நான் அம்மாவாகிட்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 7,055 
 
 

நான் மட்டும் குத்த வைத்த இடத்தை விட்டு நகராமல் விட்டத்தைப் பார்த்தபடியே இருந்தேன். ஊர்க்காரர்கள் சிலர் வந்திருந்தனர். இப்படி நடக்கும் என்று தெரிந்தால்… அழுகையாக வந்தது. இனியும் நான் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? அழ வேண்டும் என்று தோன்றுகிறது. யாரை கட்டிபிடித்து அழுவது. ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் மட்டும் தானே அழ முடியும். மழையில் நனைந்து அழுது கொண்டு போனால் யாருக்குத் தெரியப் போகிறது. அப்படித்தான் என் நிலைமையும் என்றாகிப் போனது.

அடியே… இப்படி ஒக்காந்து இருந்தா எப்படிடீ… ஆக வேண்டியத பாருடீ. ஒங்க அப்பனுக்கு ஃபோன் போடுடீ… யாராவது சொந்தபந்தம் இருந்தா சொல்லுடீ… என்று தோளைத் தட்டிய பஞ்சவர்ண அக்கா குரல் கேட்டு நிமிர்ந்து அவர்களைப் பார்த்தேன்.

பஞ்சவர்ண அக்கா… பல நேரங்களில் என்னை வைவ்வாள். ஏன் அவளின் பிள்ளைகளோடு கூடச் சேரக்கூடாது என்று திட்டியிருக்கிறாள். ஏன் என்று அப்போதும் தெரியவில்லை; இப்போது அவள் இரக்கப்பட்டு எல்லா வேலைகளையும் செய்யும் போதும் தெரியவில்லை. நன்றாக நினைவிருக்கிறது. நான் எட்டாம் வகுப்பு படிக்கின்ற போது வீட்டிற்குப் பக்கத்து ஊர் மளிகைக் கடைக்காரர் வந்திருந்தார். அவரும் உறவினர்தான் என்று அவர் சென்ற பிறகு அம்மா சொல்லியிருக்கிறாள். அன்று ஏனோ பஞ்சவர்ண அக்கா என்னையும் அம்மாவையும் வைது கொண்டே இருந்தாள். அழுகை அழுகையாக வந்தது. பிறகு என்ன நினைத்தாளோ என்னவோ பொரிஅரிசியை கொஞ்சம் கையில் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள். அவளின் நினைவை அவளின் சத்தம் கலைத்துப் போட்டது.

அப்பா… இந்த பெயர் மட்டுமே நான் அறிவேன். இப்படி ஒரு சொந்தம் இருப்பதே அம்மா சொல்லித்தானே அறிந்தேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வருபவருக்குப் பெயர் அப்பாவா? அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. பள்ளியில் அப்பா இல்லாத பிள்ளைகளும் இருந்தார்கள். ஆனால் எனக்கு அப்பா இருந்தும் இல்லாமல் இருக்கிறார். கடைசியாக நான் பெரிய மனுசியாகிய போது… வந்துவிட்டுச் சென்றார்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஊர் இல்லை. பக்கத்து பக்கத்து ஊர். இருவரும் தனித்தனியாகப் பிழைப்புத்தேடி இந்த ஊருக்கு வந்தனர். இவர்களைப் போல பலர் இங்கிருந்த இரசாயனக் கம்பெனிக்கு வேலைக்கு வந்தனர். காலையில் சங்கு ஊதும் முன்பே எல்லோரும் அங்கு இருக்க வேண்டும். இல்லை என்றால் செக்யூரிட்டியிடம் கெஞ்ச வேண்டியது இருக்கும். சல்ஃபர் வாடை ஊரெங்கும் பரவும். அதனால் ஆண்கள் பலர் சாராய வாடைக்குள் அடைக்கலம் ஆகிவிடுவர். அம்மா பட்டப்படிப்பை முடித்தவள். பி.எஸ்சி கெமிஸ்ட்ரி. அப்பாவும் பட்டதாரிதான். தாத்தாவும் பாட்டியும் ரொம்ப பிரியமானவர்கள் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். அம்மா… நானும் தாத்தா பாட்டிய பார்க்கப்போறேன்னு சொன்னா மட்டும் அம்மாவுக்கு கோபம் அப்படி வரும். விவரம் தெரிஞ்சவுடன் அதை நான் கேட்பதை விட்டுவிட்டேன்.

கம்பெனியில் அம்மாவுக்கு குவாலிட்டி கன்ரோலில் வேலை. அப்பாவுக்கு டிஸ்லரியில் வேலை. பக்கத்துப்பக்கத்து டிபார்ட்மெண்ட். இருந்தாலும் இருவரும் சந்தித்ததே இல்லை. அப்பா இருந்த டிபார்ட்மெண்ட்டில் ஒரே பரபரப்பு. அப்பாவுக்கு சல்ஃபூரிக் ஆசிட் பட்டு கை எல்லாம் வெந்து போயிருந்தது. அம்மாதான் உடனே அப்பாவுக்கு வேண்டியதை செய்து மருத்துவமனைக்குக் கூட்டிப் போய் மருத்துவம் பார்த்திருக்கிறாள். அம்மாவின் நல்ல மனது அப்பாவுக்குப் பிடித்துப் போக, ஐந்து மாத காதலில் இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு. இரண்டு சாதியாலும் இவர்களைப் பிரிக்க முடியவில்லை… அம்மா பெருமையாகச் சொல்லுவாள். அவளின் கதை சொன்ன பிறகுதான் தாத்தாவும் பாட்டியும் அன்னியமாகிப் போனார்கள். அப்பாவின் தாத்தா பாட்டிய… அம்மா சொல்லவே இல்லை. எங்களின் நிலையைப் பார்த்தால் அவர்கள் மட்டும் என்ன கொட்டியா கொடுத்திருப்பார்கள்?

நான் பிறந்த வருசம்தான் அந்தப் போராட்டம் நடந்ததாம். ஊரிலுள்ள வயலெல்லாம் கெட்டுப் போச்சாம். கம்பெனியின் கழிவு நீரெல்லாம் கம்மாய்க்குள்ள கலந்துருச்சாம். ஆமாம் இப்பகூட குடிதண்ணி கலர்கலராதான் வருது. தண்ணி கெட்டுப் போச்சு. விவசாயம் செத்துப் போச்சுன்னு ஊர் சனமும், கட்சிக்காரங்களும் போராட்டம் நடத்தி கம்பெனிய மூடிட்டாங்க.

இந்த வீடுகூட அம்மாவும் அப்பாவும் சம்பாதிச்சு கட்டுன்னாங்க. அப்பா டவுனுக்குச் சம்பாதிக்கப் போறேன்னு போனார். மாதா மாதம் பணம் வருவது நின்னு போனது. கைக்குழந்தையுடன் அம்மா சாப்பாட்டிற்கே சிரமப்பட்டிருக்கிறாள். அப்பாவுடன் சண்டை போட்டு வரலாம் என்று கூட நினைத்திருக்கலாம். வீண் என்றே விட்டிருக்கலாம். அம்மா வாழ்க்கையே முடிந்து போனது என்று விரக்திக்குச் சென்றுவிட்டாள். கோபம் இந்த சமூகத்தின் மீதா? இல்லை அவள் மீதே அவளுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். அம்மாவின் நினைவு வந்தவுடன் கண்ணீரும் வர ஆரம்பித்துவிட்டது.

வீட்டுக்கு முன் தட்டிப் பந்தல் போட்டாச்சு. அம்மாவை நடுக் கூடத்தில் வைப்பதற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அக்கம் பக்கத்தில் சொல்லியதில் அம்மாவின் உறவினர்கள் போல சிலர் என் அருகே உட்கார்ந்து என்னென்னமோ பேசினார்கள். எல்லாப் பேச்சும் புளித்துப் போய்விட்டது.

இப்போது நிமிர்ந்து பார்க்கிறேன், ஊரில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக வந்திருந்தனர். எல்லாம் பரிச்சயமானவர்கள்.

பஞ்சவர்ண அக்காதான் அம்மாவை அந்த பசைக் கம்பெனியில் சேர்த்துவிட்டாள். பசைக் கம்பெனியால் எங்கள் பசி கொஞ்சம் தீர்ந்தது. முதலாளி மாமா வீட்டிற்கே வந்து உதவி செய்வார். அவர் எப்போது வந்தாலும் எனக்கு காரச்சேவும் முறுக்கும் வாங்கி வருவார். அம்மாவுக்கென்று தனியா ஒரு பொட்டலமும் கொஞ்சம் பூவும் இருக்கும். அந்த பொட்டலத்தில் அபபடி என்ன இருக்கிறது? ஆசையாக இருக்கும்… விளையாடப் போய்விடுவேன். முன்பெல்லாம் எது கேட்டாலும் சிடுசிடுன்னு விழும் அம்மா இப்போது அந்த பொருளோடு வந்து என் ஆசையைத் தீர்த்துவிடுவாள்.

முதலாளி மாமாவின் மனைவி அம்மாவோடு ஒருநாள் நடுவழியில் சண்டை போட்டிருக்கிறாள். அம்மாவிடம் கேட்டேன். மவுனமாக இருந்தாள். அன்று நீண்ட நேரம் அம்மா சாப்பிடாமல் இருந்தாள். நான் தூங்கிவிட்டேன். காலையில் அம்மா சாப்பாட்டை வீட்டுக்குப் பின்னால் கொட்டியிருக்கிறாள்… அதைச் சாப்பிட்ட ஒரு நாயும் ஒரு குட்டியும் இறந்து கிடந்தது. பின்னால் ஒருநாள் இதை அம்மா சொன்ன போது அவளைக் கட்டிக் கொண்டேன். எனக்காக… அம்மா… எனக்காக…

அதன்பிறகு அம்மா அங்கு வேலைக்குச் செல்லவில்லை. அப்போதுதான் நூறுநாள் வேலை அறிவித்து ஆட்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் அம்மாவை சேர்க்கக் கூடாது என்று பஞ்சாயத்து போர்டு தலைவரிடம் வாதிட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து அம்மா அங்கே வேலைக்குப் போனாள். வாரக்கூலி என்றார்கள். அது வாராக்கூலியாகப் போய்விட்டது. அரசிடமிருந்து பணம் வரவில்லை என்றார்கள். அதை நம்பி கடன் வேறு வாங்கியாகிவிட்டது. ரேசன் அரிசி மாதம் முழுமைக்கும் வந்தாலும் மற்றவற்றிற்குக் கடன் வாங்கித்தானே ஆகவேண்டும். இப்போது அம்மா நாப்கின்க்குப் பதிலா துணிக்கு மாறியிருந்தாள் போல. இரண்டு வாங்கிய இடத்தில் இப்போது எனக்காக ஒன்று மட்டுமே வாங்கி வருகிறாள்.

ஒருநாள் என் வகுப்புத் தோழர்கள் சிலர் என்னையே முறைத்துப் பார்த்த போதுதான் நான் என்னைப் பெண்ணாக உணர்ந்தேன். அவர்களெல்லாம் வகுப்பறையை விட்டு வெளியில் போனதும், முருகவள்ளியிடம் கேட்டேன். அவள் மெதுவாக காதுக்குள் எதுஎதுவோ சொன்னாள். காதுக்குள் சொன்னதும் உடலுக்குள் ஒரே கூச்சமாக இருந்தது. கோழி இறகால் காது குடைவது போல ஒரு குறுகுறுப்பாக இருந்தது. சீ…ச்சி… என்றேன். அவள் சிரித்தாள். கடைசியாகச் சொன்னாள்…. அவள் மாதிரியே என்னை தாவணி போட்டு வரச் சொன்னாள்.

மகளின் முகம் பார்த்து எதையும் கண்டு பிடிக்காத தாய் ஒரு தாயல்ல. என் அம்மாவும் கண்டுபிடித்துவிட்டாள். பூரித்துப் போனேன். நானே சொல்லட்டும் என்று விட்டிருக்க வேண்டும். என்ன என்றாள்? அம்மா… எனக்கு தாவணி வேணும்; வெட்கமா இருக்கும்மா… பசங்களெல்லாம் என்னையே பார்த்து என்னமோ பேசிகிறாங்கம்மா…

அவள் அகம் மலர்ந்து முடிப்பதற்குள் முகம் வாடிவிட்டது. சற்றே என்னை அணைத்து, அம்மாவுடைய சேலையிருக்கு கட்டிக்கோ… என்றாள். அம்மா… பள்ளிக்கூடத்துக்குச் சேலை எல்லாம் கட்டிகிட்டுப் போக முடியாதும்மா…

என்னப்பா… எல்லாரும் வந்தாச்சா… ஆக வேண்டியத பாருங்கப்பா… என்று பஞ்சாயத்து போர்டு தலைவர் வேகங்காட்டிக் கொண்டிருந்தார். இரண்டு கம்புகளுக்கு இடையில் பச்ச மட்டை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஊருணியில் தண்ணீர் இல்லாததால், குழாயில் தண்ணீர் பிடிக்க என்னையும் கூட்டிப் போனார்கள்.

அம்மாவை குளிக்க வைத்தார்கள். அப்பொழுது ஒருத்தி அம்மாவின் கன்னத்தில் இடித்துத் தன் நீண்ட நாள் கோபத்தைத் தணித்துக் கொண்டாள். மற்றவர்கள் ஏய்..சும்மா இருக்கமாட்ட… என்று அமட்டினார்கள்.

மங்களகரமான முகம்… மஞ்சள் அப்பி இருந்தார்கள். வாவரசியாம் குங்குமம் வேறு பெரிதாக இருந்தது. புதுப் புடவையைக் கட்டி ஓலைப்பாயில் முத்தத்தில் படுக்க வைத்திருந்தார்கள். நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவளிடம் ஏது இந்த புதுப்புடவை… அம்மா… நீ இதை கடைசிவரை கட்டவே இல்லையா?

நான் தாவணி கேட்ட அன்றைக்குத்தான்… நன்றாகவே நினைவிருக்கிறது. சற்றே யோசித்த அம்மா சரி… கடைக்குப் போய் வாங்கியாறலாம் என்று என்னையும் அழைத்துக் கொண்டே போனாள். எனக்குள் ஆச்சரியம்… எப்போதாவது இந்த அதிசயம் நடக்கும். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டே கடைவீதியில் நடந்து வந்தேன். அம்மா தலை நிமிராமல் மவுனியாகவே நடந்து வந்தாள். கடைவீதியின் இரண்டு பக்கமும் இருந்தவர்கள் அம்மாவைப் பார்த்து ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சிலர் பலமாகவே சிரித்தார்கள். ஒன்றும் புரியவில்லை. நேரே ஸ்ரீபராசக்தி துணிக்கடைக்குள் அம்மா என்னை அழைத்துச் சென்றாள். எங்கோ ஒரு மூலையில் நின்ற கடை முதலாளி, அவரே நேரே வந்து எங்களுக்குத் தேவையான துணிகளைக் காட்டினார். எனக்கு சிவப்புக் கலரில் ஒன்றும், நீலக்கலரில் ஒன்றும் இரண்டு தாவணிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு கவுண்டரில் பணம் செலுத்தினோம். கடைக்காரர் என் தாவணிகள் இருந்த பிளாஸ்டிக் பையை என்னிடம் கொடுத்தார். நாங்கள் வந்த வேலை முடிந்து விட்டதென்று திரும்பிய போது, முதலாளி இன்னொரு பையையும் அம்மாவிடம் கொடுத்தார். அம்மா ஒரு நிமிடம் யோசித்து விட்டு, அதையும் வாங்கிக் கொண்டு வந்தாள்.

வீட்டிற்கு வந்த பிறகு அந்த பையில் என்ன இருக்கிறது என்று அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்தேன். புதுப்புடவை ஒன்று இருந்தது. இதைப்பற்றி அம்மாவிடம் கேட்கவில்லை.

இப்போது தான் மறுபடியும் இந்தப் புடவையைப் பார்க்கிறேன். இன்றுதான் அம்மாவுக்கு உடுத்த கிடைத்திருக்கிறது. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.

அம்மாவைப் பாடையில் வைத்துத் தூக்கிப் போனார்கள். ஓரிடத்தில் தண்ணீர் குடம் உடைத்து என்னை ஒரு சேலை போர்த்தி அழைத்து வந்துவிட்டார்கள். அம்மா… கட்டிப்பிடித்து அழக்கூட முடியவில்லை என்று மனம் நொந்து கொண்டே இருக்கிறது. அப்பா கடைசி வரை வரவேயில்லை. ஒவ்வொருவராக கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம இருக்குற நிலையில இதுவேறயா?…ன்னு அத்தை கிளம்பினாள், மாமாவும் பின்னாடியே போய்விட்டார். சின்ன தாத்தா என்று ஒருவர் என் தலை தடவிப் பாத்துக்கோம்மா… என்று அவரும் போய்விட்டார். கடைசியா… பஞ்சவர்ண அக்காவும் இராவுக்கு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்பிவிட்டார்கள்.

இரண்டு வாரங்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. அம்மா இல்லாமல் நான் ஒரு நாள்கூட இருந்ததில்லை. ஏம்மா… என்ன மட்டும் விட்டுட்டுப் போயிட்டியே…என்று அம்மாவின் நினைவோடு சாய்ந்திருந்த போது, யாரோ வீட்டுக்குள் வந்தது போல தெரிந்தது. ஓ… பழைய முதலாளி மாமாவா!… மாமாவைப் பார்த்தேன் அவர் கையில் ஒரு பொட்டலமும், மல்லிகைப்பூவும் இருந்தது. இப்போது…. அம்மாவின் சேலைக்குள் நான். நான் அம்மாவாகிட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *