மதிப்பீடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 6,679 
 
 

பத்தாம் வகுப்பிற்கு இன்று கடைசி தேர்வு, விடைத்தாள்களைச் சேகரித்து, சரிபார்த்து அடுக்கி, அலுவலகத்தில்ஒப்படைத்துவிட்டு ரயில் நிலையத்தை அடைந்த போது மணி மூன்று. நாளையிலிருந்து விடுமுறை. ஆசிரியர் தொழிலில்இது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் நூறு சதவிகித தேர்ச்சி என்பது குறைந்தபட்ச இலக்கு. தேர்வு முடிவுகள்எதிர்பார்த்தபடி வந்துவிட்டால், ஒரு வருடத்திற்குக் கவலையில்லை. இல்லையென்றால் நிலைமை இன்னமும்மோசமாக மாறிவிடும் அபாயம். மனது ஒரு நிலையில் இல்லாமல் குழப்பத்துடன் அலைபாயத்தொடங்கியது. இந்தவருமானத்தில் மாத வாடகை கொடுத்து, வாழ்க்கை நடத்துவது மிகுந்த சிரமமாக இருந்தது. வேறு ஏதேனும் வேலைக்குமுயற்சி செய்யலாமா என்ற நீண்ட நாள் சிந்தனை மீண்டும் தலைதூக்கியது.

வழக்கமாகப் பயணம் செய்யும் அதே ரயில் தான், ஆழ்ந்த சிந்தனையுடன் ஜன்னலோர இருக்கையிலிருந்து வெளியேதொடர்ச்சியாக தெரிந்த மின் கம்பங்கள், ஆங்காங்கே இடையே தெரிந்த பசுமைகள், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியசிறிய கால்வாய், எனக் கண்ணில் பட்டதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென “இரவும் வரும் பகலும் வரும்” என்ற பாடல் கவனத்தைக் கலைத்தது. கம்பார்ட்மென்டில் கண் தெரியாதபெண்மணி ஒரு கையில் மூன்று வயது சிறுமியை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தட்டை வைத்துக்கொண்டுபாடிக்கொண்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து ஒருவர் “ரேஷன் கார்டு கவர், சீசன் பாஸ் கவர்” என்று விசில், நக வெட்டி குழந்தைகள் விளையாடும்குயூப், போன்றவற்றை ஆங்காங்கே மாட்டிவைத்து ‘யாராவது வாங்கமாட்டார்களா’ என்ற ஏக்கத்தில் கண்கள் அலைபாயவிற்றுக்கொண்டிருந்தார்.

சிறிது நேர இடைவெளியில் இரண்டு துருவங்களிலிருந்து வந்த ‘கல்லே, வேர்கல்லெ, சால்ட் கல்லே’ என்ற இருவேறுகுரல்கள் என் கவனத்தை கவர்ந்தது.

‘இரண்டு வேர்கடலை விற்பவர்கள் ஒரே கம்பார்ட்மென்டில்’ என்ன நடக்கிறது என்றுதெரிந்துகொள்ள எனக்கு சுவாரஸ்யம் கூடியது. அவர்களைக் கூர்ந்து கவனித்தேன். ஒருவர் சற்று வயதானவர்,

லுங்கிகட்டிக்கொண்டு அதை தூக்கி சொருகிக்கொண்டிருந்தார். இன்னொருவன் சிறுவன். பதினாறு வயது சொல்லலாம். பேன்ட்போட்டிருந்தான், இருவருமே கொஞ்சம் அழுக்கான டீஷர்ட் அணிந்திருந்தார்கள்.

கூட்டத்தை விலக்கி நகர்ந்து இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது பயணி ஒருவர் அந்த சிறுவனிடம்இடைமறித்து ஒரு ஐம்பது நோட்டைக் கொடுத்து வேர்க்கடலை கேட்டார், சில்லறை தர அவன் மிகுந்தசிரமப்பட்டுக்கொண்டிருந்தான்.

“இன்னாடா போணியே அவலியா சில்லரைக்கு தடவறே” என்றார் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்த இன்னொருவர்.

“இன்னும் போணியே ஆவலென்னே, இப்பத்தானே வந்தேன்” என்றான் அந்த சிறியவன்.

“மறந்தே போச்சுடா, இப்பதான் முடிஞ்சதா? அப்புறம் ஏன் இன்னைக்குப்போய் கூவினுருக்க போடா, போய் சாப்பிட்டுதூங்கு” என்று அவனை ஆதரவாக தட்டிக்கொடுத்துவிட்டு, ”கல்லே வேர்கல்லெ, சால்ட் கல்லே” என்று கூவிக்கொண்டேஅப்போது வந்த நிலையத்தில் ரன்னிங்கில் இறங்கி அடுத்த கம்பார்ட்மென்டிற்கு சென்றார். பாதிக்கும் மேல் பயணிகள்இறங்கியதால்
ஏறக்குறைய கம்பார்ட்மென்டே காலியானது போலிருந்தது.

அந்தச் சிறுவன் சற்றே சோர்வாக என் அருகில் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்தான். அப்போது தான் அந்தச் சிறியகூடையைக் கவனித்தேன். வேர்க்கடலை முழுவதுமாக நிரம்பி இருந்தது. அளப்பதற்கு ‘வைன்’ பாட்டில் மூடி போன்றஒன்றை வைத்திருந்தான். மிகவும் சிறியதாக இருப்பதாக எனக்குத் தோன்றியது.

“தம்பி கொஞ்சம் வேர்க்கடலைகொடுப்பா” என்று ஒரு பத்து ரூபாயை அவனிடம் நீட்டினேன்.

அந்த மூடியில் கோபுரமாக வேர்க்கடலையை எடுத்து லாவகமாக என்னிடம் கொடுத்துவிட்டு பத்து ரூபாயை வாங்கி கீழ்பாக்கெட்டில் சொருகிக்கொண்டான். தினமும் இதுபோன்ற சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதால் அதே வயதைஒத்த சிறுவன் வேர்க்கடலை விற்பதைப் பார்த்து மனம் என்னவோ செய்தது.

“ஏண்டா படிக்கிற வயசு, ஸ்கூலுக்கு போய்ஒழுங்கா படிக்கலாமில்லை?” என்றேன் சற்று உரிமையுடன்.

“டென்த் சார், இன்றைக்குத் தான் கடைசி எக்ஸாம், நல்லா எழுதியிருக்கேன் கண்டிப்பா பாஸாயிடுவேன்” என்ற அவன்கண்களில் நம்பிக்கை தெரிந்தது.

“ம், குட் அப்பா என்ன பண்றார்?” என்றேன் அவன் அந்தப் பெரியவரிடம் பேசும்போதும் என்னுடன் பேசும்போதும் இருந்தமாற்றத்தைக் கவனித்து. ஆச்சரியமாக இருந்தது. .

“விவசாயம் சார் ஊர்ல”

“அண்ணன்? தம்பி?”

“இப்ப பாத்தீங்கல்லை அவர் தான் மூத்தவர், அப்புறம் நானு”

“எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்டா, இந்தக் கடலையெல்லாம் எங்கேடா வாங்கறீங்க?”

“இதா?” என்று அவன் கூடையில் இருந்த வேர்க்கடலையைக் காட்டி,

“எங்க நிலத்தில வெளஞ்சது சார்” என்றபோது அவன்வார்த்தைகளில் லேசான கர்வம் தெரிந்தது.

“நிஜமாவாடா, நிலத்தில நெல்லு போடறதில்லை?”

“நெஜம் தான் சார், ஊர்ல நாப்பது சென்ட் நெலம் குத்தகைக்கு எடுத்திருக்கோம். ரெண்டு ட்ரிப் நெல் ஒரு ட்ரிப் வேர்க்கடலைபோடுவம்.”

“கேக்குறதுக்கே சந்தோஷமா இருக்குடா, ஆமா பூர்வீகமே விவசாயமாடா?”

“ம், இப்பங்கூட நல்லா ஞாபகமிருக்கு, எங்க தாத்தா காலத்தில நிறைய நிலம்லாம் இருந்துச்சு, அவரு தான் அந்தகிராமத்தில கிராமினி. நிறையப் பேர் தாத்தா பண்ணைல வேலை செஞ்சிட்டிருந்தாங்க.

வீட்டுக்குப் பின்னாடி பெரியஅண்டால கூழ் காச்சி வச்சிருப்பாங்க, அதை குடிச்சிட்டு காலைல எல்லாரும் பண்ணைக்காட்டுக்கு போவாங்க, ம், அதெல்லாம் ஒரு காலம் இப்ப நினைச்சா கனவு மாதிரி இருக்கு” என்று அலுத்துக்கொண்டான்

“அப்படி இருந்தவங்க எப்படிடா இந்த நிலமைக்கு வந்தீங்க?”

“அதுவா தாத்தா காலத்துக்கு பின்னால, சித்தப்பா சொத்து பிரிச்சு கேட்டாரு, பரம்பரையா வர்ற சொத்தை எதுக்குபிரிக்கிறதுன்னு, அப்பாரு எல்லாத்தையும் சித்தப்பாவுக்கே பாத்தியதை கொடுத்துட்டு, வீட்டை விட்டுக் கட்டினவேட்டியோட கிளம்பிட்டாரு, அம்மாவுக்கு அப்பா மேலே ரொம்ப மரியாதை,

ஒண்ணுமே பேசாம அவங்களும்கிளம்பிட்டாங்க, ஒருகைல எங்க அண்ணன், இன்னொரு கைல நானு”

“ஐய்யோ அப்புறம்”

“அப்ப நான் சின்ன புள்ள, எங்கே போறதுன்னே தெரியலை, நல்லா வாழ்ந்த குடும்பம் அதுனால அந்த ஊரில இருக்கஅப்பாருக்கு புடிக்கலை, நேரா பக்கத்திலிருந்த ரயில்வேஸ்டேஷனுக்குப் போயிட்டோம். வந்த எதோவொரு ரயில்லேயும்ஏறிட்டோம். கையில டிக்கெட் வாங்கக்கூடக் காசில்லை, அப்பாரு

துக்கம் தாளாம குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சாரு, அம்மா அவரை சமாதானப்படுத்த ரொம்ப சிரமப்பட்டாங்க, கொஞ்ச நேரத்தில வந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் எங்க கைலடிக்கெட் இல்லைன்னு அடுத்து வந்த ஸ்டேஷன்ல இறக்கி உட்டுட்டாரு. தாத்தாவை அவருக்கும் தெரியும்போல அதனால வேற ஒண்ணும் கேக்கலை”

“ஸ்டேஷன்ல இறங்கி அங்கேயே உட்கர்ந்துட்டிருந்தோம், எங்கே போறது என்ன செய்யறதுன்னு ஒண்ணுமே புரியலை, கொஞ்ச நேரத்தில வெளில வந்து, கால் போன போக்குல போயிட்டிருந்தோம், நடந்துட்டே இருந்ததால கால் வலிச்சது, கூடவே பசி அதனால நான் அழ ஆரம்பிச்சேன், அப்பாருக்கு ஒண்ணும் புரியலை, பிச்சை கேக்குறதுக்கும் புடிக்கலை, அந்தஊர் பெரியவர் கிட்ட நிலமையச் சொல்லி உதவி கேட்டார், அவருக்கு என்ன தோணுச்சோ தன்னோட நிலத்திலகொஞ்சத்தை எங்களுக்குக் குத்தகைக்கு கொடுத்தார், அப்புறம் வாடகைக்கு ஒரு வீடும் புடிச்சு கொடுத்து கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும் கொடுத்தார்.”

“பிரச்சினை ஒரு வழியா தீர்ந்துச்சா?” என்றேன் பெருமூச்சுடன்.

“அதான் இல்லை‘பட்ட காலிலேயே படும்’னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி அந்த வருஷம் மழையே சுத்தமா இல்லை,வானம் பாத்த பூமி’ எல்லாமே நஷ்டமாபோச்சு, பின்னால பாங்க் லோன் அங்க இங்கன்னு போயி ஒரு வழியா போட்டதஎடுக்க முடிஞ்சது. பெரிசா ஒண்ணும் லாபமில்லை, அப்புறம் நடு நடுவுல வேர்கடலை, அதைக்கூட அங்கியே, அப்புடியேவித்தா பெரிசா லாபம் இல்லாததால, அண்ணன் தான் இந்த மாதிரி வறுத்து ரயில்ல வித்துடலாம்னு யோசனைசொல்லுச்சு, அப்பாரு முதல்லஇதுக்கு சம்மதிக்கலை, அப்புறம் வேற வழியில்லாம ஒத்துகிட்டாரு. ஆரம்பத்துலஅண்ணனே தனியாளா வித்திட்டிருந்துச்சு, இப்பதான் ஒரு ரெண்டு வருஷமா நானும் அவருக்கு உதவியா இருக்கேன், நெல்லுல போட்டதை வேர்கடலைல எடுத்துடறோம்”

“அதான் வேர்கடலைல நல்ல லாபம் வருதே, ரெண்டு ட்ரிப் நெல்லு போடறதையும் விட்டுட்டு வேற எதுனா நல்ல லாபம்வருகிறதாப் பார்த்து விவசாயம் செய்யவேண்டியது தானே?” மனதில் பட்டதை கேட்டேன்.

“அண்ணன் கூட இதையே தான் சொல்லிச்சு, அப்பாருதான் ‘உழவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது’, எல்லத்துலேயும் லாபநஷ்ட கணக்கு பாக்கக்கூடாதுன்னு மறுத்துட்டாரு, அவரு சொல்றதுலேயும் நியாயம் இருக்குல்லசார், நான் இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சு இன்னொரு முறை பார்க்கலாம்” என்று சினேகத்துடன் விடைபெற்றான். அவன்செல்லும்போது கூடைக்கு மேலிருந்த அந்த ‘வைன்’ பாட்டில் மூடி ஏனோ எனக்குச் சற்று பெரிதாக இருப்பதாகத்தோன்றியது. தலை மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சுய நினைவுக்கு வந்தபோது, குழப்பம் தீர்ந்து மனம் ஸ்படிகம் போலாகியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *