பெண்களைப் பற்றி மட்டுமான கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 10,403 
 
 

சில வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சின்ன குழந்தை ஒரு பிளாஸா அல்லது மால் வாசலில் மிக்கி மௌஸ் வேடம் போட்டு நிற்பவனை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என அடம் பிடிப்பது போல அவர்கள் எழுத்தாளனை தம் வீட்டுக்கு அழைத்து வந்து கூடவே பராமரிக்கிறார்கள். அல்லது சற்று அருகாமையில் இருத்தி கவனித்துக் கொள்கிறார்கள். அல்லது சற்று தொலைவில் வைத்து சமாளித்துக் கொள்கிறார்கள். வினோத் என்னை அப்படித்தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

வினோத்துக்கு நான் பாதி நண்பன், பாதி எழுத்தாளன், கால்வாசி ஆலோசகன், கால்வாசி மனிதன். சிலரிடம் என்னை அண்ணன் என்று அறிமுகப்படுத்துவான். சிலரிடம் நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என சொல்லுவான். என்னிடம் கேட்டால் அவனை எப்படி அடையாளப்படுத்துவேன் எனத் தெரியாது.

விநோத் புதுமைப்பித்தன் காலத்தில் என்றால் கணக்குப்பிள்ளையாக இருந்திருப்பான். அதற்குப் பின் என்றால் வங்கி ஊழியனாக. இப்போது என்பதால் எம்.என்.ஸி மென்பொருள் கூலி. மற்றபடி இவர்கள் எல்லாம் ஒரேவகையானவர்கள். எனக்கு சாப்பாடு சரக்கு எல்லாம் வாங்கித் தருகிறான், சரிதான். ஆனால் எனக்கு அவன்பால் பாரித்த மரியாதை எல்லாம் கிடையாது. ஆனால் அவன் சகோதரி அனு அப்படி அல்ல. பார்த்தமட்டிலும் எனக்கு அவளைப் பற்றி நல்ல அபிப்ராயம் தோன்றி விட்டது. பெண் என்பதால் மட்டுமல்ல!

அனு விநோத்துக்கு எட்டு வயது மூத்தவள். விநோத்துக்கு என்னை விட ரெண்டு வயது அதிகம். இதைப் படிக்கிற நீங்கள் நவீன இலக்கிய அறிமுக வாசகர் என்றால் எனக்கு உங்களை விட பத்து வயது மூப்பு. இல்லையென்றால் ஐந்து வயதைக் குறைக்கலாம். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அனுவும் விநோத்தும் பரஸ்பரம் உறவைச் சொல்லி அழைக்க மாட்டார்கள். தோற்றத்திலும் அனு விநோத்தை விட இளமையாக இருந்தாள்.

வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகும் முன்பாக அவன் என்னை எச்சரித்திருந்தான். அனுவின் நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக எதிர்மறையாக வன்மமாக இருப்பதாக சொன்னான். அவளுக்கு விவாகரத்து ஆகப் போகிறது. கணவனிடம் இருந்து பிரிந்து ஆறுமாதமாகிறது. அவளுக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள் மீது ஒட்டுமொத்தமாக கசப்பு. யாரைப் பார்த்தாலும் கரித்து கொட்டுகிறாள். இதைப் பொறுக்க முடியுமென்றால் தாராளமாக வீட்டுக்கு வரலாம் என்றான்.

அனுவுக்கு ஏன் விவாகரத்து என விசாரித்தேன். கணவனுக்கு கள்ளத்தொடர்பு, குடிப்பழக்கம், வன்முறை, போதைப்பழக்கம், செக்ஸ் வெறி, சோம்பல், வேலையின்மை, மனநோய் இப்படி ஏதாவது உண்டா எனக் கேட்டேன். விநோத் தன் மாமா ஒரு உத்தமானவர் என்றான்.

அவன் தன் மாமாவையும் அக்காவையும் சேர்த்து வைக்க ரொம்ப முயன்றதாகவும், அவனது அக்கா பிடிவாதமாக பிரிய விரும்புவதாகவும் கோபமாக சொன்னான். அனு மீது அவனுக்கு நிறைய ஏமாற்றமும் வருத்தமும் இருந்தது. இவ்வளவு நல்ல கணவனை விட்டு வர முயலுகிறாளே என அவன் விசனித்தான். ஆனால் எனக்கு அப்போது தான் அவன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்கிற விருப்பம் வந்தது. நல்ல கணவனை விட்டு வர வேண்டும் ஒரு பெண்ணிடம் ஏதோ இருக்கிறது என தோன்றியது.

விநோத்தின் மனைவி சுமதியும் ஒரு இலக்கிய வாசகி தான். அவள் பொதுவாக என்னிடம் எனக்குப் பிடிக்காத சக எழுத்தாளர்களின் கதையைப் பற்றி சிலாகித்துப் பேசுவாள். என்னைப் பார்த்ததும் வேண்டுமென்றே அப்படி செய்கிறாளா அல்லது அவளுக்கு எதேச்சையாகவே அப்படி வருகிறதா என தெரியவில்லை. ஏதோ என் சகஎழுத்தாளனை என்னிடம் புகழ்ந்தால் நான் மனமகிழ்ந்து போவேன் என அவளுக்குள் ஒரு தவறான மனக்கணக்கு. இதற்கு பேசாமல் என்னை அசிங்கமாக திட்டி விட்டுப் போகலாம். இது அவளுக்கு புரியவில்லை. சுமதி எனக்கு இட்லி வைக்கும் போதும் நான் டி.வி பார்க்க அமரும் போதும் அறிவார்த்தமாக ஏதாவது பேசுவாள். “ ஏ ஆண்சமூகமே!” என்று தான் அவளது பேச்சுகளின் தொனி இருக்கும். என்னவோ எழுத்தாளன் சாப்பிடும் போதும் டி.வி பார்க்கும் போதும் அவன் சாப்பிடவோ டி.வி பார்க்கவோ கூடாது என்பது போல நடந்து கொள்வாள். மனிதன் நன்றாக சாப்பிடுகிற, தூங்குகிற, வேலைக்கு கிளம்புகிற வேளைகளில் டி.வி நிகழ்ச்சிகளில் அறிவுஜீவி, போராளி ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைத்து வைத்து உலகத்தையே புரட்டுகிறது போல கேள்வி கேட்பார்கள். அதே பாணியில், இங்கே உட்கார்ந்து நீ சாப்பிடுகிறாய் அல்லவா, டி.வி பார்க்கிறாய் அல்லவா, இதுக்கெல்லாம் பதில் சொல் என்பது போல் கேள்விகளாக கேட்டுத் தள்ளுவாள். அனுவைப் பற்றி முதலில் இன்னும் மோசமான சித்திரத்தைத் தந்ததும் சுமதி தான்.

அனுவுக்கு தன் தம்பியின் குடும்ப வாழ்வு நன்றாக போவது பொறாமையும் வயிற்றெரிச்சலும் உண்டு பண்ணுவதாகவும், உங்களால் தான் நான் நாசமாய் போனேன் என்கிற கணக்கில் அவள் தினமும் சுமதியுடன் சண்டை போடுவதாகவும் சொன்னாள். இரண்டு பெண்கள் சண்டை போடும் போது அதை கையாலாகவனாக பார்த்துக் கொண்டிருக்கும் இரு ஆண்களில் ஒருவனாக இருக்கும் அவலத்தை நினைத்தே முதலில் அவன் வீட்டுக்கு போகாமல் இருந்திடலாமா என யோசித்தேன். ஆனாலும் வழக்கமாக என்னை போஷிப்பவர்கள் ஊரில் இல்லாமலும், ஊரில் இருந்தும் என்னுடன் நல்லுறவில் இல்லாமலும், அல்லது ஊரில் இருந்து என்னுடன் நல்லுறவில் இருந்தும் என் மீதான தம் கடமை தீர்ந்து விட்டதாக நம்பினதாலும் நான் விநோத்துடன் அவன் வீட்டுக்கு வர வேண்டியதாகி விட்டது.

மாலையானதும் விநோத் தண்ணியடிக்க ஆரம்பித்தான். நான் இலக்கியம் பேசுகிறவர்களுடன் மது அருந்துவதில்லை என்பதால் அறையில் தனியாக கிடந்தேன். அப்போது அலுவலகத்தில் இருந்து வந்த அனுவின் கீச்சுக் குரல் கேட்டது. குரலைக் கேட்டதும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெண் என ஊகித்தேன். வீட்டுக்குள் அவள் வந்ததும் ஒரு உயிர்ப்பு பரவியது. புடவையின் ஓரமாய் தீப்பற்றிக் கொண்டது போல். நான் எழுந்து அவளைப் பார்க்கப் போனேன்.

அவள் இன்று அலர்ந்த பூப் போல என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஒருமாதிரியாய் ஒருநாள் வேலையின் களைப்போ பயண அலுப்போ அற்று நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்தது போல பளிச்சென்று தோன்றினாள். நடையில் ஒரு துள்ளல் இருந்தது. ஜீன்ஸ் டாப்பில் இருந்து காட்டன் பைஜாமாவுக்கு மாறி இருந்தாள். பக்கவாட்டில் இருந்து பார்த்தால் தொப்பையின் அடையாளம் தெரிந்தது. முன்னிருந்து பார்த்தால் கெட்டியான கழுத்தும், நிறைவான மார்புகளின் புடைப்பும். அமெரிக்கா ஈராக்கில் குண்டு போட்டது போல் என் கண்களுக்கு இடைவிடாத தாக்குதல். அலட்சியமாக கொண்டை போட்டு காதில் இயர்போன் சொருகி பால்கனி சுவரில் சாய்ந்து பெரிய மக்கில் காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

மெல்லிய உறுத்தாத பெர்பியூம் வாசனை. அது துவைத்து தேய்த்த புதுத்துணியின் வாசனையோடு அவள் உடலின் வீச்சத்தோடு கலந்து மயக்கம் தருவதாக இருந்தது. என்னைப் பார்த்ததும் புரிந்துணர்வோடு உதடுகள் மெல்ல திறந்து பற்கள் மிளிர புன்னகைத்தாள். அவளது மேலுதடு சற்றே மேலெழுந்து அமைந்திருந்ததால் அவளே பிரயத்தனித்தால் கூட டி.வி மாடல் போன்று புன்னகைக்க முடிந்திருக்காது. ஆனால் திறந்த வாய்க்கு ஏற்றபடி இறைவன் அவளுக்கு சின்னதான ஒழுங்கான பற்களைத் தந்திருந்ததால் பளிச்சென்று ஒரு அழகு சேர்த்தது. அவள் அதற்கு மேல் என்னை விசாரிக்கவோ பார்வையால் அளவிடவோ என் இருப்பால் பதற்றமாகவோ இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது.

வீட்டு வேலைகளை பெரும்பாலும் சுமதி தான் பார்த்துக் கொண்டாள். டி.வி பார்த்தபடி துணி மடிப்பது, எப்.எம் கேட்டபடி நகம் வெட்டுவது போன்றவற்றை தான் அனு செய்தாள். அல்லது சுமதி எல்லா வேலைகளையும் முடித்த பிறகு சாமான்களை எடுத்து ஒழுங்குபடுத்தும், சும்மா பிஸியாய் அங்குமிங்கும் நடந்து தம் திம் ஓசையெழுப்பும் நகாசு பணிகளை செய்தாள். அனு வேலை செய்யாமல் இருந்ததற்கும் இறுதி பணிகளை இப்படி தொட்டுறவாடி முடிப்பதற்கும் முன்னாலும் பின்னாலும் மட்டுமே சுமதி நிம்மதியாய் இருந்தாள் என சொல்ல வேண்டும். அதனாலே கோபத்துக்கும் அழுகைக்கும் இடையே ஒரு முகபாவத்தை சதா வைத்துக் கொண்டிருந்தாள்.

சுமதியை விட அனுவுக்கு நன்றாக சமைக்க வந்தது. ஆனால் சமையல் பரிமாறல் பொறுப்பை சுமதி தானே பிடிவாதமாய் வைத்துக் கொண்டாள். வீட்டு வேலைகளில் அனுவை பங்கெடுக்க செய்வதில் சுமதிக்கும் விநோத்துக்கும் தயக்கமும் மனத்தடையும் இருந்தது. அவளையும் ஒரு விருந்தினர் போல அவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொண்டார்கள். ஆனால் வக்கீலைப் பார்ப்பது, காரை சர்வீஸுக்கு விடுவது, பாஸ்போர்ட் அலுவலகம் போவது உள்ளிட்ட வெளிவேலைகளில் அவளுக்கு எந்த உதவியும் செய்ய மறுத்தார்கள். தினமும் இந்த விசயங்களில் அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டை வரும். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக விநோத் அதிக குரூரத்துடனும் பழிவாங்கல் மனப்பான்மையுடனும் நடந்து கொண்டான். அனு மிகுந்த பொறுமையுடன் அமைதியுடன் அவனை எதிர்கொண்டாள். ஒரு விவாகரத்துக்குள்ளாகும் நெருக்கடி நிலையில் இருப்பது அனுவா அல்லது அவளது தம்பியா என எனக்கு குழப்பமாக இருந்தது. அவளை தொடர்ந்து அன்பாகவும் அதேவேளை அநாதரவாகவும் வைத்துக் கொள்ள அவர்கள் விரும்பினார்கள்.

செகந்திராபாதில் நாங்கள் இருந்த பகுதி ஆளரவம் அதிகம் இல்லாதது. கொஞ்சம் புறநகர். நிறைய சிறுசந்துகளும் சாக்கடைகளும் ஊடாடும் நிலப்பரப்பு ஒரு பக்கம், ராணுவ வீரர்களின் பயிற்சிக்கான கேம்ப் மற்றும் கண்டோண்ட்மண்ட் பகுதிகள் இன்னொரு பக்கம். அனு தன் நாற்பது வயதில் கார் ஓட்டப் பயின்று கொண்டிருந்தாள். அவள் மேலாளராக வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் இருந்து காரில் போவது ரொம்ப சிரமம் மற்றும் தொலைவு என விநோத் நம்பினான். அவன் அவளை காரோட்டுவதில் இருந்து பின்வாங்க செய்ய தொடர்ந்து முயன்றான். ஆனால் அவளுக்கு அதில் விடாப்பிடியான ஆர்வம் இருந்தது.

விநோத் கூறின இன்னொரு விசயம் அவளுக்கு இயல்பாக கார் ஓட்ட வரவில்லை என்பது. அவள் காரோட்டிப் பழகும் போகும் பின்சீட்டில் இருக்கும் நமக்கு இன்னும் ஒருமுறை வயிற்றை நன்றாக வயிற்றை சுத்தம் பண்ணி விட்டு வந்திருக்கலாம் என்று தோன்றும். பொதுவாக ரோட்டுக்கும் ரோடல்லாத பகுதிகளுக்கும் வேறுபாடு இருப்பதாகவே அவளுக்கு அப்போது தோன்றாது. ரோடில் போகிறவர்கள் தன் மீது கூடுதல் கவனம் வைத்துக் கொள்வார்கள் என்று அபரித நம்பிக்கை இருந்தது. சிலநேரம் தொடர்ந்து வண்டி முன்னும் பின்னுமாக போய்க் கொண்டிருப்பதான உணர்வு நமக்கு ஏற்படும். கண்ணைத் திறந்து ஜன்னல் வழியாக பார்த்தால் வண்டி நிச்சய்ம் வெகு தொலைவு முன்னேற்றம் கண்டிருக்கும்.

அடிப்படையான பயிற்சிகளை ஒரு ஓட்டுநர் பள்ளியில் முடித்து லேர்னர் லைசன்ஸ் பெற்றிருந்தாள். ஆனாலும் வாரத்துக்கு ரெண்டு மூன்று நாள் விடிகாலையில் எழுந்து கார் ஓட்டும் பயிற்சிக்கு கிளம்பி விடுவாள். அப்போதெல்லாம் கூட பாதுகாப்புக்கு விநோத் செல்வான். உண்மையில் விநோத்துக்கே பாதுகாப்பில்லை. அவன் கண்ணை மூடி பிரார்த்தித்தபடியே பின்னிருக்கையில் அமர்ந்திருப்பான். ஆனாலும் கூடச் செல்வதால் அவள் மேலும் பாதுகாப்பாய் இருப்பதாய் அவனுக்கு ஒரு நினைப்பு.

ரொம்ப பயம் அதிகமாகும் போது விநோத் லேசாய் கிண்டலடிக்க ஆரம்பிப்பான். பின்னர் தன்னம்பிக்கை அதிகமாக இன்னும் காரமாய் அவளை கேலி செய்வான். அவள் அவனை விட ஒன்றரை அடி உயரம் குறைவு. அவளுக்கு பிரேக் போட காலுக்கு கட்டை வைக்க வேண்டும் என்பான். அப்போது அவளுக்கு கோபத்தில் ஆக்சிலேட்டரை மேலும் மிதிக்கத் தோன்றும். சில காலைகளில் விநோத் என்னையும் பேச்சுத் துணைக்கு அழைத்து செல்வான்.

விநோத் இருந்தால் வீட்டைச் சுற்றி நாலு தெருக்கள், கண்டோண்ட்மெண்ட் சாலை அங்கிருந்து டிரங்க் ரோடு இப்படி வந்து திரும்பி விடுவார்கள். ஆனால் அதற்கே சாலை ஏதோ மந்திரக் கம்பளம் போல பறக்கும். ஒருநாள் விநோத் அனுவின் சின்ன வயது பற்றி சொன்னான். அவளுக்கு சின்ன வயதில் ஆண்களின் முரட்டுத்தனமான விளையாட்டுகள் தான் பிடிக்கும். கௌபாய் வேடமணிந்து குதிரை மீது போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. ஒருநாள் விநோத்துடன் தகராறு செய்த மேல்வகுப்பு பையனை ஸ்கூல் வேனில் இருந்து கீழே தள்ளி விட்டு அப்பையனுக்கு மண்டை உடைந்து போனது. இதையெல்லாம் அவனுக்கு எதோ கிண்டல் என்று தான் பேசி வந்தாலும் அவளது விவாகாரத்து மீதான புகாராகத் தான் எனக்குப் பட்டது. விநோத் தான் தன் அக்காவைப் போன்றும் அக்கா தன்னைப் போன்றும் இருந்திருக்கலாம் எனவும் ஆசைப்பட்டிருக்கக் கூடும். அந்த விசனமாகவும் இருக்கலாம்.

விநோத் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது நாங்கள் சற்று அதிக தூரம் வழக்கத்துக்கு மாறாக வந்து விட்டிருந்தோம். விநோத்தும் பேச்சு ஆர்வத்தில் அவளை வீட்டுக்கு திரும்ப அதிகம் வற்புறுத்தவில்லை. நாங்கள் மல்லேப்பள்ளி பக்கசாலை வழி கூகன் பேகரி கடந்து ஆசிப் நகர்-கர்வான் சாலையை பிடித்து என்.எம்.டி.சி வழியாக மசாப் டேங்க் ரோட்டுக்கு வந்திருந்தோம். அங்கிருந்து சரோஜினி தேவி கண் ஆஸ்பத்திரி கடந்த போது அவள் வண்டியை வேகம் குறைத்து ஓரிடம் சுட்டினாள். “இங்கே ஒருவன் துப்பாக்கி விற்கிறான்” என்றாள். விநோத் ஒருநொடி பேச்சை நிறுத்தி தொடர்ந்தான். அவன் மனதில் அது பதியவில்லை. ஆனால் எனக்கு அவளுடன் தனியாக ஒருநாள் காரில் வரும் விருப்பம் தோன்றியது.

ஒருநாள் காலை நான்கரைக்கே வண்டியெடுத்தோம். விநோத் வேலையில் இருந்து நடுராத்திரி திரும்பினவன் நன்றாக உறங்கிப் போயிருந்தான். எனக்கு இரவில் அடித்த சரக்கு வயிற்றுக்கு ஒத்து வராமல் அவஸ்தை கொடுக்க தூக்கமில்லாமல் விடிகாலையில் மெல்ல அசந்து போகத் துவங்கி இருந்தேன். சூடான லெமன் டீயுடன் எழுப்பி விட்டு கூட அழைத்துப் போனாள்.

நெக்லஸ் ரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தோம். அரைவெளிச்சத்தில் நிறைய பேர் சுறுசுறுப்பாய் நடைபழகுவது, வேடிக்கைப் பார்ப்பது, பேசுவது, வியப்பது, சோம்பல் முறிப்பது என அலுவலகத்தில் போல பிஸியாக இருந்தார்கள். அனு கையில்லாத இளநீல கதர் குர்தாவும் பருத்தியிலான வெள்ளை முக்கால் பேண்டும் அணிந்திருந்தாள். அந்த வெடவெடக்கும் குளிரில் அவளது மெல்லிய காற்றில் நடுங்கும் ஆடையை பார்க்க எனக்கு இன்னும் அதிகமாக குளிர்ந்தது. நான் அனுவிடம் பொதுவாக அவளது அலுவலகம், அந்த ஊர் உணவகங்கள், புதிதாய் வந்த நடிகைகள், ஹார்டு ராக், மெட்டாலிக்கா, என் இலக்கிய லட்சியங்கள், புகார்கள் என ஏதேதோ திசைமாறி பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு கல்யாணங்களில் வந்து எங்களது பரஸ்பர வெறுமைப் பார்வைகளில் தொட்டு நின்றது. “நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கவில்லை?” என்று கேட்டாள். இது பெண்களால் கேட்கப்படும் ஆக ஆபத்தான கேள்வி. நான் கவனமாய் சாவகாசமாய் மோவாயை சொறிந்து கருவிழியை மேலே தூக்கி சொருகின பார்வையுடன் அலட்சியமாய் பெண்களால் என்றுமே என்னை புரிந்து கொள்ள முடியாது என்று விளக்கினேன். அனு அத்தனையையும் கவனிப்பது போல் கவனிக்காதிருந்து விட்டு என்னைப் பற்றி என்னிடமே ஒரு சம்பவம் சொன்னாள். என்னை வெறுக்கும் பல சகஎழுத்தாளர்களில் ஒருவன் குடிபோதையில் யாரிடமோ உளறி அது விநோத் மூலமாக அவளுக்கு போயிருக்கிறது. அல்லது அது எல்லாரும் பரவலாய் அறிந்த, ஒருவேளை நானாகவே பலமுறை பல இடங்களில் எழுதி மறந்து போன ஒரு கதையாக இருக்கலாம். அனு சொல்கிறாள்:

“உங்களைப் பற்றி ஒரு சம்பவம் கேள்விப்பட்டதும் வேறொன்றை உங்களிடம் பேச வேண்டும் என எனக்கு தோன்றியது”

“முதலில் என்ன கேள்விப்பட்டாய் என சொல்”

“ஒரு பெண் உங்கள் வாசகி உங்களைக் காண விரும்புகிறாள். அவள் மேல்தட்டை சேர்ந்தவள். இளம் மனைவி. நீ அவளை ஒரு ஐந்து நட்சத்திர பாருக்கு வரச் சொல்கிறாய். அவள் கணவன் முற்போக்கானவன். அவனாகவே அவளை அழைத்து வந்து பாரில் விட்டு போகிறான். உங்களை அவள் வந்து சந்தித்த கொஞ்ச நேரத்தில் நீங்க அவளை தகாத இடங்களில் தொட்டு அசிங்கப்படுத்துகிறீர்கள். அவள் உங்களை கோபத்தில் அறையும் தைரியமில்லாமல் அதிர்ச்சியில் அங்கிருந்து வெளியேறி விடுகிறாள். பின்னர் அப்பெண்ணை உங்களிடம் அறிமுகப்படுத்தின இலக்கிய நண்பனிடம் போய்ச் சொல்லி அழுகிறாள்.”

“சரி என்னை மானங்கெட்டவன், ஒரு தாய்க்கு பிறக்காதவன் என வைது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடேன்”

“ச்சே அதற்கில்லை. நீங்கள் அப்பெண்ணிடம் எப்படியும் நடந்து கொள்ளுங்கள். அது அவளது பிரச்சனை. நான் சொல்ல வந்தது ஒரு பெண்ணை எந்தவிதத்திலும் புரிந்து கொள்ளவே முடியாத பல நூறு ஆண்களில் நீங்களும் ஒருவர் என சொல்லவே”

“இலக்கிய மொழியில் காறித் துப்பினால் அது வேறாகி விடாது அனு”

“உங்களுக்கு உலகமே உங்களை தூற்றுவதாய் கோருவதில் ஒரு த்ரில்”

“இருக்கட்டும். சரி ஒட்டுமொத்தமாய் ஆண்கள் பெண் மனதை அறியும் நுண்ணுணர்வு இல்லாதவர்கள். உன் கணவனைப் போல்”

“இல்லை என் கணவர் ரொம்ப மென்மையானவர், கண்ணியமானவர். ஒழுக்கம் நியாயம் இதையெல்லாம் ஆழமாய் நம்பி செயல்படுகிற வகையறா அவர்”

“எனக்குத் தெரிந்த விவாகரத்து ஆகிறவர்கள் கணவனை பழிப்பார்கள். நீ ஏதோ சீரியலில் வரும் நல்ல மனைவி போல பேசுகிறாய்”

அவள் க்ளுக்கென்று சிரித்து விட்டு தொடர்ந்தாள் “நிஜமாகவே என் கணவர் ரொம்ப நல்லவர் தான்.”

“சரி புரிகிறது. நீ என் வகை. உனக்கு கெட்டவர்கள், கெட்ட காரியங்கள் தான் முழுதிருப்தி தரும். ஸோ உன் கணவரின் அம்மாஞ்சித்தனம் நல்லபிள்ளைத்தனம் ஒரு கட்டத்தில் ரொம்ப போரடித்து விட்டது. பிரிந்து விட்டாய்”

“ஏன் சார் எங்கேயாவது மனைவிக்கு கணவன் நல்லவனாய் இருப்பது போரடிக்குமா?”

“சரி புரியல, ஐ கிவ் அப்.” இருகைகளையும் சரணாகதியாய் தூக்கினேன்.

அனு சொன்னாள், “எனக்கு இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல அரிக்கிறது. ரொம்ப நாளாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரே பிரச்சனை கேட்கிற யாரும் என்னை நம்ப மாட்டார்கள், அறிவுரை கூறுவார்கள் என்பது. உங்களைப் பார்த்தால் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. விநோத் அந்த கதையை சொன்ன பிறகு எனக்கு அந்த எண்ணம் உறுதிப்பட்டது”

“அதான் எனக்கு பெண்களைப் புரிந்து கொள்ளவே தெரியாது என்று விட்டாயே. இதை மட்டும் தமிழ்நாட்டில் என் வாசகர்கள் கேட்டார்கள் என்றால் அங்கே பெரும் கலவரமே வெடிக்கும். கொதித்து போய் விடுவார்கள். என் வாசகர்களைப் பற்றி உனக்குத் தெரியும் இல்லையா?”

“இப்படியெல்லாம் எதுக்கெடுத்தாலும் என் வாசகர் படை ரசிகர் கூட்டம்ன்னு கட்டபொம்மன் வசனம் பேசுவீங்க என்று கூட விநோத் சொன்னான். உங்க ரசிகர்களில பாதி பேர் உங்களை திட்டி எதனாச்சும் எழுதுவாங்கன்னும், மிச்ச பாதி பேர் அவங்க எழுதிறத படிச்சுட்டு திரும்ப திட்டுவாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கேன். அதனாலத்தான் அவங்களே பொதுவா உங்க புக்ஸ் எதுவும் படிக்கிறதில்லியா?”

எனக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் அழகான பெண்களை மட்டும் கொல்லத் தோன்றாது. குறிப்பாக ரொம்ப பக்கத்தில் கழுத்தை நெரிக்கிற வாகில் இருந்தாலும்.

“சரி கூல் டவுன். ஆனாலும் உங்களால என்னை புரிஞ்சுக்க முடியும்னு தோணிச்சு ”

“ஏன்?”

“அதை கடைசியில சொல்றேன். ஏன் என் கணவனை விவாகரத்து பண்றேன்னு தெரியணுமில்ல?”

“ஓ அவர் உங்களை விவாகரத்து பண்ணலையா?”

“இல்லை நான் தான் initiator. என்னால தான் அவர் கூட தொடர்ந்து வாழ முடியல”

“ஒகெ. ஏன்?”

ஒரு சின்ன வளைவில் ஒடித்து திருப்பியதில் ஒரு சின்ன பையன் பயந்து சைக்கிளை கீழே போட்டு மறுபக்கமாய் சாய்ந்து விழுந்தான். கியர் மாற்றி முன்னே பாய ஒரு சோன்பப்பிடி தள்ளு வண்டிக்காரன் எதிரே வந்து விழுந்தான். இந்த குழப்படி எல்லாம் மாறி சற்று தூரம் வந்ததும் அவள் சொன்னாள்.

“எங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளாய் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தது. அவர் என் காரியத்தில் ரொம்ப புரிதலோடு நடந்து கொள்வார். நிறைய சுதந்திரம் தருவார். எனக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள பயம் இருந்தது. அதனாலே செக்ஸை தள்ளிப் போட்டுக் கொண்டு வருவேன். அவர் ரொம்ப இறங்கி வந்து கருத்தடை சாதனங்கள் பயன்படுத்த ஒத்துக் கொண்டார். ஆனால் எனக்கு அதிலும் குற்றவுணர்வு இருந்தது. விளைவாக நாங்கள் வருடத்துக்கு ஒன்றிரண்டு வாரங்கள் தவிர மீத நாட்கள் சகோதர சகோதரி போலத் தான் வாழ்ந்து வந்தோம். அந்த விதிவிலக்குகளினால் கூட நான் கருத்தரிக்க வில்லை”

“குழந்தை இல்லாதது உங்களுக்குள் கசப்பை ஏற்படுத்தியதா?”

“ச்சே. அவர் குழந்தை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை என்றார். அந்தளவுக்கு நல்லவர். இது தான் எனக்கு சொல்லப்போனால் மனதுக்கு அதிக கஷ்டம் தந்தது. அப்புறம் நான் அவரை மெல்ல மெல்ல வெறுக்க ஆரம்பித்தேன். எங்களுக்குள் அதுவரை ஆவேசமான காதல் ஒன்றும் இல்லை தான். அவர் என்னை கல்யாணம் பண்ணும் போதே முப்பத்தைந்து தாண்டியிருந்தார். ஆனால் எங்களுக்குள் ஒரு அபாரமான ஒத்திசைவு, அணுக்கம், மென்மையான அன்பு கூட இருந்தது. நன்றாக ஓடும் எந்திரத்தின் இரு பாகங்கள் போல எனலாம். நான் ஒருவர் ஒருவருக்கு தேவையாக இருந்தோம். இச்சை கடந்த ஒரு பரிவும் ஈடுபாடும் ஒட்டுதலும் எங்களிடையே இருந்தது. குறிப்பாக அவருக்கு என் மீது அளவு கடந்த பாசம். ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் இந்த தோற்றத்தை தக்க வைக்க முடியவில்லை. வெறுத்து விட்டது. இனியும் அவருடன் இருந்தால் என்னையே நான் வெறுக்க நேரிடும் எனத் தோன்றியது.”

“ஒருமுறை அவருக்கு உடம்பு முடியாமல் போய் படுத்த படுக்கையானார். நான் அப்போது உள்ளூர அவர் இறந்து போவதை விரும்பினேன். அவருக்காக ஓடியாடி கவனித்து பார்த்துக் கொண்டிருந்தாலும் உள்ளூர இதயம் அவரது மரணத்தை எதிர்பார்ப்பதை உணர்ந்தேன். அதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ரொம்ப கொடுமையான விசயம் இது. ஒருவரை ரொம்ப நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் அவர் செத்துப் போக வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகிறோம். இந்த எண்ணம் தோன்றிய பின் அவரை பழைய படி அணுக உறவு கொள்ள என்னால் சுத்தமாக இயலவில்லை. இயல்பாக ஒரு பார்வை பார்க்கும் போதே இதயத்தில் சுருக்கென்று வலி தோன்றும்.”

“கொஞ்ச நாட்கள் போனதும் எனக்கு வேறொன்று தோன்றியது. எனக்கு என் வயதாகி வரும் உடல் மீதுள்ள ஆற்றாமையை அவர் மீது வெறுப்பாக காட்டுகிறேனோ என்று. எப்படியோ அவர் மீது முன்னெப்போதையும் விட அப்படி கசப்பை கொட்ட துவங்கினேன். அவர் மீது கோபப்பட எனக்கு ஆயிரம் சந்தர்பங்கள் காரணங்கள் கிடைத்தன. அவரும் போகப் போன என்னிடம் ஆத்திரம் கொள்ளவும் என்னை அடித்து துன்புறுத்தவும் தொடங்கினார். எங்களிடையேயான உறவு அப்படியே ஒட்டுமொத்தமாய் மாறிப் போனது. ஒருநாள் நான் அவர் அழைக்க அழைக்க கேட்காமல் வரவேற்பறையில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்தேன். தண்ணீரை கொதிக்க கொதிக்க என் காலில் கொண்டு வந்து கொட்டினார்.”

அப்போது தான் அவளது இடது முழங்கால் முழுக்க கரும் தடம் இருந்ததை கவனித்தேன். இத்தனை நாள் எப்படி பார்க்காமல் விட்டேன்? ஒருவேளை இன்றெனக்கு காட்டுவதற்காக முக்கால் பேண்ட் போட்டு வந்திருக்கிறாளோ?

“அவர் அப்படியெல்லாம் செய்யக் கூடியவரல்ல. ஆனால் என்னுடைய கசப்பு தாங்காமல் அவரையும் மெல்ல மெல்ல அப்படி மாற்றியிருந்தேன். அல்லது அவருக்கும் என் மீதுள்ள வெறுப்பு ஒருநாள் பட்டென்று பொறி தட்டினாற் போல் புரிய வந்திருக்கும், எனக்கு நேர்ந்தது போல. எப்படியோ, அந்த சம்பவத்தோடு வீட்டை விட்டு போட்ட துணியோடு இங்கே தம்பி வீட்டு வந்து விட்டேன்.”

“உங்களுக்குத் தெரியுமா, என் கணவருடன் சண்டைகள் உச்சத்தில் இருந்த போது அலுவலகத்தில் என சில கள்ள உறவுகள் கூட ஏற்பட்டன. அது கூட ஆசைக்காக அல்ல. என்னையே நான் சிதைத்துக் கொள்ள, அழுக்குப் படுத்திக் கொள்ளும் பொருட்டு. நமக்கு பயங்கரமாய் கோபம் வரும் போது இப்படி தேடித் தேடி நம்மையே காயப்படுத்துகிறோம் இல்லையே. அதை விடுங்கள், இந்த உறவுகளில் எதுவும் திருப்தி தரவில்லை. எதிலும் இச்சையோ அன்போ ஆதரவோ துளியும் தரத் தோன்றவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. பிறகு அவற்றையும் ஒவ்வொன்றாய் துண்டித்தேன். இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா?”

“ம்ஹும்”

“நீங்கள் அந்த பெண்ணிடம் நடந்து கொண்டதில் ஒரு நேர்மை இருந்தது. அது தகாததாய் அறமற்றதாய் இருந்தாலும் கூட. இப்போது உங்கள் இடத்தில் நான் இருந்தால் அப்படித் தான் நடந்து கொண்டுருப்பேன் எனத் தோணுகிறது. ஏன் எனத் தெரியவில்லை. ஆனால் அப்படித் தான் தோணுகிறது”

“ஹா ஹா அதனால் தான் என் வாசகர்கள் என்னை…”

“வேண்டாம் திரும்பவும் ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கு வாகர்கள் இருக்கிறார்களா அல்லது அதெல்லாம் சுத்தமாக உங்கள் கற்பனை மட்டுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது”

எனக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும் …. அடக்கிக் கொண்டேன்.

“ஆனால் ஒன்று. என்னதான் பெரிய பிரச்சனைகள் மாற்றங்கள் வந்தாலும் பெண்கள் சுலபமாக வெளிவந்து விடுகிறீர்கள். உன் கணவன் இந்நேரம் மறுகி மறுகி செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருப்பார். நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுவது, சாப்பிடுவது, ஷாப்பிங் என கொண்டாடுகிறீர்கள்.”

“எதற்கு உட்கார்ந்து அழ வேண்டும்? இப்போது இன்னும் நிம்மதியாக இருக்கிறேன். இத்தனைக் காலம் உள்ளுக்குள் புழுங்கியதற்கு காரணம் நான் அவரை வெறுக்கிறேன் என்று அறியாதது தான். இப்போது பாருங்கள், என் வாழ்க்கையின் இரண்டாம் டீனேஜ் பருவம் துவங்கி விட்டதாகவே உணர்கிறேன். முதன்முதலாக என் மொத்த வாழ்க்கைக்கும் நானே இனி பொறுப்பு. கார் ஓட்டுவதில் இருந்து பணத்தை இன்வெஸ்ட் செய்வது வரை நானே பார்த்து பார்த்து சொந்தமாக செய்கிறேன். நானே தப்பு செய்து அதன் பலனையும் அனுபவிக்கிறேன். ஐ ஆம் ஸோ ஹேப்பி எபௌட் இட். ஸோ ரிலீவ்ட் இன் பாக்ட். ஒரு குழந்தையை தத்தெடுக்க போகிறேன். கல்யாணத்தின் போதென்றால் அவர் ஒத்துக்கவே மாட்டார். இனி யார் தயவும் தேவையில்லை”

“சரி அதை விடு. நான் வேறு ஒரு கதை சொல்றேன். பெண்கள் எவ்வளவு சுயநலவாதிகள்னு உனக்கு அதைக் கேட்டாலே புரியும்”

”உம்”

“குணசேகர்னு ஒரு ரெண்டு பேர் இருந்தாங்க.”

“வாட் ஒரே பேரில ரெண்டு பேரா?”

“ஆமா ஒருத்தன் பேரு குணா. இன்னொருத்தன் சேகர். ஒரே வேலையை ரெண்டா பகிர்ந்து போட்டு பண்ணுவாங்க. இவன் தோசை வார்த்தா அவன் சட்னி அரைப்பான், இவன் துணி துவைச்சா அவன் காய போடுவான். இவன் படுக்கை விரிச்சா அவன் தூங்குவான். அவன் நகம் வளர்த்தா இவன் வெட்டி விடுவான். ரெண்டு பேரும் பேராசிரியர்கள்.வகுப்புக்கும் சேர்ந்து தான் போவாங்க. இவன் நோட்ஸை வச்சு அவன் வகுப்பில பேசுவான். திடீர்னு பேச்சை நிப்பாட்டினா விட்ட இடத்துல இருந்து அவன் பேசுவான்.. எங்கப் போனாலும் சேர்ந்தே சுத்துவாங்க, எதையும் சேர்ந்தே செய்வாங்க. கடைசியில ரெண்டு பேரும் ஒரே பெண்ணை காதலிச்சாங்க.”

“ஓ”

“அவள் பேரு சுகுணா. இவளோடு ரெட்டை பேராசிரியர்கள் சேர்ந்து வாழத் தொடங்கினாங்க.”

“பிறகு ரெண்டு பேருக்குள்ளும் மனஸ்தாபம் வந்து அவளுக்காக சண்டை போட்டாங்களா?”

“அதான் இல்லை. மூணு பேரும் சுமூகமா ரொம்ப வருடங்கள் சேர்ந்தே வாழ்ந்தாங்க. ஒரு குழந்தையும் பிறந்திச்சு, அது தன்னோட குழந்தைன்னு குணா சொல்லிக்கிட்டான். சேகரும் மறுக்கவில்லை. ஆனால் பிற்பாடு ஒரு ஒருநாள் சுகுணா சேகரோட சேர்ந்து தனியா வேறு ஊருக்கு வேலை வாங்கி போய் விட்டாள்”

“அப்போ குணா?”

“அங்கே தான் ட்விஸ்டு. குணாவை அவங்க சேர்த்துக்கல. அவன் தொடர்ந்து சண்டை போட்ட போது அவங்க அவனுக்கு எதிரா வழக்கு தொடுத்தாங்க. அதாவது அவனுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவனுக்கு மனநலம் இல்லை, பைத்தியம் அப்படீன்னு வழக்கில சொல்லி இருந்தாங்க, இப்போ குணாவுக்கு தான் சுகுணாவோட கணவன்னு நிரூபிக்கவோ தான் அவங்களோட தான் இத்தனை ஆண்டுகளா இருந்தேன்னு காட்டவோ எந்த ஆதாரமும் இல்லை. அவனுக்கு ஒருநாள் தன்னந்தனியா நடுக்காட்டில கொண்டு வந்து விட்ட மாதிரி ஆயிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியல. அவன் அவங்க கூட தான் இருந்தான்கிறதுக்கு ஒரே ஒரு சின்ன ஆதாரம் கிடைச்சா போதும்னு தேடினான். அப்படித் தான் ஒருநாள் என்னைத் தேடி வந்தான்.”

“நான் அப்போது ஒரு நிறுவனத்தில் சில மாதங்களா வேலை பார்த்து வந்தேன். நான் வாழ்க்கையில பார்த்த ஒரே வேலையும் அது தான். அந்த நிறுவனம் ஒரு பெரிய நவீன தமிழ் மாநாடு நடத்தியது. அதில குணா, சேகர், ரெண்டு பேரும் பங்கெடுக்க வந்திருந்தாங்க. சுகுணாவும் கூட வந்திருந்தா. எங்க பத்திரிகை நிர்வாகம் தான் அவங்களுக்கு தங்கிறதுக்கு ஓட்டல் அறை ஏற்பாடு செய்தது. அந்த ஓட்டல் அறைக்கு கட்டணம் செலுத்தின ரசீது கிடைக்குமா எனக் கேட்கத் தான் என்னைத் தேடி அன்னைக்கு குணா வந்திருந்தான். அந்த ரசீதை வச்சு நீதிமன்றத்தில குழந்தை தன்னோடதுன்னு நிரூபிக்க முடியும்னு அவன் நம்பினான். ஆனால் கேஸ் தோத்துப் போச்சு. அது வேற விசயம். அவன் நெலைமை பார்க்கவே ரொம்ப மோசமா இருந்துது. குளிச்சு வாரங்கள் இருக்கும். அழுக்குத் தாடி, அழுக்கு வேட்டி, குழி விழிந்த கண்கள், சாப்பாடே இல்லாமல் வெறும் சாராயத்தில் ஓடும் தேகம். அவனை உரசிக் கொளுத்தி விட்டால் பற்றிக் கொள்ளும், அப்படி உடமெல்லாம் ரத்தத்துக்கு பதில் வெறும் ஸ்பிரிட் தான். பேச்சு ஒரே குழறலாக இருந்தது. அவனை முன்பு முற்றிலும் வேறொருவனாக பார்த்திருக்கிறேன். அன்று சீரழிந்து குற்றுயிராக இருந்தான். அவன் உயிரோடு இருந்ததே அந்த ரசீதுக்காகத் தான் போலிருந்தது.

பிறகு நான் அவனைப் பார்க்கவே இல்லை. அவன் என்ன குற்றம் செய்தான் சொல்? குடும்பம், குழந்தை எல்லாவற்றையும் இழந்து நிராதரவாய் நிற்பதற்கு.”

அவள் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னாள் “அன்பு காட்டுவது கூட ஒரு குற்றம் தானே. ரொம்ப அன்பிருந்தால் அப்படியே அழிந்து போக வேண்டும். இல்லாவிட்டால் பாதியிலே தப்பிக்க வேண்டும். என்னைப் போல்”.

நாங்கள் காலை பதினோரு மணி வரை லும்பினி பூங்கா, பிர்லா மந்திர் என சுற்றி விட்டு ஹுசேன் சாகர் ஏரியில் படகில் போனோம். அவளுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த இடங்கள். எனக்கு சுற்றுலாத் தலங்களில் ஆர்வமில்லை. ஆனால் தன்னை ஒரு சுற்றுலாப் பயணியாக கற்பனை பண்ணிக் கொண்டு அங்கு திரிய அவளுக்கு விருப்பமாக இருந்தது. படகில் இருக்கையில் ஏரியின் நடுவில் உள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலையின் நிழல் நீரில் அலையாடுவது பார்த்ததும் எனக்கு ஏன் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது.

நாங்கள் வீடு வந்த போது விநோத் அலுவலகம் கிளம்பி இருந்தான். சுகுணா பெங்களூரில் தம் அம்மா வீட்டுக்கு முந்தின நாள் போயிருந்தாள். கொஞ்ச நேரத்தில் அனுவும் அலுவலகம் போன பின் நான் தூங்கிப் போனேன். திடீரென்று பள்ளிப்படிக்கும் காலத்தில் நடப்பது போல கனவு வந்தது. பரீட்சை எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் மாணவர்க்ளை என்னை பார்த்து பார்த்து கேலியாய் சிரிக்கிறார்கள். ஏனென புரியவில்லை. பிறகு நான் விடைத்தாளை கொடுக்க எழுந்திருக்க பார்த்தால் முடியவில்லை. இடுப்புக் கீழே நான் எந்த உடையும் போடவில்லை. அசிங்கத்தில் அப்படியே குன்றிப் போகிறேன். சட்டென்று விழித்து அடச்சே என்று பிரிட்ஜில் இருந்து குளிர்நீர் குடித்துக் கொண்டிருந்த போது வாசல் மணி அடித்தது. அனு. பாதி விடுப்பெடுத்து வந்திருந்தாள்.

மதிய உணவு அவள் தான் சமைத்தாள். அட்டகாசமான சாப்பாடு. பிறகு கொஞ்சம் வெளிநாட்டு விஸ்கி. அப்படியே பேசிப் பேசி…இரவெல்லாம் அவள் என் அறையில் அமர்ந்து குடித்தும் சாப்பிட்டும் கொண்டிருந்தாள். இப்படியான சுதந்திரம் எல்லாம் ஒரு பெண்ணுக்கு திருமணத்தினால் எப்படி கிடைக்காமல் போகிறது என்று ஒரு குட்டி பிரசங்கம் நடத்தினேன்.

மறுநாள் காலையில் விழித்ததும் அவளைக் காணோம். எதிரே ஒரு நாற்காலியில் விநோத் அமர்ந்திருந்தான். நான் விழிக்க காத்திருந்தது போல் என் பொருட்களை எடுத்து பையில் திணித்து வாயில் கதவருகே கொண்டு வைத்தான். எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே விளங்கவில்லை. பல்தேய்ந்து மூஞ்சி அலம்பி கடுப்பமாய் ஒரு காபி குடித்து விட்டதும் அவன் என்னை அழைத்து தன் அக்காவுக்கும் மாமாவுக்கும் சண்டையை கிட்டத்தட்ட சரி பண்ணி விட்டதாயும் அவர்கள் சீக்கிரமே சேர்ந்து விட வாய்ப்பிருப்பதாகவும் அதை நான் அங்கு இருந்தால் அதைக் கெடுத்து விடுவேன் என்றும் சொன்னான். சுருக்கமாக என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் போகிறான்.

நான் கோபத்தில் நான் கட்டியிருந்த அவனது லுங்கியை அவிழ்த்து அங்கேயே அவனிடம் கொடுத்து விட்டு என் படுக்கை மீது கிடந்த ஜீன்ஸை போட்டு அவசரமாய் கிளம்பினேன். பையை தூக்கி வெளியே வந்து அவனை நோக்கி சில வசைச் சொற்களைக் கூவினேன். நடந்தே அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்தேன்.

பேருந்து நிலையத்தை அடைந்த போது தான் பேண்ட் இடுப்பில் லூசாக இருப்பதும் அதை நான் அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். என்ன கண்றாவிடா இது என்று இடுப்பு பெல்டை இறுக்கப் பார்த்தால் ஏதோ வித்தியாசமாக இடுப்பே பெரிசாக இருந்தது. “அட இது என்னதில்லையே, அனுவுடையதாச்சே!”

தொலைவில் வினோத் என்னை நோக்கி கத்தியபடி அரை ஓட்டத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு ஜீன்ஸ் தொங்கியது. பயத்தில் முதலில் வந்த ஏதோ ஒரு ஊருக்கு போகிற பேருந்தில் தொத்திக் கொண்டேன்.

ரொம்ப நேரமாக படபடப்பாக இருந்தது. பேருந்தில் ஒரு தொப்பை தள்ளிய ஆசாமி என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அடிக்கடி குனிந்து யோசித்து மீண்டும் என்னை பார்த்து ஏதோ சரி பார்ப்பது போல் பார்த்தார். அவருக்கு பெரிய வழுக்கை. அதில் நீண்ட நாமம். ஜெமினி கணேசன் மீசை. அடர் சிவப்பு சட்டையை இறுக்கமாய் மாட்டி இருந்தார். என்னை நோக்கி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். நான் தலையாட்டினேன். ஒரு தேசலான தலையாட்டல். என் பெயரை சொல்லி நீங்க எழுத்தாளர் தானே என்றார். மீண்டும் தயக்கமாய் தலையாட்டி உம் என்றேன். உடனே கையை பிடித்துக் கொண்டார். மகிழ்ச்சியாய் குலுக்கினார். என்னுடைய தீவிர விசிறி என்றார். பல டிவி நிகழ்ச்சிகளில் என்னை பார்த்துள்ளதாய் சொன்னார். நான் என் வாசகர்களை அழைத்துக் கொண்டு சிக்கன், தயிர்சாதம் மற்றும் பலவித மதுவகைகளையும் எடுத்துக் கொண்டு ஏதேனும் ஏரியில் பயணம் போவேன். ஆளாளுக்கு சாப்பிட்ட இடத்தை எச்சில் பண்ணி அலம்பல் பண்ணி விட்டு கடைசியில் என்னை ஏதேனும் உன்னதமாய் இலக்கியம் பற்றி பேசச் சொல்லி டார்ச்சர் பண்ணுவார்கள். நான் பேச ஆரம்பித்ததும் ஆளாளுக்கு அசந்து தூங்குவார்கள். ஆனால் அதற்கு முன் நான் பேசுவதை அவர்கள் ஆர்வமாய் உட்கார்ந்து கேட்பது போல் புகைப்படம் எடுத்துக் கொள்ள தவற மாட்டார்கள். இப்படியான என் சந்திப்புகளில் கலந்து கொள்ள அவர் ஆசைப்பட்டதாகவும் ஆனால் ஒரு போதும் நிறைவேறவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். ஆனால் கடவுளே இப்போது என்னை அவர் அருகில் பேருந்தில் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாய் கண்நிரம்பினார். சரி போகட்டும் என விட்டு விட்டேன்.

அவரைப் பற்றி விசாரித்தேன். சொந்தமாய் ஐந்து எஸ்டேட்டுகள் ஊட்டியிலும் கர்நாடகாவிலும் உள்ளதாயும் ஹைதராபாதில் ரியல் எஸ்டேட் பண்ணுவதாயும் கூறினார். சரி, நல்லது, என் வாசகராய் இருக்க தகுதி கொண்டவர் தான். ஆனால் பயங்கர எளிமையாம். பஸ்ஸில் தான் போவாராம். நான் அதற்கு நேர்மாறானவன். முப்பது வருடங்களுக்கு பின் இப்போது தான் மீண்டும் பஸ்ஸில் போகிறேன் என்றேன். அவர் வாயில் கை வைத்து வியந்தார். பஸ்ஸில் போவது ஒரு மத்திய வர்க்க சராசரி மனநிலை, அதை ஒழிக்க வேண்டும் என்றேன். அவர் தலையாட்டினார். நான் பேட்டா ஷூவின் மத்தியவர்க்க சராசரித்தனம் பற்றி எழுதியுள்ளதை படித்துள்ளதாய் பரவசத்துடன் கூறி மீண்டும் பூம்பூம் மாடு போல் தலையாட்டினார்.

நிறுத்தாமல் பேசிக் கொண்டே வந்தார். அவர் மனைவி பயங்கர் டார்ச்சர் கேஸ். அவருக்கு கள்ள உறவுகள் உள்ளதாய் சந்தேகித்து உளைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பாளாம். அவளை உளவியல் மருத்துவரிடம் காட்டினாராம். ஆனாலும் சரியாகவில்லை. விவாகரத்து பண்ணிக் கொண்டார்கள். இப்போது தனியாக ஜாலியாக இருக்கிறார். அவருடன் ரெகுலராய் உறவு கொள்ள சில திருமணமான பெண்கள் அவர்களாகவே விரும்பி வருகிறார்கள். தேவையானது “எல்லாம்” கிடைக்கிறது என கண்களை ஒருமாதிரி பண்ணி சொன்னார். எனக்கே பொறாமையாக இருந்தது. தாராள செக்ஸ் பற்றி இவ்வளவு எழுதுகிறேன். எனக்கு எல்லாம் எழுத்தில் மட்டும் தான் நடக்கிறது.

அவருக்கு தனது தற்போதைய வாழ்க்கை பற்றி நிறைய குற்றவுணர்வு இருந்தது. இப்போது தொடர்பில் உள்ள பெண்கள் தன் மீது ஆசையில் இல்லாமல் வேறு காரணங்களுக்காக தன்னிடம் வருவதாய் குற்றச்சாட்டினார். அவர் வீட்டில் சென்று அவருடன் நான் தங்க வேண்டும் என கேட்டார். அவர் சொன்னதை வைத்துக் கேட்க கிளுகிளுப்பான அழைப்பாக இருந்தது. உம் உம் என்றேன். “சரி பெண்கள் எப்படிப்பட்டவங்க என்கிறதை பத்தி நான் இப்ப ஒரு கதை சொல்றேன், கேளுங்க” என்று ஆரம்பித்தேன்.

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *