கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 28,510 
 

முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா… சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல் அசைந்துகொடுத்தது.

“அட, பொறுத்தா… அழகுப்புள்ள. ஒரு மூணு நாத்தேன். எச்சுமி வந்துருவாள்ல” என்றபடி அதன் அருகில் வந்தான்.

மனுசனுக்கிருக்கும் அத்தனை ஆயாசமும் களைப்பும் தெரியும் சிங்கியின் முகத்தை, வயித்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். நிறைமாசக் கர்ப்பத்தின் சுமையை ஒரு பெருமூச்சில் வெளியேற்றிய சிங்கியின் வாலைத் தூக்கிப் பின்மடியைப் பார்த்தான். இசைவாக அசைந்து கொடுத்த சிங்கி, இன்னொரு நீண்ட மூச்சுவிட்டது.

“சரித்தா, சரித்தா… செத்த பொறுத்துக்கோ” என்றபடி இடுப்பில் கட்டி எடுத்துவந்த நான்கைந்து நாட்டுப்பழங்களை எடுத்து அதுக்குக் கொடுத்தான்.

“கிறுக்கு மனுசா, ஒன் கும்பி காயுதேனு கட்டினவ பதர்றதப் பார்க்காம இங்கன வந்து செல்லங் கொஞ்சுற சீரப் பாரு”னு வந்த பாண்டியம்மா தந்த ஒரு சொம்பு நீச்சத்தண்ணியையும் ஒரே மொடாவில் குடித்தான்.

மேவாயைத் துடைக்கும் புருஷனின் ஒட்டிய வயிற்றைப் பார்த்த பாண்டியம்மா, “ந்தா… இன்னும் சோம்பித்தான் கிடக்கு வவுறு. சொஞ்சம் உண்டன இன்னிக்குச் சோத்த சாப்பிடு. உப்புக்கண்டம் ரெண்டு துண்டு பொரிக் கட்டா… சோறு கூட இறங்கும்ல?” என்றபடி தொழுவை ஒட்டியபடி இருந்த அறைக்குள் போனாள். ஓர் ஓரத்தில் அடுப்படி, நடுவுல கட்டில், மறு ஓரத்தில் துணிமணி தொங்கும் கொடி என எல்லாமுமாயிருந்த அந்த அறை, இன்னமும் ஈரப் பிசுபிசுப்போடு நசநசத்துக்கிடந்தது.

களவாணி மழை1

“சம்சாரி வேலைக்குன்னு இந்த ஊருக்கு வந்து பத்து, பாஞ்சு வருஷமிருக்கும்ல. வருஷம் மாறாம இந்தப் படப்பு போடற வேலையைக் கெடுக்கன்னே பிசுபிசுன்னு வந்துடுதுதுத்தா இந்த மேனாமினுக்கி மழை” என்ற பெரியாம்பிளையின் ஆவலாதியைக் கேட்காத மாதிரி, துணி மூட்டையாச் சுருண்டிருந்தாள் வள்ளிமயில்.

“எந்திரித்தா, கவுந்து படுத்திட்டே யிருந்தா கருந்தரையும் கம்பளிதான். எந்திரி, எந்திரி” – பாண்டியம்மாளின் குரலுக்குச் சிறு முனகலுடன் திரும்பிப் படுத்த வள்ளிமயிலின் தலைமாட்டில் வந்து உட்கார்ந்த பெரியாம்பளைக்குச் சட்டென்று அவளது முகம், சிங்கியின் களைத்துச் சோர்ந்து கனிந்த முகம் போலிருக்க, “சீச்சீ… என்ன பொசகெட்ட நெனப்பு” என்று தலையை உதறிக்கொண்டான்.
`தன் ஆத்தாதான் வள்ளிமயிலாக வந்து பொறந்திருக் கிறதாக நினைப்பு பெரியாம்பிளைக்கு.

அம்புட்டுச் செல்லமும் அவ மேலதான். பாண்டிமுனி கோயிலுக்குக் கெடா நேந்து பொம்பளப்பிள்ள பொறந்த அன்னிக்கு, வயல் வேலைக்கு வந்த கொமருகளுக்கு பிரியாணியும் சினிமாக் காசும், பெருசுகளுக்கு சாராயக் காசும் கொடுத்துக் கூத்தாடிட்டாப்ல. சிங்கிகூட வள்ளிமயிலுக்கு அடுத்தாப்புலதான்.’

“மவ மொவம் சுணங்கிடக் கூடாது அப்பனுக்கு. வேட்டி மடிப்புல, சட்டை மடிப்புல, டவுசரு பாக்கெட்டுலன்னு இருக்கிறத எல்லாம் எடுத்துக் கையில கொடுத்துட்டு, வெத்து ஆம்பளயா அம்புட்டுச் சிரிச்சுட்டு நிப்பாரு” – பாண்டியம்மாளின் அலுப்பிலும் சின்னப் பவிசிருக்கும். தன் பொழப்பப் போல காடு, கழனி, மாடுன்னு இல்லாம மகளை டீச்சரோ, நர்ஸோ ஆக்கிடணும் கிறதுதான் ரெண்டு பேரின் ஆசையும். வள்ளிமயிலையும் சிங்கியையும் சுத்தித்தான் பெரியாம்பளையின் கண்ணும் மனசும்.

“அவள இப்ப எழுப்பாட்ட என்ன… செத்தப் படுத்திருக் கட்டும்” என்ற பெரியாம்பளையின் குரலை அமுக்கியபடி, “ஏ ள்ளி… மசமசன்னு கெடக்காத. எந்திரி, சுலுவாக் கெளம்பணும்ல” என்றபடி பாண்டியம்மா உள்ளே வந்தாள்.

வள்ளிமயிலுக்கு அந்த அழுக்குத்துணிச் சுருளும், அப்போதுதான் பொரித்த உப்புக்கண்டத்தின் சுறுசுறு கார மணமும் கிறக்கத்தில் ஆழ்த்தின. பூனை கவுந்து சுகம் காண்பதுபோல மேலும் குறுக்கிப் படுக்க யத்தனித்தவள், தலைமாட்டில் உட்கார்ந்திருந்த அப்பனைப் பார்த்து “அப்பே, யார வையிற?” என்றபடி வாகாகத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

சுடுசோறின் ஆவி மணமும், நாட்டுத் தக்காளி ரசமும், உப்புக்கண்டத்தின் மசாலா ருசியும் மூக்குத் துளைக்க, புருஷனுக்குப் பொசுக்கப் பொசுக்க ஈயத் தட்டில் எடுத்து வந்த பாண்டியம்மா கால் பெருவிரலால் வள்ளிமயிலின் தலையை லேசாகத் தெத்திவிட்டு, “ந்தா… செல்லம் பொழிஞ்சது போதும் எந்திரி” என் கையில், சிங்கி ஒருவித அவஸ்தையாக “ம்மா” என்றது.

கேட்டதும் கண்களில் தெரிந்த பசி அடங்கிப் போனது பெரியாம்பளைக்கு. `பாவம், பாரம் இறங்குறவரை பாடுதான் பொம்பளப் பொறப்புக்கு’ என்று நினைத்துக்கொண்டான்.

பக்கத்தில் உட்கார்ந்து “ரோசனை இருக்கட்டும் வயிறு குளிந்தாத்தான மேலு வேர்வை சுகிக்கும். அள்ளித் தின்னு” என்ற பாண்டியம்மாவுக்கு வள்ளிமயில் இன்னமும் புரண்டுகொண்டிருப்பது எரிச்சலூட்ட, “சிறுக்கி மவளுக்குச் சோத்த முக்கிட்டு முச்சூடும் மொடங்கத்தேன் தெரியும். எந்திரி, எந்திரி” என்று எட்டி நிமிண்டினாள்.

கண்ணுப் பீளையை எடுத்து பாண்டியம்மாவின் சேலை முந்தியில் துடைத்துவிட்ட வள்ளிமயில், பாவாடையைச் சரிசெய்தபடி உள்முற்றத்துக்குப் போனாள். மில்லு வேலைக்குப் போகும் ராசுவின் சைக்கிள் மணிச் சத்தம் கேட்க, `இந்த நேரத்துக்கு எப்படி?’ங்கிற அர்த்தத்தில் புருஷனும் பொஞ்சாதியும் பார்த்துக்கொண்டார்கள்.

ராசு, மகன் ஒரு பய ஊதாரியாச் சுத்துறதும், தன் வேலையைக் கெடுத்துக்கிட்டுக் குடிச்சுட்டு எங்கேயாச்சும் கவுந்துகிடக்கும் மகனை ராசு தூக்கியாறதும் தெரிஞ்ச சேதிதான். `எந்தப் புள்ள பொறந்தாலும் இப்பல்லாம் எடக்கு மடக்காச்சுன்னா நொம்பலந்தேன்’ என்ற அர்த்தம் அந்தப் பார்வைக்கு.

“ராசு ஒரு வாயில்லாப் பூச்சி. ‘அய்யோ’னு ஆராச்சும் ஒக்காந்தா, ஓடிப்போய் கைகொடுத்து எழுப்பி, கஞ்சித்தண்ணியும் கொடுத்து, வழிச் செலவுக்குப் பணமும் கொடுப்பாப்ல. அவன் ஒருத்தனுக்குக்காகத்தேன் மழைத் தூத்தல் தவறாமப் பொசபொசன்னாவது எட்டிப்பாக்குது” – வெயிலாத் தேவர் நேத்து சந்தையில பாக்குறப்ப சொன்னது நினைப்புக்கு வர, “அப்பனுக்குப் புள்ள அனத்தமால்ல பொறந்திருக்கான். ஒன் பிரசவ சமயத்துல திக்குமுக்காடிக்கெடந்த எனக்கு, ராசு பொஞ்சாதி குருவம்மாதேன் அட்டியல அடவு வச்சுக் கடன் கொடுத்தாப்ல. இன்னி வரை ஒரு ஏப்பம் விடல அதப்பத்தி” என்றவாறே சொம்புத் தண்ணியை எடுத்தான் பெரியாம்பிளை.

“நம்ம வள்ளிமயிலு சைக்கிள்ல மாட்டக் கூடை கேட்டா. குருவம்மா நல்லாப் பின்னுவாப்லனு நாந்தேன் அங்கன போய்க் கத்துக்கிடச் சொன்னேன். ஒங்காதுல போட்டு வைக்கேன்” என்றபடி சொம்பை வாங்கிய பாண்டியம்மாளின் காலில் நறுக்கென்றது.

“ஸ்… அப்பே… கருவேலக் கழுதை எங்கன பாத்தாலும்ல உசிரக் குடிக்கி” என்று முகம் கடுக்க, முள்முனையைப் பிடுங்கிப்போட்டபடி கழனிப் பானையைக் கழுவத் தொடங்கினாள்.

வாயைக் கொப்பளித்து வட்டிலக் கழுவுன கையோடு வானத்தை வெறித்துப் பார்த்த பெரியாம்பளை, “கழுத… இன்னிக்கும் படப்பைக் கட்டவிடாதுபோல” என்கவும், மழை மறுபடியும் தூற ஆரம்பித்தது.

தை மாச அறுப்பு முடிந்ததும், மாசித் தொடக்கத்தில் கதிரடிச்சுக் காய்ந்ததைப் பெரிய படப்பாகச் சேர்த்துக் கட்டிவைப்பது வழக்கம்தான். ஆனாக்க, அப்படிக் கட்டவிடாமல் பிசுபிசுன்னு தூறல் மழை மாசி பிறந்தவுடனே ஆரம்பிச்சு, படப்பு கட்ற வேலையக் கெடுக்கும். அதுக்கு `களவாணி மழை’ங்கிற பேர் வந்த கதையைப் பாட்டையா சொல்லக் கேள்வி பெரியாம்பளைக்கு.

பாட்டையா பாத்தி கட்டிப் பாய்ச்சுவதில் ரொம்பக் கெட்டியானவர். அம்பது அறுபது பாத்திகளை மூன்று மணி நேரத்துக்குள் ஒத்தை ஆளாகப் பாய்ச்சிவிடுவார். பதினோரு மணிக்குக் கம்பங்கூழ் குடிக்க, பேரன் பேச்சுத்துணைக்கு வேண்டும். அஞ்சாப்புக்கு மேல் படிப்பு ஏறலைன்னு சம்சாரி வேலைக்கு, பேரன் வந்ததில் அவருக்கு வருத்தம்தான். பெரிய மீசையை ஒதுக்கிவிட்டு பாட்டையா கூழ் குடிக்க, மிதுக்கு வத்தல், பச்சைமிளகாய் எடுத்துக்கொடுப்பது பெரியாம்பளைதான். மொத வத்தலக் கடிச்சவுடனே கதை ஆரம்பிக்கும். ஆகாசத் தண்டி நெல்லுக் கதிரு, மலைத்தண்டி படப்பு எல்லாம் கலந்து நடமாடும் கதைகளை, வாய் பொளந்து கேட்பான்.

ஒருக்கா அப்படித்தான் இந்த `களவாணி மழை’ கதை மிதந்து வந்தது. மப்பும் மந்தாரமுமாகத் தூறிக்கொண்டு இருக்கிற வானத்தைப் பார்த்து, “ `களவாணி’னு ஏன் சொல்ற பாட்டையா?’’ என்ற பெரியாம்பளையின் கேள்விக்கு வத்தல்கடி காரம் மூக்கேறக் காத்திருந்து செருமிவிட்டுச் சொன்னார்…

“லேய்… களவாணித்தனம் என்னிக்கும் ஆகாதுங்குறதில்ல. அதுலயும் ஒரு நேர்கோடு இருக்கணுமப்பு. இந்த மழை, படப்பு போடறவன் பொழப்பக் கெடுக்கிற களவாணி. சும்மா மொறச்சுக்கிட்டே இருக்கிறவன்கிட்ட வீரம் இருக்காதுங்கிற மாறி, நாம நல்லா மாசி வெயில் தொடங்கிடுச்சின்னு இருப்போம். அம்புட்டுக் காஞ்ச வைக்கலையும் அம்பாரியாச் சேத்து வெச்சுட்டுக் கஞ்சி குடிச்சிட்டு இறுக்கப் பிரி மேல கட்டுவோம்னு வீட்டுப் பக்கம் ஒதுங்கியிருப்போம். நடு மதியம் மூணு மணிக்குத் திடீர்னு பொசபொசன்னு தூத்தல் போடும். `அட, ஓலையில ஒண்ணுக்குப்போன மாதிரி ஒரு சத்தம் கேக்குதே?’னு ஓடிவந்தா பிலுபிலுன்னு பிடிச்சுக்கும். `அய்யோ அப்பே’னு கித்தானைப் போட்டு மூடி, மூலை மூலைக்குச் செங்கல்லு வெச்சு நிமிருறப்பச் சுள்ளுன்னு வெயிலடிக்கும். நல்லா வாயில வரும் பார்த்துக்க அப்போ”னு தொடரும் பாட்டையாவை மறித்து, “அதுக்கு எதுக்குக் களவாணிங்கணும் அத?”னு பெரியாம்பளை கேட்பான். “நம்ம பொழப்பக் கெடுக்கிறதால, அதுலயும் களவாணிப் பயலுகளுக்குச் சகாயம் செய்யறதால படப்புக் களவாணி மழைல்லா அது. நாம கித்தானப் போட்டு வெச்சுட்டு மறுநா வந்து பாத்தா, மொந்தை கலையாத மாதிரி தெரியும். ஆனாக்க சல்லுசா ஊடாவுல ஒரு சாக்கு அள்ளிட்டுப் போயிருப்பானுக. இப்படிச் சேர்த்துவெச்சுச் சின்ன படப்பைப் போட்டவுகலாம் ஊர்ல உண்டுல்ல. அவனுக பவுசப் பார்க்குறப்ப பாவம் இந்தக் களவாணி மழைதான் திட்டுவாங்கும் அவனுகளுக்குப் பதிலா” என்று முடிக்கையில் ஒருவாய் கூழ்கூட மீதமிருக்காது. வரப்புல குனிஞ்சு ஒரு கை நீரள்ளி, வாயத் தொடச்சுட்டு, மறுக்கா அள்ளி உள்நாக்குல விட்டுக்கொள்வார் பாட்டையா. அப்படியே கதைகளினூடாகப் படப்பு கட்டும் நுணுக்கத்தையும் சொல்லிக் கொடுப்பார். அகல ஆரம்பித்து, நெருக்கம், செருக்கமாக கோத்துச் சிதறச் சிதறச் சேர்த்து மேற்கூரை மாதிரி உச்சி முடியும் வரை ஒரு கவனத்தோடு பாட்டையா படப்பு கட்டுவதை அலுக்காமப் பார்த்திருக்கிறான் பெரியாம்பளை. மூணாப்புல டிராயிங் மாஸ்டர் வரையச் சொன்ன வீடு, சூரியன், மலை, ஒரு மரம் படத்தவிட பாட்டையாவின் படப்பு அழகா அம்சமா வந்திருக்குன்னு அவனுக்குத் தோணும். இந்த நினைப்பு தெரிஞ்சாலே டிராயிங் மாஸ்டர் முட்டி போட வெச்சுடுவார்னு சிலுத்துக்குவான்.

முழு சம்சாரியா வாலிப வயசில இறங்கினப்பலருந்து இந்தப் படப்பு கட்டுறதுல இவனை அடிச்சுக்க ஆளில்லைங்கிற தெனாவட்டு பெரியாம்பிளைக்கு உண்டு. கட்டறதோட இல்லாம காவலுக்கும் நிப்பான். `களவாணி மழை’ போக்குக்கு ஏத்தாப்ல ஈடுகொடுத்து, படப்பைக் கட்டி முடியுமட்டும், அங்கன இங்கன உருவிட்டுப் போகாம காவக் காக்குறதுலயும் துடியானவங்கிறதால அவனுக்கு டிமாண்டு சாஸ்திதான்.

`இன்னைக்கும் வளவு வீட்டுக்காரவுகளுக்குப் படப்புக் கட்டிட்டுப் பாதியில கித்தானைப் போட்டுட்டு வந்துருக்கோம்’னு நினைப்பு சுருக்குங்க… தலையை உதறி, பாட்டையாவில் இருந்து பொழப்புக்கு வந்தான்.

“மழை செத்த அசந்தாப்புல இருக்கு. போய் சோலியத் தொடங்கலாம்ல” என்ற பாண்டியம்மாவின் குரலைத் தொடர்ந்து வள்ளிமயில் “அப்பே” என்று வந்து நின்றாள். நிகுநிகுவென்று ஒரு மினுமினுப்பு காதோரம் அவளுக்குக் கூடிவந்ததுபோல் இருந்தது. தன் கண்ணுக்குத்தான் அப்படித் தெரியுதோன்னு கொஞ்சம் உத்துப் பார்த்தான்.

“என்னப்பே”னு மகள் குறுக்கக் கை காட்டியதும் “எங்கன கிளம்பிட்ட?”னு பேச்சுக் கொடுத்தான்.

“சுலோச்சனாக்கா வீட்டுக்கு மெகந்தி போடக் கத்துக்க அப்பே… மருதாணீ.”

“வெரசா வீட்டுக்கு வந்துடுவல்ல?”

“எட்டு வெக்கிறப்பவே வெரசான்னா வெலுக்வெலுக்குன்னு ஓடவா முடியும்?”

“ஏய், திமிரப் பாரு, மயிலு… வாயடக்கு” – பாண்டியம்மா சத்தம் போட, ரோஸ் நிற துப்பட்டாவைக் கழுத்தில் சுத்திக்கொண்டே, வலிப்புக் காட்டிவிட்டு, சைக்கிளை எடுக்கும் மகளைப் பாத்துச் “சூதானம் த்தே” என்றபடி தானும் கிளம்பினான்.

“ராத்திரிக்கு வளவுவீட்டுப் படப்புக் காவல்”னு சத்தம் கொடுத்துவிட்டுச் செருப்பை மாட்டினான். ஒட மரம் முள்ளுதிர்த்துக் குத்தும் ஒத்தையடிப் பாதை கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தான். வெயில் முன்கோபக்காரப் பொண்டாட்டிபோல `புர்’ரென்று இருந்தது.

`இருக்கட்டும், இருக்கட்டும். படப்பு வேலை முடியத்தண்டி’னு நினைச்சுக்கிட்டே நடையை எட்டிப் போட்டான்.

எதிரே ராசு மகன் சைக்கிளில் கோக்குமாக்காக வருவது தெரிய, வேகத்தைக் கூட்டி நடந்தான்.

“சனியன், மூஞ்சில முழிக்க வேண்டாம்னாலும் முட்டிட்டு வருது” என்று முணுமுணுத்துக்கொண்டான். அவனும் இவனை உரசுவதுபோல வந்துவிட்டு, சட்டென்று திரும்பி, மணியடித்துக்கொண்டே போக, “வெத்து ரோட்டுல பவுசப் பாருன்னு” ஒத்த வீட்டுக்காரி சத்தத்துக்குத் தலையாட்டி ஆமோதித்தான்.

ராசு மகன் பேரக் கேட்டாலே பாண்டியம்மாவுக்கும் பச்சநாவி. `அம்புட்டுப் பொறுக்கித்தனமும் குத்தகைக்கு எடுத்தாப்ல குடிவந்துருக்கு அப்பன் பேரக் கெடுக்கன்னு…’ என வைய்யாம அவனைக் கடந்து பாண்டியம்மா போனது இல்லை.

போன வருஷத் திருவிழாவுல ராசு மகன் பண்ணுன ரவுசு கொஞ்சநஞ்சம் இல்ல. கூத்துக்கட்டுற பொம்பிளப் பிள்ளைக உடுப்பு மாத்துற அறைக் குள்ள தண்ணியப் போட்டுட்டுத் தடாலடியா நொழஞ்சு வம்புக்கிழுத்த அவனை, பெரசிடன்டு ஐயா இல்லைன்னா சனம் வகுந்திருக்கும். கோயில் பந்தக்கால் பிடிச்சுவரும் சுந்தரேசன் என்கிற சுண்டுவை வலையன்குளம் கூட்டிப்போய் சாராயம் ஊத்திக்கொடுத்துக் கூட்டிவந்து, அக்கிரகாரமே ராசு மகனைத் திட்டித்தீர்த்தது. வேம்பு ஐயர் மகள் மீனாவையும் டிராயிங் மாஸ்டரையும் சேர்த்து, கோயில் சுவரில் எழுதியதற்குக் கட்டிவைத்துத் தோலுரிக்காத கொறைதான். மில்லில் வேலைபார்க்கிற தவக்களையண்ணன் வாயக் கட்டி வயித்தக் கட்டிச் சேத்த பணத்தை `இடம் வாங்கித் தாரேன்’னு ஏப்பம்போட்டதற்கு அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் அத்தனை அடி, ஒதை வாங்கினான். ஒவ்வொரு அவமானத்துக்கும் கூனிக்குறுகி முன் நிற்கிற ராசுவின் மொகத்துக்காகத்தான் இந்த ஊர் இவனை விட்டு வைத்திருக்கிறது.

“இவன் எதுத்தாப்ல வந்தா வெளங்கின மாரிதேன்”னு சனம் மொத்தமும் கரிக்கும் ராசு மகனின் சைக்கிள் மணிச் சத்தம் இன்னமும் கிர்ரென பெரியாம்பிளையின் மண்டைக்குள் காந்தியது.
இந்தப் பய இன்னிக்கு ஏன் குறுக்க வந்தாங்கிற குறுகுறுப்புலயே வளவு வீட்டுக்கு வந்து வேலையைத் தொடங்கி, பத்து நிமிசம் போயிருக்கும். பொசபொசன்னு மழை பிடிக்க, கித்தானை இழுத்துக் கட்டும்போது, படப்பு கட்டுமானம் கொஞ்சம் விட்டாப்ல இருக்கேன்னு பக்குன்னு போச்சு அவனுக்கு.

“அம்புட்டுத் தாட்டியமா நாம காவலுக்கு இருக்கிற படப்புலயே உருவுறானுங்களா, நாறப்பய மவனுங்க”னு வஞ்சுக்கிட்டே, கித்தானக் கீழே வெச்சுட்டு, வளைவு வீட்டுக்குக் கிழக்குப் பக்கம் இருந்த புல்லுக்காட்டுக்கு வந்தான். அடைஅடையாச் செந்தட்டிச் செடி அப்பிக் கெடந்தது.

“இருக்குடா மவனுங்களா இன்னிக்கு’’ என்றபடி பிளாஸ்டிக் பைகளுக்குள் கைகளை நுழைத்துக்கொண்டு அத்தனை செந்தட்டிச் செடிகளையும் பிடுங்கி ஒரு சாக்கு எடுத்துக்கொண்டான்.
“எடுபட்ட பயலுகளா, இப்பத்தான் பொடச்சு எந்திரிக்கிற படப்புல கையை வைக்கிறானுங்க. எழவு இந்தப் படப்புக் களவாணி மழையுமில்லா அவனுகளுக்குச் சேக்காளி. கைய வைக்கட்டும் இன்னிக்கு… காந்தலும் அரிப்புமா புரளட்டும்”்னு வாய்க்கு வந்தபடி ஏசிக்கொண்டே அடிமட்டத்துல இருந்து இடுப்பு வரை, லேசாக எழும்பியிருக்கும் படப்பைச் சுத்தி செந்தட்டிச் செடிகளை அப்பினாற்போல அடுக்கிவைத்தான்.

“பிரிக்கிறப்ப இதுகள வேற பாகுபாடு பார்க்கணும்.

நாய்ப் பொழப்பு”னு அலுத்துக் கொண்டே மேமட்டம், கீமட்டம் எனப் பார்த்துப் பார்த்து செந்தட்டி வெச்சு, கித்தானை இறுக்கிப்போட்டு, செங்கல் வெச்சு நிமிர்கையில் பொழுது சாய்ந்துவிட்டது.
கார வேலைக் கொத்தனாரம்மாவிடம் ராத்திரிக்கு வரகரிசிச் சோறும் கருவாடும் கொடுத்துவிட்டிருந்தாள் பாண்டியம்மா. மேலாக்க அரிப்பெடுத்த கைகளைச் சொரிந்துகொண்டே சாப்பாட்டுச் சோலியை முடித்தபோது, மில்லுக்காரன் மொத ஷிஃப்ட்டு சங்கு ஊதிவிட்டான்.

அசந்த நேரம் எப்போது என்று தெரியாமல் கண் செருகுகையில் சிங்கியின் முகத்தோடு வள்ளிமயில் சைக்கிள் மிதிக்க, சிங்கி ரோஸ் நிறத் துப்பட்டாவைக் கழுத்தில் சுத்தியபடி படுத்திருக்கின்ற கனவு… சுண்ணாம்புச் சுவரில் ஓடு கிழிப்பதுபோல சட்டென்று பல் கூசிவிட முழிப்பு வந்துவிட்டது பெரியாம்பிளைக்கு. மெதுவாக சைக்கிளை உருட்டும் சத்தம் கேட்க, கண்களை மூடிக்கொண்டு, சத்தம் வரும் திசையைக் கேட்டான். படப்புக்கு வடக்குப் பக்கம், வளவுவீட்டுப் பின்புறம் இருந்துதான் எனக் கணித்தான்.

“மவனே, சோலிய முடிச்சுடுறேன்” எனக் கருவிக்கொண்டே பம்மி, பம்மி வடக்குப் பக்கமாக நகர்ந்தான். சைக்கிள் கேரியரில் களவாண்ட படப்புச் சாக்கோடு மெள்ள உருட்டிச் சென்ற ஆளைப் பார்த்துவிட்டான்.

“இது எத்தனையாவது சாக்குன்னு பிடிக்கணும்னா அவன் கொண்டுபோற இடத்த மோப்பம் பிடிக்கணும்ல”னு முணுமுணுப்புடன், “செந்தட்டித் தீயால்ல புடுங்கும். அசராம, ஒரு கத்தல் இல்லாம, சுத்தமான களவாணித்தனம் பண்றவன, பார்த்துப் பொடனில அறுக்கணும்”னு கருவிக்கொண்டே நடையைச் சுளுவாப் போட்டான்.

வளைவு வீட்டின் பின்புற மரக் கதவை நெம்பித் திறந்தபடி சைக்கிளை உருட்டி வந்த உருவம் படிகளில் மெதுவாக இறங்குவது மங்கலாகத் தெரிய, “பஞ்சாயத்து போர்டு லைட்டுக என்னிக்கு ஒழுங்கா எரிஞ்சிருக்கு. பீடைக”னு சலித்துக்கொண்டே நடக்க வேதக் கோயில் பக்கம் இருக்கும் சந்துக்குள் சைக்கிள் நுழைந்தது. `ராசு வீடு இருக்கும் தெரு அது’ என்று உறைத்தது பெரியாம்பளைக்கு. தன் காவப் படப்பில் களவாடிச் செல்வது குடிகார ராசு மகனாக இருக்கலாம் எனும் நினைப்பே வெறியேற்றியது.

“பொடனி அறுக்காம விட மாட்டேண்டா. கொலைக் கேஸானாக்கூடப் பார்த்துறலாம்” – கண்களின் வன்மம் கைகளுக்கும் கால்களுக்கும் கொதித்துப் பரவ, விறுவிறுவென்று சந்துக்குள் நுழைந்தான். அவன் நினைத்த மாதிரியே ராசு வீட்டுக்குள்தான் சைக்கிள் போனது. ஒரு மின்னல்வெட்டுப் போல வரும்போது பார்த்த ராசு மகனது ஊதா கலர் கைலி பளிச்சென்று மின்னி மறைய, “இதோ, அதே கைலிதான்.’’ கைகளை அரக்கப்பரக்கத் தேய்த்தபடி சைக்கிள் ஸ்டாண்டைக்கூடப் போடாமல், சாய்த்து வைத்துவிட்டுப் பின்பக்கக் கிணற்றுப் பக்கம் போகிறது உருவம்.

பெரியாம்பளைக்கு ஒரு கணம் அவனைப் பின் பக்கம் பொடனியில் வகிற வேண்டுமென வெறி உச்சி மண்டைக்கு ஏறியது. “சே, வெளிச்சத்துல மூஞ்சியப் பார்த்து, காறித் துப்பி, காவு கொடுக்கணும். `செந்தட்டி எரிச்சலுக்குப் பொறுத்த மாதிரி என் குத்து பொறுப்பியா?’னு சொல்லி அடிக்கணும்’’னு அடக்கிக்கொண்டான். `அஞ்சு, பத்து, இருபது’ என்று மனசு நொடிகளை எண்ணிக்கொண்டிருக்க, “வரட்டும் அவன்”னு பஞ்சாரக் கூடையைக் கவுத்திப்போட்டு உட்கார்ந்து காத்திருந்தான். அவனேதான்… ராசு மவனேதான்.

யாரும் பின்தொடரவில்லை எனச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் படியேறிச் சென்று வராந்தா லைட்டைப் போட்ட ராசு மகனைப் பெரியாம்பிளையால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. பஞ்சாரத்தை எடுத்துவிட்டு எழுந் திருக்கலாம் என்கையில், பளிச்சென்று ராசு மகனின் கழுத்தில் கிடக்கும் ரோஸ் நிற துப்பட்டா கண்ணில்பட்டது. அதே துணிதான். சுலோச்சனாக்கா வீட்டுக்குப் போகும்போது, துள்ளலுடன் வள்ளிமயில் போட்டிருந்த நீளவாக்கு ரோஸ் மிட்டாய் நிற துணிதான். கண் இருட்டிக் கொண்டு வந்தது பெரியாம்பளைக்கு. நெஞ்சாங்கூட்டில் பெரிய பாறாங்கல் ஏறி உட்கார்ந்தது. ராசு மகன் படிக்கட்டுக்கு அருகில் வந்து அந்தத் துணியை மூஞ்சி முழுக்கச் சுத்திக்கொள்வதைப் பஞ்சாரத்தின் இடுக்குவழி பார்ப்பது தான்தானா எனப் புரியவில்லை பெரியாம்பளைக்கு. அடைத்துக்கொண்ட மூச்சை, உறுவிவிடச் சிரமப்பட்டான். சிங்கியின் முகமும் வள்ளிமயிலின் உடம்புமான ஓர் உருவம் இதோ இந்தப் பஞ்சாரத்தின் முன் தன்னை உற்றுப் பார்ப்பதுபோல இருந்தது. அசமங்கலான பஞ்சாரம் கவிந்து அவனை விழுங்கிவிட்டதுபோல மூச்சு திணறியது.

ராசு மகன் எப்போது லைட்டை அணைத்து விட்டு வீட்டுக்குள் போனான் எனத் தெரிய வில்லை. சாமக்கோழி ஒன்று `கெதக்’கென்று போட்ட சத்தத்தில் பெரியாம்பிளை மெள்ள உசும்பி, பஞ்சாரத்தைவிட்டு வெளியே வந்தான். சாய்ந்துகிடந்த ராசு மகனது சைக்கிளை சத்தம் வராது ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான்.

படிக்கட்டுக்கு அருகில் ரோஸ் நிறத் துணியை மோகித்து ஆசையுடன் மூஞ்சியிலே போட்டுக் கொண்ட ராசு மகன் இன்னும் நிற்பதுபோலவே இருந்தது. பஞ்சாரத்தைச் சரியாகக் கவுத்திவைக்கவில்லையோ எனும் சந்தேகத்துக்குத் திரும்பிப்பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான். பொன்னம்போல் சத்தம் காட்டாமல் வளைவு வீட்டுப் பின்புறம் பார்த்து நடந்தான்.

`அந்த ரோஸ் நிற நீளவாக்குத் துணியிலும் செந்தட்டி ஒட்டியிருக்குமானு தெரியலியே’ என்று நினைத்தபடி வளைவு வீட்டு மரக் கதவைத் திறந்தான்.

கால் மொத்தமும் மரத்துப்போய், இத்துப் போனாற்போல் இருந்தது அவனுக்கு. சொத சொதவென ஒடம்பு தொப்பலாக ஊத்திக் கொண்டிருந்தது. முழங்கால்கள் இரண்டிலும் எலும்பு மஜ்ஜைக்குள் ஊசி குத்துவதுபோல் ஒரு வலி தொடங்கி, நெஞ்சுக்குப் பரவுவதுபோல் இருந்தது. பாண்டிமுனி கோயிலுக்கு மொட்டை போட்டு, முடி எறக்கிய வள்ளிமயிலின் பால்வாடை வாயும் சந்தன மொட்டை மணமும் நாசிக்குள் மீண்டும் வந்தது.

“கூடை பின்னக் கத்துக்கப்போன சிறுக்கி பண்ணக் காரியத்தப் பாரு” என்று வாய் வார்த்தையாச் சொல்லாமல், பெருமூச்சுவிட்டு, “ஆத்தா ள்ளி மயிலு” என்று மட்டும் நிறுத்திக் கொண்டான்.
“நவ்வாப் பழம்னா அவளுக்குப் புடிக்கும்த்தா, கொஞ்சம் பறிச்சுக்கிறேன்” என்று பெரிய வீட்டு ஆச்சியிடம் கேட்டுப் பறிக்கிற அந்த மரம் விர்ரென சீறினாற்போல் இருந்தது. நல்ல கழுதையோனு நினைச்சதோட சரி. தொரட்டிக் கம்பெடுக்கத் தோணல.

மறந்திருந்த செந்தட்டிச் செடித் தீயாக அரிக்கத் தொடங்கிற்று. கைகளை இரண்டு கல்லெடுத்து ஒரசிக்கொண்டான். ஊதா மைப் பேனாவில் வள்ளிமயில் அவன் பெயரை முந்தாநாள் எழுதியதில் அழியாமல் அந்த ‘பெரிய’ மட்டும் மீதம் இருந்தது. சத்தமாகக் குமுறித் தீத்தா பாரம் குறையும்தான். ஆனாக்க, அப்படி வெடிக்கிற அழுகை வரவில்லை. இரையெடுத்து அசையாம தன் உடம்பை, தான் பாரமாக உணரும் பெரிய சீவன்போல மொத்த உடம்பும் கரடாய்க் கனத்தது.

உசிருக்குள் சடசடவென செந்தட்டிக் காந்தல் ஏறியது. கை மடக்கி நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டான். பொடச்சு எந்திரிக்கையில் சேதாரப்பட்டு நிக்கும் படப்பும் இவனும் மட்டுமே இருக்கும் இந்த ராத்திரியில் பாண்டியம்மா, வள்ளிமயில், சிங்கி, ராசு, ராசுமகன் யாருமே இல்லை.

“படப்புக் காவலைப் பறிகொடுத்திராத அப்பு. படப்புக்குச் சேதாரம் வந்த அன்னிக்குத் தொழிலை விட்டுறணும். களவாணி மழைக்குக் கண்ணையும் காதையும் பிச்சுக்கொடுத்துட்டுக் காவலிருக்கணும் அப்பு” என்ற பாட்டையா மட்டுமே இருந்தார். பாட்டையாவுக்குப் பொம்பள மக்க இல்லை.

– ஜனவரி 2016

Print Friendly, PDF & Email

2 thoughts on “களவாணி மழை

  1. ஹாய் மாம், படித்துக் கொண்டு வரும்போதே, ஏதோ நடக்கப்போகிறது என என் மனம் படபடப்பதை உணர்ந்தேன். அந்த அப்பாவின் மனநிலையை நன்கு உணர,பாட்டையா கேரக்டரில் அழகாய் சொல்லி முடித்தீர்கள். அருமை மேம் ! -உங்கள் பேவோரேட் ரசிகை- ஷீலா ரமணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *