கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 3,132 
 
 

(1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அருளானந்தம் மாஸ்டர் அன்று மாலை ஏழு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, கேற்றடியில் அவர் மனைவி கமலாம்பிகையும் ஏகபுத்திரன் சதானந்தனும் கைகளிலே பொல்லுகளுடன் அவரை வரவேற்றனர்.

அந்த வரவேற்பு அவருக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால், பொல்லுகளோடு பொல்லாய் அவர்களது முகங்களிலே கோபக் கனலும் கொழுந்துவிட்டு எரிந்தது தான் வியப்பையும் திகைப்பையும் ஒரு சேர அளித்தன.

அவர் ‘என்ன? ஏது? என்று வாய் திறக்க முன்னரே கமலாம்பிகை பொரிந்து தள்ளத் தொடங்கினாள்.

“ஒண்டு, நாங்கள் இந்த வீட்டிலை இருக்கவேணும். அல்லது உங்கடை செல்லப் ‘பப்பி’ நாய் இருக்கவேணும். இரண்டத்தால் ஒண்டைத் தீர்மானியுங்கோ. அந்தச் சனியன் அடிக்கடி அறுத்துக்கொண்டு ஓடுறதும் நாங்கள் துரத்திப் பிடிக்கிறதும் இனிமேல் நடக்காது”

அவளது தீர்மானத்தை ஆதரித்துச் சதானந்தன் தொடர்ந்தான். “ஓம், அப்பா! அயற் சனங்களெல்லாம் பயந்து கேட்டைப் பூட்டிப் போட்டினம். உங்கடை சனியன் அறுத்துக் கொண்டு ஓடினால் பரவாயில்லை. ஆக்களில வாயும் வைக்குது.”

மாஸ்டருக்கு விஷயம் புரிய அதிக நேரம் ஆக வில்லை . அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். வந்த களைப்பையும் மறந்து மனைவியையும் மகனையும் சமாதானப்படுத்த உதடுகளிலே மெல்லிய சிரிப்பை இழை யோடவிட்டார். “இதுக்குத்தானே இவ்வளவு ஆர்ப்பாட்டம்? நான் என்னவோ ஏதோ எண்டு பயந்து போனன். சதா, இந்தா, சைக்கிளை உள்ளுக்குக் கொண்டு போ, நான் பப்பியைத் தேடிக்கொண்டு வாறன்.”

மாஸ்டர் வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு பப்பியைத் தேடும் படலத்தில் இறங்கினார். மனைவியும் மகனும் புறுபுறுத்த வண்ணம் உள்ளே சென்றார்கள். அருளானந்தம் மாஸ்டர் தமது பெயருக்கேற்ப அருளும் ஆனந்தமும் உள்ளவர் என்பதை அயல் அட்டையும் அவர் கற்பிக்கும் பாடசாலையும் ஊரும் உலகும் நன்கு அறிந்திருந்தன. எப்பொழுதும் சிரித்த முகம். மனிதர்களில் அன்பும் பிராணிகளில் கருணையும் நிறைந்தவர். பிராணிகளிலே நாயில் அவருக்கு விசேட இரக்கம்.

மாணிக்கவாசகர் முதலாம் சமயகுரவர்கள் தம்மை நாயிற் கடையராய்ப் பாவித்தமையால், சமய நம்பிக்கை பெரிதும் உடைய மாஸ்டர், நாய்களை நேசித்தார் என்று சொல்வதற்கில்லை. நாய் நன்றியுள்ள நல்ல பிராணி என்பதில் அவருக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. எனவே, சிறு வயதிலிருந்து நாய் வளர்ப்பில் அவர் பெரிதும் ஈடுபாடு காட்டினார்.

ஆனால், அவருக்கு வாய்த்த வாழ்க்கைத் துணைவி அவர் போக்கிற்கு நேர் எதிரானவள். மச்ச மாமிசம் சாப்பிடாத சைவாசாரக் குடும்பத்தைச் சேர்ந்த கமலாம் பிகைக்கு, நாய் பூனைகளைக் கண்டாலே அருவருப்பு. அதிலும் நாயின் உண்ணியும் அதன் ‘சிணி’ நாற்றமும் அவளுக்கு ஒத்துவராதவை. மற்ற எல்லா விஷயங்களிலும் கணவரோடு ஒத்துப் போனவளுக்கு அவரின் ‘நாய்க் காதலில் ஒத்துப் போவது மிகவும் கடினமாகவே இருந்தது. தகப்பனில் மட்டுமரியாதையும் அன்பும் செலுத்தி வந்த சதானந்தனும் இந்த விஷயத்தில் தாயின் அடிச்சு வட்டையே பின்பற்றி நடந்தான்.’

மற்றவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப் பளித்து அவர்கள் எவ்வகையிலும் அதிருப்தி கொள்ள இடமளிக்காத மாஸ்டர், மனைவியதும் மகனதும் மனப் போக்கை அநுசரித்து நாய் வளர்ப்பைச் சிறிது காலம் கைவிட்டிருந்தது உண்மையே..

ஆனால்… இந்தப் பப்பி…?

பப்பி, மாஸ்டரிடம் வந்து சேர்ந்ததே ஒரு சுவாரஸ்ய மான கதை. அல்சேஷனின் கம்பீரமும் ஊர் நாயின் குணவியல்புகளும் ஒருங்கமைந்த பப்பி, இரண்டு ஆண்டு களுக்கு முன்புவரை மாஸ்டர் கற்பித்த பாடசாலை உப அதிபராய் இருந்த செல்வநாயகம் அவர்களின் உடைமை யாக இருந்துவந்தது.

சிறு பராயத்திலிருந்தே அதற்குக் குறும்புக்குணம் அதிகம். கட்டுப்பாடு என்பதே அதற்கு ஒத்துவராத விஷயம். செல்வநாயகம் பப்பியை அடக்கிவைக்க எண்ணி நாள் முழுவதும் சங்கிலியில் கட்டிவைப்பார். ஆனால், பப்பிக்குச் சங்கிலி ஒரு பொருட்டல்ல. ஏதோ வகையில் சங்கிலியி லிருந்து தன்னைக் சுழற்றிக்கொண்டு முற்றம் வீடெல்லாம் சுற்றும். வீட்டிற்கு வருவோரை உறுமியும் குரைத்தும் பயமுறுத்தும். சிலவேளைகளில் அவர்களின் தசைகளிலே தனது பற்களின் கூர்மையை அது பரிசோதித்துப் பார்ப்பதும் உண்டு.

அதன் பரிசோதனைக்கு ஒரு தடவை மாஸ்டரும் இலக்கானார். இதனால் கோபமுற்ற செல்வநாயகம் பப்பிக்குத் தண்டனை கொடுக்க முற்பட்ட பொழுது, மாஸ்டர் அவர் செயலைத் தடுத்து நிறுத்தினார். “பாவம், வாயில்லாப் பிராணி. அதை ஏன் அடிக்கிறியள்? வேண்டாம், விட்டிடுங்கோ” என்று அவர் சொன்னபொழுது, சிலுவையில் அறையப்பட்ட யேசு கூறிய திருவாக்கு அவரின் சொற் களிலே எதிரொலிப்பதாகச் செல்வநாயகம் உணர்ந்தார்.

பப்பியின் வீரப்பிரதாபங்கள் மதிலேறிப் பாய்வதாகவும் தெரு நாய்களைக் கடித்துக் குதறுவதாகவும் சின்னஞ் சிறுசுகளைக் கையில் கல்லோடு புறங்கால் பிடரியிற்பட ஓடவைப்பதாகவும் வளர்ந்து வந்த வேளையில்…

செல்வநாயகம் தமது உபஅதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொழும்பில் தம் மகனோடு சென்று வாழ நேர்ந்தது. “பேயோடாயினும் கூடிப்பிரிதல் அரிது” என்பார்கள். இது நாய்க்கு மட்டும் விதிவிலக்கா, என்ன? பப்பியையும் அதன் குறும்புகளையும் மறந்து அதை யாரிடமாவது கையளித்துச் செல்லவேண்டும் என்ற முடிவினை எடுக்க நேர்ந்த பொழுது, செல்வநாயகத்துக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் அது தவிர்க்க முடியாதது!

பப்பியை யாரிடம் ஒப்படைப்பது? செல்வநாயகத்தின் மனப்போராட்டத்தினைத் தீர்க்கும் ஆபத்பாந்தவராய் மாஸ்டர் பப்பியை ஏற்க முன்வந்தார். அவர் செயல் செல்வநாய கத்துக்கு வியப்பையும் திகைப்பையுந்தான் உண்டாக்கியது. “என்ன மாஸ்டர்? பப்பியின்ரை குணம் உங்களுக்குத் தெரியுந்தானே? அதை உங்களாலை கட்டியவிழ்க்க முடியுமே? உங்கடை பெண் சாதியும் மகனும் சம்மதிப்பினையே?” என்று செல்வநாயகம் தயங்கித் தயங்கிக் கேட்டார்.

ஆனால், பப்பியைக் கையேற்பதில் மாஸ்டர் மிகவும் உறுதியாய் இருந்தார். “சேர், பப்பியிலை எனக்கு என்னை அறியாமலே பாசம் விழுந்துவிட்டது. அவவும் சதானந்த னும் தொடக்கத்திலை முணுமுணுப்பினந்தான். காலப் போக்கில் சரியாயிடும். நீங்கள் பப்பியை எனக்குத் தாருங்கோ.” மாஸ்டர் ஒற்றைக்காலில் நின்றார்.

செல்வநாயகத்தின் பாரம் இறங்கியது. மாஸ்டர் அதன் பாரத்தைத் தமது தடந்தோள்களிலே சுமக்கத் தயாராகிவிட்டார். தயார் என்ன…?

செல்வநாயகம் கொழும்பு சென்றதும் ‘பப்பி’ மாஸ்டரின் வீட்டில் குடியேறியதும் ஒரேநாளில் நடந்தன.

அமைதிக்குப் பெயர் பெற்றிருந்த மாஸ்டரின் வீடு அந்த நாளிலிருந்து போர்க்களமாய் மாறிவிட்டது.

மாஸ்டரின் வீட்டுக்கு வருவோர் தொகை குறைய லாயிற்று. பப்பி அவரது வீட்டுச் சுவரை லாகவமாகப் பாய்ந்து ஒழுங்கையிலே ‘திக்விஜயம்’ செய்வது அடிக்கடி நடக்கும் சம்பவமாகி விட்டது. அயலவர்கள் வீடுகளுக்குள்ளே இருந்த வண்ணம் பப்பிக்குத் தங்கள் மாரியாதை யைச் செலுத்தலாயினர். அவ்வேளைகளில் மாஸ்டர் வீட்டில் இல்லாவிட்டால் தாயும் மகனும் பொல்லுகளோடு புறப்பட்டுப் பப்பியைத் தேடும் படலத்தில் இறங்குவதும் சர்வ சகஜமான நிகழ்ச்சியாகிவிட்டது.

அப்படிப்பட்ட ஒரு நாள் தான் இன்றும்…. ஒருவாறு மாஸ்டர் பப்பியைத் தேடிப் பிடித்துவிட்டார். இஞ்ச பாரும், பப்பி பாவம்! வாயில்லாப் பிராணி, அது மனிசரைப் போலப் பகுத்தறிவுள்ளதோ? இது இருக்கிறதாலதான் கள்ளர் பயம் இல்லாமல் இருக்கிறம். பொறுமையா இருங்கோ. நாளைக்கு நல்ல பலமான சங்கிலி வாங்கி வந்து கட்டிவைக்கிறன். சரியோ?’ என்று ஆறுதல் சொல்லி, மாஸ்டர் வாயுள்ள பிராணியாகிய தம் மனைவியின் வாயைக் கட்டிவிட்டார். சதானந்தனும் அடங்கிப் போய்விட்டான்

அமைதிக்கும் ஒழுங்கிற்கும் செல்வச் செழிப்புக்கு பெயர் பெற்ற யாழ்ப்பாணத்திலே இவையெல்லாம் படிப்படியாக வீழ்ச்சியுற்று முற்றாக ஸ்தம்பிதமடைந்து மயான பூமியாக மாறும் நிலை ஏற்பட்ட பொழுது, பாதிப்புக்குள்ளாகி அகதிகள் முகாமை நாடிச் சென்ற மக்கள் கூட்டத்திலே அருளானந்தம் மாஸ்டரின் குடும்பமும் அடங்கியது.

துப்பாக்கிச் சுடுகள், ‘ஷெல்’லடிகள், கண்ணி வெடிகள், பீரங்கித் தாக்குதல்கள், ‘ஹெலி’யிருந்து குண்டு வீச்சுக்கள் என்பன நாளாந்த நிகழ்ச்சிகளாகி விட்ட சூழ் நிலையில், ஒவ்வொருவரும் தந்தம் உயிரைக் காப்பதையே குறியாகக் கொண்டு முகாங்களிலே தஞ்சம் அடைந்தனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் உயிர் போலக் கருதி உழைத்துச் சேர்த்த பொருட்களையே வேண்டாம் என்று விட்டு ஓடுகையில் கேவலம் நாய்களையும் பூனைகளையுமா நினைக்கப் போகிறார்கள்? –

“திரும்பி உயிருடன் வந்தால் பார்ப்போம்” என்று தமது வீட்டைக் கடவுளின் காவலில் விட்டுச் சென்ற கூட்டத்தில் அடங்கிய மாஸ்டரும் குடும்பத்தினரும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தஞ்சமடைந்தனர்.

பசி, பிணி, துன்பம், அச்சம் என்பனவே ஆதிக்கம் கொண்ட நாள்கள் மெல்லக் கழிந்து போயின. என்றாலும், மக்களைப் பொறுத்தவரையில் மழைவிட்டும் தூவானம் விடாத நிலை. அநேகமான பேருக்கு வீடு செல்வதா, விடுவதா என்ற மனப்போராட்டம். அவ்வேளயில் மாஸ்டர் முதலில் நினைத்துக் கொண்டது பப்பியைத்தான்! “பாவம் பதினைந்து நாள்களாய்க் கட்டுக்கிடையிலே கிடந்து என்ன பாடுபட்டிருக்குமோ? இத்தனை நாளும் உணவில்லாமல் அது செத்துத்தான் போயிருக்கும். வீடெல்லாம் நாற்றம் குடலைப் பிடுங்கும். வீட்டுக்குப் போய்ச் செத்த பிணத்தைப் புதைத்துவிட்டாவது வருவம்.”

0 இரண்டு நாள்கள் போர் நிறுத்தப் பிரகடனம் செய்யப்பட்டு, ஊரடங்குச் சட்டமும் தளர்த்தப்பட்ட நிலை மையில் “வீடு செல்லலாமா? இன்னும் சில நாட்கள் பொறுத்துப் போகலாமா?’ என்று கமலாம்பிகையும் சதானந் தனும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், மாஸ்டர் முடிவு செய்து விட்டார். “நீங்கள் இருங்கோ, நான் வீட்டு நிலைமையைப் போய்ப் பார்த்திட்டு வாறன்”

பப்பி உயிருடன் இருக்கவும் கூடும் என்ற நம்பிக்கை யில் ஒரு பெட்டி பிஸ்கட் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு புறப்பட்டார் அவர்.

எந்நேரமும் கலகலப்பும் ஆரவாரமும் நிறைந்திருந்த வீடு சூனியத்தில் அமுங்கிப் போய் மௌனம் ஆதிக்கம் கொண்டிருப்பதைப் பப்பியால் சீரணிக்க முடியவில்லை.

மாஸ்டரின் ‘பப்பி’ என்ற அன்புக் குரலுக்கு மட்டு மல்ல, கமலாம்பிகையின் கோபக் கத்தலுக்குக் கூட அது அலந்து போயிற்று, தனக்கு ‘மூட்’ வரும் வேளைகளில் பந்தெறிந்து ‘பப்பி’ அதை வாயால் கவ்வி வந்து தர, அதன் முதுகிலே தட்டி உற்சாகப்படுத்தும் சதானந் தனுக்காகவும் ஏங்கலாயிற்று.

வானத்தைப் பீறிக்கொண்டு செல்லும் ‘ஷெல்’களின் கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தையும் பீரங்கி ஓசையையும் துப்பாக்கிச் சத்தங்களையும் தனித்திருந்து பார்க்கவும் கேட்கவும் நேர்ந்த பயம் வேறு அதனை இம்சைப் படுத்தியது.

இவற்றுக்கு மேலாகப் பசி எடுத்து வயிறு ஒட்டிப் போக அதைத் தாங்க முடியாத நிலையில் பப்பி பரிதாபமாக ஊளையிட்டது. கேட்க அண்டை அயல்களில் யாராவது இருந்தால்தானே? –

இத்தனை பயங்கரங்களுக்கு இடையிலும் ‘எரிந்த வீட்டில் பிடுங்கியது அறுதி’ என்று கொள்ளையடிக்க வரும் கிராதகக் கூட்டம் வேறு.

ஆனால், பப்பி அந்த வேளைகளில் பசியையும் மறந்து குரைத்தும் உறுமியும் நின்ற இடத்திலேயே சுழன்று சுழன்று போடும் சத்தத்தால் கொள்ளைக்காரர் மதில் ஏறிப் பாய்ந்து வரப்பயந்து, மாஸ்டர் வீட்டில் கொள்ளை யிடும் திட்டத்தைக் கைவிட நேர்ந்தது.

ஆனால், அதற்கு வட்டியும் குட்டியுமாக அந்த ஒழுங்கையிலிருந்த மற்ற வீடுகளில் ரி.வி.செற் தொடக்கம் அலவாங்கு, மண்வெட்டி, தேங்காய், தேசிக்காய் வரை கிடைத்தவையெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன.

கொள்ளை ஒரு புறம் என்றால் ‘ஷெல்’ அடியால் உடைந்த வீடுகளும் பல. ஏதோ நல்ல காலம்! மாஸ்டரின் வீட்டுக்கு வந்த ‘ஷெல்’ அடி ஆபத்து; ஒடுகள் சிலவற்றை உடைப்பதோடு நீங்கிப் போயிற்று.

ஆனால், அதன் பயங்கரச் சத்தம் பப்பியைத் தாங்க வியலாத அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அதைக் கட்டியிருந்த பலமான இரும்புச் சங்கிலியிலிருந்து அதற்கு விடுதலை அளித்தது. இது பப்பியின் அசுர பலத்தால் ஏற்பட்ட விடுதலையா? அல்லது அதன் கடைசி முயற்சிக்குக் கடவுளும் இளகியதால் ஏற்பட்ட பயனா என்று சொல்வது கஷ்டந்தான்.

இவ்வளவு பயங்கரத்துக்கும் பசிக்கும் வேதனைக்கும் இடையிலும் தன்னைக் கட்டிய தளை விடுபட்டதே என்ற ஆனந்தத்தில் பப்பி வீட்டைச் சுற்றிக் களைக்கும் வரை ஓடியது. ஆனால், ஓய்வொழிவின்றி ஓடிப் பழக்கப்பட்டதுக்கு இன்று முன்பு போல முடியாமைக்குக் காரணம் பசியும் தாகமுந்தான்.

சிறிது நேரத்தில் அது கேற்றடியில் வந்து அயர்ந்து போய் மண்ணில் விழுந்து அசையக் கூடமுடியாது அப்படியே கிடந்தது. பசி, தாக வேதனையோடு மாஸ்ட ரையும் அவர் மனைவியையும் காணாத வேதனையும் சேர்ந்துகொள்ள அது பெரும் குரலெடுத்து ஊளையிட்டது. பின் மீண்டும் எழுந்து முன்போல மதிற் சுவரைப் பாய முனைந்து பார்த்து…

தோற்றுப் போயிற்று….

பாவம்! பப்பியின் பலம் எல்லாம் ஓடுங்கிப்போய் அது மரணம், வாழ்வு என்ற இரண்டு முனைகளுக்கும் இடையே ஊசலாடத் தொடங்கியது.

எனினும், பப்பியின் பப்பித்தனம் அதைவிட்டு முற்றாக நீங்கவுமில்லை.

பப்பிக்கு மூளை வேலைசெய்யத் தொடங்கியது. அது எழுந்து மெல்ல மெல்ல நடந்து வேலி இருந்த பக்கமாகப் போயிற்று. வேலியின் கீழ் இருந்த மண்ணைத் தோண்டி…

தோண்டித் தோண்டி…

வேலியின் அடிப்பக்கத்தைப் தோண்டித் துவாரத்தி னுள்ளே தலையை நுழைத்து நுழைத்து…

அதன் முயற்சி வெற்றிதான். ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’

ஒருநாள் முழுவதும் முயன்று அது துவாரத்தி னூடாக வெளிப்பட்டு ஒழுங்கைக்கு வந்துவிட்டது.

நாய்களுக்கு ஊரடங்கு சட்டம் இல்லை! பப்பி ஒழுங்கையில் நடந்து தெருவுக்கு வந்தது. இடையிலே அறுந்து கிடந்த மின்சாரக் கம்பிகள், தந்திக் கம்பிகளின் துண்டுகள் உடலைச் சுற்றி வளைத்தன; வளையமாக வயிறு, நெஞ்சுப் பகுதிகளை மூடிக்கொண்டன.

ஆனால், பப்பி அவற்றையெல்லாம் பொருட்படுத்த வில்லை. அது நேராக வீதியில் மூன்று நான்கு கிலோமீற்றர் கள் நடந்து செல்வநாயகத்தின் வீட்டைச் சென்றடைந்தது.

நல்லகாலம்… செல்வநாயகத்தின் வீட்டிலே அவரும் மனைவியும் இல்லலாத போதிலும் மகளும் மருமகனும் இருந்தார்கள்.

அவர்கள் பப்பியை அடையாளம் கண்டு கொண்டார் கள், ‘பாவம்’ என்று அநுதாபப்பட்டார்கள்.

அதன் ஞாபக சக்தியையும் மோப்ப சக்தியையும் பாராட்டினார்கள். வயிறு நிறைய உணவு போட்டார்கள்!

பப்பி உணவை ‘லபக் லபக்’ என்று விழுங்கியது. சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் மீண்டும் மாஸ்டரின் வீட்டை நோக்கிச் சென்றது.

இரவில் மாஸ்டரின் வீட்டுக்குக் காவல்,

பகலில் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வநாயகத்தின் வீட்டுக்கு வருதல், உணவு உண்ணல், ஓய்வெடுத்தல், பின்பு மாஸ்டரின் வீடு திரும்பல்… காவல்…

இப்படியே வழக்கப்படுத்திக் கொண்டது அது! மாஸ்டர் வீட்டுக்கு வந்த பொழுது அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

பப்பியைக் கட்டியிருந்த இடத்தில் அது இல்லை, வேலியின் அடித்துவாரம் மட்டும் துலாம்பரமாய்த் தெரிந்து பல விதமான ஊகங்களுக்கு இடமளித்தது.

மாஸ்டருக்குப் பப்பியைக் காணாதது பெரும் கவலைதான். ஆனால், அதனை நினைத்துப் பார்க்க முடியாதவாறு செய்யவேண்டிய வேலைகள் வீட்டில் குவிந்து கிடந்தன.

வீட்டு முற்றத்து மாமரக்கிளைகள் முறிந்து முற்றத்தை மூடிக்கிடந்தன. ‘ஷெல்’ அடிக்கு அடையாளம்! அவற்றைக் கஷ்டப்பட்டு அப்புறப்படுத்தினால் ஒரே குப்பை கூளம். ஒரு பக்கம் கூட்டித் துப்பரவாக்கிய பிறகு வீட்டைத் திறந்தால் அங்கே ஒரே புழுதிமயம்.

மாஸ்டருக்கு அன்று மாலை வரையும் வேலை வேண்டிய அளவு இருந்தது. அவர் பசியை மறந்து துப்பரவு வேலையில் ஒரேயடியாய் மூழ்கிப்போனார்…

மாலை சரியாக ஐந்து மணி. இனி அவர் நல்லூருக்குத் திரும்பவேண்டும்.

புறப்பட்டார்… வாசலுக்கு வந்தார்.

அங்கே ..

உடல் முழுவதும் கம்பி வளையங்களோடு இரவுக் காவலுக்காகப் பப்பி வந்து கொண்டிருந்தது…

– கட்டுரைக் கோவை (1988), சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *