நெஞ்சுக்குள் இருள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 4,324 
 
 

நல்ல காலை பொழுது. மணி எட்டு. தட்டில் சோறு சாப்பிட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழந்தான் சேகர்.

“என்னடா சாப்புட்டுக்கிட்டே ரோசனை. சும்மா சாப்புட்டுட்டு படுத்துத்தூங்கு. இல்லேனா பக்கத்து வீட்ல டீவியப் பாரு” வாசலில் குவித்து வைத்திருந்த குப்பையை அள்ளியவாறு சொன்னாள் சிகப்பி.

“அதுவந்தும்மா மாமா ஊருக்குப் போயி ரொம்ப நாளாச்சு. நீ தான் அடிக்கடி சொல்லுவியல்ல. ஊருக்குப் போயி எல்லாரையும் பாத்துட்டு வாடானு அதான். ” பேச்சை இழுத்தான்.

“நீ முடிவெடுத்ததுக்கு அப்புறம் நா என்ன சொல்லப் போறேன். பாத்துப் போடா, சைக்கிள்ல முன்னாடி சக்கரத்துல காத்து கொஞ்சம் தான் இருக்கு. போற வழியிலேயே மானான் கடையில காத்தடிச்சுக்கிட்டு போ. இருட்டுறதுக்குள வந்துரு”.

சுரைக் குடுக்கைக்குள் கையை விட்டு எண்ணெய்ப் பாட்டிலை எடுத்து தலையில் தேய்த்தான். தலை சீவினான். எதிரே கிடந்த கோடுபோட்ட ஊதா சட்டை ைமாட்டினான். பச்ச டவுசரை கழட்டிவிட்டு மூட்டைக்குள் இருந்த கறுப்பு பேண்டை எடுத்து மாட்டினான். சன்னலில் அம்மா வைத்த பத்து ரூபாயை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சைக்கிளை எடுத்தான்.

“நா வர்றேம்மா” கப்பி ரோட்டில் வேகமாக சைக்கிளை மிதித்தான்.

“ஊருல எல்லாரையும் பாத்துப் பேசனும். மாமா வீடுதான் மலேசியாவிலேயே தங்கிட்டாங்க. அந்த வீட்டுத் திண்ணையில் கொஞ்சநேரம் உக்காறனும். நுங்கு வெட்டி சாப்பிடனும். அய்யனார் கோயில் ஓரமா இருக்குற கெணத்துல நல்லா ஆட்டம் போடனும்” தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.

பனை மரங்களும் ஆலமரங்களும் ஆவலோடு இவனை வரவேற்றன. அந்தக் கூந்தப் பனையில் காய்கள் காய்த்து தொங்கின. அதைப் பாத்ததும் சின்னவயதில் அந்தக் காய்களைப் பிடுங்கி விளையாடிய ஞாபகம். அனைத்தையும் பார்த்தவாறே சைக்கிளை ஊர் நடுவில் இருக்கும் வேப்ப மரத்தடியில் நிறுத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் சின்னவனாக இருந்தபோது அஞ்சாறு குடிசை வீடுகளே இருந்தது. இப்போ ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் நெறைய… கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவனை “சேகர் மச்சான் சேகர் மச்சான்” என்று சூழ்ந்துகொண்டனர்.

சிறுவர்களோடு பேசிக்கொண்டு இருந்தான். கண்ணில் தென்பட்டவர்களுடன் பேசிக்கொண்டே ஒரு குடிசை வீட்டைப் பார்த்தான். அந்த ஒட்டுத் திண்ணையில் அரைக்கோவணத்தோடு எழுபது வயது பெரியவர் பொக்குவாயை மென்றபடி கண்ணில் பூலையைத் தள்ளிக்கொண்டு குறுகிக் கொண்டு இருந்தார். அவனுக்கு தன்னையறியாமலேயே கண்ணீர் கசிந்தது.

“இவன் சிறியவனாக இருந்தபோது அவனது ஊரில் தண்ணீர் கூட கிடைக்காத அளவுக்கு பஞ்சம். இந்த ஊரில் தான் தங்கியிருந்தார்கள். சுமார் எட்டாண்டு காலம் இருக்கும், இவனுக்கும் இப்போது பதினஞ்சு வயது ஆகிறது”. “அவர் தான் இவனுக்கு நுங்கு வெட்டிக் கொடுப்பார். அதிக நாள் இவர் வீட்டில் தான் சாப்பிட்டான். இவர் நுங்கு விற்று கிடைக்கும் வருவாயில் தின்பதற்கு ஏதாவது வாங்கிவந்து யாருக்கும் தெரியாமல் கொடுப்பார். கிழிந்த சட்டையோடு திரிந்ததால் சட்டை எடுத்து கொடுத்தார். அந்த பஞ்ச காலமானது கடுமையான வெயிலைக் கொண்டிருந்தது.”

“அந்தப் பெரியவர் சேகர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். அவரோடு இவன் மாடு மேய்க்கச் செல்வான். ஆடுகளுக்கு இலை, தழைகளை வெட்டிப்போடுவான். அவர் சொல்வதை எல்லாம் கேட்பான். இந்த ஊரை விட்டு சொந்த ஊருக்குப் போயி மூணு நாலு வருசம் ஆச்சு. அதன்பின் இந்த ஊருக்கு வந்ததே இல்லை. பல நாள் கழித்து இப்போதுதான் வந்துள்ளான். “இந்தப் பெரியவர் செய்த உதவிகளை எண்ணிக்கொண்டே “பழனி தாத்தா” என்றவாறு அவர் அருகில் சென்றான். இவன் பேசுவது அவருக்குக் கேட்கவே இல்லை. அவர் எப்போதும் போல் பொக்குவாயால் புலம்பிக் கொண்டே இருந்தார். இவனோ எதுவும் பேசாமல் அவரையே பார்த்த வண்ணம் உட்கார்ந்து இருந்தான். அந்தப் பெரியவரின் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. ”

“பழனி தாத்தாவுக்கு ஏதாவது செய்யனும் என யோசித்து சட்டைப் பையைத் தடவினான். அந்த பத்து ரூபா தான் இருந்தது. அதை அவர்கிட்ட கொடுத்தா வாங்குற நிலைமையில் அவர் இல்ல. அதனால. அடுத்தமுறை வரும் போது அம்மாவிடம் சொல்லி பழங்கள் வாங்கி வந்து கொடுக்கனும்.” எண்ணிக்கொண்டே சைக்கிளை மிதித்து வீடு வந்து சேர்ந்தான். அன்றிரவு முழுவதும் பழனி தாத்தா நினைவு தான் அவனுக்கு… பொழுது விடிந்தது கூட தெரியாமல் அதிகாலை தூக்கம் அவனை அசத்தியது.

காலையில் யாரோ சொன்னதும் அவன் அம்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு அலறினாள். தூங்கி எழுந்தவன் “என்னம்மா” என்றான். “மாமா ஊர்ல பழனி தாத்தா போயிட்டாராம்டா என்ன பண்ணுவேன்… ஒப்பாரி வைத்தாள். இவன் நினைத்தது எல்லாம் காலையிலேயே இடிந்து போனது” ச்சே … அந்த பத்து ரூபாயயாவது கொடுத்துட்டு வந்துருக்கலாமோ கலங்கினான். அவன் நெஞ்சுக்குள் இருளே சூழ்ந்தது. தன்காலில் எறும்புகள் கடிப்பது கூட தெரியாமல் அசைவற்றவனாய் நின்றான். கண்கள் கசிய ஆரம்பித்தன.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *