பைத்தியம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 11,066 
 
 

அன்று முதல் வகுப்புக் கிடையாது என்பதால் சற்றே தாமதமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பவித்ரா. வாசலில் கேட் உலுக்கப்படும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவள் முகம் சுழித்தாள். “அம்மா! உன்னோட வளர்ப்புப் பையன் வந்தாச்சு, போய்ப் படையல் வை!” என்று எரிச்சலோடு மொழிந்தாள்.

உள்ளே இருந்து தட்டில் சாதம், குழம்பு எல்லாம் எடுத்து வந்த வேதம், “என்னடி பேச்சு இது, எவ்வளவு சொன்னாலும் மாத்திக்க மாட்டியா? அவன் உன்னை என்ன பண்ணான்? ஏதோ அவன் பாட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பாடு சாப்டுட்டு போறான். அவனால யாருக்காவது ஏதாவது தொல்லை இருக்கா? என்னமோ அவனைப் பார்த்தால் சின்னதுல பறி கொடுத்த என் மகன் ஞாபகம் வருது” என்று கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“போதும்மா! அந்தப் பைத்தியத்தைப் போய் என் அண்ணனோட ஒப்பிட்டுப் பேசாதே! உனக்கு வேணா அவன் ஒசத்தியா இருக்கலாம், எனக்கு அவனைப் பார்த்தாலே பத்திகிட்டு வருது. அவனும் அவன் அழுக்குத் துணியும்! ஊர்ல உலகத்துல எல்லாம் இப்படித்தான் தெருவில திரியற பைத்தியத்தை வீட்ல கூப்பிட்டுச் சாப்பாடு போட்டுட்டிருக்காங்களா? நீ ஏம்மா இப்படி இருக்கே! என் ப்ரெண்ட்ஸ் வரும்போது இவன் இப்படி வீட்டுக்குள்ள உட்கார்ந்து சட்டமா சாப்டுகிட்டு இருந்தான்னா மானம் போகும். அவனும், அவன் பார்வையும்… நீ பார்த்துகிட்டே இரு! ஒரு நாள் இல்லாட்டா, ஒரு நாள் என் கையையே பிடிச்சி இழுப்பான். அப்போதான் உனக்கு புத்தி வரும்” அத்தனை எரிச்சலையும் கொட்டினாள்.

“சீ! அசட்டுத்தனமாப் பேசாதெ! உனக்கு அவனைப் பார்க்கப் பிடிக்கலைன்னா அவன் சாப்பிட வரும்போது எதிர்ல வராதே. என்னதான் பேசறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை? என்ன பாவம் பண்ணானோ! இப்படி சுய நினைவு இல்லாம கஷ்டப்படறான். அவனைப் போய் இப்படி எல்லாம் பேசறியே!” வேதத்திற்கும் கோபம் வந்தது.

“எப்படியோ போ! நீ எல்லாம் திருந்தவே மாட்ட! ஒரு நாள் பட்டாத்தான் தெரியும்” என்று முணு முணுத்தவாறு கல்லூரிக்குக் கிளம்பினாள் பவித்ரா.

அவளுடைய கோபத்தைப் பற்றி கவலைப்படாமல் தட்டு நிறைய சோறு போட்டு அவன் முன் வைத்தார் வேதம். அந்தப் பைத்தியமும் சாப்பிட்டு முடித்து விட்டு பிடித்திருக்கிறது! இல்லை! என்றெல்லாம் சொல்லத் தெரியாமல் ஹி..ஹி.. என்று சிரித்துக் கொண்டே அவரைப் பார்த்து விழித்தான். “என்னடா? குழம்பு பிடிச்சிருக்கா? இந்தா இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு குழம்பு விடறேன். நல்லா சாப்பிடு” என்று மனதாரப் பரிமாறினார்.

அந்தப் பைத்தியத்தின் ஊர் எது, பேர் எது என்று அங்கிருக்கும் யாருக்குமே தெரியாது. திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ வந்து கோயில் திண்ணையில் படுத்துக் கிடந்தான். எவ்வளவு விரட்டினாலும் போகாமல் அங்கேயே சுற்றித் திரிந்தான். அவனால் யாருக்கும் தொந்தரவு இல்லை. தானே தனியாகப் பேசிக்கொண்டு, பாடிக்கொண்டு கிடப்பான். பசி என்று சொல்லக் கூடத் தெரியாது. நன்கு தெளிவாக இருந்து ஒழுங்காக உடுத்தினால் மிகவும் அழகாகவே இருப்பானோ என்னமோ! வேதத்திற்கு அவனிடம் இறந்து போன பிள்ளையின் சாயல் தெரிவதாய்ப் பிரமை. அதனால் ஒரு நாள் அவன், வீட்டு வழியே வரும்போது கூப்பிட்டுச் சாதம் போட்டார். அன்றிலிருந்து தினமும் அந்த நேரம் சாப்பாட்டுக்கு வந்து விடுவான். ஒரே முறைதான்! பண்டிகை, தீபாவளி எதற்கும் இரண்டாவது முறை சாப்பாட்டுக்கு வந்து நின்றது கிடையாது. இவரே கொண்டு கொடுத்தாலும் வேண்டாம் என்று தலையாட்டி மறுத்து விடுவான். ஊரே அவனை ‘பைத்தியம், பைத்தியம்’ என்று கூப்பிட்டுக் கேலி செய்யும்போது அவர் மட்டும் அடுத்தவர்களிடம் பேசும்போது கூட ‘அவன், இவன்’ என்றுதான் குறிப்பிடுவார்.

பவித்ரா அவள் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் அந்த வாரம் முழுதும் வகுப்பு முடிந்த பிறகு இரவு ஏழு மணி வரை ஒத்திகை நடந்தது. அதன் பிறகு பஸ் பிடித்து வீடு வந்து சேர எட்டு, எட்டேகால் ஆகி விடும். அவள் வீடு இருக்கும் தெருவிற்கு மெயின் ரோடிலிருந்து அரை கிமீ இருட்டில் நடந்து வர வேண்டும். என்றாவது கார்ப்பரேஷன்காரர்கள் மனது வைத்துச் சரி செய்தால் மட்டும் விளக்கெரியும். அதனால் வேதம் எட்டு மணிக்குத் தானே ஒரு டார்ச் எடுத்துக் கொண்டு மெயின் ரோடிற்குப் போய் விடுவார். அன்று காலையிலிருந்தே அவருக்கு உடல் வலி தாங்கவில்லை, மாலை நேரம் நல்ல காய்ச்சல். எழுந்து வாசல் வரை நடக்கக் கூடத் தெம்பில்லாமல் துவண்டு போயிருந்தார். கணவரும் ஆபிஸில் ஆடிட்டிங் என்று பத்து மணிக்குக் குறைந்து வருவதில்லை. பவித்ரா பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுமே என்று கவலையோடு படுத்துக் கிடந்தார்.

வாசற்கதவு படாரென்று திறந்து மூடும் சத்தமும் கூடவே பவித்ராவின் விசிப்பும் கேட்டது. “பவித்ரா! பவித்ரா! நீதானாம்மா அது! வந்துட்டியா? என்னடி என்னமோ அழற சத்தம் கேட்கறது!” கஷ்டப்பட்டு ஹாலுக்கு வந்து பவித்ராவைப் பார்த்தவர் விக்கித்துப் போனார்!

“இதென்னடி கோலம், ஹையோ! என்ன ஆச்சு? ஏன் அவனோட கிழிஞ்ச வேட்டியைப் போர்த்திக்கிட்டு நிக்கறே! என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டுடாதடி, என்ன ஆச்சு சொல்லுடி” என்று பவித்ராவை உலுக்கினார்.

“அம்மா! தண்ணி, தண்ணி…” என்று கேட்டுக் கொண்டே மயங்கினாள் பவித்ரா. தன் உடல் வலி, காய்ச்சல் எல்லாம் எங்கே பறந்தது என்றே தெரியவில்லை வேதத்திற்கு! பரபரவென்று ஈரத்துணி கொண்டு அவள் முகத்தைத் துடைத்து, தன் மடி மீது சாய்த்துக் கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீரைப் புகட்டினார்.

மெதுவாக்க கண் விழித்த பவித்ரா, மறுபடியும் அம்மா, அம்மா! என்று விம்ம ஆரம்பிக்க, “கண்ணா என்ன நடந்ததுன்னு சொல்லுடாம்மா, அழாதேடா, எதுவா இருந்தாலும் சமாளிச்சிக்கலாம்டா.. என் கண்ணோல்லியோ, அம்மாவுக்கு படபடன்னு அடிச்சுக்கறதுடா, என்ன நடந்ததுன்னு சொல்லும்மா கண்ணா” என்று ஆசுவாசப் படுத்தினார்.

தாயின் பதற்றத்தைப் பார்த்துத் தன்னைத் தேற்றிக் கொண்ட பவித்ரா பேச ஆரம்பித்தாள். இரண்டு நாட்களாகவே தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவது போல உறுத்திய பவித்ராவிற்கு அன்று அம்மாவையும் மெயின் ரோடில் காணாததும் அச்சமாகிவிட்டது. விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்த தெரு விளக்குகள் அவளைப் பழி வாங்குவதைப் போல் மொத்தமாக அணைந்து விட்டது. வேக வேகமாக வீட்டை நோக்கி நடை போட்ட பவித்ரா தன் பின்னே யாரோ இரண்டு பேர் துரத்திக் கொண்டு வருவதை உணர்ந்து ஓட ஆரம்பித்தாள். ஆனால் அவர்கள் இருவருக்கும் இவளை விட வேகம் அதிகமிருந்ததால் கோயில் மண்டபத்தின் அருகில் வரும்போது பிடிபட்டு விட்டாள். “ஐயோ, அம்மா, யாராவது காப்பாத்துங்களேன்” என்ற கூக்குரலுக்கு செவி சாய்க்க அங்கு ஒருவருமே இல்லை. அவளது புடவை அவர்களிடம் மாட்டி போராடிக்கொண்டிருக்கும் நேரம் திடீரென்று அவர்களில் ஒருவன், யாரோ தூக்கி எறிந்ததைப் போல எகிறிப் போய் விழுந்தான். இவளைப் பிடித்திருந்தவளையும் ஒரு ஜோடிக் கரங்கள் பலமாகப் பின்னே இழுத்ததில் இவளது புடவை கிழிந்து விட்டது. இருவரையும் மாறி மாறிப் புரட்டி எடுத்த அவன்! வேதத்தின் “அவன்”. ஊரார் கண்களுக்குப் பைத்தியமாக இருந்தவன்!! இருவரும் கையெடுத்துக் கும்பிட்டு விழுந்து, எழுந்து ஓடும் வரை அவன் ஓயவில்லை. அதன் பிறகுதான் பவித்ராவின் பக்கம் திரும்பினான். நடுங்கிக் கொண்டே இருந்தவளின் மேல் தன் வேட்டியை அவிழ்த்து எறிந்து விட்டு “ஊம்” என்ற உறுமலுடன் எதுவும் பேசாமல் தலையாட்டி உடன் வரும்படி சொன்னான். அவளின் நல்ல நேரம் அந்தத் தெருவில் இருந்தவர்கள் அனைவரும் டிவி சீரியலில் மூழ்கி இருந்தனர். வீட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்டவன் மறுபடி பழைய மாதிரி ‘டுர்ர்ர்ர்ரென்று’ வண்டி ஓட்டிக் கொண்டே ஓடி விட்டான்.

ஒன்றுமே பேசத் தோன்றாமல் திகைத்துப் போனார் வேதம்! “அல்ப்பாயுசுல போன உன் அண்ணன்தாண்டி அவன் உருவத்துல வந்து உன்னைக் காப்பாத்தி இருக்கான். ஒரு வேளை சோறு போடறதுக்கு நாய் மாதிரி நன்றியை காண்பிச்சிட்டானே அவனைப் போய் பைத்தியம்னு சொல்றாங்களே” என்று தழுதழுத்தார்.

மறுநாள் பவித்ரா அம்மாவைக் கவனித்துக் கொள்வதற்காகக் கல்லூரிக்குப் போகாமல் வீட்டிலிருந்தாள். வழக்கம் போல் கேட் உலுக்கப்படும் சத்தம் கேட்டதும் பவித்ரா என்ன சொல்வாளே என்று வேதத்தின் முகம் கவலையாய் மாறியது.

“அம்மா, அண்ணா வந்திருக்கான். நான் சாப்பாடு போட்டுட்டு வந்துடறேன். நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்கம்மா”

“பவித்ரா!” ஆச்சரியமானார் வேதம்.

“ஆமாம்மா! நீ சொல்றது உண்மைதான், ஒரு அண்ணனோட கடமையை செஞ்சி என்னை மகாப் பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தின அவன், இனிமே எனக்கு அண்ணாதானம்மா!”

பவித்ரா அவள் அண்ணனுக்குச் சாதத்தோடு அன்பைக் கலந்து பறிமாறினாள். அவன் முகத்தில் எப்போதும் போல் அதே சிரிப்பு!

– ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *