பெரிய மனசு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 5,744 
 
 

அழைத்த கைபேசியை எடுத்து காதில் வைத்ததுமே…

“யாரு நந்தினியா..?? “- எதிர்முனையில் டாக்டர் சந்திரசேகரனின் குரல் கேட்டது.

“ஆமாம் டாக்டர் ! ”

“உனக்கும் உன் வீட்டுக்காரருக்கு நல்ல சேதி..”

“சொல்லுங்க டாக்டர் …? ”

“நீங்க…. தத்தெடுக்க பிறந்த பெண் குழந்தை வேணும்ன்னு கேட்டீங்கல்லே. பொறந்த குழந்தை கையில இருக்கு. கணவன் , மனைவி…நீங்க ரெண்டு பேரும் உடனே வந்தீங்கன்னா… கையோட எடுத்துக் போகலாம்..”

அவ்வளவுதான் !

நந்தினிக்கு மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. காதில் தேனை விட அமிர்தம் பாய்ந்தது போலிருந்தது.

அவளென்ன செய்வாள் பாவம். கணவன் மனைவிக்குள் ஒரு குறையுமில்லை. என்றாலும் பத்து வருட தாம்பத்தியத்தில் நந்தினி வயிற்றி ஒரு புழு பூச்சியில்லை.எவ்வளவோ வேண்டுதல்கள், வைத்தியங்கள். ஒரு பிரயோஜனமுமில்லை. சம்பந்திகளும் கவலைப்பட்டார்கள். இனி தாமதிக்க வேண்டாமென்று முடிவெடுத்து தத்தெடுப்பதாய் தீர்மானித்தார்கள்.

நந்தினி பிறந்து விழுந்த பெண் குழந்தைதான் வேண்டுமென்று விருப்பப்பட்டாள். அப்போததுதான்… தன் விருப்பப்படி , தன் குழந்தையாக வளர்க்கலாமென்று ஆசைப் பாட்டாள் . அவள் விருப்பத்திற்கு எல்லோரும் கட்டுப்பட்டு இவர்களுக்கு வைத்தியம் பார்த்த டாக்டரிடமே சொல்லி வைத்தார்கள். அவர்தான் இப்போது கைபேசியில் நல்ல சேதி சொன்னார்.

நந்தினி விநாடி தாமதிக்கவில்லை. அருகிலிருந்த கணவனிம் கைப்பேசியைக் கொடுத்தாள்.

“உண்மையா டாக்டர்…? “கருணாகரனால் நம்பவே முடியவில்லை.

“ஆமாம் கருணா. குழந்தையோட அப்பாவுக்கு அரசாங்க வேலை. அம்மா படிச்சிருந்தாலும் வேலைக்குப் போகாமல் வீட்டு மனைவி. ஆண் குழந்தை வேணும்ன்னு விருப்பப்பட்டு மூணு பெண் குழந்தைகளுக்குத் தாய் தகப்பன் ஆகிட்டாங்க. இப்போ நாலாவதும் பெண். வேணாம்… ரொம்ப சிரமம். தத்து கொடுத்திடலாம்ன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்குச் சேதி சொன்னேன். “சொன்னார்.

“டாக்டர் ! பணம்..? ”

“அதெல்லாம் தேவை இல்லே.”கைபேசியைத் துண்டித்தார்.

அப்பா..! எத்தனைப் பெரிய பாக்கியம். !! – கணவன் மனைவி இருவருமே ஒருவரையொருவர் பார்த்து மூச்சு முட்டினார்கள்.

உடனே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

டாக்டர் , இவர்களை மருத்துவமனை வாசலிலேயே நின்று வரவேற்று வார்டுக்கு அழைத்துச் சென்றார்.

தகப்பன் துணைக்கு நிற்க… அந்த குழந்தை கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டு தாயோடு படுத்திருந்தது.

“உங்களுக்கொண்ணும் ஆட்சபனை, வருத்தம் இல்லையே..? ..”கருணாகரன் அவர்களை பார்த்துக் கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடிந்த திருப்தி.! “கணவன் சுருக்கமாகச் சொல்லி மனைவியைப் பார்த்தான்.

அவள் ஆமென்பதற்கு அடையாளமாக தலையை அசைத்தாள்.

பாசம் ! அப்படியே குழந்தையை வாஞ்சையாகப் பார்த்தாள் .

பெற்றவன் குழந்தையைத் தூக்கி…

“நல்லா இருக்கனும். ! “சொல்லி அருகில் நின்ற டாக்டரிடம் கொடுத்தான்.

சந்திரசேகரன் பத்திரமாக வாங்கி குழந்தையை நந்தினி கையில் கொடுத்தார்.

பூவை ஏந்துவது போல் ஏந்தி கொண்ட நந்தினி…

“ரொம்ப நன்றி. உங்க உதவிக்கு நாங்க என்னைக்கும் கடமைப்பட்டிருக்கோம் ! “தழுதழுத்தாள்.

டாக்டர் முன்னே செல்ல… இவர்கள் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.

பெற்றவன் மடியில் வந்து நின்று அவர்கள் காரில் ஏறிச்செல்வது வரைப் பார்த்தான்.

டாக்டர் நந்தினி, கருணாகரனுக்குக் கையசைத்து வழியனுப்பினார்.

பெற்றவன் மனைவியிடம் வந்தான்.

“உன் தவறை நான் மன்னிச்சாலும்…. எனக்கு உண்டாகாத குழந்தையை எப்படி தூக்கி வளர்க்கிறதுன்னு எனக்குள் உறுத்தல். நம்ம ரெண்டு பேர் குறை, உறுத்தலும் நீங்கிப் போச்சு. இனியும் நீ தப்பு செய்யாம என் குழந்தைகளுக்கு நல்ல தாயாய் இருப்பேன்னு நம்பறேன் “சொல்லி அவளைப் பார்த்தான்.

சட்டென்று…

கட்டிலில் படுத்திருந்த மாலினி கண்களிலிருந்து கடகடவென்று கண்ணீர்.

தன் தவறை நினைத்தா, தன் கணவனை நினைத்தா, பத்து மாதம் சுமந்து பிரிந்து செல்லும் குழந்தையை நினைத்தா…தெரியவில்லை.!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *