மனசுதான் மௌனமாகுமா? கொலுசுதான் பேசுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 4,080 
 
 

சுற்றும் முற்றும் பார்த்தாள் தாமரை. யாரும் இல்லை என்று தெரிந்ததும் அலமாரியைத் திறந்து , துணிகளைத் தள்ளி பின்னால் மறைத்து வைத்திருந்த சாயம் போன சாக்லேட் டப்பாவைத்திறந்து , அதிலிருந்த காசைக் கொட்டி எண்ண ஆரம்பித்தாள்.

கசங்கிய சில அம்பது ரூபாய். பத்து ரூபாய் நோட்டுகள். நிறைய ஐந்து. இரண்டு.. ஒரு ரூபாய் நாணயங்கள்.

எத்தனை முறை எண்ணினாலும் ஆயிரத்து ஐநூறைத் தாண்டவில்லை.

தாமரையின் கண்ணிலிருந்து கண்ணீர்த் துளிகள் விழவா..வேண்டாமா…என்று அவளுடைய பதிலுக்கு காத்திருந்தது..

‘ச்சே.. இப்படி ஒரு சன்மம் தேவையா.?’

ஏதோ சத்தம் கேட்கவே அவசர அவசரமாய் பெட்டியை மூடி துணிகளுக்கு பின்னால் முன்னிருந்த மாதிரி திணித்து விட்டு வாசலுக்கு வந்தாள்..

“என்ன புள்ள.. என்ன பண்ணிக்கிட்டு இருக்க.எம்மா நேரமா கத்தி கத்தி தொண்டதண்ணி வரண்டு போச்சு.. கொஞ்சம் தண்ணி எடுத்தா..!!”

பக்கத்து வீட்டு ஆயா.பாப்பாத்தி கிளவி..

“ஆமா.. அடுப்படியில வேலையா இருந்தேன். என்ன விசயம் ஆயா?”

“நம்ப அஞ்சலி பாப்பா குத்த வச்சிட்டா..!”

“என்ன ஆத்தா சொல்ற. பத்து முடிஞ்சு பதினொண்ணு போன மாசந்தானே ஆச்சு.”

“நான் என்னத்த சொல்ல.? ஒரே அழுவாச்சி. நீதான் கண்ணு வரணும். ஆத்தாக்காரியக் கூட்டிட்டு வர கோவாலு போயிருக்கு.”

கதவை சாத்திவிட்டு உடனே கிளம்பினாள் தாமரை..

குமரன் குடியிருப்பு அந்த பகுதியில் புதிதாக முளைத்த குடிசைகள். சுமார் முப்பதுவீடுகள்.

ஒண்ணுக்கொண்ணு. தாயாய் பிள்ளையாய்.. யாரும் யாரையும் விட்டுத் தர மாட்டார்கள்.

பத்து நாளும் அஞ்சலியின் வீடே கதியென்றிருந்தாள் தாமரை.

மஞ்சள் நீராட்டு விழா..

பளபளவென்று அஞ்சலி பாப்பாவின் கால்களில் ஜொலித்துக் கொண்டிருந்த கொலுசிலிருந்து கண்ணை எடுக்கவில்லை தாமரை.

“மாமா வாங்கிக் குடுத்திச்சு..வள்ளிசா ஏழாயிரம்.”

நடக்கும் போது ‘ஜல் ஜல் ‘என்று காதில் நர்த்தனமாடியது கொலுசு..

இதுதான். இதேதான்.

தாமரையின் ஐந்து வருஷக் கனவு…

அப்பா முகம் பார்க்காமலே வளர்ந்த எத்தனையோ துரதிருஷ்டாலி குழந்தைகளில் தாமரையும் ஒருத்தி.. தாத்தா. பாட்டி தான் எல்லாம்..

காலையில் நேரத்தில் எழுந்திருந்து வேலைக்கு போகும் அம்மா முகத்தை விட இருபத்து நாலு மணியும் கூடவே இருக்கும் ஆயாவின் முகம் தான் அதிகம் பரிச்சியம்.

பத்தே மாசத்தில் நடந்தாள் தாமரை. அடுத்த நாளே அவள் காலில் மின்னியது கொலுசு.

“ஏ.பவுனு.இங்க பாரு என் ராசாத்தி குட்டிய..!!”

நடக்க நடக்க ஓடிப்போய் தூக்கிக் கொஞ்சுவார் தாத்தா.

“ஐய்யே. செத்த நடக்கவுடுங்க பிள்ளைய. கொலுசையும் கால்ல போட்டு..இடுப்பில தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா.?”

உண்மையிலேயே தாமரையின் பாதங்கள் தாமரை மலர்கள் தான்.

குழந்தை வளர வளர தாத்தா அலுக்காமல் கடையில் போய் புதிதாக ஒரு ஜோடி வாங்கிவிடுவார்.

ஒரு நாள் கூட கொலுசு இல்லாமல் இருந்ததே இல்லை.

இதெல்லாம் இப்போது பழங்கதை.ஆத்திர அவசரத்துக்கு கொலுசையும் விற்றாகிவிட்டது.

“ஆமா. உங்க அய்யாதான் உன்னிய கெடுத்து வச்சாரு..இங்கே சோத்துக்கே வழியக்காணுமாம்.இதுல கொலுசு ஒண்ணுதான் கொறையா நிக்குது.”

தாமரைக்கு கொலுசு இல்லாத தன் பாதங்களைப் பார்க்கவே வெறுப்பாயிருக்கும்.

எப்படியாவது ஒரு ஜோடி கொலுசு வாங்க வேண்டும் என்பதுதான் இப்போதைய லட்சியம்..

“ஏண்டி அமுதா. இந்த கொலுசு எம்புட்டுடி.?”

“அக்கா..இது வெல கொஞ்சம் எச்சுதான்..ஆறாயிரம்னு சொல்லிச்சு எங்கப்பா..! ஏங்க்கா. கொலுசு வாங்கணுமா.?”

“ஆறாயிரமா..? அம்மா என்னிய கொண்டேபுடும்..”

“அக்கா..ரண்டாயிரத்தில கூட இருக்குதுக்கா.ஆனா சலங்க வேணுமின்னா கொறஞ்சது ஐயாயிரம் வேணும். “

ம்ம்ம்.. இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்.??

தாமரைக்கு கோபம் கோபமாய் வந்தது.

ஆறாயிரம் சேர்வதற்குள் கிழவியாகி விடுவேனே.

கிழவி கொலுசுடன் நடப்பது வேடிக்கையாயிருந்தது. தாமரைக்கு சிரிப்பாய் வந்தது.!!!!!

ஓரளவுக்கு மனசை திடப்படுத்தி கொண்டு ஒரு இரண்டாயிரத்துக்கு இறங்கி வந்தாள்…

சலங்கையும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம்.கெட்ட கேட்டுக்கு சாதா கொலுசு பத்தாதா…?

தாமரைக்கு கல்யாணம்.தூரத்து சொந்தம்..முத்தரசனுக்கு நிரந்தர வேலையென்று ஒன்றும் இல்லை. எப்படியும் பிளம்பிங் வேலையில் மாசம் ஆறாயிரம் குறையாது என்றான்.

ஒருவிதத்திலும் தாமரைக்கு ஈடில்லைதான்..ஆத்தாக்காரி அல்லிக்குத்தான் அவசரம்..

ஆங். இதைவிட சுவாரசியமான விஷயம் ஒன்று இருக்கிறதே.

சிறுகச் சிறுக சேர்த்த பணத்துடன் அங்கே இங்கே பிரட்டி. கல்யாண செலவோடு..கடனோ உடனோ வாங்கின கையோடு. காலுக்கு சலங்கை வைத்த கொலுசை வாங்கிக் கொண்டு விட்டாள் தாமரை. ஜன்மமே சாபல்யம் ஆனமாதிரி!

கல்யாணம் முடிந்தது.நாள் குறித்து வீட்டைஓரளவுக்கு ஏரக்கட்டி.தாமரைக்கும்.. முத்துவுக்கும் கட்டில்..மெத்தையை அலங்காரம் பண்ணிக் குடுத்து விட்டு பாப்பாத்தியை கிளவி வீட்டில் போய் அல்லி படுப்பதாய் ஏற்பாடு.

***

‘தாமரை.வா. என்ன வெக்கம் எஞ்செல்லத்துக்கு. பக்கத்தில உக்காரு கண்ணம்மா..!

எதிர் பார்க்காமல் சட்டேன்று அவள் காலைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறான் முத்து.

“ஜல் ஜல் னு நீ நடந்துவரயில ‘இவ எனக்கா. எனக்கு மட்டுமான்னு மனசு தாளம் போடுது.. இந்த பட்டுக் காலுக்கு. எவன் கண்டுபிடிச்சானோ இந்த கொலுச..”

“ஐய்யோ. மச்சான். விடுங்க.. காலத் தூக்கி மடியில வச்சிக்கிட்டு..”

நாணத்தில் நெளிந்தாள் தாமரை.. வெட்கத்தில் கன்னம் சிவந்தது..

அப்புறம்..அப்புறமென்ன.. கொலுசு தான் பேசியது….!

***

“ஏய்..தாமர. என்ன கனா கண்டுகிட்டு திரியிர.அவுக வர நேரமாச்சு. போய் அடுப்படில பாலக் காச்சி வை.”

முத்துவின் வீட்டிலிருந்து நாலைந்து பேர். சடங்கு முடிந்ததும் எல்லோரும் புறப்பட்டு போய் விட்டார்கள்.

‘பாத்து நடந்துக்க பிள்ள..! தாமர.’

பெண் காதில் ஓதிவிட்டு இடத்தை காலி பண்ணினாள் அல்லி.

தாமரைக்கு கைகாலெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது..

“கதவ மூடி தாப்பா போடுடி.. என்ன முழுச்சுகிட்டு நிக்கிற..”

கரகரத்த.அதிகார.ஆணவக்குரல்.

நிச்சயமாக அவள் கனவில் ஒலித்த குரல் இது இல்லை..

“என்னடி..அது..கால்ல. ஊர்ப்பயலுகளையெல்லாம் ‘என்னப் பாரு.எங்காலப் பாரு’ ன்னுட்டு..ச்சே. நல்ல குடும்பத்து பொம்பளயா நீயெல்லாம். முதல்ல அத கழட்டி கடாசுடி..”

சொன்னதும் நிக்காமல் கொலுசைப் பிடித்து இழுத்தான். திருகாணி கழண்டு கொலுசு கையோடு வந்தது..தூக்கி வீசி எறிந்ததில் பீரோவுக்கு அடியில் போய் விழுந்தது.

தாமரை பேயறைந்த மாதிரி நின்றாள். ஒற்றைக் கால் கொலுசுடன் கண்ணகியானாள்.. எங்கிருந்து வந்தது அந்த ஆத்திரம். கோபம் எல்லாம்.

தனது மெட்டியையும் கழட்டி வீசினாள்.. தாலியைக் காட்டி…

“இதையும் கழட்டி வீசு மச்சான்.”

ஒரே அறை. பளாரென்று அவள் கன்னத்தில் விழுந்தது..அவளை அப்படியே பிடித்து இழுத்து வெறி கொண்ட மட்டும் அணைத்தான்.

சாராய நெடி.தாமரைக்கு குமட்டியது. இதழ் இதழாக அந்த தாமரை மலரைப் பிய்த்து.கசக்கி.முகர்ந்து.தூக்கி தூர எறிந்தபின்தான் அவன் வெறி அடங்கியது.!!!!

தாமரையின் கன்னம் இன்று சிவந்தது வெட்கத்தினால் இல்லை..!!!!!!

தாமரை அழவேயில்லை.அன்று மட்டுமில்ல. அதற்கப்புறம் ஒரு நாளும்.!!!!!

அவளுக்கு புரிந்து விட்டது. அவனால் மது இல்லாமல் அந்த மாதுவைத் தொட தைரியமில்லை. அவன் ஒரு மனநோயாளி.கோழை.!! !!!

தாமரை அம்மாவிடம் மூச்சு விடவில்லை.. முத்துவைப் பற்றி திருமணத்துக்கு முன்னால் தெரிய வேண்டிய உண்மையெல்லாம் , திருமணத்துக்கப்புறம்தான் தெரிந்தது..

குடிகாரன்..கோபக்காரன்.. ஏற்கனவே திருமணம் என்ற உரிமையில் இரண்டு பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்தவன். பெண் பித்தன்…

தாமரை கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்..அவனே ஒரு நாள் அவளை விட்டுக் காணாமல் போனான். தாமரை நேராய் காவல் நிலையம் சென்றாள்

தனக்கும் முத்துவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், தன்னைத் தொந்தரவு செய்தால் அவனை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என்றும் எழுதிக் கொடுத்து விட்டு வந்தாள்.

முத்து தூக்கி எறிந்த அந்த வினாடியே தாமரையும் மனதிலிருந்த கொலுசு ஆசையைத் தூக்கி எறிந்துவிட்டாள்.

“விடு பிள்ள..வயத்தில வாங்காம போனபடி திரும்ப வந்தியே..போதும்டா சாமி.”

கொஞ்ச நாள்தான். மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள் ஆத்தாக்காரி..

“நம்ப மாணிக்கத்த நேத்து சந்தையில பாத்தேன்..

கொழுந்தியாளோட வீட்டுக்காரருக்கு ஒண்ணு விட்ட தம்பி.. பெண்டாட்டி போய் ஒரு வருஷமாச்சு.. மூணு வயசுல ஒரு பொம்பள புள்ள.நல்ல பையன்.தாமரைய கேளுன்னு. “

“ஆத்தா…. வாயப் பொத்திகிட்டு கம்முனு கெட. கல்யாணப் பேச்சு எடுத்த.நடக்கிறதே வேற”

ஒரு வருஷம் வீட்டிலிருந்து தாமரைக்கு அலுத்து விட்டது.

மங்களத்துக்கு இந்த கார்த்திகை வந்தால் தொண்ணூறு வயது பூர்த்தியாகிறது..எண்பத்தைந்து வயது வரை உழைத்து ஓடாய்த் தேய்ந்த சரீரம்..

அப்பா ராஜம் ஐயர் தஞ்சாவூர் ஜில்லாவில் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்தவர்.ஒரே பெண் மங்களம்.

சீரும் சிறப்புமாய் தியாகராஜனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்து மாம்பலத்தில் ஒரு சின்ன வீட்டையும் சீதனமாய்க் குடுத்தார்.

வீடு சின்னது தான். ஒரு ஹால். சின்ன பெட் ரூம். பத்துக்கு பத்து.கீக்கிடமாய் ஒரு சமையல் கட்டு.சின்ன புழக்கடை. பாத்ரூம்.லெட்ரின்..அடிபம்பு..

தியாகு சுமாரான ஒரு வேலையில் தான் இருந்தார். மாமனார் சொத்து தாராளமா இருந்ததே.

கவலையில்லாத வாழ்க்கை.

மங்களத்துக்கும் ஒரே பெண்.உமாமகேஸ்வரி…கணவன் ஜெயராமன்.

அம்மாவின் சமத்து பெண்ணுக்கு இல்லையோ.அல்லது ஜெயராமின் அசட்டுத்தனமோ.. வரிசையாய் நாலு பெண்கள்.

பெரிய பெண்ணுக்கு பதிமூன்று
முடிவதற்கு முன்னால் ஜெயராமன் அல்பாயுசில் போய் விட்டான்..

மங்களம் பெண்ணை கூட்டிக் கொண்டாள்..

மங்களத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு இளகிய மனசோ அத்தனைக்கத்தனை
கர்வமும் ஜாஸ்தி.

தன் வீடு..தான்தான் எஜமானி..தன் பேச்சுக்கு மறுபேச்சு இருக்கக் கூடாது என்று எண்ணுபவள்.

சமையலறையை யாருக்கும் விட்டுத் தந்ததேயில்லை..தரையில் உட்கார்ந்தே எட்டூருக்கு சமைத்து விடுவாள்..

எல்லாம் எண்பத்தைந்து வயது வரைதான்.. கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து இப்போது படுத்த படுக்கையாகிவிட்டாள்.
தியாகுவின் காலமும் முடிந்து விட்டது…

ஒரு பேத்தி கல்யாணமாகி டில்லியில் ஓஹோவென்றிருக்கிறாள்.எப்போதாவது மனசிருந்தால் எட்டிப் பார்ப்பாள்.

அடுத்தவள் பிறக்கும் போதே இருதய நோய்.சரியாக பதிமூன்று வயதுதான் உயிரோடு இருந்தாள்.

மூன்றாவது செல்லி.உள்ளூரில் வாழ்க்கைப் பட்டவள்.. போதும் போதாத வருமானம்.. அடிக்கடி பாட்டி வீட்டிலிருந்து ஏதாவது சுரண்டிக் கொண்டு போவாள்..

கடைக்குட்டி பிரேமா.C.A. படித்துக்கொண்டு இருப்பவள்..

பாட்டிக்கு பெட்ரூமில் சின்ன கட்டில். பக்கத்தில் கண்ணாடி வைத்த மர அலமாரி..உள்ளே சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை..

கல் வைத்த ஒரு அட்டிகை தவிர.. அது பிரேமாவுக்காம்..இரண்டு ஃபிக்ஸட் டெபாசிட்.. பாட்டியின் சொத்தெல்லாம்தான் கரைந்து விட்டதே..!!!!

பாட்டிக்கு கண்தான் மங்கலே தவிர , பாம்பு காது. யார் பீரோவைத் திறந்தாலும் மூடினாலும் தெரியும்.

“யாரது.. யாரது.? என்று கேட்டே பிராணனை எடுத்து விடுவாள்..

பேத்தி பிரேமாவைத்தவிர யாரும் அந்த அறையை எட்டி கூட பார்க்க மாட்டார்கள்.உமாவுக்கு சமயலறையைக் கட்டிக் கொண்டு அழவே நேரம் போறாது.

ஓ..மறந்தேபோச்சு. இன்னொருத்தி இருக்கிறாளே..

பாட்டி கூடவே.பாட்டியைப் பார்த்துக் கொள்ள..தாமரை.. ஆம்.. நமது தாமரையே தான்…

ஒரு வருஷம் வீட்டிலிருந்து தாமரைக்கு அலுத்து விட்டது..

அல்லியுடன் இரண்டு மூன்று வீட்டு வேலை செய்து பார்த்தாள்.தினமும் ஒரே மாதிரி பெருக்கி துடைத்து. துணி துவைத்து. பாத்திரம் தேய்த்து. தாமரைக்கு ஒட்டவில்லை..

மங்களம் பாட்டியை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டுமென்றதும் ‘இப்படி ஒரு வேலைதான் நமக்கு வேண்டும் ‘என்று தீர்மானம் செய்து விட்டாள்.

காலயில்ஆறு மணிக்கே ஆஜர்.மங்களம் பாட்டியை ‘திருப்பள்ளியெழுச்சி’ பாடி எழுப்புவதே தாமரை தான்.இருட்டுவதற்குள் வீட்டுக்கு திரும்பி விடுவாள்.

இதோ ஒரு வருஷம் ஆகிவிட்டது.. பாட்டிக்கு மூச்சுக்கு முன்னுறு தாமரை தான்..

“தாமரைக்கு காப்பி குடுத்தியா..?

தேங்காத் துகையல மறக்காம எடுத்து வை.தாமரைக்கு பிடிக்கும்.!!!

ஆத்துக்கு போறதுக்குள்ள ஒரு அட வாத்துக் குடு. பாவம். பசிக்கும்.”

பாட்டியின் உலகத்தில் இப்போது தாமரை மட்டும்தான்..

பிரேமாவும் ‘அக்கா..அக்கா..’ என்று உயிராய் இருந்தாள்.

ஒரு நாள் விளையாட்டாய் தாமரையிடம்”அக்கா.. உங்க கால் ரொம்ப அழகு.. இத்தனை அழகான விரலை நான் பார்த்ததே இல்லை.

கொலுசு போட்டா சூப்பரா இருக்கும்..”

நன்றாக ஆறி பொருக்கு தட்டிய காயத்தில் தெரியாமல் கூரிய விரல் நகம் கீரினால் ஒரு வலிவருமே.அது மாதிரி ஒரு வலி.உயிரே போவதுபோல்..சுரீர் என்றது….

ஒரு வினாடி தான்.கொட்டித் தீர்க்கலாமா என்று தோன்றியது..

‘பாவம். சின்னப் பெண்.நிறைய கனவுகள் இருக்கும்.பயந்து விட்டால்.?’

“ம்ம்ம். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் கண்ணு.”

சொல்லிவிட்டாளேயொழிய இப்போது தாமரைக்கு மீண்டும் கொலுசு ஆசை துளிர் விட ஆரம்பித்தது..

ஒரு வருஷம் சம்பளத்தில் நிறையவே சேர்த்து வைத்திருந்தாள்.

தாராளமாய் சலங்கை வைத்த கொலுசே வாங்கலாம். கேள்வி கேட்பார் யாருமில்லை..

யாருக்கும் பயப்பட வேண்டாம்..நினைவே இனித்தது.!!!!

“யாருடி வரது. என்ன புதுசா கொலுசு சத்தம்.?”

பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்தாள் தாமரை.

“பாட்டி. நான்தான்..தாமரை.

புதுசா கொலுசு போட்டிருக்கேன்.”

தாமரையின் முகத்தை வழித்து சொடக்கு போட்டாள் பாட்டி..

“ஷேமமா இருடியம்மா. நல்ல ஆம்படையானா கெடைக்கட்டும்..”

இது நடந்து ஒரு வாரம் இருக்கும்..
பாட்டியிடம் தான் தாமரை எல்லா விஷயமும் பகிர்ந்து கொள்வாள்..

“பாட்டி.. அம்மாக்கு குடல் இறங்கியிருக்குதாம்.உடனே ஆபரேக்ஷன் பண்ணனும்னிட்டாரு டாக்டர். ரொம்ப கவலையாயிருக்கு பாட்டி.”

“ஐய்யய்யோ.நீ அப்போ வரமாட்டியா..?”

எல்லா வயதானவர்களுக்கும் வரும் கெட்ட குணமதான். சுயநலம். யார் எக்கேடு கெட்டாலும் தன் காரியம் நடந்தாகணும். ஒரு வித இன்செக்யூரிட்டி…

“பயப்படாதீங்க பாட்டி..நா உங்கள விட்டு எங்கயும் போகமாட்டேன்.அத்த வந்து ஒரு மாசம் இருக்கேன்னிருக்கு.”

“அப்புறம் என்னடி..?”

“நெறைய துட்டு செலவாகும்போலத் தெரியுது..”

“உமாகிட்ட ஆயிரம் ரூபா வாங்கிக்கோ.”

“அதெல்லாம் பத்தாது பாட்டி..கொறஞ்சது ஆறாயிரமாவது ஆகும்.. கவர்மென்ட் ஆஸ்பத்திரி வேணாங்குது அம்மா.”

“என்னமோடியம்மா..பாத்து செலவழிங்கோ.

இரண்டு நாள் கழித்து.. மதியம் மூன்று மணி இருக்கும்.

இந்த சமயம் பாட்டி சாப்பாடு முடிந்து அசந்து தூங்கிக் கொண்டிருப்பாள். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் பாட்டி எழுந்திருக்க…

அவளைத்தூங்க வைத்து விட்டு, தாமரை புழக்கடையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு. பாட்டி துணியைத் துவைத்து காயப் போட்டு விட்டு வருவாள்..

பீரோவைத்திறந்த உமா எதையோ குடைந்து கொண்டிருந்தாள். பிரேமா ஏதோ எழுதிக் கொண்டிருந்தவள் அம்மாவின் சத்தத்தை கேட்டு நிமிர்ந்தாள்..

“என்னம்மா அலறல்.பேயக் கண்ட மாதிரி கத்தற.”

“டீ..பிரேமா. அந்த நெக்லஸ எடுத்தியா ?”

“எந்த நெக்லஸ்.?”

“ஆமா. உள்ள நூறு நெக்லஸ் இருக்கு பாரு.அதாண்டி உனக்குன்னு ஒண்ணே ஒண்ணு.கண்ணே கண்ணுன்னு இருக்கேடி..”

“ஆமா.எனக்கே மண்ட வெடிக்கிற மாதிரி ஆயிரத்தெட்டு வேல இருக்கு. இதில நெக்லஸ எடுத்துப் போட்டு அழகு பாக்கறது ஒண்ணுதான் கொறச்சல்…”

“பிரேமா.இந்தப் பாருடி.பொட்டி காலியா இருக்கு. உள்ள ஒண்ணையும் காணம்..”

“அம்மா..கத்தாத. உள்ள எங்கியாவது விழுந்திருக்கும்..

நன்னா தேடிப் பாரு.”

“எனக்கு கையும் ஒடல.. காலும் ஓடல.. கொஞ்சம் வந்து தேடுடி.”

பட்டென்று எழுதிக் கொண்டிருந்ததை மூடிவைத்து விட்டு பிரேமா எழுந்து வந்தாள்.

பீரோவைத் தலைகீழாய் தேடியது தான் மிச்சம். நெக்லஸ் மாயமாய் மறைந்து விட்டது.

சத்தத்தை கேட்டு அசந்திருந்த மங்களம் எழுந்து விட்டாள்.

“என்ன.. என்ன.எதக் காணம்.?”

பாட்டியிடம் சொல்ல வேண்டாமென்று உமா சைகை காமித்தாள்.

உமாவா சும்மா இருப்பாள்.?

“அம்மா.பீரோல வச்சிருந்த நெக்லஸ காணும்..!!”

“என்னடி சொல்றே..காணமா.?”

பாட்டி எழுந்திருக்க எத்தனித்தாள்.

“அம்மா.நீ வேற ஊரக் கூட்டாத.என்னமோ புதயல பூதம் காக்கிற மாதிரி.

‘எவனும் என்ன மீறி பீரோ கிட்ட வருவானான்னு ‘ஜம்பமா சொல்லுவியே.பாரு.இப்போ நெக்லஸ காணம்.”

“அம்மா.. எதுக்கு பாட்டி மேல பாயற.”

உமா புலம்ப ஆரம்பித்தாள்.. அவள் புலம்பினால் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..

“சித்த இருடி.. எனக்கு லேசா ஞாபகம் வருது..நேத்து மத்யானம். நான் கொஞ்சம் கண்ணசஞ்சுட்டேன் போலஇருக்கு..

நீ பால்கார்டு வாங்கணும்னு போயிட்டியா.பிரேமாவும் எங்கியோ லைப்ரரின்னு சொல்லிட்டு போனா.!!!!

‘பாட்டி நா வாசக்கதவ வெறுமனே சாத்தி வச்சிருக்கேன்.உடனே வந்திடுவேன்.உமா அம்மா எந்நேரத்திலேயும் வந்துடுவேன்னு சொல்லிட்டு போனாங்க.

புழக்கட பக்கம் போறேன். நீங்க நிம்மதியா தூங்குங்க பாட்டி ‘ன்னு சொல்லிட்டு தாமர போய்ட்டா.

பந்து நிமிஷத்தில் கொலுசு சத்தம் கேட்டது..அப்புறமா பீரோ தொறக்கிற சத்தமும் கேட்டது.

எனக்கு அரத்தூக்கத்தில
ஞாபகம் இல்ல.எனக்கென்னமோ தாமரதான் எடுத்திருக்கணம்னு தோணறது.”

“பாட்டி. ஏதாவது சொப்பனம் கண்டியா..தாமரயச் சொன்னா நாக்கு அழுகிப் போயிடும்.அவ முன்னாடி எதையாவது உளறி வைக்காத.”

“ஏண்டி..பாட்டிய திட்ற. ஏன்.. தாமரை எடுக்கக் கூடாதா..?”

“அம்மா.தாமர நம்பாத்துக்கு வந்து ஒரு வருஷமாச்சு.எடுக்கணும்னா என்னிக்கோ எடுத்திருக்கலாம்.”

“பிரேமா.நீ இதுல தலையிடாத.. தாமரைக்கு இப்போ பணமுடை..அம்மா ஆபரேக்ஷனுக்கு பணமில்லைன்னு முந்தாநாள் தான் சொல்லி அழுதாள்.

நிச்சியம் அவதான்.. கூப்பிடு அவள. நான் நைச்சியமா கேக்கறேன்.

பாட்டி என்னமோ துப்பறியும் சாம்பு மாதிரி பேசினாள்..

“அம்மா.. பாட்டி தான்
சம்பந்தமில்லாம உளற்றானா. நீயும் சேந்து ஜால்ரா போடறியே. உங்களுக்கெல்லாம் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு…

சத்தம் கேட்டு தாமரையே வந்து விட்டாள்.

ஈரக்கையை சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டே..

“இங்க என்ன பஞ்சாயத்து நடக்குது..எம்பேரும் அடிபடுதே..!!!!!”

சிரித்துக் கொண்டே கேட்டாள் தாமரை.

“தாமரை.இங்க வா.எம்பக்கத்தில உக்காரு..

நேத்து மத்யானம் பிரேமாவும் உமாவும் வெளில போயிருந்தா இல்லையா. நானும் சித்த கண்ணசுந்துட்டேன்..
அப்போ நீ இந்த பீரோவத் தொறந்தியா.?

“இந்த பீரோவையா..இல்லியே. ஏன்.. எதுக்கு கேக்கறீங்க.?”

தாமரை குரலில் கொஞ்சம் கூட பதட்டமில்லை..

“அம்மா.. எடுத்தோம் கவுத்தோம்னு இப்படியா கேப்பா.

தாமர.. நான் ஒண்ணு கேப்பேன் தப்பா நினச்சுக்காத.பீரோல வச்சிருந்த ஒரு நெக்லஸ காணம்.பிரேமாவுக்கு இருக்கற ஒரே நகை.

பாட்டி சொல்றா..

மத்தியானம் நாங்க இல்லாத போது பீரோ தொறக்கற சத்தம் கேட்டுதாம்.கொலுசு சத்தமும் கேட்டுதுங்கறா பாட்டி..நீ நிச்சயமா எடுத்திருக்க மாட்ட.. ஆனாலும் ஒரு வேள பணக்கஷ்ட்டத்தில எடுத்திருந்தா சொல்லிடு… நாங்க உன்ன ஒண்ணும் பண்ண மாட்டோம்.!!!”

இதே கேள்வியைப் பாட்டி கேட்டிருந்தால் கூட தாமரை அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டாள்.

பாட்டி சிலசமயம் ‘திருடன் வந்தான்.ஜன்னல்ல எட்டிப் பார்த்தான்..என்று எதாவது கற்பனை செய்து கொண்டு ஏடாகூடமாய் பேசுவதுண்டு.

அவளிடம்’ பாவம் பாட்டி ‘என்ற பரிவே மிஞ்சும்..
ஆனால் உமா அம்மாவா. இப்படி ?

“அம்மா. நான் வேலைக்கு வரும்போதே ஆத்தா நிறையவே சொல்லித்தான் அனுப்பிச்சிருக்கு.

வேலைக்கு போற எடத்தில எந்த பொருள் காணாம போனாலும் முதல்ல நம் மளத்தான் சந்தேகப்படுவாங்க..நாம அதுக்கு எடமே குடுக்கக் கூடாது..

கேக்காம ஒரு குண்டூசி கூட தொடக்கூடாதுன்னு புத்திமதி சொல்லித்தான் அனுப்பிச்சிச்சு..

நான் எடுக்கலன்னு சொல்லக் கூட எனக்கு அவமானமாயிருக்கு..

உங்களுக்கு என்ன தோணுதோ செஞ்சுக்கங்க.நீ எடுக்கலடின்னு நீங்க சொல்ற வரைக்கும் நா எதுக்கும் தயார்..”

ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை!

வாசல் கதவு திறக்கும் சத்தம்.செல்லிதான்.கூடவே அவள் தலைப்பைப் பிடித்துக் கொண்டு மூன்று வயது பேத்தி ஆராதியா.

ஜல் ஜல் என்று கொலுசு சத்தத்துடன்.

“என்ன செல்லி.இப்போ வரமாட்டியே.. !!!

செல்லி கழுத்தைப் பார்த்த எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி. கழுத்தில் காணாமல் போன நெக்லஸ்.!!!!!

“என்ன ஆச்சு உங்களுக்கெல்லாம்? நேத்து ஒரு கல்யாண ரிசப்ஷன் போகவேண்டியிருந்து.இந்த நெக்லஸ் ஞாபகம் வந்தது. பாத்தேன். பாட்டி தூங்கிண்டிருந்தா. எடுத்தேன். இதோ இன்னிக்கு கொண்டுவந்து குடுத்துட்டேன்”

“ஆமா..உன்னோட யாராவது கூட வந்தாளா?”

“இந்த குட்டிப் பிசாசு விடுமா என்ன?”

மாயாஜால தந்திரகாட்சி போல் எல்லா முடிச்சும் வினாடியில் அவிழ்ந்தது.

“தாமர.தாமர….”

யார் குரலையும் கேட்காமல் போட்டது போட்டபடி ஓடினாள் தாமரை..தன் வீட்டில் வந்துதான் நின்றாள்..

வீட்டுக்கதவை திறந்தாள். பானையிலிருந்து ஒரு செம்பு குளிரிந்த நீரை கடகடவென்று குடித்துவிட்டு கட்டிலில் காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தாள். கொலுசைப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது..

“ஏய்.கொலுசே. நா ஒனக்கு என்ன துரோகம் பண்ணிப்புட்டேன்..ஆச ஆசயாத்தானே வாங்கி மாட்டினேன். உன்னிய நம்புனவுங்க என்னிய நம்பல பாத்தியா. இனிமே உனக்கும் எனக்கும் ஒத்து வராது. முதல்ல உன்ன தொலச்சிட்டுதான் மறுவேலை”

உள்ளே நுழைந்தாள் ஆத்தாகாரி.

“என்ன புள்ள.புத்தி கித்தி பேதலிச்சு போச்சா.? தனியா புலம்பிட்டு கிடக்க.”

“இல்ல ஆத்தா..இப்போதான் புத்தியே வந்தது”

நேராக சேட்டுக் கடைக்கு நடந்தாள்.

“என்ன தாமரை. என்ன பணமுடையா. போன வாரம் தானே கம்மல அடகு வச்ச!”

இரண்டு வெள்ளி கொலுசையும் எடுத்து வைத்தாள்.

“இத அடமானம் வச்சா ஒண்ணுமே தேறாதே.!”

“அடமானம் இல்ல சேட்டு…விக்கிறதுக்கு..!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *