கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,927 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எங்கள் வீட்டுக்குப் பாலன் வருவானா?” என்று ஆயிரத் தடவை கேட்டுவிட்டாள் பிலோமினா. அன்று விடிந்தால் நத்தார்த் திருநாள்.

“நிச்சயமாக வருவார்” என்ற பதிலைத்தான் திருப்பித் திருப்பிச் செல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.

“அவர் எப்போது அம்மா வருவார்?”

“இரவைக்குத்தான் வருவார்.”

“அவர் வந்தா எனக்குக் காட்டுவாயா அம்மா?”

“ஓ, கட்டாயமாகக் காட்டுவேன்.”

“அவர் எப்படி அம்மா இருப்பார்?”

தம்பியைப்போல அழகாக இருப்பார்.”

“அவர் என்னோடு விளையாட வருவாரா?”

“அவரும் உன்னைப்போலக் குழைந்தை தானே. விளையாடக் கட்டாயமாக வருவார்”.

“ஏன் அம்மா அவர் பகலிலே வர மாட்டார்?”

“அவர் பகலிலே வர அம்மா விடமாட்டா.”

“போ அம்மா, நீ பொய் சொல்கிறாய்?”

“உண்மையாகத்தான். அம்மா பொய்யா சொல்வேன்.? சரி, இப்போ நீ போய் விளையாடு. நான் பாலனுக்கும் உனக்கும் பலகாரம் சுட்டு வைக்கிறேன்.”

“நான் பாலனுக்கு அடித்தால் அவரும் அடிப்பாரா அம்மா?”

சே, அவர் நல்ல பிள்ளை. குழந்தைகளுக்கு அடிக்கவே மாட்டார்.”

“அப்போ நானும் அடிக்கமாட்டேன். ஏனம்மா நீ இப்போ போய் அவரைக் கூட்டி வாவேன்?”

“இப்போ அவருடைய அம்மா விடமாட்டா. சரி, சரி, தொந்தரவு செய்யாமற் போய் விளையாடு. இராத்திரிக்குத்தான் அவர் வருவார்.” அம்மாவின் குரலிற் கோபம் தொனித்தது.

பாலன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம், அவர் வரமாட்டாரோ என்ற அவ நம்பிக்கை, அம்மா சொல்வ தெல்லாம் உண்மையாகவே இருக்கவேண்டுமே என்ற ஆவல், அம்மாவின் கோபக் குரல் எல்லாமே பிலோமினா வின் சின்னஞ் சிறு இதயத்தைக் குழப்பின்.

தலையைத் தொங்கவிட்டுக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து தன் சகபாடிகள் விளையாடிக்கொண்டி ருந்த இடத்திற்கு வந்தாள். அங்கிருந்த ஒவ்வொரு குழந்தையும் பாலன் தன் வீட்டிற்குத்தான் வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தது.

“இல்லை, உங்க வீட்டுக்கு வரமாட்டார். எங்க வீட்டுக்குத்தான் வருவார். எங்க அம்மாவைக் கேட்டுப் பாருங்க” என்று ஆத்திரத்தோடு சொன்னாள் பிலோமினா.

“இல்லை, எங்க வீட்டுக்குத்தான் வருவார். எங்க அப்பா சொன்னாரே” என்றாள் எதிர் வீட்டு ஸ்டெல்லா.

அன்று குழந்தைகள் கண்ணாம்பூச்சி விளையாடவில்லை; மண் வீடு கட்டவில்லை; வண்ணாத்திப்பூச்சி பிடிக்கப் போகவும் இல்லை. வட்டமாகக் கூடியிருந்து அர்த்த ராத்திரியில் வரப்போகும் தேவ பாலனைப் பற்றித் தங்கட்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன.

இரவின் கருநிழல் உலகிற் கவிய ஆரம்பித்தது. அந்தச் சின்னஞ் சிறுசுகள் எல்லாம் தங்கள் தங்கள் வீடு திரும்பின.

பிலோமினா வீட்டு வாயிற் படியில் ஏறும் பொழுதே “பாலன் வந்துவிட்டாரா அம்மா?” என்று கேட்டாள்.

“இன்னும் வரவில்லையே கண்ணே” என்ற அம்மாவின் குரல் அடுக்களையிலிருந்து பதிலாக வந்தது.

“இருட்டானதும் வருவார் என்றாயே?”

“பன்னிரண்டு மணிக்குத் தான் அவர் வருவார். நீ போய் அப்பாவோடு இருந்து கொள். நான் இதோ வந்துவிடுகிறேன்” என்றாள் அம்மா. அன்று அம்மாவிற்குப் பிலோமினாவினால் அதிகம் தொந்தரவு இல்லை. வரப்போகும் பாலனைச் சொல்லிச் சொல்லித் தன் வேலைகளை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாள்.

பிலோமினா அறைக்குள் சென்றாள். அங்கே மேசைக்கு முன்னால் அப்பா நின்று கொண்டிருந்தார். மேசை மீது சாராயப்போத்தல் ஒன்று திறந்தபடி இருந்தது. அவர் முன்னால் சுவரிலே மாட்டுக் கொட்டிலிற் பிறந்திருந்த கிறீஸ்துநாதரின் படம் ஒன்று இருந்தது. அப்பா பூசை செய்து கொண்டு இருந்தார்!

இம்மாதிரியான நேரத்தில் அப்பாவிடம் ஏதுமே கேட்கக்கூடாது என்பது சின்னஞ் சிறு பிலோமினாவுக்கும் தெரியும்! அண்ணாந்து சுவரில் இருந்த படத்தைப் பார்த்தாள். ஆனால் உண்மைப் பாலனைக் காணத் துடித்துக் கொண்டிருக்கும் அவள் மனதிற்கு அந்தச் சலனமற்ற வெறும் படம் திருப்தியைக் கொடுக்கவில்லை, அறையை விட்டு வெளியேறினாள்.

“அம்மா, நான் வாசலிலே நின்று பாலன் ஸ்டெல்லா வீட்டிற்குப் போகிறாரா என்று பார்க்கிறேன்” என்றாள் பிலோமினா.

அடுப்பிலே வேலையாயிருந்த அம்மாவும் “ஆம்” என்றாள். பிலோமினா வாசலுக்கு வந்தாள். கதவு தாளிடப்பட்டிருந்தது. அங்கு நின்றபடியே “அம்மா, கதவைத் திறவேன்” என்று சப்தமிட்டாள்.

“இருட்டிலே வெளியே போகக்கூடாது. பேசாமல் உள்ளே போ” என்றாள் அம்மா.

“பாலன் ஸ்டெல்லா வீட்டிற்குப் போய்விடுவாரே” என்று அழத்தொடங்கினாள் பிலோமினா. குழந்தையின் அழுகை அதிகரிக்கவே “தெருவிற் பார்த்து விட்டுக் கெதியாக வந்துவிடு” என்ற நிபந்தனையோடு கதவைத் திறந்தாள் அம்மா. அவள் வேலைகள் எல்லாம் முடிந்திருத்தன.

பிலோமினா தெருவில் வந்து நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை பார்த்தாள். ஆனால் மார்கழி மாதத்தின் மையிருளைக் கிழித்துக்கொண்டு ஒளிப்பிழம்பாக ஒரு குழந்தையுருவும் அங்கே வரவில்லை. ஏமாற்றத்துடன் உள்ளே போனாள்.

“பாலன் வரவில்லையே அம்மா”

“நான் தான் சொன்னேனே; அவர் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவார் என்று. நாம் முகம் கழுவிப் புதுச் சட்டை போட்டுக் கொண்டு அப்பாவோடு கூடக் கோயிலுக்குப் புறப்படும் போது அவர் வந்து விடுவார்” என்றாள் அம்மா. அப்போது அர்த்த ராத்திரிப் பூசைக் காகக் கோயிலில் முதலாம் மணி அடித்தது.

அம்மா பிலோமினாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கே அப்பா உணர்வே அற்றவராகக் கதி ரையிற் சரிந்து கிடந்தார். தலை அலங்கோலமாகக் கண்கள் சிவந்து, வாயில் எச்சில் வடிய விகாரமாகப் பார்ப்பதற்குப் பயங்கரமாகக் காணப்பட்டார். மேசை யில் இருந்த போத்தல் வெறுமையாக இருந்தது. வீட்டு மூலையில் இருந்த குத்துவிளக்குச் சுடர் பிலோமினாவின் உள்ளம் போலத் துடித்தது. படத்திலிருந்த தேவபாலன் அப்பாவின் கோலத்தைக்கண்டு பிலோமினாவைப் போலவே பயந்து நடுங்கினார். அம்மா மேலே அடி எடுத்து வைக்கச் சக்தியற்றவளாய் ஸ்தம்பித்து நின்றாள்!

பிலோமினாவால் அதிக நேரம் பொறுமையாக நிற்க முடியவில்லை. “ஏன் அம்மா இன்னும் பாலன் வரவில்லை?” என்று கேட்டாள்.

“இந்தக் குடிகாரன் வீட்டுக்கெல்லாம் அவர் வரமாட்டார்” என்றாள் அம்மா கோபத்தோடு.

பிலோமினாவின் குழந்தையுள்ளம் அக்கணமே நொறுங்கித் தகர்ந்தது. விசித்து விசித்து அழத் தொடங்கினாள். அம்மா ஏமாற்றத்தின் பிரதிபலிப்பாக வந்த ஆத்திரத்தை எல்லாம் அப்பிஞ்சு முதுகிலே தீர்த்தாள். இவ்வளவும் ‘ஞானத்திலிருந்த’ அப்பாவிற்குத் தெரியவில்லை .

அழுது சோர்ந்த பிலோமினா தரையிலேயே படுத்து நித்திரையாகி விட்டாள். அம்மா மனமுடைந்து போய்க் கதிரையில் சாய்ந்து கொண்டு சுவரில் இருந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று கோயில் மணிகள் எல்லாம் ஒருங்கு சேர்ந்து ஒலித்துப் பாலன் வந்துவிட்டதை அறிவித்தன. அம்மா பிலோமினாவைத் திரும்பிப் பார்த்தாள். அழுது வீங்கிச் சிவந்திருந்த அவள் கன்னங்களில் விளக்கொளி பிரதிபலித்தது. பகலெல்லாம் பாலனைத் தேடித் தேடி அலுத்த அவள் கண்கள் சலனமற்றுக் குவிந்திருந்தன. பவளம் போலச் சிவந்த அவள் அதரங்களிற் புன்முறுவல் ஒன்று தவழ்ந்து தெளிந்தது. அடுத்த கணம் – பாலன் ஸ்டெல்லா வீட்டுக்குப் போகிறாரே என்று பிதற்றினாள்.

– ஈழகேசரி 24-12-50

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

0 thoughts on “பாலன் வந்தான்

  1. வருத்தமான கதை. பிள்ளைகளிடம் பொய் சொல்லி வளர்ப்பது மிகவும் தவறு என்பதை அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *