மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,062 
 
 

ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! இப்படியே ராஜேஷை விட்டுப் பிரிந்து போகவும் புனிதாவுக்கு மனதளவில் சம்மதம் தான்…குழந்தை அருண் மட்டும் பிறந்திருக்கவில்லையென்றால் …..அவளது முடிவு அதுவாகத் தான் இருந்திருக்கும்…என்ன செய்வது…?.சிலரின் வாழ்க்கை….எப்பவுமே இன்னொருவரின் கைகளில் தான் இருக்குமோ என்னவோ? பார்க்கலாம்…இந்த விஷயம் இன்னும் எவ்வளவு தூரம் போகும் என்று.

எண்ணியபடியே….அருணை இடுப்பில் இடுக்கியபடியே…கிண்ணத்தில் பிசைந்த தயிர் சாதத்தை நார்த்தங்காயைத் தொட்டு எடுத்து உருட்டி… உருட்டி குழந்தையின் வாயில் திணிக்க..அது போதும்…வேண்டாம் என்பது போல் அழுத்தமாக உதடுகளைப் பிரிக்காமல்..தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்…இன்னும் கழுத்தை பின்புறம் தள்ளியும்….தனது எதிர்ப்பைத் தெரிவிக்க….கடைசி வாய்..வாங்கிக்கோ..அழுத்தம்…அப்படியே அப்பாவை உரிச்சு வெச்சுருக்கு…..விரலால….வாயில் ஒரு நெம்பு நெம்பி…கிடைத்த சிறு இடைவெளிக்குள்..அழுத்தமாக ஒரு வாய் சாதத்தை திணித்து ஊட்டி…கையை எடுப்பதற்குள் ..அருண்…..தூ…தூ…ன்னு அப்படியே துப்ப..வாயில் இருந்து சாதம் மேலும் கீழும் சிந்திச் சிதற…..அப்படி என்ன பொல்லாத்தனம்….ஊட்டின சாதத்தைத் துப்பிண்டு….இனிமேல் ஓட்ட ஓட்ட பட்டினி போட்டாத்தான் சரிப்படுவே சொல்லிக்கொண்டே சாதம் சிந்திய இடத்தை சுத்தம் செய்து விட்டு..குழந்தையின் முகத்தை அலம்பி…துடைத்து…வேறு டிரஸ் போட்டு..மடியில் கிடத்தி தூங்கச் செய்த எந்தப் பிரயத்தனமும் அருணிடம் பலிக்கவில்லை.

ஏன்…இன்னைக்கு என்னை இப்படிப் போட்டுப் படுத்தறே…? தூங்கித் தொலையேன்….தன மொத்த ஆற்றாமையின் அழுத்தத்தில் குழந்தையைத்திட்டுவது தவிர புனிதாவுக்கு வேறு வழி? எப்படி கொட்டக் கொட்ட முழிச்சுண்டு இருக்கு…பாரேன்….இன்னைக்கு நமக்கு சிவராத்திரி தான்….இனி நீ மடியில் சரிப்பட்டு வரமாட்ட…தூளி தான்….சரி..என்று..குழந்தையை தூளியில் கிடத்தி…..”குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…குறையொன்றும் இல்லை கண்ணா…….” பாடிக் கொண்டே தூளியை ஆட்ட…பாடும்போதே…நெஞ்சை மீறி குறைகள் அனைத்தும் ஒருசேர அழுத்தி… மென்னியைப் பிடிக்க…கண்ணில் குளம் கட்டி….ததும்பி வழிந்தது…..புனிதாவுக்கு.

சமயலறையில்….ராஜேஷ்…தட புட வென்று பாத்திரத்தை எடுக்கும் சப்தம்….பின்பு குழாயை திறக்கும் சப்தம் என்று கேட்டு…பின்பு சமையலறை அடங்கி…..தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்து விட்டதை ஆவேசமான ஒரு சீரியல் சொல்லியது. இனி அவர் அங்கிருந்து கிளம்ப குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும்….சானல் மாற்றி சானல் மாற்றி அதுவும் அலுத்த பின்பு தான் எழுந்து போவார்.

டி.வி. தான் அவர் மனைவி, அவருக்கு ஒரே மனைவி …. ! ராம பிரான் போல் ஏக பத்தினி, அந்த டி. வி. தான் !

அவருக்கென்ன சொல்லிட்டார்….. எவ்ளோ….சுலபமா சொல்லிட்டா.?..இதில் அந்தக் குடும்பத்தில் இருக்கும் மூன்று பேருமே… ஒட்டுமொத்தமா சேர்ந்து கொண்டு தனக்கு எதிராக நிற்பது புனிதாவுக்கு புதிராக இருந்தது…அவா…. அவா… கவலை மட்டும் சுயநலமா நினைத்து பார்க்கிறாளே…. தவிர ஒருத்தராவது புனிதாவின் மனநிலையைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.. புனிதா அந்த வீட்டில் ஒரு மனித ஆத்மாவாக மதிக்கப் படுவதில்லை. .அந்தக் கோபம் புனிதாவுக்கு…

இரண்டு நாட்கள் முன்பு…..கணவன் ராஜேஷிடம்…..சந்தோஷமாக சொல்லப் போன விஷயம்….தான் இன்று இத்தனை மன உளைச்சலுக்கும் மூல காரணமாக இருந்தது.

“நான் ஒரு விஷயம் சொன்னால் நீங்க சந்தோஷப் படுவேள்……சொல்லட்டுமா” இந்த பீடிகைக்கு…
“ம்ம்ம்…..வேண்டாம்..”
” ஏன்…? வேண்டாம் ”
“எங்கேயாவது….பட்டுப்புடவை கண்காட்சி போட்டிருப்பான்….அப்படித் தானே…?
” எங்களை விட உங்களுக்குத் தான் அந்த மாதிரி நினைப்பெல்லாம் கூடவே வரும் போல….அதெல்லாம்..ஒண்ணும்… இல்லை…அதைவிட சந்தோஷமான ஒரு விஷயம்” சொல்லும்போதே எங்கிருந்தோ ஒரு வெட்கம்…சந்தோஷம்… …மகிழ்ச்சி…புன்னகை…இதெல்லாம் குடிகொண்ட மனதோடு புனிதா…
” என்ன வேண்டிக்கிடக்கு……இவ்ளோ….சொல்லு…” எரிச்சலோடு…ராஜேஷ்..
இப்போ இப்படித் தான்…நீங்கள்….! .நான் சொன்னப் பிறகு உங்களுக்கே புரியும்…நான் ஏன் இவ்ளோ சந்தோஷப் படறேன்னு….
உங்களுக்கும் சந்தோஷமா இருக்குமே….இப்போ சொல்லட்டுமா…இல்ல…நாளைக்கு சொல்லட்டுமா?
” நீ சொன்னாச் சொல்லு….சொல்லாட்டி நீயே வெச்சுக்கோ….என்னை ஆளை விடு…ஆமா…அருண் எங்கே…?
ம்ம்ம்…அது தான்…இப்போ அருண் மட்டும் தானே…இருக்கான்…அவனுக்கு ஒரு தங்கை தயாராகி வருகிறாளாக்கும்…, இப்போ புரிஞ்சுதா….? சொல்லிக் கொண்டே ராஜேஷை கண்ணோடு கண் பார்த்த புனிதாவுக்கு… ஓர் அதிர்ச்சி எதிர்ப்பட்டது ! ராஜேஷ் உடலில் ஒரு பூகம்பம் !

ராஜேஷின் முகம் பேயறைந்தாற்போல் மாறி…ஏதோ கேட்கக் கூடாத ஒரு விஷயத்தைக் கேட்டு விட்டது போல்…அதிர்ந்து…முகம் வெளிறி….வாயடைத்து….இறுகிப் போய்…நிற்க..

என்னாச்சுன்னா…..ஏன் கேள்விப் பட்டதும்..சந்தோஷப் படாமல்..இப்படி…..இப்படி….உங்கள் முகமே சரியில்லையே….அவள் கேட்டுக் கொண்டிருக்கையிலயே….

கொஞ்சம் கூட தாமதிக்காமல்…அறையில் இருந்து கொடியில் தொங்கிய டீ ஷர்ட்டை எடுத்து மாட்டியபடியே…அங்கிருந்து வெளியேறி..கதவை அறைந்து சாற்றிவிட்டு…அடுத்த சில நொடியில் ராஜேஷின் பைக் உறுமிக் கொண்டு போகும் சப்தம் கேட்டு..புனிதாவுக்கு சப்த நாடியும் அடங்கியது போலிருந்தது.

என்னாச்சு இவருக்கு….குடும்பம்னா குழந்தைகள் இருக்காதா? இந்த விஷயத்தை இவரிடம் முதலில் சொல்லாமால் என்ன செய்வதாம்? அதற்கு ஏன் இவ்வளவு கோபம்..ஒண்ணுமே… புரியலையே…! அட தெய்வமே…நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனோ…சரியாத் தானே பேசினேன்…அவள் பேசியதை மறுபடியும் மனதில் ஓட்டிப் பார்த்தாள்.ம்ம்ம்…சரியாத் தான் சொல்லியிருக்கேன்.தப்பில்லையே….அப்பறம் என்ன? குழம்பினாள் புனிதா,

அதன் பின்பு ராஜேஷ் திரும்பி எப்போ வருவார் என்று காத்துக்..காத்து…அப்படியே சோபாவில் அமர்ந்தபடியே உறங்கிப் போனாள். நீண்ட நேரத்திற்குப் பிறகு….குழந்தை அருண் சிணுங்கும் சப்தம் கேட்டு விழித்துப் பார்த்ததும்….
தான் தெரிந்தது…ராஜேஷ் எப்போதோ… வந்து தூங்கப் போயாச்சு என்று.சரி போகட்டும்..நாளை காலை…பேசிக்கொள்ளலாம்…என்று தானும் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையும்…ராஜேஷ் எழுந்து தனது வேலைகளை பார்த்துக் கொண்டு…எதுவும் பேசாமல், சொல்லாமல், ஆபீசுக்குக் கிளம்பிப் போனதும்…புனிதா மனதின் புழுக்கத்தில் புழுவாகத் துடித்துப் போனாள்.

அதே சமயம்…பிரேமா…ராஜேஷின் தங்கை…பாவம்….அவளுக்கு இரண்டு வருடங்களாக ரத்தப் புற்றுநோய் தாக்கி இங்கு தங்கித் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளது கணவரும் இந்த வியாதி இருக்கு…என்னால் செலவு செய்து கவனித்துக் கொள்ள முடியாது…அவள் பிழைக்க மாட்டாள், இதற்கு மருந்தில்லை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஓர் அமாவாசை அன்று வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுட்டு போயே போய்ட்டார். பெண்ணாகப் பிறந்தால் புக்ககத்தில் அவளுக்கு நோய் நொடி எதுவும் வரக் கூடாது !

தனக்குத் தெரியாமல்…அண்ணா…தங்கைக்குள் அதற்குள் இந்த விஷயம் பற்றி பேச்சு நடந்திருக்குமோ…. என்று தோன்றியது புனிதாவுக்கு…

ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா….அவர்களே கேட்கட்டுமேன்…. என்று பேசாமல் இருந்த புனிதாவிடம்….அவளது நாத்தனார்…பிரேமா….மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.

” என்ன புனிதா….எதாவது ..விசேஷமா…? என்கிட்டே சொல்லவே இல்ல நீ…!

” இல்லக்கா….முதல்ல அவர்ட்ட சொல்லலாம்னு….தான்..”

” எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு”

“ம்ம்ம்ம்….எழுபது நாள்….இருக்கும்னு நினைக்கறேன்…”

“இப்போ வரைக்கும் ஏன் சொல்லலை…”

“அது வந்துக்கா..நான் தான்…..நிச்சயமாத் தெரிஞ்சதுக்கப்பறம்….சொல்லிக்கலாம்னு….நினைச்சேன்..”

ஒ…..அதுவும் சரி தான்…ஆனால் உனக்குத் தெரியுமா? அவனுக்கு இதில் இஷ்டம் இல்லைன்னு….வேண்டாம்னு நினைக்கறான்…..அவனுக்கோ…. வயசாகுது…ஏற்கனவே லேட் டா கல்யாணம் ஆகி….முதல் குழந்தையும் இரண்டு வருஷம் கழித்துத் தான் பிறந்தது….இல்லையா? இப்போ அவனுக்கு முப்பத்தி ஒன்பது வயதாகப் போறது…..அவனோட ஆபீஸ்ல எல்லாம் விஷயம் தெரிஞ்சா சிரிக்க மாட்டாளோ.. ன்னு பீல் பண்றான்…அப்புறம்….” என்று நிறுத்த…

ம்ம்ம்…சொல்லுங்க….அப்புறம்….இன்னும் என்னல்லாம் பீல் பண்றார்….???

இரண்டாவது பெண்ணா பிறந்துட்டா…..அதுவும்…உன்னை மாதிரி நிறம் கம்மியாப் பிறந்துட்டா என்ன பண்றதுன்னு…அவனுக்குள்ளே என்னென்னமோ…கேள்விகள்…ஏதோ தப்பித் தவறி…மூத்தது ஆண் புள்ளையாப் போச்சு அதுவும் அவன மாதிரியே சிவப்பா அருண் பிறந்து வெச்சது….நல்லதாப் போச்சு….அவன் எதுவா இருந்தாலும் என்கிட்டே தான் கொஞ்சம் மனசு விட்டு சொல்வான்….இப்போ தான் தயங்கித் தயங்கிச் சொன்னான்…அதான் கேட்கலாமேன்னு வந்தேன்…பேசாமல் நீ அவன் சொல்றபடி கேளேன்…அவன் நியாயமாத் தானே சொல்றான்…என்றாள் பிரேமா.

தன்னிடம் எதுவும் இது பற்றிப் பேசாமல் தங்கை பிரேமாவிடம் வந்து சொல்வானேன்….என்று வருந்தினாள்…புனிதா, அந்தரங்கம் புனிதமானது இல்லையா? அப்போ..நான் அவர் மனதில் எந்த இடத்தில் இருக்கிறேன்…..மனசுக்குள் புழுக்கம் அதிகமானது.

அப்பாக்கு வேற உடம்பு சரியில்லை….சக்கரையும், இரத்த அழுத்தமுமாக கஷ்டப் படறார், எனக்கு வேற இப்படி வந்து அவதிப் படறேன்…நீயே யோசியேன்….அருணுக்கு மூணு வயது தான் ஆகுது….அந்தக் குழந்தையையும் வெச்சுண்டு…அவனை சமாளிப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கு….இப்போல்லாம் யாருமே ஒரு குழந்தைக்கு மேலே பெத்துக்க யோசிக்கிறா…. அதே போல…வேண்டாம்னு நினைக்கறதும் சர்வ சாதாரணம் தான்…ஆரம்பத்திலேயே யோசித்து முடிவெடுத்தா ஒண்ணும்…தப்பில்லை…நாள் போகப் போக தான் பிரச்சனை.

அதோட இல்லாமல் இந்தக் காலத்தில் ஒரு குழந்தைக்கு மேல வளர்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம்….விலைவாசி..விஷமா ஏறிக்கிடக்கு….பள்ளிக்கூடம்..காலேஜ் டொனேஷன், டியூஷன் பீஸ் கல்யாணம்..வரதட்சணை . ஏன், விவாகரத்து கூட வரலாம் .இதெல்லாம்…. கஷ்டம்…தானே…ஒரு குழந்தைக்குத் தான் ஒரு குடும்பத்தில் இடம் என்கிற நிலை வந்தாச்சு…நீயே யோசியேன்…புனிதா….என்று ராஜேஷின் சிவப்புக் கொடியை உயர்த்திக் காண்பிக்க தனது மொத்தத் திறமையை காட்டிக்கொண்டிருந்தாள் பிரேமா.

” அப்போ….நீங்களும்…ஒரு பொண்ணாக இருந்துண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் இருந்துண்டு ரொம்ப சுயநலமா….இப்படி நியாயம் பேசறது அவ்வளவு நன்னாயில்லக்கா..”

“ஆமாம்….அவன் சொல்றபடி செய்” அவன் ரொம்ப கோபமா இருக்கான்…எதுக்கு வீணாத் தகராறு வீட்டில்……வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் வித்தை வார்த்தையில்…நழுவ..

“இல்லக்கா….நான் ஒருநாளும் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். எனக்கொரு பெண் பிள்ளை வேணும்….நான் இதில் ரொம்பத் தீர்மானமா இருக்கேன்…ஒரு வேளை இரண்டாவது ஆண் குழந்தையாப் பிறந்தாலும் பரவால்ல…அருணுக்கு கூடப் பிறந்த தங்கையோ…தம்பியோ….கண்டிப்பா வேணும்…” அவள் குரலில் உறுதி இருந்தது.

“ம்ம்…அப்பாக்கும் தெரியும்…..அவரும் அதே தான்…சொல்றார்…இப்போ வீடு இருக்கும் நிலைமையில்…யாருக்கும் உடம்பு சரியில்லை ..வீட்டைப் பார்த்துக் கொள்ள..குழந்தையைப் பார்த்துக்கொள்ள….நீ பாட்டுக்கு…இத வளர விட்டா…உனக்காக யாரு ஆஸ்பத்திரிக்கும் …வீட்டுக்கும் அலைவா…? இதெல்லாம் யோசிக்கணும்னார்.

இதைக் கேட்டதும் புனிதா..விருட்டென எழுந்து….தனது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு கட்டிலில்…கவிழ்ந்து படுத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழலானாள்…..

கடைசியில் இவர்கள் இவ்வளவு தானா? சுயநலவாதிகள்….இதெல்லாம் முன்பே தெரியாதோ…? இவர்கள் சொல்வது இவர்களுக்கு நியாயமாகப் படுகிறதா? இத்தனை ஆண்டுகள் இதயம் அற்ற பாறைகளுக்கா நான் பணிவிடை செய்தேன்….? இப்பேர்ப்பட்ட கல்நெஞ்சு மனிதர்களையா… குடும்பம் என்று நினைத்தேன்…? நான் மோசம் போயிட்டேனா? என்னிடம் நேராக சொல்லியிருந்தாலும்….இவ்வளவு தாக்கி இருக்காது வார்த்தைகள்…

அவ்வளவு அந்நியமாகிப் போனேனா நான் ? என்னிடம் நேரா பேச வேண்டிய விஷயம்…பாறை பாறையா மோதி…..கடைசீல என் மனசுல கல்லு விழுந்தா மாதிரி…. இவரை முட்டாள் என்பதா…இல்லை குழந்தை என்பதா….இல்லை அயோக்கியன் என்பதா? என் கணவன் எதில் சேர்த்தி..?..புரியலையே…பாசம் நெஞ்சை அடைத்தது.

கணவன் மனைவி..இந்த புனிதமான உணர்வில் எந்தப் புனிதமும் இனி இருக்காது….ஒரு வேளை எனக்கு மாமியார் இருந்திருந்தால் இது போன்ற நிலை வந்திருக்காதோ…என்னவோ?…எத்தனையோ கதைகள் இது போல் படித்திருந்தாலும்…தனக்கு இது போல் எதுவும் நிகழாது என்று தீர்மானமாக இருந்தது எவ்வளவு முட்டாள் தனம்..யாருடைய சுய ரூபமும் அவர்களது சுயத்தைத் தொடும் வரைத் தெரிவதில்லையே..?

அப்படிப் பார்த்தால்…புனிதா அவள் வீட்டில் மூன்றாவது பெண்ணாகப் பிறந்தவள்….தனது தந்தை..எவ்வளவு காருண்யம் மிக்கவர்…இல்லாவிட்டால் அவள் இந்த உலகத்தில் இருந்திருக்கவே முடியாதே….பெண்ணாகப் பிறப்பது அவ்வளவு பாவமான பிறவியா? பணத்தைக் கொண்டு தான் உலகில் வாழ்வா….? இவனெல்லாம் என்ன புருஷன்…?
ஒரு தாய் வயிற்றில் பிறந்து, கூடப் பிறந்த சகோதரியோடு வாழ்ந்தும், ஒரு பெண்ணை மணமுடித்து இல்லறம் நடத்துவது…இதெல்லாம் பரவாயில்லையாம்..ஆனால் தனக்கென பெண் குழந்தை மட்டும் பிறந்து விடக் கூடாது என்று நினைக்கும் இவரை எப்படி…..வரிப்பது…? இதற்கு எவ்வளவு அழகா சப்பை கட்டு கட்டறா பாரேன்….பேசாம இப்படியே அருணைத் தூக்கிண்டு திரும்பி வராமல் ஒரேதா…. அம்மா வீட்டுக்கு ஓடிப் போயிடலாமா?

அவ்வளவு எளிதாக இங்கிருந்து போக முடியுமா..என்ன…? புலிவால் பிடித்த நாயர் போலல்லவா புனிதாவின் வாழ்க்கை..இங்கே…அவளின் .அம்மாவின் கண் ஆப்பரேஷனுக்குக் கூட ஊருக்குத் துணைக்கு போக அனுப்பவில்லை. எல்லாம் அவாளே….தான் .பார்த்துண்டா…இங்கே நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எலும்புக் கூடான பிரேமாவுக்கு ப்ளட் டெஸ்ட் செய்து வெள்ளை அணு , சிவப்பணு எண்ணிக்கை, ப்ளேட்லெட்ஸ்….எலும்பு மஜ்ஜை டெஸ்ட் ன்னு அடிக்கடி எடுக்கப் போகணும்…தேவைப் படும் போதெல்லாம் ரத்தம் ஏத்தியாகணும்……இந்த ஒரு அதிர்வில் இருந்தே இந்தக் குடும்பம் மீளவில்லை….இப்போ நான் வேற கோவிச்சுண்டு வீட்டை விட்டுப் போனால்…நன்னாவா இருக்கும்… பொறந்த வீட்டில் மட்டும் என்ன வாழப் போறது….அங்கேயும் இதே கதை தான்…

அவா இருக்கற நிலைமையில் அருணுக்கு அமுல் டப்பா வாங்கிக் கட்டுப்படியாகுமா?…இல்ல…ஒரு ஜான்சன் சோப்புக்கு தான் வழி இருக்குமா? மூணு பெண்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு பாதி செத்துப் போய்….
இருக்கும் அப்பா…அம்மாக்கு….நான் இப்படிப் குழந்தையோட போய் நின்னா…..பாரமாத் தான் இருக்கும். பேசாமல் இருக்கும் இடத்தில் வாயை மூடிண்டு இருக்கறது தான் அப்பா அம்மாக்கு நான் பண்ணும் உபகாரம். அவா மட்டும் என்ன ரெண்டாவது உண்டாகி இருக்கேன் என்றால் சந்தோஷமாப்…. படப்போறா….? அங்கேயும் கணக்கு தான் பார்ப்பா… இப்போ எதுக்கு அடுத்த பிள்ளைன்னு தான் கேட்பா? அதுவும் பெண் பிள்ளையா ? மகாப் பாபம் ஆச்சே ! உண்டானது ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா என்பதில் ஆணுக்குத் தானே பெரும் பொறுப்பு ! அதெல்லாம் யாருக்கு தெரியப் போறது.

இதெல்லாம் நடுத்தர வர்க்க குடும்பத்தில் ஒரு சாபம் தான். எல்லாம் நடக்கறபடி தான் நடக்கும்…நான் நினச்சேனா…இப்படி அதுக்குள்ளே இப்படி இதில் மாட்டிப்பேன்னு……! புனிதா தனக்குள் சமாதானமாகி…குழந்தை அருணுக்கு பால் கலந்து கொண்டிருந்தாள். குழந்தை அருண்… தூளியில் இருந்து எழுந்து கீழே இறங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
இதோ…வரேன்டாக் கண்ணா…..ன்னு ஓடிச் சென்று அருணைத் தூக்கி இடுப்போடு இடுக்கிக் கொண்டாள்… புனிதா.இல்லையென்றால் அருண் அழ ஆரம்பித்து வீட்டை ரெண்டு பண்ணிடுவான்.குழந்தையை பாத்ரூமுக்கு எடுத்துண்டு போக நகர்ந்தவளுக்கு….டெலிபோன் மணி அடித்து நிறுத்தியது.
“ஹலோ….”
நான் தான் பேசறேன்….புனிதா….ரொம்ப சாதாரணமான குரலில்…ராஜேஷ் பேசவும்…
ம்ம்…!
சாயந்திரம் டாக்டர் ட்ட அழைசிண்டு போறேன்…ரெடியா இரு…! சரியா?
என்ன ? டாக்டரிடமா ?
நான் எங்கேயும் வரலை…வர மாட்டேன்…. உங்களோடு போறதுன்னா நீங்கள் முன்னால குழந்தைய தூக்கிண்டு வேகமா நடப்பேள் நான் பின்னால் ஓடி… ஓடி… வரணும் வேலைக்காரி போல் ”
ஒரு ஜெனரல் செக்கப் பண்ணிக்கோ…போதும்..வேறெதுக்கும் அழைச்சிண்டுபோகலை…நானும் யோசித்தேன்…
இருந்துட்டு போகட்டும்….!
இந்த வார்த்தையில்…தடம் மாறிப் போனாள் புனிதா….சரி…வரேன்…..! என்றாள்.

உடனே அடுத்த முனையில் ரிசீவர் டக்கென வைக்கப் பட்டது.
புனிதா…ராஜேஷா..? என்ன சொன்னான்….பிரேமா ஆவலோடு கேட்க….
அவர் வந்ததும்..”டாக்டர்ட அழைச்சிண்டு போறேன்னார்….செக்கப்புக்கு…சரி வரேன்னேன்..வெச்சுட்டார்…அவ்ளோதான்..”

போய் பார்த்துட்டு வா புனிதா….இதெல்லாம் சகஜம் தானே….என்று சொல்ல..

எது சகஜம்..? உண்டான கருவை அழிக்க சொல்வது சகஜமா? என்னைப் பொறுத்தவரை….இது என் உயிரின் ஒரு பங்கு. என்னை நம்பி என்னுள் இறைவன் பொறுப்புடன் புகுத்திய இன்னொரு ஜீவன்…நேற்று அருண் கூட இப்படி இருந்தவன் தானே….இன்று இவன் தானே என் உலகம்…இடுப்பிலிருந்த குழந்தையை இறுக அனைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்கிறாள் புனிதா.

மனசுக்குள்…சகஜமாம்…சகஜம்….உங்களுக்கெல்லாம் அடுத்த உயிர் போறது சகஜம் தான்..! எப்படித் தான் இப்படி மாறிப் போனேளோ…

இல்லாட்டா….இவளுக்கு ரத்தப் புற்றுநோய் என்று தெரிந்த நிமிடத்திலிருந்து எத்தனை வைத்தியம்….எத்தனை மருந்து என்று ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்து…. அலைந்து…..நாளும் பொழுதுமாக உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். எந்த நிமிடம் என்னாகுமோ என்று மரண பயத்தோடு இருந்தாலும்…எப்படி இவளால்.. இப்படி எளிதாக சொல்ல முடிகிறது.

இதே கேன்சர் எனக்கு வந்திருந்தால் என் நிலை பிரேமாவை விட இந்த வீட்டில் இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்பது மட்டும் உறுதி.

பிரேமா கலங்கிய முகத்தோடு இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த நிமிடம் முதல் …அவளுக்கு தைரியம் சொல்லி அவளை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டது புனிதா தான்…. பிரேமாவுக்கும் புனிதாவுக்கும் ஒரே வகையைச் சேர்ந்த இரத்தம் என்பதால் .நான்கு மாதங்களுக்கு ஒரு முறை புனிதாவின் இரத்தத்தை பிரேமாவுக்கு செலுத்தக் கொடுத்து…இப்படி…. என்ன செய்து என்ன? இன்று தனக்கு ஒரு பிரச்சனையை என்று வந்ததும்…இரத்தம் விலகித் தான் நிற்கிறது….உடன் பிறந்தான் பேச்சு பிரதானமாகி போச்சு. நாங்கள்லாம்….ஒன்னு…நீ வேற என்பது போல. பணத் தேவையும்…சுய நலமும்…..நாக்கை எப்படி வேணா புரட்டிப் போடும்….என்று புரிந்தது..புனிதாவுக்கு. என் இரத்தம் அவள் உடம்பில் ஓடினாலும் அவள் அவள்தான் ! அண்ணாவுக்குத் தங்கைதான். என் உயிர்த்தோழி அல்ல !

வீட்டில் இத்தனை நடந்தாலும்…எதற்கும் அசைந்து கொடுக்காமல் தான் பாட்டுக்கு தனக்கும் எதற்கும் சம்பந்தமே இல்லாதது போல அவள் மாமனார் நடந்து கொண்டாலும்….அவருக்கு அனைத்தும் தெரியும்….அவரது இறுதி முடிவு தான் இங்கே இவர்கள் அரங்கேற்றுகிறார்கள் என்பதை அறியாதவளா புனிதா. அவர் நாசூக்காக இது தான்…இப்படித் தான்…இவ்வளவு தான் என்று கோடு போட்டு விட்டால் போதும்….பிரேமாவும்…ராஜேஷும் மகுடிக்கு ஆடும் நாகங்கள் போல் ஆடுவதைப் பார்த்தாலே புரிந்து விடும் இவளுக்கு. என்னிடம் நேருக்கு நேரா வந்து கேட்கட்டும்…இதைப் பற்றி பேசட்டும்…அதுவரை நானும் காத்திருப்பேன்..அதுவரை எனக்கும் எதுவும் தெரியாத மாதிரி இருந்துக்க வேண்டியது தான்.

மாலையில் ராஜேஷ் வரும் முன்பே…தயாராகிக் காத்திருந்தாள் புனிதா. ராஜேஷ் வந்து…இவளையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் நர்சிங் ஹோமுக்கு அழைத்துச் சென்றான். டாக்டர் பரிசோதனை செய்து நிச்சயம் செய்த பின்பு…ஆமாம்…என்பது நாட்கள் இருக்கும்….என்று சொன்னதும்….ஈயாடாத முகத்தில் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்து தோற்றுப் போய் திரும்பினார்கள் இருவரும்.

சரி…ஆனது ஆயாச்சு…இருந்துட்டுப் போகட்டும்…..ஒற்றை வார்த்தையில் தான் பெரிய மனதை காண்பித்தான் ராஜேஷ்.

அதுவே போதுமானதாக இருந்தது…புனிதாவுக்கு….அப்பாடா…..ஒரு வழியா…எந்தக் கடவுள் புண்ணியமோ….சரி .இருந்துட்டுப் போகட்டும் என்று சொல்லிவிட்டார்….இதற்(க்)கு மூன்று நாட்கள் மல்லாட வேண்டி இருந்தது…என்ன செய்ய? பைக்கில் வரும் போது…நிறைவான மனதோடு…அருணை இறுகப் பற்றியபடி…வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்….புது வசந்தம் பிறந்ததோ…அருகில் சென்ற ஸ்கூட்டரில் அழகான பெண் குழந்தையைப் பார்த்ததும்…மனம் தன்னையும் மீறி ஆசை கொண்டது….அருணுக்கு தங்கைப் பாப்பா பிறந்தால் ஆர்த்தி ன்னு பெயர் வைக்கலாம்….அருண்…ஆர்த்தி..மனதுக்குள் சொல்லி மகிழ்ந்தாள் புனிதா.

இந்த சந்தோஷம் எதுவும் அடுத்த நாள் இதே நேரம் வரை கூட நீடிக்காது என்பதை அறியாத புனிதா அன்று இரவு
நிம்மதியாக தனக்குப் கண்டிப்பாக இந்த முறை பெண் தான் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டே….ஆர்த்திக்கு நிறைய நகை நட்டு எல்லாம் போட்டு, பட்டுப் பாவாடையில் அழகு பண்ணிப் பார்க்க வேண்டும்…அவளுக்கு பாட்டு, பாரத நாட்டியம், வீணை எல்லாம் கற்றுத் தந்து நிறைய படித்து பட்டம் வாங்க வைத்து ஒரு சிறந்த பெண்மணியாக தலை சிறந்த தலைவியாக….அன்னை இந்திரா காந்தி போல இந்த நாட்டுக்கு பெரும் பேரும்…புகழும் அடையச் செய்ய வேண்டும். பாரதியார் மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமென்று தனக்காகப் பாடியதாய் நினைத்துக் கொண்டாள் … அனைவரும் பாராட்டும்வண்ணம் வளர்க்க வேண்டும் என்று வண்ண மயமாக எண்ணக் கனவுகள் கண்டு அப்படியே மகிழ்வுடன் ..அமைதியாக உறங்கிப் போனாள்…புனிதா.

காலையில் எப்போதும் போல் அவரவர் வேலையில்..அவரவர் மும்முரமாக இருக்க எப்போதும் போல் நாள் கடந்து கொண்டிருந்தது. ராஜேஷ் காலையில் ஆபீசுக்கு செல்லும்போது அருணை பைக்கில் உட்கார வைத்து ஒரு சுற்று சுற்றி வந்தது….போகும்போது போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு போனது மதியச் சாப்பாட்டுக்கு லஞ்ச் டப்பா..கையோடு எடுத்து சென்றது இதெல்லாம் புனிதாவுக்கு ஆறுதலாக..அப்பாடா என்றிருந்தது.

மாலையில் வழக்கத்துக்கு மாறாக சற்று சீக்கிரமாகவே வந்த ராஜேஷ் புனிதாவுக்குப் பிடித்த லக்ஷ்மி விலாஸ் கடையிலிருந்து “பாஸந்தி” வாங்கி வந்ததை…புனிதாவிடம் கொடுத்தான்.அவளும் மிகவும் மகிழ்வுடன் அதை வங்கி பிரிட்ஜ் இல் வைக்க…பிரேமா தான் சொன்னாள்…எனக்கு ஜில்லுன்னு வேண்டாம்….அப்படியே கொஞ்சமா…ஒரு ஸ்பூன் கொடு போதும்..என்று.

ராஜேஷ் சின்ன சின்ன கிண்ணங்கள் எடுத்து வைத்து நான் போட்டு கொண்டுவரேன்…என்று சொல்ல புனிதா பரவாயில்லை….. நீங்க இப்போ தான் வந்திருக்கேள்….முதல்ல உங்களுக்கு காபி போட்டுத் தரேன்…சொல்லிக்கொண்டே பிரேமாவுக்கு மட்டும் கொஞ்சமா ஒரு கிண்ணத்தில் பாஸந்தியை போட்டு ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு போய் நீட்டினாள். புனிதா….எத்தனை நாளாச்சுடி…..இப்படிச் சாப்பிட்டு என்று சொல்லிக் கொண்டே வாங்கிக் கொண்டாள் பிரேமா. மீண்டும் பாஸந்தி ப்ரிட்ஜுக்குள் புகுந்தது.

ராஜேஷ் அரை மணி நேரம் குழந்தை அருணோடு விளையாடிக் கொண்டிருந்ததவன்.. எழுந்து சமையலறைப் பக்கம் சட்டெனச் சென்று வந்தான்….வரும்போது இரண்டு கிண்ணங்களில் பாஸந்தி எடுத்து வந்து..புனிதா அருணுக்கு கொடுத்துப் பாரேன் என்று நீட்டி விட்டு…தானும் எடுத்துக் கொண்டான்..மறுபடியும் இன்னொரு கிண்ணத்தில் பாஸந்தி யோடு புனிதாவிடம் நீட்டினான்….. ராஜேஷ் கண்களில் ஏதோ ஓர் குரோதம் தெரிந்தது புனிதாவை நேராகப் பார்க்க முடியவில்லை. அப்பாவுக்கு… சக்கரை…. வேண்டாம்… நாமளே காலி பண்ணிடலாம்…..அவளும் வாங்கிக் கொண்டாள்.தனக்கு பிடித்த இனிப்பை வாங்கி வந்து தன மகிழ்வை தெரிவிக்கிறார் என்ற மகிழ்வே புனிதாவுக்குப் போதுமாயிருந்தது.

எல்லாருமே இனிப்பு சாப்பிட்டதில் புனிதாவுக்கு ஏன் சந்தேகம் வரப் போகிறது? நல்ல மனசு என்றும் எதையும் சந்தேகப் படாது. வெள்ளை மனசுக்கு கருப்பு குணத்தின் நிழல் கூட இருக்காது.தன்னைப் போலவே பிறரையும் நம்பி விரைவில் ஏமாந்துவிடும்.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் மாறிப் போய் அந்த பயங்கரம்நிகழ்ந்தது.அடி வயிற்றில் என்னவோ சுருண்டு எழுந்து வலிக்க ஆரம்பித்தது. உடல் நடுக்கமோடு எலும்பு மண்டலமே ஆடிக் கூடவே ஓர் அணுகுண்டு வெடித்தது…போன்ற உணர்வு. முதுகுத் தண்டுவடத்திலிருந்து ஒரு விண்…விண்…என்று ஒரு துடிப்பு…நெஞ்சில் தீப்பந்தம் பற்றியது போல் குப்பென்று அடைப்பு..பெண் குழந்தை வேண்டும் என்ற புனிதாவின் தவிப்பான உணர்வும்….அடுத்தது எந்தக் குழந்தையும் இனி வேண்டாம் என்ற ராஜேஷின் எண்ணத்தில் அவன் கொடுத்த மருந்தின் வீரியமும் கலந்து கருவறைக்குள் ஒரு குருச்சேத்திரம் உருவாகி
வெடித்துச் சிதற…… அய்யய்யோ அம்மா ….நான் ஏமாந்துட்டேனே…புனிதா நினைப்பதற்குள்…..உடைந்து, கரைந்து,சிதறி நழுவிக் கொண்டிருந்தது…..அவளது கனவு.

படபடப்பு அதிகமாகி.. புனிதா பத்திரகாளி யாகி .நட்ட நடு ஹாலில் டி.வீ. பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷை….அருகில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கூட பார்க்கத் தொடராமல்….அப்படியே…தன பலம் கொண்ட மட்டும் அவனது சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கி….”என்ன காரியம் பண்ணிருக்கேள்…?” மகாபாவியாட்டம்….எனக்குத் தெரியாமல் என் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க நீ யார்? கொலை பண்ணிட்டேள்….ஆமாம்…கொலை பண்ணிட்டேள்…
அவள் இதயம் துவண்டு அழுகை பீறிட்டுக் கதற..சீ..சீ…நீங்கள்ளாம்….ஒரு புருஷனா? இந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது…..என்று அடிவயிற்றை அழுத்திப் பற்றியபடி..தள்ளாடியபடி….அப்படியே…. மயங்கிச் சாய்ந்தாள் புனிதா.

இப்படிபட்ட…. எதையும் எதிர்பார்க்காத ராஜேஷ்..செய்வதறியாது திகைத்துநடுங்கினான் …..அப்பா…பிரேமா…என்று குரல் கொடுக்க…குழந்தை அருண் ஒருபக்கம் பயத்தில் வீல்…என்று அலற…! ஒரே குரல் முழக்கம் அந்த வீட்டில் !

என்னடா…. பண்ணித் தொலைச்சே…..அப்பா வந்து அதட்ட……அது…வந்து…ஒண்ணும்..இல்லை என்று தடுமாறி ராஜேஷ் திருட்டு முழி… முழிக்க வார்த்தகளை விழுங்க…

உடனே பக்கத்தில் ஏதாவது ஹாஸ்பிடலுக்கு அழைச்சிண்டு போடான்னு ….. பிரேமாவின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து எதிரொலிப்பது போல் புனிதாவுக்கு கேட்க…

கத்தியே படாமல் தானே கிழிந்து….கொலை செய்த சாட்சியாய்…சிதறி விழுந்த சிவப்பணுக்கள்…..அவளருகில் பரவ..!

லேசாக மயக்கம் தெளிந்த நிலையில்…இனி பேச ஏதுமில்லை…..
“எத்தனையோ பேர்கள்…ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவமிருக்க…இந்தப் பாழும் வயிற்றை ஏன் தேர்ந்தெடுத்தாய்..
முருகா?” மௌனத்தில் கொதிக்கும் இதயம் இறைவனைக் கேட்டது.

அதற்குள்….புனிதாவை நர்சிங் ஹோமுக்கு கொண்டு வந்த ராஜேஷ்…டாக்டரிடம் ஏதோ சொல்ல….புனிதாவை ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து….” நர்ஸ்….தியேட்டர் ரெடி பண்ணுங்க…. ஓவர் ப்ளீடிங்….டி & சி பண்ணி சுத்தம் பண்ணனும்…அவங்களையும் ரெடி பண்ணும்மா…..ன்னு சொல்லிக் கொண்டே டாக்டர் அறைக்குள் சென்றாள்.

பச்சை உடுப்பை மாட்டிக் கொண்டு…..ஆபரேஷன் தியேட்டர் பெட்டில்….புனிதாவைப் படுக்க வைத்திருந்தனர்…தன் அருகில் இரண்டு கண்ணாடி பாட்டில் தாங்கிய ஸ்டாண்டை நகர்த்திக் கொண்டு வரும் சிஸ்டரைப் பார்த்து டாக்டர்….டாக்டர் என்றழைக்க….

“வருவாங்க…. இருங்க….சிஸ்டரின் குரலில் பரிதாபம் தொனித்தது”…கூடவே டாக்டர் வரும் சத்தம்…அருகில் வர வர…ஆவேசம் வந்தவளாக…..டாக்டர்.. ஒரு வேண்டுகோள்….உங்களைக் கையெடுத்துக் கும்பிடறேன்…. ..என் குழந்தைக்கு இடம் தராத அந்தக் கர்பப்பை…. இனிமேல் என் உடம்புக்குள் இருக்கத் தேவையில்லை….அதையும் சேர்த்து அறுத்து…. என்னை முழுசா சுத்தம் பண்ணிடுங்க…டாக்டர்…ப்ளீஸ்… .” புனிதா தன அத்தனை சக்தியையும்ன் திரட்டிச் சொன்ன வார்த்தையில் அழுத்தம்…ஆத்திரம்… ஆவேசம்… இருந்தது.

அவளின் கதறல்…வெளியில் அருணை வைத்துக் கொண்டு நின்றிருந்த ராஜேஷுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்தாற்போல் வந்து மோதியது.

மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் ஏதுக்கடி புனிதா. கட்டிய கணவன் எமனாக இருக்கும் போது ?
என் செல்ல ஆர்த்தி…..என் கண்ணே…..உனைக் காக்கத் தெரியாத பாவியாயிட்டேனே……போ….மகளே. போ உனக்கு மீட்சி இல்லை … ! வந்த சுவடு தெரியாமல் போ…..! புனிதாவின் அப்பாவி மனது ஓலமிட்டது.

வாசலில்….கன்றைத் தொலைத்த பசு ஒன்று “அம்மா…” அம்மா…என்று குரல் கொடுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?

  1. பெண்ணின் நிலை எப்போதும் இதுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் நானும் இது போன்ற கீழ் நிலையில் வாழும் பெண்தான் ஏன் பெண்ணாய் (நாய்) பிறந்தேன் என்று எண்ணாத நாளில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *