வாணியின் சின்னக்கா பானுமதி முதல் பிரசவத்தின் போது வீட்டிற்கு வந்திருந்தாள் அவளுக்குக் குழந்தை பிறந்து ஒரு கிழமை கழித்து ஆசுபத்திரியை விட்டு அவள் வீடு திரும்பும் போது முற்றிலும் மாறுபட்ட குழப்பமான மனோ நிலைக்கு அவள் ஆளாகியிருந்தாள் பிரசவ நேரம் ஏற்பட்ட கடும் வலி குறித்து வாணிக்கு அவள் கதை கதையாகச் சொன்ன விடயங்களை வைத்துச் சுவராஸியமான ஒரு நீண்ட நாவலே எழுதி விடலாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது அவள் அதைப் பற்றிக் கூறிய வர்ணணைகள்.
ஓர் ஆணின் கண நேரச் சபலத்தின் விளைவாய் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிற அந்த உடல் தாங்காத மிகப் பெரிய வலியைத் தானே அனுபவித்து உணர்ந்து கொண்ட மாதிரி அதைக் கேட்ட நிமிடத்திலிருந்து வாணி சுய விழிப்பு நிலைக்கு மீண்டு வர வெகு நேரம் பிடித்தது தான் அனுபவித்த அந்தக் கடும் வலியையே மறக்க வைத்து மனம் குளிர்ந்து , மகிழ்ச்சி கொண்டாடுவதற்கே இறைவன் தனக்களித்த உன்னத பரிசாக மடியில் முலை சூப்பிக் கொண்டு கண்ணுறங்கும் குழந்தை கூட பானுவைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சமாகப் போனதில் அம்மா கொண்ட கவலையை விட வாணிக்கே அது பெரும் மன வருத்தத்தைத் தந்தது.
கல்யாணமாவதற்கு முன்பே சராசரி பெண்களை விட பானு ஒரு தனிப் போக்கு வாழ்க்கையின் உயிரோட்டமான சந்தோஷம் தருகின்ற உயிர் வெளியில் கலக்க விரும்பாத அறிவு பேதலித்த மந்த சுபாவம் அவளுக்கு உடல் சார்ந்த புற அழகு ஒன்றைத் தவிர வேறு எதையும் மனம் கொள்ள முடியாமல் தடம் புரண்ட சிந்தனைப் போக்கு அவளுடையது அதை ஆராதித்துத் தன்னை வழிபட ஒரு அன்பு யோகம் புரிகிற ஆண்மகனே தனக்குக் கணவனாக வர வேண்டுமென அவள் தவம் கிடந்து காத்துக் கிடந்ததெல்லாம் நிறைவேறுமா என்பதே கேள்விக் குறியாகி விட்ட நிலையில் தான் அவளுக்கு இந்த மேலான தாய்மையென்னும் தெய்வீகப் பதவி அதைப் புரிந்துகொள்ள மறுக்கிற அவளின் அழகையே மையமாக வைத்து வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிற அறிவு மந்தமாகிப் போன வரட்டுப் பிடிவாதத்திற்கு முன்னால் தெய்வீக வாழ்க்கை அம்சங்களின் ஒரு வரப்பிரசாதமாய் தனக்குக் கிடைத்த அக் குழந்தை கூட இரண்டாம்பட்சமாகி மறைபொருளாகிப் போனதில் அவளுக்குக் கவலை வராதது கூட மானுட தர்மநெறி முறைகளையே களங்கப்படுத்தும் ஒரு இழப்பாக நல்லதை மட்டுமே சிந்திக்கத் தெரிந்த வாணியின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வேளையில் தான் மற்றுமொரு மனதையே காயப்படுத்தும் ஒரு விபரீத சூழ்நிலைக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது.
அவர்கள் வீட்டில் மாமிசம் சமைப்பதில்லை சுத்த சைவம் தான் எல்லோரும் முட்டையையே கண்ணால் கண்டதில்லை நிலைமை அப்படியிருக்க திடீரென்று முட்டை கேட்டு பானு அடம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்த போது வீடே இரண்டுபட்டுப் போனது அவளை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் அம்மா வெகுவாகக் குழம்பிப் போனாலும் பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு முட்டை வாங்கி அவள் பொரியல் செய்த போது வீடு முழுவதும் பரவிய அந்த வெடுக்கின் வாசனையில் வயிறு குமட்டி ஓங்காளிக்க நிலை குலைந்து போன வாணி அம்மாவிடம் ஓடி வந்து குழம்பிய குரலில் கூறினாள்.
“என்னம்மா இது அவள் கேக்கிறாளென்று நீங்களும் சமைக்க வந்திட்டியள் அதுவும் முட்டை இந்த மணத்தோடை இனி நான் சாப்பிட்ட மாதிரித் தான் ஐயோ மணக்குது “என்றாள் மூக்கைப் பொத்திக் கொண்டு
“வாயை மூடு எப்பவும் ஒன்றைக் கதைக்கேக்கை நல்லாய் யோசிச்சுக் கதைக்க வேணும் இது உன்ரை அக்காவின்ரை ஆசைக்கு உன்னை ஆரும் சாப்பிடச் சொல்லேலை இவ்வளவு தூரம் நீ அருவருக்கத் தொடங்கினால் ஒரு வேளை உனக்கு மீன் சாப்பிடறவன் புருஷனாய் வந்திட்டால் அப்ப என்னடி பண்ணுவாய்?”
“உது நடக்காதம்மா எனக்கு ஒரு சைவக்கார மாப்பிள்ளை தான் வேணும் அது நடக்கிற வரைக்கும் எவ்வளவு காலமாலும் நான் காத்திருக்கத் தயார் அப்படி ஒரு வேளை அதுக்குப் பஞ்சமென்றால் நான் காலம் முழுக்கக் கன்னியாகவே இருந்திட்டுப் போறேனே எனக்கு அப்படி ஒரு கல்யாணம் வேண்டவே வேண்டாம் இதை விட உயிரை விட்டு விடலாம் “
அவளின் வாழ்க்கை ஞானம் பிடிபடாத சிறுபிள்ளைத்தனமான பேச்சைக் கேட்டு மேலே ஒன்றும் பேசத் தோன்றாமால் அம்மா மெளனமானாள் பானு கூட இப்படித் தான் தன் எதிர்கால வாழ்க்கை பற்றி மனம் போனபடி கனவு கண்டதெல்லாம் பொய்த்துப் போய் அவளின் உணர்வுகளையே புரிந்து கொள்ளத் தவறிய ஒரு முரட்டுக் கணவனோடு தான் இப்போது அவளுக்கு வாழ்க்கை என்ற எரிகளம் அவனின் வரட்டுப் போக்கான உடற் பசிக்கு ஆளாகி ஒரு குழந்தைக்கும் அவள் தாயாகிப் போன நிலைமையில் தான் அதை ஒரு அனுபவ ஞானமாக உணர்ந்து கொண்ட பிறகும் வாணி தன்னளவில் ஒரு நீதியை நிலை நிறுத்திக் கொண்டு தனது உணர்வுகளைப் பங்கமுற்றுப் போகாமல் காப்பாற்றி வாழ வைப்பதற்காக ஒரு யோகபுருஷன் வந்து சேருவான் என்று என்ன நம்பிக்கையை மனதில் வைத்துக் கூறுகிறாளென்பது பிடிபடாமல் அம்மா வெகுவாகக் குழம்பிப் போனாள்.
அவளோடு எதிர்வாதம் செய்தால் வீண் தர்க்கம் தான் வளரும் அவள் நினைத்ததற்கு மாறாக எதுவும் நடந்து விடக் கூடாதே என்று பிராத்தனை செய்ய மட்டும் தான் அம்மாவால் முடிந்தது அவளுக்காக ஒரு சைவக்கார மாப்பிள்ளையைத் தேடுவதென்பது அப்பாவைப் பொறுத்த வரை பெரும் சவாலாகவே இருந்தது அதிலும் நடுத்தரக் குடும்பமாக இருப்பதால் காசை வாரி இறைத்தாவது அப்படி ஒரு அபூர்வ புருஷனை வாங்கவும் முடியாது அவர்களால் கடைசியில் கடைந்து எடுத்த சைவப் பழம் கனிந்து வருவதற்குப் பதிலாகப் புலால் உண்டு மிருக வெறி தலை தூக்கும் ஒருவன் தான் அவளுக்குக் கணவனாக வந்து வாய்த்தான் இதை அவள் விரும்பவில்லைத் தான் எனினும் தனது கொள்கைகளை நடை முறை உலகின் போக்குக்கு இணங்க விட்டுக் கொடுத்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தப் பொறிக்குள் சிக்கிய பின் அவள் வேறு என்ன தான் செய்வாள்?
என்ன நிலை வந்தாலும் வாழ்க்கையைக் கழிக்கிறது ஒரு கை தேர்ந்த தவம் மாதிரி அவளுக்கு அவள் ஓரளவு வசதி படைத்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வாழ்க்கைப்பட்டதென்னவோ மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதோடு குணநலன்களிலும் திரிந்து கறைபட்டுப் போன நட்த்தைக் கோளாறு கொண்ட கடை நிலை மனிதர்கள் தாம் அங்குள்ள அனைவரும் அவளுக்குக் கணவனாக வந்து வாய்த்த மணிவண்ணன் மட்டும் இதற்கு விதி விலக்கல்ல அவனுக்குக் கை நிறையச் சம்பளம் வராத வெறும் கிளார்க் வேலை தான் அதை ஒரு கர்மயோகமாகவே கருதி தன்னை அர்ப்பணித்து உழைக்கத் தெரிந்த அவனிடம் இல்லற வாழ்க்கையின் புனிதமான சங்கதிகள் மறை பொருளாகிப் போன நிலைமையில் தான் வாணி அவனோடு வாழ்வதற்காக முதற் தடவையாக அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் அவர்களுக்குக் கல்யாணப் பதிவு நடந்த நேரம் அவன் கொழும்பிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் கல்யாணமான பிற்பாடு வேலை மாற்றம் பெற்று ஊரோடு வந்து சேர்ந்ததே அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் ஒரு விபரீத விளைவு தான் அதிலும் பத்துப் பிள்ளைகள் அடங்கிய பெரிய குடும்பம் அவனுடையது அவன் ஒருவன் எடுக்கிற சம்பளத்தை நம்பியே அவர்கள் வாழ்ந்து கழிக்கிற நிலைமையில் ஒரு புது விருந்தாளி போல் வந்து சேர்ந்திருக்கிற அவள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான் அவர்கள் எப்படியாவது போகட்டும் அவளைக் கண்கலங்காமல் காப்பாற்றியாக வேண்டிய தார்மீக பொறுப்பு மணிவண்ணனுக்கு இருக்கிறதே சூழ்நிலை இறுக்கத்தாலே அவனும் அதை மறந்து அவளுக்கு எதிராகச் சதி செய்யத் தொடங்கியதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவனே உலகமென்று நம்பி வந்த அவளைக் கருவறுக்கவென்றே அந்தப் பலிபீடம் கண் திறந்து காத்துக் கிடந்த வேளையில் தான் முன்பொரு போதும் கண்டிராத அந்த விபரீத சூழ்நிலைக்கு மனம் வருந்தி அவள் முகம் கொடுக்க நேர்ந்தது.
அவர்கள் வீட்டைச் சுற்றி ஒரு சிறிய மறைப்பு வேலி கூட இல்லாமல் நெருக்கமாக இருந்த வீடுகளிலிருந்து தினமும் காற்றோடு கலந்து வரும் மீன் நாற்றம் பொறுக்க முடியாமல் வயிற்றைக் குமட்டி அவள் வாந்தி எடுக்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டது போதாதென்று அவளை உயிரோடு வைத்துக் கருவறுக்க மேலும் ஒரு சத்திய சோதனைக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது.
அவள் கிராமத்தில் வாழ்ந்த சூழ்நிலையே வேறு அமைதியான தெய்வீகச் சூழ்நிலையில் தெளிந்த நீரோடை மாதிரி வாழ்க்கை இருந்தது வீடும் சண்டை சச்சரவு இல்லாத ஒரு கோவில் மாதிரி அதிலேயே புடம் பெற்று எழுந்த மிகவும் புனிதமான உயிர் வார்ப்பு அவள் அப்படி உயிராய் இருந்தவளை தடம் புரட்டி சகதி குளிக்க வைக்கிற மாதிரித் தான்அந்த வீட்டை மட்டுமல்ல அங்கு வாழும் மனிதர்களையும் பெரும் சவாலாகவே அவள் எதிர் கொள்ள நேர்ந்தது
அன்று மீனுக்குப் பதிலாக இன்னும் ஊனுண்டு கொழுக்க மட்டுமல்ல மிருக வெறி தலைவிரித்தாடக் கோழி கொன்று பசியாறும் சடங்கு களை கட்டி நடந்தேறியது முன் வராந்தாவோடு சேர்ந்து ஒரு சின்ன அடுப்படி ஒரு கரிக் குகை மாதிரி அதற்குப் பின் கோடியில் தான் கோழி வெட்டி உரித்துக் கொடுக்க ஓர் கூலி ஆள் வந்திருந்தான் ஏன் மணிவண்ணனின் ஐயாவே அதைச் செய்யக் கூடியவர் தான் அவ்வளவு மகா முரட்டுப் பேர்வழி அவர் கொலைக்கும் அஞ்சாதவர் பெரும் குடிகாரன் வேறு பெயருக்குத் தான் சுருட்டுத் தொழில் அபூர்வமாகத் தான் அது நடந்தேறும் மற்ற நாட்களில் வீடு தூங்கி வழியும் பெரிய மனுஷன் தோரணையோடு தெருச் சுற்றுவதே அவருக்கு அன்றாடப் பொழுது போக்கு நிறைவெறியோடு திரும்பி வரும் போது வீடு இரண்டுபடும்.
அவளுக்கு இதெல்லாம் பழகிப் போய் விட்டது மணிவண்ணனும் கிட்டத் தட்ட அதே ரகம் தான் ஆனால் வேலையில் மட்டும் ஒழுங்கு சகோதரர்களை வாழ வைப்பதற்காகத் தன்னைத் தியாகம் செய்து அவன் உழைத்த போதிலும் வாணியோடு அவனுக்கு வாழ்க்கை வெறும் உடம்பளவோடு மட்டும் தான் அப்படியொரு கேவலமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தான் இன்று அவள் விட்டில் பூச்சியாய் கருகி ஒழிந்து போக இருகிறாள் இதை எப்படித் தவிர்ப்பதென்று புரியாத குழப்பம் அவளுள்.
கங்கையிலே மூழ்கினாலும் அவளின் மனதையே கறை குடிக்க வைத்துத் தோலுரித்துப் போட வந்த இந்தப் பாவம் தீரப் போவதில்லை அவர்கள் வீட்டையே கொளுத்துகிற அப் பாவத்தீ தன்னையும் சூழ்ந்து எரித்து விட்ட பிறகு வெறும் கண்ணீரோடு தான் அவள் வாழ்வு முடிந்து போகும் எனினும் எதிலும் சரிந்து போகாத தளும்பலற்ற தீர்க்கமான வாழ்க்கையை வழிபட மட்டுமே தெரிந்த அவளின் பக்குவப்பட்ட மனதிற்கு அப்படி அழுது கண்ணீர் வடிப்பது கூட ஒரு புறம் போக்கு நிகழ்ச்சியாக மனதில் ஒட்ட மறுத்தது ஆனால் அவர்கள் கோழியை குரூரமாக வதை செய்து கொன்று தீர்த்துப் பசியாற நினைத்தில் மட்டும் ஏனோ அது எடுபடவில்லை அந்த ஐந்தறிவு ஜீவனுக்காக அறைக்குள் இருந்தவாறே அவள் தன்னை மறந்து பெருங்குரல் எடுத்துக் கதறியழுத சத்தத்தினால் வீடே அரண்டு போனது
அதைக் கேட்டு மணிவண்ணன் ஓடி வந்ததைத் தொடர்ந்து அழுகை குழம்பி வெறித்த முகத்தை நிமிர்த்தி அவள் பார்தத போது இரத்தக் கறையில் கறைபட்டுப் போன ஒரு மனிதனாய் அவனையும் இனம் கண்ட சோகம் தாளாமல் அவள் மீண்டும் அழுகை மழையில் நனையத் தொடங்கிய போது பெரும் சினத்தோடு அவன் அவளைக் கேட்டான்
“இப்ப என்ன நடந்து போச்சென்று கத்துகிறாய்”?”
“ஒன்றுக்குமே அழக் கூடாது என்று ஒரு வைராக்கியம் எனக்குள் இருந்ததையும் மீறி இப்ப நான் என்னை மறந்து வாய் விட்டு அழுததற்கு அந்த வாயில்லா ஜீவன் தான் காரணம் அதைத் துடிக்கத் துடிக்கக் கொன்று தீர்க்குமளவுக்கு என்ன அப்படியொரு பசி வெறி உங்களுக்கெல்லாம்?”
“உன்னை நான் உணர்ச்சி நெருப்பை வைச்சுக் கொன்று தீர்த்த போதே தலை நிமிர்ந்து கேள்வி கேக்க வக்கில்லை உனக்கு இதுக்கெல்லாம் போய்க் கேள்வி கேக்கிறியே நீ கோழியை வைச்சுக் கோவில் கட்டிக் கும்பிடுற நினப்பா உனக்கு?”
“கோழியும் மனிசனும் எனக்கு ஒன்று தான் நான் ஒன்றும் அதுக்குக் கோவில் கட்ட நினைக்கேலை அதைக் காப்பாற்ற வேணுமெண்டு நான் கிடந்து துடிக்கிறேனெண்டால் நான் வளர்ந்த சூழல் அப்படி கோவிலே குடியிருந்தவளுக்கு வேறு எப்படி நினைக்கத் தோன்றும் உயிர்களை வழிபடுகிற நினைப்புத் தான் எப்பவும்”
அவள் என்ன சொல்கிறாள் என்று பிடிபடாத மயக்கத்தில் அவன் வெகுவாகக் குழம்பிப் போனான் அன்பு வழிபாடு பற்றி அவள் கூறும் தத்துவம் அவனைப் பொறுத்த வரை மறை பொருளாகவே போனது அதைப் புரிந்து கொள்கிற அளவுக்கு ஆழமான சிந்தனையுடன் கூடிய ஆன்மீக விழிப்புணர்வு அறிவை அவன் ஒரு தவமாகவே கொண்டிராத பட்சத்தில் மாமிச இரத்தத்திலேயே கறை குடித்து பசி ஆற விரும்பும் அவன் நிலை அதுவாகத்தான் இருக்கும் தனது இந்த அன்பு நிலை மாறாத வாழ்க்கையின் புனிதமான சத்தியம் கூட ஒரு கனவு போல அவனுக்கு மறந்து போகும் என்று அவள் பெரும் ஆற்றாமையோடு நினைவு கூர்ந்தாள் அவனைப் பொறுத்தவரை கோழியும் தானும் ஒன்று தான் அவன் உயிருக்குயிராய் நம்புவது ஏற்றுக் கொண்டிருப்பது வழிபடுவது எல்லாம் அந்த வீட்டையும் அதனைச் சார்ந்த மனிதர்களையும் மட்டும் தான் அப்படி உயிர் சுருங்கி நிற்கிற அவன் முன் தான் வேதமாக எதைக் கூறினாலும் எடுபடாது என்று அவளுக்கு உறைத்தது எந்த உயிர் மீதும் பரந்த அளவில் அன்பு காட்ட முடியாமல் மூடிக் கிடக்கும் அவன் மனக் கதவைத் திறப்பதற்கு ஒரே வழி அவனுக்கு உறைக்கும்படி தினமும் தான் வாய் ஓயாது உரத்த குரலில் ஜெபித்துக் கூற வேண்டிய ஒரே மந்திரம் பூரணமான அன்பு தான் என்று அவள் மிகவும் மன வருத்தத்துடன் நினைவு கூர்ந்தாள் அதற்கும் செவி கொடுத்து இணங்காமல் போனால் அதனால் வருகின்ற நட்டக் கணக்கும் தனக்குத் தான் என்பது காலம் கடந்த ஞானமாகவே அவளுக்குப் புரிந்தது அன்று தனது வீட்டில் அம்மா பானுவக்காவிற்காக முட்டை சமைத்த நேரத்தில் வெறும் பேச்சுக்காகத் தான் ஓங்கிய குரலில் பிரகடனப்படுத்திக் கூறிய சபதத்தை உறுதியாக நின்று நிஜமாக்காமல் விட்டதன் பலன் தான் அன்பு வழிபாடு இல்லாமலே வாழ்க்கையைக் கழிக்கும் இந்தப் பாவப்பட்ட மனிதனோடும் மனிதர்களோடும் எனக்கு நேர்ந்த கறைபட்ட இந்தத் திருமணவிலங்கு ஒளி கண் திறந்த பூரணமான மனதோடு நான் செய்து வருகின்ற அன்பு வழிபாடே இக் கறைகளினின்றும் என்னைக் காப்பாற்றும் என்று மிகவும் ந் அம்பிக்கையோடு அவள் நினைவு கூர்ந்தாள்.