹாய்’, ‘ஹலோ’ என்பதைத் தாண்டி பேச மாட்டான். தேவையென்றால் மட்டும்தான் போன் பேசுவான். கம்பெனியில் ‘சின்ஸியர்’ என்று பெயர் இருந்தது. மற்ற டீம் லீடர்கள்போல் சில்லி ஜோக் அடிப்பது, அடிக்கடிக் கூப்பிட்டு பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டான். அசோக் என்றால் ‘டெரர்’ என்ற பெயர் இருந்ததால் மற்றவர்களும் அநாவசியமாக அவனிடம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள். மற்ற ஜூனியர்களைவிட சங்கீதா கொஞ்சம் தள்ளிதான் இருந்தாள். வேலைக்குச் சேர்ந்து ஒன்னரை வருடம் கழித்து நேரடியாகவே “ஒங்கள எனக்குப் புடிச்சி இருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாமா? ஒங்களுக்கு வேற ஆப்ஷன் இருந்தா வேண்டாம். காதலிக்கிறது, அப்பறம் பிரேக் அப் செய்யுற பழக்கமெல்லாம் எங்கிட்ட கிடையாது” என்று சொன்னான்.

“யோசிக்கிறன் சார்” என்று மட்டும்தான் அன்று சொன்னாள். அதன் பிறகுதான் அசோக் யார், எந்த ஊர், அப்பா அம்மா என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தாள். ஒரே சாதி, அப்பா, அம்மா இரண்டு பேரும் ஆசிரியர்கள், ஒரே தங்கை, பி.ஈ. முடித்துவிட்டு ஐ.பி.எம். கம்பெனியில் வேலைபார்க்கிறாள், படித்திருக்கிறான், வேலையில் இருக்கிறான். விசாரித்த வகையில் சிக்கல் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் தன்னுடைய அப்பாவினுடைய கைபேசி எண்களைக் கொடுத்தாள். அதன் பிறகு அசோக் நேரடியாகவே சங்கீதாவினுடைய அப்பா, அம்மா, தங்கை, உறவினர்களிடம் பேச ஆரம்பித்தான். அடுத்த நான்காவது மாதத்திலேயே கல்யாணம் முடிந்துவிட்டது.

“சங்கீதாவுக்கு இப்படியொரு மாப்ள கெடச்சது அதிர்ஷ்டம்தான்” உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். ஊர்சுற்றுகிற ஆளில்லை, அனாவசியமாகச் செலவு செய்கிற ஆளில்லை. பழகுவதில், பேசுவதில் ‘ஜெண்டில்மேன்’ என்று கம்பெனியிலும், சொந்தக்காரர்கள் மத்தியிலும் பெயர் இருந்தது. பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாகத்தான் இருப்பான். எல்லாம் ஒன்பது மாதத்துக்கு முன்புவரைதான். பிறகு எல்லமே தலைகீழ்தான். அசோக் நல்லவனா? கெட்டவனா? என்று சங்கீதா யோசித்துக்கொண்டே அவனைப் பார்த்தாள். ஜன்னல் ஓரமாக நின்று சிகரெட்டைக் குடித்துக்கொண்டிருந்தான். முன்பு மனதில் எழுந்த கேள்வி மீண்டும் எழுந்தது. அசோக் நல்லவனா கெட்டவனா? கேள்விக்கான பதிலைத் தேடாமல், ‘ஆஸ்பிட்டலுக்கு ஏன்தான் போய்த் தொலஞ்சமோ’ என்று நினைத்து வருத்தப்பட்டாள்.

ஒன்பது மாதத்துக்கு முன்பு ஒருநாள், “வீட்டுல, ஃபிரண்ட்ஸ் எல்லோரும் இஷ்யூ இல்லியான்னு கேக்குறாங்க. சங்கடமா இருக்கு. டாக்டர ஒரு முற பாத்திடலாமா?” என்று தானாகவே வந்து கேட்டான். அசோக்கிடம் கேட்ட மாதிரி, சங்கீதாவிடமும் பல பேர் கேட்டிருக்கிறார்கள். கேள்வி கேட்டவர்களிடம் எல்லாம், “கொஞ்ச நாள் கழிச்சிப் பாத்துக்கலாம்னு இருக்கம்” என்றுதான் சொல்லி இருக்கிறாள். நாமாக எப்படிப் பேச்சை எடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த சங்கீதாவுக்கு அசோக்கே கேட்டது வாய்ப்பாக இருந்தது. உடனே சரி என்று சொன்னால் நன்றாக இருக்காது என்ற எண்ணத்தில் “இப்ப என்ன அவசரம்?” என்று கேட்டாள்.

“இந்த விஷயத்தில லேட் பண்ணக் கூடாது. இதுவே டூ லேட்” என்று சொன்ன அசோக் கட்டாயப்படுத்திதான் மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போனான். மருத்துவர், “ஒரு மாசத்துக்கு மருந்துமாத்தர எழுதித் தர்றன். சாப்பிடுங்க. அப்பறம் தேவப்பட்டா டெஸ்ட் எடுத்துப்பாக்கலாம்” என்று சொன்னார்.

‘சரி’ என்று இருவருக்குமே மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வந்தான். மாத்திரைகள் முடிந்ததும், “வா போய்ப் பாக்கலாம்” என்று கூப்பிட்டான். “இன்னம் ஒரு மாசம் பாக்கலாம்” என்று சங்கீதா சொன்னாள். இரண்டு மாதங்கள் கழித்தும் மாற்றம் எதுவுமில்லாததால் மருத்துவர், “டெஸ்ட் எடுங்க, பாக்கலாம்” என்று எழுதித் தந்தார். சங்கீதாவுக்குத்தான் முதலில் பரிசோதனைகளை எழுதித் தந்தார். பயத்துடன்தான் மருத்துவர் எழுதியிருந்த டெஸ்ட்டுகளைக் கொடுத்தாள். கொடுத்திருந்த பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு வந்த மருத்துவர், “டெஸ்ட் கொடுத்தாச்சா?” என்று கேட்டார்.

“கொடுத்தாச்சி டாக்டர்” என்று அசோக் சொன்னான்.

“வந்ததே வந்திட்டீங்க. நீங்களும் டெஸ்ட் கொடுங்களேன், ஒரே வழியா வேல முடிஞ்சிடும். திருப்பி அலய வேண்டாம்” என்று மருத்துவர் சொன்னபோது, “ஒய் நாட் டாக்டர், வித் ஃபிளஷர்” என்று சொன்னதோடு நிற்காமல், மருத்துவர் எழுதி கொடுத்த பரிசோதனைக்கான ‘மாதிரி’ கொடுத்தான்

சங்கீதாவுக்கு எல்லா சோதனை முடிவுகளுமே சரியாக இருந்தது, அசோக்குக்குதான் பிரச்சினை. “ஸ்பேர்ம் செல்களின் கௌண்டிங் கம்மியா இருக்கு, இருக்கிறதும் சரியான சைசில இல்ல, கருமுட்டய நோக்கி வேகமாகவும் நீந்திப் போகல. சரி பண்ணிடலாம். மருந்து மாத்தரதான். சாப்புடுங்க. ஒன் வீக் கழிச்சி வந்து டெஸ்ட் கொடுங்க, வர ரிசல்ட்டப் பொறுத்து அடுத்த முடிவு எடுக்கலாம்” என்று மருத்துவர் சொன்னபோது சங்கீதா அரண்டு போனாள். அசோக் என்ன செய்வானோ என்று. ஆனால், அசோக் எதுவுமே பேசாமல் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வந்தான். வேளை தவறாமல் மாத்திரைகளையும் சாப்பிட்டான். ஒரு வாரம் கழித்து மீண்டும் கொடுத்த செமன் அனாலிஸ் மாதிரியின் முடிவில் எந்த மாற்றமும் இல்லாததால், “லேப்டாப் முடிஞ்சவர யூஸ் பண்ணாதீங்க. பாடிய கூல வச்சிக்குங்க. பால்ஸ் ஹீட் ஆகாமப் பாத்துக்குங்க. விந்தணு நாளத்தில, விந்தணு குழாயில பிரச்சினயான்னு பாத்திடலாம். ஏதாவது அடைப்பு இருக்கலாம். விந்தணு நாளம் முறுக்கிக்கிட்டு இருக்கலாம். விதைப்பைக் குழாயிலயும் அடைப்பு இருக்கலாம். டெஸ்ட் கொடுங்க, ஸ்கேன் எடுத்தும் பாக்கலாம். துத்தநாகம், தாமிரம், செலினியம், ஃபோலிக் அமிலமெல்லாம் கூடுதலாத் தேவ. அதுக்கு மாத்தரதான். சிம்பிள் மேட்டர். செட்டில் பண்ணிடலாம். டோண்ட் ஒரி” என்று மருத்துவர் சொன்னார்.

மருத்துவர் எழுதி தந்த டெஸ்ட்டுகளை எடுத்தான். முடிவுகளை வைத்து மருத்துவர் எழுதிதந்த மாத்திரைகளையும் சாப்பிட்டான். நான்கு மாதம் கழித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார் மருத்துவர். பிறகுதான் அசோக் சிகரெட் குடிக்கவும், பிராந்தி குடிக்கவும் ஆரம்பித்தான். டெஸ்ட் முடிவுகள் நன்றாக வந்திருந்தால் எந்தச் சிக்கலும் வந்திருக்காது என்று நினைத்த சங்கீதா எழுந்துசென்று துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வந்து ஹாலைச் சுத்தம் செய்ய ஆரம்பித்ததும், வேகமாக வந்த அசோக் துடைப்பத்தைப் பிடுங்கிக்கொண்டு, “என்னெ முரடனா மாத்தாத. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு, எதையாவது செய்” என்று சொன்னான்.

“சங்கீதாகிட்ட கொஞ்சம் பிராப்ளம் இருக்கு. அதனாலதான் இஷ்யூ இல்ல” என்று அசோக் தன்னுடைய நண்பர்களிடம் சொல்லியிருந்ததைக் கேட்க வேண்டும் என்று பலமுறை தோன்றியிருக்கிறது. விஷயம் தெரியாத மாதிரியே இருந்துவிட்டாள். இப்போது கேட்கலாமா என்ற எண்ணம் வந்தது. கேட்டால் மோசமாகத் திட்டுவான், அடிப்பான், அதிகமாக சிகரெட், பிராந்தி என்று குடிப்பான் என்று பேசாமல் இருந்தாள்.

சங்கீதா வாயைத் திறக்காமல் இருந்தாள். மூச்சுவிட்டால்கூட பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதுபோல் பயந்துபோய் நின்றுகொண்டிருந்தவளின் முகத்தை மேலாக நிமிர்த்தி, “ஒவ்வொரு முறையும் செமன் டெஸ்ட் கொடுக்கிறதுக்காக இருட்டறையில்ல நிக்கிற பத்து நிமிஷம் இருக்கில்ல, அப்ப செத்திடலாம்னு இருக்கும். வாசல்லா நீ நின்னுக்கிட்டிருப்ப. கொஞ்சம் தூரம் தள்ளி நர்சு நின்னுக்கிட்டிருப்பா. பாட்டில் கொடுக்கும்போது, ‘கீழே சிந்திச்சான்னு?’ நர்சு கேக்குறப்ப எப்பிடி இருக்கும் தெரியுமா? நூறு முற செமன் டெஸ்ட் கொடுத்திருப்பனா? நூறு முறயும் இருட்டறயில இருக்கிறப்ப, பாட்டில நர்சுகிட்ட வாங்குறப்ப, திருப்பிக் கொடுக்கிறப்ப எம் மனசு எப்பிடி இருக்கும்னு ஒனக்குத் தெரியுமா? ஆனா, நீ என்ன சொல்ற? எதிலயும் உயிரில்ல. எதிலயும் உப்பில்ல. தப்பிச்சி ஓடிக்கிட்டே இருக்கன்னு, இல்லியா?” என்று கேட்டான்.

கோபத்தில் அசோக்குக்குச் சரியாகப் பேச வரவில்லை. உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. நன்றாக வியர்த்திருந்தது. அசோக்கின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சங்கீதாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால், பாவம் என்று மட்டும் தோன்றியது.

ஒன்பது மாதங்களாக மருத்துவமனைக்கு அலைந்துகொண்டிருந்ததில் மற்ற ஆண்களைவிட அசோக் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றியது. மனைவியை மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்புகிறவர்கள், மனைவிக்கு மட்டுமே பரிசோதனை செய்ய சொல்கிறவர்கள், உயிர்போனாலும் செமன் டெஸ்ட் கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறவர்கள், “எங்கிட்ட எந்தப் பிரச்சினயும் இல்ல, ஒங்கிட்டதான் எல்லாப் பிரச்சினயும். நீதான் ஆஸ்பத்திரிக்குப் போகணும்” என்று வம்பு வளர்க்கிறவர்கள், தன்னுடைய பிரச்சினையை மறைப்பதற்காக ஓயாமல் குடிக்கிறவர்கள், பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக, ‘நீ அவன்கிட்ட பேசின, இவன்கிட்ட பேசின’ என்று சொல்லி அடிக்கிறவர்கள், விவாகரத்து கேட்கிறவர்கள், அம்மாவை மதிக்கவில்லை, அப்பாவை மதிக்கவில்லை என்று நாடகமாடி, பிரச்சினை செய்கிறவர்கள், விபச்சாரி பட்டம் கட்டி அடித்து விரட்டுகிறவர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்களின் கதைகளையெல்லாம் ‘மாதிரி’ கொடுப்பதற்காகக் காத்திருக்கும்போதும், ‘மாதிரி’களின் முடிவுகளை வாங்குவதற்காகக் காத்துக்கொண்டிருக்கும்போதும், மருத்துவரைப் பார்ப்பதற்காக வரிசையில் உட்கார்ந்திருக்கும்போதும், பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற பெண்கள் சொன்ன கதைகளையெல்லாம் கேட்டு அசந்துப்போயிருக்கிறாள். அந்த விதத்தில் அசோக் ஜெண்டில்மேன்தான். “அவசரப்படாதீங்க. டைம் எடுத்துப்பாக்கலாம். இம்புருவ்மண்ட் ஆகும்” என்று மருத்துவர் சொன்னதையும், சங்கீதா சொன்னதையும் கேட்காமல் அடுத்தடுத்த மருத்துவர், அடுத்தடுத்த லேப் என்று அலைந்தான்.

“ஃபீமேல் கிட்ட பிரச்சினன்னா டெஸ்ட் டியூப் பேபி, வாடகை தாய்னு முயற்சிக்கலாம். பிராப்ளம் மேல்கிட்டன்னா கொஞ்சம் டைம் எடுக்கும். பட் செட்டிலாயிடும். விந்தணு உற்பத்தியக் கூட்டுற, விந்தணுவோட உருவத்தச் சரி செய்யுற, கருமுட்டய நோக்கி வேகமா நீந்தி செல்றதுக்கு உதவுற ஊசி, மருந்தெல்லாம் வந்தாச்சி” என்று மருத்துவர் சொல்லி முடிப்பதற்குள், “அதுக்கான மாத்திர, ஊசிகள எழுதி தாங்க” என்று சொல்லி கட்டாயப்படுத்தி எழுதி வாங்கினான். எஸ்.எச். என்கிற ஊசியைப் போட்டுப் பார்த்தான். அடுத்ததாக எஸ்.எச்.சி. என்ற ஊசியையும் போட்டுக்கொண்டான். ஹெர்பல் வயாக்ரா என்ற மாத்திரையையும் சாப்பிட்டான். “அவசரப்படாதிங்க. டென்ஷன் ஆகாதிங்க” என்று சொன்னாலும் கேட்க மாட்டான். விந்தணு எண்ணிக்கை கூட மருத்துவர் சொன்ன பசலைக்கீரை, பூசணிக்காய் விதைகள், கானாங்கிளத்தி மீன் என்று இரண்டு மாதம் சாப்பிட்டான். “கிட்னி பிரச்சன வராம, தைராய்டு பிரச்சின வராம பாத்துக்குங்க அதனாலயும் பிரச்சின வரலாம். பாஸ்ட்புட் சாப்பிடாதீங்க” என்று மருத்துவர் சொன்னதையெல்லாம்தான் கேட்டான், செய்தான்.

யூ-டியூபில் குழந்தை பிறப்பது சம்பந்தமான வீடியோக்களைப் பார்ப்பதுதான் அவனுடைய முக்கியமான வேலையாகிவிட்டது. ஒரு சொட்டு விந்தணுவில் எத்தனை லட்சம் உயிரணுக்கள் இருக்க வேண்டும். விந்து நீர்த்தன்மையாக இருக்க வேண்டுமா? நீர்த்தன்மையற்று இருக்க வேண்டுமா? விந்தணுவின் உருவம், வால்பகுதி எந்த வடிவில் இருக்க வேண்டும், கருமுட்டையை நோக்கி போகிற விந்தணுக்கள் எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும், விந்தணுவில் புரோகிரசிவ் ரேட்டிங் அளவு எவ்வளவு, நான்-புரோகிரசிவ் ரேட்டிங் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதெல்லாம் அசோக்குக்குத் தெரியும். இரண்டு மூன்று வாரத்துக்கு முன்பு என்ன நினைத்தானோ பக்கத்தில் வந்து நின்றுகொண்டு “ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? காலேஜில, ஸ்கூல்ல அழகா இருக்கிற ஒரு பிள்ளயப் பல பையனுங்க போட்டிப்போட்டுக்கிட்டு காதலிக்கிற மாதிரிதான், ஒரே ஒரு கருமுட்டயோட ஜோடி சேருறதுக்கு எத்தன லட்சம் விந்தணுக்கள் போட்டிப் போடுது தெரியுமா? என்னெ ஜோடி சேத்துக்கன்னு போட்டிப்போடுது, கெஞ்சிது தெரியுமா? நெனச்சிப் பாத்தா ஜாலியா இருக்கு. ஒரு விதத்தில் ஆச்சரியமா இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். “இதோட இந்தப் பிரச்சினையை விட்டுடலாம். ஒரு வருசம் கழிச்சிப் பாத்துக்கலாம். இத ஒரு பெரிய இஷ்யூவா எடுக்காதிங்க, இனிமே இதப் பத்திப் பேசவே கூடாது” என்று அப்போது சொன்னாள். ஆனால், அசோக் கேட்கவில்லை.

அசோக்கிடம், “டீ போடுறன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் போனாள். டீயைப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தாள். டீயை வாங்கிக் குடிக்காமல், “என்னெப் பத்தி என்னெ நினைக்கிற?” என்று கேட்டான். அவன் கேட்ட கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பிப்போனாள். முந்தைய நாள் புதிதாக ஒரு மாத்திரை டப்பா கிடந்ததைப் பார்த்துவிட்டு, “எதச் செஞ்சாலும் சொல்லிட்டு செய்ங்க, நான் ஒண்ணும் தப்பா நெனைச்சிக்க மாட்டான்” என்று சொன்னதுதான், அடித்துக்கொள்ளாத குறையாக, “தப்பா நெனைச்சிக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டு மூன்று மணி நேரத்துக்கு மேல் கேட்டதையே கேட்டு நோகடித்தான். முந்தின நாள் நடந்ததுபோல் இன்றும் நடந்துவிடுமோ என்ற பீதியில் அசோக்கைப் பார்க்காமல் இருப்பதற்கு முயன்றாள். எதுவும் பேசாமல் இருந்தால், “வெத்துவேட்டுக்கிட்ட எதுக்குப் பேசணும்னு போறியா?” என்று கேட்பானே என்ற கவலையில், “கொஞ்ச நேரம் படுக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“நாம பிரிஞ்சிடலாம் சங்கீதா. பிரச்சின முடிஞ்சிடும். நீ புதுசாக் கல்யாணம் கட்டிக்கலாம். குழந்த பெத்துக்கலாம். எங்கூட இருந்தா எதுவும் நடக்காது” என்று சொல்லி முடிப்பதற்குள், “அசிங்கமாப் பேசாதீங்க” என்று சங்கீதா சொன்னதுதான், “நான் அசிங்கமாப் பேசுறனா? எதிலயும் உயிரில்ல. எதுலயும் உப்பில்லன்னு நீ சொன்னியா? நான் சொன்னனா?” என்று கேட்டுவிட்டு ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.

“இன்னும் அடிங்க” என்று சொன்னாள்.

“கழுதய எவன் அடிப்பான்?” என்று சொன்ன அசோக் வெறிபிடித்த மிருகம்போல் மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியே போனான். சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் வாசலையே பார்த்துக்கொண்டிருந்த சங்கீதா, மீன் தொட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, கல்யாண புகைப்படம் என்று உடைந்து கிடப்பதையும் ஹால் முழுவதும் தண்ணீர் கொட்டியிருப்பதையும் பார்த்தாள். கதவைச் சாத்திவிட்டு வந்து படுத்துக்கொண்டாள். குழந்த இல்லாதவங்க எல்லாம் ஒலகத்தில டைவர்ஸ்தான் செஞ்சிக்கிறாங்களா? என்று தனக்குத் தானே கேட்டாள்.

‘அசோக்கைக் காதலித்ததும், கல்யாணம் கட்டிக்கொண்டதும் சரியா?’ என்ற கேள்வி சங்கீதாவின் மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது. மாமியார் பிரச்சினை, மாமனார் பிரச்சினை, பணப் பிரச்சினை, வேலையில்லை என்ற பிரச்சினைத்தான் பொதுவாக இருக்கும். தனக்குப் புதுப் பிரச்சினையாக வந்திருக்கிறது.

அசோக் எப்படி மாறிப்போனான்? மருத்துவமனைக்குப் போக ஆரம்பித்த பிறகுதான் அவனுடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. எப்போதாவது சிகரெட் குடித்துக்கொண்டிருந்தவன், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று பாக்கெட் என்று குடிக்க ஆரம்பித்தான். எப்போதாவது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பியர் குடித்துகொண்டிருந்தவன், தினமும் விஸ்கி, பிராந்தி என்று குடிக்க ஆரம்பித்துவிட்டான். வாரத்துக்கு இரண்டு மூன்று முறை என்பதற்குப் பதிலாகத் தினமும் இணைய ஆரம்பித்துவிட்டான். “இன்னிக்கி வேண்டாம். நாளக்கிப் பாத்துக்கலாம்” என்று சொன்னாலும் கேட்க மாட்டான். “போதும் விடுங்க” என்று சொன்னாலும் விட மாட்டான். முரட்டுத்தனமாகத்தான் நடந்துகொள்வான். “எதுக்காக இப்பிடி நடந்துக்கிறீங்க? நான் எதுவும் நெனைச்சிக்க மாட்டன்” என்று ஒருநாள் சொல்லிவிட்டாள். அவ்வளவுதான், “எதுக்காக அப்பிடிச் சொன்ன?” என்று திரும்பதிரும்ப கேட்டுக்கொண்டிருந்தான். அன்றிரவு தூங்கவே விடவில்லை. “சிகரெட்டால, விஸ்கியால பிரச்சின வரலாம்னு டாக்டர் சொன்னத மறந்திட்டீங்களா?” என்று ஒருநாள் கேட்டதற்கு, “கூடினாப் போவுது. வர்ற பேசண்டுகிட்ட ‘எங்கிட்ட வர்ற அசோக்ன்னு ஒரு பேசண்டுக்கும் இதே ப்ராப்ளம், எங்கிட்டதான் ட்ரீட்மண்ட் எடுத்துக்கிட்டிருக்காரு’ன்னு சொல்வார்தானே? என்னோட மாதிரிய வாங்கிகிட்டுப்போற நர்சு, என்னோட மாதிரிய டெஸ்ட் பண்ற லேப் டெக்னிஷியன், ரிசல்ட்ட டைப் பண்ற டைப்பிஸ்ட் எல்லாரும் என்னெப் பத்தி என்ன நினைப்பாங்க? அத நெனைச்சாத்தான் எனக்குச் செத்திடணும்போல இருக்கு. உறுப்பயே கட் பண்ணிப் போட்டுட்டா போதும்னு இருக்கு” என்று சொனனான்.

“இதப் பத்தி இனிமே பேசக் கூடாது. என்மேல பிராமிஸ்.”

“ஒனக்குப் புரியாது சங்கீதா. ஆவரேஜ் பாக்கணும் மூணு நாளக்கி ஒரு முற செமன் டெஸ்ட்டு கொடுங்கனு” டாக்டர் சொன்னப்ப, நர்சு ஒரு பாட்டிலக் கொடுத்து, ரூமுக்குப் போயிட்டு வாங்க’ன்னு சொல்றப்ப, வராத, வராதன்னு சொன்னாலும் கேக்காம எங்கூடவே வந்து டார்க்கு ரூமுக்கு முன்னால நீ நின்னுக்கிட்டிருக்கிறப்ப, பத்து நிமிஷம் கழிச்சி வியர்வயோட கதவத் திறந்துகிட்டு வெளிய வந்து நர்சத் தேடிக்கிட்டுப் போயி, பாட்டிலக் கொடுக்கிறப்ப, எப்பிடி எம் மனசு இருக்கும்னு ஒனக்குத் தெரியுமா? ‘செமன் தானம் பெறலாம்’ன்னு டாக்டர் சொன்னப்ப, ரிசல்ட் பேப்பர வாங்குறப்ப, ‘ஒன் வீக் கழிச்சி வாங்க பாக்கலாம்’ன்னு டாக்டர் சொல்றப்ப எப்படி இருக்கும்? ஒனக்குத் தெரியாது. ஏன்னா யூ ஆர் ஆல் ரைட் இல்லியா?” என்று அசோக் கேட்டபோது, “இவ்வளவு கஷ்டப்பட்டுதான் குழந்த பெத்துக்கணுமா? இனிமே எந்த ஆஸ்பிட்டலுக்கும் போக வேண்டாம். எனக்குக் குழந்தயே வேண்டாம். இதோட விட்டுரலாம்” என்று சொன்னதற்கு, “ஒனக்குப் பிரச்சின இல்ல, விட்டுடுவ, நான் அப்படியா? ஒங்கிட்ட பிரச்சின இல்லங்கிற திமிர்ல பேசுறியா? சந்தோஷத்தில பேசுறியா?” என்று முகத்திலடிப்பது போல கேட்டான்.

“இதுல நான் ஒரு தப்பும் செய்யல” என்று சங்கீதா சொன்னதும், பட்டென்று அசோக்குக்குக் கோபம் வந்துவிட்டது” எல்லாம் என் தப்புதான். ஒன்னெக் காதலிச்சது, கல்யாணம் கட்டுனது, இப்ப ஆஸ்பிட்டலுக்கு அலயுறது. எல்லாமே என் தப்புதான். ஒனக்குத்தான் கொற, எனக்கொன்னும் கொற இல்லன்னு சொல்லிக்காட்டுறியா?” என்று கேட்டு சண்டைப்பிடித்தான்.

மற்ற நேரங்களைவிட, மருத்துவமனைக்குப் போய்விட்டு திரும்பும்போதுதான் அதிகமான கோபத்தில் இருப்பான். வண்டியை வேகமாக ஓட்டுவான். “கொஞ்சம் பொறுமயாப் போங்க” என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டான். எப்போது ஆக்சிடண்ட் செய்வானோ என்ற பீதியில்தான் உட்கார்ந்துகொண்டு வர முடியும். “இத ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிறீங்க? சாதாரணமா இருங்க. நமக்கு மட்டும்தான் இப்பிடியா? நாட்டுல எவ்வளவோ பேர் இருக்காங்க” என்று ஒருநாள் சொல்லப்போக மோட்டார் பைக்கைப் பாதி வழியிலேயே ஓரம் கட்டி நிறுத்திவிட்டு, “ஒனக்கு பிராப்ளம் இருந்தா இப்பிடித்தான் நீதி போதனை பேசிக்கிட்டிருப்பியா?” என்று கேட்டு தகராறு செய்தான்.

“தெரியாம சொல்லிட்டன். வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். நடுரோட்டுல நின்னு பேச வேண்டாம். பாக்குறவங்க தப்பா நெனைப்பாங்க” என்று சொல்லி கெஞ்சிய பிறகுதான் மோட்டர் பைக்கை எடுத்தான்.

அசோக் எப்போது, என்ன பேசுவான், என்ன செய்வான், அவனுக்கு எந்த வார்த்தை சொன்னால் கோபம் வராது என்று கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். கடைசியாக செமன் அனாலிஸிஸ் மாதிரி கொடுப்பதற்காகப் போகும்போது, “திரும்பி வரும்போது கோயிலுக்குப் போகலாமா?” என்று கேட்டதற்கு, “கோவிலுக்குப் போனா விந்தணு கூடுதலாக உற்பத்தியாகும்னு யார் சொன்ன ஒனக்கு?” என்று கேட்டு முறைத்தான். இரண்டு மாதத்திற்கு முன், “புராஜெக்ட் சரியா முடிக்க மாட்டன்ங்கிறீங்க, அடிக்கடி லீவ் போடுறீங்க, டீம் லீடரா இருக்க வேணாம்” என்று மேனேஜர் கோபமாகத் திட்டியதற்காக, “வேலையை ராஜினாமா செய்துவிட்டு ரொம்பவும் சாதாரண கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப்போய் சேர்ந்துவிட்டான். “எங்கிட்ட ஏன் கேக்கல, சொல்லல, பெரிய தப்பு செஞ்சிட்டீங்க. அவசரப்படாம இருந்திருக்கலாம்” என்று சொன்னதற்கு, “லிமிட் யுவர் வேர்ட்ஸ்” என்று சொல்லி அபார்ட்மெண்ட் அதிர்ந்துபோகும்படி கத்திச் சொன்னான்.

ரொம்ப நேரமாக யோசித்தும் அசோக்கைக் காதலித்தது, கல்யாணம் கட்டியது சரியா என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. “ஒன்பது மாசத்துக்கு முன்னாடிவர தங்கமா இருந்தான். இப்ப பித்தளயா இருக்கான்.” அவளை அறியாமலேயே அந்த வார்த்தை அவளுடைய வாயிலிருந்து வந்தது.

கல்யாணமான பிறகு அசோக்கிடம் மொத்தமாக சங்கீதா நான்கைந்து முறைதான் சண்டை போட்டிருக்கிறாள். ‘நான் கேட்ட பொருளை ஏன் வாங்கித் தரவில்லை?’ என்று ஒருமுறைகூட கேட்டு கோபப்பட்டதோ, சண்டைபோட்டதோ இல்லை. அசோக்கின் தங்கை விஜிக்கு ஒன்னரை வருசத்துக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது. கல்யாணமான இரண்டாவது மாதமே கர்ப்பமாகிவிட்டாள். விஷயத்தை அசோக்கிடம் மட்டுமே அவனுடைய அம்மாவும், தங்கையும் சொன்னார்கள். “எங்கிட்ட ஏன் சொல்லல?” என்று கேட்டதற்கு, “எங்கிட்ட சொன்னாலும், ஒங்கிட்ட சொன்னாலும் ஒண்ணுதான்” என்று சொல்லி அசோக் சமாளித்தான். கோபப்பட்டாலும் சரி என்று விஷயத்தை விட்டுவிட்டாள். விஜிக்கு வளைகாப்பு நடத்தப்போகிற விஷயத்தையும் சொல்லாதபோதுதான் சங்கீதாவுக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது.

“ஒங்ககிட்ட மட்டும்தான் சொன்னாங்க. நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என்று பிடிவாதம் பிடித்தாள்.

“சின்ன விஷயத்தப் பெரிசுப்படுத்தாத” என்று அசோக் சொன்னபோது, “எது சின்ன விஷயம்? திட்டமிட்டு என்ன அசிங்கப்படுத்துறாங்க. நான் வரல. ஒங்களுக்குச் சின்ன விஷயமா இருக்கலாம். நீங்க போயிட்டு வாங்க” என்று சொன்னாள்.

“எனக்காக வா” என்று சொல்லி கட்டாயப்படுத்தி, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொண்டு போனான் அசோக். நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா பெண்களையும் வளையல் போட, பொட்டு வைக்க, சந்தனம் தடவக் கூப்பிட்டார்கள். சங்கீதாவை மட்டும் கடைசிவரை கூப்பிடவில்லை. கூப்பிடுவார்கள் என்று காத்திருந்து பார்த்துவிட்டு, நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே, “தல வலிக்குது. நான் வீட்டுக்குப் போறன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

“சாரி சங்கீதா” என்று அசோக் ஆயிரம் முறை சொன்னாலும் சங்கீதாவின் மனம் அமைதியாகவில்லை. முதன்முதலாக அன்றுதான் அசோக்கிடம் கடுமையாகச் சண்டைபோட்டாள்.

“ரெண்டு மூணு வருசமா, நிச்சயதார்த்தத்துக்கு, கல்யாணத்துக்கு, வளைகாப்புக்கு, குழந்த பிறப்புக்குப் போறதயே கொறச்சிக்கிட்டன். மீறிப் போனாலும் போற எடத்தில என்னா மரியாத கெடைக்கும்னு எனக்கும் தெரியும். ஒங்களுக்கும் தெரியும். இந்த விஷயத்தில ஆம்பளங்களவிட பொம்பளங்கதான் மோசம். தெரிஞ்சவங்க, தூரத்துச் சொந்தக்காரங்கதான் அசிங்கப்படுத்துறாங்க, தள்ளிவைக்கிறாங்க, ஒதுக்கிவைக்கிறாங்கன்னா, நெருங்கின சொந்தக்காரங்களே இப்பிடிச் செஞ்சா என்னா அர்த்தம்? ஒங்க வீட்டுல எல்லாரும் படிச்சவங்கதான?” என்று ஆங்காரத்துடன் கேட்டு தகராறு செய்தாள்.

“இனிமே ஒங்க வீட்டு விசேஷத்துக்கு என்னெக் கூப்பிடாதீங்க” என்று கறாராகச் சொல்லிவிட்டாள். குழந்தை பிறந்த செய்தியைக்கூட அசோக்கிடம் மட்டும்தான் சொன்னார்கள்.

“ஒரு வார்த்த எங்கிட்ட சொல்ல மனசில்ல. அப்பறம் எதுக்கு நான் வரணும். நீங்க போங்க நான் தடுக்கல. என்னெ மட்டும் கூப்புடாதீங்க” என்று ஐந்து நாள்வரை பிடிவாதம் பிடித்தாள்.

“எனக்காக வா. மத்தவங்க தப்பு செய்யட்டும், நீ செய்ய வேண்டாம். ப்ளீஸ்” என்று அசோக் கெஞ்சினான்.

‘ஒன் புருசன்கிட்ட சொன்னா, ஒங்கிட்ட சொன்ன மாதிரிதான?’ என்று கேட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில், பெயருக்குப் போய்வருவோம் என்று போனாள்.

“குழந்த தூங்குது அப்பறம் பாக்கலாம்” என்று மருத்துவமனையின் வெயிட்டிங் ஹாலில் உட்கார வைத்துவிட்டார்கள். ரொம்ப நேரம் கழித்தும், ‘குழந்தையை வந்து பார்’ என்று யாரும் சொல்லாததால், “நான் வீட்டுக்குக் கிளம்புறன்” என்று சொன்ன பிறகுதான், “ஒரு நிமிஷம் பாத்திட்டுப்போ” என்று அசோக்கின் அம்மா கூப்பிட்டாள். குழந்தையை எடுத்து கையில் கொடுத்தாள். குழந்தையைக் கையில் வாங்கி ஐந்து நிமிசம்கூட ஆகியிருக்காது. விஜியின் மாமியார் வந்து, “புள்ள பால் குடிச்சி ரொம்ப நேரமாச்சி, பசியில கத்தப் போவுது, பால் கொடுக்கணும்” என்று சொன்னாள். விஜியின் மாமியார், எதற்காகச் சொன்னாள், எந்த அர்த்தத்தில் சொன்னாள் என்பது தெரிந்ததும் ஒரு நொடிகூட தாமதிக்காமல் குழந்தையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டாள். வீட்டுக்கு வரும்வரை அழுதுகொண்டே வந்தாள்.

“சின்ன விஷயம் எதுக்காக எமோஷனல் ஆவுற? விடு, ப்ளீஸ் சங்கீதா” என்று அசோக் சொன்ன சமாதான வார்த்தைகள் எதையும் அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அன்றிரவும் சங்கீதாவுக்கும், அசோக்குக்கும் கடுமையான சண்டை நடந்தது. அசோக் சம்பந்தப்பட்ட உறவினர்களின் யார் யார் வீட்டு விசேஷத்திற்கெல்லாம் போய் எப்படியெல்லாம் அசிங்கப்பட்டாள் என்பதையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டினாள்.

“நமக்கு மட்டும் குழந்த பெத்துக்க ஆச இல்லியா? வேணுமின்னா செய்யுறம்? எதுக்காக ஜனங்க இப்படிச் செய்யுறாங்க? அசிங்கமா இருக்கு” என்று சொல்லிவிட்டு அன்றிரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தாள்.


செல்போன் மணி அடிக்கிற சத்தம் கேட்டது. யாராக இருந்தாலும் அப்புறமாகப் பேசிக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு படுத்திருந்தாள். மூன்றாவது முறையல்ல, நான்காவது முறையும் மணி அடித்த சத்தம் கேட்டதும் சங்கீதாவுக்குச் சந்தேகம் வந்தது. அசோக் கூப்பிடுகிறானோ?

மூன்று வாரத்திற்கு முன்பு எப்போதும் போவதுபோல ஆறு மணிக்கே, “கொஞ்சம் அவசர வேல இருக்கு. வெளிய போயிட்டு வந்திடுறன்” என்று சொல்லிவிட்டுப் போன அசோக் பத்து மணிவரை வீட்டுக்கு வரவில்லை. போனில் கூப்பிட்டாலும் எடுக்கவில்லை. பயந்துபோய், தொடர்ந்து போன் போட்டுக்கொண்டே இருந்தாள். அப்படியும் எடுக்காததால் அவனுடைய நண்பர்களுக்கு போன் போட்டு விசாரித்தாள். எல்லோருமே, ‘தெரியல’ என்று சொன்னதால் பயந்துபோய் அபார்ட்மெண்டின் வாசலுக்கே வந்து, அசோக் வருகிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். பதினோர் மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கினான். நெற்றியில் காயம், இரண்டு உள்ளங்கைகளிலும் காயம், இரண்டு முட்டிகளிலும் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்திருந்ததைப் பார்த்ததும், மிரண்டுபோய், “ஆக்சிடெண்டா?” என்று கேட்டாள்.

“மேல போயிப் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு லிப்டில் ஏறி வீட்டுக்குள் வரும்வரை என்ன நடந்தது என்று ஒருவார்த்தைகூட சொல்லவில்லை.

“வாங்க ஆஸ்பிட்டலுக்குப் போகலாம்” என்று கூப்பிட்டதற்கு, “மைனர் ஆக்சிடெண்ட்தான், தூங்கினா எல்லா சரியாப் போயிடும்” என்று சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டான். நிதானமில்லாத அளவுக்கு போதையிலிருந்த அசோக்கின் பேண்ட், சட்டை என்று கழற்றிப்போட்டாள். காயம் இருந்த இடங்களை எல்லாம் சுத்தப்படுத்தி மருந்துபோட்டுவிட்டாள். சங்கீதா அழுததைப் பார்த்துவிட்டு, “ஒலகத்தில யாருக்கும் ஆக்சிடெண்டே நடந்ததில்லியா?” என்று கேட்டான்.

“வண்டி என்னாச்சி?”

“ஒர்க்‌ஷாப்ல விட்டிருக்கன்.”

“போன் என்னாச்சி? நெறய முற கூப்பிட்டன். எடுக்கவே இல்ல.”

“செல்போன் கீழ விழுந்திடுச்சி. கடயில கொடுத்திருக்கன்.”

“யாராவது வந்து வண்டியில் இடிச்சிட்டாங்களா?”

“என்னெத் தூங்கவிடு” என்று சொல்லிவிட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டான். அன்றிரவு சங்கீதா சாப்பிடவில்லை. இரண்டு மணிவரை அழுதுகொண்டேயிருந்தாள் என்பது அவனுக்குத் தெரியாது. முன்பெல்லாம் சாதாரணமாகச் சின்ன தவறு செய்தால்கூட, “சாரி சங்கீதா” என்று பல தடவை சொல்வான். ஆனால், இப்போது பெரியபெரிய தவறுகளாகச் செய்கிறான். சாரி சொல்லாததோடு முறைக்கிறான். திட்டுகிறான், அடிப்பதற்கு வருகிறான். காதலிக்கும்போது, “குருத்து வர வாழை எல மாதிரி இருக்க” என்று சொன்னான். இப்போது ஒன்பது மாதமாக, “ஒன்னெ எனக்குப் புடிக்கலா, என்னெ விட்டு போயிடு” என்று ஒரு நாளைக்குப் பலமுறை சொல்கிறான்.

மறுநாள் சாயங்காலம் மோட்டர் பைக்கை எடுத்துக்கொண்டு வந்தான். பைக்கைப் பார்த்த சங்கீதா “ஆக்சிடெண்ட் ஆன வண்டி மாதிரி தெரியலியே?” என்று கேட்ட பிறகுதான் அசோக், “நேத்து ராத்திரி வர வழியில ஒண்ணுக்குப் போகணும்போல இருந்துச்சி. வண்டிய நிறுத்திட்டு ஓரமாப் போயி நின்னன். கால் லேசாகச் சறுக்கிடுச்சி, பள்ளம் இருந்திருக்கு, போதையில தெரியல, குப்புற விழுந்திட்டன். பத்தடி பள்ளம். இருட்டுல தெரியல. செல்போன் எங்க விழுந்துச்சி, பர்ஸ் எங்க விழுந்துச்சினு தெரியல. மேல ஏறி வர்றதே சிரமமாயிடிச்சி. காலயில போய்தான் எடுத்துட்டு வந்தன்” என்று அசோக் சாதாரணமாகச் சொன்னதைக் கேட்டு அசந்துபோனாள்.

“இனிமே ஆன்லைனிலியே ஆர்டர் பண்ணி வீட்டுலியேகூட குடிங்க. ப்ளீஸ், ஒயின் ஷாப்புக்கு மட்டும் போகாதீங்க” என்று கெஞ்சியதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. ‘அன்று நடந்த மாதிரி இன்றும் குடித்துவிட்டு எங்காவது விழுந்து கிடக்கிறானோ?’ என்ற பயம் வந்ததும் வேகமாக எழுந்து செல்போன் எங்கே இருக்கிறது என்று தேடினாள். சோபாவுக்குப் பக்கத்தில் வைத்திருந்த தோள்பையிலிருந்து சத்தம் கேட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. அவசரமாக செல்போனை எடுத்து கூப்பிடுவது யார் என்று பார்த்தாள். அவளுடைய தங்கை சுபஸ்ரீ என்று தெரிந்ததும், “ஹலோ” என்று சொன்னாள்.

“என்ன, இத்தன முற கூப்பிடுறன், எடுக்கலா. வேலயா இருக்கியா?”

“தூங்கிட்டன்” என்று சொல்லி முடிப்பதற்குள், “என்னோட பையனுக்கு கேந்திரவித்யாவில பிரி கேஜி சீட் கெடச்சியிருக்கு. அதச் சொல்லத்தான் கூப்பிட்டன்.”

“கன்கிராட்ஸ்” என்று சொன்ன சங்கீதா, “அம்மாகிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டாள்.

“இனிமேதான் சொல்லணும். ஒனக்கு என்னாச்சி? ஒடம்பு சரியில்லியா?”

“எப்படி சீட் கெடச்சிது.”

“ஒரு எம்.பி.கிட்ட நாலு லட்சம் கொடுத்தன்” என்று சொல்லி சுபஸ்ரீ சிரித்த சத்தம் கேட்டது. அவளுடைய சிரிப்பில் நான்கு லட்சம் கொடுத்தது பெரிய விஷயமில்லை. சீட் கிடைத்ததுதான் பெரிய விஷயம் என்பது தெரிந்தது.

“நாலு லட்சமா?”

“ரெண்டாயிரத்து இருபத்திரெண்டுலே நாலு லட்சம் பெரிய பணமா?”

“ஓ.கே., இப்ப நான் கொஞ்சம் பிஸியா இருக்கன். வை. கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக போனை கட் செய்தாள் சங்கீதா.

சங்கீதாவுக்கு உட்கார வேண்டும்போல் இருந்தது. ஹாலைப் பார்த்தாள். மீன் தொட்டி, கல்யாண புகைப்படம், தொலைக்காட்சிப் பெட்டி என்று அனைத்தும் உடைந்து கிடப்பதையும், தண்ணீர் கொட்டியிருப்பதையும் பார்க்கபார்க்க அழுகை வந்தது. “எனக்கு இப்ப பெரிய வீடு கட்டணும், கார் வாங்கணும், பணம் சேக்கணும்னு எந்த ஆசயும் இல்ல. செத்து போகணும்னு மட்டும்தான் ஆசயா இருக்கு, என்னயே நான் சாவடிச்சிக்க விரும்புறன். அதனாலதான் பாக்கெட் பாக்கெட்டா சிகரெட் குடிக்கிறன், பாட்டில் பாட்டிலா பிராந்தி குடிக்கிறன். என்னோட சாவ நானே உண்டாக்கிகிட்டிருக்கன். அதயும் வேகமாச் செய்யுறன்” என்று நேற்றிரவு அசோக் சொன்னது நினைவுக்கு வந்ததும், “மனநோய்க்கு மருந்தில்ல” என்று சொல்லி முனகினாள். பிறகு படுக்கை அறைக்குள் வந்து படுத்துக்கொண்டாள்.

போன் மணி அடிக்கிற சத்தம் கேட்டது. யார் கூப்பிடுவது என்று பார்த்தாள். தன்னுடைய அம்மா என்று தெரிந்ததும், போனை எடுக்காமலேயே விட்டுவிட்டாள். அம்மாவிடம் சொல்லலாமா என்று யோசித்தாள். போன் செய்த ஒவ்வொரு முறையும், நேரில் பார்க்கிற ஒவ்வொரு முறையும், “ஒனக்குப் பின்னாடி கல்யாணம் கட்டுன நம்ப சுபஸ்ரீக்கு ரெண்டு குழந்த பிறந்துடுச்சி, நீ ஒண்ணும் இல்லாம இருக்கியே. டாக்டரப் பாத்தா என்ன?” என்றுதான் கேட்பாள். “பேசாம இரு. இப்ப என்ன அவசரம்?” என்று ஒரு வார்த்தைதான் சங்கீதா பேசுவாள். மருத்துவமனைக்குப் போகிற விஷயம், அசோக்குக்கு இருக்கிற பிரச்சினை என்று எதையும் இன்றுவரை சொன்னதில்லை. ஒன்பது மாதமாக அசோக் செய்கிற அட்டகாசத்தைக்கூட அவள் சொன்னதில்லை.

காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்டது. அசோக் திரும்பி வந்துவிட்டானா என்று யோசித்துக்கொண்டே எழுந்துவந்து கதவைத் திறந்தாள். எதிர்வீட்டின் முன் ஒரு ஆள் நின்றுகொண்டிருப்பது தெரிந்ததும் கதவைச் சாத்தினாள். திரும்பி படுக்கை அறைக்குப் போகும்போது கண்ணாடி சில்லு ஒன்று காலில் குத்தி ரத்தம் வந்தது. கண்ணாடி சில்லைப் பிடுங்கிப்போட்டுவிட்டு, வழிந்த ரத்தத்தைத் துடைத்தாள். ‘இந்த நாள எப்படி நான் மறப்பன்?’ என்று யோசித்த சங்கீதாவுக்கு, “குட் பை ஃபார் எவர்” என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்போல இருந்தது. “ஒருநாள் அது நடக்கும்” என்று பல்லைக் கடித்துக்கொண்டே சொன்னாள். “வாழ்க்கங்கிறது இதான் போல. கர்ப்பப்பையில பிரச்சினன்னாலும் பொம்பளதான் சாக வேண்டியிருக்கு, விந்தணுவில் பிரச்சினன்னாலும் பொம்பளதான் சாக வேண்டியிருக்கு” என்று சொல்லிவிட்டு தரையில் உடைந்து கிடந்த மீன் தொட்டியின் கண்ணாடி சில்லு ஒன்றை எடுத்து சுக்குநூறாக உடையும்படி ஓங்கித் தரையில் அடித்தாள். பிறகு அழ ஆரம்பித்தாள்.

– உயிர்மை செப்டம்பர் 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *