வேண்டப்படாதவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 5,620 
 

வீட்டின் கொல்லைப்புறம் தாண்டி மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் அடர்ந்தன. பூமிமேல் உதிர்ந்த இலைகளும் சருகுகளும் காலடியில் புதைந்து புதைந்து ஜமக்காளம் விரித்தாற்போல் பரவிக் கிடந்தன.

அந்த இடமெல்லாம் விலையாகி விட்டதாகக் கேள்வி. ஆனால் இன்னும் கட்டிடங்கள் எழும்பவில்லை. இப்போதைக்கு முயற்சி இருப்பதாகவும் தெரியவில்லை.

அவர் ஆபீஸ் போனபின் தன் சாப்பாட்டையும் அடுக்குள் காரியங்களையும் முடித்துக்கொண்டு வாசற் கதவைத் தாளிட்டுவிட்டு, உஷை அனேகமாய் இங்கேதான் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பாள். ஒரு மரத்தின் மேல் சாய்ந்தபடி, புட்களின் அரட்டையைக் கேட்டபடி, மெல்லிய காற்றின் மூச்சில் சருகுகள் அசைவதைப் பார்த்துக் கொண்டு இலைகளின் சந்து வழி பாயும் ஒளிக்கதிரில் கண் கூசிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். சமயங்களில் மரத்தில் சாய்ந்தபடியே அரைத் தூக்கத்தில் கண் சொக்கி விடுவது முண்டு. பூச்சி பொட்டுக்களைப் பற்றிக் கவலை, விழித்துக் கொண்ட பின்னர்தான். இதுவரை ஏதும் நேராதவரை பயமில்லை.

கோபி எங்கே? நினைப்பு வந்து ‘வெடுக்கென்று விழிப்பு வந்துவிடும். அவன் ஏதேனும் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டு, அல்லது குந்துமணி பொறுக்கிக்கொண்டு, அல்லது இந்த அடவியை ஒட்டினாற்போல் அதோ தெரியும் குன்றைச் சுற்றிக்கொண்டு இங்குதான் எங்கேனும் இருப்பான். காற்று மறுபடியும் முகத்தை வருடிக் கண்கள் சொக்கும். தந்திக் கம்பங்கள் தோப்பின் குறுக்கே சென்று, தாலாட்டு ரீங்கரித்தன. நீர்க்குடம் போல் நினைவோட்டத்தில் சுகமாய் அமிழ்ந்தாள்.

இந்த இடத்திலேயே ரத்தோஷ்ணம் போல் ஒரு கதகதப்பான ஆதரவு இருந்தது. இடத் தாவரத்தின் தண்மை யில் நடுவெய்யிலின் வெம்மை மிருதுவாகி உடலும் மனமும் ஒருவிதமான போதையும் சோம்பலும் கண்டன. வேளா வேளைக்கு யாரேனும் காபியும் உணவும் கொணர்ந்து, இந்த சுகநிலை கலையாமல் ஊட்டிவிட்டால் எப்படியிருக்கும்! ஆனால் நடக்கிற காரியமா? இதோ வெயில் லேசா மஞ்சள் பூக்க ஆரம்பிச்சாச்சு . வேலைக்காரி வந்துடுவா. அடுத்தாற் போல் அவர்.

தோளை யாரோ குலுக்கறா. மனமில்லாத மீட்சியில், விழிகள் கோபத்தில் உறுத்தின. யாரு?

“அக்கா எங்கே?”

“வந்துடுவா. விளையாடப் போ.”

“அப்பிடித்தான் தினமும் சொல்றே!” சீற்றத்தில் அவன் கண்கள் நெரிந்தன. “அக்கா எங்கே?” கடைவாயில் எச்சில் வழிந்தது.

அவன் முதுகைத் தடவினாள். “வருவாள், வருவாள்.”

அவன் கண்கள் கோபம் மறந்து குழப்பம் கண்டன. மல்லர்களின் தழுவல் போல் அவர்களின் பார்வைகள் ஒன்றுடனொன்று பின்னின.

அவனிடம் அவளுக்கு உள்ளூர அச்சந்தான். இவனைக் கட்டுப்படுத்த கிருஷ்ணாவால்தான் முடியும். இவனும் அவளுக்குத்தான் படிவான். அதுவும் கிருஷ்ணா போனபின் இவனுடைய லூட்டி தாங்கக் கூடியதாயில்லை.

ஆமாம், கிருஷ்ணா என்னவானாள்? மூணு மாசமா அவளிடமிருந்து கடிதமில்லை . கடைசியாக வந்ததில், உண்டாகியிருப்பதாய் ஏதோ வார்த்தையோடு வார்த்தையா எழுதியிருந்தாள். எத்தனை மாசம், எப்போ உறுதியாச்சு? உறுதியாச்சா? உடம்பை ஏதேனும் பண்ணறதா? இதெல் லாம் பத்தி ஒண்ணும் காணோம். என்னவோ ‘மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்த மாதிரி ஒரு வரியிலே சேதி சொல்லிட்டா ஆச்சா? அம்மாவுக்குப் பெண் எழுதற மாதிரியாயிருக்கு? தானே அதில் சம்பந்தப்படாத மாதிரி! கூடவே ஒரு வாக்கியம். ‘இந்தக் குழந்தை பிறந்தாலும், எனக்கு கோபியைவிட முக்கியமாயிருக்காது.’ உஷைக்குக் கீழுதடு ஏளனத்தில் பிதுங்கிற்று. இதுமாதிரி எத்தனை பேரைப் பார்த்தாச்சு ! சிசு பூமியில் விழுந்துடட்டும், அப்போன்னா தெரியப் போறது! நான் பார்க்காமல் இருக்கப் போறேனா?

அப்பிடியானால் வளைகாப்பு , பூச்சூடல், சீமந்தம் எதுவும் கிடையாதா? பிரசவத்துக்கேனும் கொண்டு வந்து விடுவாளா? சந்தேகம்தான். மஸ்கட் என்ன கொல்லைப் புறமா ? குடும்பமே மஸ்கட்டுக்குச் சம்பாதிக்கப் போயிருக்கு. பெண்டுகளும் உத்தியோகம் பண்ணறாளோ என்னவோ? எல்லாரும் படிச்சவா. நம்ம பெண், வீட்டுக்கு மருமகள்னு கௌரவப் பேரில், வீட்டுக்குச் சமையல்காரி. அப்படிப் பெண் பிடிக்கத்தானே இங்கே வந்திருக்கா. இல்லாட்டா நம்மோடே ஏன் சம்பந்தம் தேடறா?

அத்தோடே கலியாணத்தன்னி ராத்திரியே பிள்ளை வீட்டாருடன் உரசல் வந்துடுத்து. அதுவும் கோபியால் தான்.

அக்காவை மணவறையுள் போகவிடாது, வழக்கம் போல் அவள் பக்கத்தில் தான்தான் படுத்துக்கணும்னு ஒரு நிர்த் தூளி பண்ணியிருக்கான் பாருங்கோ – இப்போ நெனச்சால் கூட சிரிப்பு வரல்லே. அவன் அப்பா கையைக் கூட ஓங்கிட்டார். சம்பந்திப் பிராமணன்தான் தடுத்தார். “குட்டித் தம்பியிருக்கற இடத்துலே இது சகஜம்தானே! பையன் கையில் ஒரு லட்டைக் கொடுத்தால் சரியாப் போயிடுவான். நானே சரிபண்றேன் பாருங்கோ – அம்பி, நீ சமர்த் தோன்னோ ! என் கையிலே என்ன இருக்கு பார்!”

கோபி வீசியெறிந்த லட்டு அவர் முகத்தில் விண்டு, மாமனார் அவன் கண்களில் அந்த வெறியையும், வாயில் வழிந்த ஜொள்ளையும் கண்டு ஸ்தம்பித்துப் போனார்.

போதும் போதாத்துக்கு கிருஷ்ணா: “எல்லாரும் சேர்ந்து குழந்தையை ஏன் படுத்தறேள்? ஏற்கெனவே உடம்பு சரியில்லை” என்றுவிட்டாள்.

“ஓ அப்படியா, Izz that so?” அவர் ஆச்சரியம் அதிகரித்தது. “நந்தா, ஏமாந்துட்டோமாடா? கலியாணத்துக்கு முன் இவா ஃபாமிலி மெடிக்கல் ஹிஸ்டரியையும் செக் பண்ணியிருக்கணுமோ? வகையா மாட்டிண்டுட்போமோ? ஆமா, அஞ்சு வயசுங்கறா, பையன் பத்து வயசு வளத்தியா யிருக்கான்! இன்னுமா அக்காகிட்ட படுத்துக்கறான்?”

விஷயத்தின் ட்ராக்கை மாற்றிவிட்டது மாப்பிள்ளையின் சாதுர்யம்தான்.

“என்னப்பா, சின்ன விஷயத்தைப் பெரிசு பண் ணிண்டு, அனாவசியக் கவலைப்பட்டுண்டு? நாமோ பெண்ணை அழைச்சுண்டு போயிடப்போறோம். அவள் தம்பியுமா கூட்டிண்டு போப்போறோம்? watch your B.P., Dad..”

அச்சமயம் அவர்கள் கண்கள் ஒன்றோடு ஒன்று பூட்டிக் கொண்டபோது கிருஷ்ணாவின் பார்வை நன்றி சொரிந்தது. ஆனால் அவன் கண்களில் அவள் சந்தேகமும் சஞ்சலமும் தான் படித்தாள். ‘இதோ பார், எது எப்படியோ, இப்போது நான் உன் பக்கம் பேசிட்டேன். இனிமேல் நீதான் ஒத்துழைக்கணும்’ என்று அவை கெஞ்சின.

அந்த வாரமே பிள்ளை வீட்டாரை வழியனுப்ப விமானத் துறைமுகத்துக்குப் போகும்போது கோபிக்குத் தூக்க மருந்து கொடுத்துத் தூங்க வைத்து வீட்டை வெளியில் பூட்டிக் கொண்டு போம்படிதான் ஆயிற்று. Highly risky. வேறு வழியில்லை. தலையெழுத்து.

பிள்ளை வீட்டார் தாங்கள் நேரிடையாகக் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், கிருஷ்ணாவிடமிருந்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கடிதம் ஒழுங்காய் வந்து கொண்டிருந்தது. அந்த மட்டுக்கு அவாளுக்குப் பெரிய மனசுதான். இல்லை, மாப்பிள்ளை மனசா?

கடிதங்களில் புக்ககத்தைப் பற்றிக் குறையாகவோ, புகாராகவோ ஏதுமில்லை. பெண் ஜாக்கிரதையாக இருக் கிறாளா அல்லது நன்றாகவே வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தமா? இல்லை, தன்வீடு என்று ஆனபின், விட்டுக் கொடுக்கவில்லையா? கிருஷ்ணா அப்படிப் பட்டவள்தான். மேலுக்குப் பவ்யம், பணிவுக்கடியில் எப்பவுமே ஒரு திமிர் அவளுக்கு உண்டு. சுபாவம்.

அவளுடைய எல்லாக் கடிதங்களும் கோபியைப் பற்றித் தான் விசாரிக்கும், கவலைப்படும். லேசாய் அங்கு இங்கு தேம்பும்.

ஆனால் மூன்று மாதங்களாகக் கடிதம் இல்லை.

ஆனால், அதுபற்றியும் கவலைப்பட்டுக் கொண்டே யிருக்க முடியாது. நலமோ, கேடோ அவளாவாளுக்கு அவா அவா இடமென்று ஆகிவிட்டது. ஆண்களுக்கு உத்யோகம், பெண்ணுக்குப் புக்ககம். ஆயிரம் திட்டம் போட்டாலும், வாய்ப்பு என்று இரண்டிலுமே இருக்கு. இஷ்டப்பட்டால் விதியென்று சொல்லிக்கோ. இது நம் சமுதாயத்தின் யதார்த்த உண்மை.

உஷை பெருமூச்செறிந்து எழுந்தாள்.

“வாடா கோபி போகலாம்!”

ஆனால், கோபி கண்ணில் படவில்லை.

சரி, வரப்போ வரட்டும்.

வீட்டை நோக்கி நடந்தாள்.

2

பையன், எதிரே பாறைமேல் பார்வை பதிந்தபடி, வளைந்து கோணிக் கொண்டிருக்கும் ஒரு வேர்மேல், பையன்களின் சுபாவப்படி, இசைகேடாய் அமர்ந்திருந்தான்.

ஒருமுறை, அக்காவும் தம்பியும் அதை ஏற முயன்று பாதியில் முடியாமல், இறங்க முடிந்ததே புண்ணியம் என்று பூமியில் பாதம் பதிந்த உடனேயே அவனைத் தனியாக ஏறக் கூடாதென்று கிருஷ்ணா கடுமையாய் எச்சரித்திருக்கிறாள்.

இச்சமயம் அவன் எண்ணங்கள் என்ன வடிவம் எடுத்தன என்று அவன் அறியான். அவற்றுக்கு வகுத்த பாதை கிடையாது. கோடுகள், வளைவுகள், நெளிவுகளாய் ஆரம்பித்து ஏதோ ஒரு உருவின் வரைவில் ஒன்று கூடுமோ? பிறகு அந்த உருவுக்கு அசைவு வருமா?

ஒன்று முழு உரு ஆகுமுன்னரே, ஒன்றன் மேல் ஒன்று தள்ளிக் கொண்டு, கலைந்து குலைந்து உடனேயே மறதியில் உருகிப் போயின. அவை அவனைச் சூழ்ந்து கொண்டு சமயங்களில் அழுத்திய இருள் பயமுறுத்துகையில், எப்பவும் ஒரு தூர வெளிச்சம் அவனுக்குத் துணை காட்டிற்று. அது என்னமோ, நாமமோ நாமத்தின் ரூபம் அக்காவின் நினைப்போ அந்தப் பெயர் நாக்கில் சுழல்கையில், ருசியில் வாயோரம் எச்சில் வழிந்தது. விழிகள் தனி ஒளியில் விரிந்தன.

கிருஷ்ணா.

3

கிருஷ்ணாவுக்கு இருபது வருடங்களுக்குப் பின், இடையில் பேறு இலாது, கருவுற்றதாய் உணர்ந்ததும், உஷை வியப்பும், வெறுப்பும் கோபமுமானாள். சே, இதென்ன விபரீதம்! இப்போ கிருஷ்ணாவுக்குக் கலியாணமாகி யிருந்தால், தான் பாட்டியாகி இருப்பாளே!

கலைக்க முயற்சிகள் பலிக்கவில்லை. வேளை தப்பிப் போச்சோ, அல்லது கரு அத்தனை வலுவோ ? அவருக்கு இஷ்டமில்லை. அவர் தெய்வ பக்தி மிக்கவர். சிசுஹத்தி மஹாபாபம்.

“அதனால் என்ன மாமி? வீட்டுக்கு ஒரு ஆண் ஆளப் பிறக்க வேண்டாமா? வம்சம் விருத்தியாக வேண்டாமா?” என்று சொன்னவர் சொன்னாலும், அவர்களே தங்கள் புறங்கைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு சிரிக்கவில்லை என்று சொல்ல முடியுமா?

இது இல்லேன்னு ஏங்கினேனா, பிள்ளை வரம் கேட்டேனா? ராமேசுவரம் போனேனா? அதுவும் வயசான பெண்ணை வீட்டில் வெச்சுண்டு! கஷ்டம், கஷ்டம்! தன்னைத்தான் நொந்து கொள்ள முடியும். யாரிடம் சொல்லிக்க முடியும்? சொல்லிக்கணுமா என்ன, கைப் புண்ணுக்குக் கண்ணாடியா?

அதன் பிறப்பும் ‘திடீர்’. இன்னும் இருபது நாளைக்கு முன் எதிர்பார்க்கவில்லை. அடுக்குள்ளில் பாதி சமையலில் வலி கண்டுவிட்டது. படுக்கை அறைக்குள் போக நேர மில்லை, முடியவில்லை. கூடத்திலேயே நேர்ந்து விட்டது. அண்டையில் கூப்பிட அவகாசமில்லை, யாருமில்லை. கிருஷ்ணாவைத் தவிர. பிரசவம் கிருஷ்ணாவின் ஒத்தாசை யோடு தான். அவமானத்தின் மேல் அவமானம். உஷை அழுதுவிட்டாள்.

குழந்தை பெரிதாய், சிவப்பாயிருந்தது. அப்பவே தலைமயிர் காடு. மார்பில் பெரியதாய் மச்சம். அழுகை ராக்ஷஸம்.

நாளடைவில், பார்வை நிலைத்து, குறிப்பாகி அவள் மேல் பதிந்ததும், அதில் ஏதோ குற்றச்சாட்டு அவளுக்குத் தோன்றிற்று. என்னை ஏன் பிறப்பித்தாய் ? அப்படித் தோன்ற, தன் மனசுதான் காரணம் என்று தெரிந்தாலும், உஷை அச்சுற்றாள். அதன் நோக்கு , அவள் முதுகின் பின்னாலும் தொடர்வது போல் பிரமை தட்டிற்று.

சுருக்கவே தாய்ப்பாலை நிறுத்தி விட்டாள். முதலில் அன்பு சுரந்தால் தானே, பால் சுரக்கும்! இருப்பதை உண்கையிலும், அவள் உயிரையே உறிஞ்சுவது போன்ற அதன் மூர்க்கத்தில் உஷை இளைக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளுக்கு அதன்மேல் பாசம் பொங்கி வழியவில்லை. அதெல்லாம் புத்தகத்தில் படிக்கும், சினிமாவில் கேட்கும் டயலாக். அதுமாதிரி பாசம் கிடையாது. பாசம், காதல், தியாகம் இவை நிரந்தரப் பொய்கள். நம்மையே நாம் ‘கிச்சு கிச்சு’ மூட்டிக் கொண்டு, பொய்களை ஸ்தாபித்துக் கொள்கிறோம்.

உஷையே ஒரு மாதிரியான ஆசாமி. அவளுடைய இயல்பு இப்படித்தான் என்று கணிப்பதற்குச் சிரமமானவள்.

ஆனால், அவளுக்கு வாழ்க்கையில் சித்தாந்தம் இல்லாமல் இல்லை. எல்லாம் எனக்கே வாழ்க்கையைப் பணயமாய் வாரிக்கொள்ள முடியாது. எப்பவுமே எனக்கு அனுகூலமாய்ச் சீட்டு அமையாது. ஓரளவு விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். எனக்குத் தெரியாதா ? ஆனால், விட்டுக் கொடுப்பதற்கு அதனதன் எல்லையைத் தன்னுள் வகுத்திருந்தாள். அதற்கு மேல் No. வானமே இடிஞ்சு விழுந்தாலும் No. சித்திரத்தைவிடச் சுவர்தான் முக்கியம்.

ஆமா, எதனோடேயும். அப்பளத்து மாவு மாதிரி ஏன் ஈஷிக்கணும்! அதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பார்க்கப் போனால், பின்னால் அலுப்பு , ஏமாற்றம், த்ரோகம், அவஸ்தை என்று நஷ்டம்தான் மிச்சம்.

அவளுள் ஒரு பத்ரப்ரதேசம் இருந்தது. அங்கு யாரும், கணவர்கூட அனுமதியில்லை . Out of Bounds-Prohibited area. அதன் மையத்தின் அமைதியில் வீற்றிருக்கத்தான் ஆசை, சுகம்.

அதனால் சுயநலக்காரி, சோம்பேறி என்று அர்த்தமல்ல. வீட்டை அவ்வப்போது தானே அலம்பி, தானே சுத்தப் படுத்தி, காத்ரெஜிலிருந்து புடவை துணிமணிகளை எடுத்துக் கீழே போட்டு, மறுபடியும் மடித்துப் புதுப்புது விதமாய் அடுக்கி, தான் உண்டு, தன் காரியமுண்டு. முசுடுமல்ல. அதற் காகக் கைகொட்டி, வாய் விட்டுச் சிரிப்பவள் அல்ல. நான் மலிவுப் பண்டம் இல்லை . எனக்கு என் கௌரவம், என் நிறைவு, என் பத்ரம், என் சுத்தம் , என் ஒழுங்குப்பாடு உண்டு.

இந்த ஒழுங்குப்பாடுள், இந்தப் பையனின் ப்ரவேசம் அதைக் கலைத்தது மட்டுமல்ல, அவளுடைய தீவையே உலுக்கிற்று. இந்த உலுக்கலை அவள் விரும்பவில்லை. அதனால் குழந்தையுடன் அவளால் ஒட்ட முடியவில்லை . அதற்காகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட முடியுமா?

குழந்தை வளர்த்தியாயிருந்தானே தவிர, சுறுசுறுப்பு இல்லை. கண்களில் சூசகையில்லை. பல சமயங்களில் உள்நோக்கி விட்டாற்போல் ஒளி மங்கின. இப்பவே தியானமா? ஜடபரதர், நம்மாழ்வார் மாதிரி அவதாரம் என்று கொள்வதா? சிரிப்பு வந்தது.

பேச்சும் சரியாக வரவில்லை . மழலையாகவே இருந்து விடுவானோ? அப்படியே எல்லாமே மழலையாகி விடு வானோ? ஸ்பெஷலிஸ்ட் எல்லாப் பரீஷைக்குப் பின் : ”தனியாகக் கோளாறு ஏதும் தெரியவில்லை . வளர்ச்சி சற்று தாமதமாகிறது. தாமஸப் பிறவி அல்லவா? போகப் போக Normal, ஏன், இந்த மந்தகதியைச் சேர்த்து வைத்து அதி புத்திசாலியே ஆகிவிடலாம். பையனை அனாவசியமாகத் துரிதப்படுத்தாதீர்கள்.” இப்பவே டாக்டர்கள் எங்கே தைரியம் சொல்கிறார்கள்? அபிப்ராயம்தான் தெரிவிக் கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் ஜடமும் மதமதப்பும்தான் தெரிந்தன. உஷையும் ஒரு முடிவுக்கு வந்து அதனுடன் சமாதானமுமாகி விட்டாள். வேறு வழி?

அவளுடைய கணவன் நல்ல மனுஷன். சாது. கடவுள் தந்ததுடன் சண்டை போட முடியுமா? கலியாணமான புதிதில், ஆபீஸ் விஷயமாய் டில்லிக்குப் போயிருந்த சமயத்தில், பக்கத்தில் மதுரா – பிருந்தாவனுக்குத் தரிசனத் துக்குப் போய், அங்கு ஒரு சாது கொடுத்த கிருஷ்ண விக்ரஹத்துடன் திரும்பி வந்து தீவிர கிருஷ்ண பக்தராகி விட்டார். பக்தியின் தீவிரம் தன் பெயரைக் கிருஷ்ணானந்த் என்று மாற்றிக் கொண்டார். அதனால்தான் பிறந்தது பெண்ணானாலும் கிருஷ்ணா. ஏன், கிருஷ்ணம்மா என்று பேர் இல்லையா?

உஷையின் பெயரை ராதையென்று மாற்ற முயன்ற போது, அவள் கண்டிப்பாகி, “எனக்குப் பிறந்தகத்தில் வெச்ச பேர் போதும். அதன்படியே விடிவு வரட்டும். இன்னொரு பேரா? No.”

பொதுவாக என்ன தெரிகிறது? அணுகுமுறைகள் வெவ்வேறாய் மேலுக்குப் பட்டாலும், சேருமிடம் ஒன்றுதான். அதாவது விலக்க முடியாததை அனுபவி. கடிக்க முடியா விட்டால் முழுங்கு.

கூடவே இன்னொன்று. சுயநலமோ, விதியோ என்ன வேணுமானாலும் அழை. அவனவன் தன் தன் தீவில்தான். John Donne. நீ ஏமாளி, இல்லாட்டி ஏமாத்தறே. Everyman is an Island.

உஷை , B.litt.

***

கிருஷ்ணா, அம்மா மாதிரி படிக்கவில்லை. அவளுக்குப் படிப்பு ஏறவில்லை . S.S.L.C.யிலேயே ரதம் சாய்ந்து விட்டது. அம்மா மாதிரி அறிவுஜீவியுமில்லை . பாத்திரம், சமையல் என்று வீட்டு வேலை கொடுங்கள். மாங்கு மாங்கென்று செய்து கொண்டிருப்பாள். பெரிய அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், கண்கள் அவளுடைய Plus பாயிண்ட். ஆரோக்யமான கட்டு உடல். வயதுக்கு உயரம் கூடுதல். அவளை விட உயரமான ஜாதகன் தேடுவது சிரமமாய்த் தானிருந்தது.

அப்படியும் பெண் பார்க்கும் படலங்கள் நடந்தன.

“பெண் உத்யோகம் பண்றாளா? இல்லையா? பரிசம் வேணா கூடாது. பெண்ணின் உத்யோகம் சீர்வரிசை ஐட்டமாயிருக்கிற இந்த நாளில், அவாளே எப்படிம்மா குடித்தனம் நடத்துவா?”

“பெண் பாடுவாளா? இல்லையா? அவனுக்குப் பாட்டுன்னா உசிராச்சே! அவனே நன்னாப் பாடுவான். காலை மாலை விளக்கேத்தி ஒரு ஸ்தோத்திரத்துக்குக் கூட வழியில்லையா? நாங்கள் ஆச்சார்ய ஸ்வாமிகள் தரிசனத் துக்குப் போனால், அவர் எங்களைப் பேரைச் சொல்லி அழைக்கும் அளவுக்கு எங்களுக்குப் பழக்கமாச்சே!”

பிறகு, வந்தவன் ஒருவன் அவளைக் கண்ணாலேயே துகிலுரிச்சபோது, கிருஷ்ணா கோபம், வெறுப்பு, பயமாகி விட்டாள். இவன் பாக்கறதைப் பார்த்தால், இவனுக்குப் போது, சமயம், இடம்னு இருக்காது போல இருக்கே! மிருகம், சீ! ஆம்பளைகளே இப்பிடித்தானா?

இன்னும் இரண்டொரு கேஸ்களில், அவளே பரிகசிக்கும்படி ஆகிவிட்டது.

“எங்கிருந்தப்பா இதுகளைப் புடிச்சேள்? நான் நெட்டை தான், ஒப்புக்கறேன். அதுக்காக என் ஆம்படையானை இடுப்பில் தூக்கி வெச்சுண்டு நடமாட முடியுமா?”

இத்தனைக்கும் கிருஷ்ணாவுக்குத் தோஷ ஜாதகமில்லை. ஆனால், நாட்கள் கடந்து சென்றன.

***

கிருஷ்ணானந்த் பூஜை பண்ணிக் கொண்டிருந்தார். உஷை வீட்டில் சாமான்களை, ஃபர்னிச்சரை இடம் மாற்றி மாற்றி அமைத்து அலமாரியில் பொருள்களை விதவிதமாய் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணா, பாத்திரங்களைப் பற்றுப் போக நன்றாய்ச் சுரண்டிப் பளபளக்கத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

எவரையும் பொறுப்பு இல்லை என்று சொல்ல முடியாது.

‘தை’கள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன. ஆனால் வழி பிறக்கவில்லை . எல்லாருக்கும் வயது ஏறிக் கொண்டிருந்தது.

***

இந்தச் சூழ்நிலையில், தாப பூமியில் கோடை ‘மின்’ வெள்ளம் (Flash flood) பாய்ந்தாற் போல் குழந்தை வந்து முளைத்ததும், கிருஷ்ணா அப்படியே வாரிக் கொண்டாள். அவளுடைய படுகையே புரண்டது.

தாய் ஆனால் தான் தாய்மை என்று இல்லை. பெண் ணென்றாலே தாய்மைதான் என்று கிருஷ்ணாவிடம் தெரிந்தது. அந்தப் பச்சைப் புழுவின் அசிங்கங்களை அலம்புவது அவளுக்கு அசிங்கமாகப் படவில்லை . கிருஷ்ணாவிடம் அசிங்கமேயில்லை. பார்ப்பவருக்கு சற்று ஆச்சரியமாகக் கூட இருக்கலாம்.

குழந்தையை ஆற அமரக் குளிப்பாட்டி, பளிச்சென்று துவட்டித் துடைத்து, தலைக்குக் கமகமென அகிற் புகை யிட்டு, உடுத்த – வேண்டாம், கன்னத்தோடு கன்னம் வைத்துக் கொள்கையில், கை கொள்ளாமல் சதை வழியும் அந்த உடம்பு தன் மேல் மெத்தென்று அமிழ்ந்துகையில், அந்த சுகத்தில் நெஞ்சு அடைத்தது. கண்கள் சொக்கின. அதுவும் அவளைத்தான் நாடிற்று. அவளிடம் தனி கொக்கரிப்பு, கை கால் உதைப்பு , “Gaga Googoo”- அவளும் குழந்தையாகி விட்டாள்.

குழந்தைக் காரியங்களிலிருந்து உஷை சீக்கிரமே விடுதலையானாள். குழந்தை தாயை அடையாளம் கண்டு கொண்டது. தாய் தேவையில்லை. அதற்குத்தான் பெரிய, தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கும், தானும் சேர்ந்து ஆடும், அலுக்காத பெரிய விளையாட்டுப் பொம்மை கிடைச்சுப் போச்சே!

“தெல்லத் தண்ணாட்டி.”

“தண்ணாட்டி இல்லேடா, கண்ணாட்டி.”

“தண்ணாட்டி.”

கிருஷ்ணா கைகொட்டிச் சிரித்தாள். அவள் சிரிப்பில் பூக் கொட்டிற்று. நக்ஷத்ரங்கள் உதிர்ந்தன. உள்ளே புண் ஆற்றும் தைலம் பொழிந்தது.

***

நாளடைவில், காடுமில்லை, தோப்புமில்லை எனக் கொல்லைப்புறத்தில் படர்ந்திருக்கும் தாவரத்தின் அடர்த்தி யில், அவர்களுக்கு அத்துப்படியில்லாத பொந்து, வளை, கூடு, வேரின் கோணங்கித்தனம், அடிமரத்தின் முடிச்சோ கிடையாது. போதில் பெரும்பால் அவர்களுக்கு அங்குதான் கழிந்தது. அவன் படும் ஆச்சரியங்களில் அவளும் புதிது புதிதாய் விஷயங்கள் கண்டாள்.

சிட்டுகள் பூமியில் தத்தித் தத்தி, புதருக்குப் புதர் பறந்து வம்புகள் நடத்தின. கிளைகளில் மாறி மாறி உட்கார்ந்து, பக்ஷிஜாதிகள் அரட்டையடித்தன. சருகுகள் சில இடங்களில் மிதிக்குக் கணுக்காலாழத்துக்குப் புதைந்து, செல்லமாய்ச் சலசலத்தன.

சமயங்களில் மத்யான மோருஞ்சாதத்தை இங்கே கொண்டு வந்து சாப்பிடுவதுமுண்டு. ஒரே டிபன் டப்பா விலிருந்து தாங்களும் சாப்பிட்டுக் கொண்டு குருவி, காக்கா, அணிலைக் கூப்பிட்டு அதுகளுக்கும் போட்டுண்டு, அது ஜாலிதான். “கோபி, இதன் பேர்தாண்டா பிக்னிக்!” அவனுக்கு என்ன புரியும்? ஆனால், இது ஒரு சந்தோஷம்னு அவனுடைய சிரிப்பும் விரிந்த கண்களும் சொல்லின.

“கோபி உனக்குப் பல் சத்தே பெரிசுதான். ஆனால் வரிசை. எனக்கும் இருக்கே, அதிலே தித்திப்பல் ஒண்ணு வேறே!”

அவள் பல்லை இளித்துக் காட்டியதும், விழுந்து விழுந்து சிரித்தானே பார்க்கணும். அப்பிடிச் சிரிக்க என்ன இருக்கு? சிரிப்பாகவே ஆகிவிட்டான். He become laughter itself. ஓ, அந்த அளவுக்கு அவளிடம் இங்கிலீஷ் இருந்தது, அல்ல வந்தது.

அப்புறம் இன்னொரு விளையாட்டு, “நீ என்னைக் கண்கொட்டாமல் பாப்பியாம், நானும் உன்னைப் பாப்பேன். யார் முன்னாலே கண் சிமிட்டிட்டாளோ, அவா தோத்துட் பான்னு அர்த்தம். சரி, ஜூட்!”

ஆனால், அவனால் கண்ணைக் கொட்டாமல் அவளை விட அதிக நேரம் இருக்க முடிந்தது. ஒரு நேரத்துக்குப் பிறகு, அருண்டு போய்விட்டாள். “கண்ணைக் கொட்டுடா!” தவித்தாள். அவன் கன்னங்களைப் பிடித்து உலுக்கினாள். கண்களைச் சாவகாசமாக மூடித் திறந்து, சத்தமில்லா அவள் சிரிப்பைக் கண்டபின்தான் மூச்சு வந்தது.

ஒரு சமயம் அந்த விளையாட்டு இல்லாமலே, அவனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். இருந்தாற் போலிருந்து விழியோரங்களினின்று ஸ்படிகம் புறப்பட்டுக் கன்னங்களில் வழிந்தது. புரியாத துக்கத்தில், அவனுக்குக் கீழுதடு பிதுங்கிற்று. மௌனமாய் விரல்களில் அவள் கண்ணீரைத் துடைக்க முயன்றான்.

“கோபி, உன் பேர் கிருஷ்ணா, என் பேர் கோபியா இருந்திருக்கணும்.”

புரிந்தமாதிரி தலையை ஆட்டினான். அக்கா அழாமல் இருந்தால் சரி.

“பாவம், உனக்கென்ன புரியப் போறது!” கண்ணீ ரிலும் சோகமான புன்னகையில் அவள் உதடுகள் லேசாய் வளைந்தன.

“ஆனால் ஒரு நாள் நாம் பிரிஞ்சு போயிடுவோம். பிரிஞ்சுதான் ஆகணும். ஆனால் இப்போ , கோபி நான் மதுராவுக்குப் போயிடுவேன். கிருஷ்ணா , நீ பிருந்தாவனத் தில் தங்கி விடுவாய். அன்னிக்கு மதுராவுக்குப் போன கிருஷ்ணன் திரும்பல்லே. இன்னிக்கு கோபி என் மதுரை யிலிருந்து நானும் திரும்ப மாட்டேன். அப்பிடியே என்னிக் கானும் நான் திரும்பினாலும் நமக்குப் பிருந்தாவனம் இருக்காது. பிருந்தாவனம் போனது போனதுதான்.”

விக்கி விக்கி மாரே வெடித்துவிடும் போல் அழுதாள்.

மௌனமாய் அவள் தோள் மேல் கைவைத்து, உடனேயே அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

கிருஷ்ணா கண்ணைத் துடைத்துக் கொண்டாள். சிரித்தாள். “கோபி, நாம் ரெண்டு பேரும் வேண்டப்படாத வர்கள், தெரியுமா? அதனால் தான் உனக்கு நான், எனக்கு நீ. பாத்தியா, அழுகை போச்சு, சிரிப்பு வந்தது டும் டும்.”

இருவர் சிரிப்பும் கலந்தது.

அவர்கள் உலகம் அப்பாவி உலகம். அங்கே அசம்பாவிதத்துக்கே இடம் கிடையாது. அபத்தம்கூட அற்புதமாகி விடும்.

ஒரு சமயம், காலையின் பொன் வெயிலில் தகதகத்துக் கொண்டு அவர்களை வட்டமிட்ட ஒரு தட்டாரப் பூச்சியைப் பிடித்து அதன் இறக்கையைப் பிய்த்தான். அதிர்ந்து போய் அவன் கையினின்று பிடுங்கினான். அது துவண்டு அவன் கையினின்று விழுந்ததும், தன்னை அறியாது அவனை அறைந்தாள். குழம்பிப் போய் அவன் நின்ற பரிதாபம் தாங்க முடியவில்லை. அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். அவனுக்குப் புரியவில்லை.

பிறகு ஒரு நாள் –

காலையிலிருந்தே வானம் மூட்டம். லேசாய்ச் ‘சில்’கூட மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்; இல்லை, பேசிக் கொண்டிருந்தாள். வழக்கம் போல் ஒருதலை சம்பாஷணை. புரிந்ததோயில்லையோ, கண் கொட்டாமல், மௌனமாய், அவளையே பார்த்துக் கொண்டு, அவன் முழுக் கவனமே அவளுக்கு வடிகால்.

இருந்தாற் போலிருந்து ஓசைகள் அடங்கி விட்டாற் போல் உணர்வு. ஏன்? யாரேனும் வராளா? சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமில்லை. ஆனால், அவர்கள் தனியா யில்லை. மரத்தின் பின்னால் புதரின் பின்னால் ஒளிஞ் சுண்டு யாரேனும், ஏதேனும் -? ஆனால் பயமாயில்லை. ஒரு ‘த்ரில்’. இடமே ஏதோ வகையில் சிலிர்த்திருந்தது. காலடியில் சருகுகள், மரத்தில் இலைகளின் சலசலப்பில் ஏதோ எதிர்பார்ப்பு. யாரை? யாருடைய வருகையைத் தெரிவிக்க முயன்றன?

யாரது? என் மணாளனா? ஏற்கனவே, எங்கேயோ எனக்காகப் பிறந்து, ஆனால் இன்னும் நான் காணாமல், ஆனால் இங்கே இப்போ திடீர்னு பிரசன்னமாகி என் கை பிடித்து, நான் வீட்டுக்குப் போய்ச் சொல்லிக் கொள்ளக் கூட அனுமதிக்காமல், இப்படியே என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் போறாரா? மார்க்கூடுள் தங்கக் குருவி தவித்தது. அழுத்திப் பிடித்துக் கொண்டாள். விவரிக்க வொணா ஒரு ஸன்னிதான பயம், பரபரப்பு.

திடீரென மேகங்களைக் கிழித்துக் கொண்டு சூரியன் புறப்பட்டான். நேரமே அந்த வெளிச்சத்தில் குனிந்து, வான், பூமி, செடி, கொடி, புதர்கள் எல்லாவற்றுக்குமே முகம் துடைத்த ‘பளிச்’சில் ஏதோ திருவிழாவுக்குத் தயாராகி விட்டாற்போல். பார்வைக்குப்பட்ட எல்லாமே ஒரு புதுப் ‘பெரிசில், ‘பளிச்’சில் தெரிந்தன.

இரண்டு வண்ணாத்திப்பூச்சிகள் ஒட்டி, நாலு இறக்கைப் பூச்சியாய்ப் புதருக்குப் புதர் பறந்தன. பூக்களிலிருந்து அவற்றின் யக்ஷர்கள் எட்டிப் பார்த்தார்கள். மரங்களின் தேவதைகள் அஞ்சலியில் நின்றனர்.

அந்த மஹாபுருஷன் – எவனுடைய சௌந்தர்யத்தின், சௌர்யத்தின், கருணையின் உருவகமாக நாங்கள், எங்கள் கற்பனையில், அவரவர் மணாளனின் உருவைமுடை கிறோமோ – அவர் வந்து விட்டாரா? பின்னாலிருந்து யாரோ தோளைத் தொட்டாற் போலிருந்தது. கலசம் பொங்கிய ஆனந்தத்தில் மூர்ச்சையானாள். கண்களில் தாரை தாரை யாய் வழிந்தது. நினைவு மீண்ட போது எல்லாம் பழைய நிலையில்தானிருந்தன. அவளுடைய தருணம் வந்து போய் விட்டது.

ஒருநாள் பையனைக் காணோம். உஷைக்கு மூணு மணிக்குத்தான் நினைப்பே வந்தது. கிருஷ்ணா போனபின் அவனுக்கே கால் நீண்டு விட்டது. “எங்கேடா?” கேட்டால் பதில் கிடையாது. அழுத்தம். அக்கம்பக்கத்தில் அவன் வயதுக்குச் சினேகிதமில்லை. அதன் சுபாவத்துக்கு யார் நண்பர் இருப்பர்? இன்னிக்கு வந்தால் கவனிக்கிறபடி கவனிச்சுட வேண்டியதுதான். போனால் போறதுன்னு விட்டால் தலைக்கு மேலே ஏர்றது மூர்க்கம், திருப்பிக் கை மிஞ்சிடுத்துன்னா? பயம்தான். ஆனால், இப்பிடியே விட்டுட முடியாதே! சரி வரட்டும். சாக்கடைத் தண்ணிக்குப் போக்கிடம் ஏது?

இருள் இறங்கிப் போச்சு. உஷைக்கு வயிற்றுள் குதிரைக் குட்டி உதைக்க ஆரம்பித்துவிட்டது. பின்புறத்தில் ஏதேனும் மரத்தடியில் படுத்துத் தூங்கிட்டானா இல்லை, வேறே ஏதேனும் – நினைக்கவே பயந்தாள். அவர் ஆபீசிலிருந்து வந்ததும் அக்கம் பக்கத்து ஓரிருவர் ஒத்தாசையுடன் டார்ச்சுடன் காடு முழுவதும் சுத்திச் சுத்தி வந்ததுதான் மிச்சம். போலீசில் எழுதி வைக்கணுமா? நினைப்பே பகீரென்றது.

“நாளைக்குப் பார்க்கலாம். பரமாத்மா கைவிட மாட்டான். அவனே குழந்தையாயிருந்தவனாச்சே!”

பூஜையறையில் கிருஷ்ண விக்ரஹத்தைக் கணவனும் மனைவியும் சேர்ந்து நமஸ்கரிக்கையில், அடக்கிக் கொண்ட அழுகையில், மோவாய் நடுங்கிற்று. காணாமல் போன குழந்தை மேல், இதுவரை மறைந்திருந்து, புதிதாய்க் கண்ட கனிவில் நெஞ்சு நெகிழ்ந்தது. ஏதேதோ பச்சாத்தாபங்கள் நெஞ்சை அமுக்கின.

தூக்கம் வரவில்லை . படுக்கையில் புரண்டாள். ஜன்னலுக்கு வெளியே குன்றின் முக்கு தெரிகிறது. முதன் முறையாக கண்ணுக்கு அது கோவர்த்தன கிரியாகப் படுகிறது. எந்த மொத்தாகாரத்துக்கும் ஒரு உக்கிரம் உண்டு. இன்று அது அவளைத் தாக்கிற்று.

எல்லை கிடந்த கிழத்தில், இடையிடையே சதை மாதிரி மடிப்புவிட்டுக் கொண்டு, படுத்துவிட்டு எழுந்து நிற்க முடியாத பிரம்மாண்டமான மிருகம் போல், இந்த இடத்தைக் காலம் காலமாய்க் காத்து வருகிறாய். என் குழந்தை எங்கே? உனக்குத்தான் தெரியும். நீதான் காப்பாத்தணும்.

இன்று அதன் உச்சியில் கிரீடம் வேய்ந்தாற் போல் நக்ஷத்ரங்கள் குடலை கவிழ்ந்திருக்கின்றன.

கொல்லைக் கதவைத் தட்டறாளா? ஆமா. சத்தம் திடமாகவே கேட்கறதே ! படிகளை ஓடியிறங்கிப் போய்த் திறந்தாள். பிரார்த்தனை பேசி விட்டது. நெஞ்சிலிருந்து தேம்பல் கேவிற்று. அப்படியே வாரி அணைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்து விளக்கைப் போட்டாள்.

குழந்தை முகம், உடம்பு அங்குமிங்கும் சிராய்ப்புகளும் சதை கிழிந்து, ஒரே ரத்த விளாறு.

“பாவி, என்ன ஆச்சு?” வயிறு ஒட்டிக் கொண்டது.

“அக்கா அங்கே இருக்கா.” குன்றின் உச்சியைச் சுட்டிக் காட்டினான். அவன் கண்கள் ஒளி வீசின.

“என்னடா உளர்றே?”

“நிஜம்மா. நான் மேலே ஏறிப் பாத்தேனே. அங்கே நின்னுண்டிருக்கா. என்னைப் பாத்ததும் “போ போ, இங்கே வரக்கூடாதுன்னு என்னைக் கீழே போக இறக்கி விட்டுட்டுப் போயிட்டா, அக்காவை நீ அங்கே ஒளிச்சு வெச்சிருக்கே.”

மறுநாள் தபாலில் கடிதம் வந்ததும், நாலு மூலையிலும் கறுப்பு மசி தடவி, பிரிக்கையில் கைகள் நடுங்கினாலும், படித்ததும் விழிகளில் அனல் அருவி புறப்பட்டாலும் அவளுக்கு அப்படியொன்றும் அதிர்ச்சியாயில்லை. முதல் நாளே கோபிதான் சேதி சொல்லிட்டானே!

“பாவிகள்! தந்தி, கேபிள், டெலிபோன் ஏதும் அவாளுக்குத் தோணல்லியா?”

“தோணியிருந்தால் நீ போயிருப்பியா?” என்று புத்தி திருப்பிக் கேட்டதும் அவளிடம் பதில் இல்லை.

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *