கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 2,886 
 
 

(1959ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

3.போலீஸ் விசாரணை 

சாதாரணமாக என்றுமே விஜயபுரம் அக்கிரகாரத்திலே போலீஸ்காரர்களுக்கு வேலை இருந்தது கிடையாது. தப்பித் தவறி யாராவது போலீஸ்காரன் மேலண்டைக் கோடியிலிருந்த பிள்ளையார் கோயிலைத் தாண்டி அக்கிரகாரத்துக்குள் வந்து விட்டானானால், உள்ளம் பதைக்க அக்கிரகார வாசிகள் எல்லோரும் அவன் மெதுவாக நடந்து அக்கிரகாரத்துக் கீழண்டைக் கோடியிலிருந்த நாரத்தைத் தோட்டத்தைத் தாண்டி அடுத்து உள்ள மேட்டுத் தெருவிற்குள் நிரும்பும் வரையில், அவனையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆமாம், அடுத்து உள்ள மேட்டுத் தெருவிலே போலீஸாருக்குத் தினம் வேலை இருந்துகொண்டுதான் இருக்கும். சில சமயம் மேட்டுத் தெரு போகிற போலீஸ்காரர்கள் குறுக்கு வழி என்று எண்ணிக்கொண்டு அக்கிரகாரத்திற்குள் புகுந்து போவார்கள். 

அதைத் தவிர விஜயபுரத்தின் அக்கிரகாரத்தின் சரித்திரத்திலே, அதற்குள் போலீஸ்காரர்கள் வர, வந்து யாரையும் பயமுறுத்தச் சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லை. 

அக்கிரகார வாசிகள் ரொம்பவும் ஏழ்மைவாய்ப்பட்டவர்கள் தான். அன்றாடம் ஏதோ எப்படியோ வயிறு நிரப்புவதற்கு வேண்டியதைச் சம்பாதித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தான். சுபாவமாகவே தப்புத் தண்டா செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற உள்ளம் படைத்தவர்கள். அப்படி எதுவும் செய்துவிடவும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்த தில்லை. சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தாலும் அங்கிருந்தவர் களுக்குப் போதுமான துணிவும் கிடையாது. 

உலகத்தில் மக்களுக்கிடையே எங்கும் உள்ளதுபோல அக்கிரகாரத்து வாசிகளிடையேயும் குரோதமும் அசூயையும், பொறாமையும் இல்லாமல் இல்லை. உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்தது – அவ்வளவுதான். 

சமூகத்தின் கட்டுப்பாடுகளும், விதிகளும் நிரந்தரமானவை. அசைக்க முடியாதவை என்கிற கொள்கை படைத்தவர்கள் அவர்கள். வெளியுலகிலே யார் யாரோ எவ்வளவோ துணி கரமான காரியங்களைச் செய்து அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடைய காதிலும் விழுந்ததுண்டு. ஆனால் அதெல்லாம் ஏதோ காவியம் படிப்பதுபோல அவர்கள் உள்ளத்தைத் தொடாமல் போய்விட்டது. 

அக்கிரகாரத்தின் சரித்திரத்திலேயே இடம்பெறக் கூடிய தான ஒரு சம்பவம் இன்று நடந்துவிட்டது! அக்கிரகாரத்து வாசிகளிலே மிகவும் பயந்தவரும், மிகவும் வைதீகருமான கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் வீட்டு வாசலிலே எட்டுப் போலீஸ்காரர்களும், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் வந்து நின்றார்கள். ஏதோ காரியமாகத்தான் வந்திருக்கிறார்கள் என்று தெருவாசிகளால் ஊகிக்காமல் இருக்க முடியவில்லை. எவ்வளவுதான் சாதுவானாலும், இன்றைய உலக நடப்பும் சமூக அமைப்பும் தெரியாமல் வாழ முடியுமா? 

ஆனால் அக்கிரகாரத்துக்கு ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரியும். போலீஸாருடைய அலுவல் என்ன ஆனாலும் அது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளிடம் அல்ல என்பது நிச்சயம். முதல் காரணம். அவர் ஊரிலில்லை; பக்கத்துக் கிராமத்துக்குத் தன் நிலபுலங்களைக் கவனிப்பதற்காகப் போயிருந்தார். தவிரவும் அவரிடம் போலீஸாருக்கு எந்த அலுவலும் இருப்பது சாத்தியமான காரியமே அல்ல. கிருஷ்ணமூர்த்தி அய்யரின் சம்சாரம் பர்வதத்தம்மாளுடைய சுறுசுறுப்பால் அக்கிரகாரம் பூராவிலுமே அவள் வீட்டிற்கு அவள் தம்பி அன்று காலை வந்திருப்பது தெரிந்திருந்தது. இதுவரையில் தெரிந்து கொள்ளாதவர்களும் இப்போது தெரிந்துகொண்டார்கள். போலீசார் புதுசாக வந்திருந்த ஆசாமியைத் தேடிக்கொண்டு தான் வந்திருந்தார்கள் என்று நம்ப எல்லோருமே தயாராக இருந்தார்கள். 

ஆமாம்: போலீசார் சீதாராமனைத் தேடியே வந்திருந்தார்கள். 

அக்கிரகாரத்துக்குள் போலீசார் நுழைந்தபோது தெருவிலே நடமாட்டமே இல்லை. தெருக்கோடியில் பிள்ளையார் கோயிலுக்கு அடுத்தாற்போல ஒரு நாய் படுத்திருந்தது. ஆமாம். நமக்கு அறிமுகமான அதே பூச்சிதான், ஒரு வீட்டுத் திண்ணையில் ஒரு சிறு பெண் பத்து வயதிருக்கும். தூணில் சாய்ந்து கொண்டு, வாய் ஏதோ பாட்டின் அடியை முணு முணுக்க, உட்கார்ந்திருந்தாள். இந்தப் பெண்ணும் நமக்கு அறிமுகமானவள்தான் நளினிதான் அது. தெருவிலே ‘திடுதிப்’ என்று பிரவேசித்த போலீஸ்காரர்களைக் கவனிப்பதற்காக நளினி எழுந்து நின்றாள். 

போலீஸ்காரர்கள் நளினி வீட்டிற்கு நேர் எதிரில் வந்து நின்றனர். சப்- இன்ஸ்பெக்டர் – அவர் சப் இன்ஸ்பெக்டர் தான் என்பது நளினிக்கும் தெரிந்தது – தன் கையிலிருந்த ஒரு கடிதத்தைப் பிரித்துப் படித்தார். பிறகு திரும்பி நாலா பக்கமும் பார்த்தார். நளினி நின்றுகொண்டிருந்தது அவர் கண்களில் பட்டது. எதிர்வீட்டு வாசலிலே மற்றவர்களை நிறுத்திவிட்டு நளினியை நோக்கி வந்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர். 

நளினி வயதுடைய மற்றப் பெண்கள் பயந்திருப் பார்களோ என்னவோ, நளினி பயப்படவில்லை! ஆனால், இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்வது என்பதை அவள் அறிந்ததில்லை. ஆகவே, எதுவும் பேசாமல், அவராகவே பேசினால் பதில் சொல்லலாம் என்று நின்றாள். 

சப்-இன்ஸ்பெக்டர் அருகில் வந்து நின்றுகொண்டு கேட்டார்: “ஏங் குழந்தை. உம் பேரு என்ன?” 

“நளினி. ” 

“உங்கப்பா இருக்காரா ஆத்திலே?” 

“ஆபீஸுக்குப் போயிருக்கா” நளினி. 

“எந்த ஆபீஸ்லே வேலையாயிருக்கா உங்கப்பா?” என்று கேட்டார் சப் இன்ஸ்பெக்டர். 

“தபாலாபீஸ்லே, எங்கப்பா தந்திக் குமாஸ்தா” என்றாள் நளினி. 

“ஓ! விசுவநாதய்யர் பொண்ணா நீ? தேவலையே! கெட்டிக்காரப் பெண்தான். தைரியமா, பயப்படாம பதில் சொல்றயே!” என்று சொல்லிவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பிறகு சொன்னார்: “எதுத்தாத்திலே இன்னிக்குக் கார்த்தாலை புதுசா யாரோ …..” 

சப்-இன்ஸ்பெக்டர் கேட்டு முடிக்கும் வரையில் காத்திராமல் நளினி தானாகவே சொன்னாள்: “ஆமாம்; சீதாராமன்னு பெயராம். பட்டணத்திலே ஏதோ பாங்கிலே வேலையாக இருக்காராம்… இன்னிக்குக் கார்த்தாலை வந்தார்” என்றாள். 

“சரி; அதுதான் கேட்டேன். சமத்துப் பொண்ணு நீ!” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து திரும்ப யத்தனித்தார். 

இதற்குள் உள்ளேயிருந்த சின்னம்மாவின் காதில் நளினி யாருடனோ பேசிக்கொண்டிருப்பது விழுந்துவிட்டது. உள்ளிருந்த படியே, “நளினி அடி, கம்மனாட்டி! யாரோடே போய் நின்னுண்டு வம்பளத்துண்டிருக்கே!’ என்று கடுமையான குரலில் கேட்டுவிட்டு வெளியே வந்தாள். எதிரே போலீஸ் காரர்களையும், தன் வீட்டு வாசலில் சப் இன்ஸ்பெக்டரையும் கண்டதும் பயந்துவிட்டாள்! மேல்துணியை இழுத்துப் போர்த்திக்கொண்டு கதவுக்கப்பால் ஒண்டிக் கொள்ள முயன்றவளாக, “ஆத்திலே புருஷா யாரும் இல்லேன்னு சொல்லியனுப் பேண்டி நளினி” என்று நளினிக்கு உத்தர விட்டாள். 

சின்னம்மா சொன்னதை நளினி காதில் வாங்கவே யில்லை. சப் இன்ஸ்பெக்டரை “மாமா” என்று கூப்பிட்டு, “ஏன் மாமா? அவர் என்ன…?” என்று கேட்டாள். 

சப் இன்ஸ்பெக்டர் பதில் சொல்லாமல் நகர்ந்துவிட யத்தனித்தார். 

நளினி தொடர்ந்து சொன்னாள்: “பார்த்தால் ரொம்ப நல்லவர் மாதிரிதானே இருந்தார்? எதுவும் தப்பான காரியம் செய்தவர் மாதிரி இல்லையே!” என்றாள். 

“பார்வைக்கு நல்லவா மாதிரி இருக்கிறவங்கயெல்லாம் நல்லவாளாகவே இருந்துவிட்டால் இந்த உலகம்…” என்று ஆரம்பித்தார் சப்-இன்ஸ்பெக்டர். 

“இல்லை மாமா! பார்வைக்கு உங்களையும்விட நல்லவர் மாதிரிதான் இருந்தார்” என்றாள் நளினி. 

“போக்கிரிப் பொண்ணு நீ! விசுவநாதய்யரைப் பார்த்தால் சொல்றேன்” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து போய்விட்டார் சப் இன்ஸ்பெக்டர். 

இதற்குள் தெருவிலிருந்த பெண்டு பிள்ளைகள், குழந்தை குஞ்சுகள் எல்லோரும் ஏதோ அசாதாரணமான ஒரு காரியம் நடக்கிறது என்று அறிந்துகொண்டு அதைப் பூராவையும் கவனிக்கவேண்டுமென்றே ஆவலுடன் தெருவுக்கு வந்து விட்டார்கள். தெருவோடு அச்சமயம் போக நேர்ந்தவர்கள், என்னவோ, ஏதோ என்று வேடிக்கை பார்க்க நின்று விட்டார்கள். நளினி வீட்டிற்கும் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் வீட்டிற்கும் இடையே பெரிய கும்பல் கூடிவிட்டது. போலீஸ் காரர்கள் ஒன்றிரண்டு பேர் வழிகளை விரட்டியும் கும்பல் கலைவதாக இல்லை. 

சப்-இன்ஸ்பெக்டர் திண்ணையிலே கம்பீரமாக அமர்ந்தார். ஒரு போலீஸ்காரனை வீட்டுக் கதவைத் தட்டச் சொன்னார். அவன் படபடவென்று அதிகாரத்துடன் கதவைத் தட்டினான். ஏழெட்டு வயசுப் பையன் ஒருவன் வந்து கதவைத் திறந்தான். உள்ளே கூடத்தில் ஊஞ்சலில் ஒரு வாலிபன் உட்கார்ந்திருந் தான். சமையல் அறை வாசற்படியண்டை ஒரு ஸ்திரீ கையில் சிம்னி விளக்குடன் காட்சி அளித்தாள். வெளியே நிற்பவர்களைக் கண்டவுடனே அந்த ஸ்திரீயின் கையிலிருந்த சிம்னி கீழே நழுவி விழுந்து அணைந்தது. 

“சீதாராமன் என்பது யார்?” என்று சற்று அதட்டலான குரலிலே போலீஸ்காரன் கேட்டான். 

“நான் தான்” என்று சொல்லிக்கொண்டு ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த வாலிபன் எழுந்து வாசல் பக்கம் வந்தான். அவன் குரல் சற்றே நடுங்கியது; நடை கொஞ்சம் தடு மாறியது. ஆனால் அவன் முகத்தில் கலவரமில்லை. ஏதாவது குற்றம் செய்துவிட்டு மாட்டிக் கொண்டவன் முகத்தில் தோன்றுவது மாதிரியான பீதி எதுவும் அவன் முகத்திலே தோன்றவில்லை. 

சப்-இன்ஸ்பெக்டர் எதிரில் போய் நின்றான் சீதாராமன். எதிர்வீட்டு நளினி சொன்னது ஞாபகம் வந்தது சப் இன்ஸ் பெக்டருக்கு. அவர் சீதாராமனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அவன் நல்லவன் மாதிரி தான் தோன்றியது. சீதாராமனிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஆங்கிலத்தில் சொன்னார்: “உங்கள் பாங்கியில் முந்தாநாள் இருபதினாயிரம் களவு போய்விட்டதாகவும், அதுபற்றி உன்னைச் சந்தேகிப்பதாகவும், உன்னை அரெஸ்ட் செய்யச் சொல்லியும் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. உன்னை அரெஸ்டு செய்கிறேன். உன் சாமான்களைச் சோதனை செய்யவும் உத்தரவிருக்கிறது” என்றார். 

“இதில் ஏதோ தவறிருக்கிறது” என்று தழுதழுத்த குரலில் சொன்னான் சீதாராமன். 

“இருக்கலாம்: ஆனால் நான் என் கடமையைச் செய்ய வேண்டியவன். நீ குற்றம் செய்யாதது உண்மையானால் தானாகவே விசாரித்துவிட்டு விட்டு விடுவார்கள்” என்றார் சப் – இன்ஸ்பெக்டர். 

வீட்டையும், சீதாராமனின் சாமான்களையும் சோதனை போடச் சொன்னார் சப்-இன்ஸ்பெக்டர். பாங்கியில் கெட்டுப் போனதாகச் சொல்லப்பட்ட இருபதினாயிரம் கிடைக்க வில்லை. சீதாராமனின் பர்ஸில் இருபது ரூபாயும் சில்லரையும் தான் இருந்தது. 

“இன்னும் சாப்பிடக்கூட இல்லையே அவன் ” என்று அங்கலாய்த்தாள் பர்வதத்தம்மாள். 

“அதைப்பத்திக் கவலைப்படாதே அம்மா. நான் ஹோட்டலில் சாப்பாடு பண்ணி வைத்து விடுகிறேன். இன்றே இவரைப் பட்டணத்துக்கு அனுப்ப உத்தரவாகி யிருக்கிறது. பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு கிளம்பு” என்றார் சப்-இன்ஸ்பெக்டர், சீதாராமனிடம். 

தலையைத் தொங்க விட்டுக்கொண்டே கிளம்பினான் சீதாராமன். அவன் திரும்பித் தன் தமக்கையைக் கூடப் பார்க்கவில்லை. 

அவள் கண்களில் நீர் தளும்ப நின்றாள். ஒரு வார்த்தையும் சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை. ஒரு நொடியில் அவள் சந்தோஷம் பூராவும் பறந்துவிட்டது. அவள் ஸ்தம்பித்து, செயலற்று நின்றாள்! 

கூட்டம் எல்லாம் கலைந்து கடைசியில் நளினி வந்து ஆறுதல் சொல்லுகிற வரையில் பர்வதத்தம்மாளுக்கு சுயப் பிரக்ஞை வரவில்லை. 

நளினி சொன்னாள்: “கவலைப்படாதேங்கோ மாமி! அப்படி ஒன்னும் கெடுதலா நேர்ந்துடாது. தானே இன்னிக்கு விட்டுடுவா” என்றாள். 

பர்வதத்தம்மாளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை; கண்ணைத் துடைத்துக் கொண்டாள். 

இதற்குள் எதிர் வீட்டிலிருந்து சின்னம்மாவின் உரத்த குரல் கேட்டது. “நளினி! அடீ, நளினி! எங்கேடியம்மா தொலைஞ்சு போயிட்டே நீ!” என்று சின்னம்மா உரக்கக் கத்திக்கொண்டிருந்தாள். 

4.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 

அன்று மாலை கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் வயல் வெளிகளில் தன் அலுவல்களை எல்லாம் பார்த்துக் கொண்டு வீடு திரும்பும்போது அஸ்தமன சமயம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டொரு நாழிகையில் இருட்டி விடும். அதி காலையில் வீட்டுப் பால் காபி ஒன்றரைச் சேர் சாப்பிட்டு போனதுதான். அதற்குப் பிறகு அவர் ஜலபானம் கூடப் பண்ண வில்லை. வரிந்து கட்டிக்கொண்டு ஆட்களுடன் நின்று வேலை செய்துவிட்டுத் திரும்பினார். 

விஜயபுரம் எல்லையை எட்டுகிறபோது பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது. அக்கிரகாரத்துக்குள் வருகிற போது, வீடு சேர்ந்ததும் ஹாய்யாக ஸ்நானம் பண்ணி விட்டு, நாலு வாய் சாப்பிட்டுவிட்டு, அக்கடா என்று திண்ணையிலே துணியை விரித்துக் கொண்டு சிறிது நேரம் படுத்திருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே வந்தார். 

தெருவாசிகள் எல்லாரும் அதாவது அச்சமயம் அங்கிருந்தவர்கள் எல்லாரும் – தன்னை ஏதோ ஒரு தினுசாகப் பார்ப்பதுபோலப் பட்டது சாஸ்திரிகளுக்கு. முகத்திலே, தலையிலே ஏதாவது வைக்கோல் தூசு தும்பு ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று கைகளால் தடவிப் பார்த்துக் கொண்டார். பின்னர் என்ன? 

வீட்டை அடைந்து கதவைத் தட்டினார். எதிர் வீட்டில் தந்திக் குமாஸ்தா விசுவநாதய்யர் வீட்டில் அப்பொழுது தான் நளினி ஒரு சிறு கல் விளக்கை ஏற்றிவாசல் திண்ணைப் பிறையில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாள். வாசல் திண்ணையிலே ஒரு சிறு பிறையில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைத்துவிட்டால் எவ்வளவோ அலங்காரமாகத்தான் இருக்கிறது. எவ்வளவோ மங்களகரமாகத் தான் இருக்கிறது என்று எண்ணினார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். வானத்திலே நட்சத்திரம் சுடர் விடுவதைப் போல ஒரு சிறு கைவிளக்கு தெருவுக்கே அலங்காரமாகி விடுகிறதே! 

எதிர்வீட்டு நளினி வயசுதான் அவர் பெண் எச்சுமூவுக்கும். ஆனால் வீட்டு வாசலிலே விளக்கு ஏற்றி வைக்கவேண்டும் என்று எச்சுமுக்கு பிறகு சொன்னால் ஒழிய ஞாபகமே வராது. “அஸ்தமிக்கிற சமயம் ஆயிற்றே; வாசலிலே ஜலம் தெளித்துக் கோலமிட்டு ஒரு விளக்கையும் ஏற்றி வைக்கக்கூடாதோ? வீட்டிலே பெரியவள் ஒருத்தி இருந்தாளே! அவள் என்னதான் அப்படிச் செய்து கொண்டிருந்தாளோ! லக்ஷ்மீகரமான வேளையிலே வாசற் கதவு அடைத்துத் தாளிட்டிருப்பதா? என்ன குடித்தனம்! என்ன பொம்மனாட்டி!” என்று பசியின் வேகத்தால் அதிகரித்த ஆத்திரத்துடன் நினைத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். 

வாசற் கதவைச் சற்று ஆத்திரத்துடனேயே தட்டினார். 

அவருடைய பிள்ளை ராஜு ஏழெட்டு வயசுப் பையன் வந்து கதவைத் திறந்தான். திறந்தவுடனேயே, அன்று நடந்த அசாதாரணமான சம்பவங்களைத் தன் தகப்பனாருக்கு ஒரே மூச்சில் சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல் துடித்தது அவனுக்கு. 

“அப்பா! இன்னிக்கி போலீஸ்காராள்ளாம் நம்மாத்துக்கு வந்தா அப்பா! வந்து…. வந்து…” என்று மேலே எப்படி எந்த வரிசையில் எதைச் சொல்வது என்று அறியாமல் திண்டாடினான். 

சாதுக்கள் நிறைந்த விஜயபுரம் அக்கிரகாரத்திலே சாது என்று சிறப்புப் பெயர் பெற்றவர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தப்புத் தண்டாவுக்கு வழி மறந்தும் போகாதவர். போலீஸ் காரர்கள் தன் வீட்டுப் பக்கம் வந்திருந்தார்கள் என்று கேட்ட வுடனேயே அவர் வெலவெலத்துப் போய்விட்டார்! தன் மனைவி ஏதோ சொல்ப அளவில், தவலை சொம்பு என்று அடகு வாங்கிக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்வதுண்டு என்று அவருக்குத் தெரியும். அது விஷயமாக ஏதாவது தவறு செய்துவிட்டு… தன் பெயரைச் சந்தி சிரிக்க அடித்து விட்டாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது அவருக்கு. அது ஒன்றுதான் குறைவாக இருந்தது. நிலம் சரியானபடி விளையவில்லை இவ்வருஷம்: வைதிகத் தொழிலும் இப்பொழுதெல்லாம் முன்போல் இல்லை. அதை மதிப்பவர்களே குறைந்து கொண்டிருந்தார்கள் போல இருந்தது. சரிதான். போலீஸ் காரர்களும் சேர்ந்து கொண்டால் பிழைப்பு நடந்தாற்போலத் தான் என்று எண்ணமிட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். 

அவர் பையன் ராஜு சொல்லிக் கொண்டிருந்தான்: “பட்டணத்திலேருந்து மாமா வந்தா இன்னிக்காத்தாலை; மத்தியானம் போலீஸ்காரா வந்து மாமாவை அழைச்சுண்டு போயிட்டா” என்றான். 

“மாமா வந்திருந்தானா? ஏண்டி! யாரு சீதாராமனா?” என்று கேட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியார், ஊஞ்சலில் சுருட்டி மடக்கிக் கொண்டு படுத்திருந்த தன் மனைவி பர்வதம்மாளை பார்த்து. 

பர்வதம் பதில் அளிக்கவில்லை. 

“ஏன் அப்பா? நளினி சொல்றா: நாளைக்கு மாமாவை விட்டுபுடுவான்னு விட்டுடுவாளா. அப்பா? இல்லாட்டா மாமாவை ஜெயில்லே போட்டுடுவாளா அப்பா,” என்றான். 

ஜெயில் என்ற உடனே சும்மா படுத்திருக்க முடிய வில்லை பர்வதம்மாளுக்கு. விசித்து விசித்துக் கொண்டே எழுந்துவிட்டாள். நாள் பூராவும் அழுது அழுது அவள் கண்களெல்லாம் சிவந்து போயிருந்தன; அன்று பூராவும் சாப்பிடவும் இல்லை சமைக்க அடுப்பு மூட்டப்போன சமயம் போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். அன்று அவள் அடுப்பே மூட்டவில்லை. அவள் தலை அலங்கோலமாகப் பரந்து கிடந்தது. 

அவளைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுவிட்டார் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள். அவர் கர்நாடகப் பேர்வழி. இந்தக் காலத்திய காதல் தத்துவமெல்லாம் அவருக்குத் தெரியாது. ஆனால், தன்னுடன் கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் வாழ்ந்து சுகதுக்கங்களைச் சரி அளவாகப் பகிர்ந்து கொண்டு, தன் குழந்தைகளுக்கும் தாயாகிவிட்ட அவள் கஷ்டப்படுவது அவர் மனத்தைப் பாதித்தது. 

“என்னடீ நடந்தது? குழந்தை சொல்றது எனக்குப் புரியவில்லையே! நீதான் மனத்தைத் தேத்திண்டு நடந்ததைச் சொல்லு ஆகவேண்டியதைப் பார்க்கிறேன்” என்று பரிவுடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். 

“எல்லாத்தையும் சமாளிக்க ஒரு பொம்மனாட்டியை விட்டுட்டு நீங்க நாள் பூராவும் எங்கேயாவது தொலைஞ் சுட்டா….” என்று முணுமுணுத்தாள் பர்வத்தம்மாள். 

“என்னடி பண்ணச் சொல்றே? நம்ம பிழைப்பு அப்படி யிருக்கே? தெய்வம் தலையிலே எழுதியிருக்கச்சே நம்ம என்ன பண்றது?” என்றார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். சற்று முன் அவர் குரலில் தொனித்த பரிவு இப்போது இல்லை. அவர் மனைவியின் குற்றச்சாட்டு அந்தப் பரிவை அழித்து விட்டது. 

“கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் போதுமே இந்தப் பொணங்களுக்கெல்லாம்… ஏதோ நடந்துவிட்டதே, அதைச் சரியாகச் சொல்லி, ஆகவேண்டியதைச் செய்யச் சொல்லணு மேன்னு இல்லையே! உம்; தவிர, நாள் பூராவும் சாப்பிடாமே கொள்ளாமே….” என்று சிந்தித்தார் அவர். 

அவருடைய பத்தினி கொஞ்சம் கொஞ்சமாகத் தட்டுத் தடுமாறிய குரலில் அன்று நடந்த சம்பவங்கள் பூராவையும் சொன்னாள். சீதாராமனைப் போலீஸ்காரர்கள் அன்று மாலை ரயிலிலேயே பட்டணம் அழைத்துப் போய்விட்டதாக நளினி விசாரித்துக்கொண்டு வந்து சொன்னதாகவும் சொன்னாள். 

இடிந்து போனவர்போல் அப்படியே ஊஞ்சலில் உட்கார்ந்துவிட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். சீத்தாராமனை அவருக்கு என்றுமே பிடிக்காது. அவனுடைய அண்ணா – தஞ்சாவூரிலிருந்த ஜெயராமனைத்தான் அவருக்குப் பிடிக்கும். நல்ல யோக்கியன். கனாந்தம் அத்தியயனம் செய்திருந்தான். இந்த சீதாராமன் சிறுவயதிலிருந்தே தறிதலை என்று பெயர் வாங்கினவன்தான். பட்டணத்திலே போய் ஏதோ உத்தி யோகம் தேடிப் பிடித்தான் அந்த உத்தியோகம் நிலைக்கும் படியான வழியிலே நடந்து கொள்ளக்கூடாதோ? சரி, உத்தியோகத்துக்கு ஹானி வந்ததோடு மட்டுமா போயிற்று? விஜயபுரத்தில் இருந்த அக்காளைத் தேடிக்கொண்டு உறவு கொண்டாடிக்கொண்டு என்றுமில்லாமல் வந்து, வந்த இடத்தில் போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டு போக நேர்ந்ததை என்ன என்று சொல்வது? அவன் எப்படியாவது தொலைகிறான் என்றால், கூடத் தன்மானம் போய்விட்டதே என்றிருந்தது கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரியாருக்கு. அவர் பிறர் கையைப் பார்த்து ஜீவனம் பண்ணுகிறவர்; அதுவும், விஜயபுரம் அக்கிரகாரவாசிகள் முகம் பார்த்துப் பிழைக்க வேண்டியவர். சங்கடமான நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டானே அந்தப் படுபாவிப் பயல்! 

“என்ன இருபதினாயிரம்னா இன்ஸ்பெக்டர் சொன்னார்?” என்று தன் காதில் ஒருதரம் விழுந்ததையே நம்பாதவராகக் கேட்டார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். 

பர்வதம் பதில் சொல்லவில்லை. அவள் வேறு ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அந்த யோசனையின் முடி வாகக் கடைசியில் சொன்னாள்: “இதோ பாருங்கோ! சீதாராமனுக்கு உங்களையும் என்னையும் விட்டா வேறு யாரு கதியிருக்கா? நம்மதான் ஆகவேண்டியதைப் பார்க்கணும். என்ன செய்யணுமோ என்னவோ, தீர விசாரிச்சு…” 

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் குறுக்கிட்டார்: “செய்யலாம்! நீயும் அடுப்பை மூட்டிச் சமை, நான் ஸ்நானம் பண்ணி சாப்பிட்டுவிட்டு அப்புறம் எதிராளாத்து விசுவாநதய்யரை என்ன செய்யறதுன்னு கேட்டுண்டு வரேன்…. என்னமோ பார்க்கலாம்” என்றார். 

அந்தமட்டும் தன் கணவன் தன் தம்பிக்கு உதவி செய்ய ஆட்சேபம் சொல்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிப் பர்வதத் தம்மாளுக்குப் பரம திருப்திதான். எப்படியாவது தம்பியைப் பற்றிச் செய்யவேண்டியதைச் செய்யற சாக்கிலே விஜயபுரம் அக்கிரகாரத்தை விட்டுச் சில நாட்களேனும் எங்கேயாவது போய்விட்டு வந்தால் தேவலை 

வந்தால் தேவலை என்று எண்ணினாள் பர்வதம். அன்று காலை சீதாராமன் வந்த பொழுது அவன் எவ்வளவு பெருமையாக அக்கிரகாரத்து ஸ்திரீகள் எல்லோருடனும் பேசினாளோ, அவ்வளவுக்கவ்வளவு இப்போது அவர்கள் கண்களில் படாமல் இரவோடு இரவாகவே கிளம்பிவிட்டால் தேவலைபோல இருந்தது! 

சமையல் காரியத்தைக் கவனிக்கப் போனாள். 

ஊஞ்சல் பலகையில் சிந்தனையில் ஆழ்ந்தவராக உட்கார்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அதிகநேரம் இருப்புக்கொள்ளவில்லை. எழுந்து வாசல் கதவைத்திறந்து கொண்டு வெளியே திண்ணைக்குப் போனார். எதிர்வீட்டுத் திண்ணையில் விசுவநாதய்யர் உட்கார்ந்திருப்பது அவர் கண்ணில் பட்டது.

– தொடரும்…

– நளினி (காவிரிக்கரை நாவல்), முதற் பதிப்பு: 1959, சந்தியா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *