மழை தூறிய ஒரு மாலைப் பொழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 3,652 
 

விழாவிலிருந்து இடைநடுவிலே கிளம்ப வேண்டியதாயிற்று. அப்போதுதான் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி இருந்தன. உடனே கிளம்ப மனம் வரவில்லை . கடுங்கோடையில் எதிர்பாராது வந்த தூறல் மழையில் நனைந்து கொண்டே மேடையில் நிகழ்ந்து கொண்டிருந்த நடன நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஆனந்த நடனம் ஆடினார்’ பெண் குரலின் இழைவோடு இசை மிதந்து கொண்டிருந்தது. மீசை அரும்பாத பதினைந்து பதினாறு வயது வாலிபனொருவன் ஆடிக்கொண்டிருந்தான் குழைந்து வளைந்து துள்ளிக்குதித்து அபிநயம் பிடித்து ………

துரத்தில் இடி முழங்கிக் கேட்டது.

‘மாஸ்டர் மழை பிலக்கப் போகுது இதையெல்லாம் பார்க்கச் சரிவராது போவோமா’ அருகிலிருந்த பூபாலரத்தினம் சேர் கேட்டார். அவரும் லேஞ்சியை விரித்துத் தலையில் பிடித்துக் கொண்டே இருந்தார்.

‘இண்டையிலிருந்து ஊரடங்குச் சட்ட தையும் ஒரு மணித்தியாலம் குறைச்சு ஏழு மணியாக்கிப் போட்டானாம்’

அப்போதே நேரம் ஐந்தரை மணியாகி இருந்தது. மனமில்லாமலே கிளம்பினோம்.

தலையில் லேஞ்சிகளுடனும் குடைகளுடனும் சேலைத் தலைப்புகளுடனும் அந்தரத்தில் இருப்பது போலிருக்கும் கூட்டத்தினரை ஊடறுத்து சைக்கிள்கள் விட்ட இடத்தை நோக்கி விரைந்தோம். அவர் விட்ட இடத்தில் அவரது சைக்கிளைக் காணவில்லை. (எனது சைக்கிள் விட்ட இடத்திலேயே இருந்தது) சைக்கிளைக் காணாத தவிப்பில் அவர் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். ‘சைக்கிள்களை ஒழுங்குபடுத்தேக்கை பொடியள் உங்கினைதான் விட்டிருப்பாங்கள் வடிவாய்ப் பாருங்கோ சேர்’ நான் தூரத்துக்கெல்லே போகவேணும் வாறேன்.

அவரின் பதிலைக் கூட எதிர்பாராது சைக்கிளில் ஏறி மிதித்தான். நேரம் ஐந்தே முக்காலை அண்மித்துக் கொண்டிருந்தது. மழைத்தூறல் மேலும் வலுத்திருந்தது. தூரத்தில் இடி முழங்கிக் கேட்டது.

‘இண்டைக்கு குடையும் கொண்டுவரேல்லை. நனைஞ்சு கொண்டாதல் கேர்வியூவிற்கு முந்தி வீட்டை போய்சேர வேணும்’ சைக்கிளை ஓங்கி மிதித்தான்.

மழைத் துறலில் வீதியின் கோடைப்புழுதி அடங்கியிருந்தது. அங்கொருவர் இங்கொருவராக மனிதர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். அப்போதும் வீதிக்கரையில் ஒரு மாடு படுத்திருந்தது சாசுவதமாக அசை போட்டுக் கொண்டிருந்தது. ‘இப்படி ஏதாவது விழாக்களிலைதானே பழைய முகங்களைப் பாக்கலாம்’

விழாவின் விருந்துபசாரத்தின் போது அருகிலிருந்த பூபாலரத்தினம் சேர் சொன்னது ஏனோ அப்போது நினைவில் இடறிற்று. ‘பாவம் மனிசன் அவரை அந்தரத்தில் விட்டிட்டு ஒடி வாறேனே.

‘நான் ஒரு திசையிலும் அவர் வேறு திசையிலும் தானே போக வேணும்’ மனசு சமாதானம் சொன்னது.

திடிரென பிறேக்கை அழுத்தி வேகத்தைக் குறைத்தான். குறுக்கே பாய்ந்த நாய் வாலைப் பின்னம் கால்களுக் கிடையில் செலுத்திக் கொண்டு அவனைப் பார்த்து ஊளையிட்டுக் குரைத்தது.

அவன் சுதாகரித்துக் கொண்டான். தன்னைப் பற்றிய நினைவுகளுக்கு மீண்டான். கையை உயர்த்தி நேரத்தைப் பார்த்தான். மழைநேர மாலையின் மைம்மல் இருட்டில் உரோமன் எழுத்துக்களில் நேரம் சரியாகத் தெரியவில்லை. உற்றுப் பார்த்ததில் ஆறு பத்து என உணர்ந்தான்.

‘கடவுளே’ என முணுமுணுத்துக் கொண்டே மேலும் வேகமாக உழக்கிணன் மழைக் காற்றில் பனங்கூடல்கள் பேரோசை எழுப்பிக் கொண்டிருந்தன. பிரதான வீதியிலிருந்து இறங்கி பனங்கூடல்களை ஊடுருவிச் செல்லும் குறுக்குப் பாதையில் வந்து கொண்டிருந்தான். மழைத்தூறலோடு கூடிய கடுங்காற்றில் பனங்கூடல்கள் பேரோசை எழுப்பிக் கொண்டேயிருந்தன.

மழை மேலும் வலுத்திருந்தது. சேர்ட் பொக்கற்றிலிருந்த அடையாள அட்டையும் சில பணத்தாள்களும் வேண்டியவர்களின் முகவரிகள் அடங்கிய குறிப்புக்களும் நனைந்து ஊறி விடுமே என்று பயமாக இருந்தது. தொட்டுப் பார்த்ததில் சிறிய பொலித்தீன் பாய்க்கில் அவை பத்திரமாக இருப்பதில் நிம்மதியாக இருந்தது.

‘முக்கியமாக அடையாள அட்டை, எங்கள் வாழ்வே அதில்தானே அடங்கியிருக்கிறது.

தூரத்து வானச்சரிவில் மின்னல் வெட்டிச் சிரித்தது. மழைக்காற்றில் மெல்லிய குளிர் ஏறியிருந்தது, சுருக்கம் விழுந்த வெண் தாடி அரும்பிய பூபாலரத்தினம் சேரின் முகம் நினைவில் வந்தது என்ன மிடுக்கான மனிசன். பாவம் வயது போகப்போக…………….?

மீண்டும் மின்னல் பட்டது. வெகுதூரத்தில் மெல்லிய இடிச்சத்தம் கேட்டது. பனா கூலால் மிதந்து மீண்டும் பிரதான வீதியில் ஏறியிருந்தான். வீதியோரத்து வேலிகளின் வரச மரங்கள் காற்றில் அசைத்து கொண்ருந்தன. எங்கும் பேரமைதி கவிந்தது போலிருந்தது. எங்கோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. நேரம் ஆறரை மணியாகி இருக்குமென நினைத்தான்.

திடீரென ‘பிறேக்’ பிடிக்க வேண்டி வந்தது. வீதியின் குறுக்கே முள்ளுக்கம்பி கட்டப்பட்டு இருந்தது. அதன் ஒரு கரையில் பழைய சிவத்த துணியொன்று தொங்கிக் கொண்டிருந்தது.

‘சை’ வாகனத் தொடரணி நேரம் போலும். இன்னும் எவ்வளவு நேரம் தான் இதில் நிற்க வேண்டி வருமோ?.

எதிரே முக்கிய வீதியில் வாகன நடமாட்டமே இல்லை மனித முகங் களையே காணக்கிடைக்கவில்லை மழை தூறிக் கொண்டிருக்கின்ற இந்த ஏகாந்தப் பெருவெளியில் அவன் ஒருவனே தனியனாக……

ஒரு நம்பிக்கையில் பக்கத்து குறுக்கொழுங்கையில் சைக்கிளைத் திருப்பினான். தூரத்தில் தாயும் இரண்டு பெண் பிள்ளைகளுமாகக் குடைகளில்……

அவர்களை அண்மிக்கையில் பெரியவள் நிமிர்ந்து பார்த்தான்.

‘சேர் இந்தக் குடையைக் கொண்டு போங்கோவேன்’ அவனது மாணவி….. விரித்த படியே குடையை நீட்டினாள்.

‘எப்பிடித் திரும்பத் தாறது பிள்ளை’

‘சந்தியிலை பாரதி வீட்டை குடுத்து விடுங்கோவன்’

நன்றி சொல்லிக் கிளம்பினான். குறுக்கொழுங்கையில் முக்கிய வீதியை ஊடறுத்து கடப்பதற்கான பயணம்.

நேரம் ஆறேமுக்கால் ஆகியிருக்குமா?

குறுக் கொழுங்கையிலும் குறுக்கே கட்டியிருக்கும் முள்ளுக் கம்பி… என்ன செய்வதென தயங்குகையில் முக்கிய வீதியில் மழைக்கோட்டில் எதிர்ப்பட்ட மனித முகம். இராணுவத் தொப்பி.

முக்கிய வீதியை குறுக்கே ஊடறுத்து செல்ல வேண்டுமே யெனச் சைகையில் கேட்டான்.

முடியாதென மறுத்து சைகை செய்தவன் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.

விரிந்த குடையில் என்ன செய்வதென்று தயங்கி நிற்கையில் அருகே வருமாறு கையைக் காட்டினான்.

முள்ளுக் கம்பியின் கீழால் குனிந்து சைக்கிளை உருட்டிச் செல்கையில் ‘ஒரு நிமிடத்தில் விரைவாக ஊடறுத்துச் செல்’ என சிங்களத்தில் சொன்னான்.

முக்கிய வீதியில் சிறிது தூரம் சென்றே மறுபுறம் திரும்ப வேண்டும். திரும்பும் இடத்தில் நீட்டிய துப்பாக்கிகளுடன் இரண்டு இராணுவ வீரர்கள்…………. மனது திக்கென்றது. மின்னலுடன் இடி முழங்கிக் கேட்டது. ‘அவர்களுக்குச் சொன்னதா’ இவனும் சிங்களத்திலேயே கேட்டான்.

‘பிரச்சினையில்லை கெதியாகச் செல்’

சைக்கிளில் ஏறி உழக்கினான். அவனுக்கும் அவர்களுக்கும் நன்றி சொன்னான்.

ஒழுங்கையில் திரும்பியதும் மீண்டும் எதிர்ப்பட்ட குறுக்கே கட்டப்பட்ட முள்ளுக் கம்பியைக் குனிந்து கடந்தான்.

எதிரே ஏதோ விசாரித்த மனிதருக்கு சந்தோஷமாகவே பதில் சொன்னான். விரிந்த குடையின் மெல்லிய பச்சை நிறக் குடைத்துணியில் மஞ்சள் கலரில் பறக்கும் வண்ணத்திப்பூச்சிகள்……

கேளாத ஒலியாய் மனதினில் ‘ஆனந்த நடனம் ஆடினார்’. எதிரே மழைத்தூறலில் நனைந்து குளிர்ந்து கொண்டிருக்கும் பிள்ளையார் கோவில் கோபுரம், தூரத்து வானச்சரிவில் சிரிக்கும் மின்னல், ஒழுங்கையோரத்து குடிசை வீட்டு வாசலில் கைகாட்டிச் சிரிக்கும் குழந்தை, பக்கத்து வெறும் வளவில் தாய்ப்பசுவின் மடியில் பால் குடிக்கும் கன்றுக்குட்டி. மல்லிகைப் பூவினதோ முல்லை மலரினதோ கிறங்க வைக்கும் வாசனை.

வீடு வந்து விட்டது.

வாசலில் மனைவியும் மகளும், பக்கத்தில் வாலாட்டும் நாய்க்குட்டி.

மின்சார வெளிச்சத்தில் வீட்டுச் சுவர் மணிக் கூட்டில் நேரம் ஏழுமணியாகிக் கொண்டிருந்தது.

– ஜீவநதி – காலை இலக்கிய இருதிங்கள் ஏடு – ஆடி -ஆவணி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *