பெருமாள் கடாட்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 8,201 
 
 

எனக்கு வயது ஐம்பத்தைந்து.

பெங்களூரில் சொந்தவீடும் வாசலுமாக பகவத் சங்கல்பத்தால் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறேன்.

என் வீட்டில் மனைவி சரஸ்வதி; மகன் ராகுல்; மருமகள் ஜனனி ஆகியோரின் உபயோகத்திற்காக மொத்தம் மூன்று கார்கள் இருக்கின்றன. நான்காவதாக எனக்கென்று ஒரு பென்ஸ் கார் வாங்க வேண்டுமென்பது, அதுவும் வெள்ளைநிற பென்ஸ் வாங்க வேண்டும் என்பது பல வருடங்களாக என் மனதுக்குள் கனன்று கொண்டிருந்த தீராத ஆசை.

அந்த ஆசை சென்ற விஜயதசமி அன்று மதியம் நிறைவேறியது. கஸ்தூரிபா ரோட் டிவிஎஸ் ஷோ ரூமிலிருந்து, கார் டெலிவரிக்கு தயாராக இருப்பதாக போன் வந்தது. எஸ் க்ளாஸ் பென்ஸ். ஒரு கோடியே இருபது லட்சம். வீட்டில் அனைவரும் ஷோ ரூம் சென்று படகுபோல் பதவிசாக புது வாசனையுடன் நின்று கொண்டிருந்த அந்தக் காரைச் சுற்றி சுற்றி வந்து அன்புடன் தடவி தடவிப் பார்த்தோம். அன்று காலைதான் ஆர்டிஓ ஆபீஸ் சென்றுவிட்டு புதிய நம்பருடன் கார் வந்திருந்தது. காரின் நம்பர் 8010. ஏற்கனவே நான் வைத்திருந்த மாருதி Swift காரின் நம்பர்தான் அது. என்னுடைய ராசியான பழைய கார் நம்பரே என் புதிய பென்ஸ் காருக்கும் அமைந்தது ஒரு தற்செயலான சந்தோஷம். பழைய காரின் நம்பர் எனக்குள் பல ரம்மியமான காதல் நினைவுப் படிமங்களை உசுப்பிவிட்டது.

ஷோ ரூமிலிருந்து என் மகன் ராகுல்தான் காரை ஓட்டி வந்தான். வரும் வழியில் அதே கஸ்தூரிபா ரோட்டில், புதுக் கார்கள் வழிபாட்டிற்காகவே அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலில் காரை நிறுத்தி காருக்கு பூஜை செய்தோம்.

வீட்டிற்கு வந்ததும், அனைவரும் கூடிப்பேசி பென்ஸ் காரின் முதல் நெடுந்தூரப் பயணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசிக்க முடிவு செய்தோம். அடுத்து வரும் சனிக்கிழமை காலையில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு, ஞாயிறு திரும்புவதாக பேசி வைத்திருந்தோம்.

எங்கள் வீட்டின் போர்டிகோவில் கம்பீரமாக பென்ஸ் நின்றிருந்தது. நான் அந்தக் காரின் மேனுவலை விலாவாரியாகப் படித்து காரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். லோக்கலில் இரண்டு மூன்று முறைகள் காரை ஓட்டிப் பார்த்தேன். மயிலிறகைத் தடவுவது மாதிரி அம்சமாக இருந்தது.

வியாழன் அன்று திடீரென சரஸ்வதியின் அண்ணா ஜம்புநாதன் சென்னையில் இருந்து ஒரு திருமணத்திற்காக குடும்பத்துடன் பெங்களூர் வந்து விட்டார். சனிக்கிழமை நேராக ஸ்ரீரங்கம் போவதாகச் சொன்னார். அங்கு சரஸ்வதியின் இரண்டாவது அண்ணன் இருக்கிறார்.

திடீரென வெள்ளிக்கிழமை காலை சரஸ்வதி என்னிடம், “குட்டிப்பா, நாம எங்க அண்ணாவை குடும்பத்துடன் பென்ஸ் காரில் ஸ்ரீரங்கம் அழைத்துப் போனால் என்ன? அவருக்கும் ஒரு மாறுதலாக இருக்குமே? என்னுடைய இரண்டாவது அண்ணாவும் புதுக் காரைப் பார்த்த மாதிரி இருக்குமே…” என்றாள். சரஸ்வதி என்னை ‘குட்டிப்பா’ என்றுதான் அழைப்பாள்.

“அப்ப திருப்பதிப் பயணம் என்னாச்சு? பெருமாளைப் போய் பார்க்க வேண்டாமா?”

“திருப்பதிக்கு பதிலாக ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளை சேவித்துவிட்டு வரலாம்… எல்லா பெருமாளும் ஒன்றுதானே?”

“திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொள்வார்…”

“ஆமா… ரொம்பத்தான் பக்தி தாண்டவமாடுது…”

என் மகன் ராகுல் “அப்பா ஸ்ரீரங்கமே போலாம்பா…ரொம்ப ஜாலியா இருக்கும்… மாமாக்கும் காரை காண்பித்தமாதிரி ஆச்சு…மொத்தம் எட்டுபேர் இருக்கோம். நான் பென்ஸ் ஓட்டிட்டு வரேன், நீங்க என்னோட ஆடோமாடிக் கொரல்லா ஆல்டிஸ் காரை ஓட்டிகிட்டு வாங்க… ஸ்மூத்தா இருக்கும்.” என்றான்.

“சரிடா… அப்படியே செய்யலாம்…”

நாங்கள் அனைவரும் அந்த சனிக்கிழமை காலை ஐந்து மணிக்கு ஸ்ரீரங்கம் கிளம்பினோம். .

என் மகன் பென்ஸ் காரை ஓட்ட, அவனுடன் ஜம்புநாதன் குடும்பத்தினர் பயணித்தனர். நான் ஆல்டிஸ் ஓட்ட, என்னுடன் சரஸ்வதி, ஜனனி மற்றும் பேத்தி விபா ஆகியோர் பயணித்தனர்.

திருச்சிக்கு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கையில், வலது பக்கம் கொள்ளிடம் ஓடிக்கொண்டிருக்க, சாலை மிகவும் குறுகலாக இருந்தது. மிகவும் மெதுவாக காரை ஓட்டிச் சென்றேன். என் பின்னால் பென்ஸ் காரும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

அப்போது கையை ஆட்டி என் காரை ஒரு முதியவர் நிறுத்தினார்.

காரை நிறுத்தி, ஜன்னல் கதவை இறக்கினேன்.

“ஐயா, உங்க கார் டையர் முன் பக்கம் பஞ்சராகி இருக்கிறது. காத்து சுத்தமாக இல்லை…”

அந்தக் குறுகலான சாலையில் காரை எங்கே நிறுத்துவது? டிராபிக் வேறு அதிகமாக இருந்தது. பதட்டத்துடன் இடது பக்கம் பார்த்தால், ஒரு சிறிய பாதை உள்ளே சென்று கொண்டிருந்தது. அதனுள் என் காரை மெதுவாகத் திருப்பினேன். உள்ளே ஒரு பெரிய கோவில் தெரிந்தது. கோவிலின் முன்னே விஸ்தாரமாக மைதானம் இருந்தது. அதில் காரை நிறுத்தினேன்.

அதுதான் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி விஷ்ணு கோவில் என்று என் மனைவி சொன்னாள். இதற்குமுன் அந்தக் கோவிலுக்கு நான் போனதே இல்லை.

காரிலிருந்து கீழே இறங்கிப் பார்த்தால் இடதுபக்க முன்புற டயர் பஞ்சராகி இருந்தது.

பின்னால் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த என் மகன், தான் ஓட்டி வந்த பென்ஸ் காரை நிறுத்திவிட்டு என்னிடம் ஓடி வந்தான்.

“என்னப்பா ஆச்சு”

“கார் டையர் பஞ்சர் ஆச்சுடா…”

அவன் உடனே டிக்கியைத் திறந்து உள்ளே இருந்த ஸ்டெப்னியை எடுத்து ஐந்தே நிமிடத்தில் அதைப் பொருத்தினான்.

சரஸ்வதி, “கோவில் வாசல் வரையும் வந்தாச்சு, உள்ள போய் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுப் போகலாம்…” என்றாள்.

கார்களைப் பூட்டிவிட்டு அனைவரும் இறங்கி கோவிலினுள் சென்றோம்.

கோவில் மிகவும் பழமையான கோவில். வெளவால்கள் ஏராளமாக உள்ளே பறந்தன. ஒரு மாதிரியான பழைய முடை வாசனையடித்தது. சுவர்கள் அழுக்காக எண்ணைப் பசையுடன் இருந்தன. பெருமாளின் முன்னால் போய் நின்றோம்.

அர்ச்சகர், “வாங்கோ… உங்களுக்கு எந்த ஊர்?” என்று கேட்டார்.

“பெங்களூரிலிருந்து வருகிறோம்… ஸ்ரீரங்கம் போய்க் கொண்டிருக்கிறோம். திருப்பதி போவதாக இருந்தோம். போகிற வழியில் திடீரென்று இந்தக் கோவிலுக்குள் வர நேர்ந்தது…” என்றேன்.

“நல்ல காரியம் பண்ணேள்… பிரசன்ன வெங்கடாசலபதி, திருப்பதி ஏழுமலையானுக்கு மூத்தவர். அண்ணா முறை… அதனால முதல்ல இவர தரிசனம் பண்ணது ரொம்ப விசேஷம். மரியாதையானதும், சரியானதும் கூட…”

நாங்கள் ஒருவரையொருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டோம்.

அர்ச்சகர் எங்களுக்கு தீபாராதனை காட்டினார். தொடர்ந்து துளசி தீர்த்தம் கொடுத்தார். நான் தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் வாங்கி அருந்திவிட்டு, ஈரக் கையை தலை முடியில் தடவிக்கொண்டேன்.

“தலைல தடவாதீங்கோ… கர்சீப்பால் துடைச்சு விட்டுக்கோங்கோ… இதுக்கப்புறம் நான் சடாரி உங்க தலைல வைக்கும்போது சடாரி எச்சலாகி விடும்… மத்தவா தலைலயும் அந்த எச்சல் பரவும்…இதுக்கு முன்னாடி பெருமாள் தரிசனம் பண்ணதில்லையா?”

நான் பதில் பேசவில்லை.

எனக்கு உடனே, நான் அடிக்கடி செல்லும் பெங்களூர் வித்யாரன்யபுரா பெருமாள் கோவில் நினைவுக்கு வந்தது. அக்கோவிலில் ஒரு வளப்பமான அழகான மாமி எப்போது தீர்த்தம் வாங்கி அருந்தினாலும், மெதுவாக பக்கவாட்டில் திரும்பிக்கொண்டு, புடவைத் தலைப்பால் தன் உள்ளங் கையைத் துடைத்துக்கொண்டு, அதற்கப்புறம்தான் சடாரிக்கு தயாராவாள். ஏனோ அந்த மாமி என் ஞாபகத்தில் வந்தாள்.

நாங்கள் அனைவரும் தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.

அப்போது மொட்டையடித்த நிறையபேர் வரிசையாக கோவிலுக்குள் சென்றனர்.

சரஸ்வதி, “குட்டிப்பா, பாவம் இவர்களெல்லாம் மனநிலை சரியில்லாதவர்கள். இந்தக் கோவில், பைத்தியம் தெளிவதற்கு பேர்போனது… நீங்களும் இங்கு வர வேண்டியிருக்கும்…” என்று சிரித்தபடி என்னைச் சீண்டினாள். இது அவளுக்கு கை வந்த கலை.

ஸ்ரீரங்கம் சென்றுவிட்டு, திரும்புகிற வழியில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தோம்.

‘அதெப்படி திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு, குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதியை, அதுவும் ஏழுமலையானின் அண்ணாவை முதலில் தரிசனம் செய்ய நேர்ந்தது…!?’ என்கிற ஆச்சரியம் இன்றளவும் எங்களுக்குள் தீர்ந்தபாடில்லை.

வாழ்க்கையில் நாம் ஒன்று நினைக்க, வேறு ஒன்று நடக்கிறது.

இதைத்தான் ‘பகவத் சங்கல்பம்’ என்கிறார்கள் போலும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *