பாப்பம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2018
பார்வையிட்டோர்: 7,753 
 
 

அப்போது எனக்கு பதிமூன்று வயது.

என்னுடைய தாத்தா கோடைக்கானலில் ஒரு பெரிய பங்களா வைத்திருந்தார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் பங்களாவுக்கு அடுத்தது எங்களுடையது.

எல்லா விடுமுறை தினங்களிலும் நாங்கள் அலுக்காமல் கோடைக்கானல் கிளம்பிவிடுவோம். அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமாக கரைந்துவிடும்.

கோடைக்கானல் போகிற சமயங்களில் எங்க வீட்டு சமையல்காரர் சுப்பராமனும், அப்போது வீட்டில் எந்தப்பெண் வேலை செய்கிறாளோ அந்தப் பெண்ணையும் எங்களுடைய உதவிக்காக அழைத்துச் செல்வோம்.

அந்தச் சமயத்தில் பாப்பம்மா எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவளுக்கும் என்னுடைய வயதுதான் இருக்கும் என்பதால் எனக்கு விளையாட ஒரு ஆள் கிடைத்த சந்தோஷம்.

சுப்பராமனும், பாப்பம்மாவும் ஒருநாள் முன்பே கோடைக்கானலுக்கு ரயிலில் கிளம்பிவிட்டனர். நான், தாத்தா, அம்மா, அப்பா, மற்றும் இரண்டு தங்கைகள் எல்லோரும் எங்களுடைய பியூக் காரில் சென்றோம்.

வீடு போய்ச் சேர்ந்தபோது அங்கு ஏற்கனவே சுப்புராமனும், பாப்பம்மாவும் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகாக வைத்திருந்தனர். பாப்பம்மா ரொம்ப அதிசயமாக எல்லாவற்றையும் பார்த்தாள். பலா மரங்களிலும், பாக்கு மரங்களிலும் ஆடிக் கொண்டிருந்த குரங்குகளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். எல்லாமே அவளுக்கு அற்புதங்களாகத் தெரிந்தன,

உடனே எங்களுடன் வந்து விளையாட முடியாமல் பாப்பம்மாவிற்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. அதனால் நானும் என் தங்கைகளும் மட்டும் செண்பகப் பூ, மனோரஞ்சிதப் பூ போன்றவற்றை பறித்தும்; உதிர்ந்து கிடந்த குட்டி குட்டிப் பாக்குக் காய்களை சேகரித்தும் விளையாடிக் கொண்டிருந்தோம்.

மறுநாள் எங்கள் பங்களாவின் அருகில் இருக்கும் ஏரிக்கு போட்டிங் சென்றோம். பாப்பம்மா முதன் முதலாக போட்டிங் வரும் அனுபவம் என்பதால் அவள் கண்கள் விரிந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தின.

அதன்பிறகு தொடர்ச்சியாக கோக்கர்ஸ் வாக்; குகைகள்; சுயிசைட் பாய்ண்ட் எல்லாம் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்து அலுப்பில் தூங்கினோம். ஆனால் பாப்பம்மா மட்டும் வெளி வாசலில் தனிமையாக உட்கார்ந்திருந்தாள். முகத்தில் உற்சாகம் இல்லை.

மறுநாள் சாயங்காலமும் வேலையை முடித்துவிட்டு பாப்பம்மா தனிமையில் வெளியே சென்று உட்கார்ந்தாள். அப்பா எல்லோரையும் வெளியே கூட்டிச்செல்ல தயாரானார். நான் ஓடிப்போய் பாப்பம்மாவைக் கூப்பிட்டேன்.

ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தவள், “நான் எங்கேயும் வரலை… எனக்குத் தலையை வலிக்குது” என்றாள்.

நான் இதை அம்மாவிடம் போய்ச் சொன்னேன்.

“கோடைக்கானல் வந்தா தலையும் வலிக்காது, காலையும் வலிக்காது. சும்மா எதையாவது அவ சொல்லுவா… வரச்சொல்லு பேசாம…” பாப்பம்மாவுக்கு கேட்கும்படி கத்திச் சொன்னாள்.

“என்னால் நடக்க முடியாது… நான் வரலை..”

“காத்துல நடந்து போயிட்டு வந்தா தலைவலி பறந்து போயிடும்…கெளம்புடி பேசாம…” அம்மா கண்டிப்புடன் சொன்னாள்.

பாப்பம்மா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டே எங்களுடன் நடந்து வந்தாள். அவளிடம் உற்சாகம் எதுவும் தென்படாதது எனக்கு ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது.

அப்பா அம்மாவிடம், “பாப்பம்மா ஏன் டல்லா இருக்கா?” என்றார்.

“தலையை வலிக்குதாம். வரலைன்னுதான் சொன்னா. நாந்தான் அவளை கம்பெல் பண்ணிக் கூட்டி வந்தேன்.”

“தலையை வலிக்குதுன்னு சொன்னவளை நீ ஏன் வரச்சொன்னே?”

“கோடைக்கானல் வந்து தலையை வலிக்குதுன்னு சொல்ற பிள்ளையை இப்பத்தான் நான் பாக்கறேன்…”

“நெசமாகவே எனக்குத் தலையை வலிக்குது..” பாப்பம்மா குறுக்கிட்டாள்.

முகத்தை ‘உம்’ மென்று தூக்கிவைத்தபடி யாரோடும் எந்தப் பேச்சும் பேசாமல் வந்தாள். எங்களுடன் நடக்காமல் தனியாக பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

எனக்கு லேசாக எரிச்சல் வந்தது. தூரத்தில் சமவெளிக் காட்சிகள் அழகான வரைபடம்போல் தெரிந்து கொண்டிருந்தன. அதயெல்லாம் பார்த்து ரசிக்காமல் எங்கேயோ தள்ளிப்போய் நிற்கிறாளே என்ற கோபம் வந்தது.

அம்மாவுக்கும் பாப்பம்மா அப்படித் தள்ளிப்போய் நிற்பது பிடிக்கவில்லை. “என்னடி தள்ளி நிக்கறதுன்னு ஏதாவது பிரார்த்தனையா? இப்படி வந்து எங்களோட சேர்ந்து இருடி…” அம்மா சொன்னாள். வேறு யாரையோ சொல்கிறார்கள் என்பது மாதிரி பாப்பம்மா நின்று கொண்டிருந்தாள்.

“தலையை வலிக்குதுன்னு சொன்னவளை பேசாம சுப்பராமன் கூடவே இருக்கட்டும்னு விட்டுட்டு வந்திருக்கணும் நீ…” அப்பா அம்மாவிடம் முறைத்தார்.

பாப்பம்மா எங்களைத் திரும்பிப் பார்த்தாள். திடீரென “நான் ஊருக்குத் திரும்பிப் போறேன்” என்றாள்.

அம்மாவும் அப்பாவும் பாப்பம்மாவை முறைத்துப் பார்த்தார்கள்.

“ஊருக்குப் போனா தலைவலி போயிடுமா? பேசாம இரு. வீட்டுக்குப் போனதும் சுப்பராமனை ஏதாவது மாத்திரை வாங்கித் தரச் சொல்றேன். அதை சாப்பிட்டுட்டு பேசாம நல்லா படுத்து தூங்கு…தலைவலி பறந்துடும்.”

“மாத்திரையெல்லாம் வேண்டாம்… நான் ஊருக்குப் போகப் போறேன்…கோடைக்கானல் எனக்குப் பிடிக்கலை..” பாப்பம்மா பிடிவாதமாச் சொன்னாள்.

“என்ன திடீர்னு இப்படி அழிசாட்டியம் பண்றா?” – அப்பா.

“பண்ணுவா.. பண்ணுவா. ஏன் பண்ணமாட்டா?” – அம்மா.

“என்னை ஊர்ல கொண்டுபோயி விட்டுடுங்க…” – பாப்பம்மா.

“ஊருக்கும் போகக்கூடாது, கீருக்கும் போகக்கூடாது… பத்து நாள் கழிச்சு நாங்க போகும்போதுதான் நீயும் போகணும்…” அம்மா எச்சரிப்பது மாதிரி மிரட்டலான குரலில் சொன்னதும், பாப்பம்மா விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள்.

“இவளோட பெரிய வம்பாப் போயிடுச்சி…என்ன செய்ய இப்ப?” அப்பா எரிச்சலுடன் அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.

“வீட்டுக்கு வா… பேசிக்கிறோம் ஒன்னை.” அம்மா பாப்பம்மாவிடம் கறுவினாள்.

எல்லோரும் எரிச்சலுடன் வீடு திரும்ப ஆரம்பித்தோம். யாரும் யாரோடும் பேசவில்லை. பாப்பம்மா அழுகையை நிறுத்திவிட்டு எங்களுடன் நிசப்தமாக திரும்பிக் கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்ததும் அம்மா சுப்பராமனிடம் மாத்திரை வாங்கிவரச் சொன்னாள்.

சுப்பராமனும் உடனே ஓடிப்போய் மாத்திரை வாங்கி வந்தார். பாப்பம்மா மாத்திரையைச் சாப்பிடவே முடியாதென்று பிடிவாதமாகச் சொன்னாள். எல்லோருக்கும் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. உடனே ஊருக்குப் போயே தீரணும் என்பதையே பாப்பம்மா திரும்பத் திரும்பச் சொன்னாள்.

“பொறகு எதுக்குடி எங்ககூட வந்தே?” அம்மா கோபத்தில் கத்தினாள்.

“சும்மா நீ நெனச்ச நேரத்துல ஊருக்குப் போகணும்னு சொன்னா, எவன் உன்னைக் கொண்டுபோய் விடறது?” அப்பாவும் சேர்ந்து கத்தியதும் பாப்பம்மா பெரிய குரலில் அழ ஆரம்பித்துவிட்டாள்.

பங்களாவை விட்டு வெளியேவந்து நின்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவிற்கு அவமானமாகப் போய்விட்டது.

பாப்பம்மாவை ஊருக்கு அனுப்பி வைப்பததைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிந்தது. ஆனால் மறுநாள்தான் ரயில்…

அந்த ரயிலில் பாப்பம்மா சனியனை சுப்பராமனுடன் ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவது என்று அம்மாவும் அப்பாவும் பேசி முடிவு செய்தார்கள். அவளை ஊரில் அவள் வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு, சுப்பராமன் மட்டும் உடனே பஸ்ஸில் திரும்பிவிட வேண்டும் என்றும் தீர்மானம் செய்தார்கள்.

அதன் பிறகுதான் பாப்பம்மாவின் அழுகை நின்றது.

அவளுடைய முகத்தில் சிறிது வெட்கம் கலந்த சிரிப்புகூட வரப் பார்த்தது. நாங்கள் யாரும் அவளைப் பார்த்து சிரிக்கவில்லை. கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டோம். யாரும் அவளுடன் ஒரு வார்த்தைகூடப் பேசவும் இல்லை.

மறுநாள் ஊருக்கு கிளம்புகிற வரைக்கும் அவளும் மெளனமாக வாசலிலேயே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொன்டிருந்தாள். நானும் என் தங்கைகளும் அவளை முற்றிலுமாக ஒதுக்கி வைத்தோம்.

ஒரு வழியாக மறுநாள் பாப்பம்மா சுப்பராமனுடன் ஊருக்குப் போய் தொலைந்தாள். அவள் கிளம்பிப் போன பிறகும்கூட எங்களுக்குள் கலைந்து போயிருந்த கோடைக்கானல் இனிமை சீர் பெறவில்லை. அவளைத் திட்டித் தீர்த்தோம்.

இனிமேல் வேலைக்காரப்பெண் எவளையும் கோடைக்கானல் அழைத்து வரக்கூடாது என்று அப்பா அம்மாவுக்கு உத்திரவு போட்டுவிட்டார்.

கோடைக்கானலில் மேலும் பத்து நாட்கள் இருந்துவிட்டு ஊர் திரும்பினோம்.

நாங்கள் வந்துவிட்டது தெரிந்ததும் பாப்பம்மாவின் அம்மாதான் எங்கள் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனாள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது.

சில வருஷங்கள் கழித்து என் தங்கை மூலமாகத்தான் எனக்குத் தெரிந்தது…. ‘கோடைக்கானலில் தலைவலி என்று பாப்பம்மா சொன்னதெல்லாம் பொய். எங்களுடன் கோடைக்கானல் வந்து சேர்ந்த மறுநாள் பாப்பம்மா பெரிய மனுஷியாகி விட்டிருந்தாள்’ என்று.

இத்தனை வருடங்கள் சென்றும் என்னால் இந்தச் சம்பவத்தை மறக்க முடியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *