”குருவே எனக்கு ஒரு யோசனை செல்ல வேண்டும். காரியங்களை வேகமாக செய்வது எப்படி?”
“என்ன பிரச்சனை? எதற்கு கேட்கிறாய்?”
“எல்லா காரியங்களையும் வேகமாக செய்து முடிக்க நினைக்கிறேன். ஆனால் அப்படி முயலும்போது ஏதாவது தடங்கள் வந்துவிடுகிறது. என்ன செய்ய?”
அவன் சொன்ன பதிலிலிருந்து பிரச்சனை என்னவென்று குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
’ஒரு காக்காவுக்கு தண்ணீர் தாகம் அதிகமாயிருந்தது. அங்கேயும் இங்கேயும் அலைந்துப் பார்த்தது. எங்கேயும் கண்களில் தண்ணீர் தட்டுப்படவில்லை. அப்போது ஒரு வீட்டு மொட்டை மாடியில் ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. உடனே அங்கே பறந்துச் சென்று தண்ணீர் குடிக்க முயன்றது. ஆனால் பாவம், அந்தக் குடுவையின் அடியில் தண்ணீர் இருந்தது. அது காக்காவுக்கு எட்டவில்லை. என்ன செய்வதென்று காக்கா யோசித்தது.
அப்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. இதே போன்ற சூழலில் ஒரு புத்திசாலி காக்கா சிறு கற்களைக் கொண்டு வந்து குடுவையில் போட்டு நிரப்பி தண்ணீரை மேலே கொண்டு வந்து குடித்தது காக்காவின் ஞாபகத்தில் இருந்தது. தானும் அதே போல் செய்ய நினைத்தது. பக்கத்தில் பார்த்தது சிறு சிறு கற்கள் இருந்தன. அவற்றை கவ்வி எடுத்து வந்து குடுவைக்குள் போட்டது. நான்கைந்து கற்களைப் போட்டிருக்கும். தண்ணீர் அவ்வளவாக மேலே ஏறவில்லை. அதற்கு மேல் கற்களைப் போட காக்காவுக்கும் பொறுமை இல்லை.
இப்படி ஒவ்வொரு கல்லாக போட்டு எப்போது தண்ணீரை உயர்த்தி நீர் குடிப்பது என்று கவலைப்பட்டது. வேகமாய் நீரை உயர்த்த அதற்கு ஒரு யோசனை தோன்றியது. சிறு சிறு கற்களாய் போட்டு நீரை உயர்த்துவதைவிட ஒரு பெரிய கல்லை கொண்டுவந்து போட்டால் சட்டென்று நீர் உயர்ந்துவிடுமே என்று நினைத்தது.
அருகிலிருந்த ஒரு பெரிய கல்லை கஷ்டப்பட்டு எடுத்து வந்து மேலிருந்து கண்ணாடி குடுவைக்குள் போட்டது. அந்தக் கல் பட்டதும் குடுவை உடைந்தது. தண்ணீர் சிதறி யாருக்கும் பயன்படாமல் ஓடியது.
இந்தக் கதையை சொல்லி முடித்ததும் அவசரப்பட்டால் என்னவாகும் என்பது வந்தவனுக்குப் புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: பொறுமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில் முடியும்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)