பேசா மொழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 10,078 
 

விமான நிலையத்தில் இருந்து வரும்பொழுது டாக்ஸியில் எதுவும் பேசக்கூடாது என்று வாயை இருக்க மூடிக்கொண்டேன்,”அக்கா எப்படி இருக்கிறது?அக்கா பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?நீங்கள் வேள வேளைக்கு மாத்திரை சாப்பிடுகிறீர்களா? என்ற என் மகன் ஆனந்தின் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டு வந்தேன்.அவனுக்கு தெரியும் நான் ஏன் வாயைத் திறந்து அவனுடன் சரளமாக பேசமுடியவில்லை என்று.

சிங்கப்பூருக்குள் நுழைந்தவுடன் வாகனங்களின்பேரிரைச்சல் கேட்காமல் காதில் பஞ்சு வைத்து அடைத்தாற்போல் எவ்வளவு நிசப்தமாக ஆகிவிடுகிறது.

“அம்மா வந்தவுடன் முகத்தை இப்படிவைத்துக்கொண்டிருக்காதீர்கள். டாக்ஸி அங்கிளிடம் “என் அம்மா” என்று சொல்லியுள்ளேன்.அம்மாவுக்கும் மகனுக்கும் தகராறு என்று நினைத்துவிடப்போகிறார்.

“இனிமேல்தான் உன்னிடம் சண்டை ஆரம்பமாகவேண்டுமா?ஒரு வருஷம் கரடியா கத்துறேன்,எனக்கு பேரன்,பேத்திகளை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்காதா?

அங்கு உனக்காக ஒருத்தி காத்திருப்பது தெரிந்தும் அதைப்பற்றி நெஞ்சில் உனக்கு ஏதாவது அக்கறை இருக்கிறதா?சிங்கப்பூர் வந்தவுடன் எல்லாம் மாறிப் போய்விடுமா?

என் இயல்பை மீறி உரத்த குரலில் பேசிவிட்டேன்.

“அம்மா வீட்டில் போய் பேசலாம்.கொஞ்சம் பேசாமல் வாருங்கள்” என்றான் ஆனந்த்.

டாக்ஸி வெகுவிரைவுச் சாலையில் பூங்காக்களை கடந்து சென்றுகொண்டிருந்தது.பூங்காக்களின் சுத்தம் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக படுக்க வேண்டும் போலிருந்தது.இங்கொன்றும் அங்கொன்றுமாக மனித நடமாட்டம் தென்பட்டது.என் மகன் நெருக்கமாக அமர்ந்துகாம்டவுன்,காம்டவுன் என்று பாதிச் சிரிப்பும் பாதிக்கண்டிப்புமாக சொல்லிக்கொண்டே வந்தான்.

வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் என்னால் அழுகையை கட்டுப்படுத்தமுடியவில்லை…ஏம்மா இப்படி…நீ ஊர்திரும்புவதற்குள் என் முடிவைச் சொல்லிவிடுகிறேன் என்றான்.பால்யவயதில் அன்று இருந்த என் பிள்ளை அச்சடித்தது மாதிரி இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்தான்…சொந்தம் விட்டு போகக்கூடாது என்று நான் நினைப்பது அது முட்டாள்தனமாக இருந்தாலும் பரவாயில்லை என்று என் மனம் திரும்பி அடித்தது.என் அண்ணன் மகளை மருமகளாக்குவதற்கு என் உள்மனதின்நியாயங்கள் யாருக்குப் புரியும்?

அம்மா விஷா முப்பது நாட்கள் கொடுத்திருக்கிறார்கள்.இன்னொரு மாதம் ஆன்லைனில் நீட்டித்துக்கொள்ளலாம் என்று என் பாஸ்போர்ட்டை புரட்டியபடி ஆனந்த் சொல்லிக்கொண்டிருந்தான்.

அந்த நீட்டிப்பு எல்லாம் வேணாம்.

அக்கா பிள்ளை இந்த வருடம் ஸ்கூல் போகிறான்.நீ எனக்கு ஒரு பதிலைச் சொல்லிவிட்டால் எனக்கு இங்கு என்ன வேலை?கம்பெனியில் லீவு போட்டுவிட்டு நீயும் கிளம்பி வந்தால் சரிதான்.மாமா தயாராய் இருக்கிறார்.அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்துவிடலாம்.

அதெல்லாம் எப்படிம்மா? நீ நினைப்பது மாதிரி உடனே முடிவு செய்ய முடியுமா?கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா.நான் கீழே போய் சாப்பிட எதுவும் வாங்கிவருகிறேன்.

அம்மா “லெட்சுமி அத்தை செம்பவாங்கிலிருந்து போன் போட்டு எப்ப வருவே? என்று கேட்டார்கள்.உனக்குத்தான் நம்பர் தெரியுமே.போன் அடிமா என்று சொல்லிக்கொண்டே வெளியே கிளம்பிப் போனான்.என் பேச்சை துண்டிப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறான் போல…

கொஞ்சநேரம் அயர்ந்துவிட எதோ ஒரு சத்தம் கேட்டு எழுந்துவிட்டேன்.எதிர்வீட்டில் நான் முன்பு வந்தபோது இருந்த அடையாளங்கள் இடம் மாறிப்போயிருந்தன.வலதுபக்கமிருந்த தொட்டிகளும் செடிகளும் இடதுபக்கம் மாற்றப்பட்டிருந்தது.உள்ளேயிருந்த சீனப்பெண் வெண்துண்டு விரித்த மேஜை மேல் பீங்கான் தட்டுகளை துடைத்து அடுக்கிகொண்டிருந்தார்.வெளியில் வந்தவளிடம் செடியில்களைத்துப் போயிருந்த வண்ணத்துப்பூச்சி சிக்கிக்கொண்டது.அதை விரலில் வைத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டே சிறகை அது விரிப்பதையும் மடக்குவதையும் உற்றுப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

அவளுடைய உடல் மொழி எனக்கு வித்தியாசமாக இருந்தது.

என் ஒன்றுவிட்ட சித்தப்பார் மகள் லெட்சுமி சிங்கப்பூரில்தான் இருக்கிறாள்.இங்கு வந்துவிட்டால் எனக்கு ஒரே துணை அவள்தான்.அவளுக்கு ஊர்ப்புளியில் தான் சமைக்கவேண்டும்.ஆகையால் புளி கொடுத்தே எனக்கு மாளாது.போன் போட்டவுடன் பறந்து வந்துவிட்டாள்லெட்சுமி.

“இந்தமுறை என் மகன் ஒரு முடிவு சொல்லாமல் நான் கிளம்பமாட்டேன்.கொஞ்சம் கூட மாறாமல் திரும்ப திரும்ப அதே பல்லவியைத்தான் பாடுகிறான்.நீயே சொல்லு காலம் கடந்த நாற்று கழனிக்கு உதவுமா?.

லெட்சுமிக்கு என் ஆதங்கம் நன்றாகவே தெரியும்.குடும்ப விஷயங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக கொறித்துவிட்டு அவளுக்காக கொண்டுவந்த புளியை தனியே எடுத்து கட்டிக்கொடுத்தேன்,

அது என்னமோ பிரபாவதி நீ கொண்டுவரும் புளி மட்டும் அவ்வளவு சுவையாக உள்ளது.எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் வாசம் போகாமல் இருக்கிறது என்றாள்லெட்சுமி.புளி சீசனில் கோது,தும்பு,விதை இல்லாமல் பக்குவப்படுத்தி எடுத்து கையில் ஒட்டாத பதத்திற்கு வெயிலில் காய வைத்து எடுத்து அருவாமனையில் வைத்து ஒரு கீறு கீறி விதைகளைப் பிதுக்கி அகற்றிவிட்டு சிறிதளவு உப்புத்தூளைப் போட்டுக் கலந்து மண்பானை அல்லது சட்டியில் அடைத்துவைத்து விடவேண்டும்.அப்புறம் எடுத்து புளியைக்கரைத்தால் அப்படித்தான் இருக்கும்.

லெட்சுமியை பஸ் ஏற்றிவிட கீழே வந்து பூங்காவில் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.எதிர்த்திசையில் பெரும் தூண்களுடன் கம்பீரமான கட்டுமானம் ஆரம்பித்து இருந்தார்கள்.அது தன் உறுதியை வானத்திற்கு பறைசாற்றுவது போலிருந்தது.அதன் உயரம் மூன்று பக்கங்களும் திடமான உருட்டுக்கம்பிகள் வலையோடு சிமெண்ட் போட்டு போர்த்துவதற்கு தயாராய் இருந்தது.என் மனதில் என் மகனின் மௌனம் இன்னும் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அடக்கடவுளே!தூறல் போடஆரம்பித்துவிட்டது.புளோக்குக்கு கீழே குழந்தைகள்காப்பகத்திலிருந்து வெளியேவந்துகொண்டிருந்தனர்.

பள்ளிக்கூடம் விடும் நேரம் பார்த்து மழை வரும்போது நான் நினைத்துக்கொள்வேன்.குழந்தைகளை பார்ப்பதற்கென்றே மழை வருகிறதோ என்று பிள்ளைகள் வெளியேறும்போது வானத்தை ஒரு தடவையாவது பார்த்துக்கொள்வதை நான் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை செய்துகொண்டிருந்தேன்.

பிரபாவதி ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.நீ காது கேளாதோர்,வாய் பேசாதோர் பள்ளியில்தனே வேலை பார்த்தாய்.உன் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு சீனத்தி வாய் பேசாதவள்.பெயர் கேத்தரின்.ஆனந்த் அவளைப் பற்றிச் சொன்னானா?உன்னால் அவளுடன் பேச முடியுமா? என்றாள்.

நான் பார்த்த வண்ணத்துப்பூச்சி சீனப்பெண்தான் அவள் என்று புரிந்துகொண்டேன்.லெட்சுமியை அனுப்பி வீட்டிற்குள் நுழையும்முன் அந்த எதிர்வீட்டு பெண்ணைப் பார்த்து கையசைத்தேன்.அவள் மெதுவாக கையை உயர்த்தி புன்னகைத்தாள்.மோதிரவிரலை உருவி எடுப்பது போல் பாவனை செய்து சுட்டு விரலை அவள் முன் நீட்டி சைகை செய்து (திருமணம் ஆகிவிட்டதா) என்றேன்.

சடாரென்று கண்ணில் ஒரு துடிப்புடன் இரண்டு விரல்களையும் உதட்டில் வைத்து நெற்றியில் ஆள்காட்டி விரலால் ஒரு புள்ளி அடித்து என் பாஷை உனக்குத் தெரியுமா? என்று அவள் திரும்ப சைகை செய்தாள்.

நான் புத்தகம் படிப்பது போல் கைகளால் பாவனை செய்து குச்சி கொண்டு அதட்டுவது போல் சைகை காண்பித்து பள்ளி ஆசிரியை என்றேன்.அப்படியே தொடர்ந்து கம்பு ஊன்றி காண்பித்து ஓய்வுபெற்று விட்டேன் என்றேன்.கேத்தரினுக்கு என் சைகைகள் நன்றாகப் புரிந்தன.அவள் பேச்சுக்கு பதில் பேச என்னால் முடிந்தது.கேத்தரின் காதல் திருமணம் செய்து கொண்டவள்.கணவருக்கு பேசமுடியும்.ஓவியக் கலைஞன்.

வார்த்தைகளைவிட எண்கள் சரியாக பொதுவானவையாக இருந்தன.எனக்கு எத்தனை வயது என்று கேட்டாள்.சுண்டுவிரலை மட்டும் நீட்டி பக்கவாட்டில் ரஜினி மாதிரி இழுத்துக்காண்பித்தேன்.சரியாக 60 என்று புரிந்துகொண்டாள்.

கைவிரல்களை மட்டுமே பயன்படுத்தி அதிகபட்சம் எண்களை புரியச் செய்வதற்கு பள்ளியின் தொடக்கநிலையிலேயே சொல்லிக்கொடுத்துவிடுவோம். சுட்டுவிரல் ஒன்றைபக்கவாட்டில் இழுத்தால் பத்து.கீழ் நோக்கி கொண்டு சென்றால் நூறு.அனைத்து விரல்களையும் வெவ்வேறு எண்களை அறியப் பயன்படுத்தலாம்.

எல்லா நாடுகளிலும் ஒரே மொழி பேசும் அருவிகள் மாதிரி இவர்களின் பேசா மொழி உலகப்பொதுவானது.அப்படிதானே!என்றேன்.கேத்தரின் தனக்கு ஒரு தோழி கிடைத்துவிட்ட குதூகலத்துடன் ஒரு மைலோ கலக்கிக் கொண்டுவந்து கொடுத்தாள்.சமையலில் தான் கெட்டிக்காரி என்பதை தீ எரிவது மாதிரி சுட்டுவிரல்களால் செய்து காண்பித்து கட்டை விரலை நிமிர்த்தி தன் நெஞ்சுக் முன் நீட்டி தான் “ஏ ஒன்” என்றாள்.

அவளிடம் பேசுவது எனக்கு இதமாக இருந்தது.அவர்களின் சத்தமில்லாத உலகத்தை கற்பனை செய்வது எவ்வளவு கடினமானது.ஆனந்த் வேலை முடிந்து வரும் நேரம் நெருங்கிவிட்டது.நான் இரவு உணவு தயார் செய்யவேண்டும் பிறகு பார்க்கலாம் என்றேன்.

கண்களை மோதிர,ஆட்காட்டி விரல்களால் தொட்டு அதை நான் பார்கலாமா? என்றாள்.சமையலறைக்கு கூட்டிச்சென்று ஒரு நாற்காலி போட்டு அவளை உட்காரவைத்து விட்டேன்.

நிதானமாக அடுப்பை எரியவிட்டு தோசைக்கல்லை அதன் மீது வைத்து காய வைத்து,கல்லை அதிகமாக புகைய விடாமல் ஒரு துணிப்பொட்டலத்தில் நல்லெண்ணெய் பூசிவிட்டு மாவை அள்ளி கல்லின் நடுவே வட்டமாக வார்த்து நடுவிலிருந்து வெளிப்பக்கமாக மாவைச் சுழற்சி மெல்லியதாக பரவிட்டு மாவில் துவாரங்கள் விழுவது தெரிந்தவுடன் மூடி கொண்டு மூடிவிட்டேன். சிறிதுநேரங்ககழித்து சிலு சிலுவென்று மூடியினுள் தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டவுடன் திறந்துதட்டாப்பையினால் ஒரு புரட்டு புரட்டி இருபக்கம் சமமாக வெந்த தோசையினை காத்தரினுக்கு சாப்பிடக் கொடுத்தேன்.

சரியாக நான் நினைத்த மாதிரியே மூடியை கச்சிதமாக எப்படி திறந்தாய் என்று கேட்டாள் காத்தரின்.என்னால் அந்தச் சத்தத்தை வகைப்படுத்தி அவளிடம் எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை.மனம் லேசாகக் கனத்தது.

ஆனந்த் வந்தவுடன் காத்தரின் அறிமுகமான விஷயத்தை அவனிடம் சொன்னேன்.இரவில் அவன் தூங்கும் வரையிலும் மறைமுகமாக அவன் மாமா பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால் என் வாழ்வில் சந்தோஷமான நாள் அதுதான் என்று சொல்லிவைத்தேன்.

அவன் உண்மையிலேயே தூங்கிவிட்டானா அல்லது தூங்குவது போல் பாவனை செய்கிறானா என்று தெரியாமல் நானும் தூங்கிப்போனேன்.

இரவு வேலைக்கு போய்விட்டு காத்தரின் திரும்புவதும் பகல் முழுதும் அவளுடன் என் உரையாடல்கள் தொடர்ந்தன.பூங்காவில் உட்கார்ந்து இருவரும் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு நாள் மாலை யாரோ என் தோளைத் தொடுவது போலிருந்தது.ஒரு சீன இளைஞன் சிநேகமாக என்னை பார்த்து கேமராவை சைகையாலே காண்பித்து இரண்டு கட்டை விரல்களை’கிளிக்’ செய்து போட்டோ எடுத்துத் தரமுடியுமா என்று சைகை செய்தான்.

அருகில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.இருவருடைய முகங்களும் காதலால் ஜொலித்துக்கொண்டிருந்தன.அவர்கள் இருவரும்தான் இந்த உலகத்தில் இன்பமயமானவர்கள் போலிருந்தார்கள்.

கேத்தரினுடன் வீடு திரும்பும்போது கேட்டேன்.”இப்படிதான் நீங்களும் காதலித்தீர்களா?”.கேத்தரினின் பதில் வித்தியாசமாக இருந்தது.

இரண்டு கைகளும் கட்டுவது போல் குறுக்கு நெடுக்காக நெஞ்சில் கை வைத்து காண்பித்து அப்படியில்லை என்று சொல்லி நெற்றியில் ஆட்காட்டி விரலை வைத்து அன்பால் அல்ல,இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலால் என்றாள்.எவ்வளவு நுணுக்கமான பதில்.

நான் வீடு திரும்பியபோது ஆனந்த் யாரோ ஒரு நண்பனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தான்.அவன் பேசுவதை நன்றாக கேட்கமுடிந்தது “அம்மா வந்து ஒரு வாரமாகிவிட்டது திரும்ப திரும்ப மாமா பெண்ணை திருமணம் செய்து கொள் என்கிறார்கள்……என் திருமண விஷயமும் அவர்கள் பிரச்னை மாதிரி பேசுகிறார்கள்……..எப்படி அவர்களிடம் சொல்வது நான் என் வருங்காலம் பற்றி பெரிய திட்டங்கள் வைத்திருக்கிறேன் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்தால் இன்னும்தான் எனக்கு சுமைகள் ஏறும்……விருப்பத்தை சொல்ல சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறேன்………….ஆனந்த் பிறந்து இந்த ஆண்டோடு 27ஆகிறது இதுவரை அவன் பேசாத மொழியைநான் கேட்டேன் அப்போதுதான் நான் வீட்டிற்கு வந்தது போல் உள்ளே நுழைந்தேன்.அவனிடம் நான் எதுவும் பேசவில்லை.முதலில் என் மகளுக்கு ஒரு கடிதம் எழுதி காத்தரின் மூலமாக மெயில் பண்ணிவிடவேண்டும்.

அன்பு உமா,குழந்தைகள் நலமா? நான் சிங்கப்பூர் வந்ததிலிருந்து உன்னை தொலைபேசியில் அழைக்காமலிருப்பதற்கு காரணம் இருக்கிறது.உன் தம்பி திருமண விஷயத்தில் ஒரு முடிவு சொல்வான்.அதை உனக்கும் சொல்லும் நேரம் வரட்டும் என்று இதுவரை காத்திருந்துவிட்டேன்.கடந்த இரண்டு வாரங்களில் ஆனந்தை புதிதாக புரிந்து கொண்டிருக்கின்றேன்.நான் பெண்விஷயத்தில் அவனை வற்புறுத்துவது சரியல்ல என்று ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்.

உறவுகளை உருவாக்குவதும் பலப்படுத்துவதும் அன்புதான் என்று நினைத்திருந்தேன்.இல்லை புரிதல்தான் அது இல்லையென்றால் அன்பு கூட சரியாக புரியாது.காதல்கள் பொய்த்துப் போவதும்,திருமண வாழ்க்கை முறிந்து போவதும்,சகோதரப் பாசம் குன்றிப்போவதும்,நட்பு முறிவதும் சரியான புரிதல்கள் இல்லாமையால்தான்.

தன்னைப் பற்றியும்,தனக்கு வரவேண்டிய பெண்ணைப் பற்றியும் ஆனந்த் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறான்.

இன்னொரு முக்கியமான செய்தி.எனக்கு எதிர்வீட்டில் ஒரு தோழி கிடைத்திருக்கிறாள்.பேசாத மொழியில் ஆவலுடன் தினமும் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அவளுடன்உரையாடவே இன்னொரு விஷா நீட்டிப்பு செய்து இருந்துவிட்டு வருகிறேன்.இந்த மெயில் அவள் கூடகையடக்க கணினி மூலம்தான் உனக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

அன்பு அம்மா,
பிரபாவதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *