புயலின் மறுபக்கம்.!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2013
பார்வையிட்டோர்: 8,295 
 
 

பிரளயம் தன் கோர தாண்டவத்தை அரங்கேற்றிச் சென்றதைப்போல காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருநகரம்.

மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.

மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்..,

வீசிய காற்றில் சாம்பல்புழுதி,வீதிநெடுக இருபுறமும் எரிந்து அடங்கிய பின்னும் கடைகளுக்குள் மிச்சமிருந்த கருகியநெடி…போக்குவரத்தற்ற சாலைகளின் பரப்பில் எழும்பிக் கொண்டிருந்த கானல்..,
‘நகரத்தின் இயக்கத்திற்கும்,தொழிலுக்கும் முதுகெலும்பாய் நேற்றுவரை இருந்தது இந்த இடம்தானா..?’

நொடியில் மாறும் திரைப்படக் காட்சிபோல ஒரேநாளில் இந்நகரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது எது..?

மதக்கலவரத்தின் கோரமுகம் நிதர்சனமாய் முகம் காட்ட,மேனியெங்கும் சிலிர்த்து அடங்கியது தேவகிக்கு..

காலையில் நடந்த கலவரத்தில் உறவுகளைப் பலி கொடுத்த அப்பாவிமக்களில் ஒருத்தியாக,தனது கணவனைப் பறிகொடுத்தவளாக..இப்போது அரசு மருத்துவமனை வளாகத்தில்,கணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள பிணவறை முன்பு காத்திருக்கிறாள்..

அந்த மருத்துவமனையில்,உயிரற்றுப் போன நகரத்தின் அமைதிக்கு எதிர்மாறாய் சந்தடிகள் நிறைந்திருந்தது.அனால் அதில் உற்சாகக் குரல்களோ, உவகைத் துடிப்புகளோ எதுவுமின்றி திரும்பிய பக்கமெல்லாம் ஒப்பாரியும் கேவல்களுமாய் மனிதர்கள்..

இன்று காலையில் வழக்கம்போல “போய்வருகிறேன்”என்று வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற கணவன் வழயிலேயே மடக்கப்பட்டு,வெட்டிக் கொல்லப்பட்டதும்.கை,கால்,கழுத்து என பல இடங்களும் சின்னாபின்னமாய் இருந்த உடலை அடையாளம் காட்ட போலீசார் அழைத்து வந்ததும்,யாரோ இயக்கிவைத்தது போல அடுத்தடுத்து நடந்து முடிந்திருந்தது.

வாய்விட்டு கதறி அழுது புரண்டதில் தொண்டையும் உடம்பும் வலித்தது.

பிணவறை முன்பு நின்று வெகுநெரம் அழுது ஓய்ந்தபின், சற்றுத்தள்ளி பிரம்மாண்டமாய் விருப்பு வெறுப்பின்றி எல்லாதிசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பியிருந்த அந்த மரத்தின் நிழலுக்கு வந்து,குத்துக்காலிட்டு,அதில் முகத்தைப் புதைத்து அமர்ந்து கொண்டாள் தேவகி. அவ்வப்போது கணவனின் நினைவுகள் வந்து மனதைப் பிழிய முதுகு குலுங்கி அழுவதும், சமனப் படுவதுமாயிருந்தாள்.

நாசக்கேடான இப்படியொரு சூழ்நிலை தன் வாழ்வில் விடியும் என்று அவள் கனவிலும் கண்டதில்லை. “நீ நாசமாத்தாண்டி போவே…” அம்மா ஆத்திரம் கொப்பளிக்க கத்தியது நினைவுக்கு வந்தது.
தான் காதலித்தவனையே மணக்கப்போகும் உறுதியை பெற்றோரிடம் தெரிவித்தபோது அம்மா கொடுத்த ஆசீர்வாதம்..அதுதான் பலித்துவிட்டதா..? இப்போது என்நிலையை அறிந்து சந்தோஷப்படுவாளோ..? ஜெயித்தது அவளின் சாபமல்ல..யாரோ சிலரின் சுயநலம்தான் என்று உணர்வாளா..?.”

அப்பாவிற்கும் அம்மாவிற்கும், அண்ணனின் நண்பனாய் அறிமுகமாயிருந்த இவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னது பிடிக்கவேயில்லை.அண்ணாவிடம் சொன்னபோது அவனால் நம்பவே முடியவில்லை. “அவனும் உன்னைக் காதலிக்கிறானா..?”
“ஆமாண்ணா..”
நிஜமாவா..?…ஹூம்..படிக்கும் காலத்திலிருந்து அவனை நல்லாத் தெரியும்..” அவன் அப்படி எந்தப் பெண்ணிடமும் பழகமாட்டானே..” அவன் குரலில் நீங்காத ஆச்சரியம்.

“அவரா ஒண்ணும் இதை ஆரம்பிக்கலை..நானாத்தான் அவரை விரட்டி,மிரட்டி என் காதலை தெரிவிச்சேன். அவரும் எத்தனையோ காரணம் சொல்லி மறுத்துப் பார்த்தாரு.ஆனா நான்தான் விடாப்பிடியா இருந்து என் காதலை ஏத்துக்கிறதுக்கான நியாயங்களைச் சொல்லி சம்மதிக்க வெச்சேன். இப்ப அவரும் என்னைத் தீவிரமாக் காதலிக்கிறாரு…”

அண்ணன் சில விநாடிகள் என் முகத்தை ஆழமாகப் பார்த்தான். சாதகமான பதிலை எதிர்பார்த்து படபடப்போடு அவன் கண்களையே பார்த்திருந்தேன். அவனுடைய கொள்கைகளுக்கும்,நேர்மைக்கும் சோதனையாக நான் இப்போது அவன் முன் நின்றிருக்கிறேன்.
அவனுடைய கல்லூரிக் காலத்திலிருந்தே,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கல்லூரி விழாக்களிலும்.பொதுமேடைகளிலும் கனல்தெறிக்கப் பேசிப் பழகியிருந்தான்.அந்த ஆவேசம் குன்றாதவாறு கடடுரைகளும் எழுதி பத்திரிகைகளுக்கும் அனுப்பிவந்தான்.இவையெல்லாம்தான் எனக்கு தைரியமளித்ததோ.. தெரியவில்லை..,

அண்ணன் என்னை ஏமாற்றவில்லை.ஒரு புன்சிரிப்பு மூலம் என்வயிற்றில் பாலை வார்த்தான்.“வாழ்த்துக்கள்..தேவகி…!” என்றவன் “அதான் அந்த ராஸ்கல் முன்னமாதிரி இங்கே வர்றதில்லையா..? நானா வலியப்போய் பேசினாலும் முகம்பார்த்து பேசாம..எங்கேயோ பார்த்துட்டு பேசறானா..? ஹூம் கவனிச்சிக்கிறேன் அவனை..,” நட்பின் அதீத உறவில் செல்லமாய் கோபித்துக் கொண்டான்.
“சரி தேவகி..மேற்படி என்ன செய்யப்போறே..?
“நாங்க சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கப்போறோம்.நீதான் சப்போர்ட் பண்ணனும்.”
அண்ணன் ஆதரவாய் என் கையைப்பிடித்துக் கொண்டான்.

அம்மா,அப்பாவின் எதிர்ப்பைமீறி,எனது கல்யாணத்தின்போது ரிஜிஸ்டர் ஆபிசில் சாட்சிக் கையெழுத்தும் போட்டு, சென்னையிலிருந்து கோவைக்கு கூட்டிவந்து நண்பர்கள் மூலமாய் வீடும்,கணவனின் வேலையையும் இங்கேயே மாறுதலாக்கித் தந்தது என மளமளவென்று எல்லா ஏற்பாடுகளையும் அண்ணனே முன்னின்று செய்து தந்தான்.

அம்மாவோ இங்கு வீடுதேடிவந்து,மண்வாரித் தூற்றிப் போனாள். “நீ நாசமாத்தாண்டி போவே…”, அண்ணன்தான் “ கொஞ்சநாள் கழித்து எல்லாம் சரியாகும்.அதுவரை அம்மா அப்பாவை நீ பொருட்படுத்தாதே.”என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான்.
இப்போது அவனுக்கு சேதி தெரிந்தால் எப்படித் துடித்துப் போவான்.தங்கையின் விருப்பத்திற்காக பெற்றோரிடம் சண்டை போட்டவனாயிற்றே.வாழ்நாளெல்லாம் தேவகியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வான் என்ற உறுதியை தன்கணவன் சார்பாக எடுத்துச் சொன்னவனாயிற்றே..வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்து வாழத்துடித்தவர்கள் இப்படிப்பட்ட கலவரப்புயலுக்குள் மாட்டுவார்கள் என்று அண்ணன் எதிர்பார்த்திருப்பானா..? பாவம்.., நேற்றுவரை..ஏன் இன்று காலைவரை தேவகியேகூட அப்படி நினைத்திருக்கவில்லை.ஆனால் இப்போது திக்குத்தெரியாத காட்டில் தனித்துவிடப்பட்ட குழந்தையாய் மிரண்டுபோயிருக்கிறாள்.

அடுத்தது என்ன..? என்று யோசிக்கக்கூட திராணியற்று மனம் முழுவதும் மரத்துப் போயிற்று.அவளுடைய இரு கன்னங்களிலும் ஒழுகிக் காய்ந்திருந்த கண்ணீர்த் தடங்களில்,அப்பியிருந்த புழுதியை முந்தானையால் துடைத்தவளாய் தன்னைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரமாயிற்று என்று தெரியவில்லை.காலையில் இந்த அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தபோது,இருந்த மனிதர்களின் எண்ணிக்கை இப்போது பல மடங்கு பெருகியிருந்தது.
அத்தனையும் கலவரத்தில் இறந்தவர்களின் உறவு ஜனங்கள். குல்லாவும் தாடியும் கைலியுமாய், காவிவேட்டி கறுப்பு வெள்ளை வேட்டி பேண்ட் சட்டைகளுமாய் ஆண்களும்,வண்ணவண்ணப் புடவைகளும்,உடல் மறைத்த அங்கிகளுமாய் பெண்களும், கலந்து நிரவியிருந்த அத்தனைபேரின் முகங்களிலும் ஒரேமாதிரியான இழப்பின்சோகம் மண்டியிருந்தது.

எல்லோரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் பொது எதிரியாய் வெயில் உச்சிக்கு ஏற,ஏற தேவகி அமர்ந்திருந்த மரத்தின் நிழல் குறுகியது. விலாசமாய் அமர்ந்திருந்த ஜனக்கூட்டமும் அதற்கேற்றவாறு இடைவெளியின்றி நெருக்கமானது.

“ஏம்மா..நானும் அப்போதிருந்தே பாக்குறேன்.நீ தனியா உட்கார்ந்து அழுதிட்டிருக்கிறே..சொந்தக்காரங்க யாரும் வரலையா..?”குரலில் பரிவுடன் உடல் முழுவதும் கறுப்புஅங்கியால் மறைத்திருந்த ஒரு பெண் தேவகியிடம் கேட்டாள்.

“இல்லை.எல்லாரும் வெளியூரு..தகவல் சொல்லியிருக்கு. அவங்களாலே எப்ப வரமுடியும்னு தெரியலே..”
“இங்கே வாழ்க்கைப்பட்டு வந்தியா..?”
“ஆமா”
“உன்புருஷனோட சொந்தம் யாரும் இங்கே இல்லையா..?”
“இல்லை”
அந்தப் பெண்ணின் கண்களில் லேசாசாய் மிரட்சி.ஏதோ உண்மையை யூகித்தறிந்தவள் போல..”அப்போ..இங்கே..இறந்தது…?” குரல் தயக்கத்தோடு தடைபட்டு நின்றது.மீதிக்கேள்வியை கேட்பதில் உள்ள தர்மசங்கடம் தேவகிக்குப் புரிந்தது.
“என் புருஷனைத்தான் கொன்னுட்டாங்க..”சொல்லும்போதே தேவகிக்கு குரல் அடைத்து கண்ணீர் பொங்கியது.
அந்தப்பெண் சட்டென தேவகியின் கையை ஆறுதலாய் பிடித்துக் கொண்டு, “என்னம்மா செய்யிறது,இந்தப்படுபாவிங்க எப்போப் பார்த்தாலும் பழிக்குப்பழின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வெட்டிச் சாய்ச்சுட்டே இருக்கானுங்க.நம்பளைப் போல பொம்பளைங்க, குழந்தைகள் எல்லாம் இப்படி அநாதியா தெருவிலே நிக்க வேண்டியிருக்கு..? உள்ளூரிலேயே பொறந்து இங்கேயே வாழ்க்கை நடத்தறவங்களுக்கு ஏதோ ஆறுதல் சொல்லவும் காப்பாத்தவும் யாரோ நாலுபேர் இருப்பாங்க..ஆனா வெளியூரிலிருந்து பிழைக்க வந்தவங்க கதியெல்லாம் இன்னும் கஷ்டம்..,பரிவுடன் சொல்லிக்கொண்டே வந்தவள்,திடீரென்று ஆவேசமுற்றவளாய், சற்று இரைச்சலுடன் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்த நாயாவது இதையெல்லாம் நெனச்சுப்பாக்குதா..? என்னம்மா நான் சொல்லுறது..? மதத்தைக் காப்பாத்தறேன்னு மனுஷங்களை கொன்னுபுட்டா ஆச்சா..?”
“ஹே..பாத்திமா..”ஏதோ ஒரு ஆண்குரல் அதிகாரத்தோடு, ‘வாயை மூடு’ என்ற தொனியில் ஒலிக்க,முனகிக் கொண்டே எழுந்து சென்றாள் அந்த மாது.

அவள் சொல்லிச் சென்றதைக் கேட்டபோது தேவகிக்கு ராமச்சந்திரன் சாருடைய நினைவு வந்தது.தான் ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் வகுப்பெடுத்த வரலாற்று ஆசிரியர்.அவர் ஒருமுறை சொன்னார். “மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த அதே காலம்,மேலும் இருபிரிவு ஆரியக்கூட்டம்,ஒன்று ஈரானுக்குள்ளும்,மற்றொன்று கிரீஸிற்குள்ளும் நுழைந்தது.இந்தியப் பழங்குடி மக்களிடம் போரிட்டும்,இணைந்தும் வாழ்ந்து பழகிய அந்த மக்களின் வாழ்க்கை முறை எப்படி இந்துசமயத்தின் முன்னோடியான வைதீக வேதமதத்தை உருவாக்கிற்றோ,அதே போல் ஈரானுக்குள் நுழைந்தவர்களின் சந்ததியாய்த்தான் கிறித்தவமும்,இஸ்லாமும் உருவாயிற்று.
அப்படியானால் நமக்கெல்லாம் ஒரே மூதாதையர்கள்தான்.எனவே மதத்திற்காக சண்டைபோடுவதும் கொலைபுரிவதும் கூடாது.”என்று சொன்னவர்.மேலும் இந்தியாவில் தோன்றிய மதமான பௌத்த மதத்தை உலகில் பல நாட்டுமக்கள் பின்பற்றி வரும்போது,வேறு பகுதியில் தோன்றிய இஸ்லாமையும், கிறித்துவத்தையும் இங்குள்ள மக்கள் சிலர் தழுவுவதில் தவறு ஏதும் இல்லை.எனவே மதத்துவேஷம் என்பது கூடாது…”
அன்று அவர் சொன்னது மனதில் செதுக்கிவைத்த சித்திரமாயிற்று. நினைவுகளில் மூழ்கியிருந்த தேவகியை, “ஐயோ நசீரு…”என்ற கூக்குரல் திடுக்கிடவைத்தது.

மருத்துவமனையின் பெரியநுழைவாயில் வழியே ஒரு போலீஸ் வேன் வந்து நின்றிருக்க.அதிலிருந்து ஆண்களும்,பெண்களுமாய் கதறிக் கொண்டே பிணப்பரிசோதனை அறைவாயிலை நோக்கி ஓட்டமெடுக்க,எல்லோரின் கண்களும் அவர்களையே பின் தொடர்ந்தன.தொடர்ந்து பரிதாப உச்சுக் கொட்டலும்,பாவிகள் எனத் தொடங்கிய வசவுகளும் காற்றில் கலந்து நிறைந்தன.

தேவகி இங்கு வந்து அமர்ந்தபின்,நான்கைந்துமுறை இதேபோல உறவுக் கூட்டங்களை போலீஸ்வேன் கொண்டுவந்து இறக்கிப்போயிற்று.ஒவ்வொரு முறையும் அதிலிருந்து இறங்கும் மனிதர்கள்..இப்படித்தான் கூக்குரலிட்டுக் கொண்டு, தலையிலடித்துக்கொண்டோ,வாய்விட்டுக் கதறிக்கொண்டோ, பிணவறையை நோக்கி ஓடுகிறார்கள்.அவ்வப்போது அவர்களால் உச்சரிக்கப்படும் பெயர்கள் மட்டும் வெவ்வேறாயிருக்கும்.

காலையில் அப்படித்தான் “செந்திலு..என் ராசாவே..” என்று கதறிக் கொண்டே ஓடிவந்த ஒருதாய்,பதட்டத்தாலோ பட்டினியாலோ.. தடுமாறிக் கீழே விழப்போக தேவகிதான் சுதாரித்து,சட்டென எழுந்து தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.உறவு ஜனத்தில் நான்கைந்துபேர் சுற்றிக் கொள்ள சோடா வாங்கு..தண்ணி எடு..என்று ஆள்ஆளுக்கு கூவ,யாரோ ஒருவர் வெளியே ஓடிப்போக எத்தனித்து..அப்படியே நின்றார். ‘ஒரு கடையும் திறந்திருக்கவில்லை’ என்பது அப்போதுதான் உறைத்திருக்கவேண்டும்.அவர் முகத்தில் ஆத்திரமும் இயலாமையும் கொப்பளிக்க முனகிக்கொண்டே திரும்பினார்.

அதற்குள் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் ஓடிப்போய் சைக்கிளில் மாட்டியிருந்த தன்பைக்குள் கைவிட்டு ஒருபாட்டில் தண்ணீரை எடுத்துவர,அதை ஒருவர் வாங்கி மயக்கமுற்ற பெண்ணின் முகத்தில் தெளித்து,வாயை திறக்கச்செய்து சற்றே புகட்டியபின்,அந்தப் பெண்ணுக்கு உணர்வு திரும்பியது.
“இந்தாங்க பாய்… நன்றி” என்று லேசான புன்னகையுடன் ஒருவர் பாட்டிலைத் திருப்பித்தந்தார்.
பிணவறைக்கு வெளியே நின்றிருந்த கூட்டம் மெதுவாக கலைந்து,நிழலுக்கு ஒதுங்கியது.தேவகி இன்னும் சற்று ஒடுங்கி உட்கார்ந்து கொண்டாள்.

“ஏனுங்க பாய்..பாடியெல்லாம் எப்பக் குடுப்பாங்களாம்..?” தேவகியிடமிருந்து சற்றுத்தள்ளி நின்றிருந்த கறுப்புவேட்டி மனிதர் கேட்டார்.பிணத்தைப் பெற்றுக் கொள்ள வந்த தேவகி உட்பட,பலரது கவனமும் அவருடைய கேள்விக்கான பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தது.

மரத்திற்கு பின்புறமிருந்து பதில்குரல் வந்தது. “ எல்லாம் ஆச்சு சாமி..இன்னும் கொஞ்சநேரத்திலே யாரோ பெரிய அதிகாரி வருவாராம்.வந்தவுடனே பாதுகாப்பா எல்லா பாடியும் கொண்டுபோக ஏற்பாடு பண்ணுவாங்களாம்..”
“சொந்தஊருக்கு பாடியை கொண்டுபோறவுங்க எல்லாம் என்ன பண்றது.? ”
“எங்கே கொண்டுபோறது..அவங்கவங்க சடங்கை முடிஞ்சவரை இங்கேயே பண்ணிட்டு ஒட்டுமொத்தமா ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்கு கொண்டுபோக வேண்டியதுதான்.அங்கதான் பக்கம்பக்கமாய் எல்லா ஜாதிக்கும் இடம் ஒதுக்கியிருக்கே..”
“ஓஹோ..அப்படியா..ஏற்பாடு.?” ஏதோ சில விநாடிகள் யோசித்த கறுப்புவேட்டி மனிதர், “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டைபோடற மத்தவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா பாய்..?”அவர் குரலில் அங்கலாய்ப்பும் வருத்தமும் இழைந்தன.

“எல்லாருக்கும் ஆறடி மண்ணு தவிர கடைசியிலே சொந்தமா எதுவுமேயில்லேங்கிறது புரிஞ்சாலே போதுமே..!” அலுப்பும் சலிப்புமாக வந்தது அந்தக் குரல்.
தொடர்ந்து, “ஆமா ஐயப்பசாமியெல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு வரக்கூடாதே..”
“செத்தது நம்ம நெருங்கிய சொந்தக்காரப் பயலாச்சே..எப்படி வராம இருக்கிறது.இனி மாலையைக் கழட்டிட வேண்டியதுதான் பாய்..அடுத்தவருஷம்தான் மலைக்குப் போகனும்..” தொடர்ந்து அவர்களின் பேச்சு வெவ்வேறு திசைக்குப் பயணிக்க…”தேவகியின் கவனம் அவர்களின் பேச்சுககளிலிருந்து மீண்டது.

வெகு நேரம் ஒரேமாதிரியாக அமர்ந்திருந்ததில், கால்களில் வலி எடுக்கத் துவங்கியது.வெயிலின் உக்கிரம் கண்களைக்கூச,கைகளை தளர்த்திக்கொண்டு மரத்தின்மீது நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.பிணங்களை வெளியே கொண்டுவரும்வரை இப்படியே காத்திருக்க வேண்டியதுதான்… “கணவன் உயிரோடு இருக்கும்போது,இப்படி எதற்காகவும் தன்னைக் காத்திருக்க வைத்ததில்லை.காதலித்துக் கொண்டிருந்த ஒருவருடமும் சரி,மணம் முடித்தபின் இந்த ஆறுமாதங்களும் சரி..இரவு ஒன்பது மணிக்கு வருவேன் என்று சொல்லிச்சென்றால் பத்துநிமிடம் முன்பாகவே வந்து நிற்பான்.
காதலித்த காலத்தில் என்றால் ஒருநாளும் இவள் அவனுக்காக காத்திருந்ததேயில்லை.ஐந்து மணிக்கு சந்திக்கலாம் என்று நேரத்தையும், இடத்தையும் குறிப்பிட்டுவிட்டு,இவள் வேண்டுமென்றே,நாலரை மணிக்கு சென்றாலும் அவன்தான் இவளை வரவேற்றிருக்கிறான்.இப்படி எத்தனையோ முறை.!
கடந்த காலத்தை அசைபோட்டபடியே..நினைவுகளில் மூழ்கிப்போனாள்…

யாருடைய துயரத்தையும்,சந்தோஷத்தையும் பொருட்படுத்தாது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

தேவகிபோலவே எல்லோரும் எதிர்பார்த்திருந்த அந்தப் பெரிய அதிகாரி மருத்துவமனைக்கு வந்தபோது மதியம் இரண்டு மணியாகிவிட்டது. அவரைச் சுமந்து வந்த ஜீப் நின்றவுடன், ஜனக்கூட்டம் ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொண்டது.அவர் எல்லோரையும் கையமர்த்திவிட்டு,உடன் வந்த போலீசாரிடம் ஏதோ சொல்ல,இரண்டு போலீசார் பிணவறையை நோக்கி ஓடினர்.வேறு சில போலீசாருக்கும் ஏதோ கட்டளைகள் பிறப்பித்தார்.
உடனே அங்கு சூழ்நிலை பரபரப்பாயிற்று.பிணவறையிலிருந்து ஒரு பிணத்தை வெளியே கொண்டுவந்து புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்திற்கு அருகே இருந்த தாழ்வாரத்தில் கிடத்தினார்கள்.
மீண்டும் உள்ளே சென்று இன்னொரு பிணத்தை…,இன்னும் ஒன்று…ஆயிற்று..,மொத்தம் பதினேழு பிணங்கள்..,

உறவினர்களின் அழுகுரல்கள் உச்சத்தைத் தொட்டது.வயிற்றிலும் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அலறும் சப்தம்.அந்த மருத்துவமனை முழுக்க எதிரொலித்தது.

அந்தப்பெரிய போலீஸ் அதிகாரி;,அழுது கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தியபடியே,இறந்தவர்களைப்பற்றிய விபரங்களை தனது கையிலிருந்த நோட்டு ஒன்றில் எழுதிக்கொண்டே வந்தார்.
தேவகியின் முறையும் வந்தது. “ உங்கபேர் என்னம்மா..?”
“தேவகி”
“இறந்தது யாரு..?”
“என் புருஷன்”
“வயசு.?”
“இருபத்தெட்டு”
“பேரு..?”
“அப்துல் காதர்.”
“என்ன..என்ன சொன்னீங்க..?”
“என் கணவர் பெயர் அப்துல் காதர்..”இம்முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தேவகி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *