பட்டணமா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 5,594 
 

இன்றைக்கு தவமணி அக்காவின் போக்கு சற்று விசித்திரமாகத்தான் தோன்றுகிறது. காலையில் பத்தரை மணிக்கே வந்து தேனப்பன் சார் முன் உட்கார்ந்தவர மணி பன்னிரெண்டு ஆகியும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இரண்டு மூன்று நாட்களாகவே இப்படித்தான் வந்து அமர்வதும் பின்பு சற்று நேரம் நிற்பதும் கொஞ்சம் சத்தமாக பேசுவதும் கொஞ்சம் ரகசியமாக பேசுவதும் என நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறாள். அந்த அக்கா இப்போது வேலை எதுவும் செய்வதாக . வேலை எல்லாம் பெண்டிங் ஆக இருக்கிறது. ஆனால் சீட்டில் இருப்பதே கிடையாது. ஐந்து நிமிடம் சீட்டில் இருந்தால் அரை மணி நேரம் ராஜா சார் முன் நின்று தீவிரமாக எதையோ டிஸ்கஸ் செய்து கொண்டிருப்பாள்.

நான் கிராமத்தான். இந்த மாநகரத்தின் போக்குகள் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. எங்கள் ஊரில் அநேகமாக நான் தான் முதன்முதலாக பட்டணத்திற்கு வேலைக்கு வந்திருக்கிறேன். நான் படித்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படிக்கும்போது நேர்மையாகவும் நியாயமாகவும் வாழவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி வளர்த்தார்கள். யாராவது தப்பு செய்தால் அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்களை சப்போர்ட் செய்யக்கூடாது. சப்போர்ட் செய்தால் அவரும் குற்றவாளியே. என்றெல்லாம் திரும்பத் திரும்ப சொல்லி வளர்ந்ததாலோ என்னவோ என் மனதில் எங்கு தவறு நடந்தாலும் அது சுருக் சுருக்கென்று குத்தி கொண்டே இருக்கும்.

தவமணி அக்காவுக்கு வயது 38 இருக்கும். அவருடன் ஸ்கூலில் படித்த ஒரு அக்கா அன்றைக்கு தன் மகளுக்கு கல்யாணம் என்று இவருக்கு பத்திரிகை வைக்க வந்தார்.வயதுக்கு வந்ததோடு அந்தக்கா படிப்பை நிறுத்தி விட்டாராம். இப்போது தன் மகளையும் அதிகம் படிக்கவில்லை என்றார். ஆனால் இன்னும் தவமணி அக்கா அழகாக நீட்டாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு வேலைக்கு வந்து கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். தன் வீட்டாரோடு சண்டை பிடித்துக் கொண்டு இங்கு வேலைக்கு வந்து விட்டார். அவருக்கு ஒரே ஒரு தம்பி; அவர் அதிக காலம் அக்காவுக்கு கல்யாணம் முடியட்டும் என்று காத்திருந்து விட்டு பின்பு ஒரு நாள் தான் லவ் பண்ண பொண்ண திருமணம் செய்து கொண்டு வந்து நின்று விட்டார். தவமணி அக்காவுக்கு ஒரே கோபம். தம்பியோடு சண்டை பிடித்துக் கொண்டு ‘இனி நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு இங்கே ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு தனியார் நிறுவனம். இங்கு முதலாளிக்கு சம்பளத்தை விட வேலைதான் முக்கியம். ஆனால் இங்கு வேலை பார்ப்பவர் எல்லோரும் அதிகபட்சமாக குறைந்த அளவு வேலை பார்க்கின்றனர். அதாவது இதை விட குறைவாக இனி வேலை பார்க்க முடியாது என்ற கருதும்படி மிக மிகக் குறைவாக வேலை பார்க்கின்றனர். முதலாளியும் மானக்கேடாக ஒவ்வொருத்தரையும் பேசுகிறார். இவர்கள் பார்க்கும் வேலைக்கு சம்பளம் ஒரு கேடா என்று கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார். ஆனால் எவருக்கும் அது உறைத்ததாக தெரியவில்லை. திடீர் திடீரென்று ஆட்கள் வேலையை விட்டு நின்று விடுகின்றனர். இங்கு யாருக்கும் முதலாளிகளிடம் விசுவாசம் கிடையாது. வேலையிலும் பற்று கிடையாது. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இவர்கள் வேலைக்கு வருகிறார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே? எனக்கு இந்த பட்டணத்துக்கு ஒன்றும் புரியவில்லை.

வேலை நன்றாக செய்து நல்ல பெயர் வாங்க வேண்டாம். ஏனென்று கேட்டால் முதலாளி சம்பளம் தர மாட்டான். அவனுக்கு எதற்கு வேலை பார்க்க வேண்டும் என்று என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள். ஏதாவது ஒரு தவறு கண்டுபிடித்து நிர்வாகத்தையும் முதலாளியையும் திட்டுவதே இவர்களுக்கு வாடிக்கையாக போய் விட்டது. இப்போது இன்னும் சில மோசமான காரியங்களும் தொடங்கிவிட்டன. இப்படி ஒரு தவறு நடப்பதாகவே எவரும் கண்டுகொள்வதில்லை.

தேனப்பன் சாருக்கு வயது என்ன தெரியுமா? அவர் ரிட்டையர் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது. அவர் பென்ஷன் வாங்கிக் கொண்டு சும்மா பொழுது போகாமல் இங்கே வந்து உட்கார்ந்து வேலை செய்வதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். முதலாளியின் அப்பாவிற்கு இவர் ஃபிரண்ட் அதனால் அவர் அப்பா ரெகமண்டேஷனில் வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறார். தவமணி அக்காவுக்கு அவர் மகள் . ஆனால் அவர் தவமணி அக்காவோடு கொஞ்சிக் கொண்டிருக்கிறார் இந்த அக்காவும் இந்த கிழவனிடம் போய் என்னேரமும் பேசிக்கொண்டிருக்கிறது. எனக்கு இவர்கள் இருவரையும் கொஞ்சம் கூட பிடிக்க . வேலை நேரத்தில் இப்படி இவர்கள் நடந்து கொள்வது இவர்கள் மேல் எனக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.

இந்த அறையில் நாங்கள் எட்டு பேர் இருக்கிறோம். மீதி ஐந்து பேரும் எதுவுமே நடக்காதது போல அவர்கள் பாட்டுக்கு எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். தவமணி அக்காவை கூப்பிட்டு யாரும் கண்டித்து அதற்கு புத்திமதி சொல்வது கிடையாது. நான் அவர்களை விட பத்து வயது இளையவன். நான் எப்படி அவர்களிடம் இதுபற்றி பேச முடியும். தேனப்பன் சார் மிக மிக மூத்தவர். அவரிடமும் என்னால் பேச இயலாது. யாரிடம் என்ன பேசவேண்டும் என்று ஒரு வரம்பு இருக்கிறது இல்லையா? அந்த வரம்பை மீறி பேசலாமா? இது என்ன கெட்டும் பட்டணம் சேர் என்பார்கள். ஆனால் பட்டணம் வந்து தான் பாதி பேர் கெட்டுப் போகிறார்கள்.

தவமணி அக்காவோட அம்மா ஒரு ஸ்கூல் டீச்சர். அவர்கள் அவ்வப்போது தாமாகவே வந்து பார்த்து விட்டு அழுது கொண்டே போவார்கள். ஆனால் தவமணி அக்கா ‘போ போ உன் மகனோடு போயிரு. அவன் ஒருத்தியை கூட்டிட்டு வந்து இருக்கான். அவள் பெத்த புள்ளை எப்போவும் கொஞ்சு போ’ என்று திட்டுவார்கள் அவர்களும் எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தார்கள். ஆனால் இந்த அக்கா ஏதாவது ஒரு குறை சொல்லி மறுத்துவிட்டார். இப்போது இந்த கிழவனிடம் வந்து நிற்க வேண்டிய நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.

இந்த கிழவன் ஒரு ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். அங்கு தவமணி அக்காவை கூட்டிக் கொண்டு போய் ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? தவமணி அக்காவுக்கு இந்த ஆபத்து தெரியாமலா இருக்கும்? அல்லது தெரிந்து கொண்டே தெரியாதது போல் பேசுகிறாரா. அல்லது அவருக்கு முழு சம்மதம் தானா? ஒன்றுமே புரியவில்லை ஏதாவது தப்பு தண்டா ஆகிவிட்டால்… பின்பு தவமணி அக்காவை யார் திருமணம் செய்து கொள்வார்?

அக்காவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு யாரோ நீர்ச்சுழிக்குள் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே மூழ்கிக் கொண்டு போவது போல் தெரிகிறது. ஒருநாள் நான் முதலாளி அம்மாவை பார்த்து இந்த விஷயத்தை மெதுவாகச் சொன்னேன். நீங்கள் தான் தவமணி அக்காவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கை ஆபத்தில் முடிந்துவிடும் என்று அவர்களிடம் என் பயத்தை எடுத்துரைத்தேன். மறுநாள் நான் வேலைக்கு வந்ததும் தவமணி அக்காவை பார்த்தேன். சீட்டில் அவள் இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து அவரும் அந்த சாரும் உள்ளே வந்தார்கள்.அவர்கள் எங்கேயோ போய் காப்பி குடித்துவிட்டு வந்து வந்தார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் காபி குடிக்கும் கடையில் அவர்கள் குடிக்க மாட்டார்கள் நாலு கடை தள்ளிப்போய் அங்கு ஆற அமர உட்கார்ந்து சிரித்துப் பேசி குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து வருவார்கள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தார்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து மேனேஜர் அவர்களை அழைத்தார். தவமணி அக்கா உள்ளே போய்விட்டு வந்து தேனப்பன் சாரிடம் ஏதோ முனுமுனுவென்று கூறிவிட்டு போய் தன் சீட்டில் உட்கார்ந்து விட்டார்கள்.

நான் வழக்கம் போல் மத்தியானம் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு வந்து விட்டேன். இங்கே ஒருவரையும் காணவில்லை. என்ன ஆயிற்று? எனக்கு எதுவும் புரியவில்லை. பிறகு மெதுவாக ஒவ்வொருவராக வந்து தன் இருக்கையில் அமர்ந்தனர். திடீரென தேனப்பன் சார் எழுந்து போய் எனக்கு நெற் எத்ரில் இருக்கும் சர்மாவிடம் ஏதோ ரகசியமாய் சொல்லிவிட்டு அங்கு இருக்கும் நின்று கொண்டு ஏதோ கோபமாக கத்தி பேசி கொண்டிருந்தார்.. அவர் என்ன பேசுகிறார் என்பதும் ஆரம்பத்தில் எனக்கு புரியவில்லை. நான் நிமிர்ந்து பார்த்தேன். சர்மா தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார். அவர் தலையாட்டியதைப் பார்க்கும்போது நிச்சயமாக தேனப்பன் சார் அவரை திட்டவில்லை என்பது தெரிந்தது. பின்பு யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. குனிந்து வேலையை பார்த்துக் கொண்டே தொடர்ந்து அவர் பேசுவதை கவனித்தேன். அவர் என்னைத் தான் திட்டி கொண்டு . நான் போய் முதலாளி அம்மாவிடம் சொல்லி அவர்களைப் பற்றி வத்தி வைத்துவிட்டதாக கத்திக் கொண்டிருந்தார். அவர் தான் செய்த தவறை நியாயப்படுத்தி கொண்டிருந்தது எனக்கு கசப்பாக இருந்தது. முதியோர் காதல் என்றுதான் வைத்துக் கொள்ளேன் உனக்கு ஏன் காய்கிறது? நீ உன் வேலையை பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதானே? நாங்கள் எப்படி இருந்தால் உனக்கு என்ன? நீ என்ன முதலாளிக்கா பிறந்திருக்கிறாய் என்றெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்.

எனக்கு சங்கடமாக இருந்தது. யாராவது எனக்கு ஆதரவாகப் பேசுவார்கள் என்று நிமிர்ந்து பார்த்தேன். எல்லோரும் என்னை வெறுப்பாகப் பார்த்தார்கள். நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்து உட்கார்ந்தேன். தவமணி அக்காவும் இருக்கையில் இல்லை. இன்னொருவர மெல்ல என் அருகில் வந்தார். ‘’என்ன தம்பி நீ விவரம் தெரியாத பையனா? நீ படிச்சவன் தானே? இப்படி செய்யலாமா? கிராமத்துக்காரன் மாதிரி பண்றீங்க? அடுத்தவங்க விஷயத்துல நம்ம ஏன் தலையிடனும்? அது அசிங்கம் இல்லையா? கொஞ்சம் கூட உனக்கு நாகரீகமே தெரியலயே? நம்ம வேலையை தான் நம்ம பார்க்கலாமே தவிர அடுத்தவங்களை பற்றி நம்மை பேசக் கூடாது. இது மகா தப்பு என் கிட்ட இப்படி நீ நடந்திருந்தால் நான் எடுக்கிற ஸ்டெப்ஸை வேற மாதிரி இருக்கும். நான் உன்னாண்ட நடந்துக்கிர முறையே வேற மாதிரி இருக்கும். ஏதோ தேனப்பன் சார் பாவம் வயசான மனுஷன் பொலம்பிட்டு போறாரு. உனக்கு என்ன வந்துதாம் தவமணி உன் கூடப் பிறந்துதா? நீங்க பண்றது மகா தப்பு.

உனக்கு என்ன பொறாமை? இந்த பொறாமை ஆகாது தம்பி? நீ வளர வேண்டிய பையன். நீ இந்த மாதிரி அடுத்தவங்க சந்தோஷத்தைப் பார்த்து வைத்து வயிறு எரியக்கூடாது. வந்தால் வேலையை பார்க்கநும் பின்ன வீட்டுக்கு போனோம் என்று இருக்கணும். அத விட்டுட்டு அவங்க என்ன பண்றாங்க இவங்க என்ன பண்றாங்கன்னு வேவு பார்க்கக் கூடாது. இது என்ன கேடு கெட்ட புத்தி உனக்கு. போட்டு கொடுக்கிறது .எதுக்கு போய் முதலாளியம்மாவாண்டை போட்டு கொடுத்த? முதலாளியம்மா உனக்கு வேண்டியதா/ அந்தம்மாவை சந்தோஷப்படுத்தணும் நினைக்கிறியா? இது கேவலமா இல்லையா? நீ படிச்சவன் தானே? படிச்சவன் மாதிரி கவுரவமாக இருக்கத் தெரியல? இதோட இந்த தப்பை விட்டுடு. நீ என்னைக்கும் வாழ்நாள்ல செய்யாத ‘’ என்று என்னை கேவலமாக பேசிவிட்டு போய் விட்டார்.

அதுவரை நின்று கொண்டிருந்த அவன் மெல்ல உட்கார்ந்தேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்? அவர்கள் போகும் பாதை சரியல்ல; அவர்கள் தவறான பாதையில் போகிறார்கள்; அவர்களை திருத்த வேண்டும் என்று தானே நான் முயற்சி எடுத்தேன். இதில் தேவையில்லாத கற்பனைகளையெல்லாம் இவர் சேர்த்துப் பேசுகிறார். பொறாமைப்பட என்ன இருக்கிறது. தவமணி அக்கா என்னை விட பத்து வயது மூத்தவர். அவரைப் பார்த்து நான் ஏன் பொறாமைப்படப் போகிறேன்? படித்தவனா என்று கேட்கிறாரே? படித்தவன் என்றால் அடுத்தவன் தப்பு செய்வதைத் தட்டிக் கேட்கக்கூடாதா ? அடுத்தவன் எப்படி நாசமாப் போனாலும் வேடிக்கை பார்த்துக்கிட்டே இருக்கணுமா? சமூக அக்கறை, சமூக ஆர்வம் இதெல்லாம் இங்கு இருக்கக்கூடாதா? அதுக்குத்தான் படிக்கிறது?

இவங்க எல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்காங்க. என்ன பார்த்துகிட்டு நீ படிச்சவனா? நாகரீகம் தெரிஞ்சவனான்னு கேக்குறாங்க. இரண்டு பேர் கெட்டு போறது ரெண்டு பேரும் தப்பு பண்றதை வேடிக்கை பாக்குறவன் தான் நாகரீகமானவனா? அவர்களை தட்டிக் கேட்டு அவனை நல்ல வழியில் நடத்த வேண்டாமா? என்ன கேவலமான பட்டணத்து வாழ்க்கை பட்டணத்து தர்மம்? இது பட்டணத்தில் தான் இப்படி இருக்கா? இல்ல எல்லா இடத்துலயும் இப்படித்தான் இருக்கா? என்று என் மனதுக்குள் நினைத்தபடி உட்கார்ந்திருந்தேன்.

யாருமே எனக்கு ஆதரவாக பேசவில்லை. நிமிர்ந்து எல்லோர் முகத்தையும் ஒருமுறை கூர்ந்து பார்த்தேன். எல்லோருமே என்னை திட்டுவது போல தான் தெரிந்தது. எனக்கு தேவை இல்லாத வேலையில் நான் தலையிட்டு விட்டதாக. அவர்கள் கருதுவது எனக்கு புரிந்தது

இது சரிப்படாது. இனி இந்த அலுவலகத்தில் நாம் வேலை பார்க்கக் கூடாது. இது ஒரு நச்சு கூடாரம். நல்ல பாம்பும் கருந்தேளும் ஒருங்கே கூடி புழங்குகின்ற இடமாக தான் எனக்கு இந்த அலுவலகம் தெரிந்தது. நல்ல மனிதர்கள் தொண்டுள்ளம் கொண்டவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு முறையாக வேலை செய்பவர்கள் எவரும் இங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஆட்களோடு சேர்ந்து நான் வேலை பார்த்தால் இன்னும் சில ஆண்டுகளில் என் மனசாட்சியை விற்று விட்டு நான் என்னென்ன தவறுகளுக்கு ஆதரவாக ஊக்கமளிக்க கூடியவனாக மாறிவிடுவேனோ தெரியவில்லை. நான் மெல்ல மெல்ல அந்த அலுவலகத்தை விட்டு விலகிக் கொண்டே வந்தேன். இரண்டு நாட்களில் எனக்கு மனதில் மிகுந்த தெளிவு ஏற்பட்டு விட்டது

பஸ் ஏறி கிளம்பி விட்டேன். பஸ் நகரத் தொடங்கியது என் சொந்த ஊருக்கு. அங்கு வாழும் வெள்ளந்தியான மக்கள், நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றனர். நல்லவனாக வாழ வேண்டும் என்பதற்காக வாட்டி எடுக்கும் வறுமையையும் தாங்கிக்கொண்டு உழைத்து ஓடாகத் தேய்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களைத் தேடி என் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன். என் ஊரில் ஏழைச் சிறுவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வேன். நான் பட்டணவாசியாக அவர்களின் நாகரிகம் தெரிந்தவனாக இருப்பதை விட கிராமத்துவாசியாக பண்பாடு தெரிந்தவனாக வாழ்வதே சரி.. ஜன்னல் வழியாக பார்க்கிறேன் . பட்டணம் பின்னோக்கி போய் கொண்டிருக்கிறது. . .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *