பெண்மையின் வலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 9,667 
 
 

“உங்களுக்கென்ன,ஆம்பிளைங்க ஜாலியா இருப்பீங்க. பொம்பளைங்க நாங்கதான் கஷ்டபடுறோம். சிரிக்காதீங்க, வர்ற ஆத்திரத்தில ஓங்கி அடிச்சிட போறேன்” என்று வெறுப்பை உமிழ்ந்தாலும், சிரிப்புடன் உட்கார்ந்திருந்த என் கணவர்,

“ஏண்டி, ஊர் உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளைகளுக்கும் வர்ற சிரமம்தானே. நீ ஏன் இப்படி கத்துற. என்ன செய்யுறது, திருப்பி டாக்டர்கிட்டதான் போகனும். கிளம்பு போகலாம்”.

“போய் என்ன பண்ணுறது. திரும்ப திரும்ப ஓரே மாத்திரைதான். போன தடவை ஸ்கேன் பண்றப்ப சொல்லிட்டாங்க, கர்ப்பபை எடுக்குறதுதான் ஒரே வழின்னு. நமக்குதான் பயமா இருக்கு”.

“உனக்கு வயசாயிருந்தா பரவாயில்ல. இப்பதான் 40 முடிஞ்சிருக்கு. அதுக்குள்ளேயா. லேடிஸுக்கு யூட்ரஸ்தானே பலம். எடுத்தா ஆப்டர் எபக்ட் நிறைய இருக்கும்ன்னு சொல்றாங்க. அதனாலதான் ஓன்னுக்கு இரண்டு டாக்டர்கிட்ட கேட்டுட்டு செய்வோம்ன்னு இருக்கோம்”.

அவர் சொல்றதும் சரிதானே. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே கர்ப்பபைதானே. உலகத்தில இருக்கிற எல்லா ஜீவராசிகளும் பெருகுறதுக்கு, பெண் ஜென்மத்துக்கு இந்த சின்ன பை மட்டும் இல்லாட்டி, பூமில இவ்வளவு ஜீவராசிகள் இருக்குமா?. உலகமே மக்கி மண்ணாயிருக்கும். ஆனா, மாசா மாசம் வர்ற வலியை நினைச்சா, இது இருக்கிறதுக்கு இல்லாம இருந்தா தேவலைன்னு தோணுது.

மரண வேதனை. உசசந்தலையில டம் டம்ன்னு அடிக்கிற மாதிரி வலி. ரத்த போக்குனால உடம்புல வர்ற அசதி. இப்ப எல்லாம், வலியோட சேர்ந்து வெறுப்பு. இதுல கட்டி வேற. போன தடவையே டாக்டர் அம்மா தெளிவா சொல்லிட்டாங்க, நீதாம்மா முடிவு பண்ணனும். எடுத்துட்டா, ஒரே தடவையா போயிடும். இல்லாட்டி தொடர்ச்சியா மெடிக்கல் செக்கப்புல இருக்கனும். இப்போதைக்கு பயமில்ல. நாளைக்கு கட்டி எப்படி மாறும்ன்னு சொல்ல முடியாதுன்னு எச்சரிக்கை செஞ்சாங்க.

என்ன முடிவு எடுக்குறதுன்னு நினைச்சு நினைச்சே இன்னும் தலைவலி அதிகமானதுதான் மிச்சம்.

“இந்தா. இந்த மாத்திரைய சாப்பிடு, நாளைக்கு டாக்டர்கிட்ட போய் முடிவு பண்ணிடலாம்” என்று என் சிந்தனைக்கு புல்ஸ்டாப் போட்டார் என் வீட்டுகாரர்.

மாத்திரைய போட்டவுடன் வலி குறைந்தது. வாசலில் பெல் அடிக்கும் சத்தம்.
ஐய், அப்பா அம்மா. பெத்தவங்கள பார்க்கும் போது வர்ற சந்தோஷமே தனிதான். அதுக்கு ஈடு இணை கிடையாது.

“என்னம்மா, சொல்லாம் கொள்ளாம வந்திருக்கீங்க. வாங்கப்பா” என்றபடி அவங்க கையில இருந்த பை, பெட்டிய வாங்கிட்டு, “என்னங்க எங்க அப்பா, அம்மா வந்திருக்காங்கன்னு” உள்ளே ஓடினேன்.

“இப்ப வலி எல்லாம் ஓடிடுமே என்று கிண்டலடித்தபடி, “வாங்க அத்தை, வாங்க மாமா உட்காருங்க” என்று பேனை போட்டார்.

“என்ன, மாப்ள, ஏதோ வலி கிலின்னு சொன்னீங்களே, என்னாச்சு அவளுக்கு?” என்று பதட்டத்துடன் கேட்டார் என் அப்பா.

“ஒன்னுமில்ல மாமா. மாசா மாசம் வர்ற வலிதான். சமீபத்தில கொஞ்சம் அதிகமா இருக்கு” என்று சமாதானம் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுது, எங்கம்மா எங்கிட்ட,

“ஏண்டி என்னாச்சு? நீ வர வர எங்கிட்ட எதுவுமே சொல்றதில்ல. எங்கிட்ட பேசுறதும் குறைஞ்சு போச்சு. நாந்தான் நீ பேசி ரொம்ப நாளாயிடுச்சேன்னு உங்க அப்பாகிட்ட கட்டாயபடுத்தி கூட்டிட்டு வந்திருக்கேன்”.

“என்னத்த சொல்லுறது. எனக்கு உன் மேலதாம்மா கோபம். ஏன் என்னை பொம்பளையா பெத்த. அதனால தானே இந்த இம்சை. ஒவ்வொரு மாசமும் இந்த வலி காலத்த தள்ளுறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது. இதுல கர்ப்பபையில கட்டி வேற இருக்காம். டாக்டர் பைய எடுக்கனும்றா. எடுத்துறலாம்னா, ஆளாளுக்கு பயமுறுத்துறாங்க. அந்த கோபத்துல, நீங்க வர்றதுக்கு முன்னாடி அவரை போட்டு காய் காய்ன்னு காய்ச்சிகிட்டு இருந்தேன். அததான் சொல்லுறாரு”.

என் அம்மா கண்ணுல கண்ணீர். “உண்மைதாண்டி, பொட்டையா பிறந்தவங்களுக்குதான் அதிக சிரமம். நானும் பொட்டைதான்டி. இந்த பிள்ளை பெக்கனும் நினைச்சா பெத்தேன்?. இந்த வயத்துல எத்தனை பிள்ள உருவாச்சு. பாதி செத்து பாதி நின்னுச்சு. நீதான் கடைசி. இப்ப நீங்களாம் இருக்கிற மாதிரி ஜாக்கிரதையா இருக்க எங்களுக்கு தெரிஞ்சுச்சா.
என்ன, புருஷனை சந்தோஷமா வச்சிரு, சந்தோஷமா வச்சிருன்னு சொல்லி சொல்லியே எங்களை கஷ்டபடுத்திகிட்டதுதான் மிச்சம். ஒவ்வொரு பிரசவமும் நித்ய கண்டம் பூரண ஆயுசு.

பத்துமாசம் சுமந்துட்டு, ஜீவன் செத்து பொறந்துச்சுன்னா எவ்வளவு வேதனையா இருக்கும் தெரியுமா? என்ன செய்யுறது. எனக்குன்னு ஒரு வேலையா? தனி காசா? ஆம்பளைய தொடதன்னு தடுக்குறதுக்கு.

இதுக்கு மேலயும் இவ கர்ப்பமானா அடுத்த பிரசவத்துல இவளை பொணமாதான் தூக்கிட்டு போகனும்ன்னு டாக்டரம்மா சத்தம் போட்டதுல பயந்து என்ன தொடுறத நிறுத்துனதுதான் உங்க அப்பா. இன்னைக்கு வரைக்கும் என்னை ஒரு சாமி மாதிரிதான் பார்க்கிறாரு.

ஆனா புரியாத விஷயம் நீங்க இப்ப சொல்லுற வலி கட்டியெல்லாம். நாங்க சாப்பிட சாப்பாடு, வாழ்ந்த வாழ்க்கை முறை வேற. அடிக்கடி மாசமான்னா, இந்த வலி எங்க வரும். எங்க காலத்துல, அந்த மூணு நாளும் வீட்டுக்குள்ள வரவுடாம, கொல்லபுறத்துல இருக்க சொல்லுவாங்க. ஒரு வேலையும் செய்யவுடமாட்டாங்க. நல்ல ஓய்வு கிடைக்கும். இப்ப உங்களுக்கு எல்லாம் எங்க ஓய்வு.
மன்னிச்சுக்கம்மா. உனக்கு நல்லா சாப்பாடு போட்டு வஞ்சனையில்லாமதான் வளத்தேன். இப்ப நீ சொல்லுறத பார்த்தா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. எனக்கு தெரிஞ்ச கை வைத்தியம் செய்றேன். ஒரு மாசம் கழிச்சு பார்ப்போம்” என்றாள்.

அவள் வேதனை கலந்த பேச்சை கேட்டபடி அவளை பார்த்தேன். தளர்ந்த உடம்பு. முகம் அவ்வளவு அழகு. கண்ணுல வரும் ஒளி இன்னக்கு பூரா பார்த்துகிட்டே இருக்கலாம்.

அவங்க சொன்ன மாதிரி, அப்ப நடை முறையில இருந்த சில விஷயங்கள பத்தாம் பசலி தனம்ன்னு விமர்சனம் பண்ணாலும், அதுவும் பொம்பளைங்க உடம்பை பாதுகாக்க உபயோகமாதான் இருந்திருக்கு. கூட்டு குடும்பம், கடினமான வீட்டு வேலைகள், மாத விலக்கு காலத்தில் வீட்டு வேலைகளை செய்ய விடாமல் புழக்கடையில் உட்கார வைப்பது போன்ற விஷயங்களின் அருமை இப்ப தெரியுது.

ஆனா இப்ப அது முடியுமா. வேலைக்கு போகுற லேடிஸ்க்கு இப்ப ஓய்வு எங்க சாத்தியம். டிவியிலதான் நிறைய விளம்பரம் சானிடரி நாப்கின் பத்தி வருதே. எதாவதையாவது ஒன்னை வாங்கி வச்சிகிட்டு நடமாட வேண்டியதுதான்.

அவ தலைமுறைக்கு புள்ள பெத்துக்குறது சுலபமா இருந்துச்சு. இப்ப மாதிரி மருத்துவ வசதி எல்லாம் இல்ல. இருந்தாலும் பெத்துக்கிட்டா. நான் பெத்தது ஒரே புள்ள. வேலைக்கு போறதுன்னால, ஒரே பிள்ளை போதும்ன்னு வுட்டுட்டேன். வேலை வீடு புள்ள புருஷன்னு இயந்திர வாழ்க்கையில என்னமோ சாப்பிட்டேன் எப்படியோ இருந்தேன். இப்ப குத்துதே குடையுதேன்னு புலம்புறேன்.

“என்னம்மா அம்மாவும் பொண்ணும் பேசிட்டீங்கிளான்னு” உள்ளே நுழைந்தார் என் அப்பா.

எனக்கு அவரை பார்த்து சிரிக்க தோணல. உர்ன்னு இருந்தேன்.

“மாப்ள சொன்னாரும்மா. என்னத்த சொல்றது. அறிவியல் முன்னேத்தம் வர வர சௌகரியம் வளருதோ இல்லையோ நோய் நிறைய வருது. படிப்பில்லைமா எங்களுக்கு. உடம்புதான் எங்களுக்கு படிப்பு. பக்குவம்றது நம்மள பெத்தவங்களும், சுத்தி இருக்கிறவங்களும் சொல்றதுதான். உழைச்சோம், தின்னோம் அம்பளைன்னு இருந்தோம். பொம்பள கஷ்டம் புரிய ரொம்ப நாளாச்சு. எனக்கு லேட்டாதாம்மா புரிஞ்சுச்சு. ஆனா சத்தியமா சொல்றேன் புரிஞ்ச பின்னாடி முறையா நடந்துகிட்டேன். உங்கள வளக்க என்ன வேணுமின்ணு கேட்டு கேட்டுதான் வளத்தேன். இது உனக்கே தெரியும்.

கால மாத்தத்தில்ல, நம்ம சாப்பாடு, வாழ்க்கை முறை சுத்தி இருக்கிற இடம் எல்லாம் மாறி போச்சேம்மா. நோய் எதனால வருதுன்னு யாரால கண்டு பிடிக்க முடியுது. மருத்துவங்க சொல்றதுதானே. அவுக எடுக்குறது நல்லதுன்னு சொன்னா எடுத்துருமா. எதுவுமே ஒண்ணு நமக்கா புரியனும். இல்லாட்டி அடுத்தவங்க சொல்லி புரியனும். ஒரு மாசம் அம்மா கொடுக்குற மருந்த சாப்புட்டு பாரு, இல்லாட்டி டாக்டர் அம்மா சொல்ற மாதிரி செய்துடுவோம். பயப்படாத, நாங்கள் எல்லாம் இருக்கோம்” என்றார்.

திருப்பி கதவு திறக்குற சத்தம். தடாரென எந்திரிச்சேன். ஆட்டோவுல இருந்து, என் பொண்ணும் அவங்க டீச்சரும் இறங்கினாங்க. ஐய்யோ என்னாச்சோன்னு பதட்டமா வாசல நோக்கி ஓடினேன்.

“ஒன்னும் பயப்படாதீங்க. எல்லாம் நல்ல விஷயம்தான். ஷி அட்டெயிண்ட் பூபர்டின்னு” அவளை மெதுவா அழைச்சிகிட்டு வந்தாங்க. எட்டாவது படிக்கும் பெண். அதுக்குள்ளேயா. அவள் முகத்தில் எந்த விதமான பயமும் இல்ல. வெட்கம் கலந்த பெருமை.

“என்னடி சொல்றாங்க?” என்றாள் எங்க அம்மா.

“உன் பேத்தி பெரிய மனுஷியாயிட்டாளாம்”

“கண்ணாத்தா, வயித்துல பால் வார்த்த தாயி, பொண்ணுக்கு இயற்க்கையா வர்ற விஷயத்தை நேரத்தோட கொடுத்துட்ட தாயி, ஜென்மத்து அர்த்தம் கொடுத்துட்ட தாயின்னு” அவள திருஷ்டி கழிச்சு கூட்டிட்டு போனா.

என் வீட்டுகாரர் அவளது தோளை அணத்து கை கொடுத்தார். பெண்ணுக்குக்கான பூரணத்துவத்தை அடையும் போது சந்தோஷம் வர்றது இயற்க்கைதானே. என் பாட்டி என்னை அணைத்தது ஞாபகத்திற்க்கு வந்தது. இந்த மாற்றத்தை யார் தவிர்க்க முடியும். அவ வாழ்க்கை முறை, வர்ற காலத்தில எப்படி அமையுமோ?. பொண்ணா பெத்ததுக்கு என்னை பிற்காலத்தில அவ என்னை திட்டுவாளோ? மாட்டாளோ? இப்ப எப்படி தெரியும்?. எங்கிட்ட இருக்கிற வரைக்கும் சிரமம் இல்லாம நான் வளர்க்கனும். என் வலிய இன்னும் எத்தனை நாளுக்கு நான் நினைச்சுகிட்டு இருக்கிறது.

“ஏங்க, இவ சடங்குக்கு பின்னாடி, டாக்டர் சொன்ன மாதிரி ஆபரேஷன் செஞ்சுடுவோம்” என்றேன். வலி போய் மனதில் ஒரு நிம்மதி குடியேறினமாதிரி இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *