கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 9,737 
 
 

சித்திரவேலருக்கு அந்தக் காட்சி அருவருப்பாக இருந்தது. சனநடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் காதலர்கள் போன்று ஒருவரை ஒருவர் அணைத்தபடி சல்லாபம் புரிந்துகொண்டு, கொஞ்சங்கூடச் சங்கோசப்படாத நிலையில்…..

இரு ஆண்கள்!

– வெள்ளையர்கள்.

“என்ன ‘கன்றாவி’யடா இது”- அவர் தனக்குள் முணுமுணுத்தார்.

அவரின் பக்கத்திலே அவரது பேரன் முருகநேசன். அவனுக்கு இப்போதுதான் வாலிப முறுக்குத் திரளும் வயது. தான் கண்ட காட்சியைப் பேரனும் பார்த்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு அவருக்கு, அப்படிப் பார்த்துவிட்டாலும் தான் அந்தக் காட்சியைக் கண்டு கொண்டதாகப் பேரன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற கவலையும் அவருள் எழுந்தது.

சித்திரவேலரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு கிழமைதான் ஆகிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்த அவரது மகன் சிவராசாவுக்கு இப்போதுதான் ஸ்பொன்சர் செய்து தாயையும், தகப்பனையும் தன்னுடன் நிரந்தரமாக வைத்துக்கொள்ளச் சட்டரீதியான வசதி கிடைத்திருக்கிறது. ஒரு கிழமையாக வீட்டுக்கள் அடைந்துகிடந்த சித்திரவேலருக்கு வெளியே ஊர் சுற்றிப் பார்க்க ஆசை.

மகனுக்கும் மருமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் புதிதுபுதிதாய் சமைத்துப் போடுவதிலேயே நேரம் கழிந்துவிடும் அவரது மனைவிக்கு. ஆனால் அவருக்கோ நேரங்கழிவது மிகச்சிரமமாக இருந்தது. சிவராசனும் மருமகளும் மாறி மாறி வேலை வேலை என்று பறந்து கொண்டிருந்தார்கள். எப்படித்தான் அவர்களிடம் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி கேட்பது என்று யோசித்து மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவர்களுக்கு லீவு கிடைக்கும் நாட்களிலும் வேறேதாவது சொந்த வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

சனி, ஞாயிறு நாட்களிலாவது ஓய்வாக வீட்டிலிருப்பார்கள் என்று பார்த்தால், மூத்தவள் சித்திராவுக்கு டான்ஸ் கிளாஸ். பிறகு சங்கீத கிளாஸ், ரியூசன் வகுப்பு…. இளையவள் சசிக்கு தமிழ்க் கிளாஸ்… இப்படி எங்காவது பிள்ளைகளைத் தாயும் தகப்பனும் அழைத்துக் செல்வார்கள். பிள்ளைகளும் யந்திரமாகிக்கொண்டிருந்தார்கள்.

பேரன் முருகநேசன் வீட்டிலிருக்கும் நேரங்களில் எப்போதும் கொம்பியூட்டருடன் மல்லாடிக் கொண்டிருப்பான். அவனுடைய போக்கு தனிப்போக்கு. வீட்டில் யாருடனும் அதிகம் பேசமாட்டான். அறையிலேதான் அடைந்து கிடப்பான்.

இன்று அவன் தனது அறையிலே இருப்பதைச் சித்திரவேலர் கவனித்தார். அவனுடைய அறையைத் தட்டிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தார்.

“ஹாய் தாத்தா…., கம் இன்” என்றான்.

இவன் என்ன ‘ஹாய்’ என்கிறான்; காகம் கலைக்கிறானா? ‘வாருங்கோ தாத்தா’ என்று வாய் நிறையக் கூறினால் என்ன – மனம் ஏங்கியது. இவற்றையெல்லாம் வந்த புதிதில் காட்டிக் கொள்ளக் கூடாது. காலப் போக்கில் சொல்லிச் சரிப்படுத்திவிட வேண்டியதுதான்.

‘“தம்பி முருகு, வீட்டுக்குள்ள அடஞ்சு கிடக்க கஸ்டமாய் இருக்கடா, ஒருக்கா வெளியில எங்கையாவது கூட்டிக்கொண்டு போறியாடா மோனை?” அவர் தயக்கத்துடன் கேட்டார்.

“ஈவினிங் ஐ ஆம் பிறி…. நீங்களும் பாட்டியும் ரெடியாய் இருங்கோ வெளியில போவம்” என்றான்.

மாலையில் புறப்படும்போது சித்திரவேலர் மனைவியையும் வரும்படி அழைத்தார். “எனக்கு வேலை இருக்கு….. பிள்ளையள் வருகிற நேரம்…. சாப்பாடு செய்யவேணும். நீங்கள் மட்டும் போட்டுவாங்கோ” எனக் கூறி வேலையால் களைத்து வரப்போகும் மகன் சிவராசாவுக்கும் மருமகளுக்கும் இடியப்பம் அவித்து வெந்தயக் குழம்பு வைப்பதில் மூழ்கத் தொடங்கினாள் அவள்.

மனைவி வராதது நல்லதாய்ப் போய்விட்டது. இல்லாவிட்டால் அவளும் இந்த கண்ணராவிக் காட்சியைப் பார்த்துவிட்டு ‘எங்கடை பேரப்பிள்ளையள் இந்த அசிங்கங்களைப் பார்த்துக் கொண்டுதான் வளரப் போகுதுகள்’ என்று புலம்பத் தொடங்கியிருப்பாள்.

“தாத்தா, இது சிட்னி நகரத்தின் முக்கிய பகுதி. உல்லாசப் பயணிகள் இங்கேதான் முதலில் வருவார்கள்” என்று கூறித்தான் அவரை அந்த இடத்துக்கு அழைத்து வந்தான் முருகநேசன்.

சித்திரவேலர் இந்தக் காட்சியைப் பார்க்கும்வரை குதூகல மாகத்தான் இருந்தார். நகரின் அழகைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

ஆ! என்ன கொள்ளையழகு! நகரத்தின் மணி விளக்குகள் நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் என விதம் விதமாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. வானுயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய்க் காட்சியளித்தன. உலகப் புகழ்பெற்ற ‘ஒப்ரா ஹவுஸ்’ சந்திர ஒளியில் தகதகக்கிறது. உலகின் அதியுயரமான அலங்கார வளைவுப் பாலத்தில் வாகனங்கள் ஒளிபாய்ச்சியபடி அங்குமிங்கும் ஓடுகின்றன. தூரத்தே துறைமுகத்தில் வள்ளங்கள் ஒளியை உமிழ்ந்தபடி விரைகின்றன. நீலவானில் தெரியும் நட்சத்திரப் பூக்களையும் விஞ்சிக் கொண்டு பூலோக மின்விளக்குகள் வர்ணஜாலம் காட்டுகின்றன. நகரின் அழகுக் காட்சிகளில் வியந்து நின்றவருக்கு இந்தக் கண்ணராவிக்காட்சி மனதிலே அருவருப்பை ஏற்படுத்திவிட்டது.

சித்திரவேலர் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். பக்கத்திலே அமைந்திருந்த ஒப்ராஹவுஸின் பாங்கரில், ஆங்காங்கே ஆண்பெண் காதல் ஜோடிகள்.

கால் நிர்வாணம்!

அரை நிர்வாணம்!

முக்கால் நிர்வாணம்!

முழு நிர்வாணம் ஆக யாரும் இருந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்புச் சித்திரவேலருக்கு.

“வாடா முருகு… திரும்பிப் போவம்… கால் உளையுதடா” முருகநேசன் மறுப்பு ஏதும் கூறாமல் “சரி தாத்தா”என்று சொல்லித் திரும்பினான்.

“ஹாய் முறுக்ஸ்” என்றபடி யாரோ அவர்கள் நின்ற இடம்நோக்கி வந்தார்கள்.

ஆ! அதே ‘அரை நிர்வாணப் பக்கிரி’ தான். ஆணுடன் ஆணாக சல்லாபித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன். சித்திர வேலருக்கு அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.

“ஹாய்” என்று பதிலுக்குக் கூறியபடி முருகநேசன் அவனது கையைப் பற்றிக் கொண்டு உரையாடத் தொடங்கினான். அவர்களது ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை. பக்கத்தில் நின்று கொண்டிருந்தால், முருகநேசன் தன்னை அவனுக்கு அறிமுகஞ் செய்துவைத்துவிடவும் கூடும் என்ற பயம் அவருக்குப் பிடித்துக் கொண்டது. மெதுவாக நழுவிச் சென்று தூரத்தில் அமைந்திருந்த சீமெந்துப்படியில் அமர்ந்து கொண்டார்.

அவன் அட்டகாசமான குரலில் முருகநேசனுடன் பேசினான். இப்போது அவனுடன் இருந்த மற்றவனும் அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது.

“முறுக்ஸ்… முறுக்ஸ்….” என்று அவர்கள் முருகநேசனை வாயோயாமல் அழைத்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதென்ன முறுக்ஸ்? முருகநேசன் என்று அவர் வைத்த அழகான பெயரை இவர்கள் ‘முறுக்கு’ ஆக்கிறார்கள்.

முருகநேசன் பிறந்தபொழுது, “அப்பு உங்களுடைய பெயரைத்தான் நான் பிள்ளைக்கு வைக்கப்போகிறேன்” என்று சிவராசா கூறியது இப்போதும் மனதில் இருக்கிறது.

பேரர்களின் பெயரை வைத்தால் பரம்பரை விளங்கும், அவர்கள் செய்த புண்ணியங்கள், தான தருமங்கள் பரம்பரைக்கும் தொடரும் என்றுதான் எங்களுடைய ஆட்கள் பிறக்கும் பிள்ளைகளுக்கு பேரர்களின் பெயர்களை வைப்பார்கள். சிவராசனின் விருப்பம் சித்திரவேலருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனாலும் அவர் தனது தகப்பனின் பெயரையே பேரனுக்கு வைக்க வேண்டும் என்று கூறி முருகநேசன் என்ற பெயரை வைத்தார்.

அவர்களின் தோற்றம் சித்திர வேலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. அவர்களில் ஒருவன் தலையில் வகிடு எடுத்து ஒருபக்கத்தை மழித்திருந்தான். மறுபக்கத்துத் தலைமயிர் பன்றிமுள்ளாய்க் குத்தி நின்றது. மற்றவன் காதிலே கடுக்கன் அணிந்திருந்தான். ‘புருவம் குத்தி’ தோடு அணிந்திருந்தான். இரண்டு கையிலும் பித்தளை வளையங்கள்.

இதுதான் தற்போதைய ‘ஸ்டைல்’ ஆக இருக்க வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டார். இப்படியான தோற்றத்துடன் அங்கு வேறும் சிலர் தெருவீதிகளில் அலைவதை அவர் பார்த்திருக்கிறார்.

முருகநேசன் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு அவரை நோக்கி வந்தான்.

“பார்த்தது போதும்… போவமடா முருகு” என்று கூறிக்கொண்டே எழுந்தார் சித்திரவேலர்.

இருவரும் கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டார்கள். முருகநேசன் காரை ஓட்டத் தொடங்கினான்.

காருக்குள் நீண்டதொரு மௌனம்.

“வட் ஹப்பிண்ட் ரு யூ…? யூ ஆர் வொறிட் லைக்”- உங்களுக்கு என்ன நடந்தது. கவலையடைந்ததுபோல் இருக்கிறீர்கள் – முருகநேசன் தான் முதலில் மௌனத்தைக் கலைத்தான்.

“ஒண்டும் இல்லையடா முருகு, களைப்பாய்க் கிடக்கு. அதுதான்”.

மீண்டும் மௌனம் தொடர்ந்தது.

முருகநேசன்தான் மீண்டும் அதனைக் கலைக்க வேண்டி யிருந்தது.

“ஒப்ரா ஹவுஸ் பக்கத்தில் சந்தித்தவர்களைப் பற்றித்தானே நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்”

“………………”

“அவர்கள் ‘ழுயலள’ ”

தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை ழுகெய்ஸ் என்று சொல்வதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும் பேரன் அதுபற்றி தன்னிடம் கதைப்பது அவருக்குச் சங்கடமாக இருந்தது. எங்களது நாட்டில் என்றால் இப்படியான விசயங்களை தாத்தாமார்களிடம் எந்தப் பேரர்களும் கதைக்க மாட்டார்கள்.

அவன் தொடர்ந்து கூறினான், “அவர்கள் இருவரும் ஆயசசல பண்ணியிருக்கிறார்கள்”

“என்ன இரண்டுபேரும் கலியாணம் செய்திருக்கினமோ, தம்பதிகளோ!?”

“யெஸ், இந்த நாட்டுச் சட்டப்படி அவர்கள் கலியாணம் செய்யலாம். ஒன்றாய் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். வேண்டும்போது விவாகரத்துச் செய்து கொள்ளலாம்.”

சித்திரவேலர் உறைந்துபோய் இருந்தார்.

“இங்கு அவர்கள் வாழும் பகுதி தனியாக இருக்கிறது. அவர்களுக்குத் தனியாக ‘கிளப்’இருக்கிறது. வருடத்தில் ஒருமுறை பெரிதாக ழுகெய்ஸ் பெஸ்ரிவல் (களியாட்ட விழா) நடத்துவார்கள்”.

சித்திரவேலர் முருகநேசனைத் திரும்பிப் பார்த்தார். சிறிதுநேரம் அவனையே பார்த்தபடி இருந்தார்.

“உனக்கு எப்பிடி இவங்களைத் தெரியும்?” திடீரென ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார் சித்திரவேலர்.

“……………….”

முருகநேசன் சிறிதுநேரம் பதில் பேசவில்லை. மௌனமாகக் கார் ஓட்டிக்கொண்டிருந்தான். அவனது முகத்தில் சஞ்சலம் தெரிந்தது.

அவனிடம் அப்படியானதொரு கேள்வியைக் கேட்டது அநாகரிகமானது என்பதைச் சித்திரவேலர் உணர்ந்து கொண்டார். இந்த நாட்டில் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படாது.

“தாத்தா, நான் பாங்க் ஒன்றில் பார்ட் ரைம் வேலை செய்யிறன். அவர்கள் இருவரும் வீடு வாங்குவதற்காக லோன் எடுப்பதற்கு பாங்கிற்கு அடிக்கடி வருவார்கள். அதனால் ஏற்பட்ட அறிமுகம்தான்…..”

அப்படியான ஓர் அறிமுகம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைமுறைபற்றி இவன் எப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறான்? கேட்க நினைத்தார்; கேட்கவில்லை.

அதன் பின்பு வீடு வந்து சேரும் வரை அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

**************

அன்று விடுமுறைநாள்

வழக்கத்துக்கு மாறாக எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். முருகநேசன் சற்று முன்னர்தான் எங்கோ வெளியே சென்றிருந்தான்.

சித்திரவேலர் ஷவரில் குளித்து விட்டு ஈரவேட்டியுடன் சுவாமி அறைக்குச் சென்று, சுவாமி படத்தின் முன்னால் இருந்த விபூதித் தட்டில் விரல்களைப் புதைத்தெடுத்து ‘சிவ சிவ’ என்று சொல்லி நெற்றியிலே திருநீற்றைப் பூசிக்கொண்டார். அப்போது அவருக்கு ஊரில் தன்வீட்டு விறாந்தை ‘ இறப்பில்’ தொங்கும் திருநீற்றுக் குட்டானுக்குள் விரல் புதைத்து விபூதி பூசும் ஞாபகம் வந்தது.

புலம் பெயர்ந்து வந்துவிட்ட போதிலும் சிவராசா பரம்பரை பரம்பரையாகப் பேணி வந்த பண்பாட்டையும் கலாசாரத்தையும் கட்டிக்காத்து வருவதை அவர் இந்த ஒரு கிழமையில் நன்றாகவே அவதானித்தார். அது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேசிக்கொள்கிறார்கள். காலையிலெழுந்ததும் முகம் கைகால் கழுவி, சுவாமி கும்பிட்ட பின்புதான் அவர்கள் வெளியே செல்வதை அவர் கவனித்திருந்தார். பெரியவள் சித்திராவும், பத்துவயதுகூட நிரம்பாத சசியும் தேவாரம் பாடும் இனிமை அவரது காதுகளில் தேனாகப் பாயும்.

சித்திரவேலரும் மனைவியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின் அன்றுதான் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். முருகநேசன் வெளியே சென்றுவிட்டது சித்திர வேலருக்கு மனதில் சிறிது குறையாக இருந்தது. அவனும் இருந் திருந்தால் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிடும்போது சந்தோசமாக இருக்கும்.

“அப்பு, எங்கட சித்திராவின்ர பரத நாட்டிய அரங்கேற்றம் வாற மாசம் வைக்கிறம். அண்டைக்கு நீங்களும் அம்மாவும்தான் குத்துவிளக்கேத்தி அதை ஆரம்பித்து வைக்கப் போறியள். நீங்கள் ரெண்டுபேரும் வந்தபிறகுதான் அரங்கேற்றம் வைக்கிறதுக்கு நாள் குறிக்க வேணும் எண்டு இவ்வளவு நாளும் காத்திருந்தம்” மகன் சிவராசா இப்படிக் கூறியபோது சித்திரவேலருக்கு உணர்ச்சி மேலீட்டால் கண்ணில் நீர் ததும்பியது.

“இங்க பரதநாட்டியத்தை ஒழுங்காய்ச் சொல்லிக்குடுக்க ஆக்கள் இருக்கினமே?”

“ஓம் அப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலை படிச்சுப் பட்டம் பெற்றவை கனபேர் இருக்கினம். அவையள் டான்ஸ், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் எல்லாம் படிப்பிக்கினம். எங்கட ஊரைவிட இதுகள் பழகுறதுக்கு இங்கை வசதியள் கூட” சிவராசா இப்படிக் கூறியபோது சித்திரவேலருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“தாத்தா, நான் நல்லாய்ப் பாடுவன்…. சங்கீதம் படிக்கிறன். என்ர சங்கீத அரங்கேற்றத்துக்கும் நீங்களும் பாட்டியும் விளக்கேத்த வேணும்” என்று கூறி பின்னால் வந்து அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள் சசி.

“ஓம் குஞ்சு” சித்திரவேலர் அவளை முன்னால் இழுத்து உச்சி மோந்தார். அவரது உடல் குலுங்கியது. கண்களில் தேங்கிய கண்ணீர் கன்னத்தில் வழியத் தொடங்கியது. ஆனந்தக் கண்ணீர்.

**************

சிட்னி நகரக் கலைக்கூட மண்டபம்.

சித்திராவின் பரதநாட்டிய அரங்கேற்றம்.

வாசலில் நிறைகுடம், குத்துவிளக்கு, குங்குமம், சந்தனம் தலையை உரசும் மாவிலை தோரணங்கள்.

சி.டி. பிளேயரில் நாதஸ்வர இசை.

வாசலில் நிறைகுடத்தினருகில் சித்திரவேலரும் மனைவியும் நின்று அங்கு வருபவர்களுக்குச் சந்தனம் குங்குமம் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

பதினைந்து வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையில் சிவராசாவும் மருமகளும் பல நண்பர்களைத் தேடி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

தமிழ்மணம் கமழ ஆண்கள், பெண்கள் மண்டபத்தில் நிறையத் தொடங்கினார்கள். பெண்களில் பலர் பட்டுச்சேலை, கொண்டைமாலை, குங்குமப் பொட்டுச் சகிதம் மங்கலமாய் நிறைந்திருந்தனர்.

சித்திராவின் வெள்ளைக்காரப் பாடசாலை நண்பிகளும் அங்கே வந்திருந்தனர். சிவராசாவுடனும் மருமகளுடனும் வேலை செய்யும் வெள்ளைக்கார உத்தியோகத்தர்கள் சிலரும் அங்கு காணப்பட்டனர்.

சித்திரவேலரின் தோளின் பின்புறமாக யாரோ கையை வைத்தார்கள்.

“என்ன சித்திரவேலர், அடையாளம் தெரியேல்லையோ?”.

சற்று நேரம் யோசித்தபடி நின்றார் சித்திரவேலர்.

“எங்கட அம்பலவாணர் அண்ணையெல்லோ!” – மனைவிதான் அவருக்கு அடையாளம் காட்டினாள்.

“ஓ, அம்பலவியே, நல்லாய் மாறிப் போனாய். தலை வழுக்கை விழுந்ததிலை மட்டுக்கட்ட முடியேல்லை” என்று கூறிய சித்திரவேலர், அம்பலவாணரைக் கட்டியணைத்துக்கொண்டார்.

சித்திரவேலரும் அம்பலவாணரும் ஊரில் ஒரே பாடசாலையில் படித்தவர்கள். பின்னர் கொழும்பில் வேலை செய்யும்போதும் தொடர்மாடியொன்றில் பக்கத்து வீடுகளில் வாழ்ந்தவர்கள். நெருக்கமாக உறவாடியவர்கள். அம்பலவாணருக்கு கண்டிக்கு மாற்றம் வந்த பின்புதான் அவர்களது தொடர்பு விட்டுப்போயிருந்தது.

இப்போது அந்நிய மண்ணில் எதிர்பாராத சந்திப்பு.

“பின்னை, சொல்லு அம்பலவி…. எப்பிடி உன்ர பாடெல்லாம்… எப்ப இங்க வந்தனி?”

“மனிசி கான்ஸரில போட்டுது சித்தா. நான் தனிச்சுப் போனன். இளையவன் கந்தசாமி இங்கைதான் இருக்கிறான். இப்ப அவனோடை தான் இருக்கிறன். ”

“என்னதான் செய்யிறது, காலநேரம் வந்தால் தடுக்க முடியுமே?….. நான் போனமாசம்தான் இங்கை வந்தனான். என்ர பேத்திக்குத்தான் இண்டைக்கு அரங்கேற்றம்…… ஏன் உன்ர மேன் கந்தசாமியையும் கூட்டியந்திருக்கலாம் தானே?”

“அது முடியாது சித்தா, அவன் இப்பெல்லாம் இதுகளுக்கு வரமாட்டான். நான் எல்லாம் பிறகு விபரமாய்ச் சொல்லுறன்” என்றார் அம்பலவாணர்.

“புலம்பெயர்ந்து வந்தாலும் எங்கட சனம் தங்களின்ர பண்பாடுகளை, கலாசாரங்களை விடேல்லை. ஊரிலை நடக்கிற விழாமாதிரியெல்லே இங்கையும் எல்லாம் நடக்குது. பார்க்கச் சந்தோசமாக் கிடக்கு”.

“சரி சித்தா, ஆட்கள் வருகினம், நீ அவையைக் கவனி, பிறகு ஆறுதலாய்க் கதைப்பம்”.

“மகனோடை இருக்கிறதெண்டு சொல்லுறாய், எங்க தூரவோ கிட்டவோ? நாங்கள் ஒருநாளைக்கு வீட்டுக்கு வந்து உன்னைப் பாக்கிறம்” என்றார் சித்திரவேலர்.

“வேண்டாம் சித்தா. நீ அங்கை வரவேண்டாம். நான் வந்து உங்களைப் பார்க்கிறன்”.

“உன்ர மேன் கந்தசாமி கொழும்பிலை இருக்கேக்க நல்ல தெய்வபக்தியோட இருந்தவனெல்லே. தேவார திருவாசகங்களை பண்ணோடு பாடி இசைத்தட்டுக்களா வெளியிட்டவனெல்லே…. இப்பவும் அவன்ர குரல் கணீரென்று என்ர காதுக்கை ஒலிக்குது”

“அதெல்லாம் ஒருகாலம் சித்தா, இப்ப அவன் இங்கை வந்து ஒரு வெள்ளைக்காரியைக் கலியாணங் கட்டி ரெண்டு பிள்ளையளும் இருக்கு. இஞ்ச வந்தபிறகுதான் எனக்குத் தெரியும். நல்லவேளை என்ர மனிசி இதையெல்லாம் பாக்காமல் கண்ணை மூடிட்டாள்” அம்பலவாணரின் கண்கள் கலங்கின.

சித்திரவேலருக்குச் சங்கடமாக இருந்தது.

“இதெல்லாம் இந்த மண் செய்யிறவேலை சித்தா…. மண்ணுக்கும் கலாசாரம், பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று மண்ணிலை எங்கட கலாசாரம் பண்பாடுகள் வேர் விடுகிறது கஸ்டம்…. சூழல் விடாது. எங்கட பிள்ளையள் வேற்று மண்ணிலை வேற்றுச் சூழல்லை வளருதுகள். இதிலையிருந்து இந்தத் தலைமுறை தப்பினாலும் அடுத்த தலைமுறை தப்புமோ தெரியாது.”

அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த வேளையில், முருகநேசன் யாரோ நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

அவனிலே பெரியதொரு மாற்றம்! தலையிலே வகிடெடுத்து, அரைவாசித் தலையை மழித்திருந்தான். மறுபக்கத்தில் தலைமயிர்கள் பன்றி முட்களாய்க் குத்தி நின்றன. புருவங்குத்தித் தோடணிந்திருந்தான்.

அவனைக் கவனித்த சித்திரவேலர் வெறுப்புடன் மறுபக்கம் திரும்பிக் கொண்டார். அவரது அடி நெஞ்சிலிருந்து பெருமூச்சொன்று பெரிதாய் வெளிப்பட்டது.

– ஞானம் 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *