மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,438 
 
 

சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய எம்.பி.ஏ. தேர்வுகளை எப்போது எழுதுவது? அடுத்த முறை எழுதினால் ரேங்க் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இருக்காதே… கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படியாகுமோ? அதன் தொடர்ச்சியான தன் அமெரிக்கா செல்லும் கனவு என்னவாகும்? இரண்டு மாதத்தில் எழுதவேண்டிய ஐ ஏ எஸ் தேர்வை எழுத முடியுமா? இத்தனை கேள்விகளும் ஒரே நொடியில் தோன்றி மறைந்தன. உடனே தலையை வேகமாக உதறிக்கொண்டான். “சே… என்ன மனிதன் நான்’ என்று அந்த நொடிப்பொழுது சிந்தனை அவனது மனசாட்சியை வெகுவாக உலுக்கிவிட்டது. அவனது எம்.பி.ஏ திறன், அமெரிக்க வாசம், இந்திய ஐ ஏ எஸ் கனவு எல்லாவற்றையும் தூக்கித் தூரப் போட்டது. பெற்ற தகப்பனின் சாவுக்கு வருந்தாமல் தன் கனவு வாழ்க்கையை எண்ணும் அளவுக்கு மனிதத் தன்மை அற்றுப் போய் நான் சாதிக்கப் போவது என்ன? அப்படி சாதித்தாலும் அதில் என்ன இன்பம் இருக்கும்? அந்தச் சந்தோஷத்தைப் பார்க்க அப்பா இருப்பாரா? படிப்பு என்பது பக்குவம் தரும் என்பார்கள். பெற்றவனின் இறப்பு தன் படிப்புக்கு இடையூறாகிறதே என்று கணக்குப் பார்ப்பதா? படிப்பு அப்படிப்பட்ட படிப்பு படித்து தான் என்ன பயன்? நேயம் கொல்லவா கல்வி? அந்த நொடிப்பொழுது சிந்தனை செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக எதுவுமே கிடையாதே என்று நைந்த மனத்தோடு ஊருக்குப் புறப்பட்டான்.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவிபயணப்பட்டுக் கொண்டிருந்த ராஜபாண்டிக்கு, அப்பாவின் பரிதாபமான கோலம் கண்ணில் நீர் பனிக்கச் செய்தது. பத்துப் பேர் உடன் பிறந்த குடும்பத்தில் படிப்பறிவு குறைந்ததால் அதற்கேற்ப இருந்த முறைப் பெண்ணை மணந்தவர். ஏனையோர் படித்துப் பட்டணம் போய் எங்கோ போய்விட்டார்கள். காலங் கடந்து பிறந்த ஒரே மகன் ராஜபாண்டி படிக்கத் தொடங்கியதெல்லாம் நகரத்தில் மாமாவின் வீட்டிலிருந்துதான். மாமியும் அப்பாவின் தங்கையாகையால் பிரச்னையே இல்லை. ஊரை, பெற்றோரை பிரிந்து வாழும் வருத்தமோ உறுத்தலோ ராஜபாண்டிக்கு எப்போதுமே இருந்ததில்லை.

மகன் படிக்கட்டும் என்று பொறுத்துக் கொண்டிருந்த அப்பாவோடு வாழ்ந்த நாட்கள் விரல் விட்டு எண்ணக் கூடியதாய் இருந்தன. மகனைக் காண வேண்டுமென்று தோன்றினால், “”கண்ணுக்குள்ளேயே இருக்கான், ஓர் எட்டு போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்” என்று வாழைத்தாரோ, கடலையோ, காராமணியோ, வெண்டையோ, மிளகாயோ எதையாவது சுமந்து கொண்டு வந்து தங்கையை மகிழ்விப்பார். அப்பா தன் வாழ்வில் கண்ட சுகம் தான் என்ன? பாகப் பிரிவினையில் அரைக்காணி நிலம் மிஞ்சியது. ஆடுகள் அன்றாட வாழ்க்கைக்கு உதவின. அரைக்காணி, ஆடுகள் அளவுக்குக் கூட அவன் அவருக்குப் பயன்பட்டதில்லை. அவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்த அவருக்கு மனைவியும் மகனுமே உலகமானார்கள். அதிலும் அவன் கூட இருந்தது சொற்ப தினங்களே. என்ன ஏக்கம் கண்டிருக்கும் அந்த மனசு… கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட கை எழாமல் சிலையாகப் பயணப்பட்டான்.

அவனுடைய ஊர் சற்று விசித்திரமான பூகோள அமைப்புடையது. ஊரின் கீழ் எல்லை கரடுமுரடான பாதைக்குப் பிறகு ஒரு சிறிய டவுனைக் காட்டும். மேல் எல்லையில் ஒரு கால்வாய் ஜீவநதி போல்… நீர் உதவாது… சேறு ஆளை இழுத்துவிடும். சாய நீர், கோழிப் பண்ணை, தோல் தொழிற்சாலை என்று ஊருக்குச் சில மைல் தொலைவில் உள்ளவற்றிலிருந்து வெளியேறும் வண்ண நீர். சமூகக் காடுகளைத் தாண்டி கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் தொலை தூரத்து மலையிலிருந்து எங்கே இணைகிறது என்று கண்டு பிடிக்க முடியாத அருவி நீர். வறண்ட நாட்களிலும் கரு நீல நதியாக இருக்க இவை காரணம்.

ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் அந்த கால்வாயை ஒட்டிச் சென்று மீண்டும் அதே தூரம் அடுத்த கரையின் ஓரம் கடந்து, இருபுறம் அடர்ந்துள்ள சமூக நலக் காட்டுக்கு நடுவே சென்றால் மேல மலை டவுனுக்குச் செல்லலாம். அப்பா அந்தத் தூரத்தை நடந்தே தான் கடப்பார். ஒரு முறை இவன் பேனா எழுதாததைக் கண்டு, மேல மலைக்கு நடந்தே போய் பேனா வாங்கி வந்தார். சைக்கிள் கூட இல்லாமல் நடந்து சென்று வந்ததைப் பார்த்துத் தாய் தான் மனம் கசிந்தார். இவனோ, “”சொல்லிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே நியூஸ் பேப்பரும் வாங்கிட்டு வரச் சொல்லியிருப்பேன் இல்ல…” என்றான். பிறகு அவன் ஊரிலிருக்கும் நாளிலெல்லாம் பெரிய வீட்டுக்குப் பேப்பர் போடும் மணியிடம் சொல்லி பேப்பர் போடவைத்தார்.

பெரிய குடும்பமாக இருந்தபோது ஐந்து காணி நிலத்தில் விளைவித்த விளைச்சலை வாய் ஓயாமல் சொல்லுவார் அப்பா. பூமி வறண்டு போன நிலையில் அப்படிப்பட்ட விளைச்சலைப் பார்க்க முடியவில்லையே என்று அப்பாவுக்கு ஏக்கம். பாகம் பெற்றவர்கள் தண்ணீர் இல்லாமல் தரிசாய் விட, அப்பா மட்டும் தன் அரைக்காணி நிலத்துக்குப் பக்கத்து நிலத்துக்காரர் தயவில் அவ்வப்போது பயிர் செய்து கொண்டிருந்தார். மாமாவும் அத்தையும் ஊருக்கு வந்த போது, வீட்டுக்கு மோட்டார் போட்டுத் தந்து விட்டுப் போனார்கள். வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தன் நிலத்துக்குப் பூமியில் பைப் புதைத்து நீர் கொண்டு சென்று விவசாயம் செய்ய வேண்டும் என்ற வெறிகூட இருந்தது. கால்வாயை ஒட்டி ஆழ்துளைக் குழாய்கள் போட்டுப் பாசனம் செய்ய அரசாங்கம் உதவலாம் என்று அங்கலாய்ப்பார். சமூகக் காடுகளுக்கு இடையே பாதை உருவாக்கி மலையடிவாரத்தில் அருவி விழும் இடத்தைக் கண்டு பாசனம் செய்ய முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது.

டிகிரி படிக்கும் போது, கிராமப்புற வளர்ச்சிதான் முக்கியம் என்று ஆசிரியர் போதித்த தியரிக்கு அப்பா தான் பிராக்டிகல் ஸ்பெசிமன் என்று பட்டது. எம்.பி.ஏ வில் ஒரு பைசா ஊதியம் தந்து ஐம்பது பைசாவுக்கு வேலை வாங்குவது எப்படி என்ற நிர்வாகத் திறனை அமெரிக்காவில் காட்டி அதே ஒரு பைசா ஊதியத்தைத் தான் பெற நினைத்தது அபத்தமாகப் பட்டது. இனி அந்தப் பைசா வந்தாலும் சந்தோஷப்பட அப்பா இல்லை. “என் நாடு எனதென்று அறிந்தேன்’ என்ற தத்துவம் எப்போது மனத்தில் புகுந்தது என்றும் புரியவில்லை. அநேகமாக மனசாட்சி உறுத்திய அந்த நேரத்தை ஒட்டித்தான் இருக்க வேண்டும்.

வீட்டுக்குச் சென்றவுடன் இவனைக் கட்டிக் கொண்டு அம்மா கதறினாள். “”பக்கத்து ஊருக்கு கலெக்டர் வந்த போது மனு கொடுக்கப் போனாரு. இவரு நடந்து போய்ச் சேருவதற்குள் கலெக்டர் கிளம்பிப் போயிட்டாராம். எம் மவன் கலெக்டரா வரும்போது அவன் கையிலதான் மனுவைக் கொடுக்க முடியும் போலிருக்குன்னாரு… திரும்பி வரும் போது தலையில் வேர்க்குதுன்னு முண்டாசு கட்டாமலே வெயில்ல நடந்து வந்திருக்காரு… வந்து தலையை பிடிச்சுக்கிட்டாரு… சாய்ஞ்சிட்டாரு… மூக்கிலே காதுலே எல்லாம் ரத்தம்…” என்று அம்மா ஆதங்கத்தோடு புலம்பினாள்.

மனு, ஊருக்குத் தண்ணீர் கொண்டு வர அரசாங்கம் செய்ய வேண்டிய சாத்தியக் கூறுகளைச் சுட்டியிருந்தது. நூறு நாள் வேலைத் திட்டப் பணியாட்களைச் சமூகநலக் காடுகளுக்கு இடையே பாதை ஏற்படுத்தி மலை அடிவார அருவியைக் கண்டறியப் பயன் படுத்தலாம் என்றது. விவசாயக் கூலிகள் கிடைக்காமல் அல்லாடும் நிலச் சொந்தக்காரர்களுக்குத் தேவைப்படும் போதும் அவர்களை அரசாங்க நிர்வாகமே பகிர்ந்தளித்து உதவலாம் என்றது. அதற்காக முன் கூட்டியே நிலச் சொந்தக்காரர்கள் கிராம நிர்வாகப் பதிவேட்டில் தமக்குத் தேவைப்படும் நாள், நபர் எண்ணிக்கையை குறிப்பிட்டு வைக்கலாம் என்று திட்டம் தந்தது. அதற்கு நில உரிமையாளர்களே அரசாங்கத்துக்குப் பணம் செலுத்தி விடுவார்கள் என்று அறிவித்தது. சுற்றுப் பாதையாகக் கடக்க வேண்டிய வண்ண ஜீவநதிக்கு நடுவே பாலம் கட்டச் சொன்னது.

மெத்தப் படித்த மேதாவி மகனை வைத்துக் கொண்டு, யாரைக் கெஞ்சிப் பிடித்துத் தன் எண்ணத்தை மனுவாக எழுதச் சொன்னாரோ… ?

உலகை ஆண்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க நிர்வாகத்திற்கு என் மூளையை செலவு செய்ய நினைத்த நான் எங்கே… என் பூமியின் தேவை இது… அதற்கு இதோ உண்டு வழி என்று உணர்த்தும் மண்ணின் மைந்தனாக இரத்தம் சிந்திய அப்பா எங்கே… நானா படித்தவன்? பிறந்ததிலிருந்து தந்தைக்குத் தான் எதுவுமே செய்யாதது போல, தன் பூமிக்கும் எதுவுமே செய்யவில்லை என்ற உறுத்தல் வேரோடியது.

ஈமக்கடன்களை முடித்த பிறகு, அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமை இனிமேல் தான் உள்ளது என்று உணர்ந்தான், ராஜபாண்டி. அது தந்தைக்குச் செய்யும் கடமை மட்டுமல்ல… தன் மண்ணுக்குச் செய்யும் நன்றியுமாகும் எனக் கருதினான்.

அப்பாவின் மனுவை பிழை திருத்தி, செப்பம் செய்து திட்டங்களைப் பட்டியலிட்டு கலெக்டரிடம் தரத் தானே சைக்கிளில் சென்றான். கூட்டத்தில் மனு கைமாறி கைமாறி கசங்கி அவன் காலடிக்கு வந்தது.

வீட்டுக்கு வந்தான். மாமாவின் கடிதம் வந்திருந்தது. ஐ ஏ எஸ் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வந்துவிட்டதாம்.

எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஊரோடு இருக்க முடிவு செய்திருந்த அவன் பரீட்சை எழுதத் தீர்மானித்தான். பிராயச் சித்தம் செய்ய வாய்ப்பு இது என்று கருதியிருப்பானோ?

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

1 thought on “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

  1. இளைஞர்களுக்குப் புத்தி புகட்டும் வகையில் எழுதப்பட்ட அருமையான கதை. என்ன வெளிநாட்டு மோகமோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *