இடுப்பில் ஒரு உதைவிட்டான் சங்கரன். சின்னிக்கு உடம்பு சிலிர்த்தது. உதை விழுந்த இடத்தை வருடிக் கொண்டாள். மெல்லச் சிரித்தாள். நட்ட நடு ரோட்டில் ஆபீஸ் போகிற அவசரத்தில், ஒரு பெண் தனக்குத் தானே சிரித்துக் கொள்வதை பஸ் ஸ்டாண்டின் கண்கள் உறுத்துப் பார்த்தன.
மறுபடி ஒரு உதை. “ அடேய் ! சங்கரா ! ” என்று தெரிய இன்னும் ஒன்றரை மாதம் போக வேண்டும். அப்போதும் சங்கரனாய் இராது. சங்கரியும் இல்லை. சங்கரன், சுப்புணி, வைத்யநாதன் எல்லாம் கர்நாடகமான பெயர்கள். ஜாதியை, ஊரைக் காட்டிக் கொடுக்கிற பெயர்கள். அவருக்குப் பழைய வாசனை பிடிக்காது. எல்லாம் நவீனமாய் இருக்க வேண்டும். கவிதை, சங்கீதம், சித்திரம் பெயர் எதுவானாலும் நவீனமாய் இருக்க வேண்டும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், மனைவியும் குழந்தையும் நவீனமாய் இருந்தே ஆக வேண்டும். முன்னாலேயே சொல்லிவிட்டார். அதனால் பழைய பெயர்கள் கிடையாது. ஆணாய் இருந்தால் அஸ்வத். பெண்ணாய் இருந்தால் அபிலாஷா,
“ குதிரை ! ஏய் குதிரை ” என்று விளித்தால் எப்படி இருக்கும் என்று மனத்தில் பாடம் போட்டுப் பார்த்தாள் சின்னி. ஒன்றும் துலங்கவில்லை. பாஷை புரிந்தால் உறுத்தும். மொழி தெரிந்தால் நவீனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் உதைக்கிற குழந்தை, குதிரைப் பிள்ளைதான். ஆண் பிள்ளைதான்.
ஆண் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும். அவரை மாதிரி உயரமாய், உருண்டை முகமாய், அகன்ற விழியாய், சுருள் தலையாய், நிறமும் அவர் மாதிரியேவா ? வேண்டாம். அவர் கரிக்கட்டை அல்ல. சற்றுத் தாமிர நிறம். சாம்பல் பாடர்ந்த தாமிரம். ஆண் பிள்ளைக்கு நிறம் என்ன ?
“ எங்க பொண்ணைப் பத்தி நாங்களே சொல்லக்கூடாது. அசல் பவுன் நிறம். எம்.எஸ்ஸி. பர்ஸ்ட் க்ளாஸ். பாங்க்கிலே ஆபீஸர். ”
அப்பா அடக்கமாய்த்தான் சொன்னார். ஆனால் அவரையும் மீறிப் பெருமை இழையோடிற்று.
“ பையனும் லேசுப்பட்டவனில்லை. என்ஜினீயர். சர்க்கார் கம்பெனி உத்தியோகம். மேலே மேலே உசந்துண்டு போற பதவி. நிறம் மட்டுதான். ஆண் பிள்ளைக்கு நிறம் என்ன ? ” ஆண் பிள்ளைக்கு அழகு தேவையில்லை என்பதில் யாருக்கும் அபிப்ராய பேதம் இல்லை. பழைய வாசனைப் பெரியவர்களுக்கும் சரி, புதிய நவீன அபிமானிகளுக்கும் சரி. பவுன் நிறமாய் இருந்தாலும், படிப்பாளியாய் இருந்தாலும் வைதீகப் பிராமணன் வீட்டுப் பெண்ணுக்கு என்ஜினீயர் சம்பந்தம் கிடைப்பது எளிதல்ல என்று அப்பாவிற்குத் தெரியும்.
எங்களுக்கும் தெரியும் சார் ! மனுஷா கஷ்டம். எம்.எஸ்ஸி. வரைக்கும் படிக்க வைச்சிருக்கேள். பாங்க்கில வேலைக்குப் போறது பொண்ணு ! அது போறும். ”
வேலைக்குப் போகிறவர்கள் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்குகிற பஸ், மூலையில் திரும்பியது. ஏற்கனவே ஒரு பக்கமாய் தோள்பட்டை சரிந்த சப்பாணி பஸ். மூலை திரும்புகிற அலட்சியத்தில் குப்புற கவிழ்ந்து விடும் போலிருந்தது. பஸ்கள் எல்லாம் ஆண் வர்க்கம்தான் போலிருக்கிறது. அலட்சியம். உடம்பில் பொங்குகிற, அழகாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாத ஆண் பிள்ளைகள். ஆனால் அதைப் பார்க்கக் கர்ப்பிணிப் பெண் போலும் இருக்கிறது. தன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண், எத்தனை நெருக்கடியிலும் அயராமல் வேலை செய்கிற நவீன கால கர்ப்பிணிப் பெண்.
இந்த பஸ்ஸில் எப்படியும் ஏறித்தான் ஆக வேண்டும். ஆபீஸ் சேஃப்பின் சாவி இவளிடம் இருக்கிறது. இன்றைக்கு பாங்க் நடக்க வேண்டுமானால் சேஃப் திறக்கப்பட வேண்டும்.
“ அம்மணி ! நல்வாழ்த்துக்கள் ! உங்களை அதிகாரியாக உயர்த்துவதில் நிர்வாகம் பெரு மகிழ்ச்சி அடைகிறது ; இந்தப் பதவி உயர்வு, உங்களுடைய மேலும் மிகச் சிறந்த சேவையை நிறுவனத்திற்கு அளிக்க உங்களை உற்சாகப்படுத்தும் என்று நம்புகிறோம். ”
சர்க்கரை வார்த்தைகள். கணவன், மாமனார், மைத்துனர், என்று விரிந்த குடும்பத்தில் இருந்து, முந்நூற்று நாற்பது கிலோமீட்டர் பந்தாடிய வார்த்தைகள்.
“ பி , பிரேவ் ! நவீன வாழ்க்கையில் முந்நூற்று நாற்பது கிலோமீட்டர் ஒரு தொலைவா ? ஓரிரவு பயணம். சொடக்குப் போடும் நேரத்தில் எஸ்.டி.டி. படித்த, வேலைக்குப் போகிற பெண், மாற்றலுக்குப் பயப்படலாமா ?
பயமா ! கவலை. பெண் பிள்ளை இல்லாத வீடு கலைந்து போகுமோ என்ற கவலை. மாதம் ஒரு முறை மாத்திரமே புதுக் கணவன் முகம் பார்க்க முடியும் என்ற பெண் பிள்ளைக் கவலை.
“ போய் சேர்ந்துக்கோம்மா ! ஒரு வாரம் கழிச்சு லீவைப் போடு. மாற்றலுக்கு மனுக் கொடு. மொம்மனாட்டின்னா மேனேஜ்மெண்டிலே நிச்சயம் இறங்குவா ! ”
மாமனார் மாடர்ன் ஆசாமி இல்லை. ஆனால் பிராக்டிகலான காரியவாதி. பிள்ளைகளைப் படிக்க வைக்கப்பட்ட கடன், பெண்ணைக் கரையேற்றப்பட்ட கடன். தன் ஆயுசு காலத்திலேயே அரை கிரவுண்டில் சிறு நிழல். எதிர்காலமும் கடந்த காலமும் கண்ணாமூச்சி ஆடின. வேலைக்குப் போகிற காமதேனுவை பவுண்டில் அடைத்துவிட அவருக்குப் பிரியமில்லை.
விடுமுறை உடனே கிடைத்தது. மாற்றல் மனுவைப் பந்தாடினார்கள்.
“ கல்யாணம் முடிந்த கையோடுதானே கணவன் ஊருக்கு மாற்றல் தந்தோம். மறுபடி மறுபடி மாற்றுவது எளிதில்லை சின்னி. நினைவிருக்கட்டும், நீ இப்போது ஒரு பொறுப்பான ஆபீஸர். ”
இருக்கிற எல்லா லீவையும் ஒரு சேரப் போட்டாள் சின்னி. ஆபீஸை உதறி, அடுக்களைப் பெண்ணானாள். அவ்வப்போது அதிகாரிகளைப் பார்த்துக் கெஞ்சினாள்.
சீக்கு லீவு முழுவதும் கரைகிற நேரத்தில், மாற்றல் கனிந்தது. கணவன் இருக்கும் ஊரில் இடம் ஏதும் இல்லை. எனவே பதினைந்து கிலோமீட்டரில் பக்கத்து கிராமத்திற்கு மாற்றல். “ பதினைந்து கிலோமீட்டர் தானே. பஸ்ஸில் போய் வந்து விடலாம் ” என்றார் மைத்துனர்.
கர்ப்பிணி பஸ். பள்ளமும் மேடுமாய் பதினைந்து கிலோ மீட்டர்.
“ பொம்மனாட்டிகளுக்குப் பிரசவ லீவு உண்டோல்லியோ உங்க ஆபீஸுல ? ”
“ உண்டு, உண்டு. ஆனா பூராத்தையும் இப்பவே எடுத்துட்டா, டெலிவரிக்கு அப்புறம் யார் பார்த்துப்பா, குழந்தையை ? ”
“ எங்களையெல்லாம் பார்த்தா மனுஷனாய்த் தெரியலையோ ? ”
“ எனக்கும்தான் சிரமமாய் இருக்கு. மெட்டர்னிட்டி லீவிற்கு மனுப் போட்டாச்சு. சாவி வாங்கிக்க ஆள் வரவேண்டாமா ? ” “ இன்னொரு ஆபீஸர் உண்டுல்லியோ உன் ஆபீஸிலே ? ”
“ ஒருத்தரே இரண்டு சாவியையும் வைச்சுக்கக் கூடாதும்மா ? என்னவோடியம்மா, படிச்ச பொண்ணு உனக்கே தெரியாதா என்ன ! ”
வெள்ளிக்கிழமை ரிட்டர்னைச் சரிப்பார்க்கும் மத்தியானத்தில் இடுப்பு வலி எடுத்தது. வாடகைக் கார் தேடி கிராமம் முழுக்க அரக்கப் பரக்க அலைந்தார்கள். வேறு விஷயமாய் வங்கிக்கு வந்த கடன்காரர்கள் கார் கிடைத்தது. போக்குவரத்து நெரிசலின் ஊடே புகுந்து புறப்பட்ட கார் அரை மணியில் நகரத்தைப் பிடித்தது. நல்லவேளை டாக்டர் இருந்தார்.
கண்விழித்தபோது எதிரே கணவர் சிரித்தார். தான் பெற்றெடுத்தது குதிரைக் குட்டியா ? லட்சிய வேட்கையா ? திரும்பிப் பார்த்தாள். தொட்டிலே இல்லை !
“ சரியான சமயத்தில் வந்தாய் ! உன்னைக் காப்பாற்றி விட்டேன் சின்னி ! ” என்றார் டாக்டர். குதிரை குட்டியா ? லட்சிய வேட்கையா ?
“ நீ வரும்போதே குழந்தை திரும்பி விட்டது. குறை மாதம். தலை திரும்பிய குழந்தை. அடி வயிற்றில் ஆயுதம் வைப்பது தவிர எனக்கு வேறு வழியில்லை. ஐ ஹோப் யூ வில் அப்ரூவ் இட் ! ”
என் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்ட நரசிம்மம் ஆணா ? பெண்ணா ?
“ ஆனால் … ”
ஆனால்… ?
“ நான் மெத்த வருந்துகிறேன் சின்னி. உன் குழந்தையைக் காப்பாற்ற என்னால் இயலவில்லை … ”
குழந்தையைக் காப்பாற்ற …
குழந்தையை …
அழகிய, படித்த, நவீன, நாலு இலக்கம் சம்பாதிக்கிற பொறுப்புமிக்க ஆபீஸர் சின்னி. குலுங்கிக் குலுங்கி அழுதாள்.