புதுச் செருப்பு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,722 
 

ஷோகேசில் இருந்த அந்த புத்தம் புதுச் செருப்பைப் பார்க்கும்போதே எனக்கு காலில் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது.

நான் ஏன் ஷோரூமில் இருக்கும் செருப்பை விழிகள் விரிய வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?

ஐ ஆம் ராஜசேகர்- மாஸ்டர்ஸ் டிகிரி. அண்ணாசாலையில் நாலு மாடிக் கட்டடத்தில் இயக்குகிற ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் செலக்ஷன் கிரேட் அசிஸ்டெண்ட். ஐந்து இலக்க சம்பளம். நெட் சாலரி விவரம் பின்னால வருது. ஒரு தாய், ஒரு தாரம், ஒன் ப்ளஸ் ஒன் டூ குழந்தைகள், சைதாப்பேட்டையில் ஜாகை.

பிடித்தம் போக கையில் வாங்குற சம்பளத்தை வச்சிகிட்டு “பாலன்ஸ்’ பண்ண ஒவ்வொரு மாதமும் நான் அல்லாடுறது அந்த ஆண்டவனுக்கு அடுக்காது.

புதுச் செருப்புவாடகை, மளிகை சாமான், பால், காய்கறிகள், ரேசன், எரிவாயு, எண்ணெய், லொட்டு லொசுக்கு, அதுக்கு, இதுக்குன்னு பங்கு பிரிச்சுக் கொடுத்த பிறகு, கையில முன்னூறு ரூபாய்தான் மிஞ்சும்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். இந்த மூன்னூறு ரூபாய்லதான் நான் ஒரு மாதத்துக்கு என் சொந்தச் செலவுகளை சமாளித்து பண்ணியாகணும்.

இந்த முன்னூறு ரூபாயை முந்நூற்று ஐம்பது ரூபாயா உயர்த்த பத்து மாசமா பகீரதப் பிரயத்தனம் பண்றேன். அது குறையுதே தவிர கூட மாட்டேங்குது. இந்த நிலைமையில நூற்று தொண்ணூற்று ஒன்பது ரூபாய் தொண்ணூற்று ஒன்பது பைசா விலை ஒட்டியிருக்கிற அந்தச் செருப்பை கண்ணாடிக்கு இந்தப் புறம் பார்த்து ரசிக்கத்தான் முடியுதேயொழிய கண்ணாடிக்கு அந்தப்புறம் போய் வாங்கிப் போட்டுப் பார்த்து அனுபவிக்க வழியில்லை.

நூற்று தொண்ணூற்று ஒன்பது ரூபாய் தொண்ணூற்று ஒன்பது பைசா செருப்பை நான் ஏன் தேர்தேடுத்தேன் என்று உங்களுக்குத் தோணும். அந்தக் கடையில இருக்கிற செருப்புகளிலேயே அதுதான் சீப். மற்றதெல்லாம் முன்னூறு, நானூறு, ஐநூறுன்னு பயமுறுத்துற விலையில இருந்தது.

“முடியாதபோது மூடிக்கிட்டுப் போவியா போறவன்ட்டல்லாம் புலம்பிட்டு நிக்குறியே’ன்னு உங்களுக்குத் தோணும். வாஸ்தவம். ஆனா அவசரமா ஒரு செருப்பை நான் வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். நான் தற்போது போட்டுக்கொண்டிருக்கிற செருப்புல ஊசி குத்த இடமில்லை. தச்சு தச்சு சுத்தமா நைஞ்சு போயிருந்தது.

கடைசியா போன வாரம் அலுவலக வாசலில் இருக்கிற சந்திரபாபு தச்சதுக்கு கூலி வேண்டாம்னுட்டான். காரணம் கேட்டபோது, அவன் கூறிய பதில் ஆச்சரியமா இருந்தது.

அப்பப்போ அஞ்சு ரூபா, ஏழு ரூபா, பத்து ரூபான்னு மேற்படி செருப்பை தைக்கிறதுக்கு அவனுக்கு இதுவரை எழுபது ரூபாய்க் மேலே கொடுத்திருக்கேனாம். இதுக்கு மேலே இந்தச் செருப்பை தச்சால் கூலி வேணாமாம். “வித் பெஸ்ட் காப்ளிமெண்ட்சாம்’. இதாவது பரவாயில்லை. அப்படியாவது ரோசம் வந்து இந்தச் செருப்பை சுத்தி வீசி எறிஞ்சிட்டு புதுச்செருப்பு வாங்குறேனான்னு பாக்குறானாம். என் தலையை கழட்டி கையில் வைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முடியவில்லை. குனிந்து கொண்டேன்.

பெரிய மேட்டிலிருந்து தோலும் தி.நகர்லேயிருந்து நூலும் வாங்கி வந்து சந்திரபாபுவே ஸ்பெஷலாக செருப்பு தைத்து விற்றுக் கொண்டுதான் இருந்தான்.

“”சாமி! இந்த செருப்பை வேணா போட்டுட்டுப் போ சாமி. துட்டைப்பத்தி பார்க்காத. எப்ப வேணாக் கொடு”ன்னு கூட சொல்லிப் பார்த்துவிட்டான். என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒண்ணு- நாலுமாடிக் கட்டடத்தில் ஐந்து இலக்க சம்பளத்தில் வாங்கிட்டு வேலை பாக்குற நான் நடைபாதை வியாபாரியிடம் கடனுக்குச் செருப்பு வாங்க தன்மானம் தடுத்தது. இரண்டு- சந்திரபாபுவின் செருப்பில் ஷோ ரூமில் உள்ளது மாதிரியான “ஃபினிஷிங்’ இருக்காது. வெள்ளை ஜாக்கெட்டுக்கு கருப்பு உள்ளாடை போட்டது மாதிரி தையலெல்லாம் வெட்கமில்லாமல் வெளியே தெரிந்தபடி இருக்கும். என்ன இருந்தாலும் ஷோ ரூம் செருப்பு செருப்புதான்.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப அண்ணாசாலையின் கீழிருக்கும் சுரங்கப்பாதையில் இறங்குவதற்கு முன் பிளாக்கர்ஸ் சாலை சிக்னலுக்கு ஒரு பக்கமாய் இருந்த அந்த பிரம்மாண்டமான ஏர்கண்டிஷன் ஷோ ரூம் கடை வாசலில் நின்று, ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பொறுமையாகப் பார்த்துக் கொண்டு மானசீகமாக அதைக் காலில் அணிந்து கொண்டு கற்பனையில் கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வருவது கடந்த ஆறு மாதங்களாக எனது வழக்கமாகி இருந்தது.

ஒவ்வொரு மாதமும் நான் சம்பளம் வாங்கியதும் செருப்புக்கென்று ஒதுக்கி வைக்கும் தொகைக்கு ஒவ்வொரு வகையான செலவு கூடுதலாக வந்து என்னை வெறுப்பேற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

முதல் மாதம் ஊரிலிருந்து மாமனார் வந்து ஒரு வாரம் முகாமிட்டதில் செருப்புக் காசு சீரழிந்து போனது. இரண்டாவது மாதம் மாமனாரின் மூத்த பெண்ணுக்கு காய்ச்சல் வர, டாக்டருக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் செருப்புக் காசுதான் கைகொடுத்து உதவியது. “மாமனாரின் மூத்தப் பெண்ணுக்கு காய்ச்சல் வந்தால் நீ ஏன்யா கைக் காசை செலவு பண்ணி வைத்தியம் பார்க்கணும்’னு உங்களுக்கு கேட்கத் தோணும். நியாயமான கேள்விதான் என்றாலும் வேறு வழி இல்லை. மாமனாரோட மூத்த பெண்ணை நான்தான் கட்டிகிட்டு இருக்கேன்.

மூன்றாவது மாதம் பிரச்னை வேறு வடிவில் – எனது சொந்தக்காரர்கள் வடிவில் வந்தது. அரியக்குடி அக்காவோட பொண்ணு சியாமளா வயசுக்கு வந்துட்டான்னு சேதி வந்ததில், மாமன் வரிசை வைக்க செருப்புக் காசுதான் கை கொடுத்தது.

நான்காவது மாதம் எட்டாவது படிக்கும் என் பெண்ணே எனக்குத் துரோகியாக மாறினாள். பள்ளியில் நடன நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, கவரிங் நகைகள் வாங்க இருநூறு ரூபாய் கேட்டாள். “”காசு ஏதும்மா?” என்று கேட்க, “”அதான் செருப்புக்குன்னு ஒதுக்கி வச்சிருக்கியே!”

என்று அந்தக் காசில் கண் வைத்தாள்.

இந்த மாதிரி எம்பொண்ணுக்கும், எதிர்காலத்தில் என் பேரை நிலை நாட்டவோ, உலை வைக்கவோ எதுக்கோ அவதாரம் பண்ணியிருக்கிற என் பையனுக்கும் திடீர் திடீர்னு ஆகுற இது மாதிரியான செலவுகளுக்கு என் பொண்டாட்டி வைச்சிருக்கிற டைட்டில்தான் லொட்டு லொசுக்கு. இதுல லொட்டு என் பொண்ணுன்னும், லொசுக்கு என் பையன்னும் வைச்சிக்கிடலாம். பாதகமில்லை.

நீங்க ரேசனை நிறுத்தலாம், பால் வாங்காம இருக்கலாம், மளிகை சாமான்கள் வாங்குறதை ஒத்தி வைக்கலாம். என்ன செலவை வேண்டுமானாலும் தள்ளி வைக்கலாம். ஆனா இந்த லொட்டு லொசுக்கை மட்டும் ஒத்தி போடவும் முடியாது. ஒதுக்கி வைக்கவும் முடியாது.

இப்படியாக நான்கு மாதங்களுக்கு எனது செருப்பு வாங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததில், ஐந்தாவது மாதம் பட்ஜெட்டில் முதல் செலவாக செருப்பு வாங்க என்று நான் எழுதியது அறிமுக நிலையிலேயே வெட்டப்பட்டுவிட்டது.

“”என்ன நீ விளையாடுற…செருப்பு தேய்ஞ்சி கால் தரையில் உராய்வது தெரியுமோ?” என்றேன்.

“”தாராளமா செருப்பு வாங்கிக்குங்க. சந்தோசமா வாங்கிக்குங்க. எட்டாம் தேதி உங்கப்பாவுக்கு தெவசம் வருது, என்ன செய்யப் போறீங்க?” என்று என் மனைவி கேட்ட கேள்வியிலேயே என் செருப்பு வாங்கும் திட்டம் அந்த மாதமும் தவிடு பொடியானது.

ஆறாவது மாதம் பட்ஜெட் வரை வராமல் ஆபிசிலேயே இருநூறு ரூபாய் கூடுதலாக டிடெக்ஷன் செய்தபோது செருப்பு வாங்கும் திட்டம் அங்கேயே அம்பேலானது.

செருப்பைக் காலடியில் கழட்டி வைத்துவிட்டு அக்கவுண்ட்ஸ் செக்ஷனில்போய் என்ன ஏதுன்னு விசாரித்தபோது 1997லோ, 98லோ கூடுதலாய் இருநூறு ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஆடிட் அப்ஜெக்ஷன் ரிக்கவரி என்று தகவல் வர மெüனமாகத் திரும்பினேன்.

சிக்கன நடவடிக்கை என்று கூறி ஊழியர்களுக்குத் தர வேண்டிய பஞ்சப்படியை தராமல் தள்ளிப் போடுவதுபோல எனது பட்ஜெட்டில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் கூடுதல் செலவுகளுக்கு நான் என் செருப்புக் காசைத்தான் தியாகம் செய்ய வேண்டியிருந்தது.

பத்து நாள்களுக்கு முன்னால் ஒரு சம்பவம்:

நான் ஏதோ சொல்ல என் பெரிய பெண் காது கேட்காதது போலிருக்க கோபம் கொண்ட நான்,””செருப்பு பிஞ்சிரும்” என்றபோது அவள் நக்கலாக நகைத்துக் கொண்டே, “”அதுவே பிஞ்சிருக்கு. நீங்க வேற அதைப் பிய்க்கணுமா?” என்றபோது ஆத்திரம் எல்லை மீறிப் போனது. செருப்பு வாங்க இயலாத சூழ்நிலையை அவள் மீது காட்டியதில், அன்று என் மூத்த பெண்ணுக்கு செம “பரேடு’.

எனக்கு அந்தச் செருப்பின் மீது அவ்வளவு அபிமானம் ஏற்பட கண்ணன்தான் காரணம். கண்ணன் பக்கத்து சீட் பேர்வழி.

சந்திரபாபுவிடம் செருப்பு தைக்கக் கொடுத்துவிட்டு காத்திருந்த ஒரு தருணத்தில், “நார்த் ரன் ஸ்டார்’ ஷூ மாட்டிக் கொண்டிருந்த கண்ணன், “”வாங்குற செருப்பை நல்லதாக வாங்கினா கேரண்டியா உழைக்கும் மாப்ளே! நீ ஏன் இப்படி பிளாட்பாரம் செருப்பை வாங்கி இப்படி லோல் படுறே?” என்றான்.

நான் நொந்து போனேன். நான் போட்டிருந்த செருப்பு ஷோ கேசில் இருந்த செருப்பின் மாடல்தான் என்றாலும் ஒரிஜினல் அல்ல. இமிடேஷன். பிளாட்பாரத்தில் இருநூறு ரூபாய்க்குச் சொல்லி பேரம் பேசி வெற்றிகரமாக நூற்று முப்பது ரூபாய்க்கு வாங்கியது. அந்த சனியன் இதுவரை தையல் கூலியாகவே எழுபது ரூபாய் வரை விழுங்கி இருக்கிறது. பல சமயங்களில் கழுத்தறுத்து அரை நாள் கையில் தூக்கிக் கொண்டு நடக்க வைத்திருக்கிறது.

ஆறு மாதமாக அலைய வைத்து என் செருப்பு வாங்கும் விஷயம் அன்று மாலை நிறைவேறப் போகிறது என்ற நினைப்பில் உள்ளம் உற்சாகக் கும்மி அடித்துக் கொண்டிருந்தது. நூற்றி எண்பது ரூபாய் பஞ்சப்படி பாக்கி பட்டுவாடா செய்திருந்தார்கள். வீட்டுக்குப் போனால் வேறு செலவு வரக்கூடும். அதனால் போகும்போதே வாங்கிக் செல்ல முடிவு எடுத்தேன். அலுவலகம் விட்டு அடுத்த ஐந்தாவது நிமிடம் கடைக்கு ஆஜரானேன்.

கடையில்,””சார்! இன்னிக்கு ஸ்டாக் டேக்கிங். நோ சேல்ஸ்…நாளைக்கு வாங்க” என்று கூறி அனுப்பிவிட்டனர்.

இடி இறங்கியது மாதிரி இருந்தது எனக்கு.

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக, காசோடு நான் கடைக்குப் போன நாளில்தானா ஸ்டாக் டேக்கிங் எடுக்க வேண்டும்.

“ம்…பார்க்கலாம்…இந்தக் காசு வீட்டுக்குப் போய் வேறு செலவு ஏதும் வராமலிருந்தால் நாளை வந்து வாங்கிக் கொள்ளலாம்’ என்று தேற்றிக் கொண்டு வீடு நோக்கி நடந்தேன்.

நல்ல வேளையாக வீட்டில் இந்தக் காசுக்கு வேட்டு ஏதும் விழவில்லை.

“”சந்தோசமா வாங்கிக்குங்க” என்று என் மனைவி பச்சைக் கொடி காட்டினாள்.

“”நாளைக்கு சாயந்திரம் புதுச்செருப்போடுதான் வரணும்” என்று எச்சரித்த என் பெண்,””அப்படியே இந்தச் செருப்பை தூரப் போட்டுட்டு வாங்கப்பா” என்று வேண்டுகோளும் விடுத்தாள். அன்று இரவு கனவில் அந்தச் செருப்பு ரொம்ப நேரம் என் காலிலேயே ஜொலித்தது.

மறுநாள்

அலுவலகத்திற்கு அரைமணி முன்னாலேயே புறப்பட்டு செருப்புக் கடையை அடைந்தேன்.

“”வாங்க சார்” என்று சேல்ஸ்மென்கள் சூழ்ந்து கொண்டனர்.

நான் கனவு கண்டு கொண்டிருந்த செருப்பைக் கொண்டு வந்து காட்டினார். போட்டுப் பார்த்தேன். பொருத்தமாக இருந்தது. நடந்து பார்த்தேன். சுகமாக இருந்தது.

பில் போடச் சொன்னேன். வந்தது இருநூற்று இருபத்தி ஐந்து ரூபாய் தொண்ணூற்றைந்து பைசாவுக்கு.

எனக்குத் தலை சுற்றியது.

“”இது…இது…இந்தச் செருப்பு 199.99 தானே?” என்றேன்.

“”அது ஓல்ட் ரேட் சார். பட்ஜெட்டுக்கு அப்புறம் இன்னிலேர்ந்து இது ரிவைஸ்ட் ரேட் 225.95, டாக்úஸôட சேர்த்து 242.95”

“”சாரி சார்…நான் அவ்வளவு கொண்டு வரலை. அப்புறம் வந்து வாங்கிக்கறேன்”

“”சரியான சாவுகிராக்கி வந்திட்டானுவ. காலையில கடை தெறக்கறதுக்கு முன்னால…செருப்பு வாங்குற மூஞ்சியைப் பாரு”

சேல்ஸ்மென்களின் கமெண்டுகள் என் காதில் விழுந்தன. கேட்காதது மாதிரி நடக்கலானேன்.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *