ஆடம்பரம் வேண்டாம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 3,685 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சுஜாதா,

துணிகள் வாங்குவதை விடத் தைப்பதும், சலவை செய்வதும் அதிகச் செலவு ஆகிறதென்று கடிதம் எழுதி யிருக்கிறாய்.

ஒரு இத்தாலி தேசத்துப் பேசும் படத்துக்குப் போயிருந்தேன். மத்திய தரக் குடும்பத்துப் பெண் சமையல் வேலைகளைச் செய்வதுடன், தன் குடும்பத்துக்குத் தேவையான துணிகளைச் சுறுசுறுப்புடன் அன்றாடம் தைப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அந்தத் தேசங்களில் பெண்கள் தையல் வேலை தெரியாமல் இருக்க மாட்டார்கள். முன்னேறிய நாடுகளில் வீட்டில் சலவை செய்வதற்கும் வசதி இருக்கிறது.

என்னுடைய சிநேகிதி ஒருவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். அவர் உடம்பு அசௌக்கியமாகப் படுக்கையில் இருந்தால் கூடத் தையல் வேலை செய்து கொண்டே இருப்பார். அதனால் கூலி மிச்சமாவதுடன் துணிகளும் லாபகரமாயிறதென்று சொல்லுவார். தைக்காமல் இருந்தால் தம்முடைய கடமைகளை விட்டுவிட்டதாகத் தோன்றுமாம். மற்றொரு சகோதரி தம்முடைய வீட்டைக் கலைக்கூடமாக வைத்திருப்பார். அவரை எப்பொழுது சந்தித்தாலும் கையில் ஊசியும், நூலுடனும் தான் இருப்பார்.

வளரும் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த துணிகளை வாங்கி அதில் விதம் விதமான சரிகைப்பூ வேலை செய்து போடுவது அவசியமா? உஷ்ணம் மிகுந்த நம் நாட்டில் அவர்கள் இறுக்கம் தாங்காமல் சொக்காயைப் பீய்த்துக் கொண்டு அழுகிறார்கள். நம்முடைய ஆசைக்காகக் குழந்தைகளைத் துன்புறுத்துவானேன்?

துணிகள் வாங்குவதில் சிக்கன முறை தேவைதான், சுத்தமாக, எளிமையாக இருப்பதுடன் அதைக் கடைசி வரையில் உபயோகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், கௌரவம் காய்ந்த ஒரு குடும்பத்தில் வயது சென்ற ஒரு அம்மாள் தம்முடைய பேத்தி, பேரக் குழந்தைகளுக்குத் தம் கையாலேயே பழைய துணிகளைத் தைத்து அடுக்குவார். அவர்களுக்குப் புதிதாக வாங்கிக் குவிக்க வசதி இருக்கிறது. ஆனாலும் வீணாகச் செய்யக் கூடாதென்ற அந்தப்பழக்கம் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். மிகவும் சுறுசுறுப்பும் தகுதியுமுள்ள ஒரு சகோதரி சந்தர்ப்பத்துக்குத் தகுந்த படி புடவை உடுத்துவார். அது பிறருக்கும் திருப்தியைக் கொடுக்கிறது.

புதிய புதிய உடைகள் உடுத்துவது பெரியவர்களுக்கும், நினைவு தெரிந்த குழந்தைகளுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கத்தான் செய்கிறது. பிறர் பார்த்து நன்றாக இருப்பதாகச் சொன்னால்தான் இன்னும் பெருமை. இதைப் பற்றி ஒரு பழைய ஹாஸ்யம் உண்டு. ஒரு பெண் புதுப் புடவையை உடுத்திக் கொண்டு பக்கத்து வீட்டு அம்மாள் பார்க்க வேண்டுமென நின்றாளாம். அந்த அம்மாள் கவனிக்கவே யில்லை. பொறுக்க முடியாமல் பக்கத்து வீட்டுக்குப் போய், “புதுப் புடவை உடுத்திக் கொண்டால் இப்படித் தாகம் எடுக்குமா?” எனக் கேட்டு வைத்தாள்.

இன்றைய உலகில் பெண்கள் மட்டும் துணிகளில் மோகமடைகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆண்களும் விதவிதமான நிறங்களிலும், பூக்களிலும் சொக்காய்கள், கோட்டுகள் அணிகின்றனர்.

பெண்கள் பிறர் மனத்தைக் கவரும் வகையில் அணிய வேண்டாமென்று வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் வெளி நாட்டுக்கு சென்றிருந்தாள் என் சகோதரி. அந்த நாடுகளில் அவருடைய உத்தரவைக் கேட்டும், கேட்காமலும் படம் பிடித்துக் கொண்டே இருந்தார்களாம். மரியாதை செய்யும் முறையில் உடைகள் அணியும் நம் நாட்டுச் சகோதரிகளிடம் அவர்களுக்கு அளவற்ற மதிப்பு என அறிகிறோம். அத்தகைய நம் நாட்டின் சிறந்த பண்பாட்டைச் சிறிதும் இழக்க வேண்டாம்.

இப்படிக்கு,
பூமாதேவி.

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *