நிண நீர்ப் பீடனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 2,224 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

செயற்கையாய் ஈரத்தை சிதறிக் கொண்டிருந்த அந்த ஏசியிலும் ரியாஸ் எக்கச்சக்கமாக வியர்த்துக் கொண்டிருந்தான். அந்த அறையில் பிரகாசித்துக் கொண்டிருந்த எயார் ஸ்ப்ரேயின் வாசனையில் எரிபற்று நிலையை உணர்ந்தான் அவன். 

“டொக்டர் ஆர் யூ ஷூவர்…”

வைரோலோஜிஸ்ட் பகீரதனின் வார்த்தைகளில் தெளிவின் தீர்க்காயுசம். சந்தோஷக் கோடுகளற்ற நேர்கோட்டு ஓவியங்களாய் வரையப் பட்டிருந்தன வார்த்தைகள். இரு கைகளாலும் தனது தலையைப் பொத்திக் கொண்டு மைனஸ் டிகிரியில் குளிர்ந்துகொண்டிருந்த அந்த அறையில் ஆயிரம் செல்சியஸ் டிகிரியில் கொதித்துக் கொண்டிருந்த ரியாஸூக்குள் மரண வலி ஏற்படுத்திய திகில் அல்லது உச்ச கட்டமாகத் திடீர் விநியோகம் செய்யப்பட்டிருந்த அச்சத்தின் மீதிருந்த மரண பயம். ஒட்டு மொத்த வாழ்வும் ஓர் நொடி யில் பஸ்பமாகிப் போய்விட்டதில் ஏற்பட்ட பயம்… என உணவுச் சங்கிலி போல.. நுளம்பின் வாழ்க்கை வட்டம் போல நீண்டு முடிவுக்கு வந்தது. 

முகத்தில் அரும்பிய வியர்வைகளைத் துடைத்ததில் பிசுபிசுத்துப் போயிருந்தன விரல்கள்… 

வியர்வைச் சுரப்பிகள் விஸ்வரூபமெடுத்திருந்தன. 

“டொ…க்..டர்… நூறு சதவீதம் உண்மையா…” அது பொய்யாக இருக்கக் கூடாதா என்ற நப்பாசையும் தப்பாசையும் நடுங்கிக் கொண்டிருந்த அவனது குரல் வலையில் யாசகம் கேட்டு யாகம் நடத்திக் கொண்டிருந்தன. 

“நத்திங் ட்டு டூ ரியாஸ்..ஃபைனல் ரிஸல்டும் கூட வந்தாச்சு.. இத விட இனி வேறெந்த டெஸ்டும் கெடயாது. உங்க பொஸிஸன் கன்ஃபர்ம் ஆச்சு…” என்ற டொக்டரின் வார்த்தைகளில் சற்று கூடுதல் வருத்தம் குந்திக் கொண்டிருப்பதாய் தென்பட்டது. 

வயசு முப்பத்தி மூன்று ரியாஸூக்கு. இளைஞன்… புதுசாய்த் திருமணமானவன். நான்கு மாசங்களுக்கு முன்னர் இந்தியாவின் கொடைக்கானலிலும், குலுமனாலியிலும் ஊட்டியிலும், ஹனிமூன் கொண்டாடி விட்டு ஆக்ரா போய் மனைவி சஸ்னாவிடம் தாஜ்மஹால் பற்றி காமத்தின் கிறக்கத்தோடும் காதலின் இறுக்கத்தோடும் சுடச்சுடக் கவிதை சொன்னவன். இந்த உலகமே என் உள்ளங்கைக்குள் என தனக்குள்ளாகவே கங்கனம் கட்டிக் கொண்டு காலத்தை நையாண்டி செய்த கதாநாயகன். 

இவன் இந்த நூற்றாண்டின் நுனி நாக்கு ஆங்கிலத்தோடு கீ போர்டில் விரல்கள் தாளமிட உறங்கும் நேரம் தவிர சொஃப்ட வெயார் ப்ரோக்ராம் எழுதித் தள்ளுகின்ற ஒரு ஐ டீ ப்ரஃபெஷனல்… சும்மா சொன்னால் முதலாளித்துவ வர்க்கத்தின் நவீன காலனித்துவ ஐ டீ அடிமைகளில் ஒருவன். 

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸில் ஒரு மூன்று வருஷம் ஐடீ ஸ்பெலிஸ்டாக ஒரு சொஃப்ட்வெயார் நிறுவனத்தில் கடமை புரிந்து விட்டு இனிப் போதும் என முடிவெடுத்துக் கொண்டு எக்கச்சக்க பொருளாதாரத்தோடு ஏதாவது செய்யலாம் எனும் நம்பிக்கையோடு நாடு திரும்பிய கையோடு பார்த்த முதற்பார்வையில் பிடித்துப் போக கடந்த நான்கு மாதங்களுக்குள் சற்றும் அலுக்காது திகட்ட திகட்ட சஸ்னாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான்… எதிர பாராமல் இந்த இடி…பிரபஞ்சத்தின் மீதான ஊழிப் பிரளயம். 

பலத்த அடி… 

நினையாப்புறத்திலிருந்து எதிரி தாக்குகின்ற போது நிலைகுலைந்து போகும் ஒரு நிராயுதபாணியாக நின்று கொண்டிருக்கும் ஓர் போர்வீரனைப் போல் பார்வைகளை வெறிச்சோட விட்டுக் கொண்டு மெல்லிசாய் ரியாஸ் எனும் அந்த பச்சை நரம்புகள் புன்னகைக்கும் முழு ஷேவிங்கில் மினுங்கும் இளைஞன் விசும்பிக் கொண்டிருந்தான். 

அவனுக்கு எதிரே இருந்த அந்த மேசையில் நீல நிறத்தில் மினுக்கிய பைலுக்குள் அவனுக்கு எதிராக சிகப்பு விளக்கினை எரித்துக் கொண்டிருந்த மருத்துவ அறிக்கை அவனுக்குள் மரணம் எனும் முழு நீளத்திரைப்படத்தினை காட்டிக் கொண்டிருந்தன. 

துரத்திக் கொண்டிருந்த மரணத்தின் கொடூர வழிகள் பார்த்து மரத்துப் போயிருந்த ரியாஸை டொக்டரின் சொற்கள் கண்களைத் திறந்து பார்க்கச் செய்தன. 

“எக்ஸ்ட்ரீம்லீ வெறி சொரி ரியாஸ்… ஒண்ணுமே பண்ண முடியாது… யூ ஆர் ரியலி அன் போர்ச்சுனேட்…” 

கடந்த மாதம் புதிதாக தான் பார்ட்னராக இணைந்துள்ள மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமானது ஒரு மாதகால மேலதிக பயிற்சிக்காக மலேஷியாவுக்கு மூன்று பேரை அனுப்புவதற்கு தெரிவு செய்தவர்களில் ரியாஸூம் ஒருவன். மலேஷியா புறப்பட முன்னர் மூவரும் தமது சிறுநீர், ரத்தம் தொடர்பான முழுமையாக பரிசோதனை செய்து தங்களது ஹெல்த் பிட்னஸ் சான்றிதழ்களை வழங்க வேண்டியிருந்தது. 

ப்ளட் சுகர், கொளஸ்ரோல், இத்யாதி இத்யாதிகளோடு முக்கியமாக வெனரல் டிஸீஸ் டெஸ்ட், எச்.ஐ. வீ. டெஸ்டும் அதில் அடங்கியிருந்தது. 

வீடீ ஆர் டீ எல் ரிப்போட்களில் நொன் ரியாக்டிவ் என அவன் சார்பாக ரிசல்ட் வந்திருந்தது. ஆனால் எச் ஐ வி டெஸ்டில், 

“சொரி மிஸ்டர் ரியாஸ் யூ ஆர் டயக்னொஸ்ட் வித் எச்ஐவி எயிட்ஸ்…” 

“வாட்…” 

அவனது ஆயிரம் ரிச்சிட்டர் ரியாக்ஷனில் அத்தனை நரம்புகளும் பின்னிக் கொள்ள மூளையின் ஷெல்களில் தீப்பொறி.. நாக்குலர்ந்து போக… “நான்… நான்.. எயி..ட்ஸ்… பேஷன்டா… எப்படி… என்ட அல்லாஹ்… நோ… நோ… அப்படியிருக்காது…” 

தனக்குள் தேற்றிக் கொண்டாலும் குருதியில் என்ன இருக்கின்றதென்பதைத்தான் அந்த ரிப்போட்டுக் களின் குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தன. 

கடந்த மாதம் ஆரம்ப கட்டமாக விண்டோ ஸ்க்ரீன் டெஸ்டில் எச்ஐவி எயிட்ஸ் ஒன்று… இரண்டு டெஸ்டுகள் எடுக்கப்பட்டு வந்த அறிக்கையில் 

எச்ஐவி என்டிபொடிஸ்-ஒன்று 

எச்ஐவி என்டிபொடிஸ்-இரண்டு எலைஸா

பெறுபேறு பொஸிடிவ் என எந்த இரக்கமுமில்லா ரிப்போர்ட் வந்திருந்தது. 

“இது ஆரம்ப கட்ட ரிப்போர்ட்ஸ்தான்… இதன்படி பார்த்தா உங்களுக்கு எச்ஐவி இன்ஃபெக்ட் ஆகியிருக்கு. ஆனா ஃபனலா இன்னுமொரு டெஸ்ட் இருக்கு… எச்ஐவி பொஸிடிவ்னு ரிப்போர்ட் வந்தா அதக் கன்ஃபர்ம் பண்ண வெஸ்டர்ன் ப்ளொட் டெஸ்டுக்கு அனுப்பி வைப்போம்… சம் டைம் அந்த டெஸ்டுல ஆரம்ப கட்ட ரிஸல்ட் மாறவும் வாய்ப்பிருக்கு… பட்.. வெரி ரெயார்… எனினும் உங்க ப்ளட் சேம்பிள எகெய்ன் வெஸ்டர்ன் ப்ளொட் டெஸ்டுக்கு அனுப்பி வைப்போம்… ப்ரேய்… ஃபோர் த கோட்… ஐ ஹோப் வெல்…ஃபோர் யூ..” என்ற டொக்டரின் வார்த்தைகளில் ஓரளவு நம்பிக்கை பெற்றிருக்க ரியாஸ் அந்தக் கணத்திலிருந்து தொடர்ந் தேச்சையாக அல்லாஹ்வைப் பிரார்த்தனையும் நேர்ச்சையும் செய்த கையுமாகக் கண்ணீரோடு 

“என்னக்காப்பாத்து ரப்பே” என்றவன் இதோ டொக்டர் பகீரதன் முன்னால் உலகமே அழிந்து போன கணக்கில்… அது சரி ஒவ்வொரு ஆன்மாவினுடைய அழிவும் அவனைப் பொறுத்த வரை உலகத்தின் அழிவுதான். முகம் அஷ்ட கோணலாகி இருள் கலந்த சுவாசத்தோடு… வெஸ்டர்ன் ப்ளொட் டெஸ்ட் ரிப்போர்ட் வந்திருந்தது. ஆங்கிலத்தில் அடிக் கோடிட்ட கறுப்பு வர்ணத்தில் பூதகணங்களாய். 

“எச்ஐவீ பொஸிடிவ் ஈஸ் ஹியர் வித் ஃபேர்தர் கன்ஃபர்ம்ட் என்ட் த பேஷன்ட் ஈஸ் கன்ஃபர்ம்ட்டு ஹேவ் பீன் இன்ஃபெக்டட் வித் எச்ஐவி…” 

எயிட்ஸ் நோயால் ரியாஸ் பீடிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். 

“என்ட அல்லாஹ்..இது எப்படி…. எப்படி சாத்தியமாயிற்று…ஹியூமன் இம்மியூனோ டிஃபிஸியன்ஸி வைரஸ் எனது இரத்தக் கலங்களுக்குள் நுழைந்து விட்டதா… எனக்குச் சொல்லாமலேயே எனது முன்னனுமதி இல்லாமலேயே எந்த அழைப்பிதழுமில்லாமலேயே… அழையா விருந்தாளியாக நுழைந்து இனிமேல் எனது இரத்தத்தில் உள்ள கலன்களின் அன்டி பொடிஸினை ஏமாற்றி வெண் குருதியில் உள்ள சீடீஃபோர்டீ கலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து என்னைக் கொல்லப் போகிறதா.

கடந்த மூன்று வருடங்களில் பனி பொழியும் பால் நிலாப் பொழுதுகளில் சில இரவுகளில் நியூ ஜெர்ஸியில் ஹோட்டல்களிலும் உல்லாச விடுதி களிலும் காமத்தின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ஹோமோன்களின் சதிப்புரட்சியில் பகுத்தறிவின் மூளையில் சிகப்பு விளக்கினை அலட்சியம் செய்து வாலிப சேஷ்டைகளில் மனோ இச்சைக்கு அடிமையாகி விளக்குகளற்ற அறைகளில் வெண் தோற் பெண்களின் ஃபிஸிகல் அனாடமி பற்றி பிரஸ்தா பித்ததன் பின் விளைவாக… இலவச இணைப்பாக… கற்பனைக்கும் எட்டாத பின் விளைவுகளுக்காக தப்புப் பண்ணிய அந்த ஒப்பற்ற இரவுகளின் ஒப்பனைகேற்ற பரிசாக இதோ எச்ஐவி என்னை ஆக்கிரமித்திருக்கிறது இனி என்றைக்கும் வெளியேறிச் செல்லாத வெறியோடு. 

நாடித்துடிப்பில் நடுக்கமும், இதயத் துடிப்பில் இயல்பற்ற ஓசையும் அவனது இதழ்களில் ஈரத்தை எப்போதோ சுரண்டியிருந்தன. 

அமெரிக்காவின் திறந்த பாலியல் கலாசாரத்தின் பலிபீடத்தில் இவனது கழுத்து இதோ மரணத்துக்காக பலி பீடத்தில் வைக்கப்பட்டு விட்டது. ஐந்து நிமிட சொர்க்கத்துக்காக முழு ஆயுளும் பிரதியுபகாரமாக ஆக்கப்படும் என்று அவனால் கற்பனை கூடப்பண்ண முடியவில்லை. 

சர்வாங்கமும் அடங்கிப் போய் கதிரையில் சரிந்து போயிருந்தான் ரியாஸ். “டொக்டர் இந்த ரிப்போர்ட் கன்ஃபர்மா… இல்ல வெளிநாட்டுக்குப் போய் வேறு ஏதாவது டெஸ்ட் எடுக்கனும்னாலும் பரவாயில்ல. இப்பவே நான் போறன்”. முற்றிலுமாக வாழ்க்கை தொலைந்து ஒற்றையாக நிற்கின்றவனை மிஸ்கினின் ஓநாயாக மரணம் அந்த ஒற்றை ஆட்டினைக் குத்துவதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருந்தது. 

“சொரி டு சேய்.. உங்க நிலம எனக்கு நல்லாத் புரியுது. நீங்க படிச்சவர்.. ஹைலி எஜூகேட்டட். நீங்க எச் ஐ வி தொற்றுக்குள்ளாக்கப்பட்டது நூறு வீதம் ஷூவர். ஆரம்பத்துலேயே எச்ஐவி தொற்றுக்குள்ளாக் கப்பட்ட விஷயம் எச்ஐவி எலைஸா டெஸ்ட் மூலமாத் தெரிஞ்சுடுச்சி. ஆரம்ப கட்ட எச்ஐவி எலைஸா டெஸ்டுல பொஸிடிவ்னு வந்ததாலதான் அத ஃபேர்தர் கன்ஃபர்ம் பண்றதுக்கு வெஸ்டர்ன் ப்ளொட் டெஸ்டுக்கு ரிஃபர் பண்ணினோம். அதுல கூட உங்க எச்ஐவி இன்பெக்ஷன் கன்ஃபர்மாயிடுச்சி… சொரி ரியாஸ்…” 

“….?….”

“பை த பை… இப்ப இந்த ரிப்போட்ஸின் படி இப்ப நீங்க எச்ஐவி இன்ஃபெக்ஷன் ஆரம்ப கட்டத்துலதான் இருக்கீங்க… என் அனுமானத்தின்படி சுமார் ஓரிரண்டு வருடத்துக்கு முந்தித்தான் உங்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கணும்.. இஃப் யூ டோன்ட் மைன்ட்… எங்காவது யாரோடாவது செக்ஸ் வச்சுக்கிட்டீங்களா மிஸ்டர் ரியாஸ்… பீ ஃப்ரேங்க.” 

“அது வந்…து அது வந்..து முன்னமே ஒங்ககிட்ட சொல்லியிருக்கன்.. நான் ஒரு ஐ டீ ப்ரொஃபஷல்னு. மூனு வருஷமா அமெரிக்கா நியூஜெர்ஸில இருந்திருக்கேன். அஞ்சு மாதத்துக்கு முந்தித்தான் நாட்டுக்குத் திரும்பினேன். இந்த மூனு வருஷத்துல அப்பப்ப என் கேர்ள் ப்ரண்ட்ஸ் கூட ஐ ஹேட் செக்ஸ் டொக்டர்…” 

“ஓ.. பிட்டிஃபுல்… அன்சேஃப் செக்ஸ்.. நீங்க தொடர்பு வெச்சவங்கள்ள யாரோ ஒருத்தருக்கு இல்லன்னா பலருக்கு ஏற்கெனவே எச் ஐ வி இன்ஃபக்ஷன் டெஃபினிட்டா இருந்திருக்கனும். அவங்க மூலமாகத்தான் உங்களுக்கு எச்ஐவி இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கனும். யூ மேட் ஏ மேஜர் ப்ளன்டர்…” 

உண்மைதான் ரியாஸ் ஹோர்மோன்ஸின் சித்து விளையாட்டுக்களுக்கு கலாசார மரபுகளைக் காவு கொடுத்து விட்டு பத்து நிமிஷம் உடற்பசியைத் தீர்த்த பாவத்துக்காக கொஞ்சம் கொஞ்சமாக அவனது உயிர் காவு கொள்ளப்பட வேண்டுமென்று எந்த விதமான விசாரணைகளுமின்றி தீர்ப்பு அல்லாஹ்வினால் எழுதப்பட்டுவிட்டது. இந்த மாதிரியான தீர்ப்புகளினைப் பொறுத்தவரை அவைகளுக்கெதிராக அப்பீல்களே கிடையாது. இறை தண்டணையின் பிரதான இயல்பே அதுதானே. 

அந்த ஏசியின் உறுமலிலும் ரியாஸின் இறுமல் ஒலி சன்னமாக காற்றில் ஒரு முகாரி ராகத்தினை சாரங்கி வாத்தியத்தில் சப்தம் செய்து கொண்டிருந்தது. 

“இதுக்கு மருந்தே இல்லையா டொக்டர்… என் முழு சொத்த வித்தாவது எந்த நாட்டுக்காவது போய் நான் இந்த நோய குணப்படுத்திட்டு வாறன்… ப்ளிஸ் டெல் மீ டாக்டர்… ஐ வோண்ட் டு லிவ்… ஐ வோண்ட் மை லைஃப்” 

இந்த வியாதிக்கு இந்தப் பிரபஞ்ச வெளியில் இது வரைக்கும் எந்த மருந்தும் கண்டு பிடிக்கப்பட வில்லை என அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் எச்ஐவி அவனுக்குள் ஏற்படுத்திய இயலாமை இப்படி ஒரு கேள்வியை அவனுக்குள் கேட்க வைத்தது. 

முகத்தில் தனதிரு கைகளாலும் அறைந்து கொண்டு வெறி பிடித்தவன் போல கதறினான் ரியாஸ்… 

“ஓ மை காட்.. காம் டவுன்… காம் டவுன்.. ” எழுந்த டொக்டர் பகீரதன் அவனை அமைதிப்படுத்தி 

“மிஸ்டர் ரியாஸ்… பாஸ்ட் ஈஸ்ட் பாஸ்ட்… யூ ஆர் இன்பெக்ட்டட் வித் எச்ஐவி…. அது உறுதிப்படுத்தப்பட்டாச்சி…. இனிமே என்ன பண்ணனும்னு யோசிங்க. அதவிட்டு இப்படி டென்ஷனாகி அழுது எதுவுமே ஆகப் போறதில்ல… நான் சொல்லுறத கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க…” 

கண்ணீர் வழிந்த கண்களை அரைவாசியாகத் திறந்து டொக்டரைப் பார்த்தான் ரியாஸ்… அவனது பார்வை செத்துப் போயிருந்தது.. அதில் ஜீவன் காணாமற் போனோர் பட்டியலில் சேர்ந்திருந்தது. 

“நான் ஏற்கனவே சொன்னேன்.. நீங்க இப்ப எச்ஐவி தொற்றின் ஆரம்பத்துல இருக்கீங்கன்னு. இன்னும் எக்குவையர்ட் இம்மியுனோ டிஃபிஸியன்ஸி சின்ரோம்ங்கிற எயிட்ஸ் நிலைமைய நீங்க அடையல… இன்னும் ஏழெட்டு வருஷத்துக்கப்புறம் எச்ஐவி இன்ஃபெக்ஷன்… எயிட்ஸ்ங்ற நிலைய அடையும் சோ… இப்ப இருந்தே ட்ரீட்மென்ட்ட ஆரம்பிச்சம்னா நீண்ட காலத்துக்கு உங்கலால ஆரோக்கியமா வாழ ஏலும்…” 

“ஆனா சாவத் தடுக்க முடியாதுல்ல டொக்டர்…” 

“வெரி சொறி ரியாஸ் எஸ் ஏ டொக்டர் என்டி ரெட்ரோ வைரஸ் தெரபியூடாக மருந்து பண்ணலாம்… எச்ஐவியிலிருந்து எயிட்ஸூக்குப் போக ஏலாம உங்கலக் காப்பாத்த ஏலும்… இதத் தவிர ஒரு டொக்டரா வேறெதையும் என்னால செய்ய முடியாது மிஸ்டர் ரியாஸ்…” 

அவரது வார்த்தைகளில் கவலையின் விஷவாயுக்கசிவு அந்த இளைஞனுக்காக, வாழ வேண்டிய வயதில் சாவினை அழைத்து வந்திருக்கும் அந்த நாதியற்றவனுக்காக கசிந்து கொண்டிருந்ததனை ரியாஸின் காதின் நாணங்கள் கவனிக்க மறுக்கவில்லை. 

இனிமேல் கொஞ்சம் கொஞ்சம் நரக வேதனை தந்து உயிர் திண்ணும் எச்ஐவிகள் எனது வெண்குருதியின் CD4T கலங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொலை செய்யப்படும். மில்லியன் கணக்கான வைரஸ் துகள் ஒவ்வொரு உருவாக மில்லியன் கலன்களை CD4T கலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்யப்படும். சீடீஃபோர்டீ கலங்கள் அநியாயத்துக்குத் தூக்கிலிடப்படும். எச்ஐவிக்கும் எனது சீடீஃபோர்டீ கலங்களுக்கும் இடையிலான புனிதப் போரில் எச்ஐவி ஷாத்தான்கள் வெற்றி கொள்ளும். 

இறுதியில் இறுதியில்… என்னைக் காத்த நிணநீர்ப்பீடனத் தொகுதி நிர்மூலமாக்கப்பட்டு… உடம்பின் சுரப்பிகள் வீக்கத்தால் வீறிட, தொடர் காய்ச்சலில் கட்டிலில் சிறகொடிந்த புறாவாகக் கிடக்க, அக்குள்களில் வீக்கம்… கென்சர், டீமென்ஸியா… எடை இழந்து முள்ளும் தோலுமாகி… 

“ஹீ ஈஸ் எ எய்ட்ஸ் பேஷன்ட்.. அவர கெயார்ஃபுல்லா பார்த்துக்கங்க… சாதாரண தடுமல் கூட வரக் கூடாது… அதுவே உயிராபத்தாகி விடும்… பேஷன்டின் இம்மியூன் சிஷ்டம் கம்ளீட்லி டெமேஜ்ட்…” எனச் தான் எதற்கும் லாயக்கற்று வைத்தியசாலையில் கட்டிலில் கிடக்கையில் சொல்லும் டொக்டரின் அபாய வார்த்தைகள்… 

என்ட அல்லாஹ்… 

சதைகள் கரைந்து எலும்பும் தோலுமாக நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் தொலைந்து மரணத்துக்கான தருணத்தை முற்றிலுமாக எதிர்பார்த்துக் கிடக்கின்ற அந்தக் கணங்களை நினைக்கையில் நரம்புகளுக்குள் நடுக்கம் பிறந்தது. கோடித்துகள்களாய் நொறுங்கி அத்தனை எலும்புகளும் ஒரு சேர உடைக்கப்பட்ட வலியை மணிக்கு ஆயிரம் டெல்லில் உணர்ந்த ரியாஸ் இன்னுமின்னும் விசும்பிக் கொண்டிருந்தான். 

“சாவு நிச்சயமாயிடுச்சில்ல டொக்டர்…” 

“சாவு உறுதியாச்சில்ல டொக்டர்…”

“என் மௌத்து எழுதப்பட்டாச்சுல்ல டொக்டர்….”

“இனிமே என்னக் காப்பாத்தவே முடியாதுல்ல டொக்டர்..” 

“கொஞ்ச நாள்ல படுத்த படுக்கையாயிடுவன்ல டொக்டர்…” 

டொக்டருக்குப் பதில் சொல்லத் தருணங்கள் தராது மரணத்தின் பிடியில் மாட்டுண்ட ரியாஸ் வார்த்தைகளை தர வரிசை செய்து கொண்டிருந்தான். 

“கூல் டவுன் மிஸ்டர் ரியாஸ்”

“எல்லாமே டவுனானத்துக்கப்புறம் அதுல கூலென்ன ஹொட்டென்ன டாக்டர்….”

விரக்தியின் வசீகரத்தில் கொதிநீராய் வார்த்தைகள் கொட்டித் தீர்த்தன. எயிட்ஸ்… எயிட்ஸ்… இனி சமூகத்தின் மத்தியில் புறத்தொதுக்கப்பட்ட பிண்டமாகவும் வெறுத்தொதுக்கப்பட்ட விஷச் செடியாகவும் 

“தூ… நீயெல்லாம்… ஒருமனு..ஷ…” காரித்துப்பும் சமூகத்தின் மஞ்சற்சளி ரியாஸின் முகத்தில் வடிந்து கொண்டிருந்தது. 

புதுப் பொண்டாட்டி சஸ்னா… எனக்கு எயிட்ஸ் என்று அறிந்தால்… அவளது ரியாக்ஷன் எப்படியிருக்கும் 

“அது சரி மிஸ்டர் ரியாஸ் ஒங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா…” 

“யெஸ் டொக்டர் இப்பதான் நாலு மாசத்துக்கு முன்னாடி ஆயிடுச்சி…” 

“ஈஸ் இட்… அப்படின்னா இன்னொரு பிரச்சினையும் இருக்கே…” நெற்றிவியர்வையைத் துடைத்துக் கொண்டார் பகீரதன்.. 

“வாட் டூ யூ மின் டொக்டர்” 

“கல்யாணமாயிடுச்சீங்கிறீங்க. டெஃபினிட்டா உங்க மனைவியோட செக்ஸ் வெச்சிருப்பீங்க.. இஃப் சோ… ஒங்க வைஃபுக்கும் உங்க மூலமா எச்ஐவி இன்ஃபெக்ட் ஆகியிருக்க மெக்ஸிமம் வாய்ப்பிருக்கு… உடனடியா அவங்களை எச்ஐவி ப்ளட் டெஸ்டுக்கு உட்படுத்தனும்…”

“ஓ… என்ட அல்லாஹ்…” 

தன்னைப் பற்றி மட்டுமே இதுவரை கவலைப்பட்டுக் கொண்டிருந்த ரியாஸ் இந்தக் கணம் வரை தனது மனைவி பற்றி அந்தக் கோணத்தில் யோசித்துப் பார்க்கவே இல்லை. 

இரண்டாவது அடி

இதயத்தில் இடி 

புதிதாய்ப் படமெடுத்தாடும் ஒரு கட்டு விரியனின் கூறிய பற்கள் அவனை இப்போது கடித்துக் குதற ஆரம்பத்தில் தனது தலைவிதியை சற்று நேரம் நொந்து கொள்வதிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு எந்தப் பாவமும் அறியாத, தனது மனைவி சஸ்னாவுக்காக கண்ணீர் விட ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். 

“நோ நோ சஸ்னாவுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது. ஷி ஈஸ் இன்னொஷென்ட்… பாவம் செஞ்சது நான்தான்… அவ இல்ல… பழிய நான்தான் சுமக்கணும்… யா அல்லாஹ் என்னைய வேணா எடுத்துக்கோ… அவள எப்படியாவது காப்பாத்து…” 

அழுது அரற்றியவன் அல்லாஹ்வை மனதால் தொழ ஆரம்பித்தான் என்பதனை ஒன்றினைந்த அவனது இரு கரங்களினதும் உள்ளங் கைகள் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தன. 

“மிஸ்டர் ரியாஸ்… இம்மீடியட்டா அவட ப்ளட்ட எச்ஐவி டெஸ்டுக்கு உட்படுத்தி அவக்கும் இன்ஃபெக்ஷன் இருக்கா இல்லையான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கனும்..” 

ஒரே நாளில் எத்தனை அடிகள்… எத்தனை வலிகள்… எத்தனை மரண ஓலங்கள். ரௌத்ரங்களின் ருத்ரதாண்டவத்தில் அவனைச்சுற்றி எத்தனை கதகளிகள்… அரவமற்ற இரவில் ஒரு கோடி. ஆந்தைகளின் கோரஸாக ஒலிக்கின்ற அலறல்கள். முக்கால்வாசி இருண்டு போயிருந்த அவனது மனசின் மூலையில் ஆயிரக்கணக்கானோரின் தற்கொலைக்குக் காரணமாகவிருந்த ஹங்கேரியின் பியானோ வாசிப்பாளரான ரெஸ்ஸோ ஜெரஸின் “க்ளுமி சன்டே” பாடல் ஆயிரம் டெஸிபலில் அவனை அலைக் கழித்துக் கொண்டிருந்தது. 

நான் செய்த ஒற்றைப்பாவத்தின் காரணமாக சம்பந்தமேயில்லாத எனது மனைவி ஏன் தண்டிக்கப்பட வேண்டும். 

இரத்த நாளங்களில் ஸட்ரைக். 

“இன்னிக்கே உங்க வைஃப ஹொஸ்பிடலுக்கு கூட்டி வந்திடுங்க மிஸ்டர் ரியாஸ்… அவ் ப்ளட் சேம்பிள எடுத்து ப்ரிளிமினரி டெஸ்டுக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டா வெஸ்டர்ன் ப்ளொட் டெஸ்டுக்கு ரிஃபர் பண்ணலாம்…” 

கண்டங்கள் அனைத்தும் அவனுக்குள் நகர்ந்து இடம் மாறி அண்ட சராசரங்கள் கிடுகிடுவென சரிந்து வீழ்ந்தன. வெறித்த பார்வையோடு விழித்தவனை 

“நாளைக்கு ஹொஸ்பிடலுக்கு வந்திடுங்க… ட்ரீட்மெண்டை ஆரம்பிச்சுடலாம்…” 

“சாவு நிச்சயிக்கப்பட்ட பிறகு மருந்தும் மாத்திரையும் எதற்கு டொக்டர்.” எழுந்தவன் டொக்டரின் பதிலுக்குக் காத்திராமல் நிலைகுத்திய விழிகளோடு நீர்வற்றிப் போயிருந்த உடம்போடு தள்ளாடிக் கொண்டு வெளியில் வந்தான். 

வாழ வேண்டிய வயசில் சாவு. அழகுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட அவனது வாழ்க்கை இத்தனை சீக்கிரத்தில் இழவு வீட்டில் வைத்துக் களவு போகுமென்று கனவு கூடக் கண்டதில்லை. தன்னைச் சுற்றி நடக்கின்ற எல்லாமே கனவாக, கற்பனையாக, மாயத் தோற்றமாக அல்லது கட்டுக்கதைகளாக இருக்கக் கூடாதா என்ற நப்பாசை தோன்றுகின்ற போதெல்லாம் மோதுகின்ற காற்றுப்பட்டாலும் வலியால் திணறுகின்ற உடலின் புலன்கள் இது நிஜம். இனி இதுதான் யதார்த்தம் என உரையாற்றிக் கொண்டிருந்தன. 

திணை விதைத்தவனின் வாசற்படியில் திணை வினை விதைத்தவனின் களஞ்சிய அறையில் வினை மூடைகள். மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு மனோ இச்சையினைத் தனது கடவுளாக வரித்துக் கொண்டதன் விளைவு இந்தளவு இருக்கும் என்று அந்த இரவுகள் அவனுக்குக் கற்றுத்தர மறுத்து விட்டன. இராத்திரி வேட்டையில் சாஸ்திரங்களின் விழுமியங்கள் இருட்டிப்பு செய்யப்பட்டதனால் மாத்திரைகள் எதுவுமற்ற நோய்க்குள் வீழ்ந்து மரணக்கனியை புசிக்க ஆயத்தமாகி விட்ட ஆஹிருதி ரியாஸ். 

சொற்ப நேரத்து சொர்க்கத்துக்காக எதுவுமே தெரியாத அப்பாவி மனைவியையும் அழைத்துக் கொண்டு நரகத்தின் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டும் இனி… 

அடைத்துக் கொண்ட இதயத்தில் மூர்ச்சிக்க வும் கஷ்டப்பட்டு மனைவி சஸ்னாவை எண்ணிப் பார்த்ததில் எரிகாயத்துக்குள்ளான முக்கால்வாசிப் பிணமாய் எழுந்தருளினான். சஸ்னாவுக்குத் தெரிந்தால் அவள் இதனை எப்படி எடுத்துக் கொள்வாள்…. “டேய் ராஸ்கல்… அநியாயமா என்ட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடா.. நீயெல்லாம் ஒரு மனிஷனா… நாசமாகத்தான் போக… நீ நெஞ்ச பாவத்தக்கு என்னையும் சேர்த்துப் பங்காளியாக்கிட்டியேடா… என்ட அல்லாஹ்… எனக்கு மட்டும் ஏனிந்த நெல…”

என மாரில் அடித்துக் கொண்டு வெறியோடு அவனுக்கெதிரே கதறிக் கொண்டிருக்கும் சஸ்னாவின் தலைவிரி கோலம் அவனுக்குள் இன்னுமின்னும் மைனஸ் டிகிரிக் குளிரைப் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தது. 

“எப்படி அவளை எதிர்கொள்ளப் போகிறேன்…?” 

“என் பாசத்துக்குரிய கணவனே… முத்தத்தின் மூலம் சொர்க்கத்துக் கதவுகளைத் திறந்து காட்டிய காதலின் முதல்வனே தங்கத்தட்டில் வைத்த மாம்பழத்துண்டுகளில் தயவுதாட்சண்யமின்றி நஞ்சை வைத்துப் போனாயே… நரகத்துக்குத்தான் போய் ஒழிவாய் நீ…”

என்கின்ற தோரணையை அழுது விசும்பி நின்று கொண்டிருக்கும் அவனது புதுமனைவியிடம் அவன் காட்சியுருவாக்கம் செய்யப்போகின்றானா… நினைந்து நினைந்து… 

“என்னங்க” 

சஸ்னாவின் குரலில் யதார்த்த களத்துக்கு வந்த ரியாஸ் திடீர் திருப்பத்தில் எப்படி என்னையுமறியாமல் வீடு வந்து சேர்ந்தேன். 

பெருந்துயரின் பின்னணியில் நமக்கே தெரியாமல் இயல்பாக சில விடயங்கள் நடந்து முடிந்து விடுகின்றன. ரியாஸ் வீடு வந்து சேர்ந்த போது மனைவி வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். 

அவளது குரலுக்கு சற்றும் காது கொடுக்க மாட்டேன் என்ற தோரணையில் ஒரு உயிருள்ள ஜடமாக உள்ளே சென்று கொண்டிருந்தான். வழமை யாக வாசலில் வருகின்ற போதே இதோ நான் வந்து விட்டேன். என்கிற பாணியில் ஏதோ ஒருசினிமாப் பாட்டை முணுமுணுத்தவாறே வீட்டுக்குள் நுழையும் ரியாஸ்.. “சுருக்கா டீய கொண்டு வா… இந்த டைய குயிக்கா கழட்டி விடு… என டெலிகொம் ஏடிஎஸ்எல் இன்டர்நெட்கனெக்ஷனில் பஃபரிங் எதுவுமில்லாமல் அவசரப்படுத்தும் ரியாஸ் கடந்த ஒரு வாரமாக திடீரெனக் காணாமற் போயிருந்தான். 

ஏன்… 

பல தடைவ கேட்டும் எதுவித பதிலுமில்லை அவளுக்கு அவனிடமிருந்து… “ஏதாவது ஒஃபீஸ் பிரச்சினையா இருக்கும்…” 

சாதாரண இல்லத்தரசிகளின் சராசரி அனுமானங்கள். 

ரியாஸின் பின்னாலேயே போய் அவனை அப்படியே கட்டிக் கொண்ட சஸ்னாவை விலக்க முயற்சித்தும் அதில் தோற்றுப் போன ரியாஸிடம் சஸ்னா 

“என்னங்க..” 

“…ம்…” 

“என்னப்பாருங்களேன்…” 

அவளது முகத்தில் வழமைக்கு மாறான ஆனந்ததாண்டவம். மஞ்சற் சூரியனின் ஆரஞ்சு நிற தேஜஸில் அவளது முகம் பள பளத்துக் கொண்டி ருந்தது. அவளை ரியாஸ் நேருக்கு நேர் பார்த்தான்… ரொம்பத்தான் பூரித்துப் போயிருந்தது அந்தப் பூ. 

“என்னங்க இன்னிக்கு காலையில்ல இருந்து உங்களுக்காக காத்திட்டு இருக்கேன். போன் பண்ணியிருப்பேன்..ஆனா உங்களுக்கு நேரடியாச் சொல்லனும்னு இத்தின நேரமா காத்திட்டு இருந்தேன். எனக்கு மண்டையே வெடிச்சிரும்போல இருக்கு தெரியுமா..அப்பாடா இந்தாங்க உங்க காத கொஞ்சம் குடுங்களேன். காதக் குடுங்கன்னா…” 

“சொல்லு சஸ்னா…” 

“அதாங்க…..நான்… நான்… கர்ப்பமாயிருக்கேங்க”.

– ஜீவநதி 95 ஆவணி 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *