மந்த்ரஸ்தாயி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2023
பார்வையிட்டோர்: 2,296 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திடீரென இமைகளுள் ஒளியின் வெள்ளப் பெருக்கில் விழிப்பு வந்ததும், கூடமே ஒரு பெரிய புஷ்பமாக மிருதுவான வெளிச்சத்தில் மலர்ந்திருந்தது. சுவரோரமாய் கண்ணன் சைக்கிளுக்கு ‘ஸ்பாண்டு’ போட்டுக் கொண்டிருந் தான். அவன் வந்ததுகூடத் தெரியாமல், தூக்கம் அசத்தியிருக்கிறது.

அவனே கதவைத் திறந்து கொண்டு வந்தது ஆச்சரிய மில்லை . அவனிடம் ஒரு சாவியிருந்தது. மறுசாவி மருமகளிடம்.

என்னைப் பார்த்துப் புன்னகை புரிகிறான். கண்ணன் ஒரு வரப்பிரசாதி. இரவு எந்நேரம் விழித்திருந்தாலும், எவ்வளவு ட்யூட்டியிலும், வீட்டிலும் உழைத்தாலும், குடம் குடமாய் தண்ணீர் வெளியிலிருந்து எடுத்தாலும் அவனிடம் களைப்புத் தெரியாது. அப்போதான் குளித்தாற் போல் ஒரு freshness. வயது மட்டும் தாக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு மனமே குளித்திருக்கிறது.

ஒற்றை விரலைக் காட்டுகிறான். குல்லாயை மாட்டு கிறான். இங்கு பொல்லாத குளிர். குளிர் நிறைவோ, குறைவோ, கண்ணனின் சிறகணைப்பில் குல்லாய், எங்களிடையே ஒரு சடங்காகவே நிலைத்துவிட்டது.

வாசலுக்குப் போய், மேடு விளிம்பில் நிற்கிறேன். இன்னும் சற்று நகர்ந்தேன், பள்ளத்தில் சரிந்தேன். அந்த நினைப்புக்கே உடம்பு உதறல் எடுக்கிறது. ஆனால் கண்ணன் என் தோளைத் தொட்டுக் கொண்டிருக்கிறான். அதன் தைரியமே எனக்குப் போதும். எதற்குமே போதும்.

பழக்க வழக்க நேரங்களில் ஒழுங்கு படிந்தவர்களுக்கு ஒரு சங்கடம். அந்த நேரம் பிசகினால் அவர்கள் பாடு திண்டாட்டம். கண்ணனின் கேலிக்குக் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. “என்னைப் பாருங்கள். எது எது எப்பெப்போ எப்படி எப்படி வருகிறதோ அது அதற்கு adjust ஆகி விடுவேன்.

வாழ்க்கையே அட்ஜஸ்ட்மெண்டின் தொடர்ச் சங்கிலி தானே! உடல் கூறுகள் மட்டுமல்ல; நேர்மை, நாணயம் இத்யாதி லக்ஷியங்கள், ஆசைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். எல்லாமே காலப்போக்குக்குக் கட்டுப்பட்டவை தான். நாம் எல்லோருமே சந்தர்ப்பங்கள், சூழ்நிலையின் விளைவுதான். இதற்கு அடுத்து இது என்று கேவலம் பழக்க வழக்கங்கள் நம் தன்மையை நிர்ணயித்துவிட்டால், அவைகளின் சக்கரத்தினின்னு விடுபடுவதற்கோ, முன்னேற்றத்திற்கோ முற்றுப்புள்ளிதான். முன்னேற்றம் என்பது என்ன? மாற்றம்தான் முன்னேற்றம்.”

ஒரு வழியாக நீர் இறங்கியானதும் (அப்பாடி!) என் கால்களில் தண்ணீரை வீசி அடிக்கிறான். நியாயமாய் என் வேலை. ஆனால் அவன் செய்கிறான். எனக்கும் வேண்டியிருக்கிறதோ?

உள்ளே நடத்தி வந்து கட்டிலில் அமர்த்துகிறான். குடிக்கிற பாவனையில் கை விரல்களை மடக்கி, கட்டை விரலை மட்டும் நீட்டிக் காண்பிக்கிறான். ஆம் என்று தலை யசைக்கிறேன். அலமாரியிலிருந்து பாலை எடுத்து வந்து அடுப்பில் ஏற்றி விட்டு ரேடியோவை F.M.க்குத் திருப்புகிறான். பர்வீன் சுல்தானா உச்சஸ்தாயி பிர்க்கா பீச்சியடிக்கிறது. அந்த நள்ளிரவு வேளையில் நாதகிண்கிணிகள், அவைகளின் தனித்தனி வேகத்தில், கற்கண்டில், இதயத்தின், நெஞ்சின், மூளையின் கண்ணிகளுள் உருண்போடி, அங்கு மிங்குமாய் புதைந்து கொள்கின்றன.

கண்ண னுக்கு ‘ட்ராமா’ செய்யப் பிடிக்கும். ‘Suspense Suspense!!’ “ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு எதிர்பாராத வேளை, ரஹஸ்யம் ஒளிந்து கொண்டிருக்கிறது. தக்ணுண்டு சாமிக்குத் துணுண்டு நாமம். குந்துமணியில் கறுப்புப் புள்ளி. ஆனால் பிள்ளையார் கண்ணில் புதையுங்கள். முழி வந்து விடுகிறது. பாருங்கள். அதுதான் Suspense. You see what I mean? அதுவே தேடல் தத்துவம். நிமிஷத்தைப் பிழிந்தாக வேண்டும் அப்பா!”

அவன் அப்படிச் சொல்கையில் உடம்பில் சருகுகள் துளிர்ப்பது போல் எனக்கு லேசாய்ப் பரபரக்கிறது. அவன் உற்சாகம் ஒரு தொற்று.

அடுப்படியில் ஏதோ திரிசமம் பண்ணிவிட்டு, ஒரு கையில் ஆவி பறக்கும் தம்ளர், மறுகையில் கரண்டியுடன் வருகிறான். தம்ளரை பக்கத்தில் ஸ்டூலில் வைத்துவிட்டு, என் முகத்தை நிமிர்த்தி, வாயில் கரண்டியில் உள்ளதை விடுகிறான். தாய்ப் பறவையின் பரிவில் அவனுக்கு வாய், மொக்கு திறந்து கொள்கிறது.

ஆ. பால் ஏடு! சர்க்கரையுடன் ஏலக்காய் மணம்! பாஸந்தி செய்வது சிக்கலான சமாச்சாரம். ஆனால் பாஸந்தி என்று நினைத்துக் கொண்டால் இதுவே பாஸந்தி. எனக்குப் பால் என்றால் உயிர். இங்கு பால், கறந்த நாணயத்தில் கிடைக்கிறது.

டாக்டர் கட்டளை:

பாலில் க்ரீம் கூடாது.

வெண்ணெய் எடுத்த மோர்தான் அனுமதி.

எண்ணெய்ப் பண்டங்களை விஷமாய் விலக்குங்கள்.

No வதக்கல்ஸ்

All boiled only.

கண்ணனும் சொல்கிறான். “அப்பா, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பு உங்களுடையது. என் மேல் பழி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.”

ஆனால் அவன்தான் இப்போது பால் ஏடை ஊட்டுகிறான்.

அந்த நாள் ஞாபகம் வருகிறது. அதை மறக்கவே முடியாது.

நான் சுகமாய் சுவரில் சாய்ந்து கொண்டு டிவி பார்க்க, தலையணைகளை என் முதுகுக்கு அண்டக் கொடுத்துவிட்டு, மாட்டுப் பெண்ணும் அவனும் சாப்பிடப் போனதும் அந்தச் சமயத்தின் சூழலில், என் மகன், மருமகளின் பிரியத்திலும் பணிவிடையிலும் திளைத்த மனது, உலகத்தில் எதனோடும் சமாதானமாயிருந்த அந்த நேரத்தில் – இது நிலைக்குமா என்று அதன் பரிபூரணத்தில் சந்தேகம் துளிர்த்த அந்தப் பொடி வேளையிலேயே – திடீரென்று மார்புள் இரண்டு இடிகள் – அடுத்தடுத்து இரண்டு சம்மட்டி அடிகள் (என்ன Voltage? அப்பா அதுவே போதும்) நான் கலைந்து குலைந்து கலகலத்துப் போனதுதான் தெரியும்.

“இது heart attack இல்லை. கண்டிஷன் நார்மலாய்த் தான் தெரிகிறது. ECG ஒண்ணும் தப்புக் காட்டல்லே. கொஞ்சம் Slow Beat அவ்வளவுதான். அது பெரிய குத்தமில்லை. ஒருவேளை mild strain…மறுபடியும் வந்தால வாங்கோ” (‘டாக்டர் இது என்ன உங்கள் நல்ல எண்ணமா?’ கேட்கவில்லை)

Check-upக்குப் போகும் போதெல்லாம் “எல்லாம் நார்மல்”… டாக்டர் அடித்துச் சொல்லிக் கொண்டே ஐந்து வருடங்களாய் (எச்சரிக்கையாம்!) மாத்திரைகள் விழுங்கிக் கொண்டிருக்கிறேன். இப்பவும் பால் ஏடையும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன். என்ன ருசி! என்ன ருசி!!

உயிர் மேல் ஆசையெனில், உடலுக்கு மறுக்க வேண்டும். இது அபத்தமான கூற்றாய் இல்லை? உடல் இல்லாமல் உயிர் எப்படி வாழ முடியும்? உயிரற்றுப் போனால், உடல் சிதைக்கன்றி மற்றெதற்கு?

சபலம்தான் உண்மையான ஆட்கொல்லி. மனத்தின் சீரழிவு. ஆனால் அதற்குத்தான் கடைசி வெற்றி. ஆயிரம் பத்தியமிருந்தாலும் சாவிலிருந்து பத்திரம் ஆகிவிட முடியுமா? ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. பாலேடைத் தின்றே சாகிறேனே!

ஆயுள் என்பதே என்ன, க்ஷணம் க்ஷணமாய் க்ஷணத் தின் நீட்டல்தானே! ஆகவே உன் க்ஷணத்தை வாழ் எனும் கண்ணனின் தத்துவம் பித்து, பொறுப்பற்றது என்று சொல்வதற்குண்டோ?

பாலைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருகி அனுபவித்துக் கொண்டே, கண்ணனின் நடமாட்டத்தைக் கவனிக்கிறேன். மேஜை அண்டை உட்கார்ந்து கடிதங்கள் எழுதிக் கொண் டிருக்கிறான். அவனுக்கு நிறைய நண்பர்கள். ஆகவே நிறையக் கடிதங்கள். அப்புறம் புத்தகங்கள் படிப்பான். அப்புறம் பசிக்கும் மூலைப் பழையதைப் பிழிந்து கலத்தில் வைத்துக் கொண்டு தின்பான். அவனுக்கு விட்டுவிட்டு அடிக்கடி பசி வேளை. அகாலங்கள் அவனைப் பாதிப்பதில்லை .

“நீங்கள் கவலைப்படாதேங்கோ அப்பா, தொணப்பா தேங்கோ. கொஞ்ச நாள் இருந்துவிட்டு, ஊருக்குப் போயிடப் போறேள். என் ரொட்டீன் – இப்படியே எனக்கு வருடக் கணக்கில் பழகிப் போச்சு. நீங்கள் தூங்குங்கோ நிம்மதியா” ரேடியோவின் சத்தத்தைக் குறைக்கிறான்.

பர்வீன் ஸுல்தானா மாறி இப்போ வயலின் இசை ஹிந்துஸ்தானிதான். எஃகுத் தந்தியில் ஏதேதோ ஜாலம் நடக்கிறது. உடல் நரம்புகளில் பாய்ந்து – மார்பில், தோள் களில், நெஞ்சுக் குழியில் எனப் படிப்படியாய் என்னை ஆட்கொள்கிறது. ‘தபால்’ என்று ‘gut’க்கு விழுகிறது. அங்கே யானையின், சிங்கத்தின் கம்பீரநடை கேட்கிறது. இலைகளும் மட்டைகளும் சலசலக்கின்றன. வாசிப்பது யார் ? கேட்கத் தோன்றவில்லை. கேட்டால் கண்ணனுக்கு என்ன தெரியும்? அறிய அவசியமுமில்லை. கார்வைகள் என் மேல் வேயும் போதையில் விழிகள் செருகுகின்றன. யதார்த்தமுமில்லை. கனவுமில்லை. இரண்டுக்கும் இடை விளிம்பு நிலை.

“மந்த்ரஸ்தாயி” தந்த இந்த மயக்கத்தில் என் உடம்பே ஒரு தந்தி வாத்யம். எங்கு தொட்டாலும் அங்கு ஒரு ஸ்வரம் தெறிக்கிறது. உதிர்கிறது. அர்ச்சனைப் பூவாய்க் காணிக்கை யில் சுழல்கிறது. அம்மா, அப்பா, எல்லாம் உனக்கே, உனதே.

என் இதயம் நாதத்தின் ஊற்றுப் பெருக்கு. சிற்றலைகள் கசிந்து பேரலைகளாகி பெரும் அலைகள் ஒன்றிய வீழ்ச்சி யில் ஸ்நானம் செய்கிறேன். திளைக்கிறேன், துளைகிறேன், துல்லியமாகிறேன்.

பின்னாலிருந்து யாரோ தோளைத் தொட்ட மாதிரி. சிரிப்பு, திரும்புகிறேன்.

நீர் வீழ்ச்சியின் படுதாவைத் தள்ளிக் கொண்டு வெளிப் படுகிறாள். அந்த அசாத்யமான கூந்தல், ஸ்நானத்தில் அடையாய் கனத்துப் பிரிபிரியாய் அவன் மானங்களை மறைக்கிறது. தானாகவே மூடிக்கொள்ள அவள் முற்படவில்லை. அந்த உணர்வேயில்லை. அப்படியொன்றும் அழகில்லை. ஆனால் அந்த உடம்பில் ததும்பிய ஆரோக்கியமே அவளுடைய பிரகாசமாய் ஒளிர்கின்றது.

பிறந்த மேனியில் அவளைப் பார்க்க எனக்கு விகல்பமாயில்லை. ஸர்வ இயல்பாயிருந்தாள். என் ஆண் உக்ரம் விழித்ததேயன்றி என்னைத் தாக்கவில்லை. அந்த விழிப்புக் கூட ஏதோ உண்மைக்கருகே என்னைக் கொண்டு செல்லும் சதையுரிப்புத்தான்.

சிரித்தவள், நீர்வீழ்ச்சித் திரைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். அதனுள் நுழைந்து போய்த் தேடியும் கிடைக்கவில்லை. நீரோடு கரைந்து போய் விட்டாளா? அவள் சிரிப்பு மட்டும் உட்செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதென்ன சிரிப்பு? “என்னைப் பார், என் அழகைப் பார்” என்று கேலியா?

இதற்கு முன் இவளை எங்கேனும் பார்த்திருக்கிறேனா? அதெப்படிச் சாத்தியம்? ஆனால் அப்படித் தோன்றக் காரணம் என்ன? இது ஏதோ கனவுக் கலக்கம் என்று இந்த அரைத் தூக்கத்திலேயே தெரிகிறதே! ஆனால் உள்ளுணர்வு ஏற்க மறுக்கிறது. இது எப்பவோ கண்ட நினைவு முகம். மனசாட்சி உறுத்துகிறது. இங்கு மனசாட்சி எங்கே வந்தது? அது என்னை இழுக்க என்ன குற்றம் செய்து விட்டேன்?

காலப்போக்கின் பின்னோக்கிய தூரத்தில், ஞாபகம் என்னதான் மங்கிப் போனாலும் சம்பவத்தின் ஆதாரம் இல்லாமல் நினைவு கூற முடியாது என்று ஒரு வாதம் இருக்கிறது. அந்த ரீதியில், கற்பனை என்பதேயில்லை. எல்லாமே நேர்ந்தது – நிகழ், எதிர் என்ற காலத்தின் சீட்டுக் குலுக்கல் தான். ஆகவே இவள் யார்? இந்த அளவுக்கு இவள் என் நெஞ்சைத் துருவ, நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா, தூங்குகிறேனா?

தூக்கத்தில் காணும் கனாப் பொழுதில் மனிதன் அவன் ஆயுசை அதன் முழு விவரங்களுடன் வாழ்ந்து விட முடியும் என்று மனோதத்விகள், கனவு விற்பன்னர்கள் கூறுகிறார்கள்.

இந்த நினைப்பின் அடிக்கோலாய், என் உடம்பு ஒரு தந்தி வாத்யம். அதன் நரம்புகளினூடே நினைவு, மந்த்ர ஸ்தாயியில் இயங்குகிறது. ஆழங்களுக்குத் தன்னோடு என்னை இழுத்துச் செல்கிறது. ராவணனின் ஸாம கானம்.

ஸாம கான வினோத லோலினி.

என் கல்லூரி நாட்களில் ஒரு விடுமுறை. என் தாத்தா பாட்டியுடன் தங்குவதற்குக் கிராமத்துக்குச் சென்றிருந்தேன்.

ஸ்டேஷனிலிருந்து, வயல்களின் வரப்பு வழி விரையும் வழியில் தாமரைக் குளம். அதைத் தாண்டாமல் ஊர் போய்ச் சேர முடியாது. உச்சி வெயிலில் முகம் எரிந்தது. உடனே தண்ணீரின் நினைப்பில், முகம் கழுவிக் கொள்ளத் தோன்றி விட்டது. குளக்கரை மேட்டுக்கு ஏறினேன்.

நடுக்குளத்தில் ஒருத்தி குளித்துக் கொண்டிருந்தாள். அந்த வேளைக்கு யாரும் வர மாட்டார்கள் என்கிற தைரியம் தான். புடவையைச் சுருட்டி, தோய்க்கிற கல்லில் மேல் வைத்திருந்தது. அவளைப் பார்த்த ‘திடீரில் திகைத்துப் போய் நின்றேன். வான், கிண்ணம் போல், தண்ணீரின் மேல் கவிந்து – பேர்தான் தாமரைக்குளம். ஒரு தாமரையில்லை – அந்த வெயிலுக்கும், வேளையின் தனிமைக்கும் அவள் நிலையில், சூழலுடன் இழைந்து போயிருந்தாள். எல்லாமே சேர்ந்து கானல் ஓவியம் போல்.

கரிய மேனியாள். என்னிலும் வயதினாள். ஆனால் வயஸானவள் இல்லை.

என்னைப் பார்த்து விட்டாள். கன்னங்களில் நாவல் பழச் சிவப்பு குழுமியிருக்கும். யூகம்தான். இந்தத் தூரத்தில் என்ன தெரியும், அவள் சங்கடம் தவிர? அமிழ்ந்து கொள்ளத் தண்ணீரில் ஆழமில்லை. தோய்க்கிற கல் மேல் புடவை தூரத்தில் இருக்கிறது. எட்டிப் பிடிக்கிற மாதிரி யில்லை. ஓடி ஒளிஞ்சுக்கிட கரையோரம் செடியோ புதரோ யில்லை. என்னதான் செய்வாள்? அவள் பாடு சங்கடம் தான்.

ஆனால் சமாளித்துக் கொண்டு விட்டாள். ஒரு சிரிப்பு சிரிச்சாளே பார்க்கணும்! மிரண்டு போனேன். “என்னடா கேடு கெட்டவனே, மானம் கெட்டவனே! பொம்புளேங்க, நாங்க சமையறோமோ இல்லியோ, எங்களைப் பார்த்தா இவங்க சமைஞ்சுடறாங்க” என்றெல்லாம் திட்டவில்லை. ஆனால் அந்தச் சிரிப்பு என்னைக் கன்னத்தில் அறைந்தது. ஓடினேன். துரத்திற்று. ஓ, சிரிப்பே ஆடையாகப் பயன் படுமோ? ஆடையா, ஆயுதமுமா?

அப்புறம் கிராமத்தில், தினமும் ஒருமுறையேனும் என் முன் அவள் வாய்த்தாள். விடிகாலை பால் குவளை யுடன், அல்லது முற்பகல் தலைமேல் கூடையில் தயிர்ச்சட்டி யுடன், இடையர் தெருவா ? – அல்ல பிற்பகல் மளிகைக் கடையிலோ. அவளைக் கடந்து நான் விரைகையில், அவள் விழிகளில் குறும்பு கூத்தாடும். உடனே பின்னாலிருந்து வெடிக்கும் சிரிப்பு. தலைகுனிந்தபடி, ஓட்டமாய் நடையைக் கட்டுவேன்.

ஒரோரு சமயம். அவள் சிநேகிதி யாரோடும் இருந்தால், அவள் தோளையிடித்து என்னைக் கண்ணால் காட்டி, இருவரும் ‘கிசுகிசு’. உடனே அந்தப் பீறிட்ட சிரிப்பு. ஒடுவேன். என்னை வலுச்சண்டைக்கிழுக்கத் துடிக்கிறாள். ஏதேனும் பழியை என் மேல் சுமத்தி வம்பில் மாட்டி விட்டால், என்ன செய்வேன்? அவளுக்குச் சரியாய்ப் பேச எனக்குத் ‘தில்’ கிடையாது. அப்படி எதிர் வாதாடினாலும் எடுபடாது. இது போன்ற சமாச்சாரத்தில் அவள் கட்சி தூக்குமா? நானா?

அவளைக் குளத்தில் பார்த்ததிலிருந்து, பிறகும் காண நேர்ந்த சமயங்களிலிருந்து வடிகட்டின சத்தாய் அந்தச் சிரிப்புத்தான் நிற்கிறது. அதன் எதிரொலியினின்று நான் இன்னமும் மீண்ட பாடில்லை. இத்தனை நாள், தூரம் கடந்தும் இந்த வீச்சா? தான் தெரியாது. குரல் மட்டும் ஒலிக்கும் பறவை. ராட்சஸி.

வயதுக் கோளாறு இவள் மேல் காதலாகி விட்டேனா? Hate-Love உறவு? சிரிப்பால், சிரித்தவளுடன் ஒரு வேளை காதல் நேரிடலாம். ஆனால் சிரிப்புடனேயே காதல்? அதுவும் இந்தச் சிரிப்புடன்?

இதில் ஒரு அகம்பாவம், அலட்சியம். கேலி, பயமுறுத்தல், எல்லாம் ஒருங்கே த்வனிக்கின்றன. கூடவே ஒரு வசியம், மர்ம தத்வம்? பையா, இந்தச் சிரிப்புள் மீறிப் படிக்கிறாய். The romanticism in you!

ஒன்று அடித்துச் சொல்வேன். அவளை நிர்வாணமாய்ப் பார்த்ததனால் எனக்கு அவள் மேல் எந்த விகாரமும் ஏற்படவில்லை. அந்தச் சமயத்துக்கு அவள் நிர்வாணம் இயல்பாய்த் தானிருந்தது. நிர்வாணி என்று பெயரிட்டே அழைக்கலாம்.

நான் பட்டணத்துக்குத் திரும்ப தயாரான முதனாள், பாட்டி திடீரென இறந்து போனாள்; தாம்பூலம் மாரில் அடைத்து. இத்தனைக்கும் இடித்த தாம்பூலம்தான். ஆனால் அவளுக்கு வேளை வந்துவிட்டது. வாசலில் கூடிவிட்ட கும்பலில் அவளும் இருந்தாள். முகத்தில் இரங்கல், அனுதாபம் மாதிரி தெரியவில்லை. லேசான முறுவலிப்போ?

சே, எனக்கு ஏன் இப்படி புத்தி கோஷிக்கிறது?

பின்னர் நான் கிராமத்துக்குப் போக நேரவில்லை. அவளுடைய முகமும் பயமும் நினைவில் எங்கோ புதையுண்டு போயின.

காலகட்டம் வினோதமான சமாச்சாரம். அதன் பின்னோக்கின வீச்சில், விஷயங்களின் பரிணாமங்கள் எப்படி எப்படியோ மாறுகின்றன. சம்பவங்கள், மதிப்பீடுகள், எடைகள் அவையவைகளுக்குரிய குழிகளில் விழுந்து விடுகின்றன. சின்னதாயிருந்தது. பெரிதாகி, பெரிது அற்ப மாகி விடுகிறது. இத்துடன் மந்த்ரஸ்தாயியின் மாஜிக் கையும் சேர்த்துக் கொள். தம்பி, அது தனியல்ல; உன் ஸ்தாயி.

வயலின் இசை மாறி, இப்போ “ஸோ ஜா ராஜகுமாரி.”

ஸெய்கலின் குரலை golden voice என்கிறார்கள். அப்படி ஒன்றும் இனிமையில் அவனை நான் சேர்க்க மாட்டேன். எப்பவுமே அவன் மந்த்ரஸ்தாயிதான். ஆனால் அங்கு அவன் தொடும் ஆழங்கள், பாடகனே நினைக்காத ஆழங்கள் – நாதத்தின் படுகையிலேயே புரள்கிறான். மாந்தர் செவிபட மேலே வராது, அங்கேயே அவைகளின் தனிமை யில், கற்பில் நீந்தும் நாதபிந்துக்களுடன் அந்தக் குரலும் பிந்துக்களைச் சொரிகிறது. ஏதேதோ அனுமானங்கள், அந்த ஆழங்களிலிருந்து முகடுகள் காட்டுகின்றன. பிடி எட்டாமல் வழுக்குகிறது. ப்ரக்ஞை ப்ரதக்ஷணம் வருகிறது. நேர்ந்த சம்பவங்கள், இழைத்த காரியங்கள், தம் தம் மணிகளை இழந்த பதர்களாய் வெற்றியில் அலைகின்றன.

கல்யாணம் செய்து கொள்கிறோம். வாழ்க்கை பூரா முதலிரவாகுமா? முதலிரவே நீ ஆயுசாய் எதிர்பார்த்து, பூஜை செய்தபடி இருக்கிறதோ? அன்றே எத்தனைக் கண்ணுரிப்பு, கலக்கங்கள்… கலக்கங்கள் மாறின அளவுகள், அளவு கோல்கள்; உன் வாழ்வுக்கும் நீ சமாதானமாக வேண்டிய வேறுபாடுகள்? அன்று தலைகாட்டினவை, அவைகளின் வேளை வந்ததும் முழு சொரூபத்தில் தலை விரித்தாடுகின்றன.

குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்தவை பெரிசாகின்றன. ஆக ஆக அவைகளுக்குப் பெற்றோர் மேல் சகப்பு. பெற்றவர் களுக்குக் குழந்தைகள் மீது ஏமாற்றம். “நம் உடம்பையே பார்த்துக் கொள்ளுங்கள், அஞ்சு விரலும் ஒண்ணா யிருக்கோ?” என்று சமாதானம் வேறே. புளித்துப் போன பழமொழி (ஆனால் வாழ்க்கையில் பழமொழிகள் இல்லா விட்டால் தொலைந்தோம்!)

முதுகில் குத்து விழுந்த பின் தான், பிறவியுடன் கொண்டு வந்திருந்த கத்தியை, கையுள் இத்தனை நாள் எவ்வாறு ஒளித்து வைத்திருந்தான் என்கிற கேள்வியின் கொக்கி, மரணத்தில் மங்கிக் கொண்டிருக்கும் பார்வையை அடைக்கிறது.

ராமா! ராமா!!

அவனை ஏன் அழைக்கிறாய் ? நீ ஏமாந்த நேரத்தை நொந்து கொள். உண்மையை முகத்துடன் முகம், விழியோடு விழி நோக்கத் தைரியமின்றி, வியாக்யானங்களுள் ஒளிந்து கொள்வதே வாழ்க்கை முறையாகிவிட்டது.

இரவு சுமார் எட்டுக்குக் கிட்ட.

அன்றை எப்போது நினைத்தாலும் இப்பத்தான் நேர்வது போல, உள்ளமும் உடலும் வெலவெலத்துச் செயலிழந்து விடுகின்றன. அன்று மிச்ச நாள் பாழ்.

வீட்டை நோக்கி, கிருஷ்ணகிரி ரோட்டில் விரைந்து கொண்டிருக்கிறேன். இன்று நிச்சயமாய்க் கண்ணன் காய்ச்சப் போகிறான். “முதலில் வெளியில் கிளம்ப யார் அனுமதி தந்தது?” என்று ஆரம்பித்து, “உங்கள் வஸ்தாத்தன மெல்லாம் இங்கேதான் காண்பிக்கணுமா? ஆமா, உங்கள் உத்தேசம்தான் என்ன? வந்த இடத்தில் என் மேல் ஒரு அபாண்டத்தைச் சுமத்திட்டுத்தான் போவோமே என்றா?” என்று இன்னும் எங்கெங்கோ போய்க் கொண்டிருப்பான். பாசத்துக்கு முதல் பலி மரியாதை. என் சமாதானங்கள் செல்லாது. எனக்குத் தெரியும்.

பட்டணத்தில் கடிதம் மூலம் பரிச்சயம் ஆன ஒரு ரசிகனைக் காண வாணியம்பாடிக்குப் போய், அவன் வீட்டில் இல்லாத ஏமாற்றத்துடன் திரும்பி வரும் வழியில் பஸ் பிரேக் டௌன். சரி இன்னும் இரண்டு மைல் தானே – வழியில் யாரோ சொன்னது – ஆனால் நடக்க நடக்க, தூரம் மைல் மைலாய் நீண்டு கொண்டே போகிறது. கால் மணி நேரத்துக்கு ஒரு பஸ் பறக்கும் இந்த ரோட்டில், பழியாய் ஒரு மணி நேரமாய் ஓசூர் நோக்கி ஒரு பஸ் கூடக் காணோம்.

சட்டென என்னை உராய்ந்தாற் போல் ஒரு ஸ்கூட்டர் ‘பிரேக்’ போட்டு நின்றது.

“ஏறுங்க ஸார் போகலாம்.”

திகைத்து நின்றேன்.

“கண்ணன் அப்பாதானே நீங்க, ஏறுங்க!”

“ஆமா, என்னை எப்…ப…டி?” என்று குழம்பினேன்.

“உங்களை நல்லாத் தெரியும் ஸார் – பத்திரிகைகளில் உங்கள் போட்டோ பார்த்திருக்கேன். கண்ணனும் நானும் ஒரே ஆபீஸ். இந்த நடையில் எப்போ வீடு போய்ச் சேருவீங்க?- சரியா அட்ஜஸ்ட் ஆயிட்டிங்களா? கிளம்பலாமா.”

ஜாக்கிரதையாக ஓட்டினான். குட்டையான மெலிந்த உருவம். முன் மண்டையில் லேசாகிக் கொண்டிருந்த தலைமயிரை ஜாக்கிரதையாக ஒட்டி வாரியும், பிரிகள் காற்றில் அலைந்தன.

ஒருமுறை முகம் என் பக்கம் திரும்பியபோது அதில் புத்திசாலித்தனம் குறுகுறுப்பது கண்டேன்.

“ஆபீஸில் இன்னிக்கு லேட் ஆயிடுச்சி. ஒரு ஃபைலை முடிக்க வேண்டிய அவசரம். அதனால் தான் இன்னிக்கு உங்களைச் சந்திக்க முடிஞ்சது” வாய்விட்டுச் சிரிப்பு. “நானே மிஸஸ்ஸை அளைச்சுக்கிட்டு வீட்டுக்கு வரத்தா னிருந்தேன். அடுத்த வாரம் பிறந்த வீட்டுக்குப் பிரசவத் துக்குப் போவுது. கண்ணன் நிறைய உங்களைப் பத்திச் சொல்லியிருக்கான். நாங்கள் நிறையப் பேசுவோம். ஸார், நான்கூட எழுதறேன்” மறுபடி சிரிப்பு. அதில் இப்போது லஜ்ஜை. “ரெண்டு தடவை ஸெக்கண்டு ப்ரைஸ் கிடைச் சிருக்கு. இதை உங்க கிட்டே சொல்றதுக்கே என்னவோ மாதிரியிருக்கு – ஸார், உங்களுக்குப் போட்டியான்னு சிரிச்சுக் கறீங்களோ என்னவோ? ஸார், இப்பவே சொல்லிடறேன். என் மிச்ச ஆயுசு பூரா எழுதினாலும் நான் உங்கள் எழுத்தின் ஓரம் கூட எட்ட முடியாது. எனக்கு நல்லாத் தெரியும். அதுக்கெல்லாம் ஆசைப்படறதே தப்பு.”

வண்டி வழுக்கிக் கொண்டு போயிற்று. நல்லா ஓட்டத் தெரிஞ்சவன். வேக வெறியில்லை. பொறுப்பும் எச்சரிக்கையும் தெரிகின்றன.

கண்ணனுக்கும் இவனுக்கும் சில விஷயங்களில் சாயை ஒன்றாயிருக்குமோ? பேச்சில் வசீகரம். இவனிடம் சாயைகள் கூட கண்ணன் சொல்லியிருக்கிறான். குறுக்குப் பரீட்சைகள் ஏதேதோ தேறியிருக்கிறானாம். முன்னேற்றமே முனைப் பாய்த் திட்டமிட்ட பரீட்சைகள், தொடர்புகள், ஆடம்பரங்கள் அனாவசியச் செலவுகள் தவிர்த்த வாழ்க்கை. சிக்கனம். ஆனால் கஞ்சத்தனம் கிடையாது.

“ஆனால் உங்கள் எளுத்தை எல்லாமே புரிஞ்சுக் கிட்டேன்னு சொல்ல முடியாது. சிலது எங்களுக்கு இப்போதைக்கு இல்லேன்னே தோணுது. நாளாக ஆக ஒருவேளை புரியுமோ என்னவோ?” – சிரிப்பு. “படிச்சவுடனே கிடைக்காத எளுத்தை எளுதணுமா? என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். தப்பா நெனைக்காதீங்க. நினைச்சுக்க மாட்டீங்க. உங்களோடு என்ன வேணுமானாலும் பேச லாம்னு கண்ணன் சொல்லியிருக்கான்.”

வாழைப்பழத்தில் ஊசியேற்றுகிறான்.

“ஆனால் அதையும் நீங்களே சொல்லிட்டீங்க: ‘அவரவர் பூத்ததுக்குத் தக்கப்படி’ பக்கா defence ஸார் அது! ஏன், ஒரு பேட்டியிலோ, முகவுரையிலோ, இன்னும் வெளிச்சமாவே எளுதினதெல்லாம் புரிஞ்சேதான் ஆவணு மான்னு கேக்கறீங்க. நல்ல daring ஸார் உங்களுக்கு…எங்கள் கேள்வியையே பதிலாய் எங்கள் மேலேயே தூக்கிப் போடறீங்களே!” மறுபடியும் சிரிப்பு. நானும் சிரிக்கிறேன்.

“ஆனால் ஒண்ணு ஸார். எங்களுக்கு இதுதான் ஆச்சரியம். இந்த வயசுலேயும் எளுதிட்டிருக்கிறது. ஒண்ணு இதிலிருந்து புரியுது. எளுத்துக்கு வயசு கிடையாது. ரிடையர் மென்ட் கிடையாது. அப்படி நினைக்கிறதுலே எங்களைப் போலவங்களுக்கு ஏதோ தெம்பாயிருக்கு. எங்களுக்குப் பேர் பண்ண இன்னும் சான்ஸ் இருக்கு இல்லையா?”

அவன் திடீரென ‘பைக் கை முறுக்கின வேகத்தில் டயர்கள் ‘க்றீஈஈச்’. நான் அவன் மேல் சாய்ந்தேன்.

எங்கள் எதிரே ஒரு கார் எங்களைக் கடந்து பறந்தது. அதனின்று ஒரு சிரிப்பு எங்கள் மேல் மோதிற்று.

“பார்த்தீங்களா ஸார்? Wrong side… அவங்களுக்கே நல்லாத் தெரியும். நம்ம என்ன செய்ய முடியறது? பணம் படைச்சவங்க என்ன வேணாம்னாலும் செய்யலாம். எப்படியானும் இருக்கலாம்.”

என் கவனம் அவன் பேச்சில் முழுக்க இல்லை. அந்தச் சிரிப்பு – உடம்பில் ரத்தத்தைச் சுண்ட வைத்து, வயிற்றைக் கலக்கும் சிரிப்பு.

அடுத்து அல்ல, அந்தக் கணமே அல்ல அப்படி எண்ண, எண்ணுவதற்குத் தோன்றக் கூட நேரமில்லை – எதிரே ரோட்டின் சரிவினின்று அந்த மொத்தாகாரம் எங்கள் முன், எங்கள் மேல் ஒன்றையொன்று விலக்க இரண்டுக்குமே நேரமில்லை. இடமுமில்லை, முடியவும் முடியாது.

நான் என்னவானேன்? எனக்கு முன்னால் என் உயிர் ‘வெல்லம்’ பேசிவிட்டது. பைக் கிலிருந்து தாவி விட்டேன். என்னால் முடிந்திருக்காது. உயிர் வெல்லத்தினால் தான் முடிந்திருக்கும். ரோட்டின் பக்கவாட்டுப் பள்ளத்தில் விழுந்து சரிந்து உருண்டேன். கால் கட்டை விரல் திரும்பிக் கொண்டது. ஆனால் அப்போ தெரியாது.

யதார்த்தத்தைப் பிட்டுக் காண்பிக்கிறேன் என்று கோரத்தை அடுக்கடுக்காய் விவரிக்கும் எழுத்து பெரிய எழுத்து ஆகி விடாது. அந்த எழுத்துக்கும் அது விவரிக்கும் சம்பவத்துக்கும் அனுமானமில்லை. எப்படியும் அது என் வழி அன்று.

‘பைக்’ துவையலாகியிருந்தது. ஓட்டியவன் நிலைமையை யூகித்துக் கொள்ளுங்கள். சிதர்கள் கூட முழுமையில் சேர்க்க முடியவில்லை. போஸ்ட் மார்ட்டம் என்று எதை வைத்துக் கொண்டு செய்தார்களோ?

விதிமுறைப்படி நடக்க வேண்டியவையெல்லாம் நடந்தேறிய பின் இருப்பதை வைத்துக் கொண்டு உருக்கூட்டி, சாமர்த்தியமாய், இரக்கத்துடன் மனிதாபிமானத்துடன், சிரத்தையுடன் தைத்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். வெள்ளைத் துணியில் இறுகச் சுற்றி விட்டார்கள்.

உடலுடன் வண்டியில் நான், கண்ணன், இன்னும் நெருங்கிய நண்பர்கள் இருவர் போனோம். முன்கூட்டியே வீட்டில் இருந்தவர்களுக்குச் சேதி போய், தயாராக்கியிருந்தது. காத்திருந்தார்கள்.

அவன் மனைவி மாடியிலிருந்து இறங்கி வந்தாள். அழுது, முகம் வீங்கி அப்படியெல்லாமில்லை. துயரத்தை அதற்குரிய கௌரவத்துடன் தாங்கிக் கொண்டிருந்தாள். அவளே குழந்தை முகமாய்த்தானிருந்தாள். குழந்தை வயிற்றில் குழந்தை! ஆண்டவனே, இப்படியெல்லாம் ஒரு விளையாட்டா?

முகத்தை மூடியிருந்த துணியைத் தள்ளிக் காண்பித்ததும், அவள் பார்த்துவிட்டு,

“இது பாவாயில்லே. பாவா முகம் சிரிச்ச முகம்.”

அவ்வளவுதான். சொல்லிவிட்டு மேலே ஏறிப் போய் விட்டாள்.

கணவன் மரணத்தை ஏற்க மறுக்கிறாள். ஆனால் கணவனுடைய நினைவு முகத்தை ஸ்தாபிக்க முயல்கிறாள்.

நினைவு முகம் நித்திய முகம்.

***

குற்ற உணர்வு சில இரவுகளில் எழுப்பி விடுகிறது. நாங்கள் சந்திக்காமலே இருந்திருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காதோ? அவர் பாட்டுக்கு நேரத்துக்குப் பத்திரமாய் வீடு போய்ச் சேர்ந்திருப்பாரோ? நான் குதித்துவிட்டேன். அவரால் முடியாதா? எனக்காகத் தயங்கினாரா? அந்தப் பொடி நேரத் தயக்கம். அவர் விதியை முடிக்கப் போய் விட்டதே? அப்போ நான் காரணமா?

என் அந்திமக் காலத்தில் நினைவையே மாறாத புண்ணில் தீய்த்து விட்டதொரு சம்பவத்தை என் கடைசி வேளையுடன் சுமந்து செல்வது என் சிலுவையா? நல்ல ஜன்மமா, சின்ன உயிர், அதன் முழு வாழ்வு இருந்திருந்தால், எத்தனையோ பேருக்குப் பயன்பட்டிருக்கும் பிறவி. இதெல் லாம் உனக்குக் கிடையாதா? இல்லையேல் ஏன் பிறப்பித் தாய் ? சுற்றியிருப்பவருக்கு ஆசை காட்டி ஏமாற்றவா? சாவே இதனால்தான் உன்னோடு எப்பவுமே சமாதானம் ஆக முடியாது.

மண்டை கொதிக்கிறது.

***

காருள் இருந்தது யார் என்று பார்க்க முடியா விட்டாலும் அந்தச் சிரிப்பை வைத்துச் சொல்கிறேன், அதற்குரியவளைச் சந்தித்திருக்கிறேன். முப்பது, முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நான் என் உத்தியோகம், வயது, உடல் செழிப்பில் இருந்தபோது

– எங்கோ ‘காம்ப்பிலிருந்து ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். விடிந்தால் சென்ட்ரல்’.

ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்று புறப்பட்டு விட்ட பின், ஒரு ஜோடி அவசரமாய் மூட்டை முடிச்சுடன் முண்டி யடித்துக் கொண்டு ஏறிற்று. பின்னாலிருந்து போர்ட்டர் அவர்களை உள்ளே தள்ளித் திணித்தான்.

எனக்கு எரிச்சலாய் வந்தது. இரவெல்லாம் இடம் எனக்கு மட்டும் என்று நினைத்திருந்தேன்.

என்னைப் பார்த்து விட்டாள். அவள் கண்கள் விரிந்தன. “அட நீங்களா?” அப்படியே மூட்டை முடிச்சுகளைப் போட்டபடி, என்னை இடித்துக் கொண்டு அருகே உட்கார்ந்து விட்டாள். என் கூச்சம் அவளுக்கு அக்கறையில்லை. ஆனால் எனக்கும் என் வெறுப்பினூடேயே ஒரு அல்ப சந்தோஷம் – ஸ்பரிச சபலம்தான்-அடித்துக் கொண்டதை மறுப்பதற்கில்லை.

அட, இடைச்சிக்கு முதல் வகுப்பு ஏறும்படி வாழ்வா? ஆனால் கேட்க நான் யார்? கொண்டவன் பாக்கியம். அவன் எதிர்சீட்டில் சரிந்து கிடந்தான். காங்கையடிக்கும் கண்கள் என் மேல் ஊன்ற முயன்றன.

“அவரைக் கண்டுக்காதீங்க.”

“ஏன் ஜுரமா, தண்ணியா?”

“ஐயோ அப்படியிருந்தால் தான் தேவலையே! அதை ஏன் கேக்கறீங்க? போதை மருந்து. ஊசிலே ஏத்திக்கிறது. எவ்வளவோ சொல்லியும், தடுத்தும் பார்த்தாச்சு. அது அவ்வளவுதான். இனிமே பூட்ட கேஸ்!”

எனக்கு மார்பு சில்லிட்டது… ஒடுக்கிக் கொண்டேன். இத்தனை குரூரமா? தனக்கு இன்னும் சௌகரியமாய் என்னை நெருக்கினாள்.

“ஆமா, அன்னிக்குக் குளத்தில் என்னைப் பார்த்து அப்பிடி மிரண்டுட்டே? உன் மூஞ்சியை நெனச்சு நெனச்சுப் பார்த்து, சிரிச்சுச் சிரிச்சு எனக்கு இன்னமும் மாளல்லே. அதுவே ஒரு வியாதியா ஆயிடுச்சு. ஓ, இவர் கிட்டேயும் சொன்னேன். இவரும் சிரிக்கிறார். ஆனா இவரு உன் பக்கம் தான். பாவம் விவரம் தெரியாத வயசு. ரொம்ப மிரண்டிருப்பான் என்கிறாரு. ஆனால் இன்னும் நீ அப்படியே சொல்லிக்கிட்டிருக்க முடியுமா? கல்யாணம் கட்டி, கொளந்தே குட்டி பெத்து, இப்ப எல்லா விவரமும் தெரிஞ்சிருக்குமே!” முழங்கையால் விலாவில் இடித்தாள். வலித்தது.

“உன் புருஷனைக் கவனி. மூஞ்சி வெளிருதே. வாந்தி வருதோ என்னவோ?”

“ஆமா-” சூள் கொட்டினாள். “அதுக்கு வேறென்ன வேலை? இதோ பாரு, வாழறதுக்கு உடம்பு, வழிகாட்ட புத்தின்னு ஆண்டவன் கொடுத்தனுப்பிச்சிருக்கான். அதன்படி நடக்காட்டி தன் வாந்தியிலே தானே முளுவிச் சாவ வேண்டியதுதான்!”

என்ன பேசுகிறாள்? தத்துவமா, விரக்தியா, கஷ்டத்தில் அலுத்துப் போன ஜீவன்…இடைச்சி பேச்சா இது?

ரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. ஸ்டேஷன் வருகிறதா? இல்லை , சிக்னல் தகராறா? அவள் பேராசை என்னைப் பூரா வருடியது. முகம் மிக்க அருகாமையில் வந்து விட்டது. அனல் மூச்சு என் முகத்தை எரித்தது. விழிகள் பச்சையாக மாறி விட்டனவா? அவைகளின் தனி ஒளி என்னை உறிஞ்சுவது போல எனக்கு உடல் ‘ஜிவ்’விட்டது. வெலவெலத்துப் போனேன். அவைகள் ரயில் ஜன்னலின் இரு பக்கங்களில் ஊன்றிக் கொள்ள நடுவே மாட்டிக் கொண்டேன். பயத்தில் திணறினேன். மூச்சுப் பிடித்து, என்னைத் தடுத்துக் கொண்டிருந்த கையை உதறி ஓடிப் போய் கதவைத் திறந்து, ரயில் இன்னும் நகர்ச்சியிலிருக்கை யிலேயே குதித்து விட்டேன். கைப்பெட்டியை ஸீட்டில் விட்டு விட்டது கூட ஞாபகமில்லை. உடல் ரத்தத்தைச் சுண்டி, குடலைக் குழப்பும் அந்தச் சிரிப்பின் துரத்தலினின்று ஓடினேன்.

ஓடி ஓடி, சட்டைப் பையில் இருந்த சில்லறையில் ஏதோ பஸ், நடை, பிச்சை, சவாரி, என்று ஓட்டமாய், வெற்று வயிறுடன், பிற்பகலோ, மாலையோ, விளக்கு வைத்தோ எதுவுமே நினைவில்லை. எப்படியோ வீடு போய்ச் சேர்ந்து உடுப்புக் கூடக் களையாமல் நேரே படுக்கையில் விழுந்தவன் தான் –

மஞ்சள்காமாலை.

மஞ்சள்காமாலை என்றால், படுக்கை மஞ்சள், தலை யணை மஞ்சள், உடுத்திய ஆடை மஞ்சள், கண் மஞ்சள், கால் கட்டைவிரல் வரையிலிருந்து தலை மயிர்க்கால் வரை மஞ்சள், பார்வை எல்லாமே மஞ்சள் குளிப்பாட்டு. குரலே மாறிவிட்டது. எந்த நிமிடம், பீங்கான் ‘சில்’லாய்ச் சுக்கலாகி விடுமோ? களைப்பா? அம்மாடி, அது போன்ற சோர்வை நான் பிறரிடம் கூடக் கண்டதில்லை. நினைப்பும் மூச்சும் இழையோடுவது எனக்கே தெரிகிறது. விழிக்க முடியா இமைகளுக்கடியில், ஸன்னமான பார்வைக் கீற்றில், கவலை தோய்ந்த முகங்கள் தெரிந்து மங்கின. தண்ணீரின் அடியிலிருந்து வருவன போல் விசும்பல்கள்.

“அம்மா, உடம்பில் நீர் வெச்சுடுத்தே, பார்த்தேளா?”

“நம் கையில் என்னம்மா இருக்கு? அவளிடம் சரணா கதியைத் தவிர நமக்கு என்ன தெரியும், நம்மால் என்ன முடியும்? அவள் கைவிட மாட்டாள், அவள் என்ன சத்தியம் மறந்தவளா?” அம்மா பாடுகிறாள். இந்த வயசிலும் குழல் போன்ற குரல்.

பெற்ற வயிறின் மஹிமை.

அகமுடையாளின் விரத பலம்.

குழந்தைகளின் பாசம் – வேளை அறவில்லை.

எல்லாம் சேர்ந்து முதலை வாயிலிருந்து மீண்டேன்.

மறுபிறவி.

மீள மூணு மாசம். தேற ஆறு மாசம். தனியார் நிறுவன மாயிருந்ததால், முதலாளிக்கு இரக்க மனசு இருந்ததால் – தூரத்து உறவு கூட வேலை காத்திருந்தது. ஆனால் உடம்பில் பழைய தென்பு, பலம் வரவில்லை. வரவேயில்லை.

‘வெடுக்’ கென்று விழிப்பு வந்ததே என்னைத் திடீரென்று சூழ்ந்து கொண்ட நிசப்தம்தான். காரணம்? சுற்றும் முற்றும் பார்க்கிறேன். கண்ணன் மேஜை மேல் கைகளினிடையே கவிழ்ந்த தலையுடன் தூங்குகிறான். ரேடியோவில் வைத்திருந்த அலை ஓய்ந்து விட்டது போலும். லேசாய் ‘கர்ர்புர்’

திடீரென்று பயமாயிருக்கிறது. வெளியிலிருந்து யாரேனும்?- இல்லையே, உள்ளே கதவு தாழிட்டுத்தானே யிருக்கிறது. ஆனால் நான் தனியாயில்லை. யாரும் தென்படவுமில்லை. பயமாயிருக்கிறது. என்னைச் சூழ்ந்த நிசப்தம் உண்மையில் அது இல்லை. தன்னுள்ளிருந்து எனக்கு ஏதோ தெரிவிக்கத் தவிக்கிறது. நரம்புக்கு நரம்பு ஏதோ தந்தி பறக்கிறது. பயமாயிருக்கு.

“கண்ணா!” உரக்கவே கூப்பிடுகிறேன். பதில் இல்லை . அப்படி இருக்க மாட்டானே! எழுந்து போய் அவன் காதண்டை கத்துகிறேன். “கண்ணா! கண்ணா!” புரண்டு கூடக் கொடுக்கவில்லை. லேசாய்க் குறட்டை பாவம், அசதி. எனக்குப் பயம் அதிகரிக்கிறது. அவன் தோளைப் பிடித்து உலுக்குகிறேன். ஊஹும். என் தொடல் அவன்மேல் பதிய வில்லை.

தற்செயலாய் என் பார்வை என் படுக்கை மேல் செல்கிறது. அங்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறேன். இதென்ன அதிசயம்? கனா இன்னும் ஓயவில்லையா? கனாக்குள் கனவா? இப்படியும் ஒரு நிலையா?

இப்போது அவளைப் பார்க்கிறேன். கட்டிலண்டை நின்று கொண்டிருக்கிறாள். பிறந்த மேனியில் வரை கோடாய்த் தெரிகிறாள். புன்னகையில் கருணை பொழிந்து கொண்டு அமானுஷ்ய அழகில் மிளிர்கிறாள்.

என் தோளைத் தொட்டுத் தன் பக்கம் இழுக்கிறாள். வரைந்த கோடு உதடுகளின் அசைவில் சொற்களைப் படிக்கிறேன். படிக்க வருகிறது.

நான் ஸத்யை
நான் நிர்வாணி
நான் வ்யாபதி
நான் நித்யை
நான் மரணி

அவள் கைகள் என் கழுத்தில் விழுந்து ஆலிங்கனத்தில் இறுகுகின்றன. அவள் மார்பின் மெத்தில் உருகுகிறேன். கரைகிறேன், எனக்கில்லாமல் போய் விடுகிறேன்.

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *