புத்தாண்டுச் சபதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 1,366 
 
 

‘புத்தாண்டிலிருந்து ஒரு குறிப்பிட்டக் கெட்டப் பழக்கத்தை அறவே ஒழித்து விட வேண்டும்’

உறுதியாகத் தீர்மானித்த பின், கண்ணன் எதைப் பற்றி யோசிக்கிறான் ? என்று யோசிக்கிறீர்களா?

அதற்குக் காரணம் இருக்கிறது.

மனசுக்கு என்ன…! அது எப்போதும், எதையாவதுச் சொல்லிக் கொண்டேத்தான் இருக்கும். சொல்வது யார்க்கும் எளிதல்லவா…?

மனம் போனப் போக்கில் போனால், கஷ்டப்படப் போவது கண்ணன்தானே!

சந்தேகமே இல்லை.

பொய் பேசுதல், கெட்ட பழக்கம்தான்.

ஆனாலும் அதை அவனால் நிறுத்தவே முடியாது.

நிறுத்திவிட்டால் அவனால் வெற்றிகரமாகத் தன் தொழிலைச் செய்யவே முடியாது.

தன் தொழிலில் முன்னேறவும் முடியாதே!.

“என்ன சார் சொல்ல வறீங்க?”

யோசித்து நெற்றி சுருக்குவதும், புருவம் உயர்த்தி நீங்கள் கேட்பதும் தெரிகிறது .

சொல்கிறேன்.


‘கையிலே தோல் ‘பை’

கழுத்திலே ‘ட்டை’

வாய் நிறையப் ‘ பொய்’

முப்பெரும் மூலதனத்தினால் இயங்கும் ‘ரெப்ரசன்டேடிவ்’ வேலை பார்க்கிறான் கண்ணன்.

பொய்ப் பேசுவதை விட முடியுமா?’

நீங்களே யோசித்துப் பாருங்கள்.


“அளவோடுக் குடி.! அருகில் வராதே!

அருகில் வா ! மது அருந்தாதே !”

இப்படி ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் செய்து வாழும் தம்பதியரை யாரேனும் பார்த்ததுண்டா?

கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும்தான் அப்படி ஒரு அக்ரிமெண்ட்..

ஹலோ…! இதுக்கே ஷாக் ஆனா எப்படி…? மேலேக் கேளுங்க…!

‘குடி குடியைக் கெடுக்கும்’

இந்த வாசகம் கண்ணன் குடும்பத்துக்குப் பொருந்தாத ஒன்று.

கண்ணன் குடிப்பதற்கு அவன் மனைவி கௌசிகா எந்தத் தடையும் விதிக்கவில்லை;

குடித்துவிட்டு அருகில் வராதே என்பதைத்தவிர.

மாதத்தில் 25 நாட்கள் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ‘ரெப்’ கண்ணன்.

இரவில் அளவாய் குடிப்பதும், புகைப்பதுமாய் அவன் இஷ்டத்துக்குத்தான் இருந்து வருகிறான்.

சினிமாவிலும், சீரியலிலும், கதாநாயகனோ, வில்லனோ குடிக்கும்பொழுதும், புகை பிடிக்கும்பொழுதும்

‘குடி குடியைக் கெடுக்கும்…!’ ‘புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு!’

‘விழிப்புணர்வு வாசகங்களுடன் ‘ஸ்டில்’ போடுவார்களல்லவா..?

அதைப் போல கண்ணன் குடிக்கும்போது அவன் மனசு ஸ்டில் போடும்தான்.

வழக்கமாய் எல்லாரையும் போலத்தான் கண்ணனும்;

அந்த விழிப்புணர்வு வாசகங்களை மதிக்கவே மாட்டான்.


“கண்ணா…! கண்ணா…!”

அழைத்தது அவன் உள் மனம்.

“…”

உள் மன அழைப்பை அலட்சியம் செய்தான்;

வேறு எதிலோக் கவனம் செலுத்திப் பார்த்தான்.

மௌனம் காத்தான்.

மனம் விடவில்லை.

தொடர்ந்துச் சீண்டிக்கொண்டே இருந்தது.


‘ உள் மனம், சொன்னதையேச் சொல்லிக் கொண்டிருக்கிறது;

நம் வாயைப் பிடுங்கப் பார்க்கிறது;

நம் உறுதியைக் குலைப்பதே அதன் நோக்கம்;

பதில் ஏதும் சொல்லக் கூடாது..!’

உறுதியுடன், ‘வேதாளத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத விக்ரமாதித்தன்’ போல் மௌனம் காத்தான்.

“கண்ணா ஏன் வாய் திறக்கமாட்டேன் என்கிறாய்?; உலக நடப்பைத்தானேச் சொல்கிறேன்.!”

“…”

“புறம் பேசுதல், செய் நன்றி மறத்தல், கோபம், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், சிற்றினம் சேர்தல், என்று ஆயிரமாயிரம் கெட்ட பழக்கங்கள் இருக்கிறனவே…!;

அதிலொன்றைத் தேர்ந்தெடுத்துப், புத்தாண்டு நாளிலிருந்து ஒழித்துக்கட்ட சபதம் எடுக்கலாமே…!;

உலகம் பூராவும் நல்ல செயலாய் அங்கீகரித்துப், பெரும்பாலான ஜனங்கள் நடைமுறைப் படுத்தி வருவதும், காலங்காலமாய்க் கடைப்பிடிப்பதுமான, ஒருப் பழக்கத்தை நீ ’கெட்டப் பழக்கம்’ எனப் பாவித்து, இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாயே;

கண்ணா, கொஞ்சம் மீளாய்வுச் செய்து யோசி? “

தொடர்ந்து மனம் சொன்னதையேச் சொல்லிக் கொண்டிருந்தது.

எத்தனை நேரம் தான் அமைதியாய் இருந்து அலட்சியம் காட்ட முடியும்…!

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா…!

‘தனிமையில் இருக்கும் நம்மை இந்த மனசு குழப்பப் பார்க்கிறது;

உறுதியைக் குலைக்கச் சதிச் செய்கிறது;

இந்த இடத்தை விட்டு முதலில் அகலவேண்டும்…!

யோசித்தபடியேக் கடைத்தெருவுக்குச் சென்றான்.


கடைத் தெரு.

கோலாகலமாய் இருந்தது.

‘ஹைட்ரஜன் பலூன்கள்’ வானத்தில் பறந்து புத்தாண்டை வரவேற்றன.

ஆங்காங்கேப் புத்தாண்டை வரவேற்றுப் பேனர்களும், ஃப்ளெக்ஸ்களும் பளிச்சிட்டன.

வண்ண வண்ணமாய் மின்சாரப் பூக்கள் பூத்துக் குலுங்கி நகரத்தின் அழகை அதிகரித்துக் காட்டின.

வணிக நிறுவனங்கள், புத்தாண்டையும், கஸ்டமர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தன ஒலி பெருக்கிகள் மூலம்.

வானங்கள், மத்தாப்புகள், வெடிகள் எனக் கந்தகம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் தன் பங்குக்கு ஒத்துழைத்தன.

புத்தாண்டின் ‘ஈவ்’ ரசித்தான்.

‘மிட் நைட் மாஸ்க் ‘ பிரார்த்தனைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது தேவாலயம்.

லாட்ஜ்களும், ஓட்டல்களும், கடற்கரைகளும்… வண்ணவிளக்குகளால் இளைஞர்களுக்கு வலைவிரித்துக் கொண்டிருந்தன.

டாஸ்மாக்’கைப் பார்த்தபோது, புத்தாண்டு வியாபார இலக்கைத் தாண்டியேச் சம்பாதிக்கும் என்றேத் தோன்றியது.

கடைவீதியோடு ஒன்றித் தன்னைக் கரைத்துக் கொண்டான்.

மனசு அடங்கி விட்டது.


வழக்கமாகப் போகும் இனிப்பகத்துக்கும், மலரகத்துக்கும் அனிச்சையாய்ச் சென்றன அவன் கால்கள்.

அல்வாவும், ஜாதிமல்லியும் வாங்கினான்.

வீடு திரும்பினான் கண்ணன்.

நள்ளிரவு மணி 12.00 அடிக்கப், புத்தாண்டுப் பிறக்கச், சில நொடிகளே இருந்தன.

விடலைகள் “ஹாப்பீ நியூ இயர்…”

கத்தினார்கள்.

விசிலடித்தார்கள்.

பட்டாசு வெடித்தார்கள்.

தெருவேக் களைக் கட்டிவிட்டது.


“முடிவு பண்ணியாச்சாக் கண்ணா..?;

“எந்தக் கெட்டப் பழக்கத்தை இந்த வருசம் முதல் நிறுத்தப் போறதா ப்ளான்..?”

“எதை நிறுத்தப் போறேன்னு சொன்னாலும் நீ நம்பமாட்டியே… கௌ…”

“நீயே யோசிச்சிப் பாரு கண்ணா…!;

புத்தாண்டு சபதம் போட்ட ஒருத்தராவது, அதை வருஷம் பூராக் ஃபாலோ பண்ணினதா வரலாறு உண்டா…?;

இன்னும் சொல்லப் போனா ஒரு வாரம் கூடக் கடைப் பிடிக்கறதில்லை;

இருபத்தி நாலு மணி நேரம் கூடக் கடைப் பிடிக்க முடியாத ஒரு விஷயத்தை விடறேன்’னுச் சொல்லிப், பொய் சத்தியம் பண்ணறதுல எனக்கு உடன்பாடே இல்லை கண்ணா…”

“உண்மைதான் கௌ. ‘செய்யறவன் சொல்வதில்லை.’னு சொல்லுவாங்க;

எதையும் சொல்லாமச் செய்துக் காட்டணும்;

செயல் வீரனாத்தான் இருக்கணும், ங்கற உன்னோட கான்செப்ட்டோட உயர்வு புரியுது கௌ…;

இருந்தாலும்…!”

“என்ன இருந்தாலுன்னு இழுவை…!”

கௌசிகாவின் குரலில் அன்பும், பாசமும் இருந்தது.


என்னோட ‘ரெப்’ தொழில்ல பொய் சொல்றதை தவிர்க்க முடியலை. அதே சமயம், எதையாவது ஒண்ணை விடப்போறதா புத்தாண்டுல அறிவிக்கற, பொய்யை நிறுத்தலாம்தான்….!”

“…”

கௌசிகா கண்ணன் என்னதான் சொல்லப் போகிறான் என்பதைக் கூர்ந்துக் கவனித்தாள்.

பொய்யோப் புரட்டோ, கடைப் பிடிக்கறோமோ, காத்துல விடறோமோ…, புத்தாண்டுலச் சபதம் செய்யறது ரத்தத்துல ஊறிப் போன ஒருச் சாங்கியம் போல ஆயிடுச்சு கௌ.”

கண்ணன் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகி, வாங்கினிலே பளிச்சென்று ஒளிர்ந்தது.

“…”

கௌசிகா கண்ணனின் வெளிப்படையானப் பேச்சை ரசித்தாள்.

முறுவலித்தாள்.

தலையைத் திருப்பிக் கொண்டு வாகாய் நின்றாள்.

அவள் தலையில் கண்ணன் ஜாதி மல்லியைச் சூட்டினான்.

ஜாதி மல்லி, கம்’மென்று வெதவெதப்பாய் நறு மணம் பரப்பியது.

“கௌ…!”

“சொல்லு கண்ணா…!”

“அதுக்கு முடிவு கட்டுவேன், இதுக்குத் தலை முழுகுவேன், அதை நிறுத்துவேன், இதை ஒழிச்சுக் கட்டுவேன்… ன்னு புத்தாண்டு சபதம் செய்யறோமே அந்தக் கெட்டப் பழக்கத்தை இந்தப் புத்தாண்டுலேர்ந்து நிறுத்தப் போறேன்!”

செயல் வீரனாக தன் முன் நிற்கும் கண்ணன் மேல் ஒய்யாரமாய் சாய்ந்தாள் கௌசிகா.

அல்வாத் துண்டைக் கிள்ளி ஒருவருக்கொருவர் ஊட்டியபடி புத்தாண்டைத் தொடங்கினர் கண்ணனும் கௌசிகாவும்.

‘டண்…! டண்…!’

பனிரெண்டு முறை தேவாலயத்தின் கடிகார மணி ஒலித்து அவர்களை ஆசீர்வதித்தது.

– 29.11.2022, ஆனந்த விகடன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *