கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 2,672 
 
 

(1959ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

11.மூன்று வருஷங்களுக்குப் பிறகு 

குருஸ்வாமியை விஜயபுரம் அக்கிரகாரத்தில் தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்க விட்டு விட்டு, கொல்லைப்பக்கம் குளிப்பதற்காகப் போன சீதாராமன் யார் கண்ணிலும் படாமல் அப்படியே மறைந்து போய் மூன்று வருஷங்களாகி விட்டன. குருஸ்வாமி தன்னையும் ஏமாற்றத் துணிவும் சாமர்த்தியமும் உள்ள ஒருவன் பிறந்தானே என்று ஆச்சரியத்தில் மூழ்கியவராக அன்று பூராவும் காத்துக் கொண்டு இருந்துவிட்டு அஸ்தமிக்கும் சமயத்தில் ரயிலேறிச் சென்னை செல்ல முயற்சிக்கையில், முதலில் டிக்கெட் இல்லாத குற்றத்துக்காகவும், பிறகு யார் என்று யாரோ கூறிவிட வேறு பெரிய குற்றங்களுக்காகவும் கைது செய்யப் பட்டார். அவருக்கிருந்த சாமர்த்தியத்தில் பாதி, கையில் காசில்லாத காரணத்தினால் மறைந்தேவிட்டது. மற்றப் பாதியும் சீதாராமனிடம் தோற்று விட்டதினாலே போய் விட்டது போலும்! எது எப்படியானாலும் குருஸ்வாமிக்கு நாலு வருஷங்கள் தண்டனை விதித்து விட்டார்கள். 

சீதாராமன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் பட்டணத்துக்கு வக்கீல் விலாசத்தில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்குத் தந்தி அடித்து விட்டுத் தன் வீட்டுக்கு வந்தபோது, விருந்தாளியைக் காண வில்லை. அவன் பெட்டி படுக்கை எல்லாம் வைத்த இடத் திலேயே இருந்தன. அதைப்பற்றி அவர் சிறிதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. எப்படி எந்த நிமிஷம் அவன் மறைந்தான் என்று எல்லா விஷயங்களையும் கூர்மையாகவே கவனித்துக் கொண்டிருந்த நளினிக்குக் கூடத் தெரியாது. குருஸ்வாமி என்பவன் தனக்காகத் திண்ணையிலே காத்திருந் தான் என்று சீதாராமனுக்குத் தெரியும். அதுபற்றி அவனுக்கு அவ்வளவாகத் திருப்தியில்லை என்று அவளுக்குத் தெரியும். ஏதோ பண விஷயமாக இருவரும் தகராறு செய்து கொண்டிருந் தார்கள் என்று அவர்கள் பேசிய விஷயங்களிலிருந்து அவள் அநுமானித்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் மீண்டும் அவர்களிருவரிடையேயும் விவாதம் நடக்கும் என்று எதிர் பார்த்திருந்தாள் அவள். 

சீதாராமனைக் காணவில்லை என்றவுடனே விசுவ நாதய்யருக்கு முதலில் தோன்றிய விஷயம்: பட்டணத்துப் பையன் கிணற்றில் தப்பித் தவறி விழுந்துவிட்டிருப்பானோ என்பது தான்! ஆழமில்லாக் கிணறுதான் அவர் வீட்டுக் கிணறு. அவரே அதில் இறங்கித் துளாவிப் பார்த்துவிட்டார். 

சின்னம்மாளுக்கு ஒரே கோபம். வழக்கமாகப் பத்து மணிக்கெல்லாம் கணவனுக்குச் சாப்பாடு போட்டுவிட்டுச் சற்று நேரம் அக்கடா என்று படுத்திருப்பாள் அவள் இன்று அவள் சாப்பாடும் கெட்டுவிட்டது; ஓய்வும் கெட்டுவிட்டது! கோபம் வருவது இயற்கைதானே! “ஊரிலிருக்கிற கரியாப் போவானுக்கெல்லாம் இடங்கொடுத்திண்டிருந்தால் என்ன எல்லாம் நடக்குமோ!” என்றாள் அவள். 

“கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளைத் தெரிந்த தோஷம்” என்று முணுமுணுத்துக்கொண்டே தலையை ஈரம் போகத் துவட்டிவிட்டுத் தனியே சாப்பிட உட்கார்ந்தார் விசுவ நாதய்யர். 

“பர்வதத்தம்மாளுக்கு வாய்ச்சிருக்கிற அருமைக்குத் தம்பியைப்பற்றிச் சொல்லிமுடியாது போங்கோ!” என்றாள் சின்னம்மா. 

“எல்லோருமே உன் தம்பி மாதிரி இருந்துவிட முடியுமா?” என்றார் விசுவநாதய்யர். 

“என் தம்பியை இழுப்பானேன் இங்கே! அவன் கிடக்கான் எங்கேயோ!” என்று சினுங்கினாள் சின்னம்மா. 

சீதாராமனுடைய வருகையும் திடீர் மறைவும் இப்படியாக விசுவநாதய்யருக்கும் அவர் சம்சாரத்திற்கும் இடையே ஒரு சண்டையை மூட்டிவிட்டன – அவ்வளவுதான். 

பல நாளாக சீதாராமனைப்பற்றிய ஞாபகமே இல்லாத நளினிக்கு இன்று அதெல்லாம் நடந்து சரியாக மூன்று வருஷங்களான பிறகு என்னவோ ஞாபகம் வந்தது. சீதா ராமனைப் பற்றிய சமாச்சாரங்கள் எல்லாம் அவளுக்கு ஒன்றுவிடாமல் நன்றாக ஞாபகத்திலிருந்தன என்பது சற்று ஆச்சரியப்பட வேண்டிய விஷயமே. 

நளினி வாசல் திண்ணையில் தூணில் சாய்ந்தபடியே உட்கார்ந்துகொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அவள் யோசனையில் ஆழ்ந்திருப்பது புதிதல்ல. அவளுக்கென்ன கவலையிருந்தது யோசனைகளைத் தவிர? காலாகாலத்தில் அவள் அப்பா கலியாணத்தைப் பண்ணி வைத்திருந்தாரானால் இதற்குள்ளாகவே அவளுக்குக் குடும்பக் கவலை எல்லாம் ஏற்பட்டிருக்கும். வயசு பதினைந்தாகப் போகிறது; இன்னும் கலியாணத்திற்கான ஏற்பாடுகளையே காணவில்லை. அவள் வயசுக்குச் சற்று வளர்த்தியான பெண் தான் நளினி. தவிரவும் அவள் பயமே இல்லாமல். சாதாரணமாக, தான் பெண், பயந்து வெட்கிச் சமையல் அறையிலேயே கிடக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டு எல்லோருடனும் சமமாக வார்த்தையாடுவாள். 

“அவனை ஒண்ணும் சொல்லாதே!” என்று விசுவ நாதய்யர் சொல்லிச் சொல்லி வந்ததன் பலனாகச் சின்னம்மாளும் அவளை எதுவும் சொல்வதை நிறுத்திப் பல நாட்களாகி விட்டன. 

“எப்படியாவது போகிறாள். எனக்கென்ன? நான் பெற்றெடுத்த பெண்ணா?” என்று முணுமுணுத்துக் கொண்டே சும்மா இருக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். ராஜுவுக்குப் பின் பிறந்த பேபிக்குச் சாதம் ஊட்டக்கூட அவள் நளினியைக் கூப்பிடுவது கிடையாது! 

இப்படியாக நளினி வாசல் திண்ணையில் தூணில் சாய்ந்துகொண்டு உட்கார்ந்து அழியாக் கனவுகள் கண்டு கொண்டிருப்பது தினசரிக் காரியமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அக்கிரகாரத்திலே நடப்பதெல்லாம் நளினிக்குத் தெரியும். அவளுக்குத் தெரியாமல்தான் அங்கு ஒன்றும் நடந்து விட முடியாதே! யார் வீட்டுக்கு யார் யார் வருகிறார்கள்? யார் யார் வீட்டிலே சமீபத்திலே என்னென்ன நடக்க இருக்கிறது? என்று தன் வயசுக்கு மீறிய ஓர் அறிவுடனே நளினி சொல்லுவாள். ஆனால் ஒன்று அவளாக வம்பு வளர்க்கத் தன் வீட்டு வாசல் இறங்கி எங்கும் போவது கிடையாது. யாராவது வந்து தன்னுடன் பேசினால் தான் அவள் பேசுவாள் கூச்ச மில்லாமலே யாருடனும் பேசுவாள். மற்றப்படி அவள் எல்லா வற்றையும் கவனித்துக் கொண்டு மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்த படியே இருக்க ஆக்ஷேபிப்பதே யில்லை. 

எதிர்வீட்டு வாசலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வந்து உட்கார்ந்ததைக் கண்டவுடனே நளினி அவரைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். மூன்று வருடங்களாக, சீதாராமன் வந்து போனது முதலே அவருக்குக் கெட்ட காலந்தான் என்று சொல்லவேண்டும். ‘பாவம்! ஆளே எப்படி மாறிப் போய் விட்டார்!’ என்று நினைத்தாள் நளினி. அப்படிப்பட்ட தொழில் அவருடையது. சீதாராமன் பண்ணிய பாவத்திற் கெல்லாம் அவர் பிராயச்சித்தம் செய்யவேண்டி யிருந்தது. சீதாராமன்தான் அப்படிப்பட்ட பாவம் என்ன பண்ணினான் என்று அக்கிரகார வாசிகளுக்கு நிச்சயமாகத் தெரியுமா? அதுவும் ஒன்றும் இல்லை. ஒருதரம் வந்தான்; யார் கண்ணிலும் படாமல் கொல்லைப்புறம் சுவர் ஏறிக் குதித்து ஓடி விட்டான்! அவன் செய்தது என்னவானால் என்ன? ஊரிலே அதே அக்கிரகாரத்திலே பரம்பரையாகப் பல குடும்பங்களுக்குப் புரோகிதர் என்று சொல்லிக்கொண்டு எதிர் வரிசையிலே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்குப் போட்டியாக, ராமச்சந்திர சாஸ்திரிகள் என்று ஒருவர் கும்ப கோணத்திலிருந்து வந்து குடியேறிவிட்டார். அவ்வளவு தான் அருமை மச்சினனால் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியார் கண்ட பலன். 

பர்வதத்தம்மாளை நினைக்கும்போது நளினிக்கே சிரிப்பு வந்தது. ஆனால் அது முழுச் சிரிப்பு அல்ல; பரிதாபங் கலந்த சிரிப்பு. பர்வதத்தம்மாள் இப்பொழுதெல்லாம் முன் போலத் தன் தம்பியின் பெருமையைப் பேசுவதற்காக, ஏதாவது கடன் வாங்க வருகிற சாக்கில் எதிர்வீட்டுக்கோ பக்கத்து வீட்டுக்கோ போவது கிடையாது; உண்மையில் அவள் எங்குமே கிளம்புவது கிடையாது. பெட்டிப்பாம்பு தான் அடங்கிக் கிடந்தாள். ஆனால் இத்தனைக்கும் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் வாய் திறந்து அவளை எதுவும் சொல்வது கிடையாது. ஆனால் அதனால் நிலைமை மாறி விடுமா? அல்லது உண்மை மறைந்து அழிந்துவிடுமா? 

சென்னையிலிருந்து, வழக்கு நடத்தாமலே வெற்றி கண்டு விட்ட பெருமிதத்துடன், வக்கீல் வாங்கிக்கொண்ட இரு நூற்றைம்பது ரூபாயும் திரும்பவில்லை என்றாலும், பாதகமில்லை என்று விசுவநாதய்யர் தந்தி கண்டவுடனே கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளும், பர்வதத்தம்மாளும் திரும்பினார்கள். ஆனால் விசுவநாதய்யர் அவர்களை உள்ளே அழைத்துப் போய் ரகசியமாக விஷயத்தைச் சொன்னவுடனேயே அவர் களுடைய முகங்கள் தொங்கிவிட்டன. முதல் இரண்டு நாள் என்னவோ விஷயம் ரகசியமாகத்தான் இருந்தது; பிறகு அக்கிரகாரம் பூராவும் எப்படியோ இது பரவிவிட்டது. எல்லோரும் சீதாராமனைப் பற்றியே பேசத் தலைப்பட்டார்கள். 

ரகசியமாக இருந்திருக்க வேண்டிய அச்செய்தி எப்படி ஊரெல்லாம் பரவியது என்பது நளினிக்கு அன்றும் சரி இன்றும் சரி – ஆச்சரியமாகவே இருந்தது. சின்னம்மா சொன்னது நளினியின் காதிலும் விழாமல் இல்லை: “நம் ஆத்திலேதான் ஒரு நியூஸ் பேப்பர் இருக்கே?” என்று அவள் சொன்னாள். ஆனால் நளினி யாரிடமும் சீதாராமனைப் பேசவில்லை என்பது உண்மை. விசுவநாதய்யரைப் பற்றிச் சந்தேகிக்க இடமே கிடையாது. தானுண்டு தன் வேலை யுண்டு என்று இருப்பவர் அவர். இந்த விஷயத்தில் தான் தவறிப்போய் ஏதோ கொஞ்சம் பிறர் விஷயத்திலும் ஈடுபட்டு வக்கீல் அமர்த்தி எல்லாம் செய்தார் தோல்வியுற்றார். இனி, தன் ஆயுளில் அவர் பிறர் காரியங்களில் தலையிடத் துணிய மாட்டார். சின்னம்மாளும் சொல்லியிருக்க மாட்டாள். கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளும் அவர் சம்சாரமும் இதைப்பற்றிப் பேசியே இருக்கமாட்டார்கள். பின் எப்படி எல்லாச் செய்திகளும் வெளிவந்துவிட்டது! ஊகமாகக் கூட இல்லை பூரா விவரங் களுடன் எப்படியோ வெளிவந்திருந்தது! இது, விடை காண முடியாத ஒரு புதிராகப்பட்டது நளினிக்கு. ஆனால், ஆளில்லாத அந்தரத் தபால்கள் நம்மூரில் புது விஷயம் அல்லவே! ரகசியம் என்று நாம் எண்ணிப் பத்திரப்படுத்தி வைக்கும் எவ்வளவு விஷயங்கள் பகிரங்கமாக அம்பலத்துக்குக் காரணமில்லாமலே வந்துவிடுகின்றன! 

சென்னையிலிருந்து விஜயபுரம் திரும்பிய விநாடி யிலிருந்தே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் துரதிஷ்டம் தொடங்கிவிட்டது என்று சொல்லவேண்டும். நாளுக்கு நாள் அவர் புரோகிதம் குறைந்தது. ஒரு விசேஷ தினமென்றால் நிற்கச் சாவகாசமில்லாமல் பம்பரமாகச் சுழன்று சம்பாதிக்கும் வைதிகப் பிராமணர் இப்போது வீட்டுத் திண்ணையை விட்டு இறங்குவதே கிடையாது. அவர் அப்படி என்னதான் பெரிய தவறு செய்துவிட்டார் என்பதுதான் நளினிக்குப் புரிய வில்லை. 

எதிர்வீட்டுத் திண்ணையில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் இரண்டே நிமிஷம்தான் உட்கார்ந்திருந்தார். தெருவோடு அவருக்குப் போட்டியாகச் சமீபத்தில் வந்து முளைத்த கும்பகோணம் ராமச்சந்திர சாஸ்திரிகள் தர்ப்பைக்கட்டும் கையுமாகப் போவதைக் கண்டதும், மனம் தாளாது உள்ளே எழுந்து போய்விட்டார். 

நளினியும் உள்ளே போக எழுந்தாள். போய்க் குளித்து விட்டு வந்தாள். அப்பா கூப்பிடுகிற சமயத்துக்குச் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் சின்னம்மாவிடம் அனாவசிய மாக வசவு கேட்க நேரிடும் அல்லவா? 

எழுந்த நளினி நின்றாள். தூரத்தில் எங்கேயோ ரயில் ஊதுகிற சப்தம் கேட்டது. ஓடம் போக்கி ஆற்றுப்பாலத்தின் மேலே ரயில் ஓடுகிற சப்தம் கடகடவென்று காலை அமைதியைக் கலைத்துக் கொண்டு எழுந்து ஓய்ந்தது. அக்கிரகாரத்துக் கோடியில் இருந்த பிள்ளையார் கோயிலைத் தாண்டிக் கடகடவென்று குதிரைச் சலங்கை மணியின் சப்தையும் அழுத்திக்கொண்டு ஒரு குதிரை வண்டி உருண்டு வரும் சப்தம் கேட்டது. 

நின்று யார் வீட்டுக்கு யார் வருவது என்று பார்க்கத் தாமதித்தாள் நளினி.

12.கல்யாணப் பேச்சு 

வாழ்க்கையிலே வேடிக்கை பார்ப்பதற்கென்றே பிறந்தவர்கள் பலர் உண்டு. எந்த அனுபவமும் அவர்களை நெருக்கித் தொடாது. தாமரை இலையில் தண்ணீர் போலப் பட்டும் படாமலும் இருந்து வாழ்ந்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். கஷ்டமோ சுகமோ துக்கமோ. அவர்கள் உள்ளத்திலே உரைப்பது கிடையாது. கனவு கண்டு விழித்தவர்கள் போலப் பிரமாதமான அனுபவத்தையும்கூட உதறிவிட்டு இருந்து விடுவார்கள்! ஒரு நாடகத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறவனைப்போல் அவர்கள் வாழ்க்கை பூராவுமே ஒரு நாடகமாகக் கழிந்துவிடும். எல்லாவற்றையும் கவனித்து, மற்றவர்களைவிடச் சற்று அதிகமாகவே நுணுக்கங்களை ஆராய்ந்து, துளித்துளி ஈடுபட்டும் விடுவார்கள். ஆனால் எல்லாம் நாடகம்தானே, இதில் ஈடுபடவேண்டிய அவசியமே கிடையாதே, என்று அவர்கள் மனசில் எப்போதும் சிந்தனை இருக்கும். 

இப்படி நாடகம் பார்க்கிற மாதிரி வாழ்க்கையைக் கழித்து விடுபவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அதிர்ஷ்டம் உண்மை யானது; தனம் பொருள் பதவிபோல வெறும் மாயை அல்ல. ஒரு விதமான மனோபாவத்தில் எழுந்த காரணத் தத்துவத்தையே அளித்து விடுகிறது, தத்துவமோ கொள்கையோ மற்றும் எவ்விதமான ஈடுபாடுகளோ இல்லாத வாழ்க்கை நடத்து கிறவர்களைவிட அவர்கள் நல்வாழ்க்கை நடத்துகிறார்கள். 

மனிதர்களுக்கு, மனிதகுலத்துக்கு எவ்வளவு தினுசான அனுபவங்கள் உண்டோ அவ்வளவும் தனி மனிதர்களுக்கும் உண்டென்பது உண்மை என்றே தோன்றுகிறது. உதாரணமாக இந்தப் பட்டும் படாமலும் இருக்கிற தன்மை ஒவ்வொரு மனிதனுடைய ஆயுளிலும் ஒரு பருவத்தில் இருக்கிறது. ஒரு சிலருக்கு அது அதிக காலம் நீடிக்கிறது; பலருக்கு அது சீக்கிரத்திலேயே மறைந்து விடுகிறது. அப்படியிருப்பது சாத்தியமல்ல என்று வாதிப்பவர்கள்கூட உண்டு என்றுதான் சொல்லவேண்டும்; அது வேதாந்திகளின் மனப்பான்மை; பலருக்கும் சாதாரணமான பலருக்கும் ஏற்காது என்று சொல்கிறவர்களும் உண்டு. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பருவத்தில் பொருந்துவதாகவே அமைந்திருக்கிறது. அப்படி அமைந்திருப்பதனால்தானே வாழ்க்கை நடத்துவதே சாத்தியமாகிறது? 

எல்லையற்றது, மீளமுடியாதது என்று எண்ணுகிற பல துயரங்கள் ஒருவனுக்கு ஏற்படத்தான் ஏற்படுகின்றன. ஒன்றை மீறமுடியாது என்று எண்ணுகிற பொழுதே இன்னொன்று ஏற்பட்டுவிடும். இவ்வளவையும் மீறி வாழ முயற்சி செய்யாதவர்கள் மிகச் சிலரே. வாழ்க்கை என்கிற முயற்சிக்குப் பட்டும் படாமலும் இருக்கிற தன்மை சற்று அதிகமாகவே தேவையாக இருக்கிறது. 

இதெல்லாம் அனாவசியமான தத்துவ விசாரம் என்றே தோன்றுகிறது. நளினி என்கிற சிறுமி பதினான்கு வயது தாண்டிப் பெரியவளாகிக் கொண்டிருப்பவள் – சமையற் கட்டில் உட்கார்ந்து கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக் கலாமே தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது என்று சின்னம்மாளும் சின்னம்மாளையே போன்ற விஜயபுரம் அக்கிரகாரமும் சொல்கிறது. இது தத்துவமல்ல. வழக்கத்தால் ஏற்பட்டுவிட்ட ஒரு மரபு, ஒரு கட்டுப்பாடு – அவ்வளவுதான். 

இந்தக் கட்டுப்பாடு அவசியமல்ல; இப்படி ஒன்று இருப்பதே இந்த நாளில் அசந்தர்ப்பமானது என்று நளினி எண்ணுகிறாள் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்க இன்னும் நளினி பழகவில்லை. அவள் பாட்டுக்குத் தன் இஷ்டப்படி நடந்து கொள்கிறாள். அதுவும் சின்னம்மா சொல்வதற்கு நேர் எதிராக நடந்து கொள்வதே தனக்கு நல்லது என்கிற முடிவுக்கு அவள் ஆரம்ப காலத்திலேயே வந்துவிட்டாள் என்று தான் தோன்றுகிறது. 

“வாசலில் போகாதே!” என்று சின்னம்மா உத்தர விட்டாளானால், போகத்தான் வேண்டும் என்று ஓர் எண்ணம் அவளுக்கு ஏற்படுகிறது. சின்னம்மாள் திட்டினால் விசுவ நாதய்யர் பரிந்துகொண்டு, “தாயில்லாக் குழந்தை” என்று ஆரம்பித்துவிடுவார். மற்றத் தாயில்லாக் குழந்தைகளின் விஷயம் எப்படியோ – நளினியின் விஷயத்தில் தாயில்லாக் குழந்தையாக இருப்பதே மிகவும் சிரேஷ்டமான காரியமாக இருந்தது. 

“வயது வந்த பெண் திண்ணையிலேயே உட்கார்ந் திருந்தால், தெருவிலே என்ன சொல்லுவார்கள்?” என்று சின்னம்மா கேட்டாள். 

“திண்ணைக்கு வராததுகள் மகராஜி எல்லாம் ஒழுங்காகத் தான் இருக்கான்னு அர்த்தமோ?” என்பார் விசுவநாதய்யர். 

“அதுக்குச் சொல்லல்லே! கல்யாணத்தைப் பண்ணிக் கொடுத்துட்டா அதற்கப்புறம் நம்ம பொறுப்பு விட்டது” என்பாள் சின்னம்மா. 

“தானே ஆற காலத்திலே ஆறது ” என்பார் விசுவ நாதய்யர். இந்தக் கல்யாணம் அஸ்திரத்துக்குத் தன்னால் பதில் சொல்ல இயலாது என்று அவருக்குத் தெரியும். கல்யாணத்தைப் பற்றிச் சின்னம்மா தொடங்கியவுடனேயே அவர் எழுந்து நகர ஆரம்பித்துவிடுவார். 

“ஆற காலம்னா இன்னும் ஆறு வருஷம் ஆகணும் போலிருக்கு? வயசும் பதினஞ்சு ஆகப்போறது…” என்பாள் சின்னம்மா தன் வெற்றியைத் தொடர்ந்து. 

“பதினாலு ஆகல்லே இன்னும் அதுக்குள்ளே பதினஞ்சு, பதினாறுன்னு…” என்று விசுவநாதய்யர் முணுமுணுப்பார். 

“தானே நாளைக்கு ஆயிடுது! அப்புறம்?” என்பாள் சின்னம்மா, அவள் அதைச் சொல்கிற பாவத்திலே நாளைக்கே பதினாறு ஆகிவிடும்போலப் பயம் தொனிக்கும்! 

விசுவநாதய்யர் பதில் சொல்லாமல் பேச்சை வேறு வழியில் திருப்ப யத்தனித்தார். “நாளைக்கு நாலுபேர் என்னைத் தான் சொல்லுவா: தாயில்லாப் பொண்ணு, அதுக்குக் கலியாணமாகனுமென்று இவளுக்குக் கவலையிருக்கு மான்னு….” 

விசுவநாதய்யர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு வாசலுக்கோ ஆபீஸுக்கோ, வேறு எங்கேயோ போய் விடுவார். 

தன்னைப்பற்றிய இந்த விவாதத்தையும் நாடகத்தைக் கவனிப்பதுபோலக் கவனித்து மனத்தில் வாங்கிக் கொண்டாள் நளினி. தன்னைப்பற்றியது என்பதற்காக, அது அவள் மனசில் அதிகமாக உரைக்கவில்லை. தெருவில் நின்று வண்டி வந்தால் யார் வீட்டுக்கு யார் வருவது என்று வேடிக்கை பார்க்கிற மாதிரியே இதையும் வேறு யாரையோ பற்றிய விவாதம் என்று எண்ணியவள்போல வேடிக்கை பார்த்தாள். 

சில சமயம் அவள் தனக்குக் கல்யாணம் ஆவதுபற்றியும் சிந்திப்பதுண்டு. பட்டும் படாமலுமிருக்கிற தன்மை அவளிடம் எவ்வளவுதான் ஊறிப் போயிருந்தது என்றாலும் அக்கிர காரத்தில் பிறந்த பெண், வயசாகிக் கொண்டிருக்கிற பெண், வளர்ந்து பெரியவளாகி மற்றவர்களைப் போலக் குடித்தனம் நடத்த ஆசைப்படுகிற பெண் என்பதனால் அவள் தனக்கு வரப்போகிற மணாளனைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாதல்லவா? 

ஆனால் அவள் எண்ணிச் செய்வதென்ன? சின்னம்மா தொந்தரவுக்காகத் தானே போய்த் தேடி யாரையாவது அழைத்து வந்து, “இவர்தான் என் புருஷர்” என்று சொல்லிவிடுவதா? அது தற்போதைய நாகரீகத்தில் விஜயபுரம் அக்கிரகாரத்தில் சாத்தியமான காரியம் அல்லவே! விஜயபுரம் அக்கிரகாரத்துச் சம்பிரதாயப்படி அப்பா பணம் சேகரித்து வைத்தாக வேண்டும்; அம்மா கல்யாணத்துக்கென்று அப்பளாம் இட்டு வைப்பது முதல் மற்றும் பல சாமான்களும் சேர்த்தாக வேண்டும்; இவ்வளவும் ஆன பிறகு ஜாதகம் பார்த்துப் பொருந்திய வரனை அழைத்து வந்து அவனுக்குப் பெண்ணைக்காட்டி…. 

நளினியே தேடிக்கொண்டுவிட முடியுமானால் தேடிக் கொண்டுவிடுவாள். வாசலில் நின்று சும்மா, ஒரு பயனும் இல்லாமல், கால் வலிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப் பதற்கே ஆட்சேபங்கள் சொன்ன சின்னம்மா, நளினி மனத்தில் இருந்த இந்த எண்ணத்தை அறிந்துகொண்டிருந்தாளானால் இன்னும் என்னென்ன சொல்லியிருப்பாளோ! 

தன் மனத்திலிருந்தது என்ன என்று சரியாக நளினிக்கே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். தெரிந்திருந்தால் சின்னம்மாவுக்குக் கோபமூட்ட வேண்டும் என்கிற ஒரு காரணத்துக்காகவேணும் அவள் அதை வெளியிட்டே சொல்லி யிருப்பாள். வேடிக்கை பார்ப்பதில் உள்ள ஈடுபாடு காரணமாகத் தான் என்று வைத்துக்கொள்ளலாம் – நளினிக்கு வேடிக்கை பார்ப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களைச் சிருஷ்டித்துக் கொள்ளவும் சாமர்த்தியம் இருந்தது. 

விஜயபுரம் அக்கிரகாரத்திற்கு இரண்டுதரம் வந்து இரண்டுதரமும் தன்னாலேயே வரவேற்கப்பட்ட அந்த சீதாராமனைப் பற்றி நினைத்தபோதெல்லாம் அவள் சற்று தடுமாற்றம் அடைந்தாள். அதென்னமோ, அவள் மனத்தில் தனக்கு வரப்போகிறவன் சீதாராமன் மாதிரிதான் இருக்க வேண்டும் என்று ஊர்ஜீதமாகி யிருந்தது. சீதாராமனாகவே இருந்தால்கூட நல்லதுதான்; ஆனால் ஊரார் எல்லோரும் அவனைப் பாங்க் கொள்ளைக்காரன் என்றும் அயோக்கியப் பதர் என்றும் பலவாறு கூறியது அவள் காதில் விழாமல் இல்லை. பாவம்! சாதுவான கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் பிழைப்பிலே மண் விழுந்தது அதனால்தான் என்று வேறு அவனைத் தூற்றினார்கள். 

ஆனால் நளினி நினைக்கவில்லை சீதாராமன் அயோக்கியன் என்றே அவள் நினைக்கவில்லை. ஓடிப்போன அவன் எதற்காக அப்படிப்பயந்து ஓடிப்போக வேண்டும் என்று தானே தெளிவாகும்; பிறகு மீண்டும் ஒருதரம் சீதாராமன் வருவான் விஜயபுரம் அக்கிரகாரத்துக்கு என்று எண்ணினாள் அவள். 

அன்று காலையில் விஜயபுரம் அக்கிரகாரத்திற்குள் வந்து கொண்டிருந்த வண்டியில் சீதாராமனே வந்தாலும்…. 

என்று எண்ணினாள் நளினி. உள்ளே போக எழுந்தாள்; நின்று பார்த்தாள். 

வண்டி நேரே கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் நடுவேதான் – முன் இரு சந்தர்ப்பங்களில் போலவே – நின்றது. ஆனால் வண்டியிலிருந்து இறங்கியது சீதாராமன் அல்ல. ஆனால் சீதாராமன் மாதிரியும்தான் இருந்தது என்று கவனித்தாள் நளினி. நரைத்த சிகையும் ஏழெட்டு நாள் தாடியும் பஞ்சகச்சமும், நெற்றியில் விபூதியுமாக வண்டி யிலிருந்து இறங்கியவருக்கு சீதாராமன் சாயல் இருந்தது வாஸ்தவம்தான். ஆனால் அது சீதாராமன் அல்ல. 

– தொடரும்…

– நளினி (காவிரிக்கரை நாவல்), முதற் பதிப்பு: 1959, சந்தியா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *