போராட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 8,119 
 

ஓர் இரவு:

நடுநிசியில் ஈரம் சொட்டச் சொட்ட அறைக்குள் நுழைந்தாள் அம்மா. ஒன்றும் புரியாதவனாய் விழித்துக்கொண்டிருந்தேன். சுவரில் சாய்ந்து சறுக்கியபடி தரையில் குத்திட்டாள் அம்மா. ஈரமான உடைகள் அவள் அங்கங்களோடு அழுத்தியிருந்தன. குளிரில் அவளது உரோமங்கள் விரைத்திருந்தன. உடல் வளைந்து, கரங்கள் கால்களை கட்டிக்கொண்டிருந்தன. கட்டிலை விட்டு அம்மாவிடம் வந்தேன். சாய்ந்திருந்த அவளது தலையை எனது இரண்டு கரங்களால் நிமிர்த்தினேன். அம்மா அழவில்லை. விசும்பினாள்.

நான் கேட்டேன், “யேம்மா! என்னாம்மாச்சி? யேம்மா இப்படி இருக்கே?”

அம்மா சொன்னாள், “ ஒன்னுமில்லடா… நீ போய் படு.”

“சொல்லுமா…! யேம்மா இப்படியெல்லாம் பண்ற?”

அம்மா எதுவும் பேசவில்லை.நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் பார்வை என்னை விட்டு விலகியிருந்தது. தலை குனிந்து கொண்டது.

நான் கேட்டேன், “யேம்மா அப்பா நம்பள அனாதையா விட்டுட்டு போயிட்டாரேனு நினைச்சு அழுவுறியாம்மா?”

குனிந்த தலை தானாகவே நிமிர்ந்தது. சட்டென்று என்னை மார்போடு இறுக அணைத்துக் கொண்டாள். அவள் உடல் ஈரத்தில் தனியாத வெப்பம் என் மீது பாய்ந்தது. அம்மா அழுதாள். எதை நினைத்தாலோ தெரியாது, ஆனால் ஓவென அழுதாள். நான் இன்னும் அம்மாவின் கைச்சிறையில் விடுபட முடியாமல் மார்போடு அணைந்திருந்தேன். அன்றைய இரவு அப்படியே கழிந்தது.

வேறோர் இரவு:

கட்டிலில் உறங்கி கொண்டிருந்தேன். உறக்கத்தில் கை மெத்தையில் துலாவியது. திடுக்கிட்டு எழுந்தேன். அம்மா காணவில்லை. உறங்கும்பொழுது என் தலையைத் தடவியபடி உறங்க வைத்தவள் பக்கத்திலேயே உறங்கி போனாள். ஆனால் நடுச்சாமத்தில் அம்மா கட்டிலில் இல்லை. கட்டிலை விட்டெழுந்தேன். அம்மா அறையில்தான் இருந்தாள். கட்டாந்தரையில் புழுவாய் சுருண்டு கிடந்தாள். ஒருகணம் அதிர்ந்துபோனேன். மெல்ல சென்று பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அம்மாவின் வயிற்றைக் கூர்ந்து கவனித்தேன். மூச்சுக்காற்று வயிற்றை மேலேற்றி கீழிறக்கிக் கொண்டிருந்தது. அதுவரை என் உடலில் நின்றுபோன மூச்சு மீண்டும் பிரவேசிக்க தொடங்கியது. நானும் தரையில் வீழ்ந்திருந்தேன். என் மண்டைக்குள் வழக்கமான கேள்விகள் தந்தியடித்துக் கொண்டிருந்தன. அன்றைய இரவும் அப்படியே கடந்தது.

மற்றோர் இரவு:

படுக்கையில் உறக்கம் இன்றி அம்மா புரண்டு கொண்டிருந்தாள். புரண்டலில் என் உறக்கம் கலைந்து போனது. அம்மா சுருண்டிருந்தாள். இடம் மாறி இடம் புரண்டாள்.

நான் கேட்டேன், “யேம்மா, தூக்கம் வரலயா?”

அம்மா சொன்னாள், “ஆமா…நீ பேசாம படு.”

தொடர்ந்து பேச அம்மா இடம் கொடுக்கவில்லை. படுக்கையை விட்டு எழுந்தவள் மின்விசிறியை அணைத்துவிட்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள். அறை புழுக்கமானது. அம்மா அப்படியே படுத்திருந்தாள்; உறங்கவில்லை. எனக்கு எழுந்து ஓடிவிடலாம் போலிருந்தது. புழுக்கத்திலும் கண்கள் அயர்ந்தன. அரைதூக்கத்தில் நிஜங்கள் எல்லாம் கனவுகளாய் தெரிந்தன. படுத்திருந்த அம்மா எழுந்தது முதல், நள்ளிரவு குளியலறையில் தலையில் தண்ணீரை வாரி இரைத்தது வரை எல்லாம் கனவுகளாகவே இருந்தன. அன்றைய இரவு கனவுகளிலேயே கரைந்து போனது.

ஒருநாள் மதியவேளை:
பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தேன். பசி அடிவயிற்றைக் கிள்ளியது. அம்மா எனக்காக சாப்பிடாமல் காத்திருப்பாள். நான் வீடு திரும்புவதற்குள் மதியஉணவு தயார் செய்திருப்பாள். வேலைக்குச் செல்லாத அம்மாவுக்கும் பள்ளிக்குச் செல்லும் எனக்கும் மூன்று வேளை உணவைக் கொடுப்பது அப்பாவின் இபிஎப், சொக்சோ பணம்தான். வீட்டின் உள்ளே நுழைந்தேன். அம்மா அப்பாவின் மாலையிட்ட படத்தின் கீழ் சாய்ந்திருந்தாள்.

நான் கேட்டேன், “யேம்மா! அப்பா போட்டோ கீழ படுத்திருக்க… அப்பா ஞாபகம் வந்துடுச்சாம்மா?”

அம்மா சொன்னாள், “அப்படியெல்லாம் எதும் இல்ல… சும்மாதான்… அசதியா இருந்துச்சு. அதான் அப்படியே சாஞ்சிட்டேன்டா.”

அம்மா சமாளிக்கிறாள் என்பதை கண்ணத்தின் வெள்ளிக்கோடுகள் காட்டிக்கொடுத்தன.

“சரி வாம்மா, எனக்கு ரொம்ப பசிக்குது. வந்து சோறு போடும்மா.”

அம்மா சொன்னாள், “அப்ப போய் கைகாலெல்லாம் கழுவிட்டு வா…சாப்பிடலாம்.”

சாப்பாட்டு மேசையில் புதிர் போடும் பண்டங்கள். ஒரே உணவு வெவ்வேறு பாத்திரங்களில்.

நான் கேட்டேன், “யென்னாம்மா இதெல்லாம், ஒரே சாப்பாட எதுக்கு தனித்தனியா போட்டுவெச்சிருக்கம்மா?”

அம்மா சொன்னாள், “இனி அப்படிதான், அது உனக்கு… இது எனக்கு.”

நான் சாப்பாட்டில் திணறினேன். அம்மா சாப்பிட்டு சென்றாள். அதுதான் தருணம். என் கை அம்மாவின் உணவுகளை ருசி பார்த்தது. சலிக்கவில்லை. எல்லாம் உப்புச்சப்பற்று இருந்தன. அம்மா அதைதான் சாப்பிட்டாள். மீண்டும் சில கேள்விகள் எனக்குள் எதிர்வினை செய்ய ஆரம்பித்தன.

ஒரு மாலை வேளை:
அம்மா வீட்டின் முற்றத்தில் துடைப்பம், மோப்புக்கட்டை, வெளக்கமாறு என சகலமும் நிமிர்த்தி வைத்திருந்தாள்.

நான் கேட்டேன், “என்னம்மா இதெல்லாம்? ஏன் இதெல்லாம் இப்படி வீட்டு முன்னுக்கு கெடக்கு?”

“ஒன்னும் செய்யாத, அதெல்லாம் அங்கேயே இருக்கட்டும்.” கடுகடுத்த குரலில் பதில் சொன்னாள் அம்மா.

நான் மீண்டும் கேட்டேன், “எதுக்குமா?”

அம்மா சொன்னாள், “பூசை போடனும் அதுக்குதான்.”

“பூசையா! நம்ம வீட்டு முன்னுக்கு கோயிலும் இல்ல சாமியும் இல்ல… பின்ன யாருக்குப் பூசை?”

அம்மா சொன்னாள், ‘பொம்பளப்பேய்களுக்கும் ரெண்டுகால் நாய்களுக்கும்.’

“பொம்பளப்பேய்! ரெண்டுகால் நாய்! என்னம்மா சொல்ற? நெஜமாவா!” அதிர்ச்சியில் நான்.

“நெஜமாதான். ராத்திரி நேரத்துல வீட்டுகிட்டயே அலையுதுங்க. அதுங்களுக்குப் போட வேண்டிய பூசைய போட்டா இந்த பக்கம் தலை வைக்காதுங்க.” குமுறினாள் அம்மா.

அதே நாள் இரவு:
கட்டிலில் உறக்கமின்றி ‘பொம்பளப்பேய் ரெண்டுகால் நாய்’ கற்பனையில் நான். அம்மா படுத்திருந்தாள். வீட்டுக்கு வெளியே யாரோ கூப்பிடும் சத்தம். ஏதேதோ பேச்சுக்களும் அழைப்புகளும் வீட்டைச் சுற்றி வந்தன. அம்மா எழுந்து கொண்டாள். வேகமாக வாசலை நோக்கினாள்.

“ச்ச்சீசீ எச்சகாலநாய்களா, தொடப்பக்கட்ட பிஞ்சிடும். போங்கடா, போய் அவன் அவன் வீட்ல பாருங்கடா. எவளாச்சும் தாலிய அறுத்துகிட்டு நிப்பா அவள கூப்புடு… கேடுகெட்ட ஜென்மங்க எப்படி அலையுதுங்க…இதுங்களுகெல்லாம் நல்ல சாவு வராது… த்த்துஹு.”

ஆங்காரம் அனல் தெறித்தது. கட்டிலில் சாய்ந்தவள் என்னையும் நான்கு சாத்து சாத்தினாள். பயத்தில் மெத்தை ஈரமாகியிருந்தது அதற்கு காரணமாக இருக்கக்கூடும். அம்மாவினது கோவத்தில் மீதமும் மெத்தையிலேயே கரைந்தது. அதுபோன்ற இரவுகள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருந்தன.

ஒரு காலைப்பொழுது:
அப்பாவின் உறவுக்காரர் ஒருவர் சமீபகாலமாக அடிக்கடி வீட்டுக்கு வந்த வண்ணமாக இருந்தார். அன்றைய பொழுது நான் வீட்டில்தான் இருந்தேன். உடல்நலக்குறைவால் அறையில் படுத்திருந்தேன். அன்றும் அவர் வந்திருந்தார். நான் இருந்ததை உணரவில்லை போலும். அம்மா சமையலறையில் வேலையாக இருந்தார். கண்ணாடி விழுந்து நொறுங்கிய சத்தம் என்னை சமயலறைக்கு ஓட வைத்தது. அம்மா தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணத்தில் கை வைத்தபடி சமையலறை விட்டு வெளியேறினார். என்னைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போனவர் உடனடியாக வீட்டையும் விட்டு வெளியேறினார்.

நான் அம்மாவை நோக்கினேன், “என்னம்மா ஆச்சு? மாமா யான் எதுமே பேசாம போயிட்டாரு?”

அம்மா சொன்னாள், “இனிமே அந்தாளு இந்த பக்கம் வரமாட்டான். அதஅத வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். இல்லனா அசிங்கம் நமக்குதான்.”
உடல்நலம் மங்கிய நிலையில் எதுவும் புரிந்துகொள்ள முடியாதவனாக மெத்தையில் மீண்டும் வீழ்ந்தேன்.

**************************************************
அப்பாவின் இறப்புக்குப் பின்பு சில மாதங்களாகவே அம்மாவைச் சுற்றி எதேதோ நடக்கின்றன. அம்மாவும் என்னமோ நினைக்கிறாள், எதையோ செய்கிறாள். எதுவும் எனக்கு விளங்காத மர்மங்கள்.

“அம்மாவின் பிரச்சனைதான் என்ன?” கேட்க தோன்றும்.

ஆனால் என் எண்ண அலைகள் காற்றோடு கறைந்திடும். அம்மாவின் செயல்பாடுகளில் ஏதேனும் அர்த்தங்கள் அடங்கியிருக்கக்கூடும். ஒருவேளை நான் பருவமடைந்தவனாக இருந்திருந்தால் அதை எளிதில் அறிந்துகொள்ள முடியும். அதற்கும் வழியில்லாமல் போயிற்று.

“வேற யாருகிட்டயாச்சும் கேட்டு தொலைய வேண்டியதுதான!” கோவத்தில் அப்படியும் தோன்றும்.

அப்படி கேட்டால் யாரிடம் கேட்பது? என்ன சொல்லி கேட்பது? அப்படியே கேட்டுவிட்டால் அம்மாவைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஒருவேளை நான் சொல்வதையெல்லாம் வைத்து அம்மா மனநோயாளியென்று சொல்லிவிட்டால்! அப்படி சொல்லிட முடியுமா? அம்மா பல நேரங்களில் இயல்பாகதான் இருக்கிறாள். சில நேரங்களில் அதுவும் நடுநிசியில் மட்டும்தான் மாறுகிறாள். அப்படியென்றால் அம்மாவுக்கு பேய்பிடித்திருக்குமோ! பேய்க்கதைகள் எல்லாம் நடுநிசியில்தான் ஆரம்பிக்குமென பள்ளியில் நண்பன் ஒருவன் சொல்லியது எனக்கு ஞாபகமிருக்கிறது.

ஒருவேளை அந்த ‘பொம்பளப்பேய்களும் ரெண்டுகால் நாய்களும்தான்’ இதற்கெல்லாம் காரணமாக இருக்குமோ என்ற எண்ணமும் என் சிந்தையில் சமிக்ஞை கொடுக்கும்.

அம்மாவின் பிரச்சனைகளைக் கண்டறிய ஒரு வழியை ஆராயும் பொழுது ஆயிரம் கேள்விகள் என்னுள் தானாகவே மறியல் செய்கின்றன.

அம்மா கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொள்கிறாள். அது தெளிவாகவே எனக்குத் தெரிகிறது. யாரையும் எதிர்பார்க்கும் நிலையில் அவள் கிடையாது. தானாகவே களத்தில் இறங்கிவிட்டாள். அம்மா சமுதாயத்தை விட்டு சற்று விலகியிருந்தாள். அம்மா அப்படி இருந்தது அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது எனலாம். வீட்டில் இருந்தவள் இப்போது வியாபாரத்தில் இறங்கிவிட்டாள். யாரிடமும் அதிகம் பேசுவது கிடையாது. குறிப்பாக ஆண்களிடம் வன்மையாக நடந்துகொள்கிறாள். அவளது நடவடிக்கையிலும் வன்மையைத் திணித்துக்கொள்கிறாள். என்னிடத்தில் மட்டும் அம்மாவாகதான் இருக்கிறாள். தேவைப்பட்டால் அப்பாவாகவும் இருக்கிறாள்.

இப்போது எல்லா பொழுதுகளும் இப்படியாகதான் பயணிக்கின்றன. என் மண்டைக்குள் தந்தியடித்த கேள்விகள் எல்லாம் முகவரியைச் சுயமாக இழக்கின்றன. காலம் சுழல்கின்றது. என் வயதும் பருவத்தை எட்டிப்பிடிக்க நகருகின்றது. அக்காலம் கணிந்துவிட்டால் எனக்கான பதில்களைத் தானாகவே கொடுக்கும் அம்மாவினது நடுநிசி போராட்டம்.

– மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை 2012 ஆண்டு நடத்திய பேரவைக்கதைகள்-26 சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *