மகா வாக்கியமும் மாமியின் நிழலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 14,175 
 

எவ்வளவு காலம் என்று ஞாபகமில்லை. ஆனால் மனமே அறியாத, அல்லது, எல்லாம் ஒளி மயமாகவே தரிசனமாகிற இனிய பொற் காலமது..சுவேதாவிற்கு அப்போது அம்மா தான் உலகம் . அவள் மட்டும் தான் அந்த இருப்பில் ஜொலிக்கிறவள். இப்பவும் கடவுள் தரிசனமாகவே, கண்ணுக்குள் நிற்கிற அம்மா..அவளுக்குத் தெரியும் .எது குப்பை வண்டிக் காலம் என்று. .அதெல்லாம் மனிதனைப் பற்றி அறிய நேரும் போது, பின்னால் வந்த சுமை, துக்கம் இருள் எல்லாம் தான்.. உண்மையில் மனிதர்களைப் பற்றியோ, அவர்களின் அன்பின் தடம் விட்டுப் போன நடத்தை பிசகிய குணக் கோளாறுகள் பற்றியோ, அனுபவ ஞானமாக உணர முடியாமல் போன ஓர் இனிய பொன்னான நாட்கள் அவை.

அம்மாவைக் கண் குளிரக் காணும் போது,அவர்கள் வீட்டு மாட்டுத் தொழுவத்தில், இரை மீட்டுக் கொண்டு, அமைதியான சுபாவத்தில் மூழ்கித் திளைத்திருப்பது போல ,கண்களை மூடிப் படுத்திருந்தபடி, உலகைத் தரிசனம் காண்கிற பசுவின் முகம் தான் , சுவேதாவிற்கு நினைவில் வரும். மிகச் சாதுவான .அப் பசுவைப் போலவே, அப்போதெல்லாம் அம்மா இருந்திருக்கிறாள். இதை யார் தான் கண்டார்கள்? எல்லாம் போடுகிற வேஷத்திற்கு ஏற்பவே, அதற்கான அங்கீகாரமும் , வெறும் நிழல் போலவே தொடரும் வெற்றுச் சங்கதிகள் தாம்.. அசைவற்ற நித்ய இருப்பான பிரமத்துக்குரிய உயிர் மையம் இதுவல்ல .இதை அனுபவ ஞானமாகவே, கண்டு தெளிந்த, , ஒளி பிரகாசமான, மனம் ஒன்றே, சுவேதாவுக்குண்டன இயல்பான பிறவிப் பெருமை. அது அப்பா கொடுத்த வரம் அவளுக்கு.

பசுவையும் அம்மாவையும் போலவே உலகை ரட்சிக்கக் கூடிய இன்னுமொரு பிறவியாய் வந்து உதித்தவர்கள் தாம் பிராமணர்களும் . பசுவினது மேன்மையைப் போலவே, அவர்களின் இருப்பும் .மந்திர ஜெபம் பண்ணுவதாலும் அபிஷேக ஆராதனை, வழிபாட்டு நிலையிலும் சாத்வீக உயிர்த் தோன்றலாய் விளங்கும் அதீத தெய்வீகக் களை, அவர்கள் முகமெங்கும் பரவிக் கிடப்பதை ஒளி தரிசனமாகவே காண முடியும். இதற்கு விதி விலக்காக, சில பேர் இருப்பதுண்டு . அது இங்கு தேவையில்லாத விவகாரம் . அவர்களைத் தரிசிக்கும் போது, காண்கிற அதே ஆதர்ஸக் களை தான், அம்மாவின் முகத்திலும் பளிங்கு வார்ப்பாகத் தோன்றி, ஒளிர்வது, சுவேதாவைப் பிரமிக்க வைக்கும் .அம்மா ஒரு நடமாடும் தெய்வம் என்பது தான் நிதர்ஸனமான உண்மை.அதை உள்ளபடி கண்டு கொள்ளத் தவறிய ,ஒரு மூடச் சமூகத்தையே எதிர் கொள்ள நேர்ந்த, துர்ப்பாக்கிய நிலைமை சுவேதா ஒருத்திக்கு மட்டும் தான். . உண்மையில் அவள் ஒரு சாதாரண பெண்ணல்ல ..அ ப்பா அவளுக்கு வைத்த பெயர் வேத நாயகி. பிறப்புச் சான்றிதழ் எழுதும் போது ,சுவேதா என்று தவறாக எழுதிவிட்டார்கள் பின்னர் அந்தப் பெயரே நிலைத்து விட்டது . பெயர் வேறு வாழ்க்கை வேறு. எல்லாம் வெறும் நாம ரூபங்கள் மட்டுமே.. உடல் அழிந்தால், வெறும் சவம் தான் மிஞ்சும்.. அப்படியிருந்தும் என்ன ஆட்டம் போடுகிறார்கள், இந்த வெற்று மனிதர்கள்.

அப்போது சுவேதா கண்ணை மூடிக் கொண்ட போது, ஒரே இருட்டாக இருந்தது. இது இருட்டா? ஆழ்ந்த உறக்கமா? அல்லது வேறொரு நிலையா? என்று புரியாமல் அவள் குழம்பினாள் . சிறிது நேரம் கழித்து, விழி திறந்து பார்த்த போது, தெய்வீகக் களை ஒளிர அம்மா நின்றிருந்தாள்…அவளின் முகம் எதிலும் பங்கமுறாத ,அதீத தேஜஸுடன் களை கொண்டு மின்னுவதாக, அவள்உணர்ந்தாள். இதுவே நிதர்ஸனம் என்றாகிய போது, மற்றவை எதிலும் மனம் செல்லவில்லை.

வெளியே கதவருகே மாமியி ன் நிழல் தெரிந்தது..சரியாகக் காலை பத்து மணிக்கெல்லாம் , அவர்கள் வீட்டில் ராஜாங்கம் நடத்த, அவள் வந்து சேர்ந்து விடுவாள். அதிகார தோரணையோடு குரலை உயர்த்தி அவள் பேசுவதைக் கேட்டால் ,குலை நடுங்கும்…எல்லாம் அறிந்த பெரிய மனுஷியே தான் என்ற நினைப்பு அவளுக்கு. . இதிலே பெரிசு சிறிசு என்று எங்கே வந்தது? சுயம் பிரகாசமான ஒரு சைதன்ய இருப்பு என்பது வேறு. இதை உள்ளபடி அறிந்தவர்க்கே,, பூரண ஆதம ஞானம் கை கூடி வரும்.. மாமியோ மறு துருவத்தில் நின்று ,வரட்டு வேதாந்தம் பேசுகிற, ஒரு வெற்று நிழல். நிறைகுடமான அம்மா மீது வக்கிரம் கலந்த ,மன எரிச்சல் அவளுக்கு. இது எதனால் வந்தது ? மாமா கல்லூரி போன பின் வீட்டில் இருந்தால், அவளுக்குப் போரடிக்குமாம் . அவளுக்குப்பிள்ளைகள் இல்லையே என்ற, தீராத மனக் குறையே ,அம்மாமீது அவளை பகைமை கொள்ள வைத்திருக்கிறது. அம்மாவுக்கோ மடி நிறைய பிள்ளைகள்

இதை நினைக்க சுவேதாவிற்குச் சிரிப்புத் தான் வந்தது. அறியாத வயதில் கல்யாணமாகிக் கால் விலங்கு பூட்டிக் கொண்டு, அம்மா படுகிறபாடு யாருக்குத் தெரியும்? . இருந்தாலும் அவள் மகாலட்சுமி..இந்த வயிற்றெரிச்சல் தான் மாமிக்கு. .எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும் அவள் காறித் துப்புவதற்கு அம்மாவா கிடைத் தாள்?

அவள் அடுப்போடு போராடப் போன போது, கதவு திறந்து மாமி உள்ளே வருவது தெரிந்தது. அவள் முகத்தில் சாந்தம் மறைந்து, கோபத் தீயின் சுவாலைகள் தோன்றி, அவள் முகம் அக்கினிப் பிழம்பாக ஜொலித்துச் சிவப்பேறிக் கிடப்பதைக் கண்டு, சுவேதா திடுக்கிட்டாள். இன்று நல்ல வேட்டை தான். அவள் வாயைத் திறந்தால், வேதம் வராது,. பூதம் தான் வரும். வசைமொழி கூறுவதொன்றே, அவளின் பழக்க தோஷம் .அவளுக்கு அன்பு நெறி போதிக்க ,எவரும் முன் வராததை, ஒரு பெரும் தார்மீக இழப்பாகவே எண்ணி, சுவேதா மனம் வருந்தினாள். மாமியின் எதிர்மறையான இந்த வன்மப் போக்கிலிருந்து, அம்மாவை விடுவித்து வாழ வைப்பதொன்றையே மனம் கொண்டவாறு ,சுவேதா அமைதி காத்து, அவள் ஒரு தபள்வினி போல நின்றிருந்தாள். அவளுக்குக் கல்யாணமாகிற வயது. அதை நினைத்துக் கனவு காண்கிற பருவம்.. அதையெல்லாம் மறந்து, இது என்ன தவக் கோலம்? அவளின் அக்காமார் இருவரும் கல்யாணமாகிக் கொழும்பில் இருக்கிறாகள்.அம்மா இப்போது அவளுக்குத் தான் மாப்பிளை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பேச்சு வந்த போது, எதையோ நினைத்து ,மாமி முகத்தைச் சுழித்தாள் . அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று சுவேதாவிற்குப் புரியாத, மயக்கமாக இருந்தது. இருந்தாலும் அவள் வாயிலிருந்து வேதமா வரப் போகிறது? பூதம் தான் வரும்

திடீரென்று இடி முழங்குவது போல் அவள் குரல் கேட்டது யாரையும் எளிதில் சொற்களால் கிழித்துப் போடுவது சுலபம் அதனால் தாக்கப்படுகிற மனம் ரணகளமாகிப் போய் விடுவதை கொஞ்சமும் கருத்தில் கொள்ள்ளாமல் அவள் வாய் இப்படிக் கிழிகிறதே என்ற மனவருத்த்தோடு தான், சுவேதா அதை எதிர் கொள்ள நேர்ந்தது, அம்மாவுக்கும் இப்படி எத்தனையோ வலிகள் ஏற்பட்டிருக்கக் கூடும். மாமியே இதைச் செய்திருப்பாள். ஆனால் அம்மா இதையெல்லாம் வெளிக்காட்டாமல், மெளன தேவதையாகவே இருக்கிறாள். ஆனால் சுவேதாவைப் பொறுத்தவரை,அதர்மம், தலை தூக்கி சத்தியம் தடம் புரண்டு போவதை எதிர் கொள்ள நேர்ந்தால் , மனம் தாங்காமல் அழுகையே வந்து விடும் . அவளுக்கு. இப்போது ம் அந்த நிலைமை தான் அவளுக்குப் பழைய ஒரு சம்பவம் கசப்பான ஒரு அனுபவமாய் நினைவுக்கு வந்தது. சின்னக்காவின் கல்யாணப் பேச்சு நடந்த போது , மாமி கேட்ட கேள்வி, முள்ளாக அவளின் மனதைத் தைத்தது

அப்போது அம்மா அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இடையில் குறுக்கிட்டு சூழ்ந்து கனத்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு, ஆவேசமாக மாமி கேட்டாள்

மற்றவைக்கு என்ன போட்டுக் கிடக்கே?

மற்றவை என்று ஆரைக் குறித்து இந்தக் குத்தல் பேச்சு மாமியின் வாயிலிருந்து வருகிறது? வேறு ஆர்? நான் தானே. என்னை விட்டால் வேறு பொம்பிளைப் பிள்ளை, இஞ்சை வேறு ஆர் இருக்கினம் என்று நினைத்த அவளுக்கு, நெஞ்சில் தீ வளர்த்த மாதிரி வந்ததே ஒரு தார்மீகச் சினம்

என்ன சொன்னியள் மாமி? என் அக்காமாருக்கு நடக்கேலையே! அது மாதிரி எனக்கென்று ஒருவன் எங்கோ பிறந்திருக்க மாட்டானா?

அவனை வாங்கக் கொம்மாவிட்டைக் காசு இருக்கே ? இதை மாமி கேட்கிற போது ,அம்மா வேறு உலகத்தில் இருந்தாள் . அது தான் மாமியின் பாஷையில் சொல்வதானால் அவிச்சுக் கொட்டுகிற உலகம். அம்மாவுக்கு ரொம்பவும்

தான் தாராள மனசு . சிக்கனம் கொஞ்சம் கூட இல்லாமல் மிகத் தாராளமாகவே பொருட்களைச் செலவழித்து ,அவள் சமையள் செய்வாள் .வீட்டிற்கு விருந்தாளிகள் பிச்சை க்கு வருகிறவர்கள், முதற் கொண்டு, அவர்கள் பசியாற அவள் அன்னம் அறு சுவையோடு படைத்துக் கொடுப்பாள் . இதைக் கண்ட வயிற்றெரிச்சலோடு தான் மாமியில் புலம்பல் இருக்கும்.. அதற்காக அவள் வயிற்றில் பிறந்த குற்றத்திற்காக, மாமி எங்களையும் பலிக் கடாவாக நினச்சுப் பேசுறது பெரிய பாவ்மில்லையா என்று பின்னர் சுவேதா நினைத்துக் கொண்டிருக்கும் போது, மாமியே பேச்சைத் தொடர்ந்தாள்.

பெட்டையளை பெத்தும் கொம்மாவுக்குப் புத் தி வரேலை. அங்கை பார் பானை நிரம்பி சோறெல்லாம் ,வெளியிலை சிந்துது , இப்படிச் சமைச்சால் எங்கை சேமிக்கிறது??கொஞ்சமும் செய்காரியம் பத்தாது கொம்மாவுக்கு. உங்களையும் ஒன்றும் பழக்கி வைக்கேலை?

நிறுத்துங்கோ மாமி1 எல்லாம் எங்களுக்கு நல்லாய் சமைக்கத் தெரியும் உங்களைப் போலை ,பிரஷர் நெஞ்சுவலி என்றெல்லாம் சொல்லி, நீங்கள் சமைக்கிறேலையே .ஒருநாளும். நீங்கள் சமைச்சு நான் காணேலை , அடுப்பிலை எப்ப பார்த்தாலும் ,பூனை தான் தூங்குது. இந்த லட்சணத்தில்லை அம்மாவை எங்களைப் பழிக்க, நீங்கள் ஆர்? சொல்லுங்கோ மாமி1

வெகு நேரமாக மாமி இதற்குப் பதில் சொல்ல வராமல், வாயடைத்துப் போயிருந்தாள். உள்ளே ஒரு பூகம்பமே வெடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பது போல், அவள் முகம் முகம் கனன்று சிவப்பதைப் பொருட்படுத்தாமல் , சுவேதா அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்,. மாமி சதா அவளை இரை விழுங்கிக் கொண்டிருந்தும் ,அதில் பங்கமுறாத, ஓர் ஆதர்ஸ தேவதை போல், அவள் முகம் களை கொண்டு மின்னிற்று. மாமியின் கணிப்பில் அவள் ஒன்றுக்குமே லாயக்கில்லாத , அசடு பட்டிக்காடு . பாவம் அம்மா1

அவள் எந்த உலகத்தில் வாழ்கிறாளென்று புரியவில்லை. மாமியின் தம்பி அதாவது சுவேதாவின் சித்தப்பாவின் மனைவி சித்தி வேறு ரகம் ..இஸ்திரி போட்டு மினுக்கிய உடை அலங்காரத்தோடுதான், எப்போதும் .அவள் உலா வருவாள்.அவர்கள் வீட்டில் இஸ்திரி எதுவும் கிடையாது . அது மட்டுமல்ல. அம்மா கொசுவம் வைத்தெல்லாம் ,புடவை கட்ட மாட்டாள். தட்டுடுப்புத் தான் அதாவது கொசுவமின்றிச் சுற்றி வளைத்துக் கட்டுவது . அதனால் தான் அவளைக் கண்டால், மாமிக்கு இளக்காரமாகப் போய் விட்டது.

இதெல்லாம் வெறும் மாயத் தோற்றமென்றே, அப்பா கூறுவார். .வெறும் நாம ரூபங்கள் மட்டுமே இவர்கள். இந்த மாயத் திரையைக் கிழித்துக் கொண்டு பார்த்தால், குண விசேஷங்களினால் ,அம்மாவும் பளிங்கு வார்ப்பான தேவதை தான். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டது யார் தவறு? அம்மா தேவதை என்று சொன்னால், மாமி வாயில் அடிப்பாள் .அவ்வளவு கோபம் அவளுக்கு அம்மா மீது. அம்மாவிடம் மட்டுமல்ல. எங்களைக் கண்டாலும் கரித்துக் கொட்டுவாள்.

இப்படி ஏச்சும் பேச்சும் கேட்கவா பூமியில் வந்து பிறந்தோம் என்று நினைத்து சுவேதா மனம் வருந்திய போது, மீண்டும் மாமியின் குரல் கேட்டது.

நான் உள்ளதைத் தான் சொல்லுறன். கொம்மாவுக்கு ஒரு செய்காரியமும் தெரியாது. உங்களையும் சரியாய் வளர்க்கேலை. இதை நான் மட்டுமே சொல்லுறன்? ஊரைக் கேட்டாலே இதைத் தான்சொல்லும். எனக்கென்ன வந்தது? எப்படியாவது குட்டிச் சுவராய்க் கெட்டுத் தொலையுங்கோ. நான் போறன.

ஓ! ஊர் வேறு சொல்லுதா? இப்படி எங்களைப் பற்றி பிழையாக நினைப்பதற்கு, ஊரெல்லாம் கதை அளந்து விட்டது ஆர்? இதை நான் கேக்கப் போனால் மாமியின் மானம் காத்திலை தான் பறக்கும் அவவைப் போல, ஊர்க் கதை பேச , இஞ்சை ஆர் இருக்கினம்? இந்த லட்சணத்திலை கோயில் தொண்டு வேறை பாக்கிறது . சித்தப்பாவுக்கு அது தான் முழுநேரப் பணி .அவர் வேறு ரகம் ஆன்மீக ஞானி. இந்த மாமி அப்படியே? அதைப் பற்றி அவள் பேச நினைக்கிற போது, மாமி நின்ற இடத்தை நிழல் கவ்விற்று. அவள் போய் வெகு நேரமாகிவிட்டிருந்தது..

சுவேதா மெளனம் கனத்து வெறும் வானத்தையே, அண்ணந்து பார்த்துக் கொண் கொண்டிருந்தாள். மாமி நிழல் தான் என்று நினைக்கிற போதே அவளின் மனம் சகஜ நிலைத் திரும்பிற்று.

மாமி மட்டுமே நிழல் ?நானும் தான். அம்மா உட்பட எல்லோரும் தான். வெறும் நிழல்களாகவே மறைந்து போகிற உடலைச் சுமந்தபடி, நமக்குள் ஏன் இந்த வீண் சண்டை? இருக்கப் போறது கொஞ்சக் காலம். .அதை மறந்திட்டு ஒரு வீண் விவகாரத்துக்காக, ஒருவரோடு முட்டி மோதித் தர்க்கித்துச் சண்டை போடுறதாலை சத்தியம் விளங்கப் போகிறதா, என்ன?

எதுவும் நடக்கப் போறதில்லை .இந்த வெறும் நாமருபங்களாகவே, தோன்றி மறைந்து போகிற மனிதர்களை முன் வைத்து, சண்டையிட நினைக்கிறது கூட ஒரு வகையில் ,பாவநரகத்துக்கே நம்மை இட்டுச் செல்லும் என்று எண்ணிய சுவேதா மனக் குழப்பம் தீர்ந்தவளாய் ,கண்ணை மூடிக் கொண்டு பார்த்த போது , நிசப்தமான அமைதி தோன்றிற்று.அதையும் கிழித்துக் கொண்டு. அப்பா அடிக்கடி சொல்லிக் காட்டுகிற ஒரு மகா வாக்கியம் திடீரென்று ஒளிப் பிழம்பாய் இருட்டிலேயும் அவள் அதைத் த்ரிசனம் காண்கிற விதமாய், அவள் கண் முன் காட்சி கொண்டு ஒள்ர்ந்தது. அது வேறொன்றுமில்லை. அடிக்கடி தத்துவமஸி என்ற, மகா வாக்கியம் ஒன்றையே ,அவர் சொல்லிக் கொண்டிருபார். இந்து நாகரீகத்துறையில் பி ஏ பட்டம் வாங்கி ஆசிரிய திலகமாகப் பரிணமித்தவர் அவர். ஆன்மீக ஞானம் ஒன்றிலேயே, ஊறிப் போன கடவுள் சுபாவம் கொண்டு, பிரகசித்தவர் அவர். . எல்லோருமே அப்படி இருந்து விட்டால் வாழ்க்கையில் ,துக்கம் தான் ஏது? வெறும் நிழலாய் இருந்து கொண்டு, வரட்டுச் சித்தாந்தமே பேசி மனங்களைக் காயப்படுத்துகிற, மாமியை யாரால் தான் திருத்த முடியும்? அப்பாவின் ஒளிப் பிழம்பு விசுவரூப தரிசனமும் ,அவர் பிரகடனப்படுக் கூறுகின்ற மகா வாக்கிய மும், மட்டுமே இப்போது அவள் மனசிலே நிறைந்து போயிருந்தது. அது வெறும் காட்சி மட்டுமல்ல, கனம் கொண்டு எழுகிற வேத பிரகடன ஒலியாகவும் ,அவள் செவிக்குள் வந்து முழங்கிற்று, அதை சிரத்தையுடன கேட்டவாறே, அவள் மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள். அவர் அடிகடி சொல்வார். தத்துமஸி1 இருப்பு ஒன்று தான். இருக்கிறது .அந்தப் பிரம்மம் மட்டும் தான் அதுவே எல்லாமாகி இருக்கையில்,, நாமெல்லாம் வெறும் நாம சொரூபங்கள் மட்டுமே. என்பார் அவர். இப்படியாகிற போது ,வாய்க் கொழுப்பெடுத்து தர்க்கமிட்டுச் சண்டை போடுகிற இந்த மாமி கூட, வெறும் நிழல் தான் . அதை நினைக்கையில், , சுவேதாவின் மனதில் அவள் மீது கோபம் வருவதற்குப் பதிலாக, வெறும் பரிதாபம் மட்டுமே மிஞ்சியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *