‘ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரவேண்டாம், வீண் அலைச்சல்தானே.. நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நான் போய்க்கொள்கிறேன்.. ஒவ்வொரு முறையும் வந்து வழியனுப்ப நான் என்ன விருந்தாளியா, இல்லை சின்னப்பிள்ளையா?’ என்று முதலில் கிண்டலாகவும், பின்னர் அழுந்திச்சொல்லியும் கேளாமல் அதன் பின் வாக்குவாதமாகவும், சண்டையாகவும் மாறும் இதே வாக்கியங்கள்.. ஒவ்வொரு தடவையும் நான் ஊருக்குச்சென்று திரும்பும் போதும் இது நிகழ்கிறது எனக்கும் என் அம்மாவுக்கும் இடையே. அப்படி அவர் ரயிலடி வரை வருவதில்தான் எனக்கு என்ன குறைந்துவிடப்போகிறது?
அவரும்தான் வீட்டில் இருந்தால் என்ன? பிரிவு. அந்தப் பிரிவை இன்னும் ஒரு மணி நேரம் தள்ளிப்போட முயலும் அங்கலாய்ப்பு. அந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக சண்டை, ‘ஊரு உலகத்துல பிள்ளைகள் அம்மாவை உடனேயே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். எனக்கென்று வாய்த்திருப்பவை கொஞ்சமும் மதிப்பதில்லை. என் தலையெழுத்து. ரயில்நிலையம் வரைகூட அனுமதிப்பதில்லை..’ என்று கண்ணீரில் வந்து நிற்பார். இந்த வார்த்தைகள் எதுவுமே மனதிலிருந்து வருவதில்லை.
பிரிவை மேற்கொள்ளும் பிள்ளை மீது ஏதும் குற்றம் சுமத்தி, அந்தப் பிரிவின் வலியை குறைத்துக் கொள்ளும் முயற்சி. ஆனால் அதனால் எந்தப் பயனும் இருப்பதில்லை.
சில தடவைகள் நான் அமைதியாகவே இருந்து, ‘வரவேண்டுமானால் வாருங்கள் அம்மா’ என்று ரயிலடிக்கு அழைத்தாலும் கூட, அவரே அறியாமல் அந்தச் சண்டைக்கான இன்னொரு காரணம் முளைக்கும். நான் பிடிக்கவில்லை என்று ஒதுக்கிய பழைய சட்டையை என் பையில் எடுத்து வைத்துவிட்டு, ‘புது சட்டையை போடாமலே வைத்திருந்து ஏன் இப்படி வம்பாகத் தொலைக்கிறாய்? சம்பாதிக்கும் திமிரா? இதைச் சென்னைக்குக் கொண்டுசென்று அலுவலகத்துக்குப் போட்டுச் சென்றால்தான் என்ன?’ என்று துவங்கித் தொடரும்.
பின்னர் பேருந்தில் நெல்லையை அடைந்து, கடைசி நேர இனிப்புகள், பழங்கள் வாங்கிக்கொண்டு ரயிலடிக்கு வந்தாயிற்று. இருக்கையையும் தேடி அமர்ந்தாயிற்று. இயல்பாக இந்த வாழ்க்கையையும், நிகழ்வுகளையும்தான் இன்னும் ஏற்றுக்கொள்ள இன்னும்முடியவில்லை. படிப்பு முடித்ததும் 22 வயதில் பிள்ளையை வேலை தேடி தனியே அனுப்பிய நாளில் உணர்ந்ததைப் போலவேதான் இன்று மணமாகி, மனைவி், குழந்தையோடு வாழும், தலை நரைக்கத்துவங்கிவிட்ட 36 வயதுப் பிள்ளையை வழியனுப்புகையிலும் உணரமுடிகிறது. ரயில் கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க.. பேச்சில் ஒரு அர்த்தமிழந்த பரிதவிப்பு ஏற்படுகிறது. கண்கள் தளும்புகின்றன. அதைக் கேட்கவும், பார்க்கவும் முடியாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டு உள்ளே பைகளை அடுக்கிவைப்பதாய் பாவனை செய்கிறேன். வலுக்கட்டாயமாக புன்னகைத்து, இயல்பாய் இருப்பதாய் காட்டிக்கொள்ள முயல்கிறேன். இதற்காகத்தான் அவரை ரயிலடி வரை வரவேண்டாம் என்று சொல்வது. ஆனால் அவர் அப்படி வராமலேயிருந்தாலும் கூட அந்தப் பரிதவிப்பில் இருந்து மட்டும் என்னால் எப்போதுமே தப்பமுடிவதேயில்லை.
ஆரவாரமும், கொண்டாட்டமுமாய் நிகழ்ந்தது தங்கையின் திருமணம். மூன்று நாட்களாய் உற்சாகமும், மகிழ்ச்சியும். அன்றிரவு அவளை அந்த இன்னொரு வீட்டில் விட்டுவந்தபோது அவள் கண்கள் கொப்பளிக்க அழுத போது கூட இயல்பு இது உணர்ந்து, ‘நீயும் உணர், என் அன்பு தங்கையே.. சிந்திப்பவளுக்கு இதொன்றும் சிரமமல்லவே’ என்று கூறிச்சிரித்து வந்துவிட்டேன். பக்கத்து ஊர்தானே? எப்போதும் தங்கை என் பார்வைக்கோணத்தில்தானே என்ற இறுமாப்பு. ஆயினும் அன்றிரவு வீட்டுக்கு வந்தபோது கத்திலறைந்த வெறுமை என் வாழ்நாளில் எப்போதுமே நான் அறியாதது.
அதன் வீச்சைப் பொறுக்க முடியாமல் இரவெல்லாம் நண்பர்களுடன் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்துவிட்டு காலையில்தான் வீடு திரும்ப நேர்ந்தது.
கோழியின் சிறகு மறைப்பிலிருந்து வெளியேறி, ஏதோ எல்லாம் தெரிந்ததைப்போல 3 அடிகள் விலகி இரையெடுப்பதைப்போல தலையைக் குனிந்து குனிந்து நிமிர்கிறது நடைகூட இன்னும் படித்திடாத அந்தப் பட்டுக்குஞ்சு. முதல் முறையாக 6 மணி நேரங்கள் எங்கள் பிடியிருந்து உன்னை நாங்கள் விடுவித்து இவ்வுலகுக்கு உன்னைத் தரவேண்டும். ஊரெங்கும் நடப்பது, உலகெங்கும் நடப்பதுதான். சீருடை,
புத்தகங்கள், பை, புதிய காலணிகள். உற்சாகமான ஏற்பாடுதான்.
ஆனால் முதல் நாள் உன்னை பள்ளியில் விட்டுவிட்டு, மூடப்பட்ட பள்ளிக் கதவுகளுக்குப் பின்னே எத்தனை நேரம் நின்றுகொண்டேயிருந்தேன் சுபா? ஏன் என்னால் அங்கிருந்து நகரவே முடியவில்லை? யாரும் பார்ப்பார்களோ என்று போனைஎடுத்து காதில் வைத்துக்கொண்டு எதற்காக அவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தேன்?
உடலைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளட்டும், வயிற்றுப்பிள்ளைக்காரியை கவனிக்கும் பொறுப்பும், நேரமும் நமக்கு இருக்கவா செய்கிறது என்று மூன்று மாதத்தில் ஊரில்கொண்டு போய் விட்டது மனைவியை. இதோ ஆயிற்று இன்னுமொரு மூன்று மாதங்கள். அவளில்லாத அடுத்த இரவே கூட ஒரு தவிப்பில் விழுந்தது நினைவிருக்கிறது.
சுதந்திரமாக இருக்கலாம், மது அருந்தலாம், புகைக்கலாம். நண்பர்களோடு ஊர் சுற்றலாம். தோளிலிருக்கும் சுமை இப்போது இல்லைதான், ஆனால் மனதில் ஒரு சுமையாக உட்கார்ந்திருப்பவளை எப்படி இறக்கிவைக்க முடியும்? யாரும் பார்க்கப்போவதில்லை என்ற நினைப்பில் தலையணைக்கு மேலே சரசரக்கும் அவளது ஷிஃபான் சேலைகளை விரித்துப் படுத்துத் தூங்க வேண்டியிருந்தது. நம்மை ஒரு சின்னஞ்சிறுமியைப் போலவும், அவள் கையை விட்டகலாத பட்டுப்பொம்மையைப் போல அந்த சேலையையும் உணரமுடிகிறது. மனதுக்குள் ஒரு மெல்லிய படபடப்பு. அலுவலகம் விட்டு வந்ததும் ஏதேனும் அரிதாய்க் காரணம் கண்டுபிடித்து தினமும் ஒரு வாக்குவாதம் செய்த நேரத்தை அமைதியாகக் கழிக்க முடியவில்லை. ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழக்கூடிய ஸ்பரிசம் இல்லை. டிவியாலும், புத்தகத்தாலும் இந்த வெறுமையைப் போக்கிவிடவே முடியாது. எதிலும் கவனம் நிலைப்பதே இல்லை.
உடலுறவின் கிளர்ச்சியைப் போலவே தொலைவிலிருக்கையில் ஏற்படும் இந்த மனவுறவிலும், ஒரு பெரும்கிளர்ச்சி இருக்கிறது. இதில் கூடுதலாக கொஞ்சம் வலியும். மூன்று மாதங்களுக்குப் பின் இதோ செல்கிறேன். வாயிலில் நின்றுகொண்டிருக்கிறாள். வேறு யாரும் இல்லை. இருந்தாலும் கூட அவளுக்கு அது ஒரு பொருட்டாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அவள் முகம் எப்படி இருக்கிறது? வயிறு எப்படி இருக்கிறது? எதையும் பார்க்க, கேட்க நேரமில்லை. அது வேறு. முதலில் இந்தக் கணக்கைத் தீர்க்க வா என்கிறாள். பாய்ந்து கட்டியணைத்து ஒரு நாற்காலியில் அரைகுறையாய்ச் சாய்த்து, சாய்ந்து மார்போடு முகம் புதைத்து எத்தனை நிமிடங்கள் இருந்தாள்? நின்றுகொண்டுதானே இருந்தாள்.. எங்கிருந்தோ ஓடிவந்தவள் போல ஏன் இப்படி ஒரு படபடப்பும், துடிப்பும்?
வாய்ச் சொல் ஏதுமின்றி நாம் அந்த நிமிடங்களில் எத்தனை யுகங்களுக்கான கதைபேசினோம்?
90 நாட்களுக்கு முன்னால் நான் கையசைத்த அந்த விநாடியில் தொற்றியதா உன்னையும், என்னையும் ஒரு பசப்பு.? அதனால்தானா நான் தவித்தேனா? அதைத்தானா இப்போது உன் உடல்மொழியும் சொல்கிறது? பரவி வேர்பிடித்த அந்தப் பசலையில் இருந்து மீண்டெழத்தானா நமக்கு இத்தனை நிமிடங்கள்?
உறவுகள்தான் எத்தனை மெல்லிய இழைகளால் பின்னப்பட்டிருக்கின்றன. நெருங்கியிருக்கையில் ஆழ அமிழ்ந்தும், விலக விலக மேலெழுவதுமாய் ஒரு மின்னிழையைப் போன்ற ஒரு தவிப்பு. அறிவு இவ்வுலகை ஆட்சி செய்யவில்லை. அறிவு மனிதத்தைப் பிழைத்திருக்கச் செய்திருக்க முடியாது. உணர்வுகள்தாம் நம்மைப் பல்கிப் பெருகியிருக்கவும், நெடும் வரலாற்றை நோக்கி வழி நடத்தியிருக்கவும் செய்திருக்கவேண்டும் இல்லையா?
– ஜனவரி 10th, 2012