நம்பிக்கை மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 2,763 
 

அவர் பெயர் ஜம்புநாதன்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, படித்து வளர்ந்தார். இஞ்சினியரிங் முடிந்தவுடன், சிறிய வயதிலேயே ஆப்பிரிக்க நாடான கேமரூன் வரை சென்று ஒரு பெரிய பாய்லர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து நான்கு வருடங்கள் நன்றாக பணம் ஈட்டினார்.

அந்தப் பணத்தில் தன்னுடைய மூன்று தங்கைகளுக்கும் அடுத்தடுத்து ஸ்ரீரங்கத்தில் மிகச் சிறப்பாக திருமணம் செய்து கொடுத்தார்.

கேமரூன் சென்று திரும்பி வந்த அவருக்கு திருச்சியிலேயே ஒரு பிரபல பாய்லர் தொழிற்சாலையில் சீனியர் மேனேஜராக வேலை கிடைத்தது. திறம்பட வேலை செய்த ஜம்புநாதன், தன்னுடைய அறுபதாவது வயதில் அதே பாய்லர் தொழிற்சாலையில் சீனியர் ஜெனரல் மேனேஜராக பல வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றபின் குடும்பத்துடன் சென்னை நங்கநல்லூருக்கு குடி பெயர்ந்தார்.

சென்னையில் தன்னுடைய ஒரே மகன், மகளை பி.ஈ படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்துவிட்டார். தொடர்ந்து பேரன் பேத்திகளையும் பார்த்து விட்டார்.

உழைப்பால் முன்னேறிய குடும்பத்தில் மூத்தவர் என்பதால் மரியாதைக்குரிய மிகப் பொறுப்பான குடும்பஸ்தராக ஜம்புநாதனை எல்லோரும் போற்றினார்கள்.

தற்போது ஜம்புநாதனின் ஒரே மகன் சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பாதித்து அப்பாவை சிறப்பாக சொந்த வீட்டில் அமர வைத்து வசதியுடன் தாங்கி தாங்கிப் பார்த்துக் கொண்டாலும், ஜம்புநாதனுக்கு ஒரே ஒரு பெரிய வீக்னெஸ், தான் எப்போதும் தொடர்ந்து வேலையில் இருந்துகொண்டு சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும், தன் காலில் தானே சுயமாக நிற்க வேண்டும் என்பதுதான்…

அதனால் ஓய்வுபெற்ற பிறகும் பல ஆண்டுகளாக சில பாய்லர் கம்பெனிகளிலும், பிரபலமான சில பள்ளிகளிலும் தற்காலிகமாக தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தார். நெருங்கிய உறவினர்கள் பலர் அவரிடம் “எதற்கு இப்படி உழைக்கிறீர்கள்? வீட்டில் பேரன் பேத்திகளை கொஞ்சிக் கொண்டு ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டியதுதானே?” என்று கேட்டால், “உடம்பில் தெம்பு இருக்கிற வரையில் என்னால் சும்மா இருக்க முடியாது…” என்பார்.

வேலைக்காக அடிக்கடி சண்டே ஹிந்து பேப்பரில் விளம்பரங்களை தேடித்தேடி படித்துப் பார்த்து அவைகளுக்கு சலிக்காமல் அப்ளை செய்து கொண்டேயிருப்பார்.

வயதின் காரணமாக பலர் அவரைக் கூப்பிடவே மாட்டார்கள் என்பது புரிந்தும் ஜம்புநாதன் விடாமல் முயற்சி செய்து கொண்டேயிருப்பார். நாளடைவில் அதுவே அவருக்கு ஒரு நிரந்தர வியாதியாகிப் போயிற்று.

அப்படி இப்படியென்று அவருக்கு தற்போது வயது எழுபத்திநான்கு ஆகிவிட்டது. இருப்பினும் அவரது ஆரோக்கிய உடல்நிலை காரணமாக தற்போது ஒரு பிரபல பள்ளியில் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஜம்புநாதன் கூடிய வரையில் அடுத்தவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார். ஜோசியத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர். காலையில் எழுந்தவுடன் டிவி சேனல்களில் மாற்றி மாற்றி ஜோசியம் மட்டுமே பார்ப்பார். தினமும் நங்கநல்லூர் ஆஞ்சநேயரை தரிசிக்காமல் இருக்கமாட்டார். பக்திமான். உடம்பை திடகாத்திரமாக வைத்திருந்ததால் அவ்வப்போது நங்கநல்லூரில் சைக்கிளில் கம்பீரமாக வலம் வருவார்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது…

திடீரென சென்ற வருட மார்ச் மாதத்தில் கொரோனாவினால் உலகமே ஆடிப்போய் பலர் வேலையிழந்தபோது, அப்போது ஒரு நல்ல பள்ளியில் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜராக இருந்து கொண்டிருந்த ஜம்புநாதனும் வேலையில் இருந்து நின்று கொள்ள வேண்டியதாயிற்று.

வேலை இல்லாமல் வீட்டிலேயே சும்மா இருப்பது ( இந்த எழுபத்தி நான்கு வயதில்!? ) ஜம்புநாதனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

இதையெல்லாம் தாண்டி கொடுமை என்னவென்றால், எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஜமபுநாதனை, கொரோனாவைக் காரணம் காட்டி, வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லக் கூடாது என்று அவரது மனைவியும், மகனும் அவரை வீட்டிலேயே முடக்கிப் போட்டு விட்டார்கள் என்பதுதான்…

சைக்ளிங் செய்யக்கூடாது; வெளியே வாக்கிங் எங்கும் செல்லக்கூடாது என்றால், பாவம் அவர் என்னதான் செய்வார்?

வீட்டில் கவனிப்பு நன்றாக இருந்தாலும், ஜம்புநாதன் எப்போதும் மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்டார். ஆறு மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்ததால், பாயாசத்தில் விழுந்த அப்பளம் மாதிரி மிகவும் தொய்ந்து போனார்.

அக்டோபர் மாத இறுதி வாக்கில் அவருக்கு திடீரென காய்ச்சல் அடித்தது. காய்ச்சல் நின்ற பாடில்லை. அதனால் ஹாஸ்பிடல் சென்று சோதித்து பார்த்த போது, நல்ல வேளையாக கொரோனா இல்லை, வைரஸ் காய்ச்சல் மட்டும்தான் என்றார்கள்.

உடனே அப்பல்லோவில் அட்மிட் செய்யப் பட்டார். அங்கு தேவையே இல்லாமல் அவரை அந்தச் சோதனை இந்தச் சோதனை என்று பத்து நாட்கள் படுக்கையில் இறுத்தி வைத்துவிட்டனர்.

ஜம்புநாதன் கடுப்பாகி அப்பல்லோ நிர்வாகிகளிடம் பெரிதாகச் சண்டை போட்டு சீக்கிரமே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் உடல்நலம் முற்றிலும் குன்றி மெலிந்துபோய் கந்தலாகக் காணப் பட்டர். நடப்பதற்கே மிகவும் சிரமப் பட்டார். எதைச் சாப்பிட்டாலும் வாந்திதான் வந்தது. தொடர்ந்து மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார். அடிக்கடி குளிர்கிறது என்றார்.

நிலைமை கை மீறிப் போகவே அவரது மகன் அவரை வீட்டின் அருகிலேயே ஒரு பிரபல பெரிய மருத்துவ மனையில் அட்மிட் செய்தார். அவர்கள் ஜம்புநாதனுக்கு நிறைய ஆக்ஸிஜன் செலுத்தி, வீரியமான மருந்து மாத்திரைகள் கொடுத்து, அடுத்த நான்கு நாட்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உடம்பு சற்றுத் தேறியது. கண்களில் மட்டும் சிறிதாக ஒரு ஒளி தீற்றலாகத் தோன்றி நம்பிக்கை அளித்தது.

ஐந்தாம் நாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்.

டாக்டர்கள் ஜம்புநாதன் மகனிடம், அப்பாவுக்கு வயது அதிகம், உடம்பு மிகவும் சோர்ந்துபோய் இருக்கிறது, தினமும் ஊட்டமான உணவுகளைக் கொடுத்து அவரைச் சிறப்பாக கவனிக்க வேண்டும், அவர் நன்றாகத் தூங்க வேண்டும், கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என ஏகப்பட்ட அறிவுரைகள் சொல்லி நல்லபடியாக அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிற்கு வந்த ஜம்புநாதனுக்கு ஒரு தனியான படுக்கையறையில் எல்லா வசதிகளும் பிரத்யேகமாகச் செய்யப் பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டால் வீட்டில் எப்போதும் நெபுலைசர் பொருத்தப்பட தயாராக இருந்தது. அது தவிர, ஒரு பெரிய ஏமர்ஜென்ஸி ஆக்ஸிஜன் சிலிண்டர் இணைப்புடன் எப்போதும் தயாராக இருந்தது. குளிரெடுத்தால் ஹீட்டர் போட்டுக் கொள்ளவும் வசதிகள் செய்யப் பட்டன.

ஜம்புநாதன் சிறிது சிறிதாக சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டார். வாய் குளறாமல் மெதுவாகப் பேசினார். குடும்பத்தினருக்கு அவர்மீது ஏராளமான நம்பிக்கை பிறந்தது.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை…

காலை ஒன்பது மணிக்கு இரண்டு இட்லிகள் சாப்பிட்டார் ஜம்புநாதன்.

குரலில் உற்சாகம் பொங்க தன் மகனிடம், “டேய், கடந்த நான்கு வார ஹிந்து சண்டே பேப்பர்களை எடுத்துப் போடேன்…” என்றார்.

“எதுக்குப்பா?”

“ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு அப்ளை பண்ணத்தான்.”

நம்பிக்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *